நீர்ச்சுடர் | ஜெயமோகன்


“அரசே, அதற்கு உங்களுக்கு உரிமையில்லை. விட்டுச் செல்பவர்களை தொடர்ந்து செல்வதென்பது மீறல். மானுட நெறிகளுக்கும் தெய்வ நெறிகளுக்கும் எதிரானது” -சஞ்சயன்

நீர்ச்சுடர் – 61
பகுதி ஒன்பது : சிறகெழுகை – 3

பாரதப் போர் முடிந்த பின்னர் நீத்தார் காரியங்கள் நடப்பதையும், மீதமிருக்கும் கதை மாந்தர்கள் ஒவ்வொருவராக மீளா விடை கொள்வதையும் காட்டுகிறது நீர்ச்சுடர். வெண்முரசு நாவல் வரிசையின் 23வது நாவல்.

மீண்ட யுதிஷ்டிரன்

யுதிஷ்டிரன் இழப்பிலிருந்து மீண்டு மணிமுடி சூடுதலை நோக்கி நகன்று செல்கிறார். பிறர் பாவம் புத்திர சோகத்தில் தவிக்கின்றனர்.

திருதராஷ்டிரர் – காந்தாரி

அஸ்தினபுரி விட்டு காந்தாரி நீங்கும் இடத்தில் மனம் கலங்கிவிடுகிறது.

#காந்தாரி காட்டை ஒருமுறை கைகூப்பி தொழுதாள். படகு ஒளிப்புள்ளிகளாக மாறி கங்கைமேல் இருந்த அரையிருளில் புதைந்தது. #நீர்ச்சுடர் #வெண்முரசு #epic

நீர்ச்சுடர் – 17 பகுதி மூன்று : பலிநீர் – 4

எப்படி தடபுடலாக உள்ளே நுழைந்தாள். ஒரு வாடிக்கையாளரை சந்திப்புக்குச் சென்றபோது, எனது மடிக்கணினியின் திரைக்காட்சியாக பின்வரும் காட்சியை வைத்திருந்தேன். சந்திப்புக்கு அனைவரும் தாமதமாகியது என்பதால், அந்த அறைக்குள் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது இப்படம்.

இன்று இப்படியாக இவள் உதிர்ந்(த்)துச் செல்கிறாள்.

பிற பாரதத்தில் வருவது போன்று காந்தாரி, இளைய யாதவரைச் சபிக்கவில்லை. வாழ்த்தியே செல்கிறாள். ஆனால், மக்கள் சபிக்கின்றனர்!

gandhari

விதுரரை, சஞ்சயனை விடுத்து கான் நோக்கி நகர்கிறார் திருதராஷ்டிரர், மனம் முழுங்க மகனின் இழப்புச் சோகத்துடன்.

திருதராஷ்டிரர் திரும்பாமலேயே “சஞ்சயா…” என்றார். சஞ்சயன் “அரசே…” என்றான். “இனி நீ என்னுடன் வரவேண்டாம்…” என்றார். அவன் “ஆணை” என்றான். அவர் மேலும் ஏதும் சொல்லாமல் நடக்க சஞ்சயன் தலைவணங்கி கைகட்டி நோக்கியபடி நின்றான்.

நீர்ச்சுடர் – 59 பகுதி ஒன்பது : சிறகெழுகை – 1

mahabharata-after-war

திரௌபதி

இப்போர் என்னுடையதல்ல. என் பொருட்டென்று சொல்லி ஆண்களாகிய நீங்கள் போருக்கெழுகிறீர்கள். காலந்தோறும் இது இவ்வாறுதான் நிகழ்கிறது. மிதிலையின் அரசியின் பொருட்டு நிகழ்ந்தது இலங்கைப்போர் என்கிறார்கள் சூதர்கள். அது அரக்கர்கோனுக்கும் அயோத்தியின் அரசனுக்கும் நிகழ்ந்த பூசல். அதில் ஜனகர் மகள் ஆற்றுவதற்கென்ன இருந்தது?
-திரௌபதி
‘செந்நா வேங்கை’ – 3

Draupati (c) unknown
Draupati (c) unknown

வெண்முரசின் திரௌபதி குறித்து எனக்கு மிகுந்த குழப்பங்கள். அகந்தையும், செருக்கும், மிடுக்கும், வஞ்சமும் கொண்ட ஒருத்தி. கனிவும், விலக்கமும் கொண்ட இன்னொருத்தி. எதற்காக அப்படி இருக்கிறாள்? எதற்காக இப்படி ஆனாள் ? காலம் போன கடைசியில் நீர்ச்சுடரில் திரும்ப வஞ்சம் பழுதற தீர்த்து வா என்று பார்த்தனை ஏன் ஏவுகிறாள்? பார்க்க – செந்நா வேங்கை

வஞ்சம் தீர்த்தபின், கர்ண பிறப்பு ரகசியம் தெரிந்த பின், இழப்புகளைக் கண்முன் பார்த்தபின், அருகே கண்மூடிப் படுத்திருக்கும் குந்தியைப் பார்த்தபின் மனம் குமுறும் பிகே பாலகிருஷ்ணனின் பாஞ்சாலியும் என் மனதில் இருக்கிறாள். (பார்க்க. இனி நான் உறங்கட்டும் | பி. கெ. பாலகிருஷ்ணன்). ஜெயமோகனின் பாஞ்சாலியும் இருக்கிறாள். ஆனால் முன்னர் சொல்லப்பட்ட பாஞ்சாலியிடம் இந்தத் தடுமாற்றம் இல்லையோ என்று தோன்றுகிறது.

இளைய யாதவர் – சுபத்திரை உரையாடல்

நீர்ச்சுடரின் செழுமையான பக்கங்களில் இளைய யாதவரும், மகனை இழந்த கொந்தளிப்பில் இருக்கும் சுபத்திரையும் உரையாடும் இடமும் ஒன்று. ஆனால் அதைப் பற்றி பத்ம வியூகம் – ஜெயமோகன் குறுநாவல்கள் பற்றி எழுதுகையில் சொல்லிவிட்டதால், தவிர்த்து முன் செல்கிறேன்.

குந்தி

யுதிஷ்டிரா, என் வயிற்றில் பிறந்த உன் தமையன் கர்ணனுக்கும் உரிய நீர்க்கடன்களைச் செய்க! -குந்தி

நீர்ச்சுடர் – 57 பகுதி எட்டு : விண்நோக்கு – 7

கர்ணனின் பிறப்பு ரகசியத்தைக் குந்தி சொல்வதையும், அதை ஒற்றி பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலியின் குமுறல்களைக் காட்சிப் படுத்திய நாவலைப் பற்றி முன்னர் அறிமுகம் செய்திருக்கிறேன். பார்க்க. இனி நான் உறங்கட்டும் | பி. கெ. பாலகிருஷ்ணன். இதை வெண்முரசு எவ்வாறு சொல்கிறது என்று நான் பார்க்கக் காத்திருந்தேன். அனைவருக்கும் அரசல் புரசலாக தெரிந்ததாகவே வெண்முரசு தொடக்கம் முதல் காட்டி வருகிறது. நீர்ச்சுடரில் குந்தி அதை வெளிப்படையாகக் கூறியபோதும், யாதொரு சலனமும் என் மனதில் எழவில்லை. விக்கெட் விழுந்தது, அடுத்த விக்கெட் என்று நீர்ச்சுடர் எளிதாக கடந்து சென்றுவிடுகிறது! அதெப்படி செய்யலாம் என்று நண்பரிடம் புலம்பிக்கொண்டிருந்தேன்.

kunti devi

கதை இன்னும் முடிந்துவிடவில்லை. காத்திருக்கலாம்.

நிமித்தம்

சகதேவனின் வாரிசு சுகோத்ரனும் உஜ்வலனும் நிமித்தக் கலை (கணக்கு!) பற்றிப் பேசும் இடங்கள் செரிவானவை. நீர்ச்சுடரின் ரசிக்கும்படியான உரையாடல்களில் இவை முக்கியமானவை. யானை வைத்தியத்தைப் பற்றிப் பேசியிருக்கிறது, கைவிடுபடைகளைப் பற்றிப் பேசியிருக்கிறது. இந்திரவிழவைப் பற்றிப் பேசியிருக்கிறது, வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடிகளைப் பற்றிப் பேசியிருக்கிறது. இன்னும் எத்தனையோ. அதில் சகோத்ரனும் உஜ்வலனும் உரையாடும் இடங்கள் சேர்க்கப்படவேண்டும்.

மனிதர்கள் தங்களிடம் தாங்களே சொல்லிக்கொள்ளும் பொய்கள் அளவுக்கு வேறெங்கும் சொல்வதில்லை. தெய்வங்களிடம்கூட -உஜ்வலன்

நீர்ச்சுடர் – 55 பகுதி எட்டு : விண்நோக்கு – 5

பூர்ணை, உஜ்வலன், கனகர்

புனைவின் வழி உலாவும் வெண்முரசின் கதாமாந்தர்கள் இந்த நாவல் வரிசையை அழகுறச் செய்கின்றனர். சுபகைக்கென்றே ஒரு பதில் எழுதியிருக்கிறேன். பார்க்க – சுபகையின் காதல் – காண்டீபம் – ஜெயமோகன் அந்த வரிசையில் இம்மூவருக்கும் அவசியம் இடம் உண்டு.

பத்ம வியுகத்தில் வரும் வரிகளை வைத்தே இந்தப் பதிவினை முடிக்கிறேன் நண்பர்களே. வளர்க பாரதம்..

இனி குருவம்சத்தில் யாரும் நிம்மதியாகத் தூங்கமுடியாது. ஒரு போதும் போர் இவர்களை விட்டு விலகாது. வெற்றி மாலையின் ஏதோ ஒரு மலருக்குள் பூநாகம் காத்திருக்கிறது. தோற்றவர்கள் நிம்மதியாகத் தூங்கலாம். அவர்களுக்கு இழக்க ஏதுமில்லை. காண்பதற்குக் கனவுகளும் மிச்சம் இருக்கும்.

பத்மவியூகம் – சிறுகதை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s