கல்பொரு சிறுநுரை | ஜெயமோகன்


“அஞ்சுவதற்கு என்ன உள்ளது இங்கே? மறம் ஓங்கி அறம் அழிகையில் நான் நிகழ்ந்துகொண்டே இருப்பேன் என்று பரம்பொருள் மானுடனுக்கு ஒரு சொல்லளித்திருக்கிறது அல்லவா?”

-பகுதி எட்டு : சொல்லும் இசையும் – 6

நண்பர்களே,

வெண்முரசு வரிசையின் 25ஆவது நாவல் கல்பொருசிறுநுரை இன்னொரு வேள்வி. அவியாகிக்கொண்டே இருக்கின்றனர் இதுகாறும் உளவிய கதை மாந்தர்கள். சீன வைரஸ் தாக்கத்தால் வீட்டிலிருந்து பணிபுரியத் தொடங்கியதில் இருந்து வெண்முரசு வாசிப்புக்குப் பெறும் தடை விழுந்துவிட்டது. காலையும் மாலையும் பயணநேர வாசிப்பு காணாமல் போய்விட்டது. அதனால் இந்நாவலை வாசிக்க இத்தனை மாதங்கள் ஆகியிருக்கின்றன.

அறிமுகம்

துவாரகையின் தோற்றம், அறம்-கலை-வணிகம் வளர்ந்த பின், இவ்வனைத்தையும் கைவிட்டு, இளைய யாதவ வழித்தோன்றல்களின் சின்னத்தனங்களில் சிதறிப்போகும் துவாரகையின் சரிவு விரித்துரைக்கப் படுகிறது.

துவாரகை குடிகளின் இரு பெரும் அழிவுகள் – துவாரகையிலும் அதன் பின்னர் பிரபாச க்‌ஷேத்திரத்திலும் – கண்முன்னே வைக்கப் படுகின்றன.

இறுதி வரை காத்திருந்து, யாதொரு மீதமும் இல்லை என்றான பிறகு யாதவர் கிருஷ்ணர் மண் நீங்குகிறார்.

கணிகரின் ஆடல்கள்

ஜெ உருவாக்கி உலவ விட்டு இருந்த மாந்தர்களில் வெகு முக்கியமானவர் கணிகர். ஸ்ரீகரர் இறுதியில் சொல்வது போல, காலம் தோறும் இது போன்றவர்கள் பிறந்து வருகின்றனர். யாதொரு விலக்கமோ, நோக்கமோ அற்ற தீதை விளைவிப்பவர்கள். சகுனி, யாதவ மைந்தர் பிறகு ருக்மி என்று, கணிகர் வைத்த தீயால் கவரப் பெற்று அத்தீக்கே இறையானவர்களின் நிரையால் விருவிருப்பு பெறுகிறது இந்நாவல்.

யாதவர்களின் விடைபெறல்

குழலூதி அனைவரையும் தாலாட்டிய பின் நகர் நீங்கினார் இளைய யாதவர். அன்று துவரகையின் வளர்ச்சி நின்றது. அறம் பிழைத்த யாதவ வழித்தோன்றல்களின் ஆட்சியில் துவாரகை சருக்கத் தொடங்குகிறது. பிரதிஃபானு முதல் சகோதரக் கொலையை நிகழ்த்தியதிலிருந்து துவாரகை சரியத் தொடங்குகிறது. அதிலிருந்து நாவலின் இறுதிவரை ஒரே நாளில் வாசித்து இருக்கிறேன். கீழே வைக்க இயலாது.

அதை வாசிக்கும் தோறும் அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை என்கிற பாரதியாரின் ஊழி நடனப் பாடல் உளத்தில் (சில நேரம் வாய்விட்டும்) பாடிக்கொண்டே இருந்திருக்கிறேன். அடுத்தடுத்த வீழ்ச்சிகள், மண்மறைவுகள் என்று தன்னை முடித்துக்கொள்கிறது இந்நாவல்.

துவாரகையைக் கடல் கொள்வது, பிரபாச க்‌ஷேத்திரத்தில் பழைய சியமந்தக மணியினூடாக நிகழும் சாத்யகி-கிருதவர்மன் கொலை, சூரசேனர், வசுதேவர், பலராமர் சகிதம் தத்தம் ஆயுளை முடித்துக்கொள்வது, நாகர்களிடம் இருந்து அர்ஜுனனை அறவான் காப்பது என வாசிப்பவர் மனதில் பதியும் இடங்களுக்குக் குறைவில்லை.

ஐந்தாம் வேதம்

இத்தனை அழிவுகளுக்குப் பின்னும், அரசுகள் தன் பழைய வழிகளிலேயே சென்றால் என்னதான் பலன். அடைந்த இழப்புகளுக்குப் பொருள் தான் என்ன? என்று கலங்கித் தன் வாழ்வை முடிக்கத் தீர்மானிக்கும் அர்ஜுனனை, காலங்கள் தோறும் அறத்தை நாட்ட பிறப்பெடுப்பேன் என வேதம் பேசி மீட்டெடுக்கிறது காலம். விடுதியில் இளைய்யாதவரின் வேதச் சொற்களால் பண்ணமைத்த பாடல்களால் நினைவுருகிறது கல்பொருசிறுநுரை.

இணைத்தில் வாசிக்க – அத்தியாயம் 1

நிற்க,

அர்ஜுனன் இறுதிக்காலத்தில் சுபகையைச் சந்திப்பான் என்பது என் எதிர்பார்ப்பாக இருந்தது. சொல்லிச் சென்றான் அல்லவா. பாவம். அவளும் மாலினியின் தவக்குடிலில் காத்திருக்கிறாளோ என்னவோ.

இன்னொரு நூல் அறிமுகத்தில் சந்திப்போம். வணக்கம்.

வளர்க பாரதம்

திருவள்ளுவராண்டு 2051 ஐப்பசி 3.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s