சீனாவின் சரக்கு ரயில் 12000 கிலோமீட்டர்களை 18 நாட்களில் மராத்தான் வீரன் எனக் கடந்து லண்டனை அடையும். ஐரோப்பாவுடனான தொடர்பை வலுப்படுத்தி, ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் வகையில், சீனா ஒரு சரக்கு ரயிலை அறிவித்துள்ளது. சீனாவின் மத்திய செஜியாங் மாகாணத்தின் வரத்தக நகரான யிவு நிலையத்திலிருந்து கிளம்பியிருக்கும் அந்த ரயில், கசகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரான்சைக் கடந்து, லண்டனைச் சென்றடையும். கேட்கும்போதே கிறுகிறுக்கும் இந்த ரயிலை, யுவு டைமெக்ஸ் தொழில் முதலீட்டு நிறுவனம் இயக்கும். இந்த சூரர்கள் ஏற்கனவே ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகருக்கு ரயிலை விடுகின்றனர். வான்வெளி சரக்குக் கட்டணத்தில் பாதிதான் செலவு ஆகிறதாம். கப்பல் பயணத்தில் ஆகும் நேரத்தைில் பாதிதான் ஆகிதாம். சீனா சிலாகிக்கிறது.
ஏற்கனவே ஐரோப்பாவின் சில நகர்களுக்கு ரயிலை இயக்கும் சீனாவிற்கு இது ஒன்றும் புதிதல்ல. லண்டன் என்கிற நகரத்திற்கான விரிவாக்கப்பட்ட பயணம் மட்டும்தான் புதிது. கடந்த சில வருடங்களில் சீனாவிலிருந்து லண்டனுக்குச் செல்லும் முதலீடுகள் இரு மடங்காயிருக்கிறது.
வெற்றிக் கொடியை நாட்ட பொருளாதாரத்திற்கு பல்வேறு ஊக்க மருந்தினைச் செலுத்தி வருகிறது சீனா. அந்த வகையில், பழைய பட்டுப் பாதையை மீட்டுக் கொண்டு வந்து, உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த முயல்கிறது.

Belt And Road Intiative (BRI) என்கிற பெயர் கொண்ட இந்த செயல்திட்டத்தின் மூலம், ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் தனது பழைய தொடர்பினைப் புதுப்பிக்கப்பார்க்கிறது. சீன அதிபர் ஜின் பிங்கின் முழு ஆசி பெற்ற இந்த செயல்திட்டத்தின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சர்வதேச சந்தையை விழுங்கி வருகிறது. இந்தப் பட்டுச் சாலை வழி, தனது பழைய வர்த்தக மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை நிகழ்த்தும் என நம்புகிறது.

மேற்கு சீனாவின் வர்த்தக மற்றும் போக்குவரத்து முனையமாக ஜின்ஜியாங் மாகாணம் உருவெடுக்கும். அங்கிருந்து பட்டுச் சாலையில் அமைந்திருக்கும் அனைத்து நாடுகளுக்கும் சரக்குகளை அனுப்ப திட்டம் வைத்துள்ளது. பிற நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்புக்குப் பங்கமில்லாமல் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. சோப்பு சீப்பு கண்ணாடி மை டப்பி என்று உலகத்திற்குத் தேவையான அனைத்தையும் தயார் செய்து ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் அனுப்ப இந்த பட்டு வழி பயன்படும்.
நேற்றைய பதிவில் பார்த்த சீன-பாகிஸ்தான் பொருளாதார வழியும் இந்தத் திட்டத்தில் ஒரு பகுதிதான்.
முன்னர் சீனர்கள், யவனர்களுடன் வியாபாரம் செய்ய துவாரகை எழுந்தது. ஆனால் இப்போது இந்தியாவால் இது போன்ற உலகின் நம்பிக்கையைப் பெறும் நற்செயல்கள் எதையும் செய்ய வில்லை என்பதையும் நாம் கவலையுடன் நோக்கவேண்டி உள்ளது. தவிர, சொந்த இலாபங்களுக்காக, மத இனப் பிரச்சினைகளை எழுப்பி குளிர் காயும் அரசியல், அதிகார வர்க்கத்தைச் சுமந்து கொண்டு நத்தை போன்று ஊர்ந்துதானே செல்லவேண்டியிருக்கிறது.
மேற்கண்ட செய்தியையும் கேட்ட இந்திய செவிடன் ரெங்கன், காதைக் குடைந்து கொண்டான்!
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே.
குடியரசு தினப்பதிவு 2/2 – நிறைவு.