சென்னையிலிருந்து கண்டி


சென்னையிலிருந்து கண்டி – முதல் நாள் – ஜுன் 5, 2019.

சிங்கையிலிருந்து சென்னை சென்று சென்னையிலிருந்து, காலை முதல் விமானத்தில், கொழும்பிற்குச் செல்வதாக திட்டம்.

சூரிய உதயத்திற்கு முன்னரே, சென்னை வானூர்தி நிலையத்தை அடைந்தோம். காலையில் எழுந்து அன்றைய பணிகளைத் தொடர ஆயத்தமாகி இருந்தது. சீருந்துப் பயணம் ஒவ்வாமையினால், இறங்கியதுமே தம்பி ராம் கார்த்திக் வாயுமிழ்ந்தான். அதைப் பார்த்துவிட்டு, அருகில் சஃபாரி அணிந்து நின்றிருந்த ஒரு பெரியவர் எங்களிடம் பரிவுடன் தண்ணீர் தந்து உதவினார்.

DAY 1 CHENNAI AIRPORT AIR INDIA
DAY 1 CHENNAI AIRPORT AIR INDIA

அதிகக் கூட்டம் இல்லாத காரணத்தால், விரைவிலேயே குடியேற்றச் சோதனை முடித்து, உள்ளே செல்லும்போது, அந்த சபாரி நபர் சுங்கத் துறையில் நின்று கொண்டு , எங்களுக்கு விடை அளித்தார். அவர் தரும் பரிவு என்கிற செய்தியைச் சுமந்து இந்தப் பயணத்தைத் தொடங்குவோம்.

DAY 1 CHENNAI AIRPORT SUNRISE
DAY 1 CHENNAI AIRPORT SUNRISE

இரண்டு நாளாக சரியான தூக்கம் இல்லை. முதல் நாள் சிங்கையிலிருந்து சென்னை வர விடிகாலையில் எழவேண்டி இருந்தது. மறுநாள் இலங்கை செல்ல கோழி கூவுவதற்கு முன்னரே எழுந்துவிட்டேன். எனவே, வண்டி ஏறியதுமே உறங்கிவிட்டேன்.

DAY 1 BREAKFAST
DAY 1 BREAKFAST

நானும் என் குடும்ப நபர்களும் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து கண்டி நகரத்திற்குச் சென்றோம்.

DAY 1 COLOMBO AIRPORT
கொழும்பு வானூர்தி நிலையத்திலிருந்து, கார் நிறுத்தத்திற்குச் செல்ல இலவசச் சேவை

எங்கள் இலங்கை பயணத்திற்கு நாங்கள் Blue Lanka Toursஐ நாடியிருந்தோம். பயணம் 3 மணி நேரத்தை எடுத்துக்கொண்டது. ஆனால் எனக்கு நேரம் போனதே தெரியவில்லை.

சுற்றிப் பார்த்தால் மரங்கள் மற்றும் பச்சை பசேல் என புல்வெளி மட்டும்தான் என் கண்களில் தெரிந்தன. இலங்கையில் விமானம் இறங்கும் முன்னர், கீழே தெரியும் காட்சிகள் ஒருவரது மனதைக் கொள்ளை கொள்பவை. ஒரு பக்கம் நீல நிறத்தில் பேராழி. மறு பக்கம் பசுமை போர்த்திய, தோப்புகள் சூழ்ந்த நிலப்பரப்பு. இவ்வளவு அழகான பூமியில்தான் எவ்வளவு பிரச்சினைகள்!

கண்டிக்கு..
கண்டிக்கு..

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை குண்டு வெடிப்பு நடந்து, இரண்டு மாதங்களுக்குள் சென்றதால், அங்கு சுற்றுலா பயணிகள் என எவரும் என் கண்களுக்குத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக சாலைகளில் இராணுவத்தினர் நின்று கொண்டு இருந்தனர். மூன்று மணி நேரம் கழித்து கண்டியை அடைந்தோம்.

DAY 1 KANDY ROAD 2
கண்டிக்கு..

இலங்கையில் மத்திய மாகாணத்தில், பசுமையான மலைகளால் சூழப் பட்ட ஒரு நகரம் கண்டி. புத்தரின் பல் உள்ள புனித பல் கோவில் (Temple of tooth) இந்த நகரில் தான் அமைந்துள்ளது. அதைப்பற்றிப் பிறகு பேசுவோம்.

கண்டிக்கு வருவேரை வரவேற்பது போல அமைந்துள்ளது பேராதனை தாவரவியல் பூங்கா (Royal Botanical Gardens, Peradeniya). அதைப் பற்றி சொல்லாது போனால், இந்தக் கட்டுரை முழுமை பெறாது.

பேராதனை தாவரவியல் பூங்கா

பூங்காவின் நுழை வாயிலில் கூட்டம் அதிகமில்லை. சில உள்ளுர் வாசிகள் நின்றிருந்தனர். நாங்கள் சுற்றுலாப் பயணிகள் என்பதால் எங்களை உடனே உள்ளே அனுமதித்தனர்.

நாங்கள் களைத்திருந்தோம். நான் உள்ளே சென்றவுடன், எனக்குக் கப கபவென பசி எடுத்தது. ஏதாவது கஃபே, உணவகம் என்று ஏதாவது உள்ளதா என்று தேடினோம். ஒன்றே ஓன்று இருந்தது. மேற்கத்திய உணவுகள் இருந்தன.

Photo(c) 2 Days In Kandy: 7 Brilliant Places To Visit In Kandy Sri Lanka [2019] | Dream Big, Travel Far
Photo(c) 2 Days In Kandy: 7 Brilliant Places To Visit In Kandy Sri Lanka [2019] | Dream Big, Travel Far
பசியில் ஓடி, ஓர் இடத்தைப் பிடித்து, உணவுப் பட்டியலை மேய ஆரம்பித்தேன். அவசரத்திற்கு சுட்ட ரொட்டிகளும், உருளைக் கிழங்கு வறுவலும், பழரசமும் கிடைத்தன. அகோரப் பசிக்கு அது போதவில்லை என்றாலும், பூங்காவை சுற்றி நடக்க சக்தி கிடைத்தது. வாருங்கள் அந்த ஆற்றங்கரையில் சற்று நடப்போம்.

இடது பக்கம் பாருங்கள். அங்கு ஒரு அழகான ஆறு ஓடுகிறது. அது மகாவலி ஆறு அல்லது அதன் பெயர் மகாவலி கங்கை! நம் இந்தியாவில் கங்கையைப் போல, இலங்கையின் நீளமான ஆறு இது. நுவரெலியா மாவட்டத்தில் தொடங்கி திரிகோணமலையில் கடலில் கலக்கிறது. கரைகள் முழுக்க அடர்ந்த மூங்கில் மரங்கள் இருக்கின்றன. செடி கொடிகள் செழுமையாக உடன் வளர்ந்துள்ளன.

மகாவலி ஆறு
மகாவலி ஆறு
பேராதனை தாவரவியல் பூங்கா
பேராதனை தாவரவியல் பூங்கா

வலது பக்கம் பாருங்கள். பூங்காவில் துரியன் மரங்கள் இருக்கின்றன. நூற்றாண்டுகள் கடந்த பழமையான மரங்கள் நம்மை ஆசீர்வதிக்கின்றன. நாகலிங்க மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ளன. அந்த நாகலிங்கப் பூக்கள் எவ்வளவு அழகு! ‘பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா’ என்று கபிலர் பாடுகிறாரே, அந்த மகிழ மரம் வளர்ந்திருக்கிறது.

இரு பக்கங்களிலும் வளர்ந்த பனை மரங்களுக்கு நடுவில் செல்லும் ராஜபாட்டையில் நடந்து வந்து இந்தச் சுற்றை முடித்திருக்கிறோம். இதில் ஆடும் பாலத்தில் ஏறி மகாவலி ஆற்றின் அழகை முழுமையாக ரசித்திருக்கிறோம். இந்தப் பொழுது போதுமா! கண்கள் இரண்டும் போதுமா!

ஆர்க்கிட் தோட்டம் இருப்பதாய் சொன்னார் துஷார. செல்லும் அளவிற்கு உடலில் வலுவில்லை. தவிர, சிங்கை தாவரவியல் பூங்காவில் ஆர்க்கிட் தோட்டத்தை முழுக்க சுற்றி இருக்கிறேன். அதனை நினைத்து மனதைச் சமாதானப் படுத்திக்கொண்டு இந்தப் பூங்காவை விட்டு நகர்கிறேன். மீண்டும் வருவேன் என்கிற நம்பிக்கையோடு!

DAY 1 PERADANIA BOTANICAL GARDEN KANDY 10
DAY 1 PERADANIA BOTANICAL GARDEN KANDY 10

கண்டி பிள்ளையார் கோயில்

நாங்கள் கேட்டுக்கொண்டபடி பூங்காவிலிருந்து நேராக கட்டுக்கலை பிள்ளையார் கோயிலுக்கு அழைத்துச் சென்றார் எங்கள் ஓட்டுநர். வாருங்கள் கோயிலுக்குள் சென்று வரலாம். சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. கோயில் பார்க்க சுத்தமாகவும், அழகாகவும் இருக்கிறது. அதிகம் கூட்டமில்லை. மாலை வேளை முதல் பூசனையில் கலந்து கொண்டோம்.

DAY 1 KATTUKALAI PILLAIYAR KOYIL KANDY 1
பிள்ளையார் கோயில் – கண்டி

கோயிலில் பக்கத்தில் கணேசனந்த உணவகத்தில் இரவு உணவிற்கு என் அப்பா தோசை சொன்னார். நான் பாலாடைக்கட்டி போட்ட தோசையை வாங்கிக் கொண்டேன். உணவுப் பொட்டலம் வரும்வரை ஐபிஎல் பற்றி கதை அடித்துக்கொண்டிருந்தோம்.

மிகவும் நீளமான நாள். இனி எங்கும் போவதற்கில்லை. தங்குமிடத்திற்குச் சென்று நீராடிவிட்டு, உணவருந்தினோம். மரங்கள் சூழ்ந்த மலைகளுக்கெதிரே, மெளிதான குளிர் காற்று எங்களை ஆறுதல் படுத்த, இந்த நாளை அளித்த இறைவனுக்கு நன்றி சொல்லி குப்புறப் படுத்து உறங்குகிறோம்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

டாட்டா..

KANDY HOTEL (c) Google Maps
KANDY HOTEL (c) Google Maps

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s