நளாயினி சரித்திரத்தைச் சொன்னால் கூட நல்ல மசாலா சேர்த்துச் சொல்லும் எம் தமிழ் திரைப்பட உலகில் மாறா போன்ற முயற்சிகள், எந்திரத்திற்கு எண்ணெய் போடுவது போல. எப்போவாவதுதான் நிகழ்வது. அதற்காக முதலில் பாராட்டுக்கள்.

வழிதெரியாமல் வித்தவுட்டில் வரும் சிறுவன் மாறா.

அவனை ஏற்றுக்கொண்டு வாழ்வு தரும் போஸ்ட் மாஸ்டர் வெள்ளையன்.

அந்த வெள்ளையனுக்கு ஒரு கைகூடாத இளமைக்கால காதல். அக்காதலியை நினைத்தவாறே காலத்தைக் கடத்தும் வெள்ளையன். அவள் நினைவு மங்கிவிடக்கூடாதென்று, அவளுக்கு எழுதிய அந்த பட்டுவாடா செய்யப்படாத தபால் மங்கிப் போகும்போதெல்லாம் overwrite செய்து நினைவுகளை மீட்டுக்கொள்கிறார். அவரது கலுழ்வது கண்டு, அவரது பழைய காதலியைத் தேடித்திரியும் மாறா. மறு பக்கத்தில் அக்காதலி பக்கமிருந்து, இதே காதலை அறிந்து இருக்கும் பாரு.

இவர்கள் இருவரும் இறுதியில் அகவை முதிர்ந்த இருவரையும் இணைத்து வைத்தார்களா என்பது கதை.
அதில், வாழும் சமூகத்தால் நெட்டித்தள்ளப்பட்ட விலைமாது செல்வியின் மகள் ராணி, தவறுதலாக சிகிச்சையில் இறந்து போன குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கனி என்று ஆதரவு தேவைப்படுபவர்களை அரவணைக்கும் ‘மேய்ப்பராக’ மாறா இருந்து வருகிறான். அவனை பின்னால் இந்த so called நெட்டித்தள்ளப்பட்ட சமூகத்தின் தலைவராக வெள்ளையா மலை உச்சியில் ஒரு சிற்றூரில் வாழ்க்கையைத் தள்ளி வருகிறார்.


படத்தின் முன்னவர் ‘மாறா’ மாதவன் என்றாலும், படம் முழுக்க ‘பாரு’ ஸ்ரத்தாவைச் சுற்றியே இருக்கிறது. கதையின் அமைப்பு அடிப்படையே (வெள்ளையனின் கதையை அறிந்த மாறா, மேரியின் கதையை அறிந்த பாரு) கண்ணாம்பாள் காலத்து திரைப்பட பாணி என்பதால், அதைச் சரி செய்ய திரைக்கதை நிரம்ப பாடு பட்டிருக்கிறது. அதைத் தாங்கிப் பிடிக்க ‘செல்வி’ அபிராமி, ‘வெள்ளையா’ மவுலி, ‘உஸ்மான் பாய்’ MS பாஸ்கர், ‘சொக்கு’ குரு சோமசுந்தரம், ‘லிங்கம்’ அப்புக்குட்டி , ‘டேவிட்’ கிஷோர், ஜுனியர் பாலையா என்று ரெண்டு லாரி சிறந்த நடிகர்கள் தீவிர 🤸🏻♀️ முயற்சி எடுத்துள்ளனர். இத்தனை பேர் இருந்தும் ஆஸ்திரேலியாவால் துவைத்து தொங்கவிடப்பட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் போல, பெவிலியன் திரும்பியபடியே இருக்கின்றனர்.

அப்புக்குட்டி, கிஷோர், எம் எஸ் பாஸ்கர் இருந்தால் மட்டும் படம் ஓடிவிடுமா என்ன. மம்முட்டி, அஜித், ஐஸ்வர்யா ராய் என்று எல்லாம் இருந்தும் ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ சிறப்பான படமாகிவிடுமா என்ன? இதற்காக சேர்க்கப்பட்டுள்ள இரவு உலகம், பைரேட் கிளப், சாராய பாட்டில்கள், சேப்பியா ஒளியில் கிறித்தவ ஊர்வலம், சர்ச்சில் தேடல், மேரியாய் மாறிய மீனாட்சி… என்பதெல்லாம் பம்மாத்து வித்தையாக நமுத்துப் போகின்றன.

மாறா பற்றி பெரிய hype கொடுக்கிறது முதல் பாதி. ‘ஒரு வேளை ஹென்றி (பார்க்க – ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்)யின் தம்பியா இருப்பாரோ’ என்றெல்லாம் எனக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாகிவிட்டது. அத்தனையும் இறுதியில் செயற்கையாக சேர்க்கப்பட்டு, வலுவிழந்து விடுகிறது.
அதற்காக படத்தில் பலமே இல்லையா என்றால் இருக்கிறது.
படத்தின் பெரும் பலம் (ஒரே பலம்?) ஒளிப்பதிவு. இரவு உலகம், மாறாவின் ஓவியங்கள், மலைக்கிராமத்தின் பசுமைக் காட்சிகள் என்று புகுந்து விளையாண்டுள்ளது. உழைத்துள்ளார்கள் Dinesh Krishnan & Karthik Muthukumar. படத்தின் முதல் பாதியில் இவர்கள் வைத்துள்ள frameகள் (தமிழில் எப்படிச் சொல்வது?), செந்நிறவிடுதி நாவலை நினைவு படுத்தின. கலக்கல் ஒளிப்பதிவு. 👌

ஜிப்ரானின் இசை எப்போதும் காதைக் கடிக்காது. கொத்து பரோட்டா போடும் தமிழ் சினிமா இசையில் இருந்து மாறுபட்டது. இவரும் இப்படத்திற்கு ஒரு தூண். 👌
திருடன் அலெக்சாண்டர் பாபுவும், மாறாவும் உரையாடிக்கொள்ளும் புத்தாண்டு இரவு ஆர்வத்தைத் தூண்டும். அதை ‘களவாடிய பொழுதுகள்’ என்று ஓவியங்களைப் பார்த்து, பாரு புரிந்து கொள்வதாய் கதை சொல்லும் பாணி இனியது. அதற்கு அவசியம் நாம் பாராட்டுத் தெரிவித்தாகவேண்டும். 👌
காவுக்கு துணைக்கால் விட்டுருக்கு..
அது முன்னமே அப்படித்தானே இருந்தது..
இப்பவாவது சரியா எழுதலாம்ல
என்று அத்தி பூத்தார் போல வரும் வசனங்கள் கதை ஓட்டத்தை சுகமாக்குகின்றன. ✍🏻
நல்ல முயற்சி…
இப்படத்திற்கு பதிவர் முத்து எழுதியுள்ள விமர்சனம் கண்ணில் பட்டது. நல்ல பார்வை. https://muthusitharal.com/2021/01/10/maara-the-christ/