சுமித்ரா | கல்பட்டா நாராயணன்


எதையும் சாராமல் வாழ்வது என்ன வாழ்க்கை? ஒரு வித அகங்காரம் மட்டுமே இருக்கிறது. வீட்டிலுள்ள மேசை, நாற்காலிகள் போல அர்த்தமற்றது இத்தனிமை.

ஒரு நற்பொழுதில் திடீரென சுமத்ரா இறந்து விடுகிறாள். அவளை இறுதியாகக் காணவரும் பிறர் மனதில் எழும்பிய நினைவலைகள் இந்தாவலில் பதியப்படுகின்றன.

சுமித்ரா (நாவல்)
ஆசிரியர்: கல்பட்டா நாராயணன்
மொழிமாற்றம்: கே.வி. ஷைலஜா (மலையாளம் – ഇത്രമാത്രം)
பதிப்பு: வம்சி, திருவண்ணாமலை. (இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2015)

நூலக முன்பதிவு:
NLB – Cumitrā / Malaiyāḷa mūlam, Kalpaṭṭā Nārāyaṇan̲ ; Tamil̲il, Kē. Vi. Ṣailajā.
Anna Centenary Library: Not available
Connemara Library: Catalogue site is down.

தனித்தனி அத்தியாயங்கள் இருப்பினும், ஒவ்வொன்றும் தனியே ஒரு சிறுகதைக்கு ஒப்பானவை. வாழ்க்கை யாருக்கும் சொல்லாமல் நகர்ந்து கொண்டுள்ளது. நம்முடன் பயணிப்பவர்கள் பலவிதம், சுமத்ராவைப் போன்று கனிவானவர்கள், இப்பதிவை வாசிக்கும் உங்களைப் போன்று பொறுமையானவர்கள், டெல்லியில் போஸ்டிங் கிடைத்தவுடன், ‘தான் இனிமேல் மனிதரல்ல… கடவுள்…’ என நினைக்கும் முரட்டு மூடர்கள் இப்படிப் பலவிதம். இவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் ஒவ்வோர் விதமாக நினைவில் நிற்போம். அப்படி ஒவ்வொருவராக நினைவை அசைபோடுவதாக அமைந்துள்ள நாவல் அது.

மலபார் வயநாட்டின் நீர் பக்கத்துக்குப் பக்கம் சலசலக்கிறது. மீண்டும் மீண்டும் குளிக்கிறாள் சுமித்ரா. உலகம் மீண்டும் மீண்டும் அவள் மேல் அழுக்கைப் பூசுவது போல. வீணர்களாக பழங்கலத்தில் படுத்துறங்கும் வாசுதேவன் அவன் நண்பர்கள் மீதும் வந்து அமரும் ஈக்களைக்கூட ரசிக்காதவள் அவள். பிறர் அமர்ந்த பழங்கலத்தின் தூசு, சிலந்தி வலைகளையும் அனுமதிக்காதவள். இருக்கும் இடத்தில் இருந்து தன் ‘விசாலப் பார்வையால்’ உலகை விழுங்கிக் கொள்கிறாள். ஆனால், சுற்றி இருக்கும் உலகம் மரம் அறுக்கும் செய்யதலி போல இருந்து விட்டால், திரும்பத் திரும்ப அவள் குளிக்கத்தான் வேண்டியிருக்கும்.

மரத்தூள் குவியலுக்கு அப்பால் மரம் அறுபடும்போது ஏற்படும் காட்டமான வசனை அவளுக்கு மிகவும் பிடிக்கும். தனக்கு மட்டுமேயான பிரியங்களை சுமித்ரா தனக்குள்புதைத்திருந்தாள். மரமறுப்பவர்கள் வேலை முடிந்து போன பிறகு அவள் பலா மரத்தின் வெட்டப்பட்ட பலகையின் தங்க நிறம் பார்த்தும், மரத்தூளை முகர்ந்தும் விளக்கு வைக்கும் நேரம் வரை அங்கேயே இருப்பாள். கரியால் அடையாளக்கோடிட்டு பெரிய பலகையின் மேலே நின்று அநாவசியமாக வாளால் அறுததுக்கொண்டிருந்த இளவயசுக்காரனின் உடலில் வாள் அசைவிற்கு ஏற்ப ஏறி இறங்கும் விலா சதைகளைப் பார்த்தபடி இருந்தாள். …. தன்னை எண்ணிக் கொண்டிருப்பவளால் வேலைக்கான கவனம் சிதறடிக்கபட்ட போது அவன் தலையை உயர்த்தி சுமித்ராவைப் பார்த்தான். மீண்டும் மீண்டும் தலையை உர்த்தி சந்தேகமாகவே அவளைப் பார்த்தவுடன் அவள் எழுந்து உள்ளே போனாள்….

இங்கே ஓர் அழகி சீக்கரமே என்னோட கழுதைக் குட்டியையும் கருத்தருத்து பிள்ளை பெறுவாள் என்று தோன்றுகிறது. .. செய்யதலி சிரித்துக்கொண்டான்..

மின்னல் வெட்டியது போன்ற சிறு நொடிகளில் வாழ்வின் மீறல்கள் நடந்துவிடுகின்றன. சற்றும் தவறினால் தவறாக பொருள் கண்டுவிடுவோம். சுமித்ரா கண்ட பொதுவாளை, புற்று நோயால் அவதிப்பட்ட பெரியம்மாவை வைத்துப் புரிந்து கொண்டால், இரு செய்திகள் நமக்கு வரும். ஒன்று – அந்தக் கதையில் சொல்லப்பட்டுள்ள ஒரு கருணை. இன்னொன்று, வெளியில் இருப்பவர்களால் என்னவாக புனையப்பட்டிருக்கும் என்கிற பதைப்பு.

பொதுவாள் உஷாவிடம் நகர்ந்து நிற்கச் சொல்லி கண்காட்டினார். மைமாற்றியது தெரியாமல் அதே தடவலில் கையை மிருதுவாக்கி பொதுவாள் அழுத்திவிடத் தொடங்கினார். மெதுவாக அந்தம்மாவிலிருந்து ஏதோ உடைந்து கரைய ஆரம்பித்தது. அழுத்தலின் சுகத்தில் நொடியில் தூங்க ஆரம்பித்த பெரியம்மாவின் உடலில் இறுக்கம் கூடியது. சுவாசப்பாதை கனத்து சீராகி குறட்டையொலி வர ஆரம்பித்தது. சாப்பிட்டு முடித்து உஷாவும் பொதுவாளும் புறப்பட்டு வெளியில் வந்த போதுதான் பெரியம்மா எழுந்தாள்.

‘நீ என்ன சுகமா அழுத்திவிட்ட தெரியுமா? என் ஆயுசுல நான் அப்படி தூங்கினதில்ல’

திடீரென சுமித்ரா தலையை அழுத்திவிடும் அவருடைய கையை எடுத்து உதடுகளில் வைத்து அழுத்தி அழுத்தி முத்தமிட்டாள். அவர் கரைந்து போய் அவளைப் பார்த்தபடி உட்காந்திருந்தார்….

இது அவளுடைய கருணை என்கிறார் எழுத்தாளர். அப்படி அவரவர்களையும் ஏந்திக்கொண்டு ஓடுவதால் அவள் தன் மனதிற்கே ஒரு அமைதியைத் தேடிக் கொள்கிறாள் என்று நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன்.

மாதவி உடனான சுமித்ராவின் நட்பு வாசிப்பரை யோசிக்க வைக்கிறது. நாவலின் ஓட்டத்தில் வர்ணம் மிளிரும் பகுதிகளில் ஒன்று. கிட்டத்தட்ட நான் வாசித்த பதிவர்கள் அனைவருமே இதைக் குறிப்பிட்டுள்ளனர். யாரும் தடுப்பதாலோ என்னவோ, மாதவி மீதான நட்பு குதூகலத்தையும், கிளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. Gossiping தரும் ‘நேரமாவதறியாமலே’ பேசிக் களிக்கும் ஒரு தோழமை என்று தோன்றுகிறது.

அவள் வீட்டுக்குள் போகும்போது அங்கே உணரும் சில அதிர்வுகள் சுமித்ராவுக்கு எப்போதுமே பிடித்திருந்தன. நடத்தை கெட்ட அந்தப் பெண்ணோடு இதற்கு முன் யாரும் இவ்வளவு நெருக்கத்துடன் இருந்ததில்லை. பெரும்பாலான ஆண்கள் விஷயம் முடிந்த பிறகு அவளைக் குற்றவாளியைப் போல பார்ப்பவர்களாக மட்டுமே இருந்தார்கள். மற்ற ஆண்களும் ஏறக்குறைய அப்படித்தான். ஆனால் அவர்களுக்கு மாதவியைப் பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. பேசும் அதடுகள்தான் முக்கியமே தவிர அது உச்சரிக்கும் சொற்களைக் கேட்க அவர்கள் தயாராக இல்லை.

சக தோழியருடன் தனித்திருந்து, சின்னஞ்சிறு கதைகள் பேசி, பிறர் அறியாமல் கிளர்ந்து சிரித்த பதின்ம கால நட்பு வட்டத்தின், நீட்சியாக மாதவியின் நட்பு அவளுக்கு அமைகிறது. தனித்திருக்கும் தன் மகளைப் பற்றிக் கவலைப் படுகையில் கூட, அவளுக்கு உற்ற நட்புகள் வாய்க்கவில்லையே என்று வருத்தப்படுகிறாள்.

உனக்கு ஆத்மார்த்தமான சிநேகிதிகளே இல்லையா? ஏன் இப்படி தனியாக இருக்கிறாய்? இவளுக்கு அனுசூயா என்று பெயரிட்டிருக்க வேண்டாமோ என்று சுமித்ராவுக்குத் தோன்றியது. அனுசூயா என்ற பெயரே ஓர் இல்லாமை தானே… வாழ்வின் மீதான பற்றின் பெயர்தான் அசூயை – பொறாமை. பொறாமையும் சுயநலமும் பேராசையும் பகையும் வெறுப்பும் எல்லாம் மனிதனுக்குத் தேவையான உணர்ச்சிகள்தான். செடியை வெயிலில் வைப்பது போல, வேரினை நீர் ஊறியிருக்கும் மண்ணுக்கு அடியில் புதைப்பது போல இதெல்லாம்தானே ஒரு மனிதனை இட்டுச் செல்கின்றன.

தாசனின் தோழிகள் பற்றி வருகிற கதையிலும் இதுவே பேசப்படுகிறது.

தாசனை ஆண்மை இல்லாதவன் என்று பதமநாபன் நாயர் எப்போதும் சொல்வார். காமம் மனசைத் தீண்டியிராத மனிதரின் பக்கத்தில் உட்காரும் போதுள்ள எல்லையில்லாப் பாதுகாப்பை தாசனோடு பழகும்போது பெண்கள் உணர்ந்தார்கள். ஆண்கள் அனுபவிக்கும் சுதந்திரம் போலானது அது.

சுமித்ராவின் ‘சமூக வாழ்க்கையின் கொடுக்கல் வாங்கலுக்கு’ இன்னும் ஒரு எடுத்துக்காட்டு கௌடரின் கதை. மனத்தை நீர்க்க வைக்கும் கதைகளில் இதுவும் ஒன்று.

சுமித்ராவுக்கு ஏதாவது உதவி செய்த நாட்களில் அவர் அவளிடம் அதிக பிரியத்துடன் இருந்தார். அவ்வப்போது ஒரு அநாதையாவது அவளுக்கும் பிடித்திருந்தது. சார்ந்திருப்பதன் சுகம் என்றுமே வாசுதேவனுக்குத் தெரியாது. … எதையும் சாராமல் வாழ்வது என்ன வாழ்க்கை? ஒரு வித அகங்காரம் மட்டுமே இருக்கிறது. வீட்டிலுள்ள மேசை, நாற்காலிகள் போல அர்த்தமற்றது இத்தனிமை.

கௌடருக்கு சுமித்ரா தரும் உப்புமாவும், சுமித்ராவுக்கு கொளடர் தரும் சிறு கடன்களும், எனக்கென்னவோ வண்ணதாசனின் கனிவை நினைவு படுத்திக்கொண்டிருந்தன.

வயநாட்டு வீட்டின் பழங்களத்தின் காட்சியை நம்முள் பதிப்பதாக மொழிபெயர்ப்பு உள்ளது. தயங்காமல் வாசிக்கலாம். ‘பிரிய’த்துக்குத்தான் அன்பு என்கிற எளிதான சொல் உள்ளதே. அவற்றையும் கூட்டித் தள்ளிவிட்டு இன்னும் தமிழ் சொற்கள் வந்திருந்தால் இன்னும் அதிகமாக மகிழ்ந்திருப்பேன்.

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே…

🍯🍯🍯 அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்… 🍯🍯🍯

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s