தலைவணங்கி திரும்பிய இளைய யாதவரிடம் நடுக்குற்ற தாழ்ந்த குரலில் “யாதவரே, நீங்கள் யார்?” என்றார் கௌதம சிரகாரி. “அனைத்துயிரையும் அறிந்ததும் அறியப்படாததுமான ஒன்று. அதை நான் என்றும் அது என்றும் சொல்வது எங்கள் மரபு” என்று சொல்லி புன்னகைத்த இளைய யாதவர் திரும்பி துரியோதனனிடம் “அஸ்தினபுரிக்கரசே, சாந்தீபனி குருநிலையின் வேதமுடிபுநெறியின் ஆசிரியனாகிய நான் அவைநீங்குகிறேன். என் சொற்களுக்குரிய பரிசிலை இந்த வேள்வியவையிலிருந்து பெற்றுச்செல்ல விழைகிறேன்” என்றார்.
வணக்கம் நண்பர்களே,
வெண்முரசு நாவலின் பதினாறாவது நாவல் குருதிச்சாரல். இதனைப் பற்றிய எனது உள எழுச்சியை தமிழ்பயணி குழும நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விளைகிறேன்.
வெண்முரசு – குருதிச்சாரல்
ஆசிரியர் – ஜெயமோகன்
இணையத்தில் வாசிக்க
பாண்டவர்கள் வனவாசம் முடிந்த பின்னர், உபப்பிலாவ்யத்தில் மணக்கொடையாகப் பெற்ற நிலத்தில் அரசாங்கம் நடத்தியதுடன் இதற்கு முந்தைய நாவல் எழுதழல் முடிவடைந்தது.
குருதி குடித்தும் வஞ்சத்தின் தாகம் தீராத செம்மண் வெளியான குருக்ஷேத்திரத்தைப் பற்றிய வர்ணனைகளுடன் பதைபதைப்புடன் தொடங்குகிறது குருதிச்சாரல். போருக்கு முந்தைய தூதுக்கள் நடப்பதுதான் இந்த நாவலின் கரு என்றாலும், தனிப்பட்ட உணர்வு சார்ந்த தமிழ் புனைவுகளில் இந்த நாவலைச் சேர்த்தாக வேண்டும். அதைப்பற்றித்தான் இந்த மடலில் பேசியிருக்கிறேன்.
வென்ற மணமும் வீழ்ந்த மணமும்:
இந்த நாவலில் வரும் இரு தம்பதிகளைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.
- பீமன் – பலந்தரை
- கர்ணன் – சுப்ரியை
இவ்விரு மணங்களிடையே பல ஒற்றுமைகளை உணர்த்திச் செல்கிறது குருதிச்சாரல்.
- பலந்தரை, சுப்ரியை இருவருமே தத்தம் கணவர்களால் கடத்தி வரப்பட்டவர்கள்
- திருமணத்திற்கு முன் இருவருமே வேறு ஆண்களை மனதில் நிறுத்தியவர்கள். பலந்தரை துரியோதனுக்கு வாழ்க்கைப் படவேண்டியவள். சுப்ரியை ஜெயத்ரதனை (சிந்து நாட்டரசன், துச்சளையின் கணவன்) மனதில் நிறுத்தியவள்.
- திருமணத்திற்குப் பின் இருவருமே கணவனை வெறுத்தவர்கள், முடிந்த மட்டும் வஞ்சம் கொண்டு சொல்லாடியவர்கள்.
- பாரதத்தின் இராஜகுமாரிகள் என்பதால், அனைவருக்குமே சிறந்த சத்ரியன் ஒருவனை மணம் கொண்டு, அரசியாக அமரவேண்டிய கனவு கொண்டவர்கள். ஆனால் என்ன ஆனது. ஆனால் பீமனால் கவரப்பட்ட பலந்தரை, நாடற்றவனின் மனைவியானாள். அவளுடைய மூத்த சகோதரி பானுமதி அஸ்தினபுரியின் பட்டத்து அரசி. அடுத்த சகோதரி அசலையும் அஸ்தினபுரி அரசி. இரு தமக்கையரும் பெருவாழ்வு வாழ்கையில், தன் வாழ்வு மட்டும் பீமனால் வீணாய் போனதே என்று வெறுப்புடனே வாழ்கிறாள் பலந்தரை. மறுபக்கம் சுப்ரியை நிலை இன்னும் மோசம். ஒரு சூத மகனுக்கு மனைவியாகும் துர்பாக்கியம் நேர்ந்துவிட்டதே என்று மனம் வெதும்புகிறாள். தவிர, கர்ணனின் மூத்த மனைவியான சூத அரசியுடன் சக அரசாக வாழ நேர்ந்ததே என்கிற வெறுப்பு அவளை வெறுப்பில் தள்ளுகிறது. அரண்மனையை விட்டு நீங்காமல் காலத்தைக் கடத்துகிறாள். நேரம் கிடைக்கும்போதேல்லாம் கர்ணனை உதாசீனப் படுத்துகிறாள். அவள் அறை வாசலில் வெறுமனே காத்திருந்து திரும்புகிறான் கர்ணன்.
- இரு பெண்களுமே ஏதேனும் ஒரு வழியில் தத்தமது கணவர் உறவு குறித்து இளைய யாதவன் கிருஷ்ணனிடம் சொல்லாடுகின்றனர்.
ஆனால்….
இளைய யாதவனின் reverse swing பலந்தரையிடம் வேலை செய்கிறது.
இளைய யாதவர் புன்னகையுடன் “நன்று அரசி, தாங்கள் இயற்றுவதற்கும் இனி ஒன்றுள்ளது. மங்கலநாணை தாங்கள் துறக்கலாம். மிக எளிது. இடக்கையால் அதை இழுத்து அறுத்து தலைக்கு மேல் மும்முறை சுற்றி வலமாக இட்டால் போதும். காசிநாட்டு அரசியர் தொல்குடி ஷத்ரிய முறைமைகள் கொண்டவர்கள். நிஷாதர்களைப்போல எத்தனை முறை வேண்டுமென்றாலும் பூட்டவும் அறுக்கவும் அவர்களுக்கு உரிமை உண்டு” என்றார்.
…பீமன் “அவள் செல்லப்போவதில்லை” என்று முழங்கும் குரலில் சொன்னான். பெருங்கைகளைத் தூக்கி “ஒருபோதும் நான் அவளை விடமாட்டேன். என்னை நீங்கி அவள் சென்றால் எங்கணைந்தாலும் தேடிச்சென்று அவள் தலையை உடைப்பேன். ஆம்!” என்றபின் கதவை காலால் உதைத்துத் திறந்து வெளியே சென்றான். மீண்டும் கதவு வந்து அறைந்த ஓசை வெடி என ஒலித்தது. பலந்தரை தன் கைகளால் பாதிமுகத்தைப் பொத்தியபடி நடுங்கும் உடலுடன் அமர்ந்திருந்தாள்.
“அரசி, அது வெறும் உணர்வு. அவரிடம் நான் பேசுகிறேன்” என்றார் இளைய யாதவர். “அவர் தமையன் சொல்லை மீறுபவர் அல்ல. தாங்களோ புவிவெல்லும் அஸ்தினபுரியின் படைக்கூட்டிலமைந்த நாட்டுக்கு செல்லப்போகிறீர்கள். தாங்கள் விரும்பினால் இன்றே நாண்நீத்து காசியின் அரசி மட்டுமே என இங்கிருந்து எங்கள் காவலுடன் கிளம்பலாம்.” பலந்தரை எழுந்து மீண்டும் அமர்ந்து முனகலாக “இல்லை” என்றாள். “நான் அவரை துறக்கவியலாது.” இளைய யாதவர் “ஏன்? அதை மட்டுமேனும் சொல்லி அகல்க!” என்றார். அவள் தலைகுனிந்து கழுத்து விம்மலில் எழுந்தமைய கைவிரல்கள் பின்னித்தவிக்க அமர்ந்திருந்தாள். “சொல்க!” என்றார் இளைய யாதவர்.
வெறுப்பும், அன்பும் கலந்தும் இருந்தால்தானே தம்பதியர். வெறுப்பு விரிசலாக மாறும்போது அதை பீமன் பலந்தரை இருவருமே தவிர்த்துவிடுகின்றனர். நல் முடிவு!
மறு பக்கத்தில் – கர்ணன் சுப்ரியை பற்றிய கதையின் போக்கினை நான் வெகுவாக ரசித்தேன். பீமன் பலந்தரை உறவு போன்று அல்லாமல், உணர்வுக் கொந்தளிப்பாக இருக்கிறது. சுப்ரியையின் வெறுப்பைக் கண்டிருக்கிறோம் என்றாலும் இறுதி வரை அன்பின் இழை இருவரிடையே ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் உரையாடும்போது அனைத்துமே பிறழ்வாகப் போகிறது. நல்லுறவு அமைவதை சிதைக்கிறது. ஒட்டிக்கொண்டிருக்கும் சிறு இழையையும் கர்ணன் தண்ணியைப் போட்டு உளறி மொத்தமாகப் முடித்து விடுகிறான்.
“கிளம்புவதென்றால் உங்களுக்கு நானோ அந்த அவைநிகழ்வோ என்ன பொருட்டு? இவ்வுணர்வை ஏன் வந்து இங்கு சொல்லவேண்டும்?” என்றார் இளைய யாதவர். “ஆம், மெய்தான்” என்றபின் அவள் எழுந்துகொண்டாள். “அரசி, உங்களை இதுவரை பற்றி நிறுத்தியிருந்தவற்றில் ஒரு பிடிப்பு எஞ்சியிருக்கிறது. அது அறாமல் ஆகாது” என்றபடி இளைய யாதவரும் எழுந்தார். “சிறு பிடிப்பா?” என்றாள். “சின்னஞ்சிறு பற்றுதல்கூட இறுதிவரை எஞ்சுவதுண்டு. எஞ்சியிருக்கும் வரை சிறிதென்றும் பெரிதென்றும் ஏதுமில்லை” என்றார் இளைய யாதவர்.
பெருங்கொடை – 17
ஒட்டு மொத்தமாகக் கிளம்பிப் போய்விடுகிறாள் சுப்ரியை.
அவரவர் உணர்வைப் பின்தள்ளிய பீம-பலந்தரை மணம் வெல்கிறது. அவரவர் ஆணவத்தை முன் வைத்த கர்ண-சுப்ரியை மணம் கண் முன்னே வீழ்கிறது.
பலந்தரை பற்றி மகாபாரதத்தில் விரிவாக பதிவுகள் இல்லை என்கிறார்கள். சுப்ரியை பற்றிய குறிப்புகள் மிகச் சில என்கின்றனர். இது போன்ற மகாபாரதத்தில் விரிவாகப் பேசப்படடாத பல பாத்திரங்களை ரத்தமும் சதையுமாக நம்முடன் வாழச்செய்வது வெண்முரசு நாவலை தனித்துவமாக்குகிறது. இன்னமும் உறுதியாகச் சொல்வேன், அம்பை என்கிற கதாபாத்திரத்தைப் பற்றிய வெண்முரசு – முதற்கனல் நாவலில் பார்த்துவிட்டு அசராதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. விசித்திரவீரியன், அம்பிகை, அம்பாளிகை என்று சிறு சிறு கதாபாத்திரங்களைப் பற்றியும் விரிவாகப் பேசிச் செல்கிறது வெண்முரசு.
துரியோதனனுக்கு வெண்முரசு என்ன நியாயம் சொல்கிறது?
தெளிந்த நீரோடை போன்று அனைத்து கதாபாத்திரங்களும் அமைந்துள்ளன. துரியோதனன் அப்படி அல்ல. வெண்முரசின் துரியோதனன் என் மனதிற்கு இனியவன். 3 வருடங்களுக்கு முந்தி வெண்முரசின் துரியோதனன் என்று எனது எண்ணத்தைப் பதிவு செய்தேன். இன்றைக்கு போர்முகம் நின்று நோக்குகையில் எனக்கு துரியோதனனின் இன்றைய மனநிலையைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

பீமனைக் கங்கைக்குள் தள்ளியவன், அரக்கு இல்லம் அமைத்து பாண்டவர்களைக் கொலை செய்ய முயன்றவன், திரௌபதியைத் துகிலுரியச் செய்தவன் என்றெல்லாம் ஒரு புறம் நியாயம் இருக்கிறது. மறு புறம் குடி மக்கள் பால் அன்பு செலுத்துபவனாக, உபபாண்டவர்களுக்குத் தந்தையாக நற்குணங்களையும் சொல்லியே செல்கிறது. குருதிச்சாரலில் துரியோதன-கர்ண உரையாடல் நெகிழச் செய்கிறது நண்பர்களே. கர்ணனின் பிறப்பை உணர்ந்தவனாகவே துரியோதனன் வெண்முரசில் இருக்கிறான். ஆனால் வெளியே சொல்லாமல் மறைக்கிறான். எதிலும் அவனுக்கு முதலிடமே தர விரும்புகிறான். குந்தி மேலான வெறுப்பின் காரணம் என்ன என்று துரியோதனன் மனம் குமையும் இடம் so touching.
துரியோதனன் “நான் எதையும் விளக்க விரும்பவில்லை, அங்கரே. நீங்கள் வஞ்சம் மறக்கலாம், நான் மறக்கப்போவதில்லை. யாதவப் பேரரசி மீது என் முதல் கசப்பு அவர் பாண்டவர்களின் அன்னை, நிலவிழைவை அவர்களில் நிலைநிறுத்துபவர் என்பதனால் அல்ல. நீங்கள் என் தோழர் என்பதனால் என்றும் என் நஞ்சு அவ்வண்ணமே என்னுள் இருக்கும்” என்றான். கர்ணன் தலை முன்னால் தொங்கித் தழைந்திருக்க மெல்ல அசைந்தபடி அமர்ந்திருந்தான்.
….
துரியோதனன் கைநீட்டி கர்ணனின் மடித்த முழங்காலை தொட்டான். “எனக்கும் என் தம்பியருக்கும் நீங்களே முதன்மையானவர். பிறிதெவரும் அல்ல. வேதமும், நாடும், குலமும், மூதாதையரும்கூட அல்ல. இதை எனையாளும் தெய்வத்தைச் சான்றாக்கி சொல்கிறேன், அறிக இவ்வுலகு!” என்றான்.
….துரியோதனனின் குரல் மேலும் உரத்தது. “ஐவரின் நிலையும் அதுவே என்றேன். அறமென துளியேனும் நெஞ்சிலிருந்தால் அம்முதுமகள் வந்து ஷத்ரியர் அவையில் நின்று உரைக்கட்டும். அன்றி அந்தணருக்கு சொல் அளிக்கட்டும். அனைத்தும் அக்கணமே முடிந்துவிடும்.” சில கணங்கள் தயங்கி முனகல்போல “ஆம், அனைத்தும் முடிந்துவிடும். முடிக்குரியவர் எவர் என்ற ஐயமே எவருக்குமிருக்காது” என்றான் துரியோதனன். கர்ணன் மெல்ல முனகினான். “அதை நான் சொன்னதும் மறுசொல்லின்றி அப்படியே அமர்ந்தான் இளைய யாதவன். எதை அஞ்சுகிறார்கள்? ஒவ்வொரு சொல்லிலும் எது எழாமல் தவிர்க்கிறார்கள்? ஒரு சொல். ஒற்றைச்சொல், தெய்வங்கள் அறிய அதை சொல்லட்டும் அவையில் என்றேன். என் பிழை என்ன?”
‘முடிக்குரியவர் எவர் என்ற ஐயமே எவருக்குமிருக்காது’ என்பதை வாசிக்கும்போது கலங்கிவிட்டேன். இப்படிப்பட்ட ஒரு வாழ்வு அங்கனுக்கு அமையாமல் போயிருக்கக்கூடாதா? இந்தப் பாவி மகள் குந்தி அவனை மீட்டெடுத்திருக்கக்கூடாதா என்று மனம் ஏங்குகிறது. இதே தருணத்திற்கு இன்னுமொறு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
யுதிஷ்டிரன் தூக்கிப் பிடித்திருக்கும் வெண்கொற்றக் குடையின் கீழே, அர்ஜுனன் சவுக்கேந்தி நடத்திடும் ரதத்தில், பீமசேவிதனாய் வீற்றிருக்கும் கர்ணனின் சித்திரம், அந்த முதன்மைப் பாண்டவனின் அருகில் இருக்கும் பாஞ்சால புத்திரியின் சித்திரம்! இதையெல்லாம் நினைவில் அணி சேர்த்திட பயந்த திரௌபதி தானாக தலையை உதறிக் கொண்டாள்.
–இனி நான் உறங்கட்டும் (நாவல் – பிகே பாலகிருஷ்ணன்) பக்கம் 237
ஒட்டு மொத்தக் கூட்டத்தாலும் பிறப்பின் காரணமாக வஞ்சிக்கப் பட்டவனுக்காகப் பேசுபவன் துரியோதனன் ஒருவன்தான் நண்பர்களே! தர்மத்திற்கும் தோல்வி அடைந்தவனுக்கும் பேசுவதுதான் இலக்கியம் என்றால், துரியோதனன் ஒரு மறுக்க இயலாத இலக்கிய வடிவோன்.
சத்ரியர் சபையில் யாரேனும் கர்ணனை பிறப்பின் காரணம் சொல்லி ஏளனம் செய்தால், தன் வாள் பேசும் என்கிறான் துரியோதனன். ஆனால் கர்ணன் சத்ரியர்களால், அந்தணர்களால், வைதிகர்களால் இழிவு செய்யப்பட்டு வெளியேற்றப்படும்போது, துரியோதனன் ஏதேனும் செய்து தவிர்க்கமாட்டானா என்று அந்த அவையில் நானும் ஒருவனாக இருந்து கொண்டிருந்தேன். அவன் ஏன் அதைத் தவிர்த்தான் என்று புரிந்தவர்கள் கூறினான் மகிழ்வடைவேன்.
ஆக தீமை – நன்மை என்று இரு சுவர்களின் நடுவே துரியோதனன் இருக்கையில் அவனது மண்ணாசைக்கான, இந்தப் போருக்கான நியாயத்தை அவனது கலி குணத்தைக் காரணமாக வெண்முரசு சொல்லிச் செல்கிறது. வெண்முரசு வாசிப்பவன் அதில் மனசு ஆறுதல் அடையாமல் முன்னேறிக் கொண்டிருக்கிறான்.
கானலான காதலின் கிளர்ச்சி
சரி நெகழ்வைப் பற்றிப் பேசி விட்டேன். கிளர்ச்சியைப் பற்றியும் முடிப்பதற்கு முன்னர் குருதிச்சாரலின் அன்னையர்கள், தத்தம் முன்னாள் காதலர்களைச் (சரியான பொருள் வருமா என்று தெரிவில்லை. admirers என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்) சந்திக்கும் இடங்களை நினைவில் மீட்டு எடுத்துக்கொள்கிறேன்.
மணமாகும் முன்பு பூரிசிரவஸ் துச்சளையின்பால் காதலுறுகிறான். எல்லாம் கானலாகி, துச்சளை சிந்து நாட்டரசனை மணம் கொண்டு, நடு அகவை கடந்த பிறகு அஸ்தினபுரியில் பூரிசிரவசைச் சந்திக்கும் இடத்தைப் புன்னகையுடன் வாசிக்க முடியும்.
பூரிசிரவஸ் “நன்று அரசி, இடைநாழியில் நின்று பேசுவது முறையல்ல. பிறிதொருமுறை அரசமரபின்படி நான் தங்களை சந்திக்கிறேன்” என்றான். “நான் தங்களை சந்திக்க விழைந்தேன்” என்றாள் துச்சளை. “என்னையா? எதற்கு?” என்றான் பூரிசிரவஸ். “நான் கேட்கவிழைந்த ஒரு வினா நெஞ்சிலேயே நின்றிருக்கிறது, நெடுநாட்களாக.” அவன் தாரையை பார்க்க அவள் விலகிச்செல்ல மீண்டும் அசைந்தாள். துச்சளை அவள் கையைப்பற்றி தடுத்தாள். “சொல்க!” என்றான் பூரிசிரவஸ். “நீங்கள் என்பொருட்டு அவர்களை கைவிட்டீர்களா?” என்றாள். “என்ன?” என்றான் அதிர்ச்சியுடன். “நான் சொல்வது உங்களுக்கு புரியும்.”
…..
துச்சளை நின்று மூச்சிரைத்தாள். மேலாடையால் முகத்தை துடைத்துக்கொண்டாள். மீண்டும் பெருமூச்சுகள்விட்ட பின் “செல்வோம், பிந்திவிட்டது” என்றாள். “நான் உடன் நின்றிருக்கலாகாது, அரசி” என்றாள் தாரை. “நீ நின்றிருக்கவேண்டும்” என்றாள் துச்சளை. “தனியாகப் பேச நான் அஞ்சினேன்.” தாரை “ஏன்?” என்றாள். “நீ நின்றிருக்கையில்தான் இந்த இடைநாழி ஒரு பொது இடம்” என்றாள் துச்சளை.
பொற்பன்றி – 3
(வெண்முரசின் பூரிசிரவசுக்கு என்று ஒருத் தனிப்பதிவே போடலாம். ரசிக்கும் படியான தடுமாற்றம் கொண்டவன்!)
இதே போன்று தேவிகை – பூரிசிரவஸ் சந்திப்பு, சுப்ரியை ஜெயத்ரதன் சந்திப்பு, மயில் பீலியை ஒளித்துப் பாதுகாக்கும் பானுமதி என்று அனைத்து பட்டாசுகளையும் ஒரே நாவலுக்குள் கொளுத்திப்போட்டுள்ளார் ஜெயமோகன்.
இளைய யாதவன்
குறும்புகள் இல்லை, சுழிவுகள் இல்லை, சேட்டைகள் இல்லை. மனபாரத்துடன் இருக்கிறான் இளைய யாதவன் கிருஷ்ணன். துரியோதனனின் பிடிவாதத்தையே அவனுக்கு எதிரான ஆயுதமாக ஆக்கி, தன்னை இரப்பவனாகக் காட்டிக்கொண்டு, எதிர் வரப்போகும் மகாபாதக கொலைகளின் பழி பாண்டவர்கள் மீது வராமல் இருக்க பெரு முயற்சி எடுத்துக்கொள்கிறான். ஞானசபையின் விவாதங்கள் விஷ்ணுபுர விவாதத்தை நினைவு படுத்துகிறது. அதைப்போலவே எதுவும் புரியாமல் வாசித்துக் கடந்து வந்துவிட்டேன். ‘ஞான விவாதத்தில் நான் சொன்ன சொற்களுக்கான பரிசிலாக, பாண்டவர்களுக்கு ஐந்து இல்லங்களையாவது கொடு’ என்று துரியோதனனிடம் இரு கை நீட்டி இரக்கும் காட்சி பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.
“இறுதியாகக் கோருகிறேன், எனக்கு நீங்கள் அளிக்கவிருக்கும் கொடை என்ன?” என்றார் இளைய யாதவர். துரியோதனன் மாறாத குரலுறுதியுடன் “என் மூதாதையர்மேல், என் முடிமேல், கொடிவழிகளின்மேல் ஆணை. நீங்கள் உங்களுக்கெனக் கோருக! இக்கணமே எழுந்து என் முடியை உங்களுக்கு அளிப்பேன். பாண்டவருக்கு என்றால் ஊசிமுனை ஊன்றும் நிலம்கூட அளிக்கவியலாது” என்றான்.
எழாக் குரலுக்கு எத்தனை எடையிருக்கமுடியும் என்று சுப்ரியை உணர்ந்தாள். மூச்சு நிலைத்திருப்பதை உணர்ந்தபின் இழுத்து நெடுநீட்டென வெளிவிட்டாள். பக்கவாட்டில் தெரிந்த இளைய யாதவரின் முகம் துயர்திரண்டு உருவானதுபோல் தோன்றியது. மழலையருடையவை என அகன்ற விழிகளின் மயிரடர்ந்த இமைகள் சரிந்தன. நீட்டிய கைகளை அசையாமல் முன்வைத்தபடி அவர் நின்றார். பானுமதி எழுந்து தன் கையில் இருந்த கணையாழியை நீட்டி “யாதவரே, வெறுங்கையுடன் நீங்கள் அவைநீங்கலாகாது. இது என் கொடை. ஏற்று எனக்கு அருள்க!” என்றாள்.
அவர் நிமிர்ந்து அவள் விழிகளை நோக்கினார். பின்னர் “இல்லை, அரசி. இக்கொடையின் கடனை நான் நிகர்செய்யவியலாது. இங்கிருந்து எழுகையில் என் புறங்காலின் பொடியை தட்டிவிட்டுத்தான் செல்வேன். இந்நகருக்கும் இவ்வரசகுடிக்கும் இனி நான் பொறுப்பல்ல. இங்குள்ள அரசர் எவருக்கும் நான் இனி அளிக்கவேண்டியதென ஏதுமில்லை” என்றார். பானுமதியின் கை அந்தக் கணையாழியுடன் நடுங்கிக்கொண்டிருந்தது. இளைய யாதவர் திரும்பி வேள்விமேடையில் அமர்ந்திருந்த அமூர்த்தரை வணங்கிவிட்டு வலப்பக்கமாகத் திரும்பி வேள்வியவையிலிருந்து வெளியேறினார்.
பெருங்கொடை – 17
மீண்டுமொரு மடலில் சந்திப்போம் நண்பர்களே. வணக்கம்.
..தமிழ் பயணி குழுமத்திற்கு எழுதியது 1 ஜுன் 2019…