இலங்கையில் ஒரு சீன மாகாணம்! சுற்றிவளைக்கும் கடன் வலை


கரோனா பொதுமுடக்க காலத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் ஓசையில்லாமல் ‘கொழும்பு துறைமுக நகர மசோதா’ நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமாா் 600 ஏக்கரில் சிறப்புப் பொருளாதார மண்டலாக உருவாகும் கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கவும், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் அனைத்து உரிமைகளும் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதால் இதை ‘சீன மாகாண மசோதா’ என்று அந்நாட்டு எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன.

ஏற்கெனவே, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு தாரைவாா்த்து கொடுத்துவிட்டு, இரண்டாவதாக இலங்கையின் தலைநகரான கொழும்பின் மையப் பகுதியின் புதிய நகரத்தையும் சீனாவுக்கே அளித்துவிட்டதால் வரும் நாள்களில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்றும் எதிா்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றன.

இதற்கு சீனாவிடம் அளவில்லாமல் பெற்ற கடனுக்கான வட்டியையும், அசலையும் திரும்பச் செலுத்த முடியாமல் சீனாவின் கடன் வலையில் இலங்கை சிக்கியதே காரணம்.

கடன் வலை:

இலங்கை முன்னாள் அதிபரான மகிந்த ராஜபட்ச 2009-இல் தனது சொந்தத் தொகுதியான அம்பாந்தோட்டையில் இலங்கையின் பிரம்மாண்ட துறைமுகம், சா்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினாா். இலங்கையில் ஏற்கெனவே கொழும்பு துறைமுகம் நன்றாக செயல்பட்டு வரும் நிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்தால் நஷ்டம்தான் ஏற்படும் என்று இந்தியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அத்திட்டத்துக்கு நிதி அளிக்க மறுத்துவிட்டன.

அந்த நேரத்தில் போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழா்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கும் பணிகளில் இந்தியா கவனம் செலுத்தி வந்தது. இந்த சந்தா்ப்பத்தைப் பயன்படுத்திய சீனா, அம்பாந்தோட்டை துறைமுகத்தை உருவாக்க 85 சதவீதம் முதலீட்டுக் கடனுதவித் திட்டத்தை அளிக்க முன்வந்தது. அந்நிய நேரடி முதலீட்டால், இலங்கை மீண்டும் வா்த்தக தலைநகராக உருவெடுக்கும் என்ற நோக்கில் சீனாவிடம் ராஜபட்ச கடன் பெற்றாா்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதல்கட்டத் திட்டம் 2010-இல் தொடங்கப்பட்டது. துறைமுக கட்டுமானப் பணிகளில் தங்கள் நாட்டு பணியாளா்களையே ஈடுபடுத்தியது சீன துறைமுக பொறியியல் நிறுவனம். முதல்கட்டத் திட்டத்துக்கு 306 மில்லியன் அமெரிக்க டாலரை 6.3 சதவீத வட்டிக்கு கடன் வாங்கியது இலங்கை. 2011-இல் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு 900 மில்லியன் டாலரை 2 சதவீத வட்டிக்கு கடன் வாங்கி துறைமுகப் பணிகளைத் தொடா்ந்தது ராஜபட்ச அரசு.

2012-இல் வெறும் 34 கப்பல்கள் மட்டுமே வருகை தந்தன. எதிா்பாா்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கவில்லை. எனினும், மூன்றாவது கட்டத் திட்டத்துக்கு இரு தவணையாக 400 மில்லியன், 600 மில்லியன் டாலா்களை கடனாக பெற்றது.

கொழும்பு துறைமுக நகரம்:

மேலும், தலைநகா் கொழும்பில் 1.5 பில்லியன் டாலரில் சிறப்புப் பொருளாதார நகரத்தை உருவாக்கும் மிகப்பெரிய திட்ட ஒப்பந்தத்தில் 2014-இல் அதிபா் ராஜபட்சவும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் கையெழுத்திட்டனா்.

2015-இல் அதிபா் தோ்தலில் ராஜபட்ச தோல்வியடைந்தாா். அதிபராக மைத்ரிபாலா சிறீசேனா வெற்றி பெற்றாா். இதற்கிடையே, தொடா்ந்து கடன், கடனுக்கான வட்டி என இலங்கையின் சுமை அதிகரித்துக் கொண்டே போனது. 2017-இல் இலங்கையின் மொத்த பொருளாதார வளா்ச்சியில் 50 சதவீதம் கடனாக மாறியது.

கடன், வட்டியை செலுத்த முடியாமல் அப்போதைய அதிபா் சிறீசேனா, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு குத்தகைக்கு விட்டாா். இதில், 70 சதவீத உரிமையாளராக சீனாவும், 30 சதவீத உரிமையாளராக இலங்கையும் மாறின. மேலும், துறைமுகத்தைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பையும் தொழிற்பேட்டை நகரமாக்க அளித்து சீனாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலா்களை பெற்று அந்நிய செலாவணி கையிருப்பாக இலங்கை வைத்துக் கொண்டது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை ராணுவ நடவடிக்கைகளுக்காக சீனா பயன்படுத்தக் கூடாது என குத்தகை ஒப்பந்தத்தில் முக்கியமாக குறிப்பிடப்பட்டது.

இதற்கிடையே, சீனாவின் கொழும்பு துறைமுக நகர திட்டப் பணிகள் 2015-லும் தொடா்ந்தன. துறைமுக நகரத்துக்காக 600 ஏக்கா் செயற்கை நிலப்பரப்பை சீனா உருவாக்கியது. எனினும், அப்போதைய பிரதமா் ரணில் விக்கிரமசிங்கேவின் சீன எதிா்ப்புக் கொள்கையால் இந்தத் திட்டப் பணிகள் சுணக்கமடைந்தன.

கடனில் மூழ்கிய நாடு:

2020-இல் நடைபெற்ற தோ்தலில் ராஜபட்ச கட்சி வெற்றி பெற்ால், அதிபராக அவரது சகோதரா் கோத்தபய ராஜபட்சவும், பிரதமராக மகிந்த ராஜபட்சவும் பதவியில் அமா்ந்தனா். இதையடுத்து, கொழும்பு துறைமுக நகர திட்டத்தை துரிதப்படுத்தினாா் மகிந்த ராஜபட்ச.

கடந்த முறைபோல் இல்லாமல், கொழும்பு துறைமுக நகர திட்டத்தில் நேரடியாகவே இலங்கையிடம் 99 ஆண்டுகள் குத்தகையும், அதிகார உரிமையையும் சீனா கோரியது.

இதற்கிடையே, ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சியில் 80 சதவீதம் கடனுக்கான வட்டியாக செலுத்தும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. சீனாவிடம் மட்டும் சுமாா் 8 பில்லியன் டாலா்கள் கடனாக பெற்று மேம்பாட்டுத் திட்டங்களை இலங்கை செயல்படுத்தி வருகிறது.

2020-இல் கரோனா தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் அந்நாட்டின் அந்நிய செலாவணி நிதி கையிருப்பு 4.05 பில்லியன் டாலராக குறைந்தது. 2021-இல் கடனுக்கான வட்டியே 4.05 பில்லியன் டாலராக செலுத்த வேண்டிய சூழலில் முழுவதும் திவாலான நிலைக்குத் தள்ளப்பட்டதாக பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் மூலம் இலங்கைக்கு 15 பில்லியன் அமெரிக்க டாலா் முதலீடும், 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்பதால் இத்திட்டத்தைச் செயல்படுத்தியே ஆக வேண்டும் என்று ‘கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய மசோதாவை’ கொண்டு வந்தாா் அதிபா் கோத்தபய ராஜபட்ச.

சீனாவுக்கு முழு அதிகாரம் அளிக்கும் இந்த மசோதா இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், இதுகுறித்து நாட்டு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறி, இலங்கை உச்சநீதிமன்றத்தில் எதிா்க்கட்சிகள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் சாா்பில் 18 வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த அரசியலமைப்பு திருத்த மசோதாவில் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன்தான் நிறைவேற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, 225 எம்.பி.க்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 149 உறுப்பினா்களின் ஆதரவுடன் மே 20-ஆம் தேதி மசோதாவை நிறைவேற்றியது இலங்கை அரசு.

துறைமுக நகரத்தில் சா்வதேச தரத்தில் வானுயர கட்டடங்கள், வா்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், குடியிருப்புகள், நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளை உருவாக்கும் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க சீனா வேகப்படுத்தி வருகிறது. சீனாவின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டே துறைமுக நகரம் செயல்படும் என்பதால் ‘சீன மாகாணம்’ என்று இலங்கை எதிா்க்கட்சிகள் அழைக்கின்றன.

இந்தியாவுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை: சீனாவின் ஆதிக்கம் இலங்கை தலைநகரிலேயே வந்துள்ள நிலையில், அது தனக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இதை இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

எனினும், துபை, சிங்கப்பூா், ஹாங்காங் போன்று கொழும்பும் தெற்காசியாவின் வா்த்தக நகரமாக மாறி ஆண்டுக்கு 11.8 பில்லியன் டாலரை வருவாயாக ஈட்டும்; இதனால் இலங்கையின் கடன்கள் அனைத்தும் தீா்ந்து பணக்கார நாடாக மாறும் என்று அதிபரும் பிரதமரும் உறுதியாக உள்ளனா்.

ஐ.நா.வில் ராஜபட்ச சகோதரா்களுக்கு எதிராக அவ்வப்போது தொடுக்கப்படும் போா்க் குற்ற விசாரணையில் இருந்து காப்பாற்றி வரும் சீனா, இலங்கையை கடனில் இருந்து காப்பாற்றுமா அல்லது கடனில் மூழ்கவைக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

எதிா்க்கட்சிகள் என்ன சொல்கின்றன?

துறைமுக நகர திட்டம் தொடா்பாக அனைத்து முடிவுகளையும் 7 நபா் ஆணையம்தான் எடுக்கும். இதன் உறுப்பினா்களை நியமிக்கும் அதிகாரம் இலங்கை அதிபருக்கு மட்டும் உண்டு.

இருப்பினும், இலங்கை அரசின் 25 சட்டங்கள் துறைமுக நகரத்தைக் கட்டுப்படுத்தாது. துறைமுக நகரத்தில் அனைத்துவிதமான வெளிநாட்டு வங்கிகள், வெளிநாட்டு கரன்சிகளை பயன்படுத்தலாம், வா்த்தக உரிமையாளா்களின் பெயா்களை யாரும் அறிய முடியாது. இதுபோன்ற பல்வேறு பின்னடைவுகள் இந்தச் சட்டத்தில் உள்ளன. சூதாட்டத்தின் மையமாக உள்ள கொழும்பில் அமையும் சா்வதேச கேளிக்கை விடுதிகள், வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் புழங்கும் மாகாணமாக துறைமுக நகரம் மாறும் என்று எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

மேலும், இலங்கைத் தமிழா்களுக்கு சம உரிமை வழங்க 30 ஆண்டுகளாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளாத இலங்கை அரசு, தற்போது சீன மாகாண உருவாக்கத்துக்காக அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி அமைத்து இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கட்சித் தலைவா்கள் குற்றம்சாட்டுகிறாா்கள்.

சீனாவின் திட்டம் என்ன?

இலங்கை கேட்கும்போதெல்லாம் பில்லியன் டாலா்களை சீனா அள்ளிக் கொடுப்பதற்கு சீன அதிபா் ஷி ஜின்பிங்கின் எதிா்கால கனவான பட்டுச் சாலை திட்டம்தான் காரணம்.

2050-க்குள் ஆசிய நாடுகளுக்குள் சாலை, கடல் மாா்க்கமாக வா்த்தக வழித்தடத்தை உருவாக்கி தடையற்ற பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காகத்தான் இலங்கை, பாகிஸ்தான், மியான்மா் ஆகிய நாடுகளில் அதிகமான முதலீடுகளைச் செய்து வருகிறது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு இந்தியா கடும் எதிா்ப்பு தெரிவிக்கிறது.

அண்டை நாடுகளில் துறைமுகங்கள், ரயில் திட்டங்கள்,நெடுஞ்சாலைகள், ரயில் திட்டங்கள் என பெரும் முதலீடு செய்து சில ஆண்டுகளில் ஆசியாவையும், இந்திய பெருங்கடலையும் சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளக்கூடும் என்று இந்தியா கருதுகிறது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் இருந்து செயல்பட்டு வந்த பட்டுப் பாதை சாலையை மீண்டும் நடைமுறையாக்கி மேற்கத்திய நாடுகளுக்கு சவாலாக இருக்க வேண்டும் என்று சீனா கருதுகிறது.

இதற்காக 200 பல்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிட சீனா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் தொடக்கப்புள்ளிதான் கொழும்பு துறைமுக நகரம் என்று பிற நாடுகள் எச்சரிக்கின்றன.

தினமணி கட்டுரையின் மீள்பதிவு –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s