பச்சைப்பிள்ளைகிட்ட என்னை எப்படி நீ பூச்சாண்டின்னு சொல்லப்போச்சு? நாளையும் பின்னேயும் நான், ‘வாம்மா’ன்னு கூப்பிட்டா அது வரவேண்டாமா? உனக்கு முறை சொல்லத் தெரியுமா? போய்ச் சேர்ந்துட்டாளே மகராசி, உன் மாமியா, அவளை நான் அக்கான்னுதான் கூப்பிடுவேன். அவ எனக்கு அக்கான்னா, ஒம் பிள்ளைக்கு நான் யாரு? தாத்தா முறை தெரிஞ்சுக்க. வேணுமின்னா பூத்தாத்தான்னு சொல்லிக்குடு. அஹ, பூத்தாத்தா. அதுவும் நல்லாத்தான் இருக்கு!
-சுடலை, உதிரி சிறுகதையில்.
சமவெளி (சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர் – வண்ணதாசன்
பதிப்பு – சந்தியா பதிப்பகம், முதல்பதிப்பு 2011
இணையத்தில் படிக்க – சுட்டிகள் இப்பதிவின் இறுதியில் உள்ளன
NLBயில் முன்பதிவு செய்ய – Camaveḷi / Vaṇṇatācan̲.
கன்னிமாராவில் முன்பதிவு செய்ய – காணோம்!
மொத்தம் 12 சிறுகதைகள், அல்ல வண்ணதாசனின் முகவுரையும் சிறுகதை போலத்தான் இருக்கிறது. அதையும் சேர்த்துக்கொண்டால் 13 அழகிய எளிய சிறுகதைகள்.
மகிழ்ச்சி, வருத்தம், கனிவு என்கிற மெல்லிய உணர்வுகள் முன் தலை மயிரைக் கலைக்கிற கொங்கு மண்ணின் காற்று மாதிரியான சிறுகதைகள் இவை. எனக்கு இதில் உள்ள கூறல் கதை சலனத்தை ஏற்படுத்தியது. தெரியவில்லை, என் தந்தையாரைப் பற்றிய நினைவுகளை எழுப்பி மனதை அழுத்தியது இந்தக் கதை. இந்தக் கதையில் வரும் நாவிதன் கிருஷ்ணன், ஒரு சமயத்தில் எனக்கு கோகிலத்தின் கிருஷ்ணனாகவே தெரிந்தான்.
உதிரி கதையின் பூக்கார கிழவன் சுடலையின் மரணத்திற்கு பேச்சியம்மை வராது போனதும், வேப்பமர வீட்டுப் பெண் கலங்கி நிற்பதும் வாசிப்பவர் மனதில் ஒரு ஈரக் கசிவை ஏற்படுத்தக் கூடியவை.
மருந்து மாத்திரைகளுடன் வாழும் மனைவியும் அவள் கணவன் வரைகிற நிர்வாண ஓவியமும், அவனுக்கு அவள் தருகிற பொட்டுக்கடலையும் சேர்ந்து ஒரு சமவெளி சிறுகதை கிடைக்கிறது.
தாகமாய் இருக்கிறவர்கள் சிறுகதை – வண்ணதாசனின் முக்கியக் சிறுகதைகளில் முக்கியமானது. வெகுவாகக் கவரக்கூடியதும் கூட. மெல்லிய உணர்வுகள் சார்ந்த அவரது நடையிலிருந்து சற்ற வலிமையான மை கொண்டு எழுதப்பட்ட சிறுகதை இதுவாக இருக்கலாம். பேருந்து நிலையம், கடைத்தெரு என்று இது மாதிரி எத்தணை பேரை நாம் தினசரி பார்த்துக் கொண்டிருக்கிறோம்! தாகமாய் இருக்கிறவர்கள் என்று யாரைச் சொல்கிறார் இந்த ஆள் என்று யோசித்துப் பார்த்தேன். டீ வாங்கிக் கொடு என்று கேட்கிற பொன்னம்மையா, தகுந்த வாழ்வாதாரத்திற்கு ஏங்குகிற அம்மையப்பனா, வருமானம் இல்லாத அம்மையப்பனைக் கட்டி சீரழிவதா என்று நினைத்த சரசுவா என்கிற கேள்வி வாசிப்பவனுக்கு வருகிறது.
ரசிக்கக் கூடிய சிறுகதைகளைக் கொண்ட நூல் இது.
கதைகளின் தொகுப்பு
- தாகமாய் இருக்கிறவர்கள்
- நிலை (கேசவமணி பதிவு)
- பளு
- வருகை
- சமவெளி
- வரும் போகும்
- பூனைகள்
- சில பழைய பாடல்கள்
- கூறல்
- விசாலம்
- வெளியேற்றம்
- உதிரி
தவிர இந்தப் புத்தகமே பிடிஎப் வடிவில் இணையத்தில் யாரோ ஒரு புண்ணியவான் ஏற்றி வைத்துள்ளார். தேடி எழுத்துக்கொள்ளுங்கள்!!
சென்ற பதிவில் வாழ்த்திவிட்டாலும், மீண்டுமொரு முறை வாழ்த்துக்கள் வண்ணதாசனுக்கு – சமீபத்திய விருதுகளுக்காக.
இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
வளர்க பாரதம்!
பார்க்க – வண்ணதாசனின் சமவெளி – சிலிக்கான் ஷெல்ஃப்
வாழ்த்துக்கள்
நன்றி திரு பாரதி
கல்யாண்ஜி அவதாரத்தில் அவருடைய கவிதைகளைக் கொஞ்சம் வாசித்திருக்கிறேனே தவிர வண்ணதாசனின் கதைகளைப் படிக்க இன்னும் வாய்க்கவில்லை. படிக்கவேண்டும். அவரது நடை இனிமையானது.
வருகைக்கு நன்றி ஏகாந்தரே. சமவெளி பிடிஎப் ஆகக் கிடைக்கிறது https://docs.google.com/file/d/0B98gR3XqjPcqcXI2dEU4LVBOZ0E/view
லிங்குக்கு நன்றி