அவர்களில் பீமன் கொடியவன் என்று இன்றுவரை எண்ணியிருந்தேன். அவனது கீழ்மை அவனாலேயே வெளிப்படுத்தப்படுவதென்பதனால் சற்று கள்ளமற்றது என்று இன்று தோன்றுகிறது. அறச்சொற்களை முகத்திலணிந்து நின்றிருக்கும் யுதிஷ்டிரனே இக்களம் கண்ட கீழ்மைகளின் உச்சம். –துரியோதனன், கார்கடல் – 84
வெண்முரசு நாவல் வரிசையில் 20ஆவது நாவல் கார்கடல். பீஷ்மரின் வீழ்ச்சியுடன் 19ஆவது நாவல் திசைதேர் வெள்ளம் முடிகிறது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வீரர்களின் வீழ்ச்சிகளைக் காட்டுகிறது கார்கடல் – துரோணரின் வீழ்ச்சியுடன் முடிகிறது.
கார்கடல் (நாவல்)
- ஆசிரியர் – ஜெயமோகன்
- இணையத்தில் வாசிக்க – கார்கடல் 1
11லிருந்து 15ஆம் நாள் போர் வரை விரித்துச் சொல்கிறது கார்கடல்.
கர்ணன்
கர்ணன் குருக்ஷேத்திரம் செல்லத் தயாராவதும், குந்தி வந்து சந்திப்பதும் கார்கடலில் வாசிக்க இனிமையானவை.
சிவதரிடம் கர்ணன் விடைபெறும் காட்சி நம் நிலைமத்தை அசைத்துப் பார்க்கிறது. திரும்பி வராது ஒழிவதை உணர்ந்து விடைபெறுவது மனித மரண காலத்தில் நிகழலாம். அதற்கு முன்னரே நிகழ்வதென்பது எத்தனை வீரியம் மிக்கதாகிறது!
கர்ணன் குந்தியின் மகன் என்பதை அனைவரும் அறிந்ததாகவே சொல்லிச் செல்கிறது வெண்முரசு. குந்தி-கர்ணன் சந்திப்பிலும் அந்த நூலைப் பிடித்தவாரே நிகழ்கிறது. பொதுவாக இந்தச் சந்திப்பில் கர்ணன்தான் குந்தியைப் போட்டு சாத்துவான். வெண்முரசில் குந்தி கர்ணனைச் சாடுகிறாள்.
கர்ணன் போரிடும் தருணங்களை எழுச்சியுடன் காட்டுகிறது கார்கடல். துரதிருஷ்டவசமாக, வார்த்தைகளால் கட்டுப்பட்டு, தோற்றுத் தோற்றுத் திரும்புகிறான். கடோத்கஜன் மட்டும் இவனால் வெல்லப்படுகிறான்.
வீரர்களின் வீழ்ச்சி
லட்சுமணன் வீழ்த்தப்படுகிறான். அபிமன்யூ அம்புகளால் புரட்டப்படுகிறான். விகர்ணன் மண்டை உடைபடுகிறது. பூரிசிரவஸ் கொலை செய்யப்படுகிறான். ஜெயத்ரதன் வீழ்கிறான். கடோத்கஜன் வீழ்கிறான். குண்டாசி வீழ்கிறான். துருபதர் வீழ்கிறார். துரோணர் கொலை செய்யப்படுகிறார். தர்ம அதர்மங்கள் சண்டை போடுகின்றன. சத்தம் காதைப் பிளக்கிறது.
லட்சுமணன்
வெண்முரசைக் கொண்டு சென்ற பெரு வீரர்களின் மைந்தர்கள் வீழ்ந்தார்கள். லட்சுமணனை அபிமன்யூ வீழ்த்துகிறான். போர் தொடங்கும் முன் தலைப் பாகையை கால் பந்தாக்கி உதைத்து விளையாண்டவர்கள், தத்தம் தலையை உடைத்து விளையாடுவதைக் காண்பது காலத்தின் கோலம்.
அபிமன்யூ
இளமையின் வேகம், ஏமாற்றத்தின் கசப்பு, அக்கசப்பின் ஊடாக தந்தையை மீறும் துடுக்கு என்று அபிமன்யு இப்போரில் எந்நேரமும் வாலில் தீ எரியும் குரங்கு போலவே திரிகிறான். பத்ம வியூகத்திற்குள் இவனை யுதிஷ்டிரரால் திணிக்கப் படுவதாக கார்கடல் காட்டுகிறது.
அபிமன்யூ கும்பலாகச் சேர்ந்து வீழ்த்தப்படுகிறான். வீழ்த்திவிட்டு, ‘அர்ஜுனனா நீ’ என்று வஞ்சம் தீர்த்தவராய் காட்சி அளிக்கிறார் ஆசான் துரோணர். அப்பொழுது கூட ‘இப்போரை நிறுத்துங்கள்’ என்று துரியோதனன் பாவம் நொந்து போகிறான். ஆனால் பீமனைப் போல் கொலை வெறி ஆடவில்லை அவன். மைந்தர்களைக் கண்ட போதெல்லாம் தாழ்ந்து போகிறான். பெருந்தந்தை ஆனவன், தத்தம் தம்பிகளையும், வாரிசுகளையும் காவு கொடுத்து கையறு நிலையில் நிற்பது பரிதாபம்.
கார்கடல் வீச்சு
பாரத கதை விடுத்து, சில இடங்களில் வெண்முரசு தனக்கென இடம் எடுத்துக்கொண்டு, புனைவின் உதவியுடன் விரித்துச் சொல்கிறது. அதில் ஒரு சிறு இடம் விகர்ணனின் வீழ்ச்சி.
துரௌபதி துகிலுரியப்படும் இடத்திலும், பிற இடத்திலும் கௌரவர்களின் தர்மத்தின் சாட்சியாக குரல் எழுப்பியவன் விகர்ணன்.
என்றாலும், சொல்லப்பட்ட வஞ்சினத்திற்காக அவனையும் கொல்லத்தான் வேண்டுமோ என்று நம்மைக் கேட்கிறது கார்கடல். பதைபதைக்கும் போரில் ஒரு தர்ம-அதர்ம விவாதத்தை எழுப்பியபடி மண்டை உடைத்துச் செல்கிறான் மல்லன் பீமன்.
இது தவிர, பால்ஹிகர்களின் வீழ்ச்சி, கிருதவர்மன்-ஜெயத்ரதன் சந்திப்பு, குந்தி-கர்ணன் சந்திப்பு என்று வெண்முரசு விளையாடிச் செல்லும் இடங்கள் கார்கடலில் உள்ளன.
கார்கடல் காட்டும் யுதிஷ்டிரன்
தம்பிகளின் வெற்றிகளில் வாகை சூடுவது யுதிஷ்டிரர் வழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும் என்றாலும், வெண்முரசு ரொம்ப கூரிய வார்த்தைகளால் அவரைக் காட்டுகிறது. அபிமன்யூவைத் தனியனாக பத்மவியூகத்திற்குள் செலுத்துபவராக, துருபதரரின் வீழ்ச்சிக்குப் பின்னர் திருஷ்டத்துய்மனனைப் பழிவாங்கச் சொல்லிப் படுத்துபவராக, கடோத்கஜனின் வீழ்ச்சிக்குப் பழிவாங்க பீமனைத் துரத்துபவராக இருப்பவரை, அனைவரும் ஒன்று கூடி ஆசான் துரோணரின் வீழ்ச்சிக்குப் பொறுப்பேற்கச் சொல்லி நையப் புடைத்துவிடுகின்றனர்!!
ஐந்து வருடமாக சென்று கொண்டிருக்கும் ஜெயமோகனின் இடையறாத உழைப்பு வெல்க!
இனியொரு பதிவில் சந்திப்பொம் நண்பர்களே!
வளர்க பாரதம்!