பின்பு குருக்ஷேத்ரப் போர் முடிந்தபின் அக்களத்திற்கு சென்றேன். அங்கே என் இளையோன் வடக்குநோக்கி படுத்திருந்தான். அவன் அருகே அனைவரும் துயில்கொண்டிருந்தனர். நான் அவனருகே சென்று காலடியில் நின்றேன். அவன் விழித்து என்னை பார்த்தான். ‘இளையோனே, நான்தான்’ என்றேன். அவன் வாழ்த்து சொன்னான். ‘இளையோனே, அன்று நீ வியாசவனத்திற்கு வந்தநாளில் தொடங்கியது இது, அல்லவா?’ என்றேன். ‘ஆம், உங்கள் கவிதையை முன்னரே கேட்டுவிட்டேன். குஹ்யசிரேயஸ் என் நெஞ்சைக் கிழித்து உண்டது’ என்றான்.
கிருஷ்ண துவைபாயனர் வியாசருக்கும் பீஷ்மருக்கும் நடந்த உரையாடல்.
முதலாவிண் – 16

நண்பர்களே,
மிக நீண்ட பாதையைக் கடந்து, நிறைவடைந்துள்ள வெண்முரசு மகாபாரத நாவல் வரிசையில் இறுதி நாவலைப் பற்றி பதிவிடுவதில், மகிழ்ச்சி, பெருமை, ஒரு அமைதி.
பொதுவாக 80 அத்தியாயங்கள் வரும் வெண்முரசு நாவல் வரிசையில் இது மிகச் சிறிய நாவல். 16 அத்தியாயங்கள்தாம். ஆனால், அதற்குள் 80 அத்தியாயங்களில் ஜெ தயங்காமல் விரிவாகக் காட்டக்கூடியதை, கடுகச் சிறுத்து சொல்லியிருக்கிறார்.
கௌரவ பெரியவர்கள் பேரரசர் திருதராஷ்டிரர், பேரரசி காந்தாரி, மதியூகி விதுரர், பேரரசி குந்தி ஆகியோர் மண் மறைதலைக் காட்டுகிறது இந்நாவல். பிறகு பாண்டவர் விண்புகுதல் உடன் இந்த நாவல் நிறைவடைகிறது.
பண்டைத் தமிழ் நிலக் காட்சி
ஆனால், இந்நாவல் வாசிப்பவர் மனதைத் தொடும் இடங்கள் வெகு சுவாரசியமானவை. புனைவின் சுவையை நமக்குத்தருபவை. பாணர் சீர்ஷன் தன் குரு வியாசர் எழுதிய மகாபாரதத்தை முற்றோத பாண்டிய நாட்டிற்கு வருகிறார். பாண்டியனிடம் உதவி பெற்று கடலுக்குள் மூழ்கி இருக்கும் மாகேந்திர மலையை, குரு பூர்ணிமை நாளில், கடல் நீர் மட்டம் தாழ்ந்து இருக்கும் இரவில் கண்டடைந்து, பாரதத்தை ஓதும் காட்சியை ஜெ வடித்திருக்கும் அத்தியாயங்கள் சுவாரசியமானவை. வாசிப்பவரை கொற்றவை நாவலை மீள மனதில் நிறுத்தும். இந்த இருளும், நலுங்கும் வெள்ளொளி காட்டும் மறைந்த தமிழ் நிலத்தின் தோற்றமும் வாசிப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும்.
வெண்முரசின் முடிவுரை?
தவிர, இந்த நூலை வெண்முரசின் முடிவுரை என்றும் சொல்லலாம். முதற்கனல் நாவலின் கதையோட்டம் சுட்டப்பட்டு இங்கே முடித்து வைக்கப்படுகிறது. அம்பையின் கோயிலில் பாண்டவர்கள் வழிபாடு நடத்தி, நகர் நீங்கும் பொழுது, ஒரு நொடி முழு வெண்முரசும் வாசிப்பவர் மனதில் விரிகிறது. எத்தனை இடர்கள், எத்தனை பெரிய இழப்புகள்.
பாரதம் – விரிவு
மகாபாரதம் என்கிற கதைக்கு மூலக்கதை வியாசர் எழுதிய ஜய என்கிற ஒரு போர்ப் பரணி என்று ஜெ முன்னர் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய ஒரு சிறு நூல் இன்று முழு பாரதத்தை இழுத்துக் கோர்க்கும் ஒரு இதிகாசமாக வளர்ந்துள்ளது. அதில் தென்னகத்தையும் கோர்த்துள்ளார் ஜெ. வியாசரின் மூலக்கதை, அவர்தம் மாணாக்கரின் படைப்புகிின் இணைப்பு, சமூகக் கதைகளின் சங்கமம் என்று விரிந்து கொண்டே சென்றுள்ளது. இவற்றை யாராவது சொல்லிச் சென்றால் இரு பக்கங்களுக்கு மேல் நகராது. புனைவின் வழி இந்நாவல் அழகாக எடுத்துரைக்கிறது. அதைச் சொல்வதை ஒரு கடமையாகக் கொண்டிருக்கிறார் ஆசிரியர். நாவல் உள்ளேயே இச்செய்தி வருவது எதிர்வரும் வாசகர் மனதில் அதைக் கொண்டு செல்லும்.
இன்று ஏதாவது ஒரு வழியில் மகாபாரதம் நம் வாழ்வில், உரையாடலில், சிக்கல் வரும் தருணங்களில் முடிவெடுக்கையில் வந்து கொண்டு இருக்கிறதே. விரிவு. அது பாரதத்தின் பலம். அதுவே அதை வாசிக்க வைக்கும் ஆர்வத்தைத் தரும்.
நதிக்கரையில்
இந்நாவலின் முக்கிய அத்தியாயம், பிரிவுத்துயரால் தவிக்கும் அஸ்தினபுரி குடிகளுக்கு, போரில் மாண்ட அவர்தம் குடும்பத்தினரை வியாசர் மாயத்தோற்றமாகக் காட்டுவது. வெண்முரசிற்குள் சங்கமித்திருக்கும் இன்னொரு சிறுகதை இது. நதிக்கரையில்.
இணையத்தில் வாசிக்க – நதிக்கரையில்.
அதே சிறுகதையில் கேட்கும் தர்ம-அதர்ம கேள்வியை இங்கும் முன் வைக்கிறார் திருதராஷ்டிரர். அதைக் கவனித்துப் பார்க்கிறேன். ‘நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள் தந்தையே. இது பாண்டவர் புகழ்பாடும் பரணி அல்லவா?’ என்று வியாசரைக் கேட்பார். வெண்முரசில் அப்படி ஒரு கட்சியினைச் சாராது, பாண்டவர் குல வாரிசான பரீட்சித்தை வரவழைத்து ஆசீர்வதிக்கும் மூத்த தந்தையாக இன்னும் கனிந்துள்ளார், ஜெயமோகனின் திருதராஷ்டிரர். ஆனால் அதே கேள்வியை பாண்டவர்களே இன்று கேட்டுக்கொள்கின்றனர்.
நீலம்
இங்கேதான் நிறைவடைய வேண்டும் என்று முடிவெடுத்த வெண்முரசு நதி கோகுலத்திற்குத் திரும்பி, ராதையின் தாலாட்டில் நிறைவடைகிறது.