வீரகெட்டிய - மத்தார சாலை

கதிர்காமம் – காலி


வணக்கம்!

யால தேசிய வனத்தை நேற்று மாலையில் சுற்றிப் பார்த்ததால் எனக்கு மிகக் களைப்பாக இருந்தது, என்னை ஒரு பத்து நபர்கள் அடித்து போட்டது போல. இரவு திஸ்ஸமஹாராம வந்து ஓர் இரவு தங்கினோம். ஆனால் பயணங்கள் முடிவதில்லை. நமது இன்றைய பயணத் திட்டம்:

• திஸ்ஸமஹாராமத்தில் இருந்து கதிர்காமம் செல்வது.
• அங்கு இருந்து கடற்கரை நகரமான காலி செல்வது.
• மாலையில் கடலில் விளையாடுவது.

இந்தத் தொடரின் முந்தைய பாகங்கள்

நாங்கள் தங்கியிருந்த விடுதியில் சிறு சிறு வீடுகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் எதிரெதிராக நான்கு அறைகள் இருந்தன. இது உங்கள் வீட்டை போல வாசல் கதவைக் கொண்டிருந்தது. புகுபதிகை (செக்-இன்) செய்தபின், எங்கள் அறைக்குக் காண்பிக்கப்படுவதற்கு முன்பு நாங்கள் பழச்சாருடன் வரவேற்கப் பட்டோம். விடுதியில் ஆட்களே இல்லை.

அங்க ஒரு இரவு தான் தங்கியிருந்தேன், ஆனால் திரும்பி வந்து நீண்ட காலம் தங்குவதில் மகிழ்ச்சியாக இருப்பேன் என நினைக்கிறேன். இந்த விடுதி யால தேசிய பூங்கா மற்றும் கதிர்காமம் முருகன் கோயிலுக்கு அருகில் உள்ளது. அதில் ஒரு நல்ல நீச்சல் குளமும் இருந்தது. நான் நீந்த வேண்டாம் என்று என் தந்தை சொன்னதால் என்னால் நீந்த முடியவில்லை 😭😭😭.

IMG_2262

எங்களுக்கு காலை உணவு ரொட்டிகள், பழங்கள் மற்றும் தேங்காய் சாம்பலுடன் இடியப்பம். என் தம்பிக்காக வாங்கிய இடியப்பத்தை அவன் வீண் அடித்து விட்டான். பொதுவாக இந்தியர்கள் சிலர் விடுதியில் வழங்கப்படும் இலவச காலை உணவைக் கட்டி எடுத்து செல்வார்கள். வெளிநாடுகளில் அதைச் செய்யாதீர்கள். அதற்கு அனுமதி கிடையாது. நாங்கள் எங்கள் பணியாளரிடம் கேட்ட பொழுது அந்த இடியாப்பத்தை அவர் எங்களுக்குப் பொட்டலமாகக் கட்டித் தந்தார்.

கதிர்காமம்

முந்திய நாள் மாலையில் கதிர்காமம் கோயில் அருகில்தான் உள்ளது என்று என் அப்பா சொன்னார். அதை அடுத்து என் அம்மா கதிர்காமம் கோவிலுக்கு போகவேண்டும் என்று ஒத்தை காலில் நின்றார். சுற்றுலா திட்டங்களை யாரும் மாற்ற மாட்டார்கள். நாங்கள் துஷாரவிடம் வேண்டுகோள் விடுத்தோம். அவரும் அதைப் பரிசீலித்து, அவருடைய நிறுவனத்துடன் பேசினார். நாங்கள் அதிகப்படியான கட்டணத்தைத் தருவதாகச் சொன்னோம். ஆனாலும், இலவசமாகவே செய்து தருவதாக Blue Lanka Tours நிறுவனம் ஒப்புக் கொண்டது. Thanks to Tushara and Prameela of Blue Lanka Tours.

ella to yala 07

அதனால் திஸ்ஸமஹராம – காலி என்று இருந்த பயணத் திட்டத்தை திஸ்ஸமஹராம – கதிர்காமம் – காலி என்று மாற்றிவிட்டார் என் அம்மா. நாங்கள் கதிர்காமம் சென்றோம். அது ஒரு புனிதமான இடம். இலங்கை முருகன் எங்களை வரச் சொன்னது போல இருந்தது.

பழனி முருகனுக்கு அரோஹரா!
வடபழனி முருகனுக்கு அரோஹரா!
அறுபடை முருகனுக்கு அரோஹரா!
மருதமலை முருகனுக்கு அரோஹரா!

திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோஹரா!
திருச்செந்தூர் முருகனுக்கு அரோஹரா!
ஸ்வாமிமலை முருகனுக்கு அரோஹரா!
திருத்தணி முருகனுக்கு அரோஹரா!

சிங்கப்பூர் முருகனுக்கு அரோஹரா!
பத்துமலை முருகனுக்கு அரோஹரா!
கதிர்காமம் முருகனுக்கு அரோஹரா!
உலகெங்கும் இருக்கும் முருகனுக்கு அரோஹரா!

இந்தியர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய கோவில் கதிர்காமம். இந்த கோவில் சிறிதளவில் இருந்தாலும் இது ஒரு அழகான மற்றும் பழங்கால கோயில். இந்த ஆலயம் சிறியது, எனவே அதன் கூட்டம் அதிகமாக இருக்கும்போது நீங்கள் சென்றால், கொஞ்சம் காத்திருக்க வேண்டும். நீங்கள் முருகன் சிலையைப் பார்க்க முடியாது. திரை போட்டு மூடி இருப்பார்கள். அதுதான் சாமி. பூசாரி உங்களுக்காக அர்ச்சனைகள் / பூஜைகள் செய்து பிரசாதங்களை பெறுவார். ‘மக்கள் ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பிரதான தெய்வத்தைக் காண முடியும்’ என்று துஷார சொன்னார்.

கதிர்காமம்
கதிர்காமம்

முருகனை பற்றி பேசிட்டு இருக்கும் போது இந்த பாட்டை பாடலாமே:

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

– அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்

உள்ளுர் புத்த மதத்தின் தாக்கம் இங்கே தெரியும். கதிர்காமம் கோயில் உள்ளேயே புத்தருக்கான ஆலயம் உள்ளது. விஷ்ணுவும் பெருமாளும் காவல் தெய்வங்களாக இருக்கிறார்கள். கண்டியிலும் இதைக் கண்டோம். (பார்க்க: புத்தர் பற்கோயில் கண்டி). வழிபாடுகளிலும் வித்தியாசம் இருந்தது. முதலில் சந்நிதானத்தைக் கூட்டி சுத்தம் செய்தார்கள். அனைவரும் வெள்ளை அணிந்திருந்தார்கள். தலையில் சிவப்பு நிற முண்டாசு கட்டியிருந்தனர். சாமி அருகில் உள்ளவர்களுக்கு வெள்ளை முண்டாசு. சிவப்பு கம்பளம் விரித்தனர். மணிகள் ஒலித்தன. அன்னக்காவடி போன்று பிரசாதத்தை எடுத்து வந்தார்கள். நமக்குத் தெரியாது. அனைவரும் திரைக்கு அப்பால் சென்றுவிட்டனர். மணி ஓசையைக் கேட்க முடிகிறது. ஆனால் நமக்குப் பார்க்க அனுமதி இல்லை. பக்தர்கள் அனைவரும் மலர், பழம் கொண்டு வந்திருந்தனர். பூசனைக்குப் பிறகு சாம்பார் சாதம் போன்ற பிரசாதம் எங்களுக்கு கிடைத்தது.

கதிர்காமம்
கதிர்காமம் – picture (c) Wikipedia

அம்மா மட்டும்தான் உள்ளே சென்றிருந்தார். புசனை முடிந்து பக்தர்களை உள்ளே விட்டபொழுது நான், எனது அப்பா, என் தம்பி, துஷார அனைவரும் உள்ளே சென்றோம். உள்ளே கூட்டமாக இருந்தது. அங்கே சுவரில் கட்டியிருந்த மணிகளை அனைவரும் அடித்தனர். அதனால் நானும் அடித்தேன். அருகில் இருந்த ஒரு அம்மா என் கையில் நச் என்று அடித்தார். அவர் பிள்ளை என்று நினைத்து, என்னை அடித்துவிட்டார் போல :(. பின்பு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதனால் என்ன, தாய்களுக்கு மகன்களை அடிக்க உரிமை இல்லையா!

கதிர்காமம் – காலி நெடுஞ்சாலை

நாம் கதிர்காமம் முருகன் அருள் பெற்றுவிட்டோம். இப்பொழுது நாம் காலி (Galle) என்னும் ஒரு நகரத்திற்குச் செல்லப் போகிறோம். 4 மணிநேரப் பயணம். அது இலங்கை கிரிக்கெட் வீரர் தேசாபந்து முத்தையா முரளிதரனின் (Deshabandu Muttiah Muralitharan) சொந்த ஊர். இவர் 800 விக்கெட்டுகளை டெஸ்ட் மாட்ச்சில் பதிவு செய்து பணி ஓய்வு பெற்றார். அத்துடன், சரித்திர முக்கியத்துவம் பெற்ற துறைமுக நகரம் காலி!

கிளம்பலாமா?

IMG_2282

வாருங்கள். புதுக்கோட்டையில் வெளிப்புறச் சாலையில் செல்வது போல ஒரு உணர்வு. நீண்ட பயணம். நீங்கள் இரவு நேரத்தில் அந்தப் பக்கமாகச் சென்றால் நீங்கள் காட்டு விளங்குகளை சாலையைக் கடந்து போவதை நீங்கள் கவனிக்கலாம்! உங்களுக்கும் என்னை போல் காட்டு மிருகங்களை கண்டால் டர்ர்ர் என்றால், நீங்கள் பேசாமல் பகல் நேரத்தில் செல்லலாம் ☹☹. வழியே கசக்கச என்று இருந்தது. நாங்கள் போன பாதையில் சில குளங்கள், முள்காடுகள், வயல்கள் இருந்தன.

அம்பாந்தோட்டை துறைமுகம்

காலிக்கு போகும் வழியில் நாங்கள் அம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக சென்றோம். அந்தத் துறைமுகத்தைப் பற்றி நானும் என் தந்தையும் நிறைய பேசி இருக்கிறோம். இது ‘இலங்கைக்குள் ஒரு குட்டி சீனா’. ஏன் என்றால் மொத்த முதலீடு US$3,61,00,00,000யில் 85% சீன வங்கியி நிதி உதவி. அதுவுமின்றி இந்த துறைமுகத்தைக் கட்டியது சீன நிறுவனங்கள் மட்டுமே. அம்பாந்தோட்டை கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டுக்காக இலங்கை சீனாவுடன் 1.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்று படித்திருக்கிறேன். துறைமுகம் முழுக்க சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இலங்கையில் எங்கும் காணமுடியாதபடி, இஙகு மட்டும் நான்கு வழிச்சாலை உள்ளது.

அம்பாந்தோட்டை
அம்பாந்தோட்டை

இருந்தாலும் இது ஒரு பெரிய துறைமுகம். பளு தூக்கும் எந்திரங்களை (cranes) நாங்கள் கண்டோம். அதற்குப் பின்னால் விரிந்திருந்த இந்திய பேராழியையும் கண்டேன். இந்த துறைமுகத்தைத் திறந்து வைத்தவர் மஹிந்த ராஜபக்க்ஷ. என் தந்தை அதை கடந்து போகும் போது நிறைய பேசினார். கேட்கமுடியாமல் நான் அப்படியே அவர் மடியில் படுத்து உறங்குவது போல நடித்தேன் 😊.

அம்பாந்தோட்டை
அம்பாந்தோட்டை

அப்படியே கொஞ்ச தூரம் சென்றால் வீரகெட்டிய நகரை அடையலாம். இது மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊர். அவருடைய வீட்டையும் காணலாம். அந்த ஊரில் நிறைய D.A ராஜபக்ஷவின் சிலையும் மஹிந்த ராஜபக்ஷவின் சிலையும் அங்கு இருந்தன.

அங்கிருந்து நமது பயணம் இன்னும் அழகாகிறது. இடது பக்கம் பேராழி. வலது பக்கம் கிராமங்கள், காடுகள், ஆறுகள். வளைந்து வளைந்து சென்றது சாலை. இது பழங்கால ரத்தின பூமியாம். பூமியில் இருந்து விலை உயர்ந்த கற்கள் அகழ்ந்து எடுத்தார்களாம்.

IMG_2313

ஒரு நல்ல இடத்தில் இறங்கி, கடற்கரையில் இளைப்பாறிக் கொண்டோம்!

வீரகெட்டிய - மத்தார சாலை
வீரகெட்டிய – மத்தார சாலை

பிறகு மத்தார நகரை அடைந்தோம். கடற்கரையில், இருந்த ஒரு இந்திய உணவகத்தில் மதிய உணவை எடுத்துக்கொண்டோம். மாலை நேர சாலை நெரிசல் இங்கிருந்து தொடங்கியது.

மத்தார
மத்தார

எப்படியோ இப்பொழுது நாம் காலி வந்து சேர்ந்து விட்டோம். நீங்கள் சற்று நேரம் கடல் கரையில் விளையாடிக் கொண்டு இருங்கள். நான் என் நீச்சல் உடையை அணிந்து வருகிறேன்.

காலி | Galle
காலி | Galle

வாருங்கள். கொஞ்சம் விளையாடி விட்டு விடுதிக்குத் திரும்பிச் செல்லலாம்.

காலி | Galle
காலி | Galle

உப்பு நீர் வேர்க்கிறது. வாயெல்லாம் கரிக்கிறது. என்னால் முடியவில்லை. Darrrrrrrr.. என்ன ஏதோ சத்தம் வருது. அய்யோ! என் நீச்சல் உடை கிழிந்துவிட்டது! நான் ஜட்டி கூட போட வில்லை!! யாரும் பார்ப்பதற்கு முன் நான் விடுதிக்கு போகிறேன்.

விடை பெறுவது,
மு. கண்ணன்
சார்வரி வருடம், வைகாசி 4, திருவள்ளுவர் ஆண்டு 2051

DSC00944

Leave a comment