ஒளியிலே தெரிவது | வண்ணதாசன்


பவானி சிரித்த சிரிப்பை இதற்கு முன்பு பார்த்திருக்கிறேனா. புகையப் புகைய அடுப்புக் குழலை ஊதிக்கொண்டு இருக்கும்போது, குப்பென்று ஒரு ஊதலில் பிடிக்குமே அந்தத் தீயை கடைசியாக எப்போது பார்த்தேன்.

-ஒளியிலே தெரிவது

ஒளியிலே தெரிவது
ஆசிரியர் – வண்ணதாசன்
பதிப்பு – அமேசான் மின் புத்தகம்
பார்க்க – vannathasan

இது வரை வண்ணதாசனின் இரு சிறுகதைத் தொகுப்புகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். இது மூன்றாவது. இவ்வளவு எளிதான மொழி நடையில் இவ்வளவு இனிமையான நினைவுகளை, வண்ணங்களை, மனிதர்களை இத்தனை செரிவுடன் ஒரு மனிதரால் எழுத முடிகிறது. அந்த மொழி நடையை வாசிக்கையிலேயே நம்மை அறியாமல் புன்னகைக்க வைக்கிறார், பதைபதைக்க வைக்கிறார். ‘0கொஞ்ச நேரம் கழித்து அடுத்த கதையை வாசிக்கலாமே, அந்தக் கதையின் இனிமையில் திளைத்த பின்னர்’ என நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வைக்கிறார். சிக்கல் சிடுக்கல் இல்லாத இந்த கதையோட்டமே நம்மை ஆழ்ந்து போக வைக்கிறது.

நாச்சியாரிடமும் கிருஷ்ணம்மாவுடனும் சேது பேசிக்கொண்டிருக்கும்போது நாம் நம் கிராமத்தின் குளத்தங்கரையிலோ ஆற்றங்கரையிலோ இருப்பதாக உணர்கிறோம். ஒவ்வொருவரின் உள்ளும் பிறந்த வளர்ந்த மண்ணின் வேரைப் பிடித்து வைத்திருப்பது அம்மண்ணின் மனிதர்கள் அல்லவா. இன்றளவும் நம் ஊர்களின் நாச்சியாரும் கிருஷ்ணம்மாவும் இருந்துகொண்டுதானே இருக்கின்றனர். அவர்கள் இருக்கும் வரைதான் அம்மண்ணும் மங்காத நினைவுடன் நம்மிடையே நிற்கும்?

‘அப்படியே இருக்கீங்க’ என்று சொன்னதும் கிருஷ்ணம் மாவுக்கு ஒரே சிரிப்பு. ‘அப்பா.. இந்த நாற்பது வருஷத்தில் இன்றைக்குத்தான் வாயைத் திறந்து என்கிட்டே பேசத் தோணியிருக்கு போல’ கிருஷ்ணம்மா நாச்சியார் முதுகைத் தொட்டுக்கொண்டு என்னிடம் பேசினார்.

-சிநேகிதிகள்

நிறைய மனிதர்களைக் காட்டுகிறது இந்த தொகுப்பு. ஊதாரி தந்தையர்கள், உயிரான தோழிகள், ஏங்கும் மனிதர்கள், அழுத்தத்தில் பிதுங்கும் மனிதர்கள்…

‘இமயமலையும் அரபிக்கடலும்’ காதையில் வரும் தங்கம் அப்படிப்பட்டவள்தான். ஓடிப்போன தந்தை, அந்த எரிச்சலில் வாழ்க்கையை நடத்தும் தாய், படிப்பில் ஆர்வமாய் இருப்பவளை வேலைக்குப் போகவைக்கும் வறுமை… இத்தனைக்கிடையிலும் ‘அம்மா இப்படி சிரிச்சிட்டே இருந்தா எப்படி இருக்கும்’ என்று ஏங்குகிறாளே. நமக்கு என்னவோ செய்கிறது. கரிசனத்துடன் வந்த சைக்கிள் காரப் பெரியவர் செய்யும் உதவி என்னவோ சிறிதுதான் என்றாலும், தந்தை அற்ற பெண்ணின் அந்த கண்ணீர் துளிகள் வாசிப்பவர் மனதைக் கணக்கவே வைத்திருக்கும்.

‘புதையல் எடுத்துக்கிட்டு வந்திருக்கியாக்கும் உங்க அய்யா கிட்டேயே கொடு’ என்று சிரித்த அம்மா ‘சிரங்கு எல்லாம் ஆறிட்டுதா? கையைக் காட்டு’ என்று சொன்னாள். இப்போது சிரங்கு எப்படிப் போனால் என்ன? அம்மா ஏன் அப்படியே கொஞ்சநேரம் சிரித்துக் கொண்டு இருக்கக் கூடாது என்று தோன்றிற்று.

மெல்லிய உணர்வுகளை சொல்லிச் செல்கிறது அத்தனை கதைகளும். ‘சில ராஜா ராணிக்கப்பல்கள்’ கதையில் வரும் சுந்தரம் மாமாவிற்கும் சரோ அத்தைக்கும்தான் எத்தனை வித்தியாசம்?

அம்மாவைப் பார்த்ததும் சரோ அத்தை எழுந்திருந்தார்கள். முகம் கொள்ளாமல் சிரித்தாள். அம்மா பரிசு வாங்க வருவது போலவும், சரோ அத்தை பரிசு கொடுக்கப்போவது போலவும் நின்றார்கள். பக்கத்தில் வந்ததும் அம்மா கையை அத்தை பிடித்துக் கொண்டாள்.

எத்தனை நல்ல உவமை. கதையின் கரு மின்னலாக நம் மனதிற்குள் அடிக்கிறது. அதை ஒரு சிறிய பெண்ணின் பார்வையில் கதை சொல்லவேண்டும் என்று தோன்றியிருக்கிறது அவருக்கு.

oliyile therivathu vannathasan

இப்படி யாரும் இழுக்காமல் கதையில் கையில் கீரைக்கட்டுடன் பாஸ்கர பெரியப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கும் அம்மாவைப் பார்க்கும் நீலா, அவளுடைய காதலை எச்சரிக்கையுடன் அணுகும் அம்மா, பக்கத்து வீட்டு அக்காக்கள் நினைவைத் தரும் ஒரு கூழாங்கல் காந்தி, செம்பா, காணாமல் போகும் வாய்க்கால்கள் சிந்தாமணி அக்கா என சுற்றி வாழ்கிற மனிதர்களுடன் வாழ்ந்த உணர்வைத் தருகிறது இத் தொகுப்பு.

உணர்வுகளை நாசூக்குடன் வெளிக்கொணரும் சுலோச்சனா அத்தை, ஜெகதா மற்றும் ஒரு சுடுமண் காமதேனு மேலோட்டமாகப் பார்த்தால் ஏதோ எல்லை மீறிய ஒரு பெண்ணைக் காட்டுவது போலத் தோன்றும். நமக்கு இரண்டு நிமிடம் கழித்துதான் ஒரு மின்னல் அடிக்கிறது. ஆமா. ‘அவ அப்டின்னா இவன் ஏன் அதை எல்லாம் வளரவிட்டுகிட்டு இருக்கான்’ என்று உணரும்போது கதை நம்மை வேறொரு இடத்தில் நிறுத்திவிடுகிறது.

இப்படி விட்டால் ஒவ்வொரு கதையைப் பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாவற்றுயும் விஞ்சி இந்த நூலை வாசிக்க வைப்பது வண்ணதாசனின் அசை போடுவது போன்ற கடந்த கால நினைவுகள், வர்ணம் வாசனை என்று எல்லாவற்றையும் சற்றேனும் மிகை இன்றி அவர் நமக்குக் காட்டித்தரும் காட்சிகள், …. இன்னும் எவ்வளவே.. அவ்வளவு இனிமையாக இருக்கிறது இந்த நூல்.  இமைக்கணம் என்கிற தலைக்குள் ஏறாத தத்துவ நாவலை வாசித்துவிட்டு அரண்டு போன நம் மனதிற்கு இது தரும் ஆசுவாசத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

கடைசி பெஞ்சின் கோடானு கோடி வாசகர்களின் நலன் கருதி இத்துடன் முடித்துவிடுகிறேன். இன்னொரு நூல் அறிமுகத்தில் சந்திப்போம் நண்பர்களே.

 

One thought on “ஒளியிலே தெரிவது | வண்ணதாசன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s