ஒரு வயோதிக நாடார் திடீரென்று தன்னருகே நின்றிருந்த இளைஞனின் தோள்பட்டையைத் தொட்டு “தம்பி, எதுக்குடேய் மரத்தெ வெட்டிச் சாய்க்கிறாங்க?” என்று கேட்டார்.
“செடி வெக்கப் போறாங்க” என்று பதில் சொன்னான் இளைஞன்.
“எதுக்குடேய் செடி வெக்கப் போறாங்க?” என்று கேட்டார் வயோதிக நாடார்.
“காத்துக்கு” என்றான் இளைஞன்.
“மரத்தெக் காட்டிலும் செடியாடேய் கூடுதல் காத்துத் தரும்?” என்று கேட்டார் வயோதிக நாடார்.
“அளகுக்கு” என்று இளைஞன் தன் பதில்லைத் திருத்திக் கொண்டான்.
“செடிதான் அளகாட்டு இருக்குமோ?”
“உம்.”
“செடி மரமாயுடாதோவ்?”
இளைஞன் கிழவர் முகத்தைப் பார்த்தான். பொறுமையிழந்து “மரமாட்டு வளராத செடிதான் வைப்பாங்க. இல்லை வெட்டி வெட்டி விடுவாங்க” என்றான்.
“வெட்டி வெட்டி விடுவாங்களா?”
“ஆமா”
“அட பயித்தாரப் பயக்களா” என்றார் கிழவர். தொடர்ந்து சல நயமான பச்சை வசைகளை உதிர்க்கவும் ஆரம்பித்தார்.
ஒரு புளியமரத்தின் கதை
ஆசிரியர் – சுந்தர ராமசாமி
பதிப்பு – காலச்சுவடு, இருபதாவது பதிப்பு நவ 16.
கன்னிமாரா முன்பதிவு செய்ய –
தேசீய நூலகத்தில் முன்பதிவு செய்ய –
காலம் நிற்காது ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவர் வாழ்வும், பல்வேறு உயர்வு தாழ்வினைப் பார்க்கிறது. வாழ்ந்து முடிக்கும் இந்த வாழ்நாள் இடைவெளியில் எத்தணை உணர்ச்சிகள், நெகிழ்ச்சிகள், வெறுப்புகள். எல்லாவற்றுக்கும் சாட்சியாக ஒரு குறியீடு இருந்து இருக்கிறது. அது நம் வீட்டு கொள்ளுப் பாட்டியாக இருக்கலாம், காலம் கடந்தும் ஜீவித்திருக்கும் பெண்டுலம் கடிகாரமாக இருக்கலாம். ஒரு புளியமரமாகவும் இருக்கலாம்.
சுதந்திரத்திற்கு முன்னால் தொடங்கி, சுதந்திரத்திற்குப் பிற்பாடு வரையிலான ஒரு கால கட்டத்தை பல்வேறு நிகழ்வுகள் வழியாக தொகுத்து நமக்குக் காட்டித்தருகிறது இந்த நாவல். தாமோதர ஆசானின் கதைகள் காட்டித்தரும் காலம், தாமோதர ஆசான் போன்றவர்கள் கோலோச்சிய காலம், இந்திய விடுதலை காலம், விடுதலைக்குப் பிற்பாடு நிகழும் உள்ளுர் அரசியல்களின் காலம் என்று அனைத்தையும் 200 பக்கங்களுக்குள்ளேயே, எளிதாக தொகுக்க முடிந்துள்ளது இந்த நாவலின் பலம்.
காற்றடி மரத்தோப்பினை அழித்து பூங்கா உருவாக்குவது வளர்ச்சி என்று நாம் சொல்லிக்கொண்டு திரியும் வஸ்துக்காக, நாம் தரும் இழப்புகளாக உருவகப் படுத்திக் கொள்ளலாம். இன்றைக்கும் நாம் ஏரித் தெருக்களைப் பார்க்கிறோம், ஏரிகளைத் தொலைத்துவிட்டு. எனவே, இந்த நாவல் இன்றைக்கும் செல்லுபடியாகக் கூடியது.
காற்றடி மரத்தோப்பினை அழித்த பின் உருவாகும் பூங்காவின் விளையாட்டுத் திடலில் குழந்தைகள் விளையாடும்போது, அவர்கள் மீது கவிழும் வர்க்க வேறுபாட்டினை, தாட்சனிமின்றி விமர்சனம் செய்கிறது இந்த நாவல். மரத் தோப்பு இருந்த போது, எக்கவலையுமின்றி குரங்கு போன்று தாண்டிய சிறுவர்கள், பூங்காவில், வரிசைக் கிரமமாக நின்று தங்கள் வாய்ப்புக்காக காத்திருப்பதைக் காண்கையில், வாசிப்பவனின் வயிற்றுக்குள் அமிலக் குமிழிகள் எழும்பும்.
தாமோதர ஆசான், அப்துல் காதர், காதரின் கணக்கப்பிள்ளை, தாமு, இசக்கி, ஜோசப்பு, கடலைத் தாத்தா என்று ஒவ்வொருவரையும் நாவல் காட்சிப் படுத்தும்போது, ஒரு வாழ்க்கை வாழ்ந்து விடுகிறோம்.
புளியமரம் – நம்மை நாமே உரசிப் பார்த்துக்கொள்ளும் ஒரு நாவல்.
நன்று!
நன்றி திரு ராமானுஜம்.