சொல்வளர்காடு|ஜெயமோகன்


தருமன் விழிகளில் சினத்துடன் “விளையாட்டு வேண்டாம்” என்றார். “இவன் ஏன் வெறுமனே பார்த்திருந்தான் என்று சொல்கிறேன். இவன் துணைவி உண்ட பழம் நஞ்சு. ஆனால் அதை அவள் அமுதென நினைத்தாள். அதை இவன் சொல்லப்போனால் இவனை தன் எதிரி என எண்ணுவாள். ஆகவே தாளாத்துயருடன் தனிமையில் அதை நோக்கியிருந்தான்.” தருமன் “வீண்சொல் தேவையில்லை” என்றபடி திரும்ப “கேளுங்கள், அரசே! அல்லது உண்மையிலேயே அது அமுதகனியாக இருக்குமோ? அழிவின்மையை தான் மட்டுமே அடையவேண்டுமென நினைத்து அவள் மட்டும் உண்டாளோ?” என்றான்.

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 55 ஒன்பதாம் காடு : யக்‌ஷவனம்

சொல்வளர்காடு – ஜெயமோகன்
இணையத்தில் வாசிக்க – நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 1

வெண்முரசு வரிசையில் முதற்கனல் அம்பைக்குப் போகிறது, நீலம், இந்திர நீலம் கிருஷ்ணனுக்கு. காண்டீபம் அர்ஜுனனுக்கு, வெய்யோன் கர்ணனுக்கு.

சொல்வளர்காடு நாவல் பாண்டவர்களின் வனவாசத்தைப் பற்றிச் சொன்னாலும், இதனை தருமனுக்கு அளிப்பதுதான் சரியாக இருக்கும்.

அதை விடுத்து இந்து ஞான மரபை வெவ்வேறு பரிமாணங்களில் காட்டுவதாகவும் அமைகிறது. விஷ்ணுபுரத்தின் ஞான சபைக்கு விவாதிக்க வந்தவர்கள் ஒவ்வொருவருடனும் போய் அவர்களுடைய ஆசிரமத்தில் தங்கி விட்டு வந்த அனுபவம், சொல்வளர்காட்டில் கிடைக்கும்!!

வெவ்வேறு குருநிலைகளையும், அதன் பின்புலத்தையும் முன் வைக்கிறது இந்த நாவல். தவிர, ஒன்றிலிருந்து இன்னொன்று மேலெழுந்து வந்து, எது தூயதோ அது நிலைக்கிறது, அதைவிட தூயது வரும்வரை.

இந்த 3 வரிக்கு மேல் நான் ஞானம் பேசி, எனது சூனியத்தைக் காட்டுவதாக இல்லை. இறைமறுப்பாளர்களின் அத்தியாயத்தை நான் ஆர்வத்துடன் வாசித்தேன். ஒரு தொகுப்புக்காக, குருநிலைகளையும் அவற்றின் பின்புலத்தையும் மனவரைபடமான கீழே தொகுத்திருக்கிறேன்.

சொல்வளர்காடு
Enter a caption

பகடைக் களத்தில் அடைந்த கேவலமும், அதன் மூலம் நிமிராத தலையுடனும், மன்னிக்கக்கூட மாட்டேங்கிறாளே என்கிற விசனமும், ஒரு வார்த்தையாவது சொல்லிவிடமாட்டாளா என்கிற ஏக்கமும் கிடந்து அலைக்கழிக்கிறது தருமனை. எரிமலைக் களத்தில் புத்துயிராகப் பிறந்து வந்திருக்கிறான். இனி வரும் காலத்தில் எப்படிப்பட்ட தருமனை நாம் காணப்போகிறோமோ.

யாதவர்களின் பூசல் இந்த நாவலில் விரிவாக அலசப்படுகிறது. விரிசல் விட்ட கத்தியாகிக் கிடக்கிறது துவாரகை. இளைய யாதவர் அதை விளக்குவதும், சால்வனின் படையெடுப்பை நொறுக்கும் போர் தந்திரங்களையும் படிக்கும்போது, ஜெயமோகனுக்கு ஒரு ஏசி மெசின் வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது. எத்தணை உக்கிரம்!

இளைய யாதவர் பல இடங்களில் இங்கே வாதிடுகிறார். தனிப்பட்ட காழ்ப்பிற்காக நாடுகளின் மக்களை எப்படி பலிகொடுக்கலாம் என்று பாஞ்சாலியிடம் வாதிடுகிறார். பிள்ளைப்பாசம், உனக்கென்றால் ஒன்று, எளிய யாதவ மக்கள் என்றால் ஒன்றா என்று சாந்தீபனி முனிவரிடம் வாதிட்டு அவரை குருநிலையை விட்டே துரத்துகிறார்.

ஒரு இனிய வாசிப்பனுபவம்.

அதன்பிறகு வெண்முரசு தொட்டே ஒரு மாதமாகிறது. அதை விடுங்க. மேலே உள்ள படத்தைப் போட்டு முடித்தே இரண்டு வாரமாகிறது. பிரசுரிக்க காலம் கூடி வரவில்லை. ஜெயமோகன் ஓடுகிறார். நமக்கு இளைக்கிறது. இந்த வாரமாவது கிராதம் தொடங்கவேண்டும்.

வளர்க பாரதம்!

பன்னிரு படைக்களம் – ஜெயமோகன்


இந்த எளிய மானுடர்களை மட்டும் எண்ணுவேன் என்று கருதினீரா? இதோ நெளியும் புழுக்களிலிருந்து எவ்வகையில் மானுடர் மேம்பட்டவர்? இங்கு ஒரு காலடிபட்டு அழியும் பல்லாயிரம் புழுக்களைக் கண்டு ஒருகணமும் துயருறாத மூடர்களே போர்க்களத்தில் மாயும் வீரர்களுக்காக காவியம் எழுதுகிறார்கள். எனக்கு உயிர்கள் எல்லாம் நிகரே. எவர் மீதும் அன்பும் வெறுப்பும் இல்லை. கருணையும் காழ்ப்பும் இல்லை. எவர் வெல்லவும் நான் நின்றிருக்கவில்லை. பிறந்து இறந்து கொன்று நின்று ஆடிமறையும் உயிர்களென்பவை வெறும் ஒற்றைப்பெருக்கு. இப்பெரும்சுழியின் மையத்தில் விரலிட்டு படையாழி என ஏந்தி நின்றிருக்கிறேன்.

-இளைய யாதவர்

பன்னிரு படைக்களம் – ஜெயமோகன்

ஒரு நாவலுக்கு ஒரு கிளைமேக்ஸ்தான் இருக்கவேண்டும் என்று இபிகோவில் சட்டமா உள்ளது. வெண்முரசு நாவல் வரிசையில் இதுவரை வந்துள்ள நாவல்களில் சிறப்பான ஒரு இடம் பன்னிரு படைக்களத்திற்கு உண்டு. காரணமில்லாமல் இல்லை. பல்வேறு நதிகள் ஒன்றாக சேரும் இடம் இந்த நாவல். மிகப்பெரிய சரித்திரப் படுகுழியில் விழப்போகும் சமூகத்தின் வீழ்ச்சியின் தொடக்கத்தைத் தருகிறது இந்த நாவல்.

ஜராசந்த வதம்

உடல் பிணைக்கப்பட்ட இருவரின் உணர்வெழுச்சிமிக்க கதையை உவமையெனக் காட்டி தொடங்குகிறது ஜராசந்தனின் கதை. ஜரையால் வளர்க்கப்பட்டு, நகரம் வந்து, ராஜகிருகத்தைக் கைப்பற்றும் காட்டாளன் இவன். மக்களின் அரச குல எதிர்ப்பை தனக்காதரவாக வளைத்து, இளவரசர்களான தன் உடன் பிறந்தவர்களைக் கழுவிலேற்றி, அரசனாக முடிசூடக்கொள்ளவது விவரிக்கப்பட்டுள்ளது. இப்படி வந்த முரடன் துரியோதனனின் நட்பு வளையத்திற்குள் வருவதை ஏற்கனவெ வந்த நாவல்கள் விளக்கியிருக்கின்றன. ஆனால் அதே ஜராசந்தனை அஸ்தினபுரி சகுனியின் வஞ்சத்திற்காகக் கைவிடப்படும்தருணம் சுவையானது.

ஜராசந்தனின் வதம் குறித்த அத்தியாயங்களைப் படபடக்கும் இதயத்துடன் வாசிக்கவேண்டியிருக்கிறது. தருமனின் ராஜசூயம் என்பதன் உண்மையான பொருளையும், அதை இயக்குபவன் யார் என்றும் துரியோதனனை விட ஜராசந்தன் தெளிவாக அறிந்துள்ளான். தன்னைத் தாக்க வருவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறான்.

தாக்கவரும்போதும், தன் அரசினைத் தன் மகனிடம் அளித்து விடைபெறும் இடம்….

வதத்திற்கு முந்திய நாள் இளைய யாதவரிடம் விவாதிக்கும் கணம்தான் இந்த நாவலின் உச்சகட்ட தருணம் என சொல்வேன்.

பாஞ்சாலி சபதத்திற்கு ஈடான ஒரு மன எழுச்சியை ஜராசந்த வதமும் அளிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். அன்று மனதளவில் நான் ஒரு பெரும் வீழ்ச்சியையும், அதன் விளைவாக எழுந்த வருத்ததையும் அடைந்தேன்.

சிசுபாலன் வதம்

சிசுபாலன் வதத்தின் குறியீடு – இவ்வழி.. இவ்வழி.. குறித்து சுவையாக எழுதியிருக்கிறார் இந்த வாசகர். அவசியம் வாசிக்கவேண்டிய ஒன்று.

பாஞ்சாலி சபதம்

நாவல் தொடங்கியதிலிருந்து மாயாஜாலம், மந்திர மாங்காய் ஏதுமில்லாமல் கதை நகர்த்தி வருகிறார் ஜெயமோகன். பாஞ்சாலி துகிலிரிதல் கட்டத்திலும் இது தொடரும் என்றும் நம்பினேன். என்னுடைய எதிர்பார்ப்பின் படி, இளையயாதவரோ, அவரது ஓலையோ வந்து சூழல் மோசமாகாது தடுக்கும் என நம்பினேன்  🙂

மாமகிடன் துணையுடன் அவையில் இருந்த ஒவ்வொருவரின் பக்கத்தையும் காட்டும் இலாவகமும், இறுதி வரை தன் நிலை சிறிதும் இழக்காத திரௌபதியும் இந்நாவலின் இறுதிக் கட்டம் நமக்குக் காட்டித்தரும் சுவையான பகுதிகள். கௌரவர்களின் மனசாட்சியின் மிச்சமாக வரும் குண்டாசி நம் பிரியத்திற்குள்ளவனாகிறான்.

“நான இழுத்து வரப்படுவதைப் படுவது நியாயமென்றால் நாளை இதே போன்று உங்கள் மன்னரின் பெண்களும் இதே முறையில் இழுத்துவரப் படுவதும் நியாயம்தானா என்று கேள்” என்று பாஞ்சாலி கேட்கும் இடத்தில் ஒரு கணம் அதன் பின்புலம் குறித்து வாசகன் பயந்துவிடுகிறான்.

பன்னிரு படைக்களம் – செயல் அறிக்கை 🙂

ராஜசூய நிகழ்வு

ராஜசூய நிகழ்வுகளை விவரணை செய்யும் அத்தியாயங்கள் மிக அழகானவை. யாக சாலையாகட்டும், ஞானமார்க்க விவாதமாகட்டும், உணவுச் சாலையாகட்டும், க்ஷத்ரிய யாதவ வாக்குவாதமாகட்டும், ஜெயமோகன் புகுந்து விளையாடுகிறார். அரங்கு நிறைந்த கரகோஷங்களைப் பெறுகிறார்.

வர்ண மாற்றம்

இது வரைக்கும் எல்லோரையும் அவரவர் பார்வையிலிருந்து காட்ட முயன்ற ஜெயமோகன் வெற்றி பெற்றுள்ளார். துரியோதனனாகட்டும், தரும அர்ச்சுன பீமர்களாகட்டும், திரௌபதியாகட்டும், குந்தியாகட்டும் அவரவர் பக்க நியாயங்கள் நமக்கு இது வந்த நாவல்கள் வழி நமக்குத் தெரிந்துள்ளது.

அனைத்து பக்க நியாயங்களும் ஓரிடத்தில் சங்கமித்து, ஒன்றை ஒன்று நெட்டித்தள்ளி உயரத் துடிக்கும் துடிப்பைக் காட்டுகிறது பன்னிரு படைக்களம். அதன் அகமாறுதல்களை ஜெயமோகன் எழுதிவிட்டார் என்றாலும், இதுவரை வாசகனாக என்னால் மாற முடிந்திருக்கிறதா என்று நினைத்துப் பார்க்கிறேன்.

இந்திர பிரஸ்தத்தில் வழுக்கி விழுவதன் மூலமும், தொடர்ந்த ஒரு நோய் பரவல் மூலம், துரியோதனனும் கர்ணனும் தங்கள் இயல்பை மறந்து, ஆணவம் காட்டும் திசை வழி நடக்கத் தொடங்குகிறார்கள்.

நான் இன்னும் பழைய துரியோதனனையும் பழைய கர்ணனையுமே வைத்திருக்க முடிகிறது. புதியவர்கள் இன்னும் ஒட்டவில்லை. அனேகமாக அடுத்து வரும் தொடர் நாவல்களை இதை நம் மனதில் இன்னும் வலுவுடன் பதிக்கலாம்.

சிசுபாலன் அனைவராலும் கைவிடப்பட்டு, இளைய யாதவரால் கொல்லப்படுகிறான். அவனைச் செலுத்தியது எதுவோ, அதுதான் இப்போது சுயோதனனையும் செலுத்தத் தொடங்கியிருக்கிறது. சுடரை நோக்கிப் பறக்கும் பூச்சி போல அவனும், அவனைச் செலுத்தும் கர்ணனும் செயல்படத் தொடங்கியிருக்கின்றனர். அந்த வகையில் சிசுபாலனும் துரியோதனனும் இணை படகில் செல்கின்றனர்.

தருமனின் செயல்பாடு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அவரின் பார்வையின் படி, ‘ஒரு போரினால் குடிகள் அழிவதை விட பகடைக்களம் என்னும் நிகரிப்போரில் நான் அவற்றைக் காக்கலாம். அப்படியே தோற்றாலும் துரியோதனனிடம்  முடி தாழ்த்தவேண்டும். அவ்வளவுதானே’ என்று மன அமைதி அடைகிறான். ஆனால் தான் ஒரு அறவேந்தன் என்கிற தருக்கமும், பகடையின் சகுனியின் திறன் குறித்த ஒரு பயமும் மாறி மாறி அவனை தூக்கமிழக்க வைக்கின்றன.

பகடைக்கு பந்தயம் கட்டவேண்டும் என்பதை எனக்கு யாரும் சொல்லவில்லை என்கிறான் தருமன். ‘பயப்படுகிறாயா’ என்று தருமனின் ஆணவத்தைச் சுண்டிவிடுகிறார் சகுனி. சிலிர்த்துக்கொண்டு பகடை ஆடத் தொடங்குகிறான் தருமன். அதே சகுனியே, தருமனை ஒரு கட்டத்தில் நிறுத்துகிறார். சகோதரர்களை இழந்த பிறகு, நிப்பாட்டிக்கொள் என்கிறார். அதை வெற்று ஆணவச் சீண்டல் என்று நான் நினைக்கவில்லை. சகுனிக்கு அடுத்த என்ன நிகழும் என்று தெரியும். அதை மனிதாபிமானத்துடன் நிறுத்திக்கொள்ளலாம் என்கிற எண்ணமா? அதன் விளைவுகள் குறித்து பயமா? இதையெல்லாம் குறித்து எண்ணாமல் இவன் விளையாடுகிறான் என்கிற எண்ணமா என்று அவரவர் முடிவெடுத்துக் கொள்ளலாம். தருமனின் புதல்வன் பற்றிய ஒரு சுவையான குறிப்பு நினைவிற்கு வருகிறது.

பகடைக்களத்தில் சிற்பங்களில் குவிந்துள்ள தேவநாகர்களும், முனிவர்களும், யமதர்மனின் பதபதைப்பும் என புனைவின் சுவையை ரசிப்பவர்களுக்குச் சரியான தீனி இந்த பகடைக்களம்.

வயது மாற்றம்

பீஷ்மர், திருதராஷ்டிரர், விதுரர் என வயதான தலைமுறையை விலக்கிவிட்டு, அடுத்த தலைமுறை ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. வயதானவர்களின் செல்வாக்கு, புதிய தலைமுறை மீது எந்த அளவில் மோசமாக உள்ளது என்று காட்சிப் படுத்துவதைக் காணமுடிகிறது. சகுனியின் கீழ் உள்ள கணிகரின் பாதத்தைப் பிடித்து, பீஷ்மரின் சொற்கள் கண்ணீர் விடுகின்றன.

நேரடியாகவே விதுரர் பிறப்பைக் காட்டி உதாசீனப்படுத்தப் படுகிறார்.

சுருதையின் இறுதிக் கட்டம் மனதைக் கலக்குகிறது. விதுரரை ஒரு நிழலெனத் தொடர்ந்து வந்தவள் ஒரு கட்டத்தில் இல்லாதவளாகிறாள். அரசியல் நுணுக்கங்களில் விதுரரின் எல்லைகளை உணர்ந்தவளாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறாள். விதுரர் தளர்ந்து விழும் இடங்களில் கை கொடுத்துத் தூக்கி விடுகிறாள். சத்யவதி மறைவிற்குப் பிறகு, விதுரனை சுருதைதான் தன் சிறகுகளுக்குள் வைத்து காபந்து செய்கிறாள். இறக்கும் முன்னர் ‘எதுவும் நம்மிடமில்லை’ என்று அவள் சொல்லும் இடத்தில், அதன் உண்மையின் வலிமையை உணர்கிறோம். மனதை சோகம் கவ்வுகிறது. அம்பை, சுபகை, ஜராசந்தன் என்கிற அழகான கதாபாத்திர வரிசையில் சேர்கிறாள் சுருதை.

குந்தி – அழுத்தம்

குந்தியின் அமைதியான, அழுத்தமான ஆதிக்கம் இன்றளவும் தொடரவே செய்கிறது. தருமனனின் ராஜசூயத்திற்கு பீஷ்மரைத் தன் வலுவான இடத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து வரச் செய்து, அவரது அகங்காரத்தைத் தட்டி எழுப்பி, யாகத்திற்கு அனுமதி பெறும் இடத்தில்….

இன்னும் அஸ்தினபுரி எத்தணை பெண்களின் விருப்பத்திற்கு இரத்தம் சிந்தப்போகிறதோ என்று பதற வைக்கிறது.

மேலும், பாண்டவர்களின் பிறப்பு, கர்ணனின் பிறப்பு குறித்து வரும்போதும் தெள்ளத் தெளிவான நிலைப்பாட்டைக் காட்டுகிறாள்.

வெண்முரசு நாவல் வரிசையில் தவற விடக்கூடாத அடுத்த நாவல் இது.

மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.

வெய்யோன் | ஜெயமோகன்


நஞ்சு கவ்வுகிறது கதிரவனை! ராகுவின் உடலை வெய்யோன் கிழித்து வெளிவருகையில் விண்ணிலிருந்து நச்சுமழை பொழியும்… வெட்ட வெளியில் நிற்கலாகாது. ஓடுங்கள்! கூரையொன்று தேடிக்கொள்ளுங்கள்!

நூல் ஒன்பது – வெய்யோன் – 78

வெய்யோன்
வெண்முரசு நாவல் வரிசையின் ஒன்பதாம் நூல்
ஆசிரியர் – ஜெயமோகன்
இணையத்தில் வாசிக்க – நூல் ஒன்பது – வெய்யோன் – 1

venmurasu

இனி நான் உறங்கட்டும் நாவலைத் தொடர்ந்து, கர்ணனனைப் பற்றி இன்னுமொரு நாவலை அறிமுகப் படுத்துவதில் கடைசிபெஞ்ச் உவகை கொள்கிறது.

சுருக்கமான பார்வை

பரசுராமருடனான கர்ணனின் பிணைப்பு மற்றும் பிணக்கு பற்றிய சூதர் பாடலுடன் தொடங்குகிறது இந்நாவல். கர்ணனின் திருமண பின்புலம், அங்க நாட்டு அரசியல் மற்றும் சமூகச் சமநிலையை விவரிக்கும் அத்தியாயங்கள் விருவிருவென முடிகின்றன.

திருமணத்திற்குப் பிறகு தன் கணவர் ஜயத்ரதன் மற்றும் மகனுடன் அஸ்தினபுரிக்கு வரும் துச்சளையைச் சகோதரனாக நின்று வரவேற்க வேண்டும் என்கிற துரியோதனனின் அழைப்பை மகிழ்வுடன் ஏற்று அஸ்தினபுரிக்குத் திரும்புகிறான் கர்ணன். பிறகு, கௌரவர்களின் குழந்தைகளாலும் அவர்களின் வால் தனங்களாலும் நிறைந்திருக்கும் அஸ்தினபுரியின் காட்சி வெகு சுவாரசியமாகச் சொல்லப்படுகிறது.

ஜயத்ரதனுடனான கர்ணனின் மோதல், பிறகு அவரை அஸ்தினபுரியில் வரவேற்கும் கர்ணனின் தர்மசங்கடமான நிலைமையை வாசிக்கும்போது நம்மை இந்த நாவல் உள்ளே இழுத்துக்கொள்கிறது. இதற்கிடையில் இந்திரப் பிரஸ்தம் கட்டுமானம் நடக்கிறது. நகரம் கண் திறக்கப்படும் விழாவிற்காக கௌரவர்களை அழைக்க வருகிறான் பீமன்.

அஸ்தினபுரி விழா, அஸ்தினபுரியின் அமைப்பு விரிவாகச் சொல்லப்படுகிறது. எதிர்பாராவிதமாக நிகழும் கர்ண-ஜராசந்தனின் சந்திப்பு, அதன் தொடர்ச்சியாக நிகழும் ஜராசந்த-துரியோதனனின் மோதல் மற்றும் நட்பு ஆகியவை சுவையுடன் சொல்லப்படுகின்றன. பாண்டவர்கள் மீது தீராப் பகைமை கொண்ட, இந்திரப் பிரஸ்தத்தின் பழங்குடிகளான உரகர்களுடனான கர்ணனின் தொடர்பு கனவு லோகத்தில் ஆழ்த்தும். பிறகு அஸ்தினபுரியில் துரியோதனன் அவமானப்படுத்தப்படும் நிகழ்வுடன் இந்நாவல் முடிகிறது.

கருத்து திணிப்பும் கர்ணனின் மனப்போராட்டமும்

சூதர் குடியிலிருந்து மணம் முடிக்க விரும்பாத கர்ணன், அதிரதனின் பிடிவாதத்திற்காக சம்மதிக்கிறான். ஷத்ரியர் சபையின் தன் இருப்பை உறுதி செய்ய துரியோதனனுடன் சென்று கலிங்க அரசியைக் கைப்பிடிக்கிறான். தவிர்க்க இயலாது ராணிகளுக்கிடையில் பகை உணர்வு சூழ்கிறது. தன் கருத்துக்கு கர்ணனை சம்மதிக்க வைத்து, அவனைச் சங்கடத்தில் தள்ளும் நபர்கள் வரிசை குந்தியுடன் தொடங்குகிறது. அந்த வரிசையில் அதிரதன் அவரைத் தொடர்ந்து கர்ணனின் இராணிகளும் நிற்கின்றனர்

மீண்ட நட்பு – கர்ண-துரியோதன சந்திப்பு

karnan-duryodanan

திருமணங்கள் முடிந்த பிறகு, அங்கநாட்டில் இருந்து அஸ்தினபுரிக்கு வந்து துரியோதனனைச் சந்திக்கும் இடம் உணர்வு எழுச்சியுடன் தொடங்கி, சிரித்துக் குலுங்கும் நகைச்சுவையாகக் காட்டப்பட்டுள்ளது. கர்ணன் வரவை ஒட்டி, துரியோதனன் விடிகாலையிலேயே கள்ளுடன் கறிச் சோறு தின்னும் காட்சியில் வெடித்துச் சிரிக்கலாம்.

அவள் திரும்பும்போது துரியோதனன் மெல்ல “உண்மையிலேயே நான் எதையும் உண்ணவில்லை பானு” என்றான். “உண்ணாமலா உடையெங்கும் ஊன் சிதறிக் கிடக்கிறது?” என்றாள் பானுமதி. “ஆம். நான் அப்போதே பார்த்தேன் மூத்தவரே, நீங்கள் சரியாக துடைத்துக் கொள்ளவில்லை” என்றான் சுபாகு. கர்ணன் பானுமதியின் கண்களை பார்த்தபின் சிரிப்பை அடக்க அவள் சிவந்த முகத்துடன் ஆடையை இழுத்துச் சுற்றிக்கொண்டு திரும்பிச் சென்றாள்.

“சினத்துடன் செல்கிறாள்” என்றான் துரியோதனன். “ஆம், நான் சீரமைத்துவிடுகிறேன்” என்றான் கர்ணன். “நீத்தவர்களுக்கான பூசனைகள் செய்யாது உணவுண்பது பெரும்பிழை… விதுரரும் சொல்லியிருக்கிறார்” என்றான் துரியோதனன். “அரசே, உங்கள் மூதாதையரும் உங்களைப்போன்று புலரியில் முழுப்பன்றியை உண்பவர்களாகவே இருந்திருப்பார்கள். துயர்வேண்டாம்” என்றான் கர்ணன். “ஆம், மாமன்னர் ஹஸ்தி வெறும் கைகளால் யானையை தூக்குவார்” என்றான் துச்சலன். துச்சாதனன் கள்மயக்கில் “யானையை எல்லாம் எவராலும் தூக்கி உண்ண முடியாது…” என்றான். சிவந்த விழிகள் மேல் சரிந்த இமைகளை தூக்கி “வேண்டுமென்றால் பன்றியை உண்ணலாம்” என்றான்.

“பொதுவாக அவள் இங்கு வருவதில்லை. இங்கு நீர் வந்திருப்பதை அறிந்து உம்மை பார்க்காமலிருக்க முடியாமல் ஆகித்தான் வந்திருக்கிறாள்” என்றான் துரியோதனன். பின்பு “நான் மிகை உணவால் பருத்தபடியே செல்வதாக சொல்கிறார்கள்” என்றான். “ஆம், நீங்கள் மிகவும் எடை பெற்றுவிட்டீர்கள்” என்றான் துச்சலன். சினத்துடன் திரும்பி “என்னைவிட மும்மடங்கு பெரியவனாக இருக்கிறாய். நீ என்னை சொல்ல வேண்டியதில்லை” என்றான் துரியோதனன். அவன் தலை மெல்ல ஆடியது. வாயைத் துடைத்தபடி “நான் தேரில் ஏறினால் குதிரைகள் சிறுநீர் கழிக்கின்றன… இழிபிறவிகள்” என்றான். “ஆம், நானே பார்த்தேன்” என்றான் சத்வன். துரியோதனன் அவனை சிவந்த விழிகளால் நோக்கியபோது அவன் சித்தம் செயல்படாதது தெரிந்தது. தேவையில்லாமல் துச்சலன் வெடித்துச் சிரித்தான்.

நூல் ஒன்பது – வெய்யோன் – 29

துச்சளையின் நகர் நுழைவு

ரசிக்கும்படியான அத்தியாயம் ‘கூற்றெனும் கேள்’ அத்தியாயத்தில் வருகிறது. இளைய கௌரவர்களின் பட்டாளங்களுடன் சென்று கர்ணன் துச்சளையை வரவேற்கும் காட்சி அனுபவித்து உணரக்கூடியது.

கர்ணன் வெளியே சென்றபோது அவனைச் சூழ்ந்துவந்த இளைய கௌரவர்கள் கைக்குச் சிக்கிய அனைத்தையும் தூக்கிவீசி கூச்சலிட்டனர். “பெரீந்தையே! யானையை இவன் அடித்தான்” என்றது ஒரு குரல். ”பெரீந்தையே நான் வாளால் வெட்டினேன்” “பெரீந்தையே என் ஆடை எங்கே?” புரவி ஒன்றின் வால் இழுக்கப்பட அது மிரண்டு கனைத்தது. தூண் ஒன்று சரிந்து யானைமேல் விழ அது சுழன்று திரும்பி துதிக்கைநீட்டி அதைப்பிடித்து ஆராய்ந்தது. கர்ணனுக்குப் பின்னால் ஓடிவந்து இன்னொருவன் தோள்மேல் மிதித்து ஏறிப்பாய்ந்து தோளை கவ்விக்கொண்ட ஒருவன் “பெரியதந்தையே! என்னை வானை நோக்கி விட்டெறிடா” என்றான். கர்ணன் அவனைச் சுழற்றி வானை நோக்கி விட்டெறிந்து பிடித்துக் கொண்டான். “என்னை! என்னை!” என்று நூறு குட்டிக்கைகள் அவனைச் சூழ்ந்து குதித்தன.
நூல் ஒன்பது – வெய்யோன் – 33

கர்ணன் மட்டுமல்ல, கௌரவர்களும் கர்ணன் மீது கொண்டிருக்கும் அன்பையும் மதிப்பையும் ஜெயமோகனின் அத்தியாயங்கள் ரசிப்புடன் உணர்த்துகின்றன. துரியோதனன் கர்ணனின் பிறப்பைப் பற்றி அறிந்தவனாகவே ஆசிரியர் முன்னிறுத்துகிறார். மூத்தவர் என்றும், தனது அரியணை அவனது என்றும், தான் அவனது இளையவன் என்றும் அவன் உணர்ச்சி வசப்பட்டுப் பேசும் இடம், மன நெகிழ்ச்சியைத் தருவது.

துரியோதனன் அதை இரு கைகளாலும் வாங்கி முகர்ந்துவிட்டு “உயர்ந்த மது! நான் உயர்ந்த மதுவை மட்டும்தான் அருந்துவேன். ஏனென்றால்…” என்றபின் ஓங்கி ஜயத்ரதன் தொடையில் அடித்து “மைத்துனரே” என்றான். ஜயத்ரதன் திடுக்கிட்டு விழித்து “யார்?” என்றான். “நான் துரியோதனன். அஸ்தினபுரியின் அரசன்! பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி! ஆனால் இவர் என் மூத்தவர். இவரை…” என்றபின் தலைக்குமேல் கையைத்தூக்கி மும்முறை ஆட்டியபின் துச்சலனைப் பார்த்து “இவரைப்பற்றி நான் உன்னிடம் என்ன சொன்னேன்?” என்றான்.

“சொல்லத் தொடங்கினீர்கள் மூத்தவரே” என்றான் துச்சலன். “இவர் எங்கள் மூத்தவர். இவர் உண்மையில் எங்கள் மூத்தவர்” என்றான் துரியோதனன். கர்ணன் “போதும்! அருந்திவிட்டு படுங்கள்!” என்றான்.

……….

அவர்கள் கதவு வரை செல்வதை பார்த்த துரியோதனன் சரிந்த விழிகளை தூக்கி “ஆகவே நான் சொல்வது என்னவென்றால்… இவர் மூத்தவர். அங்க நாட்டுக்கு அரசர். ஆனால்…” என்றபின் ஜயத்ரதனை பார்த்து “ஆனால் ஒரு சொல் இவர் சொல்வார் என்றால் அஸ்தினபுரியின் அரசராக இவரே இருப்பார். இவருக்கு வலப்பக்கம் தருமன் நின்றிருப்பான். இடப்பக்கம் நான் நின்றிருப்பேன். இவர்களைச் சூழ்ந்து நூற்றிமூன்று உடன்பிறந்தார் நிற்பார்கள். பாரதவர்ஷத்தின் சூரியன் கால்படும் காமரூபத்து மேருமலை முதல் மாலை அவன் கால் நிழல்விழும் பால்ஹிகம் வரை இவர்தான் ஆள்வார். புரிகிறதா?” என்றான்.

நூல் ஒன்பது – வெய்யோன் – 36

கலிங்க ராணியைக் கவரும் இடத்தில் ஜயத்ரதனுக்கும், கர்ணனுக்கும் நேருக்கு நேர் போர் மூள்கிறது. கர்ணன் வெள்வதுடன் மட்டுமல்லாது, ஜயத்ரதனின் முடியை அறுத்து, இடைத் துணியையும் அறுத்து இழிவு செய்கிறான். பிறகு, அஸ்தினபுரியில் அவனே ஜயத்ரதனை வரவேற்கிறான். அந்தச் சூழலில் துச்சளை சொல்வதாக வரும் சொற்கள், துரியோதனன் போன்றே பிற கௌரவர்களும் கர்ணன் மீது மாறா அன்பு கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

“மூத்தவரே, உண்மையில் கடும் வஞ்சம் கொண்டுதான் கலிங்கத்திலிருந்து மீண்டார். என்னிடம் வந்து உங்களை பழிதீர்க்கப்போவதாக சொன்னார். நான் அவரிடம் நீங்கள் வெறும் ஒரு மலைச்சுனை. விண்ணாளும் சூரியனிடம் போரிடும் ஆற்றல் உங்களுக்கில்லை. வெல்வது மட்டுமல்ல, தோல்வி கொள்வதிலுமே பெருமை ஒன்றுள்ளது, அப்பெருமையை இழந்துவிடுவீர்கள் என்றேன். சினந்து என்னிடம் வஞ்சினம் உரைத்தபோது அவரை அறியாது உங்கள் பிறப்பு குறித்து ஒருசொல் வாயில் எழுந்தது. நான் கைநீட்டி போதும் என்றேன். என் விழிகளை நோக்கியவர் நடுங்கிவிட்டார்.”

துச்சளை சிரித்து “ஏனென்றால் நான் துரியோதனரின் தங்கை. அதை அக்கணம் நன்குணர்ந்தார். என் விழிகளைப் பார்த்தபின் பிறிதொரு சொல்லும் சொல்லாமல் இறங்கிச் சென்றார். அதன்பின் இன்றுவரை உங்களைப்பற்றி ஒருசொல்லும் சொன்னதில்லை” என்றாள். கர்ணன் “ஏன் அப்படி செய்தாய்? அவர் ஓர் அரசர்” என்றான். “மூத்தவரே, தங்கையென நான் இருக்கையில் அச்சொல்லை அவர் சொல்லியிருக்கலாமா?”

கிட்டத்தட்ட குரங்குக் குழு போன்று இருக்கும் அஸ்தினபுரி பிரிதொரு நாளில் ஒன்றுமில்லாது அல்லவா போகப்போகிறது. இனி நான் உறங்கட்டும் நாவலில் வரும் இளைய கௌவர்களின் மனைவிகள் ஈமக் கிரியைகள் செய்யும் காட்சி மனதில் நிழலாடுகிறது.

கிரகணம் விழுங்கிய சூரியன்

வெண்முரசு துவக்கம் முதல் துரியோதனன் நிழலாக இருந்து வருகிறான் துச்சாதனன். இணையாக இருந்து மூத்த கௌரவனைக் காத்து வருகிறான் துரியோதனன்.

Duryodfhana_fall_into_water

பாண்டவர்களுக்கு இழைத்த தீமையை நினைத்து வருந்தும் துரியோதனன், மிகை நடிப்புடன் அதைக் கடந்து செல்ல முயல்கிறான். பாண்டவர்களுக்கு மனமில்லை என்றாலும், அவர்களுடன் உறவு பாராட்ட நினைக்கிறான். நகருக்குக் காவல் நிற்பதாக உறுதி சொல்ல நினைக்கிறான், திரௌபதிக்கு தேவயாணியின் மணிமுடியைப் பரிசளிக்கிறான், கருவூலத்தைத் திறந்து பரிசு கொண்டு செல்கிறான், பீமனுடன் தோள் பொருத நினைக்கிறான். ஒரு கை மட்டும் தட்டி என்ன ஆகும். பாண்டவர்களின் பகைமை, துரியோதனன் வழுக்கி விழும்போது, ஏளனப் புன்னகையாகவும், வெறுப்புப் பார்வையாகவும் பல் காட்டிச் சிரிக்கிறது.

அவன் எதையும் நோக்கவில்லை என்று கர்ணன் எண்ணிய கணமே “அவர்களின் விழிகள்!” என்றான் துரியோதனன். நடுநடுங்கும் கைகளால் கர்ணனின் கைகளை பிடித்தபடி “என் அறை வரை என்னை தாங்கிச் செல்லுங்கள் அங்கரே. என்னால் நடக்க முடியாது, மீண்டும் விழுந்துவிடுவேன்” என்றான்.

நூல் ஒன்பது – வெய்யோன் – 76

உரகர்களின் பின்புலமும், அவர்கள் கர்ணனை மனமாற்றம் செய்யும் இடமாக வரும் இடங்களும் கனவுலோகத்தின் கற்பனைகளாக வருகினறன. மது மயக்கத்திலும், தூக்கக் கலக்கத்திலும், இருட்டுக்குள்ளும், பூமியின் அடியிலும் காட்சிப்படுத்தப்படும் இந்த இடங்கள் ஒரு அமானுட உணர்வுடன், கர்ணனின் மனதிற்குள் பகைமையை விதைக்கின்றன.

இறுதிக் காட்சியில் விவரிக்கப்படும் சூரிய கிரகணக் காட்சியை, கர்ணனின் மனநிலைக்கு ஒப்புமைப் படுத்துகிறது இந்நாவல்.

நஞ்சு கவ்வுகிறது கதிரவனை! ராகுவின் உடலை வெய்யோன் கிழித்து வெளிவருகையில் விண்ணிலிருந்து நச்சுமழை பொழியும்…

இன்னுமொரு நல்ல நூல் அறிமுகத்தில் சந்திப்போம் நண்பர்களே.

வெல்க பாரதம்


படங்கள் காப்புரிமை – வெண்முரசு

இனி நான் உறங்கட்டும் | பி. கெ. பாலகிருஷ்ணன்


“கர்ணா, சிரசினை குறிவைத்து அந்த அஸ்திரம் நீ தொடுக்காதே. குறி தவறிவிடும்…” அதற்குக் கர்ணன் சொல்வான்: “மத்ரேசா உனது கூற்றின் பொருள் எனக்குப் புரிகிறது. ஆனால் லட்சியம் குறிவைத்து தொடுத்திட்ட சரம் தனை மாற்றி தொடுப்பது தர்ம நீதிக்கு உகந்ததல்ல. தொடுத்த அம்பினை கர்ணன் திருப்பி வைப்பதில்லை என்பதை நீ அறியவும்…”

“அர்ஜுனா செத்தாய் நீ…” என உரக்கக் கூவியவாறு கர்ணன் நாகாஸ்திரத்தை இழுத்து விடலானான்.

இனி நான் உறங்கட்டும்
ஆசிரியர் – பி. கெ. பாலகிருஷ்ணன்
மொழி பெயர்ப்பு – ஆ மாதவன்
(மலையாள மூலம் – ഇനി ഞാൻ ഉറങ്ങട്ടെ | Ini Njan Urangatte)
பதிப்பு – சாகித்திய அக்காதெமி, முதல் பதிப்பு 2001
NLBயில் இரவல் பெற – In̲i nān̲ ur̲aṅkaṭṭum
கன்னிமாராவில் இரவல் பெற –

 1. இனி நான் உறங்கட்டும் 1
 2. இனி நான் உறங்கட்டும் 2
 3. இனி நான் உறங்கட்டும் 3

wp-1460828161514.jpeg

ஜெயமோகன் இந்த நாவலைப் பற்றி அதிகம் பேசியிருக்கிறார், எழுதியிருக்கிறார். அங் மோ கியோ நூலகத்தில் நிகழ்ந்த வெண்முரசு விவாதத்தின்போது கூட இதைப் பற்றிக் குறிப்பிட்டதாக நியாபகம்.

என்னைக் கவர்ந்தவை என்று சொன்னால் பைரப்பாவின் பருவத்தையும், பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய ‘இனி நான் உறங்கட்டும்’-ம் சொல்லலாம். பருவம் நாவல் ஒரு வரலாற்றுத்தன்மையை உருவாக்கி மிகவும் யதார்த்தமாகக் கதையைச் சொல்லும் படைப்பு. இனி நான் உறங்கட்டும் ஒரு பெரிய ஓலம் அல்லது நினைவுக் கொந்தளிப்பைக் கொடுப்பதாக இருந்தது. வரலாற்றுத்தன்மை குறித்து அந்தப் படைப்பில் கவனமே இல்லை. இரண்டுமே என்னை பாதித்த படைப்புகள். 28 வயதிலேயே முழுமையாக மகாபாரதத்தை என்றாவது எழுதிப்பார்க்க என்னைத் தூண்டிய படைப்புகள் அவை.

ஜெயமோகன் தந்த அறிமுகம்

நூலகத்தின் Reference பகுதியில் இருந்த இந்த நூல், சமீபத்தில் இரவலுக்காக மாற்றி இருக்கிறார்கள். தூக்கிக் கொண்டு வந்துவிட்டேன். ‘இரவு’ நாவலை திருப்பி அளித்த அடுத்த நாளே இந்த நாவலை எடுக்க நினைத்தேன்.  இரவின் தாக்கம் இதை எடுக்க இயலாது செய்துவிட்டது. அப்படியே வைத்துவிட்டு கடந்த வார இறுதியில்தான் எடுக்க முடிந்தது.

இந்த நாவலை ஒரு மிகப்பெரிய ஓலம் என்று சொல்கிறார் ஜெயமோகன். ஒரு சூன்யம். போர் முடிந்தபின் ஏற்படும் சூன்யம். சகோதரர்களுக்கிடையே மூண்ட போர், ஒட்டு மொத்தமாக அனைவரையும் அள்ளிக்கொண்டு போன பின்,  சூன்யம் கவிழ்ந்த அமைதியின் கொந்தளிக்கும் உணர்ச்சி வெளி. பதறுகிறார்கள் ஒவ்வொருவரும்.

இந்த மகாபாரத நாவல், கர்ணனை மையப்படுத்தி எழுதப்பெற்றது. கர்ண வதம் முடிந்த பிறகு நிகழ்பவை காட்சிப் படுத்தப்படுகின்றன. மகாபாரதத்தின் கர்ணன், அனைவரையும் வசீகரிக்கும் ஒரு பாக்கியவான். சக்தி இருந்தும்,  தோற்கிறான். உயர் குலத்தில் பிறந்திருந்தும், சூதனாய் வளர்கிறான். அதர்மம் என பிறகுக்குத் தோன்றினாலும், அதிலும் தர்மம் காண்கிறான். காக்கவேண்டிய அன்னை அவனைக் கைவிடுகிறாள். வெல்ல வேண்டியவன் சாகிறான். இப்படி எல்லாம் இருக்கும்போது, கர்ணன் இலக்கியவாதிகளை அதிகமாக வசீகரிக்கிறான்.

நாவலின் தொடக்கத்தில் துரியோதனனின் மரணம் காட்டப்படுகிறது. அந்தக் காட்சியின் வீரியமானது நம்மை நாவலுக்குள் தள்ளிவிடுகிறது. ஈர்த்துக்கொண்ட இந்த நாவல் கர்ணனின் இறப்புக்குப் பின்னால், உண்மைகள் தெரிந்த யுதிஷ்டிரனின் சகோதர தாபத்தைச் சொல்கிறது. தாங்க முடியாத குற்ற உணர்வால் வாடும் யுதிஷ்டிரனைப் பார்த்து சகோதரர்கள் கோபம் கொண்கிறார்கள். ‘அபிமன்யு சாகிறான். வித்தைகளைக் கற்றுக்கொடுத்த குருக்கள் மடிந்தார்கள். பீஷ்மர் அம்புப் படுக்கையில் வீழ்ந்தார். அப்போதெல்லாம் வருந்தாத நீ, எதிரியான கர்ணனுக்காக ஏன் வருந்துகிறாய்’ என்று கோபிக்கிறார்கள்.

 • கர்ணன் களம் பட்ட கதையையும், அதன் பின் உள்ள நியாய அநியாய வாதங்களையும் நாரதர் யுதிஷ்டிரனுக்குக் கூறுவதாக, எழுத்தாளர் முன் வைக்கும் கூற்றுகள்
 • கர்ணன் – குந்தி சந்திப்பு
 • கர்ணன் – கிருஷ்ணன் சந்திப்பு
 • துகிலுரிதல்
 • துரியோதனனின் கையறு நிலை
 • கர்ணவதம்

ஆகியன இந்த நாவலில் படிப்பவருக்கு மன எழுச்சியை ஏற்படுத்தும். போர் ஓய்ந்த கங்கைக் கரைக் காட்சிகள் கோரமானவை. கொந்தளிப்பானவை.

அழிவின் வேராக குந்தி, அழிவை அமலாக்கும் திரௌபதி

Kunti (c) http://www.starsai.com
Kunti (c) http://www.starsai.com

குந்தியின் அழுத்தமான முகம் நாவல் முழுவதும் வந்து போகிறது. கர்ணன் யுதிஷ்டிரனின் அண்ணன் என்பதால், நீத்தார் கடன் செய்யும்போது கர்ணனுக்குத்தான் முதலில் செய்யவேண்டும் என்று கர்ண பிறப்பின் ரகசியத்தை வெளிக் கொணர்கிறாள் குந்தி. வாசகனுக்கு வரும் பல கேள்விகள் திரௌபதிக்கு எழுகின்றன.

உண்மை, உலகை நோக்கி பிராண பயத்துடன் பாய்ந்து வருவது போல – திரௌபதி படபடப்போடு எழுந்து நின்றவள் குந்தியின் முழங்கால்களில் கைகளைச் சுற்றி, முகம் உயர்த்தி அழலானாள். தனக்க அதீதமாகிய ஒரு வித ஆற்றலின் உந்துதலினால் பரபரத்தவாறு அவள் சொல்வாள்…

“அவன், உன் மகன் என்பதை ஒரு தடவையேனும், ஏன் நீ சொல்லவில்லை தாயே… அவன் உன் மகன்தான் என்பதைக் கூறி இந்த மாபெறும் நாசகாரியத்தைத் தடுத்திருக்கலாமே?”
-திரௌபதி ப129

பாண்டவ-கௌரவர்களின் ஆயுதப் பயிற்சி அரங்கேற்றத்தின்போது, கர்ணனை குலப்பிறப்பை இழிந்து பேசும்போது மயக்கமுற்று விழும் குந்தி, அதையே அர்ஜுனனுக்குச் செய்வாளா என்று வினவுகிறாள் திரௌபதி.

சகோதர தாபத்தால் யுதிஷ்டிரன் நிம்மதி இழந்து காடு ஏகிறேன் என்கிறான். மகனை இறந்த சோகத்தில் தவிக்கிறாள் குந்தி. கர்ணன் கொடுத்த வாழ்வினால் பிற பாண்டவர்கள் மலைத்துப்போய் நிற்கிறார்கள். பாண்டவர்கள் அனைவரும் கர்ணனுக்காக வருந்தும் வேளையில், தீராத வஞ்சத்தை கர்ணன் மேல் வளர்த்து வந்த திரௌபதி தனிமையை உணர்கிறாள். தன் உடன் பிறந்தார்களும், தந்தையும் போரில் மாண்டார்கள். தனக்கென்று ஒரு மனிதரும் இப்போது இல்லை. துச்சாதனன் ஆடைகவர்ந்த போது, சிரித்து மகிழ்ந்த கர்ணனுக்காக இவர்கள் வருந்துகிறார்கள். நான் பட்ட வலிக்கும், வஞ்சத்திற்கும், தூக்கம் தொலைத்த தனது இரவுகளுக்கும் என்ன பொருள் என்று மனம் மயங்குகிறாள்.

“திரௌபதி! வீழ்ச்சியின் கெடுதி நிறைந்த முகூர்த்த வேளை ஒன்றில், ராஜசபையில் – கர்ணனின் முகத்தை நீ காணுகிறாய். நற்பண்புள்ள ஒரு ராஜமகள் சபை நடுவில் – துகில் உரியப்பட்டு அவமானம் கொள்ளும் நேரத்தில் நகைத்து கைதட்டும் நீசன் ஒருவனாக கர்ணனை நீ பார்க்கிறாய். அன்று நீ கண்ட காட்சி சத்தியமானது! ஆனால் அது, உண்மையின் ஒரு துளி மட்டுமே”
கிருஷ்ணன் – ப108

கிருஷ்ணனும், குந்தியும் கர்ணனின் பிறப்பு ரகசியத்தைக் கூறுகின்றனர். தவிப்பாலோ அன்பாலோ அல்ல. ஒரு விதத்தில் நடக்கப்போகும் அழிவுப் போரைத் தவிர்க்கவும், கர்ணனை கௌரவர் குழாமிலிருந்து, பாண்டவர் குழாமிற்கு மாற்றவுமே. விட்டு வந்தால், யுதிஷ்டிரனுக்கு அண்ணனாக, பாண்டவர் சாம்ராஜ்ஜியத்தை ஏற்கவேண்டும் என்று கர்ணனை மனம் மாற்ற முயலும் காட்சிகள் செரிவானவை.

யுதிஷ்டிரன் தூக்கிப் பிடித்திருக்கும் வெண்கொற்றக் குடையின் கீழே, அர்ஜுனன் சவுக்கேந்தி நடத்திடும் ரதத்தில், பீமசேவிதனாய் வீற்றிருக்கும் கர்ணனின் சித்திரம், அந்த முதன்மைப் பாண்டவனின் அருகில் இருக்கும் பாஞ்சால புத்திரியின் சித்திரம்! இதையெல்லாம் நினைவில் அணி சேர்த்திட பயந்த திரௌபதி தானாக தலையை உதறிக் கொண்டாள்.
ப237

(நான் ஒரு ஓவியனாக இல்லாது போய்விட்டேனே என்று வருந்துகிறேன், நண்பர்களே! எனக்கு பாண்டித்தியம் இருந்திருந்தால், அறு பாண்டவர்களுடன் பாஞ்சாலியின் சித்திரத்தை வரைந்திருப்பேன்.)

அதற்கு திரௌபதி விசனம் கொண்டு  தனக்குள் கேள்வி கேட்டுக்கொள்கிறாள். பெண்ணாகிய தனக்கு தர்மநீதி தவறாத கணவர்கள் இழைத்த தவறுகள் குறித்து குமைகிறாள். அஸ்தினபுரி அரண்மனையில் பட்ட அவமானமாகட்டும், வனவாசத்திலாகட்டும், தான் கேவலப்படுத்தப்படும்போது ஒன்றுக்கு ஐந்து கணவர்கள் இருந்தும், அவர்கள் தன்னைப் பனையமாக்கி எந்த தர்மத்தைக் காக்கின்றனர் என்ற நொந்து கொள்கிறாள்.

எல்லாம் விதியென்று தான் சொல்லவேண்டும். எந்த ஒரு நேரத்திலும் தர்ம நீதிக்கு ஊறு ஏற்படும் வழிகளைப் பின்பற்றாத கணவர்கள் உண்மையில் லௌகீக நீதி பிறழாத உலகப் புகழ் ரத்தினமொத்தவர்களே! இருப்பினும், பெண் ஒருத்தி, வெட்கித் தலைகுனிந்திடும் நிலை வந்துவிட்டதல்லவா? ஆணிடமிருந்து பெண் எதிர்பார்க்கும் அன்பு – பெண்மைக்கே உரிய அனைத்து அபிமான உணர்விற்கும் அடிப்படையான அன்பு தனக்கு, தனது ஐந்து கணவர்களிடமிருந்து ஒருபோதும் கிட்டியதில்லை. பிரியங்கொண்டவளைப் பற்றியுள்ள ஆவல் காரணமாக- அன்பு காரணமாக – கணவர்கள் எதையும் ஒரு போதும் மறக்கவில்லை.
-திரௌபதி ப231

Draupati (c) unknown
Draupati (c) unknown

திரௌபதி குழம்பியபடி உதிர்க்கும் கேள்விகள் சாரமான பெண்ணீய பார்வை கொண்டவை.

துச்சானனது பிடியில் அகப்பட்டு, ‘சொல்லுங்கள் நீதிமான்களே – நான் தாஸியா?’ என்று அரண்டு அழுதிடும் திரௌபதியை நிமிர்ந்து பார்த்திடக்கூட சக்தியற்றவராகிய பீஷ்மர், “சுசரிதையாகிய பாஞ்சால புத்ரியே, மெத்த அறிவு கொண்ட யோக்யமானவர்கள் கடைபிடிக்கும் தர்மத்தின் போக்கை நீயே பார்க்கிறாய்… பலசாலியான ஆண்மகன், எதனை தர்மமென காண்கிறானோ, அதுவேதான் உண்மையான தர்மம்! பலவீனர்தர்மம் பற்றி சொன்னபல் அது அதர்மமாகவே பாவிக்கப்பெறும்! ஏனென்றால் இந்த வம்சத்தின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது!”
ப91

அவளுக்குப் பீஷ்மர் சொல்லும் பதில் சூடானது. ‘நீ கேட்பது நியாயம்தான். ஆனால் அதற்குப் பதில் சொல்லவேண்டியவன் யுதிஷ்டிரனே’ என்கிறார்.

Draupati (c) http://devdutt.com
Draupati (c) http://devdutt.com

பாண்டவர்களைக் கேள்வி கேட்கிறாள், கர்ண வதத்தை வஞ்சம் தீர்ப்பாக உணர்கிறாள். குந்தியின் அழுத்தமான முகத்தைக் கேட்கிறாள். கௌரவர்களைப் பார்த்துக் கேட்கிறாள்.  இறுதியில் போரில் வென்றாலும், யாருமே தனக்கு ஆதரவில்லை, இதையா நான் விரும்பினேன் என்று மனம் மயங்குகிறாள்.

ஒரு தாயாக, தன் குழந்தைகளிடம் ஆதரவாக நடந்து கொள்ளமுடியாமல் செய்துவிட்டது இந்த வஞ்சம் என்று வருந்துகிறாள் திரௌபதி. உணர்வுக் கொந்தளிப்பான பக்கங்கள் அவை. காந்தாரியை முன் வைத்து, ஒரு தாயாக, தன் தவறினை உணர்ந்து புலம்புகிறாள்.

கிருஷ்ண-கர்ண சந்திப்பு

பாண்டவர்களின் தூதனாக கிருஷ்ணன் அஸ்தினபுரி வருகிறான். போரைத் தவிர்க்க இயலாது வெறுங்கையுடன் திரும்புகிறான். திரும்புவதற்கு முன்னர் கர்ணனைச் சந்தித்து, அவனது பிறப்பின் ரகசியத்தை வெளிப்படுத்துகிறான். பாண்டவர்கள் பக்கம் சேர்ந்து, பாஞ்சாலி சமேதராக நாடாள அழைக்கிறான்.

Krishna and Karna - www.wikiwand.com
Krishna and Karna – http://www.wikiwand.com

உறுதியாக மறுக்கிறான் கர்ணன். மீண்டும் மீண்டும் அஸ்தினபுரியின் ஆயுதப் பயிற்சி அரங்கேற்றத்தில் தன் மானம் காத்த துரியோதனைத் திரும்பத் திரும்ப நினைவு கூர்கிறான் கர்ணன். தன், வளர்ப்புத் தாய் ராதையைப் பற்றி கர்ணன் நினைத்துப் பார்க்கும் இடங்கள் நெகிழ்வை ஏற்படுத்துபவை. தோல்வியுடனும் வருத்தத்துடனும் திரும்புகிறான் கிருஷ்ணன்.

“பூமிக்கு சர்வநாசம் நெருங்கிவிட்டதென்பது நிச்சயமாகிவிட்டது. நான் மனமுவந்து உனக்குத்தர எண்ணிய ராஜ்ஜியத்தை உன்னால் ஏற்க முடியாத காரணத்தால், சர்வசம்ஹாரமிக்க போர், பூஉலகை தழுவப்போகிறது. கர்ணா உனக்கு நன்மைகள் வருவதாக…!”

கர்ணன், கிருஷ்ணனருகில் வினயத்துடன் எழுந்து நின்று, விடைபெறும் முகத்தான் பேசலானான்:

“கிருஷ்ணா, க்ஷத்திரியகுலம் மடிந்து நாசம் கொள்ளம் இந்த மாபெரும் அவலம் நீங்கப்பெற்று – உன்னை உயிருடன் காணும் நிலை நேருமென்றே நினைக்கின்றேன். அவ்வாறு நேருமாயின் நட்பு கொண்ட நெஞ்சமுடன் மீண்டும் சந்திப்போம். அல்லது சொர்க்கத்தில் நாம் கண்டடைவோம்”
ப122

குந்தி – கர்ண சந்திப்பு

கர்ணன் மதியவேளையில் சூரிய வணக்கம் செய்து, தர்மம் வழங்கும் வேளையில் குந்தி கர்ணனைச் சந்திக்கிறாள். கிருஷ்ணன் கூறிய அதே செய்திகளைக் கூறுகிறாள். மூத்த பாண்டவனாக, பாண்டவர் பக்கம் வரும்படி அழைப்பு விடுக்கிறாள்.

“சந்தனக்கட்டைகள் அடுக்கிய சிதையைக் காட்டி பிணங்களை ஆசை காட்டிடும் வீண்வேலை… அர்த்தமற்றதும் கொடூரமானதுமான வீண் உடற்பயிற்சி! விரைவில் நாமிந்த காட்சியை முடித்துக் கொள்வோம்… எந்த லட்சியம் கருதி நீ இங்கு வந்தாய் – என்பதைச் சொல். இனி நான் மேற்கொள்ள வேண்டிய செயல் என்னவென்பதையும் கூறிவிடு. அச்செயல் என்ன ஆயினும் நானதற்குப் பணிவேன் என்பதை நிச்சயமாக நம்பிக்கொண்டு, சொல்லவேண்டியதை விரைவில் சொல்லி முடித்துவிடு”
-கர்ணன் ப136

கர்ணன் வருத்தத்துடன் கோபத்தை அடக்கிக்கொண்டு அவளுடன் உரையாடும் காட்சிகளைக் காட்டியிருக்கிறது இந்த நாவல். ‘உனக்கு அர்ஜுனனுடன் போரிடவேண்டும் என்பது சரி. ஆனால் பிற பாண்டவர்களுக்கு உயிர் பிச்சை கொடு’ என்று கேட்கும் தருணம், ஏற்கனவே கதைகள் மூலம் அறிந்திருந்தாலும், வியக்க வைக்கிறது.

கர்ண – பீஷ்மர் சந்திப்பு

Bhishma at Kurukshetra (c) hindutva.info
Bhishma at Kurukshetra (c) hindutva.info

தொடர்ந்து கர்ணனை தூற்றியும், பழித்தும் பேசி வருகிறார் பீஷ்மர். அரசவையின், பலபேர் முன்னிலையில் இத்தகு அவமானங்களையும் பொறுத்துக்கொண்டவன், பீஷ்மர் இருக்கும் வரை, நான் போரில் இறங்கமாட்டேன், படை நடத்தமாட்டேன் என்று விலகி நிற்கிறான். 10ஆம் நாள், சரப் படுக்கையில் வீழ்ந்து கிடக்கும் பீஷ்மரை சந்திக்கும் கர்ணன் காட்சிகள் அழுத்தமானவை.

“தேவவிரதரே, உமது தூற்றல் மொழி கேட்டிட வந்தவன் நான்… உமது சாப மொழிகளைக் வாழ்க்கைப் பேறாக ஏற்றுக்கொள்ள நான் உம் முன் வந்தேன். சகிக்கவொண்ணா நெருப்பு தந்த வெக்கைப் பிரவாகம் மட்டுந்தான் என் வாழ்க்கையாக இருந்தது. எனது பிறப்பின் ரகசியத்தை முன்னதாகவே தெரிவித்திடாதது மூலம், என்னிடம் தயையின்றி நடந்து கொண்டதாக- மகாத்மாவாகிய தாங்கள் – வீணாக கவலைப் படுகிறீர்கள்… எனது ஜனன ரகசியம் நான் அறிவேன்.”
ப185

இந்தப் பின்புலத்தில் ஜெயமோகன் எழுதிய நாடகம் இங்கே உள்ளது. வடக்குமுகம் [நாடகம்] – 5

துரியோதன கையறு நிலை, கர்ணவதம்

குருக்ஷேத்திரக் காட்சிகள் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. தர்ம நியாய விசாரங்கள் முடிந்து போர் தொடங்கும் பக்கங்கள் முழுவதும் ரத்த ஆறு ஓடுகிறது. அதற்குள் சகோதரர்கள் இறந்திருக்கிறார்கள்.

wp-1460828166276.jpeg

அபிமன்யுவை ஏத்தும் நமது எழுத்தாளர்கள் விருக்ஷசேனனை ஏனோ விட்டுவிடுகின்றனர்.

காண்டீபத்தின் நாணொலி முழக்கிய அர்ஜுனன் கர்ண புத்திரனிடம் சொல்வான். “விருக்ஷசேனா நன்றாக இருக்கிறது உனது அசுர வித்தைகள். ஆனால் சற்று வரம்புமீறிவிட்டது பாலகனே… சரி, அதையெல்லாம் என்னிடம் காட்டிடு. நானும் பார்க்கிறேன்?”
ப 256

கௌரவ நூற்றுவர்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். துச்சாதனனின் வயிற்றைக் கிழித்து, குடலை மாலையாகப் போட்டு, நர வேட்டை ஆடுகிறான் பீமன். இந்த துர்மரணம் கண்டு, மன உறுதி இழந்து போகிறான் துரியோதனன். தன் தவறையும், இனி எதையுமே மாற்ற முடியாது என்பதையும் உணர்ந்த துரியோதனனின் பின்வரும் கூற்றினை வாசிக்கையில் நாம் நெகிழ்ந்து போகிறோம்.

“பாண்டவருடன் இணைந்ததான ஒரு வாழ்க்கை, இனி சுயோதனனுக்கில்லை. துச்சாதனனின் ரத்தக் கொலையை, எவ்வாறு நான் மறப்பேன்? பீமன் கொன்றொடுக்கிய, எனது தம்பியரது நிணம் – எவ்வாறு என்னால் மறக்க முடியும்? உடன் பிறந்தாரையெல்லாம் சாவூர் அனுப்பிட்ட இந்த நான், பாண்டவரோடு ஒன்றுபட்டு எந்த நாட்டை ஆண்டிடவேண்டும்? அவர்களுக்கு நான் இழைத்த துரோகச் செயல்களை அவர்களும் மறந்திடார். எம்மவர் இருவர்க்கும் ஒன்றாக இனி இப்புவிமேல் இடமில்லை. குருபுத்திரனே, என் மனம் வேதனை கொள்கிறது. அன்பு நிமித்தம் இனியும் பலகூறி என்னை வேதனை கொள்ளச் செய்திடவேண்டாம்”

துக்கம் மிகக் கொண்ட அஸ்வத்தாமன், “எல்லாம் விதி” என்றவாறு தலைகுனிந்து பின் திரும்பினான்.
ப259

போரில் வெறிஆட்டம் போடுகிறான் கர்ணன். ஆனால் அர்ஜுனன் தவிர்த்த பாண்டவர்களைக் கொல்லும் தருணம் வந்தும், கொல்லாது விட்டு விடுகிறான், தாய் குந்தி கேட்ட வரத்தின் படி. பீமன் ஒளிந்து ஓடும் காட்சி அருமையாகப் புனையப்பட்டுள்ளது.

Bhima lost to Karna at Kurukshetra (c) http://kanigas.com
Bhima lost to Karna at Kurukshetra (c) http://kanigas.com

சல்யர் கர்ணனுக்குத் தேரோட்டுவதும், குழி பறிப்பதும் விவரிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், கர்ண வத நாளின் பிற்பகுதியின் கர்ணனுக்கு உரிய உபதேசங்களை அளிக்கிறார். பாவம், அந்த புதைந்த தேர் சக்கரத்தை சல்யர் எடுத்துவிட்டு இருக்கக் கூடாதோ?

“கர்ணா, சிரசினை குறிவைத்து அந்த அஸ்திரம் நீ தொடுக்காதே. குறி தவறிவிடும்…” அதற்குக் கர்ணன் சொல்வான்: “மத்ரேசா உனது கூற்றின் பொருள் எனக்குப் புரிகிறது. ஆனால் லட்சியம் குறிவைத்து தொடுத்திட்ட சரம் தனை மாற்றி தொடுப்பது தர்ம நீதிக்கு உகந்ததல்ல. தொடுத்த அம்பினை கர்ணன் திருப்பி வைப்பதில்லை என்பதை நீ அறியவும்…”

“அர்ஜுனா செத்தாய் நீ…” என உரக்கக் கூவியவாறு கர்ணன் நாகாஸ்திரத்தை இழுத்து விடலானான்.
ப264

கர்ண வதம் (c) Wikimedia
கர்ண வதம் (c) Wikimedia

தீ்ர்ந்த வஞ்சம்

ini njan urangatte

தர்மவான் கர்ணன்.  மூத்த பாண்டவன் கர்ணன். நட்புக்கு இலக்கணம் கர்ணன். ஆனால், சில தவறுகள் செய்கிறான். செய்யப்பட்ட நிமித்தங்கள் காரணமாக, திரொளபதி அவன் மீது தீராத வஞ்சம் கொள்கிறாள். அவளும் அவனை ஓரிடத்தில் பிறப்பைக் காரணம் காட்டி, மணக்க மறுக்கிறாள். ஆக, இது இருபுறம் கொழுந்துவிட்டெரிந்த வஞ்சம். இரு தீயை மறு தீ எரித்து அழித்தது.

எல்லோரும் கர்ணனுக்காக வருந்தும் போது, பாண்டவர் அகம்படி செய்ய, கர்ணன் அரியணை அமர்ந்திருப்பதும், பக்கத்தில் தான் அமர்ந்திருப்பதையும் காட்சிப் படுத்திக்கொள்ளும் திரௌபதியின் மனநிலைக் கொந்தளிப்பு இன்னொன்றையும் நடிக்க முயல்கிறது. அவ்வளவு பேர் இறந்து பட்ட போர்வெளி, விதவைகளின் கூடாரமாகியிருக்கிறது. பல விதவைகள், தன் கணவர்களுக்காக சாந்திகள் செய்கிறார்கள். தானும் அந்த விதவைக் கூட்டத்தில் ஒருத்தியோ என்று ஓரிடத்தில் நினைக்கிறாள் அவள். ஒரு நிமிடம் நான் திடுக்கிட்டுவிட்டேன்.

தீர்ந்த வஞ்சத்துடன், தீராத உணர்வுகளுடனும் அவள் உறங்கப்போகட்டும். நாம் இன்னொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

Last but not least, ஆ மாதவனின் மொழிபெயர்ப்பு தரமானது. ஒரு இதிகாச சுவையைத் தருகிறது. Punctuations முதற்கொண்டு, எல்லாவற்றிலும் கவனம் எடுத்திருக்கிறார்.

வெல்க பாரதம்.

இரவு | ஜெயமோகன்


“மிஸ்டர் சரவணன், நிங்ஙள் இந்த கேங்கிலே சேர்ந்நு எத்ர நாளாயி?” என்றார். நான் ஆச்சரியத்துடன் ”ரெண்டுநாள்தான்” என்றேன். ”விட்டுட்டு ஓடிக்கோ…இதிலே இரிக்காதே…திஸ் இஸ் எ வெரி டேஞ்சரஸ் கேம்” என்றார் உதயபானு. நான் அச்சத்துடன் அவரது மீசையில்லாத நீள முகத்தையே பார்த்தேன். தீவிரத்தால் வெறித்த கண்களுடன் ”நீ நசிச்சு போகும்…ஜீவிதம் நாசமாகிப்போகும்..ரெக்ஷப்பெட்டோ…ஓடிக்கோ” என்றார் உதயபானு

இரவு 6

இரவு – ஜெயமோகன்
பதிப்பு – தமிழினி, இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2011
இணையத்தில் வாசிக்க –  இரவு – 1
NLBயில் முன்பதிவு செய்ய – http://www.nlb.gov.sg/newarrivals/item_holding.aspx?bid=200127887
கன்னிமாராவில் முன்பதிவு செய்ய – தளம் வேலை செய்யவில்லை.

iravu jeyamohan front cover

240 பக்கத்தில் அமைந்த ஒரு பதைக்க வைக்கும் மிகுபுனைவு (தமிழில் fantasy 🙂 ) வகை நாவல்.

நாவலை இதுவரை படிக்கவில்லை என்றால் என்னுடைய இந்தப் பதிவை வாசிப்பதை விடுங்கள். ஏனென்றால் இது உங்கள் வாசிப்பின் சுவாரசியத்தைக் குறைக்கலாம். நாவலை வாசிக்க மேலே சுட்டி தரப்பட்டுள்ளது. கடந்த முறை சென்னை செல்லும்போது, பகல் பிரயாணம் என்பதால், முன்னரே நூலகத்தில் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டேன்.  ஆனாலும், தடைகளின் காரணமாக, இரவலைத் திருப்பியளிக்கும் கடைசி நாள் வரை நீடித்துவிட்டது.

இரவு வாழ்க்கை என்பது தகுந்தது – யோகத்திற்கும் போகத்திற்கும். ஆனால் அதன் உண்மையான வீரியத்தை நம்மால் எதிர்கொள்ள இயலுமா என்று கேட்கிறது இந்த நாவல். சட்டங்களுக்கும் ஒழுங்குகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பது பகல் பொழுது. இரவு என்கிற கட்டட்ற வேளையின் பிரம்மாண்ட வலிமையை, அதன் குண்டூசிமுனையை சூடுபடுத்தி, கண்ணுக்குள் செலுத்துவது போல விவரிக்கிறது.

நாயகன் சரவணன் பணி நிமித்தம் கேரளா போகிறான். அங்கே இரவில் மட்டும் விழித்து, பகலில் உறங்கும் வயதான மேனன்-கமலா தம்பதியினரைச் சந்திக்கிறான். மேனன் உற்சாகமாகப் பேசுகிறார்.  கலையான முகம் கொண்ட மேனனின் மனைவியும், கண்மூடித்தனமாக இரவுப் பொழுதை அனுபவிக்கும் மேனனும் சரவணனை ரொம்பவே பாதிக்கிறார்கள். தானும் அறியாது, இரவுச் சமூகத்தில் கலக்கிறான் சரவணன்.

“நாக்டிரனல்னா தமிழிலே என்ன?” ”இரவுலாவி” என்றேன். ”குட்..தமிழிலே எல்லாத்துக்கும் வார்த்தை இருக்கு கமலம்…ஸீ..மலையாளத்திலே நமக்கு எதுக்கும் நல்ல வார்த்தை கிடையாது. ஒண்ணு அப்டியே இங்கிலிஷ். இல்லாட்டி அசிங்கமா சம்ஸ்கிருதம். என்ன அது,  நிஸாசஞ்சாரி. மை ·பூட்”

மேனன் – இரவு 3

மேனனின் மூலம், நாயர் மற்றும் அவரது மகள் நீலிமா, சாக்த சாமியார் பிரசண்டானந்தா, ஃபாதர் ஜோசப் என்று நிறைய பேரைச் சந்திக்கிறார்.

பிரசண்டானந்தா சொல்லும் படிமங்களை ரசிக்கும் மேனனுக்கு, அவரது யோக கலைகளில் ஆர்வமிருக்கவில்லை. ஆனால் கமலாவிற்கு அதில் ஆர்வம் உள்ளது என்று மேனன் சொல்லும்போது மெலிதாக நான் சந்தேகம் கொண்டேன். அது பின்னால் அவிழ்க்கப்படும் முடிச்சு.

“மிஸ்டர் சரவணன், நிங்ஙள் இந்த கேங்கிலே சேர்ந்நு எத்ர நாளாயி?” என்றார். நான் ஆச்சரியத்துடன் ”ரெண்டுநாள்தான்” என்றேன். ”விட்டுட்டு ஓடிக்கோ…இதிலே இரிக்காதே…திஸ் இஸ் எ வெரி டேஞ்சரஸ் கேம்” என்றார் உதயபானு. நான் அச்சத்துடன் அவரது மீசையில்லாத நீள முகத்தையே பார்த்தேன். தீவிரத்தால் வெறித்த கண்களுடன் ”நீ நசிச்சு போகும்…ஜீவிதம் நாசமாகிப்போகும்..ரெக்ஷப்பெட்டோ…ஓடிக்கோ” என்றார் உதயபானு

இரவு 6

இந்த சாக்த சாம்ராஜ்ஜியங்கள் பற்றி எனக்கு விரிவாகத் தெரியாது. ஆனால் மேலோட்டமாக அறிந்திருக்கிறேன். இந்து மதப் பிரிவுகளில் சில குழுக்கள் செய்த தவறுகள் காரணமாக மீடியாக்களில் அடிபட்டபோது மேலோட்டமாக அறிந்தேன். பிரசண்டானந்தா மூலம் ஒரு பெரிய நிகழ்வைக் காட்டுகிறார் ஜெயமோகன். எனக்கு ஒரு நிமிடம் சிலிர்த்துவிட்டது.

அந்த பிரசண்டானந்தா குழுவில் இருக்கிறார் முகர்ஜி. யக்ஷி படங்களை வரிசையாக வரைகிறார்.

நான் கைகழுவும்போது ”ஊணு மோசமா?” என்று அவள் பின்னாலிருந்து கேட்டாள். ”நல்லா இருந்தது…எனக்கு பசியில்லை” என்றேன். அவள் சில நிமிடங்கள் தயங்கிவிட்டு ”…அந்த மேனன் விட்டுக்கு போனா…அவங்க யட்சி உபாசனை உள்ள ஆட்களாக்கும். அங்க போனா அவங்க மாயம் வச்சு பிடிச்சுடுவாங்க. பின்ன அதிலே இருந்து தப்ப முடியாது” என்றாள். நான் ”இல்லல்ல நான் சும்மாதான் போனேன்” என்றேன். ”போன வருஷம் ஒரு தோணிக்கார பையன் அவங்க வீட்டுக்கு அடிக்கடி போயிட்டிருந்தான். பின்ன அவனுக்கு கிறுக்காயிபோச்சு. இப்பம் அவன் கிறுக்கா அலையுறான்னு கேட்டிட்டுண்டு.” என்றாள். என் முகம் மாறியதை தடுக்க முயன்று வேறுபக்கம் பார்த்தேன்.

பங்கஜம் இரவு – 9

மேனனின் மனைவி கமலா அப்படிப்பட்ட ஒரு வசீகரியாக வலம் வருகிறார். தோற்றம் மட்டுமல்ல, பழக்கத்தில், பேச்சின் கூர்மையில் (ஒரு நொடிப்பொழுதில் நீலிமா மீதான சரவணனின் ஈர்ப்பை அறிகிறார்), சிரிப்பில், சமையலில். கமலாவை வயதான யக்ஷி என்கிறார் முகர்ஜி. முகர்ஜியைச்  சந்தித்ததாக நீலிமாவிடம் கூறுகிறான் சரவணன், அதை அவள் ரசிக்கவில்லை.  மற்றொரு வசீகரியான நீலிமாவிற்குத் தெரிந்துள்ளது கமலா மீதான முகர்ஜியின் ஆர்வம்! இதை நூல் பிடித்துக்கொண்டே வந்து கொலைக்குப் பிறகான முகர்ஜியின் நிலையழிவைப் பாருங்கள். கமலாவைக் கொன்ற பிறகு, தான் வரைந்த யக்ஷி ஓவியங்களைக் கிழித்துப்போடுகிறார். ஆக, கமலா கொலை என்பது, மதத்திற்காகவோ, இரவு வாழ்க்கைக்காகவோ, ஒழுக்கத்தின்பொருட்டோ நடந்ததல்ல. தெளிவாக இரவு வாழ்க்கையை அறிந்த, பிறரின் நிர்வாணத்தைத் தெளிவாக அறிந்து உணர்ச்சி மட்டுப்போன, ஒரு கலைஞன் தன் பெண்ணாசையின் பொருட்டு நிகழ்த்திய ஒரு வஞ்சம்.

பிரசண்டானந்தாவுடனான கமலாவின் உறவிற்கு இருவர் எப்படி எதிர் வினையாற்றுகிறார்கள் என்று ஆர்வமுடன் நினைத்துப் பார்க்கிறேன். முகர்ஜி கொலை செய்யும் அளவிற்குப் போகிறார். மேனன் கமலாவை வெறுக்காவிட்டாலும், தன் மனைவியின் நடத்தைப் பிறழ்வுக்குக் காரணமான இரவுக் சமூகத்தை விட்டே ஓடிவிடுகிறார். மேனன் கமலாவின் அஸ்தியைப் பெற்ற பிறகு, கதறும் இடத்தில் கலங்கிவிட்டேன்.

நாவலின் உச்சமான தருணங்களில் கமலாவின் கொலையும் ஒன்று. பகலில் இல்லையா துரோகங்கள், சீரழிவுகள். அவற்றை ஒழுக்கம், நடத்தை என்று தடைக் கயிறு கட்டி வைத்துள்ளது சமூகம். இரவுகளில் அந்த சக்திகள் தன் முழு சக்தியைக் காட்டி பீரிட்டு வருகையில் அதன் விசையை ஒரு மனிதரால் தாங்க இயலுமா? முடியாது என்றே என் வலிமையற்ற மனம் சொல்கிறது.

iravu jeyamohan back cover

நீலிமா மது அருந்தி தன் மனதின் வஞ்சத்தைக் காட்டும் தருணம் நாவலின் இன்னாரு உச்சம்.

“என்ன பண்ணப்போறே? பகலிலே ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கலாமா? பட் யூ ஹேவ் டு ·பக் ஹர் இன் த நைட்… அதுக்கு அப்றம் அவ தூங்காம இருட்டை பாத்துட்டு கிடப்பா. அப்ப அவளோட ஆழத்திலே இருந்து விஷம் திகட்டி வந்து நாக்குல் முழுக்க கசக்கும். அப்ப நீ அவளைத் தொட்டா ராஜநாகம் கடிச்சது மாதிரி ஒரு சொல்லால உன்னைக் கொன்னிருவா…. யூ நோ எல்லா பெண்ணும் யட்சிதான்… யூ ஸில்லி ரொமாண்டிக் ஃபூல்…யூ..”

நீலிமா இரவு – 13

‘நானே ஒரு யக்ஷிதான்’ என்கிறாள் நீலிமா. கமலா நெய்விளக்கில் எழுகிறார் என்றால், நீலிமா அப்பட்டமான காட்டுத்தீயில் எழுகிறாள். நீலிமாவின் கழுத்துப் பகுதியிலே மயங்கிக் கிடக்கும் சரவணனுக்கு, அதுமட்டுமே நான் அல்ல என்று அப்பட்டமாகக் காட்டுகிறாள். ‘அவள் அப்படித்தான்’ படத்தின் ஸ்ரீப்ரியாதான் நினைவிற்கு வந்தார். `உண்மை என்பதைப் புதைத்து வைக்கமுடியாது. எவ்வளவு ஆழத்தில் புதைத்து வைத்தாலும்  பீறிட்டு மேலே வரும்’ என்கிறார் நம் நாட்டின் பெரியவர் ஒருவர். எனவேதான் நம் உண்மைகள் காவிய ரச சுவையுடன் வருகின்றன நாவலின் இறுதி பாகத்தில் வருகிறது.

எனக்கு இது வேண்டும் என்பது உண்மைதான். அதற்காக வேஷம் போட முடியுமா என்று நீலிமா உணர்த்துகிற கட்டத்தில், ஒரு கடுப்பான கஷாயத்தை விழுங்கியது போல் உணர்ந்தேன். அவள் பேசுவது ஒன்றும் தப்பில்லையே. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு சரவணனுக்கோ (படிக்கிற நமக்கோ) ‘திராணி’ இருக்கிறதா என்பதுதான் முக்கியம். நிலவில்லாத வின்மீண்கள் செறிந்த வானில், நீலிமாவும் சரவணனும் இன்பம் துய்க்கும் கணம், ஒரு ரசிக்கக் கூடிய ஒரு கனவு. அந்த வேளை முடிந்த பிறகு, சிந்தனைக்குள் அமிழும் சரவணணைப் பார்த்தபொழுது, ஒரே யக்ஷியால் மீண்டும் மீண்டும்  சப்பிப்போடப்படும் ஒருவனாகத்தான் இருக்கப்போகிறானோ என்று மனம் பதறுகிறது. நாவலின் இறுதியில் வாசகரைப் போன்றே மேனனும் பதறுகிறார்.

“எனக்கு அந்தரங்கமாக ஒரு விஷயம் தெரியும். நீ கமலாவால் தீவிரமாக கவரப்பட்டிருந்தாய். அவள் அப்படித்தான். நெருப்பு போல. அவளை விட்டு யாரும் கண்களை எடுக்க முடியாது. நீலிமா கமலாவின் ஒரு சிறிய மாற்றுவடிவம்தான் உனக்கு”

மேனன் இரவு – 23

எப்படியோ, ஒன்று சேர்கிறார்கள் சரவணனும் நீலிமாவும். கமலாவை இழந்த விரக்தியில் இரவு வாழ்க்கையை விட்டு வெளியேறிய மேனன், இரவு வாழ்க்கையைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார் என்கிறான் சரவணன். அவனது மனஉறுதியின் மீது எனக்கு சந்தேகம் வருகிறது. 35 ஆண்டுகள் வாழ்ந்த மேனனுக்கே கமலா அளித்த அதிர்ச்சயை, நீலிமா இவனுக்குத் தரமாட்டாளா? அப்படிப்பட்ட வீரியமான தாக்குதல் சரவனனுக்கு இல்லாமல் போகுமா என்ன? இது நீலிமா மீதான நடத்தையின் ஒரு ஆணாக என் சந்தேகம். ஆனால் இந்தப் பதிவை எழுதுகிறபோது ஒன்றை நான் அறிகிறேன். கமலா ஒரு வேடம் பூணுகிறாள். இரவுவாழ்க்கை என்கிற பெயரில் பிரசண்டானந்தா, முகர்ஜி என்று தன் வாழ்க்கையில் அவள் அனுமதிக்கிற சுரண்டல் ஆண்களை விட்டு, தெளிவாக வெளியே நிற்கிறாள் நீலிமா. அந்த வகையில் எனக்கு அளவு கடந்த திருப்தி ஏற்படுகிறது. இதுவும் பகல் சார்ந்த, ஒழுக்கம் விதிகள் பூசப்பட்ட ஒரு ஆணின் திருப்திதான் என்றாலும், ஒரு வேலை அப்படி நீலிமா இருக்க இயலாதென்றால் அது தவறு என்று வாதிட நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

வெல்க பாரதம்!

 

 

புஷ்பாஞ்சலி | யத்தனபூடி சுலோசனாராணி


“யாரிடமாவது வெறுமே பெற்றுக் கொண்டால்தான் தவறு. திருடினால் குற்றம். அநியாயமாக சம்பாதித்தால் பாவம். பணம் சம்பாதிப்பதற்காக நம் குணத்தை இழந்தால்தான் நாம் வெட்கப் படணுமே தவிர உழைத்துப் பிழைப்பதால் நாம் யாருக்குமே தலை வணங்கத் தேவையில்லை என்பாள் எங்க அக்கா”
-வாசு

புஷ்பாஞ்சலி – திருமதி யத்தனபூடி சுலோசனாராணி

எங்க பேட்டை நூலகத்தை மூடிவிட்டார்கள். 4 மாதம் ஆச்சு. பக்கத்து வட்டார நூலகத்தில் சில வாரங்கள் முந்தி சுற்றிக் கொண்டிருந்த பொழுது, புதிய வரவுகள் தட்டில் கிடைத்தது. பக்கத்திலேயே, புஷ்பாஞ்சலி கிடைத்தது. அனேகமாக, இரண்டு நாவலுக்குமே நான்தான் முதல் வாசகன் என்று நினைக்கிறேன். புத்தம் புது காகித மணம்.

wp-1458563111475.jpeg

240 பக்கங்களில் எளிதான தொடர்கதை டைப் நாவல். கடகடவென பக்கங்கள் ஓடிவிடுகின்றன.

கதைச்சுருக்கம் படிப்பவர்கள் கீழே படித்துக் கொள்ளலாம்.

புஷ்பாஞ்சலி
புஷ்பாஞ்சலி

யத்தனபூடியின் இந்த நாவலிலும், திருப்பங்கள், நாடகத்தனமாகவே இருக்கின்றன. எதேச்சையாகத் தெருவில் பார்த்தவள் திடீரென ரயிலில் வருகிறாள். பணக்காரப் பெண் திடீரென ஏழையாகிக் கந்தல் கட்டுகிறாள். மாதவனின் முறைப் பெண்ணின் கணவன் திடீரென சந்தியாவின் வகுப்புத் தோழன் ஆகிறான். இப்படி நிறைய திடீரென!… சரி போகட்டும்.

Vijethaசுதாவின் மீதான மாதவனின் குற்றச்சாட்டுடன் தொடங்குகிறது கதை. காதலித்த பெண், காதலித்தவன் செத்துப் போனான் என்று தெரிந்த பின் பின் மனது மாறுவது பாவமா என்ன? அவன் சாகாமல் திரும்பி வரும்போது, அடுத்தவரின் மனைவியாக இருந்துகொண்டு கையைப் பிடித்து ‘அய்யோ அத்தான்’ என்று கதறத்தான் முடியுமா? மாதவன் வழி இந்த கதை சொல்லப் படுகிறது. அவன் அவனுக்குள்ளயே வாழ்கிறான். அவனே என்னென்னவோ நினைத்துக்கொண்டு செய்கிறான். அது என்னென்னவோ சிக்கலை உண்டாக்குகிறது.

குழந்தை விபரத்தை நேரடியாக சொல்லாமல், ஒரு கடிதத்தில் எழுதி, அதை இரும்புப் பொட்டியில் போட்டுவிட்டு, தன் அறைப் பக்கம் புழங்காத சந்தியா அதை எடுத்துப் பார்க்கவேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது எல்லாம் என்று மாதவனின் தடுமாற்றம் எனக்கு அவன் மீது அதிருப்தியை உண்டாக்கியது.

ஒன்று நினைக்கிறேன். ஒரு பார்வையில் – யத்தனபூடியின் இந்த மாதவனும், ஜெயகாந்தனின் பிரபுவும் (பார்க்க ) ஒரு தன்மையைக் கொண்டவர்களே. ஆனால் மாதவனிடம் இல்லாத பக்குவம் பிரபுவிடம் உள்ளது. இத்தணைக்கும் மாதவன் நல்லவன். பிரபு ஒரு பணக்காரப் ‘பொறுக்கி’. அவனா இவனா என்று வரும்போது மாதவனை ஏறி மிதித்து நம்மை வாழ்க்கையைக் காட்டுபவன் பிரபுதான். இருவரிடமும் குழப்பங்கள் உள்ளன. ஆனால், மாதவனிடம் சிறுபிள்ளைத்தனம் அதிகம். சுயவதையும் அதிகம்.

ஒரு ஆணின் உணர்ச்சிகளை மையமாகக் கொண்ட நாவல். எளிமையான வாசிப்புக்கு உகந்த நூல். (மதியம் ஆந்திரா மீல்சை முடித்துவிட்டு, சாயங்கால காபிப் பொழுது வருவதற்குள் முடிந்துவிட்டது). அதற்கு முக்கிய காரணம் இதன் மொழிபெயர்ப்பு. சொப்பன சுந்தரியும் சரி, புஷ்பாஞ்சலியும் சரி, கடகட வென படிக்க வைக்கிறது கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்பு.

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

வளர்க பாரதம்.

 

ஆலாஹாவின் பெண் மக்கள் | சாரா ஜோசஃப்


“கஞ்சி அண்டா என்ன ஓடியா போயிடும்? வெறி புடிச்ச மூதேவி” என்றாள் மார்த்தா டீச்சர்.

“பசி வெறி, இதுங்க ஜென்ப சுபாவம்!” அம்மிணியம்மா டீச்சர் சொன்னாள்.

பின்னர் அவர்களிருவரும் குரோதத்துடன் ஆன்னியை வெறித்தார்கள்.

“கையை சுத்தமா கழுவிக்க மார்த்தா, கோக்காஞ்சறவுலேர்ந்து வர்ற பிசாசுகள்” அம்மிணியம்மா டீச்சர் உபதேசித்தாள்.

ஆலாஹாவின் பெண் மக்கள் – சாரா ஜோசஃப்
தமிழ் மொழி மாற்றம் – நிர்மால்யா (மூலம் – மலையாளம் – ആലാഹയുടെ പെണ്മക്കള്‍)
பதிப்பு – சாகித்திய அகாதெமி, முதல் பதிப்பு 2009
NLB முன்பதிவு – Ālāhāvin̲ peṇ makkaḷ / Malaiyāḷa mūlam, Cārā Jōcak̲ap ; Tamil̲il, Nirmālyā.ஆலாஹாவின் பெண் மக்கள் / மலையாள மூலம், சாரா ஜோசஃப் ; தமிழில், நிர்மால்யா.
கன்னிமாரா  முன்பதிவு – ஆலாஹாவின் பெண் மக்கள்
சாரா ஜோசப் – விக்கி சகிப்பின்மை குறைந்து போய்விட்டது இண்டெலக்சுவல் அரசியல் செய்தவர்களில் ஒருவர் 🙂
விரிவான கதைச் சுருக்கம் – நிதர்சனம் நாளை!கனவுகள் பொசுங்கிய உலகம்

உலகின் எந்த ஒரு சமூகத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. இரண்டுக்குமான வித்தியாசங்கள் அதிகரிக்கும்போதுதான் கொலை, கொள்ளை அதிகமாகிறது. பணம் போஷித்த தனவந்தர்கள் ஒரு பக்கம். விளிம்புநிலை மனிதர்கள் மறு புறம். திருச்சூர் நகரத்தின் விளிம்பு நிலை மனிதர்களின் காபந்து பூமியான கோக்காஞ்சறவைப் பின்னணியாகக் கொண்ட நாவல் இது. 200 பக்கக்களில் செரிவான ஒரு படைப்பு.

alahavin_pen_makkal_01

சிறுமியாக இருக்கிறாள் ஆன்னி. அழுக்கு ஸ்கர்ட் போட்டு நாவல் முழுக்க வரும் அவளது பார்வையில் இந்த நாவல் விவரிக்கப்படுகிறது. அவளது குடும்பத்தை மையமாகக் கொண்டு, கோக்காஞ்சற சமூகத்தின் எழுச்சி, வாழ்வு, வீழ்ச்சி என்று நமக்குத் தரப்படுகிறது. ஆலாஹா – துயரம் துரதிருஷ்டம். ஆலாஹாவின் பெண் மக்களாக ஆன்னியும் அவளது குடும்பத்தினரும் வர்ணிக்கப்படுகிறார்கள்.

எழுச்சி

திருச்சூர் நகர மக்களின் வாழ்விற்கென, சில சமூகங்கள் தேவைப்படுகின்றன. புதர் மறைவில் மலம் கழித்துக் கொண்டிருந்தவர்கள் கழிப்பறையில் கழிக்கத் தொடங்குகையில், மலத்தை நீக்க ஒரு சமூகம் தேவைப்படுகிறது. தோட்டிகள் வந்து சேர்கிறார்கள். தோட்டிகளின் சேவைதான் வேண்டுமே ஒழிய, தோட்டிகள் தங்களின் பார்வையில் படக்கூடாது என்று நினைக்கிறார்கள் நகரத்துக் காரர்கள். ஊண் உண் ஆடு, மாடு, பன்றி இறைச்சி தேவைப்படுகிறது. ஆனால் அதை வெட்டும் இடம் நகரத்தை விடுத்து வெளியே இருக்கவேண்டி இருக்கிறது. ஆக இந்த சமூகங்கள் புற நகரான கோக்காஞ்சறவில் வந்து சேர்கிறார்கள்.

நகர வாசிகள் அவர்களை ‘பீ அள்ளுபவர்கள்’ என அழைத்தார்கள். அவர்களுக்கும் மலத்திற்கும் வித்தியாசமில்லை என்று நகரவாசிகளில் சாமானியர்கள் கூட நம்பினார்கள். மல டப்பாக்களை இழுத்துச் செல்லும் போது வீசும் நாற்றம் தமது நாற்றம் அல்ல; மலம் அள்ளுபவர்களின் நாற்றம் என்று சொல்வதையே நகரவாசிகள் விரும்பினார்கள்….. அவர்கள் எங்கு போவார்கள். அவர்கள் எங்கு வேண்டுமானலும் போகட்டும். அதிகாலையில் வந்து மலத்தை அள்ள வேண்டும்.

கோக்காஞ்சறவில் ஆன்னியின் குடும்பத்திலிருந்து இருந்து வாழ்க்கைப்பட்டுப்போன செறிச்சி கூட திரும்ப அங்கு வர மறுக்கிறாள். ஒரு முறை வந்த போது கூட, விடுவிடுவென கிளம்பிவிடுகிறாள். ஆன்னியைத் தொட்ட பள்ளி ஆசிரியை, தன் கையை முகர்ந்து பார்த்து, பைப் நீரில் கழுவிக் கொள்கிறாள். இத்தணைக்கும் நடுவில், ஒரு தேவாலயம் எழுகிறது. பல்வேறு பிரிவினைச் சேர்ந்தவர்களானாலும் கிறித்தவர்கள். காரியம் ஆவதற்காகவோ நம்பிக்கையின் காரணமாகவோ, மறைமுகமாக கிறித்தவத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருக்கிறார்கள். செறிச்சியின் கல்யாணம் நடப்பதற்காகவே, ஆன்னியின் பாட்டி சுராயியில் சேர்கிறாள்.

ஜெபமாலை போட்ட பாட்டன்
குருசு மலைக்குப் போன பெறகு
எடுத்திட்டு வாடீ மாத்தரி
வெல்ல ஆப்பம்

அதைக் கேட்ட அம்மாவுக்கு ஆத்திரம் பொங்கும்.

”அது உங்க குடும்பக் காரங்களோட குணம்” என்பாள்.

பாட்டி கொல்லென்று சிரிப்பாள். ரோமன் காரி என்று ஆன்னியையும் கேலி பண்ணுவாள்

”என்னடீ செல்லக்குட்டி, உன் கழுத்தில? மாந்தல் மீனோட தலையா?”

வாழ்வு

தீண்டாமை, கிறித்தவ பிரிவுகளுக்குள்ளான வேறுபாடுகள், சச்சரவுகள், பொறாமைகள் என்று நிறைய ஓடுகிறது.

நிறைய இழைகள் ஓடுகிறது இந்த நாவலில். அன்னியின் அம்மாவான கொச்சு ரோது – நாவல் முழுக்க வீட்டு வேலை பார்க்கிறாள். கணவன் கம்யூனிஸ்ட் காரன் இவளை விட்டு ஓடிப் போய்விடுகிறான்.  அவள் பார்வையில் பார்த்தால் நமக்கக் கிடைப்பது ஒரு வேறு பட்ட பெண்ணிய கதை. அடக்கப்பட்ட உணர்வுகளோடு வரும் ரோது, ஒரு கிறித்தவ பேரணியில் (அரசியலும், கிறித்துவமும் சார்ந்த பேரணி) போகும்போது வெடிக்கிறாள்.

ஒரு நாள் அம்மா சுயமாகவே தொண்டைக் கிழிய கோஷமிட்டாள்.

“கம்மூஸ்டுகள வெட்டிக் கொல்லனும்”

யாரும், சுயமாக எதையும் ஊர்வலத்தின் போது கோஷமிடக்கூடாது என்றும், ஆயர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டவற்றை மட்டுமே சொல்லவேண்டும் என்றும் பெரிய சாமியாரே கூறியிருந்தார். இருப்பினும் அம்மா நிறுத்தவில்லை.

“வெட்டிக் கொல்லணும், வெட்டிக் கொல்லணும், கம்மூஸ்டுகள வெட்டிக் கொல்லணும்”

ஆன்னியின் பாட்டியாக வரும் மரி, ஆலாஹாவின் பெண் மக்களின் இன்னொருத்தி.

ஓடிப்போன பெரிய மகன், சீக்காளியான சின்ன மகன் – நல்லது என்று எதையுமே அனுபவிக்காமல் துன்பங்களை மட்டும் அடுக்கடுக்காகப் பார்த்து, மரத்துப்போன பழைய மரம்.  வெவ்வேறு கிறித்தவ பிரிவின் காரணமாக ரோதுவுடன் உரசல் இருந்தாலும், குடும்பத்தை அவளுடன் சேர்ந்து இவளும் இழுக்கிறாள். ரோதுவுக்குத் தெரியாமல் கீழ் ஜாதியான நீலிக் கிழவியின் வீட்டில் மண்ணெண்ணெய் வாங்குகிறாள். குட்டிப் பாப்பனுக்குத் தெரியாமல் அரிசி கடத்தல் கும்பலிருந்து கஞ்சிக்கு அரிசி பெற்று வருகிறாள்.

“ராட்சசன்களை விட ஆபத்தானவனுங்க மகளே, அரிசி புடிக்கிறவனுக! நம்ம மாதிரி ஏழைங்களோட பிச்சைச் சட்டியிலதான் கை போட்டு அள்ளுவானுங்க. பணக்காரங்களத் தொட மாட்டானுங்க. இதெல்லாம் என்ன அரிசி புடிக்கிறது இப்ப யுத்தம் எதுவும் இல்லியே.

கோக்கஞ்சறவின் வரலாறு முழுவதும் அறிந்த மரியின் பார்வையில் பார்த்தால் நமக்குக் கிடைப்பது சமூக வாழ்வுகளைக் காணும் இன்னொரு கதை.

இப்படி, ஆலாஹாவின் பிற பெண் மக்களான, குஞ்ஞிலை, சிய்யம்மா, சின்னம்மா என்று எல்லோரிடமும் ஒவ்வொரு இழைகள் நமக்குச் சொல்லப்படுகின்றன.

alahavin_pen_makkal_02

வீழ்ச்சி

எட்டு அறை வீட்டாரின் பிரச்சினையிலிருந்து கோக்கஞ்சற சமூகத்தின் வீழ்ச்சி தொடங்குகிறது. பகுதிகள் விரிவடைகின்றன. தேவாலயமும் சேர்ந்து விரிவடைகிறது.

alahavin_pen_makkal03
(c) https://www.flickr.com/photos/dinesh_valke/4217898305

நாவல் முழுக்க, வீட்டின் முன் உள்ள அவரைப் பந்தல் வருகிறது. தொடக்கத்தில் ஆன்னியும் அவள் பாட்டியும் அவரைப் பந்தல் போடுகிறார்கள். காய்க்கிறது, பூக்கிறது, காய் பூ ஏதுமின்றி தனித்திருக்கிறது. நகரமயமாக்கலையும் சந்திக்கிறது. இதை விரிவாகச் சொன்னால் வாசிப்பவர்களுக்கு சுவாரசியம் குறையக் கூடும் என்பதால் விட்டுவிடுகிறேன்.

பிற நிகழ்வுகள்

பல சுவையான நபர்கள் வந்து போகிறார்கள். கம்பவுண்டரின் சேவை, 14 போக்கிரிகளின் வயிற்றுப் போக்கு, சின்ன சாமியாருடன் சின்ன பாப்பனின் உரையாடல், சின்ன பாப்பனின் தேசீய வாதம் என்று இந்த நாவலைப் பிரித்துப் பிரித்துப் பேசினால் இன்னும் பல பதிவுகள் போடலாம்.

அப்படி எழுதும் அளவிற்கு என்னிடமோ, படிக்கும் அளவிற்கு உங்களிடமோ நேரமில்லை என்பதால் இத்துடன் இந் நாவல் அறிமுகம் நிறுத்தப்படுகிறது.

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

வாழ்க பாரதம்.

சொப்பனசுந்தரி – யத்தனபூடி சுலோசனாராணி


“அவமானம்! அது என்ன அவமானம்? அவமானம்!”

“அவமானம்! இந்தக் கால இளைஞர்கள் யோசிக்கும் விதமே கோணலா இருக்கு. அவமானம்கிற கத்தியை எடுத்துக்கிட்டு உங்களை நீங்களே கொலை செய்துக்கறீங்க. என்ன அவமானம்? பரீட்சையில பெயிலாயிட்டா அவமானம்! வேலை கிடைக்காவிட்டா அவமானம்! கல்யாணம் ஆகலைன்னா அவமானம்! நண்பர்கள் கேலி செய்தா அவமானம்! கணவன் தள்ளி வைச்சா அவமானம்! மை காட்!” அவன் உள்ளங்கையை கோபத்துடன் மடக்கிக் கொண்டான்

-ஹரிகிருஷ்ணா

சொப்பன சுந்தரி – யத்தனபூடி சுலோசனா ராணி

மொழிமாற்றம் – கௌரி கிருபானந்தன்
வானவில் புத்தகாலயம் – முதல்பதிப்பு செப் 2015
NLB முன்பதிவு – Coppan̲acuntari / Yattan̲apūṭi Culōcan̲ārāṇi.சொப்பனசுந்தரி / யத்தனபூடி சுலோசனாராணி.
கன்னிமாரா முன்பதிவு : காணோம்

image

கதைச் சுருக்கம் பின் அட்டையிலேயே உள்ளது. கீழே கொடுத்துள்ளேன். தேவைப்படுவோர் எடுத்துக்கொள்க.

தொடர்கதை டைப் நாவல். மிகவும் ஏழ்மையான நிலையில் விவரிக்கப்படும் நிகழ்வுகள், எதையும் பாராமல் ஒருவன் தலையில் கட்டிவிட்டால் போதும் என்று ‘பழகவிடப்படும்’ மேனகா, அதன் மூலமான மான அவமானப் பிரச்சினைகள் என்று போகிறது (சென்னையில் கதை நடக்கிறது என்கிறார்கள். குறைந்தபட்சம் ரேசன் கார்டு கூட இல்லாமல் அரிசிக்கு அவதிப்படுகிறார்கள்!). நாவலின் முதலில் இருந்து கடைசி வரை காரம் குறையாமல் வந்துள்ளாள் மேனகா.

ஒருவரின் நேர்மையை சோதிக்கவேண்டுமானால் இரு நிலைகளில அவரை வைக்கவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. தரித்திரமான ஏழ்மைத்தனம், கொழிக்கும் பணக்காரத்தனம். அதிலிருந்து மீண்டு வருபவர்கள்தான் மேனகாக்கள் என்று நாவல் சொல்கிறது.

neerajanam

பெண் மையப்படுத்தப்பட்ட நாவலாக இருந்தும் நம்பிக்கையான ஆண்கள் வருகிறார்கள் – ஹரிகிருஷ்ணா, ராமநாதன், நாகலிங்கம். ஆனாலும் நாவலின் முக்கிய சில நிகழ்வுகள் நாடகத்தனமாக உள்ளதை மன்னித்துவிட்டுத் தொடரலாம்.

வாழ்க்கையை உணர்த்த சிலர் இந்த நாவலில் இருக்கிறார்கள்.

பாட்டி மங்களம் – எப்படியாவது பேத்திகளுக்குத் திருமணம் முடித்துவிடவேண்டும் என்பதற்காக இவள் செய்யும் ‘அல்பாயிசு’ கொண்ட முயற்சிகள், இறுதி வரை மேனகாவிற்கு அவள் தரும் ஆதரவு

ஹரிகிருஷ்ணா – ரேகா பிரச்சினைக்கான காரணங்கள் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டு இருக்கலாம். ஆனால் வெவ்வேறு காரணங்களுக்காக சில குடும்பங்கள் இன்றும் அப்படித்தான் உள்ளன. Soft spoken and well paid ஆண்கள் பலர் குடும்ப வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்டு வருவது 2016ஆன இந்த ஆண்டுகளில் நிஜம். அது ஒரு நிரந்தர இருள் உலகம். வெளிவருவது என்பதற்காக மனம் நிறைய பொறுமையும், பர்ஸ் நிறைய பணமும் தேவைப்படுகிறது (மேனகா காந்திகளுக்குத்தான் புரியாது!!)

தங்கை மாதவி, பலராமன் – கிட்டத்தட்ட சாருண்ணி வகையைச் சேர்ந்து கொண்டு, நிரந்தரமாக உழைப்பினையும் பணத்தையும் சுரண்டிவிட்டு, வேண்டியது கிடைத்ததும் துண்டை உதறி தோளில் சென்றுவிடுவது

அம்மா ரஞ்சனி – ‘பைத்தியக்கார அம்மா’ என்று இரு முறை திட்டுகிறாள் மேனகா. நான் கூட வாசிக்கும்போதே ஓரிடத்தில் கெட்டவார்த்தை சொல்லியும் திட்டிவிட்டேன்.

தெலுகு மொழிமாற்றம் என்றாலும் சரளமாக நம்மை அலேக்காகத் தூக்கிச் சென்றுவிடுகிறது கௌரி கிருபானந்தனின் எழுத்து நடை. இது போன்ற பல கதைகளுக்கு நாம் பழக்கப்பட்டு விட்டதால் இந்த நூலை வாங்குவேனா என்று தெரியலை. ஆனால் நூலகத்தில் படிப்பதற்குத் தடை ஏதும் இல்லை.

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே

வளர்க பாரதம்

பார்க்க

image

சுபகையின் காதல் – காண்டீபம் – ஜெயமோகன்


அந்த ஓர் இரவில் என்னில் அவர் எதையோ தேடுகிறார் என்று நான் எண்ணியது பிழை. அன்றிரவு அவர் என்வழியாக எங்கும் கடந்து செல்லவில்லை. எதற்கும் என்னை நிகர் வைக்கவும் இல்லை. அன்று உடல் உள்ளம் ஆன்மா மூன்றையும் எனக்களித்திருந்தார். முற்றிலும் என்னுடனேயே இருந்தார். ஐயமேயிலை, அன்றொருநாள் அவர் உள்ளத்தில் அரசியாக இருந்தேன் என்று உறுதியாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகள் என்னை நிறைவுறச் செய்து, இன்றென இருக்கவைத்தது அந்நிறைவே.

காண்டீபம் – ஜெயமோகன்

இந்த நாவலை இன்றுதான் முடிக்க முடிந்தது. கிட்டத்தட்ட 3 மாதங்கள் பின் தங்கலில் இருக்கிறேன். வேறு வழியில்லை. நவம்பர் டிசம்பரில் தனிப்பட்ட பணிகளின் காரணமாக வெண்முரசை சற்று நிறுத்தி வைத்துவைக்க வேண்டியதாயிற்று.

நிற்க.

நாவல் அறிமுகம்

வெண்முரசு நாவல் வரிசையில் அர்ஜுனனுக்காக அமைந்துள்ள நாவல் இது. கனவு லோக கற்பனைகள் போன்ற வர்ணனைகளும் நிகழ்வுகளும் சேர்ந்து, அர்ஜுனனின் பயணங்களை அழகுற விவரிக்கிறது. அர்ஜுனனின் கதைகளை, அர்ஜுனனின் செவிலித் தாய் மாலினி, கௌரவர் சுபாகுவின் மகன் சுஜயனுக்குச் சொல்வதாக அமைந்துள்ளது.

சிலிர்த்துக்கொள்ள சில நிகழ்வுகள்

நண்பர்களே, இந்த நாவலில் பல்வேறு நிகழ்வுகள் வருகின்றன. நாகர் நில (நாகாலாந்து?) இளவரசி உலூபியின் அத்தியாயம் வார்த்தை ஜாலம். ஒவ்வொரு பாம்பு அடுக்குகளாக அர்ஜுனன் வென்று வரும் தருணம் நம் கற்பனைக்குள் பல திரிகோணமிதி வளையங்கள் சுற்றுவதாக உணரமுடியும். உலூபியுடனான அர்ஜுனின் சாந்தி முகூர்த்தம் காட்சிப் படுத்திக்கொள்வதில் சிறந்தவர்களுக்குச் சிறந்த தீனி.

Arjuna Ulupi - https://commons.wikimedia.org/wiki/File:Arjuna_and_river_Nymph.jpg
Arjuna Ulupi – https://commons.wikimedia.org/wiki/File:Arjuna_and_river_Nymph.jpg

மணிப்பூரின் ஃபால்குனை அத்தியாயத்தை வாசகர்கள் சிலிர்க்க சிலிர்க்க படிக்கலாம். ஃபால்குனையைக் காட்சிப் படுத்தும் வர்ணனைகளில் நான் பலமுறை சொக்கியிருந்தேன். பிறகு சித்ராங்கதையும் ஃபால்குனனும் இணையும் காட்சிகளில் உங்கள் மனம் உங்களிடம் இருக்காது.

Arjuna asks King of Manipura for his Daughter https://commons.wikimedia.org/wiki/File:Arjuna_asks_King_of_Manipura_for_his_Daughter.jpg
Arjuna asks King of Manipura for his Daughter https://commons.wikimedia.org/wiki/File:Arjuna_asks_King_of_Manipura_for_his_Daughter.jpg

அமராவதியின் தேவதைகளை வெல்லும் அத்தியாயத்தில் வர்ணபக்ஷன் என்னும் சிறு குருவியுடன் அர்ஜுனனின் உரையாடல்கள் அழகியவை.

அரிஷ்டநேமி காணும் கொலைக் களம் மனதைப் பதற வைக்கிறது.

Arishtanemi, (Neminatha) Twenty second Tirthankara of Jainism http://www.wabashcenter.wabash.edu/syllabi/g/gier/306/nemiweb.jpg
Arishtanemi, (Neminatha) Twenty second Tirthankara of Jainism http://www.wabashcenter.wabash.edu/syllabi/g/gier/306/nemiweb.jpg

யாதவர்கள் – கிருஷ்ணன் உரசல்

இதற்குள்ளே இறங்குவதற்கு முன்னால், ஒன்றைச்சுட்டிக்காட்ட விளைகிறேன். கிருஷ்ணன் – சத்ய பாமா திருமணத்தில் சியமந்தகம் ஆடிய ஆட்டத்தை முந்தைய வெண்முரசு அத்தியாயங்கள் விவரித்தன. சததன்வாவும் யாதவன்தான். ஒரு ஊருக்குத் தலைவன்தான். சத்ய பாமாவை தனக்கு மணமுடித்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கையுடன் காத்திருந்தான். அவன் நினைப்பில் துவாரகை மண்ணைப் போட்டுத்தான் கிருஷ்ணன் சத்ய பாமாவை மணக்கிறான்.

சியமந்தகத்தை திருடிய குற்றம் என்ற பார்த்தால் சததன்வாவும் அக்ரூரரும் குற்றவாளிகளே. சததன்வாவை ஓடும் குதிரையிலேயே சக்கராயுதத்தால் தலையை அறுத்த கிருஷ்ணன், அக்ரூரரை மன்னித்து, துவாரகை அரசின் அமைச்சராகத் தொடர அனுமதி அளிக்கிறான். அப்போது ஒரு குரல் எழுகிறது. ‘சததன்வாவுக்கு இந்த இரக்கம் காட்டப்பட்டதா?’

துவாரகை வளர வளர பங்காளி உரசல் போல, யாதவர்களுக்குள்ளேயே வீண் பொறாமைகள் எழுகிறது. கிருஷ்ணனை ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு யாதவ குழுக்களும் வெல்ல நினைக்கின்றன. யாதவ இளவரசி சுபத்திரை திருமணத்தில் அது வெளிப்படத் தெரிகிறது. கிட்டத்தட்ட பலராமரை எதிர்த்தே, கிருஷ்ணனும் சத்யபாமாவும் சுபத்திரையை அர்ஜுனனுக்குத் திருமணம் செய்கின்றனர். அந் நிகழ்வில் சுபத்திரையின் திருமணத்தை சத்ய பாமா தன் பொறுப்பேற்று நடத்தி வைக்கிறாள்.

இது ஜெயமோகனின் புனைவா, உண்மை நிகழ்வா என்று தெரியவில்லை. ஆனால் இதுவும், அதைத் தொடர்ந்து பலராமரின் யாதவர் படையை மீறி அர்ஜுனன்-சுபத்திரை துவாரகை நகர் நீங்கும் அத்தியாயமும் எந்த ஒரு சாகசக் கதைக்கும் குறைவில்லாதவை.

“ஆம், உள்ளம் கவர முயன்றேன்” என்றான் அர்ஜுனன். “கவர்ந்துளேனா என்று இளவரசி சொல்வார்கள்.” அவையில் வலப்பக்க கீழ்நிரையில் இளைய யாதவரின் எட்டு அரசியரும் அமர்ந்திருந்தனர். சத்யபாமை எழுந்து “இளவரசியை அவைக்கு கொண்டுவந்து உசாவும் மரபு யாதவருக்கில்லை. பெண்ணை வினவவோ தண்டிக்கவோ யாதவகுடியில் ஆண்களுக்கு உரிமையில்லை” என்றாள். பலராமர் தத்தளிப்புடன் “ஆம், ஆனால் நான்…” என்றார். “அவளுடைய பிழையோ நிறைவழிவோ கண்டறிய வேண்டியவர் அவள் அன்னை. இங்கு அவள் அன்னையின் இடத்திலிருக்கும் நான். எங்கள் முடிவு இங்கெழுந்தருளியுள்ள மூதன்னையர் சொல்” என்றாள்.

Subhadra and Arjuna - https://commons.wikimedia.org/wiki/File:Subhadra,_the_half_sister_of_Krishna,_drives_a_chariot_away_from_Dwarka_with_Arjuna_and_Krishna_inside..jpg
Subhadra and Arjuna – https://commons.wikimedia.org/wiki/File:Subhadra,_the_half_sister_of_Krishna,_drives_a_chariot_away_from_Dwarka_with_Arjuna_and_Krishna_inside..jpg

சுபகையின் காதல்

சுபகை நாவல் முழுக்க வருகிறாள். சிறுவன் சுஜயனின் செவிலித்தாயாக. மாலினி சொல்லும் அர்ஜுனனின் கதைகளை சுஜயனோடு அமர்ந்து அவளும் கேட்கிறாள். இளமைக் காலத்தில் ஓர் இரவு அர்ஜுனனுடன் தனித்திருந்தவள். பிறகு வேறொரு ஆணைத் தீண்டாது, கன்று உண்ணாது, கலத்தினும் படாது….

அந்த ஓர் இரவில் என்னில் அவர் எதையோ தேடுகிறார் என்று நான் எண்ணியது பிழை. அன்றிரவு அவர் என்வழியாக எங்கும் கடந்து செல்லவில்லை. எதற்கும் என்னை நிகர் வைக்கவும் இல்லை. அன்று உடல் உள்ளம் ஆன்மா மூன்றையும் எனக்களித்திருந்தார். முற்றிலும் என்னுடனேயே இருந்தார். ஐயமேயிலை, அன்றொருநாள் அவர் உள்ளத்தில் அரசியாக இருந்தேன் என்று உறுதியாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகள் என்னை நிறைவுறச் செய்து, இன்றென இருக்கவைத்தது அந்நிறைவே.

www.jeyamohan.in/79707

மாலினி அர்ஜுனனின் செவிலித்தாய். அர்ஜுனன் அஸ்தினபுரம் நீங்கிய பிறகு, அரண்மனை வாழ்க்கையிலிருந்து விடுவித்துக்கொண்டு துறவு வாழ்க்கை வாழ்பவள்.

இருவரும் சேர்ந்து உரையாடும் தருணங்கள், ஆழ்ந்த அன்பு கொண்டு திளைத்து, அதை நினைத்து மெலிதாக அசைபோடுவது போன்றவை. ‘குமரியாக இருந்த போது என்னைத் தீண்டினானே என் தலைவன்! உடல் பருத்து, அழகு இழந்து, வாழ்வில் அடுத்து இன்னதென ஏதுமில்லாத ஒரு பிறவியாகிவிட்ட தன்னை திரும்பியாவது பார்ப்பானோ’ என்கிற ஏக்கம் இருக்கிறது சுபகையிடம்.

‘இல்லை இல்லை. இனிமேல் வராமாட்டார். வேண்டுமென்றால் இன்னொரு பிறவி எடுத்து இன்னொரு பெண்ணாக வேண்டுமானால் சந்திக்க முடியம்’ என்று தன் ஆசையை மறைத்து, தனக்குத்தானே நிறைவு செய்து கொள்கிறாள். ஆனால் அவள் அகம் முழுக்க அர்ஜுனனுக்கான அன்பு நிறைந்து வழிந்துகொண்டிருக்கிறது நண்பர்களே. பாரபட்சம் இல்லாத அன்பு, எதையும் பதிலுக்க எதிர்நோக்காத அன்பு.

இதுவரை வெண்முரசில் அர்ஜுனன் எப்போதும் தவிப்பாகவே இருந்து வந்திருக்கிறான். எதையாவது நினைத்து தவிக்கிறான், புகைகிறான், தருக்கிக் கொள்கிறான், எரிச்சலடைகிறான், துன்புருத்துகிறான். ஆனால் மன மகிழ்வுடன் இருந்ததாக ஒரு அத்தியாயங்கள் கூட பார்த்ததில்லை. அரிஷ்டநேமி துறவு கொண்டு நகர் நீங்கும்போது அர்ஜுனனுக்கு வரும் தடுமாற்றம், அவனது மன அழுத்தத்தின் வெளிப்பாடாக அன்றி வேறு ஏதாக முடியும்.

திரும்பத் திரும்ப பெண்களில் எதையொ தேடி, ஏமாறுவதாக இருக்கிறான். வெறுப்படைந்து நீங்குகிறான். திரௌபதியின் காதல் அகங்காரமும் அரசியலும் திரையிட்டது. சுபத்திரையின் மனதில் சகோதரப் பிரியத்திற்குப் பிறகுதான் கணவர் மீதான காதல் நிறுத்தப்படுகிறது. தன் மேல் தனக்கு மட்டுமென காதல் நிரம்பிய பெண் இல்லையா என்கிற ஆதங்கத்தில்தான் உலூபியை அவன் மனதார விரும்புகிறான்.

வெண்முரசின் பின்வரும் அத்தியாயம் அர்ஜுனனின் அகம் படுகிற பாட்டை வெளிச்சம் போட்டக் காட்டிவிடும்.

மாலினி “அவன் சென்று கொண்டிருக்கிறான். பாதைகள் பின்னிட்டபடியே உள்ளன. அவனிடம் ஒரு முறை சொன்னேன் நெடுந்தொலைவு செல்கிறாய் மகனே, ஒன்று நினைவுறுக! சென்ற பாதை அனைத்தையும் திரும்பிக் கடக்காமல் எவரும் விண்ணகம் செல்வதில்லை. எனவே நெடுந்தூரம் செல்வது நல்லதல்ல என்று. நான் செல்லவில்லை அன்னையே, துரத்தப்படுகிறேன் என்றான். எதனால் என்று நான் கேட்டேன். நூறு அர்ஜுனர்களால் வில்லும் கதாயுதமும் வாளும் வேலும் ஏந்தி துரத்தப்படுகிறேன். ஒரு கணம் கூட நிற்க எனக்கு நேரமில்லை என்றான்” என்றாள்.

http://www.jeyamohan.in/78793

காண்டீபத்தில் இது எனக்கு மிகவும் பிடித்த, அனுபவித்த ஒரு பகுதி. ஒரு பருத்த சரீரத்தின் உள்ளே ஒளிந்துள்ள அந்த அர்ஜுனனினுக்கான பிரியம்தான் எத்தணை அழகாக உள்ளது நண்பர்களே.

திரும்பவும் அதிலிருந்தே மேற்கோள் காட்ட விளைகிறேன்.

“நீ இங்கிரு. அவன் மீண்டும் வருவான்’’ என்றாள் மாலினி. “இல்லை அன்னையே, இனி ஒரு போதும் அவர் முன் நான் சென்று நிற்க மாட்டேன்” என்று சுபகை சொன்னாள். “ஏன்?” என்றாள் மாலினி. “இவ்வுடலல்ல நான். அன்று அவருக்கு நான் அளித்த உடலும் அல்ல இது. இதை நோக்கி என்னை அறியாது அவர் உதறிச் சென்றால் பின்பு நான் வாழ்வதில் பொருளில்லை. அவர் இங்கு வந்தால் அவரை அஞ்சி இக்குடில்களில் எங்கோ ஒன்றில் ஒளிந்து கொள்வேன். அல்லது காட்டுக்குள் சென்றுவிடுவேன்.”

மாலினி நகைத்து “ஆனால் நான் அவன் உன்னை இவ்வுடலில் பார்க்கவேண்டுமென்று விழைகிறேன். அன்று அவன் கண்ட அந்த எயினியை இவ்வுடலில் மீண்டும் அவனால் காண முடிந்தால் மட்டுமே அன்று அவன் எதையாவது பெற்றிருக்கிறானென்று பொருள்” என்றாள். சுபகை “இல்லை. ஆண்கள் பெண்களின் ஆன்மாவைக்கூட உடல் வழியாகத்தான் அறிகிறார்கள் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன்” என்றாள். மாலினி “அது சூதர்களின் பொய். விராடபுராணம் உடல் அவர்கள் உள்ளே வருவதற்கான பாலம் என்கிறது. உடல் வழியாக வந்து உடலுக்கு அப்பாலுள்ளதை அறிபவனே உண்மையில் அறிபவன்” என்றாள்.

“இல்லை அன்னையே, ஆண்கள் எதையும் அறிய முடியாது” என்றாள் சுபகை. மாலினி “உன் கண்களில் வைரமுனை போல ஒளிவிடும் அச்சிரிப்பை நிகழ்த்தும் ஒன்று உன் ஆழத்தில் உள்ளது. அதை அவன் அறிகிறானா என்று பார்க்க விழைகிறேன்” என்றாள். சுபகை “என்னை வற்புறுத்தாதீர்கள் அன்னையே” என்று சொல்லி கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டாள். “இதோபார்…” என மாலினி ஏதோ சொல்லவர “வேண்டாம்” என சுபகை தன்னை குறுக்கிக்கொண்டாள்.

http://www.jeyamohan.in/78793

ஆனால் காண்டீபத்தின் கடைசி 2 அத்தியாங்களில் நகைக்கிறான், புன்னகை பூக்கிறான். கவசங்கள், பொறுப்புகளைத் துறந்து மனிதனாக அவன் மாலினியிடம் மட்டுத்தான் ஒரு மகனாய் இருக்கிறான். வயது மாறாக மகனாக. அவளை விடுத்து சுபகையிடம்.

இந்த முடிச்சுகள் எல்லாம் நாவலின் இறுதியில் அவிழ்க்கப்படுகின்றன. அதை மேற்கோள் காட்டினால் உங்கள் ரசனைக்குப் பாதகம் செய்தவனாவேன். எனவே இந்த கைக்கிளை அனுபவத்தை நீங்களே வாசித்து உணர்வது, நான் அடைந்த உணர்ச்சி மேலீட்டை நீங்களும் அடைய உதவும்.

 1. நாவலைத் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே செல்லலாம் – நூல் எட்டு – காண்டீபம் – 1
 2. தொடங்கும் முன் பத்ம வியூகம் என்கிற இந்தக் குறு நாவலைப் படிக்க ஆலோசிக்கிறேன்.

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே,

வளர்க பாரதம்

சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்


‘மறைத்துக் கொண்டவர்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டவர்கள்; ஒப்புக்கொண்டவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட்டவர்கள்; என்பது எவ்வளது அநீதி? தர்ம சாஸ்திரம், நியாயம் என்பனவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். எவனோ வெள்ளைக்காரன் எழுதி வைத்த இந்தியன் பீனல் கோடு சட்டம் கூட அப்ரூவர் விஷயத்தில் சலுகை காட்டுமே!…’

சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

முதல் பதிப்பு – 1970. 31ஆம் பதிப்பு 2015
மீனாட்சி புத்தக நிலையம்

image

கல்லூரிப் பருவத்தில் ஒரு மழைக்கால மாலை வேளையில் யாரென்றே தெரியாத பிரபுவால் யாரென்றே தெரியாத கங்கா ‘கெட்டுப்போய்’ விடுகிறாள். அறுபதுகளில் பிராமண சமூகத்தில் நடக்கும் கதை. நடந்ததை அம்மாவிடமும் அண்ணன் கணேசனிடமும் சொல்ல, அண்ணன் அவளை அடித்து வீட்டை விட்டுத் துரத்திவிடுகிறான்.  வெங்கு மாமா உதவியால் படிதது அரசாங்க வேலையில் இருக்கும் ஒரு முதிர் கன்னியாக இந்த நாவல் தொடக்கத்திலிருந்து இறுதி வரை வருகிறாள் கங்கா. அவளுடைய பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. அறுபது எழுபதுகளில் இந்தக் கதை வெளி வந்திருக்கிறது என்று கூறப்படும்போது, இது பிராமண சமூகத்தில், பெண்ணிய வட்டாரத்தில் எந்த அளவு சலனத்தை உண்டாக்கியிருக்கும் என்பதை உணர முடிகிறது.

image

வாசித்த நாளில் இருந்தே ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களை இந்தப் பதிவின் வாயிலாகப் பதியலாம் என்று எண்ணுகிறேன். (வெகு சுருக்கமாக)

மேய்ப்பர் இல்லா ஆடு

வெளியே காணும் கங்கா அல்ல அவள். தினசரி உள்ளே ஏதாவது ஒரு போராட்டம் ஓடிக்கொண்டே உள்ளது. பேருந்தில் ஒருவன் இடிக்கிறான். கண்டக்டர் கையைத் தொட்டு டிக்கட் தருகிறான். வெங்கு மாமாவின் சில்மிஷங்கள். எதாவது ஒன்று வந்து கங்காவின் உள்ளத்தினுள் கங்கு அணையாமல் பார்த்துக்கொள்கிறது. ஆண்களைப் பார்த்தாலே எரிச்சல் படும் கங்கா, ஒரு ஆணுடன் கல்யாணம் என்பதையே கரப்பான்பூச்சியைப் போல அருவெறுக்கிறாள் கங்கா.

ஆனால் அவளுடைய பரிதாபமான மறுபக்கம்தான் வருத்தம் தருவது. தனக்கு ஒரு துணை வேண்டாம் என்ற நினைக்கவில்லை கங்கா. ‘தன்னைத் தலை முழுக வைத்து எவன் தலையிலாவது என்னைக் கட்டியிருக்கவேண்டாமோ இந்த அம்மா’ என்று கடுகடுக்கிறாள்.

‘நாணம்’னு நான் நினைச்சிக்கிறத அவன் ‘காதல்’னு நெனச்சுக்கிறான். நாணமே காதலுக்கு அடையாளமாகப் போயிடறது. இந்த நாணத்திலே மயங்கியே அவன் அட்வான்டேஜ் எடுத்துக்கறான். ‘ப்ரொஸீட்’ பண்றான். எல்லாம் எதனாலே? ஆம்பளைகளைத் தலைநிமிர்ந்து பார்க்கப் படாது, பேசப்படாது, பழகப்படாதுன்னு சொல்லிச் சொல்லி ‘இன்ஹிபிஷன்’ஸைச் சின்ன வயசிலிருந்தே ஏற்படுத்திட்டதனாலே, ஒரு ‘அடலஸண்ட்’ பீரியட்ல பொண்களுக்கு ‘மேன்’னு நினைச்சாலே அவனோட ‘அப்பியரன்ஸ்’லேயே ஒரு ‘திரில்’ – ஒரு மனச்சிலிர்ப்பு ஏற்பட்டுப் போறது. இப்படி ஏற்படறது ஒரு நல்லொழுக்கம்னு வேற நெனச்சிக்கறா. எல்லாக் கஷ்டமும் ஆரம்பமாறது.

இந்த மனச்சிலிர்ப்பு எல்லார்கிட்டேயும் – எவன் கிட்டே வேணும்னாலும் ஒரு பொண்ணுக்க ஏற்படறது ‘இம்மாரல்’ – ஒழுக்கக்கேடுன்னு எனக்குத் தோண்றது.

இந்த ஒழுக்கக்கேடு என்று அவள் நினைக்கிறதும், பிறர் போன்று தமக்கும் ஒரு நல்ல வாழ்வு அமைந்திருக்கக்கூடாதா என்பதும் தீர்க்க முடியாத உள்ளச் சிக்கலாகிறது.

ஒரு நிலையில் இருந்து ஆட்டம் காணும்போது, அந்த நிலைக்கு நேர் மாறான பிடிவாத நிலையை எடுத்துக்கொள்கிறாள் கங்கா. அதில் பிரச்சினை வரும்போது இன்னமும் தீவிரமாக அதற்கு எதிர் நிலை எடுத்துக்கொள்கிறாள். ஆனால் இவளது எல்லா முடிவுகளிலும் பொதுவாக உள்ள ஒரு பண்பு – சுயவதை. தன்னை வதைத்த சூழலுக்காக தன்னையே மீண்டும் மீண்டும் வதைத்துக்கொள்வது. அதற்காக வெளி சமூகத்திற்காக ஒரு முகமும், தனக்காக முகமும் வைத்துக்கொண்டுதான் இருக்கிறாள் என்றே நாம் நினைக்கவேண்டி இருக்கிறது.

தனிமை – அதைக் கடக்க எளிதான அவளுக்கு ஒரு உறவு இருந்தால் எவ்வளவு எளிதாக இருக்கும் நண்பர்களே.

ஆடு புலி ஆட்டம்

யாரென்றே தெரியாதவன் கெடுத்துவிட்டுப் போய்விட்டான். அண்ணன் கணேசன் அடித்து வீட்டை விட்டுத் துரத்திவிடுகிறான். பேருந்தில் பக்கத்தில் பக்கத்தில் நிக்கறவன் இடிக்கறான். கண்டக்டர் கையைத் தொட்டு சில்லரை கொடுக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலே, அழிவு காலத்தில் கை கொடுத்து, படிக்க வைத்து வாழ்க்கைக்கு வழி காட்டிய வெங்கு மாமா பசுத் தோல் போர்த்திய புலியாக வருகிறார். ஜெயமோகன் இந்த நாவலைப் பற்றிக் குறிப்பிடும்பொது வெங்கு மாமாவை தோலுரிக்கப்படும் கதாபாத்திரமாகக் குறிப்பிடுகிறார். ஆணாதிக்க சமூகத்தின் முகமாக வருகிறார் வக்கீல் வெங்கு மாமா.

பெண்கள் ஒருத்தனுக்கே உண்மையா இருக்கனும்னு சொல்றேளே? மகாபாரதத்திலே திரௌபதி அஞ்சு பேருக்கு மனைவியா இருந்தாளே? அதை எப்படி நம்ப சாஸ்திரம் ஒத்துண்டது?

நான் தயங்கித் தயங்கித்தான் கேட்டேன். மாமாவை வசமா மடக்கிட்டோம்னு நினைச்சுக் கேட்டேன்.

அவர் சொன்னார். “நம்ப சாஸ்திரம் அதை ஒத்துக்காததுனாலேதான் அது மாறிப் போயிடுத்து… இன்னொன்னு நீ கவனிச்சியோ? இந்த ‘கான்டக்ஸ்ட்லே’ குந்திதேவியைப் பத்திக் கேக்கணும்னு உன் மனசுலே தோன்றதோன்னோ? எனக்குப் புரியறது. புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் அப்படி புத்திரதானம் பெத்துக்கிறது உண்டுங்கிறதுதான் அதுக்கு அர்த்தமே தவிர அத்தனை பேருக்கும் குந்தி மனைவியா இருந்தாள்ங்கிறது இல்லே. அதுக்கு முன்னாலே பார்த்தா பாண்டுவும், திருதராஷ்டிரனும் வியாச பகவானால் தானம் அளிக்கப்பட்டவர்கள்தான். இதிகாசங்களிலிருந்து சாரங்களைத்தான் எடுத்துக்கிடனுமே தவிர, சம்பவங்களை எடுத்துக்கிடப் படாது!”

இதிகாச பூர்வமாக விளக்கறது மட்டுமில்லாமல் விஞ்ஞான பூர்வமாகவும் விளக்க ஆரம்பிச்சுடுவார் மாமா. மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் எல்லாம் அவர் வாதத்தை நிலை நாட்டறதுக்கு முட்டை கொடுத்துண்டு வந்து நிக்கும். பத்துப் பெட்டைக் கோழிகள் இருக்கிற இடத்துலே ஒரு சேவல் போறும்பார். இவரைப் பொறுத்தவரைக்கும் ஒளிவு மறைவில்லாமல் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதிங்கிறது ரொம்ப நியாயம்னு வாதம் பண்ணுவார்.

சமூகத்தின் டெலிகேட் ஆக இருக்கும் ஒருவர், மறுபுறத்தில் தனது தங்கை மகளான கங்காவைப் பாலியல் ரீதியா சுரண்டும் தருணத்தை ஏற்படுத்த முயல்வதும், அவள் எதிர்க்கும்போதும் அதை உணர முடியாதவராக இருப்பதும், வாசகர்களை ஒரு சமூகத்தைப் பார்த்து பதற வைக்கிறது.

“கங்கா! இங்க வந்துட்டுப் போ”

“என்னைக் கிழவன்னு நினைச்சுண்டுதானே நீ வெறுக்கறே?”ன்னு அவர்  கேட்கிறபோது எனக்குச் சிரிப்பு வரது. எவ்வளவு விஷயங்களிலே மகா மேதையாயிருக்கிற இவர், இந்த விஷயத்தில எவ்வளவு அசடா இருக்கார்னு நினைக்கிறப்போ பாவமா இருக்கு.

ஒரே வாழ்க்கை – இருவர் பார்வைகள்

வெங்கு மாமாவின் ‘நீ கான்குபைனாகத்தான் வாழ முடியும்’ ஏளனத்திற்குப் பதில் சொல்லும் வகையில் தன்னைக் கெடுத்தவனையே தேடிப்பிடிக்கிறாள் கங்கா. அதன் பிறகு ஏற்படும் சிறு சிறு நிகழ்வுகளும் பெரியதொரு தாக்கத்தை வாசகன் மனதில் ஏற்படுத்துகிறது. முதலில் சபல எண்ணத்துடன்தான் அணுகுகிறான்.  கங்காவின் தோளை பிரபு தொடும்போது ச்சீ என்று தன்னை அறியாமலே விலகுகிறாள். அந்த ஒரு கணம் கங்காவின் மீதான பிரபுவின் உறவை முடிவு செய்கிறது.

“என்னைப் பொறுத்த வரைக்கும் நான் செய்ற எந்தக் காரியத்துக்கும் நான் பொறுப்பு இல்லே. ஐ யாம் நாட் ஸோ ஸ்ட்ராங். இந்த என்னோட லிமிட்டேஷன்ஸ் எனக்குத் தெரியும். இந்த மடத்தனம்தான் – இல்லே. புத்திசாலித்தனம்தான் எனக்கு வசதி. என்னைப் பத்தி என்ன பேசலை? – இப்போ புதுசாப் பேசறதுக்கு? பட் – ஆனால் ஐயாம் வொர்ரீட் அபவ்ட் யூ- வீணா உன் பெயர் கெட்டுப்போகுதேன்னுதான் பாக்கறேன். பேர் கெட்டுப் போகலாம். ஆனா அது வீணாகக் கெட்டுப் போகக்கூடாது”

“நான் தொடறதுனாக் கூட பத்மாவுக்குப் புடிக்கலேன்னு தெரிஞ்சப்புறம், அவ எனக்கு யாரோ ஆய்ட்டா. அவ எனக்குப் பொண்டாட்டிதான். அதுக்காக நான் அவளைப் பலவந்தம் பண்ண முடியுமா? ஐ கென் – நாட் ரேப் எனி ஒன்! நோ, ஐ கேன் நாட்”

தினசரி உலக லாவன்யங்களிலிருந்து விடுபட்டுக்கொண்டதாக துறவு வேடம் பூண்டாலும் கங்கா உள்ளே தனக்கான ஒரு சரியான துணைக்காக ஏங்குகிறாள். நம்பிக்கையான ஒரு பற்றுக்கொடியாக பிரபு அமைகிறான்.

சமூகத்திற்கு நல்ல முகத்தைக் காட்டுகிறார் வெங்குமாமா. அவரது மறுபக்கம் பூசணிக்காயில் வரையப்பட்ட திருஷ்டி பொம்மை போல இருக்கிறது. சமூகத்திற்கு மட்டமல்ல, தன் குடும்பத்திற்கே கூட பிரபுவைப் பிடிக்காமல் போகிறது. கங்கா அவன் வாழ்வில் வந்த பிறகு அவனது நல்ல குணங்கள் ஒவ்வொன்றாய் தெரியவருகிறது.

புறப்படறதுக்கு முன்னாடி சொல்றார்: “இவ்வளவுதான் லைஃப்! இட் இஸ் ஆல்ரெடி டிஸைடட். நாமட் ஒண்ணும் இதில் செய்யறதுக்கில்லே. சாகலாம்னா தற்கொலை செய்துக்க முடியலே. எங்கேயாவது எல்லாத்தையும் உட்டுட்டு ஓடிடலாம்னா அதுவும் முடியாது போல இருக்குது. முடியாதுன்னு இல்லே. எல்லாமே முடியும். அதுல எல்லாம் ஒண்ணும் ‘மீனிங்’ இல்லே.. ஸோ! லெட் அஸ் லிவ் தி லைப் வித் டிட்டாச்மெண்ட்! (ஆக, வாழ்க்கையை வாழ்வோம்; பற்றில்லாமல் வாழ்வோம்)”.

ஒரு வகையில் கங்கா மற்றும் பிரபுவின் வாழ்க்கை முழுதும் அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக மனம் புழுங்குகிறார்கள். அந்த காரணத்துடன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில்தான் நாம் புரிந்து கொள்ளவேண்டிய செய்தி உள்ளது என்று எண்ணுகிறேன்.

வாழ்க்கை கொடுக்கும் அடிகளை வாங்கி நைந்து போன பிரபு, வாழ்க்கையை அதன் போக்குக்கு விட்டுவிட்டு, அதற்கேற்ப டர்புலன்சில் ஓடும் பிளைட்டு போல வாழக் கற்றுக்கொள்கிறான். தற்கொலை கூட செய்யலாம்கிற அளவிற்குக் கேவலப்படுகிறவன், கங்காவை ஒரு ஊன்று கோலாகப் பற்றி மேலே வருகிறான்.

கங்காவிற்கு என்னதான் பிரச்சினை? ஈகோ? காம்ப்ளக்ஸ்? என்றெல்லாம் இந்தக் கதை நம் மனதைப் போட்டு பிசைந்து கொள்கிறது. ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது. சுவற்றில் ஓங்கி ரப்பர் பந்தை அடிக்கிறோம். அடிக்கிற வேகத்தில் எதிர் திசையில் ஓடும் பந்துக்கு என்ன பிரச்சினை? ஏன் அவ்வளவு விரைவாக வேறு திசையில் எம்புகிறது. சமயத்தில் அதே வேகத்தில் என்னையே வந்து தாக்குகிறது?

—-

இப்படி எல்லாம் நடக்கிறதா என்கிறார்கள். ‘ஆம்’, ‘ஆம்’ என்கிறது வாழ்க்கை என்று முன்னுரையில் எழுதுகிறார் ஜெயகாந்தன். கதை என்பதை விடுத்து, அதன் வழியாக எத்தணை வாழ்க்கையைப் பார்க்க முடிகிறது என்பதுதான் இந்த நாவலைத் திரும்ப வாசிக்க வைக்கிறது. கங்காவின் உளச் சிக்கலுக்கோ, வெங்குமாமாவின் நடத்தைக்கோ ஜஸ்டிஸ் என்று இந்த அற்ப வாசகனால் எதையும் கொடுக்க இயலாது. நமது தினசரி வாழ்க்கையில் பார்ப்பவர்களில் கங்காவைப் பார்க்க இயலாது போகலாம். ஆனால் அப்படி ஒருவர் இருந்தால்? ஒரு வேளை கணேசன் அல்லது கனகத்தின் இடத்தில் நீங்களோ நானோ இருந்தால் என்ன முடிவு எடுத்திருப்போம்?

For Index: D.Jayakanthan, Renowned Tamil Writer.Photo: V_Ganesan. (Digital Image) 11.9.04.
For Index: D.Jayakanthan, Renowned Tamil Writer.Photo: V_Ganesan. (Digital Image) 11.9.04.

ஈவேரா போலவே ஜெயகாந்தனும் தமிழ் [இந்திய] சமூகத்தின் அறிவார்ந்த மையமாகப் பிராமணச் சமூகத்தையே கண்டார். அவர்களுக்குத்தான் சமூகத்தின் கலைகளையும் சிந்தனையையும் ஞானத்தையும் பாதுகாத்து முன்னெடுக்கும் பொறுப்பு இந்த மரபால் அளிக்கப்பட்டிருந்தது என்று நினைக்கிறார். பிராமணர்கள் அதைத் தங்கள் சுயநலனுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்டனர் என்று ஈவேரா சொன்னார். கிட்டத்தட்ட ஜெயகாந்தனும் அதைத்தான் சொல்கிறார். ஆனால் அவர்களில் உள்ள முற்போக்கான, படைப்புமனம் கொண்ட சிலரை நோக்கி அவர் பேசுகிறார். ஈவேரா போல அவர்களை ஒட்டுமொத்தமாக அழிவுசக்தியாக நினைக்கவில்லை. அவர்களை நம்பி ஒரு மாற்றத்துக்காக அறைகூவுகிறார், அவ்வளவுதான். பிராமணரல்லாத ஜெயகாந்தனின் அந்த விமர்சனங்களை அவர்கள் பெரும்பாலும் ஆக்கபூர்வமாகவே எடுத்துக்கொண்டார்கள்.

-ஜெயமோகன்

 

நாவல் பற்றி

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

வாழ்க பாரதம்.