பிரெஞ்சு நாவலில் ஒரு விவஸ்தை கெட்ட முண்டை நாற்சந்தியில் விழித்துக் கொண்டு நின்றால், ஒற்றைப் பாலம் கருணாகரனுக்கு அதில் என்ன புளகாங்கிதம்? அவனுடைய புளகாங்கிதத்திற்குக் காரணம் அந்த நானூற்றி முப்பத்தி மூன்று பக்க நாவல் முடிகிற வரையிலும் அவள் அங்கே நின்று கொண்டேயிருப்பதுதானாம்.
ஜே.ஜே: சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
வெளியீடு – காலச்சுவடு. முதல்பதிப்பு டிசம்பர் 1999. பதினெட்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2016
கன்னிமாரா முன்பதிவு: கிடைக்கவில்லை
NLB முன்பதிவு: Jē. Jē. : cila kur̲ippukaḷ
அறிவு ஜீவிகள் பலரும் இந்நாவல் குறித்து எழுதாமல் இருப்பதில்லை. எழுத்தாளர்களும் இதைப் பற்றிக் குறிப்பிடாமல் இருப்பதில்லை. புதிதாக வாசிக்க ஆரம்பித்திருந்த ஒரு பொழுதில் செங்காங் நூலகத்தில் இதே நாவலின் ஒரு பக்கத்தை வாசித்தேன். அப்போது விஷ்ணுபுரத்தை வாசித்திருந்ததால் ஞான சூரியனின் வேட்கையில் வியர்வை சிந்தி முடித்திருந்தேன். என்னவோ அப்போது இது என்னை ஈர்க்கவில்லை. எனது ஞானமானியின் கிடைமட்டக் குறிமுள்ளின் இயலாமையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். சுந்தர ராமசாமியின் பிறந்தநாள் சிறப்புத் தள்ளுபடியுடன் காலச்சுவடிலிருந்து ஒரு புளிய மரத்தின் கதையும், ஜே ஜே சில குறிப்புகளையும் சலுகை விலையில் அனுப்பித் தந்தனர். அவர் தம் அறச் சிந்தனை வாழ்க.
வாசிக்கவேண்டும் என்று முடிவு கட்டிவிட்டோமென்றால், யார் என்ன சொல்கின்றனர் என்றெல்லாம் பார்க்கக்கூடாது. அது கடைசி பெஞ்சே ஆனாலும் சரிதான். வாசித்த பின்னர் வேண்டுமானால் பிறரின் கருத்தைத் தெரிந்து கொள்ள முற்படலாம். என்னநாஞ்சொல்றது! அப்படி எந்த முன்னேற்பாடும் செய்யாமல்தான் இம்முறை இதை வாசிக்கத் தொடங்கினேன், நீயா நானா பார்க்கலாம் என்று! பக்கங்கள் கூட குறைவுதான்.
ஜே ஜேயைப் பற்றி இருவர் பேசுகின்றனர். வாசகனாக இருந்து எழுத்தாளராக இருக்கிற ஜேஜேயின் அபிமானியாக இருந்து தற்சமயம் தமிழ் எழுத்தாளராக இருப்பவரின் பார்வையில் இந்தக் கதை சொல்லப்படுகிறது. முக்கால் வாசி, ஜேஜேயின் பால் இவரது பார்வை. பின்பகுதி, ஜேஜேயே பேசுகிறார்.
மூன்று வேளை சாப்பிடுகிறவனைப் பற்றி இப்போது இலக்கியத்தில் நாம் ஒரு வார்த்தை பேசக் மூடாது. செம்மான், தோட்டி, வெட்டியான், நாவிதன், வேசி, பிச்சைக்காரன், கோடாலிக்காரன், கசாப்புக் கடைக்காரன், மீன்காரி, பூட்ஸ் துடைக்கும் சிறுவர்கள், கூட்டிக் கொடுக்கும் தரகர்கள் யார் வேண்டும் என்றாலும் வரலாம். இலை போட்டுச் சாப்பிடுறவன் வரக்கூடாது. என்னுடைய நாவல்களிலோ அடறி விழுந்தால் அரண்மனைகளும், அந்தப் புரங்களும், கோட்டை கொத்தளங்களும்தாம். சப்பரமஞ்சக் கட்டிலில் இளவரசிகள் படத்துறங்க சேடிகள் விலாமிச்சை விசிறிகளால் வீசுகிறார்கள். குதிரைகள் பறக்கின்றன. அரசவையில் ராஜரிஷி பேசுகிறார். எப்படிப் பொறுத்துக் கொள்வார்கள்? ஆனால் எனக்கு இவர்களைப் பற்றிக் கவலையில்லை. சமஸ்கிருதக் கல்லூரி முதல்வர் ஈசுவரன் நம்பூதிரியே என்னைப் பாராட்டி எழுதியிருக்கிறார். அவரை விடவும் படித்தவனோ இந்த ஜே.ஜே?
கதாபாத்திரங்கள் அறிமுகம், கதையின் ஓட்டம், எழுச்சி, முடிவு என்கிற கட்டத்திற்குள் வராத கட்டமைப்பைக் கொண்டுள்ளது. நாவலின் முதல் பாதியில், இந்த ஜேஜே ஏன் இப்படி இருக்கிறான், பாவம் இந்த தமிழ் எழுத்தாளனைத்தான் இந்த மலையாளத்தான் ஜேஜே கொஞ்சம் மதிச்சாதான் என்னவாம் என்று விசனப்பட்டுக்கிட வேண்டியிருக்கிறது. ஒரு ஆதர்சத்தின் மேலான புனிதத் தன்மை, அது உடைபடுகிற போதான ஒரு வருத்தம், அதன் மேலான கரிசனம், இலக்கியத்திற்கான அக்கரை என்று அனைத்தையும் காட்டுகிறதாக அமைகிறது நாவலின் முதல் பகுதி.
திடீரென்று சத்தம் போட்டுப் பரிகாசமாகச் சிரித்தபடியே, ‘சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?’ என்று கேட்டான். இந்தக் கேள்வியின் உட்பொருள் விளங்க எனக்குச் சற்று நேரம் பிடித்தது. தமிழின் கட்டற்ற கற்பனைப் பண்புகளையும் காதல் கதைகளையும் எண்ணியா சிரிக்கிறான் இப்படி?
நான் ஆண்மையற்ற மெல்லிய குரலில் ஜே.ஜேயைப் பார்த்துப் பேச ஆரம்பித்தேன்.
‘புதுமைப் பித்தன் என்றொருவர் எங்கள் பாஷையின் எழுதியிருக்கிறார். நீங்கள் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ஜே.ஜே. தலையைக் குனித்து கவனிக்க ஆரம்பித்தான். ஆனால் அதற்குள் அவனுடைய ஆராதகர்கள் அவன் கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டார்கள்.
முதல் பாதில் போடப்பட்ட முடிச்சுகள் அவிழ்கின்றன பிற்பாதியில், ஜேஜே பேசத் தொடங்கும்பொது.
ஜேஜே போன்றோருக்கு முதல் பிரச்சினை – வீடு.
சாராம்மா தன்னைப் பற்றி எழுதக்கூடாதென சொல்லிவிடுகிறாள் என்றாலும், எள்ளல் தொக்கி நிற்கும் அவளைப் பற்றிய அறிமுகம் நமக்கு நன்கு உணர்த்துகிறது. குறிப்பாக, காலம் தொடர்பாக – கொடுத்த நேரத்தில் சந்திக்க முடியாமல் இருக்கையில், வருத்தம் தெரிவிப்பதோடு, நீ என்ன காந்தியவாதியா. அவர்கள்தான் சொன்னால் சொன்ன நேரத்தில் முடியவேண்டும் என்று நினைப்பார்கள் என்கிறாள். தவிர, சாராம்மாவின் அரசியல் வெற்றிகள் குறித்து எழுதும்போது கடகடவென வாசித்துவிட்டு, இதென்ன ஏதோ குத்தல் இருக்கிறதே என்று திரும்ப ஒரு முறை வாசிக்கவேண்டி இருக்கிறது.
‘எனக்குத் தேதி குறித்துத் தந்திருக்கிறீர்களே’ என்று நான் கெட்டதற்கு, ‘நீங்கள் காந்தியவாதியா?’ என்று என்னிடம் கேட்டார். எனக்கு விளங்கவில்லை. ‘நீங்கள் குறித்த நேரத்தில் உங்களைப் பார்க்கலாம் என்று நான் வந்ததற்கும் காந்தியத்துக்கும் என்ன சம்பந்தம்’ என்று நான் கேட்டடேன். ‘இல்லை. அவர்கள்தான் குறித்த நேரத்தில் காரியங்களை ஆற்றுவதைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்வார்கள். எங்களுக்கு மக்களுடைய பிரச்சினைகள்தான் முக்கியம்’
இந்த கதைக் களத்திற்கு, சுவையான கீற்றுகள் போல இறங்கியிருக்கின்றன குத்தல்களும், எள்ளல்களும். சாராம்மாவின் அறிமுகத்தைச் சொல்லலாம், திரைப்பட அப்பா நடிகர் ஏஜி சோமன் நாயரின் அறிமுகத்தைச் சொல்லலாம். பிஷாரடி, முல்லைக்கல், சாராம்மா, ஒற்றைப் பாலம் கருணாகரன், எழுத்தாளினி சிட்டுக்குருவி என்று சகலருக்கும் ஆசிகள் கிடைக்கின்றன. உயிர் துடித்துக்கொண்டிருக்கும் வேளையில் நாசியில் நுழையும் நறுமணம் போன்றவை இந்த ஆசிகள்!!
‘இத்தனை சிறப்புகளைக் கொண்டவர், சிறிய வயதில் மனைவியையும் குழந்தைகளையும் கண்ணீரும் கம்பலையுமாய் நிறுத்திவிடடுப் போய்விட்டார்’ என்று சொன்ன போது சிட்டுக்குருவிக்குத் துக்கம் தாங்கவில்லை. கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுக் கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார். முகம் அழகாகக் கோணிவிட்டது. சபையில் பலர் உணர்ச்சி வசப்பட ஆரம்பித்து விட்டடார்கள். ‘அம்மா, கண்ட்ரோல் யுவர் செல்ஃப், கலெக்ட் யுவர் செல்ஃப், ப்ளீஸ் டோண்ட் பிரேக் டௌன்’ என்றெல்லாம் மேடையின் பின்பக்கம் நின்றவாறே தேனி கத்தினார். சிட்டுக் குருவிக்குத் தாளவில்லை. அவரால் பேச முடியவில்லை. கைக்குட்டையால் முகத்தை முழுமையாக மூடிக்கொண்டு விட்டார். மூதாட்டி படியேறிச் சென்று சிட்டுக் குருவியையைக் கைபிடித்து இறக்கிக் கொண்டு வந்து நாற்காலியில் உட்கார வைத்தார். இரண்டு மூன்று நிமிஷங்களுக்குப் பின் நான் சிட்டுக்குருவியைப் பார்த்தபோது அவர் தனது இடது உள்ளங்கைக் கண்ணாடியைப் பார்த்து வகிடை நேர் செய்து கொண்டிருந்தார்.
ஜேஜேக்கு அடுத்த பிரச்சினை – பணம்.
தன் தாயார் மீதான அளவில்லா குற்ற உணர்வு மேலோங்கிய கரிசனம் வைத்துள்ளான் ஜேஜே. வீட்டுக்கு பணம் ஈட்ட வழியில்லாததே ஒரு வலி. ஆனால், டீ பன்னுக்குக்கூட அவர்கள் கையை எதிர்பார்ப்பது என்பது உறுத்தலுடன் கூடிய வலி. ‘நான் உலகின் மகத்தான் கவிஞன். அரிசிக்கும் பருப்புக்கும் என்னை அலைய வைக்கிறாயே’ என்று தெய்வத்தை ஏசும் பாரதியை நினைவு படுத்துகிறான் ஜேஜே.
மாணவர்கள் சிலர் கூடி, எதிர்ப்படுபவர்கள் அனைவரையும் நிறுத்தி, வற்புறுத்தி, ‘பாரத மாதாவுக்கு ஜே’, ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்று குரல் எழுப்பச் செய்தார்கள். சிறு பையன்களின் தலையில் குட்டியும், செவியைத் திருகியும் இதைச் செய்யச் சொன்னார்கள். வற்புறுத்தல் இன்றியே பல சிறுவர்கள் ஆர்வமாக உணர்ச்சி வசப்படக் கத்தினார்கள்.
வயதான ஒரு கிழவி கத்த மறுத்துவிட்டாள். ‘கொன்றாலும் கத்தமாட்டேன்’ என்றாள். கொள்கை காரணம் என்று நான் நினைக்கவில்லை. வற்புறுத்தலுக்கு இணங்கக் கூடாது என்ற வீம்பு அவளுக்கு ஏற்பட்டுவிட்டது. இந்த மனோபாவம்தான் சுதந்திரத்தை எப்போதும் காப்பாற்றி வந்திருக்கிறது.
ஜேஜேயின் சமூகம் பன்மைத் தன்மை உடையது. வாழ்வை நிராயுதபாணியாக எதிர்கொள்ளும் சாமானியர், முகமூடிகளுடன் எதிர்கொள்ளும் கபடவேடதாரிகள், இலக்கியவாதிகளிடையே உள்ள பிணக்குகள் மற்றும் சல்லித்தனங்கள். சாமானியருக்காக கனியும் இவனை கபடவேடதாரிகள் எரிச்சலுக்குள்ளாக்குகிறார்கள். சமரசமில்லா உண்மையை விரும்பும் மாசற்ற நீதி என்கிற பிளேடு கொண்டுள்ள பதம் போல இருக்கிறான் ஜேஜே. அதற்கான இக்கட்டுகளைப் பற்றிய ஜேஜேயின் பார்வைகள் அவன் பேசும்போது நமக்குக் கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஜேஜே, வளைந்து கொடுத்து வெற்றிகளைப் பெறும் சாராம்மாவை அருகில் நிறுத்தியிருக்கிறது காலம்.
சந்திப்பவர்களிடம் எல்லாம் கடவுளைப் போட்டுப் பார்த்து என்ன விடை வருகிறது என்று கவனிக்கிறேன். நாலுவித மனோ பாவங்கள்: ஒன்று, கடவுள் இருக்கிறார். இரண்டு கடவுள் இருக்கக்கூடும். மூன்று, கடவுள் இல்லாமலும் இருக்கக்கூடும். நான்கு, கடவுள் இல்லை. உலக மக்கள் முதலாவதிலிருந்து நான்காவதைப் பார்க்கப் போய்க்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது…… இரண்டாவதும் மூன்றாவதுமே முக்கியமான நிலைகள். இந்நிலைகளில்தான் தேடல்கள் இருக்கின்றன. வெற்றிகளும் வீழ்ச்சிகளும் இருக்கின்றன. முதலாவதும் நான்காவதும் இனிச் செய்ய எதுவுமில்லை என்ற நிலை.
முழுவதும் புரிந்து கொள்ள இன்னொரு வாசிப்பு தேவைப்படும். பார்ப்போம்.