அறிமுகம்
இந்தியாவின் பழமையான நகரங்களுல் ஒன்றான மதுரையில் உள்ள மீனாக்ஷியம்மன் கோயிலைப் பற்றிய இந்தப் பக்கத்தைப் படிக்க வந்திருக்கும் அன்பர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
தென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கிய இடம் மதுரைக்கு உண்டு. முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டிவந்தது இம்மதுரை நகரம். பராசக்தியின் வடிவமான அன்னை மீனாக்ஷி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் இம்மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்திஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் மதுரையின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன.மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் தெப்பக்குளம், காந்தி அரண்மனை என்று சுற்றுலாவினரைக் கவரும் அம்சங்கள் இந்நகரில் நிறைய உண்டு. தூங்கா நகரமான மதுரையிலிருந்து அழகர்கோயில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், காளையார் கோயில், புதுக்கோட்டை, ஆவுடையார்கோயில், ராமேஸ்வரம், குமுளி (தேக்கடி), கொடைக்கானல், தேனி(சுருளி), திருநெல்வேலி என்று சரித்திர மற்றும் பொழுதுபோக்கு தலங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் உண்டு. சென்னை-நாகர்கோயில் தேசீய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்நகரம், தென்னிந்திய இரயில்வேயின் மிக முக்கிய சந்திப்பாகும். அதனுடன் நாட்டின் மற்ற முக்கிய நகரங்களை இணைக்கும் விமான நிலையமும் உண்டு.
பின்வரும் பகுதிகளில் தென்னிந்தியக் கலையில் முத்திரைப் பதிப்பான மதுரை ஸ்ரீமீனாக்ஷி-சுந்தரேஸ்வரர் கோயிலின் சிறப்பையும், அதன் அமைப்பையும் எடுத்துச் சொல்ல சிறு முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. நண்பர்கள் இத்தளத்தினுள் உலாவி, தங்கள் கருத்தினைப் பகரவேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மதுரை-ஆட்சியாளர்களின் காலவரிசை (chronology)
வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும்போது மதுரை பல்வேறு அரசாட்சியின் கீழ் இருந்தாலும், பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் காலம்தான் மதுரைக்குப் பொற்காலமாக இருந்திருக்கிறது. கிபி 1 முதல் 5ஆம் நூற்றாண்டு வரையில் சங்ககாலப் பாண்டியர்கள் வசமும், 5 முதல் 13ஆம் நூற்றாண்டு வரையில் இடைக்காலப் பாண்டியர்கள் வசமும் இருந்த மதுரை 14 முதல் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை டெல்லி சுல்தான்களின் கொடுங்கோல் வசம் இருந்தது. விஜயநகரப் பேரரசு மூலம் அந்த முஸ்லிம் ஆட்சி முறியடிக்கப்பட்டு 1520ல் விஜயநகரர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் நாயக்கர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அவர்கள் ஆட்சியாண்டில் 1623முதல் 1659வரையிலான மன்னர் திருமலையின் ஆட்சி மீனாட்சியம்மன் கோயிலுக்கும் மதுரைக்கும் ஒரு பொற்காலமாக இருந்திருக்கிறது. 1736ல் நாயக்கர்கள் வீழ்ச்சியுற, 1801ல் பிரிட்டிஷாரிடம் சென்றது. ஆங்கிலேயர்கள் இவ்விடத்தின் கலைப் பொருட்களை வளர்க்காவிட்டாலும், அழிக்கவில்லை என்று நண்பர்கள் கூறுவதைக் கேட்க ஆறுதல் உண்டாகிறது.
தற்போதைய மதுரையின் மையப்பகுதி பெரும்பாலும் நாயக்கர்களால் கட்டப்பட்டதாகும். கோயில், மனனர் அரண்மனை நடுவிலிருக்க, அதனைச் சுற்றி வீதிகளையும் குடியிருப்புகளையும் அமைக்கும், இந்து நகர அமைப்பான “சதுர மண்டல முறை” மதுரையில் பின்பற்றப்பட்டுள்ளது. இதே போன்ற அமைப்பை புதுக்கோட்டையிலும் பார்க்கலாம்.
கோயிலின் தோற்றம் (புராணக்கதை)
இந்திரன் ஒருமுறை ஒரு துர்தேவதையைக் கொன்றதற்கு பிராயச்சித்தம் செய்யும் பொருட்டு பூலோகத்திற்கு வந்தான். அப்போதைய பாண்டிய நாட்டின் கடம்ப வனத்திற்கு வந்தபோது தன் துன்பங்கள் நீங்கியதை உணர்ந்தான். உண்மையை அறியமுற்பட்ட போது, அங்குள்ள ஒரு கடம்ப மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கம்தான் தன் துன்பம் நீங்கியதற்குக் காரணம் என்பதை அறிந்தான். அதன் பக்கத்தில் ஒரு சிறு குளமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவன் சிவலிங்கத்தை வணங்கி அதற்கென ஒரு சிறிய கோவிலைக் கட்டினான். அந்த சிவலிங்கம் இன்னும் வழிபாட்டில் இருந்து வருகிறது. அதற்கு இந்திர விமானம் என்ற பெயர் கொண்டு மதுரை கோயிலில் இருந்துவருகிறது.

ஒருமுறை மானவூரைச் சேர்ந்த தனஞ்செயன் என்ற வியாபாரி கடம்ப வனத்தின் வழியாகச் சென்ற போது, இரவு இந்திர விமானத்தில் தங்க நேர்ந்தது. காலையில் அவன் எழுந்து பார்த்தபோது சிவலிங்கத்தை வழிபட்டதற்குரிய அடையாளங்கள் தெரிந்தது. அதனை தேவர்களின் வேலையென நினைத்த வியாபாரி மன்னன் குலசேகரபாண்டியனிடம் சென்று கூறினான். அதற்கு ஏற்றார்போல் முதல் நாள் இரவே, சிவபெருமான் பாண்டியனின் கனவில் தோன்றி குறிப்பிட்ட இடத்தில் ஒரு கோயிலும், அதனை மையமாகக் கொண்டு ஒரு நகரத்தையும் நிர்மாணிக்குமாறு பணித்தார். குலசேகரனும் கட்டி முடித்தான்.

முதன் முதலில் குலசேகர பாண்டியனால் இந்தக்கோயில் கட்டப்பட்டது என்றாலும், அந்தக்கோயிலை மிகச்சிறப்பாக மாற்றிய பெருமை நாயக்கர்களையே சாரும். நாயக்கர்கள் மதுரையை 16முதல் 18ஆம் நூற்றாண்டு வரை ஆண்டிருக்கிறார்கள். அதனால் தங்களது ராஜமுத்திரையின் பிரதிபளிப்பாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை நிர்மாணித்திருக்கிறார்கள்.
கோயில் அமைப்பு

இந்தப் பகுதியில் கோயிலின் பரப்பும் அதன் அமைப்பையும் பார்க்கலாம். மதுரை மாநகரின் நடுநாயகமான இந்தக் கோயில்750×830 அடி பரிமாணத்தில் 25ஏக்கர் அளவில் அமைக்கப் பட்டுள்ளது. இந்தக் கோயிலின் பனிரெண்டு கோபுரங்களும் கடவுள் மற்றம் புனித தேவதைகளின் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நான்கு பெரிய கோபுரங்களும் திசைக்கொன்றாக வெளிச் சுவரில் இருக்கின்றன. தெற்கு வாசலில் உள்ள இந்தக்கோபுரம்தான் மற்றவைகளைவிட பெரியது. கீழிருந்து கிட்டத்தட்ட 50 மீட்டர் (160 அடி) உயரத்தில் இருக்கறது. இந்தக்கோபுரத்தின் மீது மட்டுமே நம்மால் ஏறிப்பார்க்கமுடியும். இந்தக்கோபுரத்தின் மீதிருந்து பார்த்தால் மற்ற அனைத்து கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் மிகத் தெளிவாகப் பார்க்கமுடியும்
மீனாட்சிக்கு நான்கு, சொக்கநாதருக்கு நான்கு, சுற்றுச் சுவரில் நான்கு என இந்தக் கோயிலில் 12 கோபுரங்கள் இருக்கின்றன. வெளிச்சுற்றுச் சுவரில் இருக்கும் ஆச்சரியப்பட வைக்கும் கோபுரங்களே மதுரையின் சிறப்பு. இந்தக் கோபுரங்களைப் பற்றிய சிறப்புப் பகுதி அடுத்த பக்கத்தில் வர இருக்கிறது.
இந்த நான்கு சுற்றுச்சுவர் கோபுரங்களை விடுத்து, மேலும் நான்கு சிறிய கோபுரங்கள் இந்த இரண்டு ஆலயங்களிலும் காணப்படுகின்றன. வேலைப்பாடுகள் முடிக்கப்படாமல் உள்ள கிழக்கு வாசல் ராஜகோபுரத்தின் அடிப்பகுதி கிட்டத்தட்ட 60 மீட்டர்கள் இருக்கிறது (174 சதுர அடி) இதன் வேலை முடிக்கப்பட்டால் இந்தக் கோயில் இந்தியாவின் மிகச்சிறந்த கோயில்களுள் ஒன்றாகிவிடும். வருத்தத்தைத் தரும் வகையில் இது முடிவு பெறாமல் இருக்கிறது.
கோயில் மதில்சுவருக்கு உள்ளேயே இருப்பவை ஆடிவீதிகள் என்றும், மதிலுக்கு வெளியே உள்ளவை சித்திரை வீதிகள் என்றும், பிறகு ஆவணி மூல வீதிகள் பிறகு மாசி வீதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன (பார்க்க மாநகர வரைபடம்). பிறகு இருப்பவை வெளி வீதிகள் ஆகும். அந்தந்த மாதங்களில் அந்தந்த வீதிகள் சுவாமியும் அம்பாளும் வலம் வருவதைக் குறிக்கும் வகையில் அந்த வீதிகளுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, பாண்டிச்சேரி நகரங்களும் இதே அமைப்பை ஒத்திருப்பதைப் பார்க்கிறோம். கிழக்கு மேற்காக நீண்டுள்ள இந்த முழு அமைப்பும் நான்கு திசைகளிலும் உள்ள கோபுரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சுற்றின் தொடக்கம்
தற்போது நாம் கோயிலை எப்படி வலம் வரப்போகிறோம் என்று சிந்திப்போம். அனைத்து கலைப் பொருட்களையும் பார்க்க ஏதுவாக, நாம் புதுமண்டபம் வழியாக இராஜகோபுரத்தை அடைவோம். கோயிலுக்கு வெளியில் உள்ள அந்த சித்திரை வீதிகளை ஒரு வலம் வந்து நான்கு கோபுரங்களையும் பார்த்தபின்னர் அம்மன் வாயில் வழியாக உள்ளே நுழைவோம். மீனாட்சி நாயக்கர் மண்டபம், சித்ர கோபுரம், முதலி மண்டபம், பொற்றாமரைக்குளம், ராணிமங்கம்மாள் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூண்டு மண்டபம் வழியாக அன்னை மீனாட்சி சந்நிதியை அடைவோம்.

அங்கு அன்னையை வழிபட்டபின் சண்டிகேஸ்வரர் சன்னதி வழியாக முக்குருணிப் பிள்ளையாரை வணங்கி சுந்தரேசுவரர் கோயில் பிரகாரத்தைச் சுற்றுவோம். சாட்சிக்கிணறு, வெள்ளியம்பலம், கம்பத்தடி மண்டபம் வழியாக சுவாமி சன்னதியை அடைவோம். சுந்தரேசுவரரை வணங்கிவிட்டு வீரவசந்தராயர் மண்டபம், மங்கையர்கரசியார் மண்டபத்தைப் பார்த்துவிட்டு ஆயிரங்கால் மண்டபத்தையும் அதனுள் உள்ள கலைக்கண்காட்சியையும் ரசிப்போம். அங்கிருந்து ராஜகோபுரம் வழியாக வெளியே வந்து ஏழுகடலைப் பார்த்துவிட்டு நம் மதுரைப் பயணத்தை முடிக்கலாம். முடிக்கும் தருவாயில் மதுரையின் திருவிழாக்கள் பற்றியும் அருகில் உள்ள முக்கிய இடங்கள் பற்றியும் செய்திகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
நிலை 1
வசந்த மண்டபம்

இந்த மண்டபம் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த மண்டபம் புதுமண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. 22 ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த மண்டபத்திற்கு மூன்று புறம் பாதையுள்ளது. 333×105 அடிகள் என்ற அளவில் செவ்வக வடிவில் இந்த மண்டபம் இருக்கிறது. மண்டபத்தின் மேற்குக் கோடியில் உள்ள மார்பிள் இருக்கை இறைவன்-இறைவியின் ஆசனமாக உபபோகப்படுத்தப்படுகிறது. வசந்தோத்சவம் என்று சொல்லப்படுகிற இளவேனிற்கால திருவிழா வைகாசி மாதம் இந்த மண்டபத்தில் வைகாசி மாதம் (மே/ஜுன்) நடைபெறுகிறது.
இந்த மண்டபத்தின் தூண்களில் சிவன், மீனாட்சி, அவர்களின் திருமணம் இவற்றுடன் மதுரையை நிர்மாணித்த விஸ்வநாத நாயக்கர் முதல் திருமலை நாயக்கர் உட்பட பத்து நாயக்கர்கள் மற்றும் அவரது துணைவிகள் ஆகியோரது சிற்பங்கள் புடைக்கப்பட்டுள்ளன. யாளிகள் நிறைந்திருக்கும் இந்த மண்டபத்தில் உள்ள குதிரைவீரர்களின் குதிரைக் குளம்புகள் சிப்பாய்களின் தோள்களில் ஓய்வெடுக்கின்றன.

புது மண்டபத்தில் உள்ள அழகான சிற்பங்களின் பெயர்கள் பின்வருமாறு:
1. ஏகபாதமூர்த்தி
2. இரண்டு யானைகளுடன் கூடிய யாளி
3. குதிரை வீரர்கள்
4. கஜயுகர்
5. தடாதகைப் பிராட்டியார்
6. சூரியன்
7. புலிக்குப் பால்கொடுத்தது
8. பன்றிக்குட்டிகளுக்குப் பால்கொடுத்தது
9. சந்திரன்
10. சுந்தரேஸ்வரர்
11. துவாரபாலகர்கள்
12. நாயக்க மன்னர்கள் (1 முதல் 10 பட்டம் வரை)
13. கருப்பத்தி கருங்கல் சவுக்கை
14. கருங்குருவிக்கு உபதேசம்
15. மையப்பகுதியின் மேல்விதானத்தில் ராசிச்சக்கரம்
16. கல்யானைக்குக் கரும்பு கொடுத்தது
17. பதஞ்சலி
18. வியாக்ரபாதர்
19. பத்ரகாளி
20. ஊர்த்துவ தாண்டவர்
21. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணக்காட்சி
22. பிரம்மா
23. தேவேந்திரன்
24. அர்த்த நாரீஸ்வரர்
25. சங்கர நாராயணர்
26. அதிகார நந்தி
27. கைலாச பர்வதம்
28. திரிபுரஸம்ஹாரம்

நிலை 2 –
கம்பீரமான கோயில் கோபுரங்கள் – சித்திரை வீதியில் ஒரு பயணம்
இராஜகோபுரம்

புது மண்டபம் தாண்டி, கிழக்கில் முடிவடையாத ராஜகோபுரம் உள்ளது. இந்தப் பெரிய கோயில் கோபுரம் 174×107 அடிகள் அளவிலான அடிப்பரப்பைக் கொண்டுள்ளது. நுழைவாயில் 22 அடிக்கு உள்ளது. இதன் ஒரே கல்லினால் ஆன தூண்கள் கிட்டத்தட்ட 30 மீட்டர்கள் இருக்கின்றன. திருமலை நாயக்கர் இந்த மகாபெரிய செயலை ஆரம்பித்தவர். ஆனால் பணிகள் முடியும் முன்னே இவர் காலமானார்.
கிழக்கு கோபுரம் (ஒன்பது தளங்கள்) 161’3″. 1011 சிற்பங்கள்
அம்மன் வாசல்
கிழக்கு சித்திரைவீதியிலேயே, இராஜகோபுரத்திற்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது இக்கோபுரம். ஒரு நுழைவாயில் போன்ற அமைப்பை ஒத்திருக்கும் இந்த கோபுரம் அம்மன் சந்நிதிக்கு நேரே உள்ளது.
தெற்கு கோபுரம்
ஒன்பது தளங்கள் கொண்ட இந்தத்தெற்கு கோபுரம் 170’6″ உயரத்துடன் 1511 சிற்பங்களைக் கொண்டுள்ளது. வெளிச்சுற்றுகளிலேயே உயரமாக மிகவும் கம்பீரமாக இந்தக் கோபுரம் வீற்றிருக்கிறது. தெற்கு கோபுரத்திலிருந்து நேரே சென்று பெரியார் பேருந்து நிலையத்தை அடையலாம்
மேற்கு கோபுரம்
மேற்கு கோபுரத்திலும் ஒன்பது தளங்கள் உள்ளன. 163’3″ உயரத்துடன் 1124 சிற்பங்களைக் கொண்டிருக்கும் இந்த கோபுரம் டவுன்ஹால் ரோடு வழியாக மதுரை ரயில்வே சந்திப்பைச் சென்றடைகிறது.
வடக்கு கோபுரம்
கிழக்குக் கோபுரத்தை ஒத்து கட்டப்பட்டுள்ள இந்த வடக்கு கோபுரம் ஒன்பது தளங்களுடன் 160’6″ உயரமுடையது. மற்ற கோபுரங்களை விட குறைவான சிற்பங்களே இதில் காணப்படுகிறது. கோபுரத்தின் பெரும்பகுதி தூண், பிள்ளைக்கால்கள் போன்றவைகளால் பின்னப்பட்டிருக்க, சிலைகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும்.
வேலை முடியாத ஒரு கிழக்கு வாசல்
இந்த நான்கு சுற்றுச்சுவர் கோபுரங்களை விடுத்து, மேலும் நான்கு சிறிய கோபுரங்கள் இந்த இரண்டு ஆலயங்களிலும் காணப்படுகின்றன. வேலைப்பாடுகள் முடிக்கப்படாமல் உள்ள கிழக்கு வாசல் ராஜகோபுரத்தின் அடிப்பகுதி கிட்டத்தட்ட 60 மீட்டர்கள் இருக்கிறது (174 சதுர அடி) இதன் வேலை முடிக்கப்பட்டால் இந்தக் கோயில் இந்தியாவின் மிகச்சிறந்த கோயில்களுள் ஒன்றாகிவிடும். வருத்தத்தைத் தரும் வகையில் இது முடிவு பெறாமல் இருக்கிறது.
நீங்கள் இந்த ஐந்து வழிகளில் ஏதேனும் ஒன்று வழியாக உள்ளே வரலாம். பெரும்பாலும் மீனாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே இருக்கிற கிழக்கு வாசல்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. கோவிலின் மூலாதாரமான மீனாட்சி வீற்றிருக்கும் திசையை, மக்கள் அதிகம் விரும்புவதில் ஏதும் வியப்பில்லையே. இந்த ஒரு வாயில் மட்டுமே கோபுரம் முடிவு பெறாமல் இருக்கிறது. இதன் பெரிய வடிவமும், பரிமாணங்களும் சிதம்பரம் கோயிலை ஒத்திருக்கிறது. இங்கு இன்னும் வெளியிடப்படாத சில கல்வெட்டுகள் இருக்கின்றன. இந்தக் கோபுரத்தின் கீழ் மதுரையின் காவல் தெய்வம் மதுரைவீரன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். இவருக்கு அருகில் பதினெட்டாம் படி இருக்கின்றது. இங்கு பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க சத்தியப் பிரமாணம் பெறப்படுவதாகவும், இங்கு பொய்சொன்னால், அவருக்கு உடனடி தண்டனையாக மரணம் ஏற்படுவதாக கிராமத்து பேச்சு வழக்குகள் தெரிவிக்கின்றன
நிலை 3
இந்த திருச்சுற்றின் இரண்டாம் நிலையில் நாம் கீழ்கண்ட ஐந்து இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம்.
1. அஷ்டசக்தி மண்டபம் (அம்மன் கேட்)
2. மீனாட்சி நாயக்கர் மண்டபம்
3. ஆடிவீதிகள் (உள்கோயில் பிரகாரம்)
4. சித்ர கோபுரம்
5. முதலி மண்டபம்
அஷ்ட சக்தி மண்டபம்
கிழக்கு வாசல் கடந்து ராஜகோபுரம் விடுத்து, அம்மன் வாசல் (amman gate) என்று அழைக்கப்படும் அஷ்ட சக்தி மண்டபத்தின் வாசலை வந்தடைகிறோம். இந்த வாயில் வழியாக நுழையும் நமக்கு அஷ்டசக்திகள் (எட்டு விதமான சக்தி வடிவங்கள்) மண்டபம் முதலில் தென்படுகிறது. இந்த மண்டபத்தின் சிற்பங்கள், அன்னை மீனாட்சியை எட்டு விதமான சக்திகள் உருவத்தில் காட்டுகிறது. எனவே இந்த மண்டபத்திற்கு இந்தப் பெயர் வந்திருக்கிறது.
இந்த மண்டபத்தில் தேங்காய், பழம், கற்பூரம் மற்றும் பூஜைக்குத் தேவையான பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கின்றன. இந்த மண்டபம் திருமலை நாயக்கர் மனைவி ருத்ரபதி அம்மாவால் கட்டப்பட்டது. வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு ஒரு காலத்தில் இந்த மண்டபத்தில்தான் உணவு வழங்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். இங்குள்ள மேல்மாடத்தில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மீனாட்சியின் திருவிளையாடல்களை நினைவு படுத்துவதாக உள்ளன. மீனாட்சியின் பிறப்பு, அவளது வாழ்க்கை, மதுரையின் இளவரசியாவது என்ற சரித்திர சங்கதிகளை நினைவு படுத்தும் அந்த சிற்பங்கள் கோயிலுக்குள் நுழையும் முன் மிகுந்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இந்த மண்டபத்தின் வர்ண வேலைகள் அழகுக்கு அழகூட்டுகின்றன. அவற்றிற்கென உள்ள அழகை தூசுகள் அடைந்து மறைப்பது இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு அழகில்லை.
இந்த மண்டபத்தின் வாயிலில் அன்னை மீனாட்சியின் புத்திரர்களான விநாயகர் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோரின் ஒரே கல்லிலான சிற்பங்களை நீங்கள் பார்க்கலாம். இந்தக் கோயிலின் அதிகமான இடங்களில் இவர்களைப் பார்க்க முடியும். இவர்களுள், விநாயகர் சிறு பாலகனாக, நான்கு கைகளுடனும், யானை முகத்துடனும், ஒரு தந்தத்துடனும், சிறிது தொப்பையுடனும் இருக்கிறார். அவருடைய வாகனமான மூஞ்சூறு அருகில் உள்ளது.
புராணக் கதையின் படி, விநாயகரை பார்வதி தேவி தன் உடலில் உள்ள பூசும் சந்தனத்தில் உருவாக்கி உயிர் கொடுத்ததாகவும்- அவரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை நவகிரகங்களுள் ஒன்றான சனியிடம் ஒப்படைக்க-சனியின் உக்கிரப்பார்வையில் விநாயகர் தலை காணாமல் போக, படைப்புக் கடவுள் பிரம்மா யானையின் தலையை வைத்ததாக ஒரு கதை உண்டு. மாறாக, விநாயகரை உருவாக்கிய பார்வதி தேவி அவரைக் காவலுக்கு வைத்துவிட்டு குளிக்கப்போக-அந்த சமயத்தில் வந்த சிவனுக்கு அவர் அனுமதி மறுக்க-ஏற்பட்ட பிரச்சினையில் சிவன், விநாயகர் யாரென்று தெரியாமல் தலையை துண்டிக்க, பின்னர் பார்வதியின் கோபத்திற்கு பயந்து கையில் கிடைத்த யானையின் தலையை ஒட்ட வைத்ததாகவும் வரலாறு உண்டு. மனைவியின் கோபத்திற்கு பரம்பொருள் கூட விலக்கில்லை போலிருக்கிறது.
விநாயகரின் உடைந்த தந்தத்திற்கும் இரு வகையாக செவிவழிச் செய்திகள் உண்டு. கைலாயத்தில் காவலாய் விநாயகர் இருக்க-சத்திரியர்களை அழித்த பரசுராமர் சிவனைப் பார்க்க வரும்போது விநாயகர் குறுக்கிட்டு அனுமதி மறுக்க-கோபக்கார பரசுராமர் தன் கோடரியால் தாக்க முற்பட-தன் தந்தையால் பரசுராமருக்குக் கொடுக்கப்பட்ட கோடரியை எதிர்க்காமல் தன் ஒற்றைத்தந்தத்தில் வாங்கியதாக ஒரு கதை உண்டு. அது மட்டுமில்லாமல், வியாசர் மகாபாரதத்தைப் போதிக்க – காலம் கருதி தன் தந்தத்தை உடைத்து விநாயகர் எழுதியதாக மற்றொரு செய்தி உண்டு.
விநாயகரை பார்வதி உருவாக்கியது போல, சுப்பிரமணியரை சிவன் உருவாக்கினார். அவரது தீப்பொறியை கங்கை நீரில் சேர்க்க, அதில் உருவான குழந்தை சுப்பிரமணியன். அச்சிறு பாலகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்க்க, அவனுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் உண்டானது. பனிரெண்டு கைகளும், ஆறு முகங்களுடனும் உடைய சுப்பிரமணியனை சமஸ்கிருதக் கவிஞர் காளிதாசர் தன் குமார சம்பவத்தில் முருகனின் அழகில் மயங்கி பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மீனாட்சி நாயக்கர் மண்டபம்

வினை தீர்க்கும் மயில்வாகனனின் அனுமதியுடன் நாம் நுழையும் இந்த மண்டபத்தில் ஐந்து நடைபாதைகள் உள்ளன. இந்த மண்டபம் திருமலையின் அமைச்சர்களுல் ஒருவரான மீனாட்சி நாயக்கரால் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அவர் பெயரின் பெயரிலேயே இம்மண்டபமும் அழைக்கப்படுகிறது. அஷ்ட சக்திக்கு அருகாமையில் உள்ள பெரிய மண்டபம் மீனாட்சி நாயக்கர் மண்டபம் ஆகும். இந்த மண்டபத்தில் 110க்கும் மேற்பட்ட யாளிகள் உள்ளன (யாளி-சிங்க உடலும் யானை முகமும்கொண்ட உருவம்)
இது ஆறு வரிசை கற்தூண்களால் தாங்கப்படுகிறது. இரண்டு வழிகளில் கடைகளும், ஒன்றில் கோயில் விழாக்களில் பயன்படுத்தப்படும் கோயில் யானைகள் உள்ளன. நடைபாதையின் மற்றொன்று பெரிய, அழகான பித்தளை திருவாச்சிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இது சிவகங்கை ஜமீன்தாரரால் வழங்கப்பட்டது. இதில் சிறிய விளக்குகள் நிறைய உண்டு. ஒவ்வொரு நாள் மாலையும் அவை ஏற்றப்படுகின்றன. அந்தக் மிக அழகான காட்சி எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் ரம்மியமானதாகத் தோன்றும்.
பிரகாரம் (ஆடி வீதி)

இடது புறம் திரும்பினால் இருப்பது வெளிப் பிரகாரம். இது ஆடிவீதி என்றும் அழைக்கப்படும். கற்கள் பதிக்கப்பட்டு, சுத்தமாக இந்தப் பகுதி விளங்குகிறது. தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர் கோயில் அலுவலகங்கள் உள்ளன. கிழக்கு ஆடிவீதியில் வன்னி மரத்தடி விநாயகர் ஆலயத்தில், பெண்கள் தங்களின் வேண்டுதல்களுக்காக தொட்டில் கட்டி வழிபடுவதைக்காணலாம்.
சித்ர கோபுரம்

மீனாட்சி நாயக்கர் மண்டபத்திற்கு மேற்கில் ஏழு அடுக்குகள் கொண்ட சித்ர கோபுரம் உள்ளது. உள்கோபுரங்களில் உயரமானதும் கலைநயத்தில் உன்னதமானதும் இந்தக் கோபுரம்தான். இந்தக் கோபுரத்தில் கிட்டத்தட்ட 730 அழகிய சின்னஞ்சிறிய சிலைகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது (Courtesy: www.digitalmadurai.com)
முதலி மண்டபம்

சித்ராகோபுரம் நம்மை ஒரு நடைபாதையை விடக் குறுகிய, நடைப்பாதையைவிட சற்றே பெரிதான, வெளிச்சம் அதிகமில்லாத குருகிய கூடத்தில் கொண்டு விடுகிறது. இது முதலி மண்டபம். இந்தக் கூடத்தில் அரிய வகை சிற்பங்கள் இருக்கின்றன. சிவன் பிக்ஷாந்தராக உள்ள சிற்பம், மோகினியின் சிற்பங்கள், தாருகா காடுகளின் முனிவர் ஒருவரது சிலை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

நிலை 4
இந்த திருச்சுற்றின் இரண்டாம் நிலையில் நாம் கீழ்கண்ட நான்கு இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம்.
1. பொற்றாமரைக்குளம்
2. ராணி மங்கம்மாள் மண்டபம்
3. ஊஞ்சல் மண்டபம்
4. கிளிக்கூண்டு மண்டபம்
பொற்றாமரைக்குளம்
அந்த மண்படத்தைக் கடந்து தற்போது பொற்றாமரைக் குளத்தை அடைந்திருக்கிறோம். தெற்கு வாசல் பக்தர்களை நேரடியாக பொற்றாமரைக் குளத்திற்கு அழைத்து வருகிறது. அந்த நடைபாதையிலிருந்து படிகள் இறக்கப்பட்டு இருக்கிறது. பக்தர்கள் தண்ணீரைப் பயன்படுத்த அந்தப் படிகள் உதவுகின்றன. இந்தக் குளத்தைச் சுற்றிலும் தூண்கள் நிறைந்த நடைபாதை உள்ளது. பொற்றாமரைக்குளம், மதுரை கோயில் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது. எவ்வளவு புனிதமானதோ அவ்வளவு புனிதமானது. 40×60 மீட்டர்கள் அளவில் அமைந்துள்ள இந்தக்குளம் தமிழ்ச்சங்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளது என்பது சரித்திரப் பக்கங்களில் கூறப்பட்டுள்ளது
இதனைச் சுற்றியுள்ள சுவர்களில் Fresco வகை மனதை மயக்கும் ஓவியங்கள் மீனாட்சியின் வாழ்க்கைச் சிறப்பபை விளக்கும் வகையில் வரையப்பட்டுள்ளன. திருக்குறள் அடிகள் சலவைக்கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. அன்னை மீனாட்சியின் சிற்பமும், விபூதி விநாயர் சிற்பமும் தெற்குக் கரையில் உள்ளன. இக்குளத்ததின் வடக்குக் கரையில் வியாபாரி தனஞ்செயன் (லிங்கத்தைக் குளத்திற்குள் இருந்து கண்டுபிடித்தவர்), குலசேகரபாண்டியன் (கோயிலைக் கட்டிய பாண்டிய மன்னன்) ஆகியோரது ஆளுயர சிலைகள் எதிரெதிரே வடிக்கப்பட்டுள்ளன.
இந்தக் குளத்திலிருந்து கோபுரங்களின் காட்சி மிக அழகாக இருப்பதை உணர்கிறீர்கள். பிராமணர்கள் மாலை வேலைகளில் இந்தக் குளத்தில் மந்திரங்கள் ஓதுவதும், சமஸ்கிருத வகுப்பு நடப்பதாகச் சொல்கிறார்கள். கோயிலுக்கு மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கீழ்தளமும் சிமெண்ட் தளமாகிவிட்டதால் மீன்களுக்கும் இங்கே வேலையில்லை. இக்குளத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள சிறு பூங்கா இந்த இடத்திற்கு அழகு சேர்க்கிறது.
இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சங்கப் புலவர்களின் புகலிடமாகவும் அவர்கள் ஆலோசனை செய்யும் தமிழ் கூடாரமாகவும் விளங்கியது. புலவர்கள் எழுதிய கவிதைகளை இந்தக் குளத்தில் மிதக்கவிட்டு, அதில் மிதந்து வரும் கவிதைகளே தரமான கவிதைகள் என்று ஏற்றதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் இறைவன் தமிழ் மீது மையல் கொண்டு புலவர்களுடன் வாதம் செய்த இடமாகவும் மீனாட்சி அம்மன் கோயிலையே குறிப்பிடுகின்றனர்.
இந்திரனின் பூலோக வருகையின் போது இந்தக் குளம் அவனுக்கு தாமரைகளைக் கொடுத்ததாக வரலாறு உள்ளது. தற்போது இந்தக் குளத்திற்குள் தாமரைகள் இல்லை. அதற்கும் ஒரு கதை உண்டு. முன்னொரு காலத்தில் இந்தக் குளத்தின் அருகில் ஒரு கொக்கு தவம் புரிந்து வந்தது. அப்போது இக்குளத்தில் உள்ள மீன்கள் அதனிடம் குறும்பு செய்தன. அந்தக் கொக்கு அதனை சட்டை செய்யவில்லை. ஆனால் அது முக்தி அடையும்போது இறைவனிடம் “இந்தக்குளத்தில் எந்த உயிரினமும் இருக்கக் கூடாது ” என்று வரம் வாங்கிவிட்டதாக அந்தக் கதை கூறுகிறது.
இராணி மங்கம்மாள் மண்டபம்

17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள், தன் நாட்டிற்கு அருகில் உள்ள மற்ற நாடுகளுடன் சிநேகமான உறவு வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள். 15ஆண்டுகாலம் மதுரையை உண்மையாகவும், செங்கோல் வளையாத வண்ணம் ஆட்சி செலுத்திய ராணிமங்கம்மாள், நன்றி கெட்ட மற்றும் பொறாமை குணம் கொண்டவர்களால் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்தார் என்று அறியும்போது மனம் கனக்கிறது. இந்தக் குளத்தில் இவர் கட்டிய மார்பிள் பதிக்கப்பட்டுள்ள ஒரு மாடம் உள்ளது.
குறிப்பிட்ட ஒரு விழாவின் போது இறைவனும் இறைவியும் இங்கு வருகிறார்கள். மேல்கூரையில் மங்கம்மாள் அரசி, அவரது பேரன் சொக்கநாதர், திருமரையின் புகழ்பெற்ற தளபதி ராமய்யன் தளவாயின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தில் ராணி, அவரது அமைச்சர் ராமய்யன், அவரது பேரன் விஜயரங்கச் சொக்கநாதர் ஆகியோரது சிலைகள் உள்ளன. ராணி மங்கம்மாள் காலம் முதற்கொண்ட பல ஓவியங்கள் இம்மண்டபத்தில் உள்ளன. அதன் மேற்கூரையில் வரையப்பட்ட மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண ஓவியம் தென்னிந்தியத் திருமணங்களின் சடங்குகளையும், அதன் மகிழ்ச்சியினையும் வெளிப்படுத்துகிறது. தெய்வங்கள் அனைவரும் பகட்டாக உடையணிந்திருந்து, தெய்வீக மணமக்களைச் சுற்றியிருக்க, மணமகளின் சகோதரர் பெருமாள் (விஷ்ணு) பாசத்துடன் அவர் தங்கையைத் தாங்கி நிற்க, படைப்பாளி பிரம்மா அக்னி முன் வேதங்களை ஓதி நிகழ்ச்சியைச் சரிவர நடத்துகிறார்.
ஊஞ்சல் மண்டபம்

ராணி மங்கம்மாள் மண்டபத்திற்கு எதிர்புரம் கருப்பு மார்பிள் மண்டபமும் அதன் விதானத்தில் ஒரு ஊஞ்சலும் தொங்குகிறது. இதுதான் ஊஞ்சல் மண்டபம் ஆகும். இங்குதான் மீனாட்சி-சுந்தரேசுவரர் விக்கிரகங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6.00 மணிக்குக் கொண்டுவரப்பட்டு சம்பிரதாய ஊஞ்சலாட்டு நடத்தப்படும். தெய்வத்திருப்பாடல்கள் இசைக்க, மீனாட்சி அம்மாவும், சுந்தரேசுவரரும் ஊஞ்சலாடுவது காணக்கிடைக்காத காட்சி. இந்த சிலைகள் முறையே 45 மற்றும் 35 செண்டிமீட்டர் ஆக இருக்கலாம். அந்தச் சிலைகள் 16ஆம் நூற்றாண்டிலிருந்து, அதாவது விஸ்வநாத நாயக்கர் காலத்திலிருந்தே வழிபாட்டில் இருந்து வருகின்றன.

இந்த மண்டபத்தின் அருகில் உள்ள மேற்குக் கரையின் கூரையில் உள்ள தற்கால ஓவியங்களும், பக்கவாட்டில் உள்ள சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ள சிவனின் திருவிளையாடல்களும் புராணக் கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.

கிளிக்கூண்டு மண்டபம்
பொற்றாமரைக் குளத்திற்கு வடமேற்கில் கிளிக்கூண்டு மண்டபம் இருக்கிறது. பெயரைப் போலவே அந்தக்கூடத்தில் உள்ள கூண்டுகளில் கிளிகள் வளர்க்கப்படுகின்றன. அவை மீனாட்சி மீனாட்சி என்று சொல்லும் வகையில் பயிற்சி அளிக்கப் பட்டிருக்கின்றன என்பது ஒரு ஆச்சரியமான செய்தி. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த மண்டபத்தில் 28 ஒரே கல்லினால் ஆன தூண்களும், அதில் இந்து சரித்திரம் வெளிப்படும் வகையில் பாண்டவர்கள், வாலி, சுக்ரீவன் அவர்களைத் தொடர்ந்து இடையராது தொடரும் யாளிகளும் சிலைகளாக வடிக்கப்பட்டிருக்கின்றன. இச்சிலைகள் விஜயநகர மன்னர்கள் வடித்ததாகச் சொல்கிறார்கள். சொல்லப்போனால் கோவிலின் ஒவ்வொரு கூடத்திலும் குறைந்தது நான்கைந்து தூண்களாவது விஜயநகரக் கலைப்பாணியைச் சொல்கிறது. இந்த மண்டபத்தின் தென்கோடியில் ஸ்தல விநாயகர் ஆலயம் உள்ளது.
நிலை 5
இந்த திருச்சுற்றின் இரண்டாம் நிலையில் நாம் கீழ்கண்ட இரண்டு இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம்.
1. மீனாட்சி அம்மன் ஆலயம்
2. சண்டிகேஸ்வரர் ஆலயம்
மீனாட்சி அம்மன் ஆலயம்
மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வாசலில் உள்ள விநாயகர் சுப்பிரமணியரைத் தாண்டி உள்ளே நுழைகிறோம். ஐரோப்பியர்கள் (இந்துக்கள் அல்லாதவர்) இதற்கு மேல்அனுமதிக்கப்படுவதில்லை. வாயிலைத்தாண்டி உள்பிரகாரத்தில் நுழைகிறோம். உள்பிரகாரத்தின் தெற்கில் திருமலை நாயக்கரின் ஆளுயர சிலை நம்மைக் கவர்கிறது. அதனைத் தாண்டி அதற்குள் உள்ள பிரகாரதில் நுழைகிறோம். அங்கு பெரியபுராணக் காட்சிகள், அறுபத்து மூவர்களின் ஓவியங்களைக் காணலாம். மேல்கூரையில் கூட தாமரை மலர்கள் நிறைந்த ஓவியக்காட்சி உள்ளது. இந்த ஓவியங்களை முதல் தர ஓவியங்கள் என்று கூறமுடியாவிட்டாலும், அதற்கெடுத்துக்கொண்ட உழைப்பு நம்மை பிரம்மிக்க வைக்கிறது. அதையும் தாண்டி மீனாட்சி அம்மன் வீற்றிருக்கும் ஆன்மீகம் ததும்பும் உள்அறைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.
மீனாட்சியின் இளம் வயது கதை மிகவும் தெய்வீகமாக இருக்கும் அதே நேரத்தில் வீரம் ததும்புவதாகவும் இருக்கிறது. மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனுக்கு வெகு நாட்களாக குழந்தை பிறக்க வில்லை. வாரிசு இல்லாமல் மனம் வருந்திய அந்த மன்னன், பிள்ளை வரம் வேண்டி பல்வேறு யாகங்கள் செய்தான். அந்த யாகத்தீயிலிருந்து மூன்று வயது குழந்தை மீனாட்சி தோன்றியது. ஆனால் அந்தப் பெண்ணிற்கு மூன்று தனங்கள் இருந்ததாக சரித்திரத்தில் சொல்லப்படுகிறது. மன்னன் இதனால் குழப்பமும் பயமும் அடைந்தான். அப்போது ஒரு அசரீரி ஒலி, மீனாட்சி எப்போது தன் துணையைக் காண்கிறாளோ அப்போது அந்தக் குறை காணாமல் போகும் என்று கூறியது.

மீனாட்சி மிக செல்வச் செழிப்பான சூழ்நிலையில், வீரமான இளவரசியாக வளரத் தொடங்கினாள். பெற்றோரின் மறைவிற்கு முன்னரே, மிக இளம் வயதில் மதுரையின் அரசியாக செங்கோலோச்சத் தொடங்கினாள். இந்திரன் தவிர அனைத்து தேவர்களிடமும் போர் செய்து அதில் வெற்றி பெற்றாள். இறுதியாக சிவன் மீது போர்செய்ய கைலாயத்திற்குச் சென்றாள். அப்போதிருந்த சூழ்நிலையில், இறைவன் சிவனிடம் தன் மனதைக் கொடுத்தாள். கைலாசத்தில் போருக்காகச் சென்றபோது மீனாட்சி, சிவனைக் கண்டதாக புராணச் செய்திகள் கூறுகின்றன. அவரைக் கண்டதுடன் தன் மூன்றாவது தனம் மறைந்தது. அப்போதுதான் தான் யாருமல்ல, சிவனுடன் ஐக்கியமான பார்வதி தேவி என்பதை உணர்ந்தாள். அதன் பிறகு அவர்களின் அகவாழ்க்கை துவங்குகிறது. அதன் இறுதியாக சிவன் மதுரையின் அரசனாக பூலோகத்திற்கு வருகிறார். மதுரையை சில காலம் ஆண்ட பின் மீனாட்சி அம்மன் கோயிலில் அவர்கள் தெய்வங்களாக ஐக்கியமாகி மதுரையை ஆண்டு வருவதாக ஐதீகம் கூறுகிறது. இந்தச் செய்திகள் அனைத்தும் அஷ்ட சக்தி மண்டபத்தில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டள்ளன.
சண்டிகேஸ்வரர் ஆலயம்
பாசமிகு அன்னை மீனாட்சியைத் தரிசித்த பின்னர் அவளிடம் விடைபெற்று சண்டிகேஸ்வரரைச் சந்திக்கிறோம். மீனாட்சி அம்மன் ஆலயத்தைவிட்டு வெளியே வரும் முன் அந்த நல்ல மனிதரிடமும் விடை பெற்று வருகிறோம். இவர் ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார். அதனால் நம் கைகளைத் தட்டி அவர் கவனத்தை நம்மிடம் திருப்பி வணங்குகிறோம். அன்னை மீனாட்சியின் துணையான இறைவன் சுந்தரேசுவரர் (சிவன்) கிளிக்கூண்டு மண்டபத்திற்கு வடக்கில் வீற்றிருக்கிறார். எனவே வடக்கு நோக்கி முன்னேறி, முக்குருணி விநாயகரைத் தரிசனம் செய்துவிட்டு சுந்தரேசுவரர் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் நுழைகிவோம்.
நிலை 6
இந்த திருச்சுற்றின் இரண்டாம் நிலையில் நாம் கீழ்கண்ட ஐந்து இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம்.
முக்குருணிப் பிள்ளையார்
சுந்தரேசுவரர் கோயில் பிரகாரங்கள்
எல்லாம் வல்ல சித்தர்
சாட்சிக்கிணறும் சாட்சி லிங்கமும்
வெள்ளியம்பலம்
முக்குருணிப் பிள்ளையார்
சொக்கநாதரைத் தரிசிக்கச் செல்லும் வழியில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை ஒன்று உள்ளது. தமிழகத்தில் மிகவும் பிரபலமான முக்குருணிப் பிள்ளையார் (ஒரே கல்லினால் செய்யப்பட்டவர்) அவர். திருமலை நாயக்கர் மதுரைக்குக் கிழக்கே ஒரு கோயிலுக்குக் குளம் வெட்டும்போது இந்த விநாயகரை கண்டெடுத்ததாகவும் அதனை இங்கே நிறுவியதாகவும் கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்றும் மற்றும் சில முக்கிய நாட்களிலும் முக்குருணி அளவு (18 மரக்கால்) அரிசி கொண்டு கொளுக்கட்டை செய்து விநாயகருக்குப் படைப்பது வழக்கம்.

முக்குருணிப் பிள்ளையார் இங்கு வருவதற்குக் கூட ஒரு சுவையான புராணக் கதை சொல்கிறார்கள். முன்னொரு காலத்தில் முக்குருணிப்பிள்ளையார் தற்போது இருந்த இடத்தில், சுவரில் நடராஜர் இருந்ததார். நடனத்திற்கு தலைவனான நடராஜர் பார்வை படும் திசையில் உள்ள வீடுகள், அவரது பார்வையின் உக்கிரம் தாங்காமல் எரிந்து போனதாகவும், உயிர் சேதம் கூட ஏற்பட்டது. அதனைத் தடுக்கும் வகையில், சக்திவாய்ந்த தடையாக முக்குருணிப் பிள்ளையார் சிலையில் அமைக்கப்பட்டது. அதன் பிறகு தீப்பற்றி எரிவதோ, அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என்பது மதுரை மக்களின் நம்பிக்கையாகும்
சுந்தரேசுவரர் கோயில் பிரகாரங்கள்
முக்குருணி நாயகரின் அனுமதியோடு உள்ளே உள்ள மூன்று பிரகாரத்திற்கு நாம் முன்னேறுகிறோம். அவை உயரமாகவும், அகலமாகவும், விளக்குகள் மூலம் நன்கு ஒளிப்படுத்தப் பட்டுள்ளது. பிரகாரத்தைக் கடந்து சுந்தரேஸ்வரர் சந்நிதி முன் இருக்கும் தூண்கள் நிறைந்த முன்மண்டபத்திற்கு வருகிறோம். ஒவ்வொரு தூண்களிலும் ஒவ்வொரு இறைவடிவங்கள் காணப்படுகின்றன.

சொக்கநாதரைச் சந்திக்கும் முன் அவரது காவலாளிகள் வெளியே இருவர், உள்ளே இருவர் என்று நான்கு பேரைச் சந்திக்கிறோம். உள்ளே உள்ள காவலாளிகள் மதுரையின் இரு அரசர்களாவர். அவர்களின் அருகில் உள்ள சுவரில் கல்சுவரில் உள்ள கல்வெட்டுகள் இன்னும் படியெடுக்கப்பட்டதா என்று சந்தேகம் நிலவுகிறது. உட்பிரகாரத்தின் தெற்குப் பகுதியில் தென்னிந்தியாவின் 63நாயன்மார்களின் சிலைகள் உள்ளன.
அவர்களின் தெய்வீகம் நிறைந்த வாழ்க்கை வரலாற்றினை பெரியபுராணத்தின் மூலம் அறியலாம். அந்தப் பிரகாரத்தின் மற்றொரு கோடியில் தட்சிணாமூர்த்தி உள்ளார். அவருக்கு அருகிலேயே உத்சவ விக்கிரகங்கள் இருக்கும் அறையும் உள்ளது. பிரகாரத்தின் மேற்குப் பகுதியின் கடைசியில் மார்பிள் கற்களால் ஆன காசி மற்றும் பெனாரஸ் விஸ்வநாதரைக் காணலாம். அந்தச் சிலைகள் காலம் சென்ற பெனாரஸ் மன்னர் ஒருவரின் தென்னிந்திய புனித யாத்திரையின்போது அவரால் பரிசாகத் தரப்பட்டன.
எல்லாம் வல்ல சித்தர்

அங்கு எல்லாம் வல்ல சித்தரின் இடம் ஒன்று உள்ளது. சுந்தரேசுவரர் தனது அவதாரங்களுள் ஒன்றில் அதிசயங்கள் செய்யும் சித்தராக மதுரையில் தோன்றியிருக்கிறார். குருடரைப் பார்வை பெறச் செய்தும், செவிடரைக் கேட்கும் திறன் பெறச் செய்தும், கால் ஊனமுற்றவரை நடக்கச் செய்தும் பல அதிசயங்களை அரங்கேற்றியிருக்கிறார். அவரது புகழ் நாடெங்கும் பரவியிருக்கிறது. அந்தச் செய்தி மன்னரின் காதுகளை எட்டியது. உடனடியாக அந்த சித்தர் அரண்மனைக்கு அழைக்கப்பட்டார். ஆனால் தனக்கு வேலை இருப்பதாகக் கூறி ராஜஆணையை சித்தர் மறுத்துவிட்டார்.
ஒரு நாள் எதேச்சையாக மன்னரும் சித்தரும் கோயிலில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டனர். அவரது சக்தியைச் சோதிக்க வேண்டி மன்னவர், ஒரு கல்யானைக்கு கரும்பை சாப்பிடக் கொடுத்தார். எல்லோரும் ஆச்சரியப்படும் வண்ணம், அந்தக் கல்யானை கரும்பைத் தின்னது மட்டுமின்றி, மன்னன் கழுத்தில் உள்ள முத்து மாலையையும் தன் தும்பிக்கையை நீட்டி எடுத்தது. தன் தவறை உணர்ந்த மன்னவன் சித்தரின் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார். அந்தச் சித்தரின் நினைவாக இந்த ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இன்றும் எல்லா வரம் கொடுக்கும் சித்தரின் திருவிளையாடல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
சாட்சிக்கிணறும் சாட்சி லிங்கமும்
இதற்கருகில் துர்கையம்மனுக்கான மாடம் ஒன்று உள்ளது. அந்த நடைபாதையில் ஒரு கடம்ப மரம் உள்ளது. இந்த மரத்தில் அடியில் இந்திரன் அமர்ந்து சிவனை சிந்தித்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
முற்காலத்தில் கடம்பமரக்காடுகள் நிறைந்திருந்ததற்கு அடையாளமாக இன்றும் அந்த மரம் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அந்த விருட்சத்திற்கு மிகுந்த மதிப்பளித்து வருகின்றனர். அதற்கு வெகு அருகிலேயே சாட்சிக் கிணறு உள்ளது. சாட்சிக் கிணற்றின் பின்னால் ஒரு சுவையான கதை உள்ளது.
மதுரைக்கு அருகில் வாழ்ந்த ஒரு வாணிகருக்கு ஏராளமான சொத்துக்களும் ஒரு அழகான மகளும் இருந்தனர். அவர் தன் மகளை அவளது முறை மாப்பிள்ளைக்கு மணம் செய்ய விரும்பினார். துரதிருஷ்ட வசமாக அவர் இறந்து போகவே, அந்த மாப்பிள்ளை கிராமத்திற்கு வந்து அவர் சொத்துக்களை எடுத்துக்கொண்டும், அவர் மகளைக் கூட்டிக்கொண்டும் சென்றான். அங்கும் விதி விளையாடவே, அவன் பாம்பு தீண்டி இறந்தான். இந்த சோக நிகழ்ச்சியைக் கேட்டறிந்த திருஞான சம்பந்த பெருமான், அந்தப் பெண்ணின்பால் கருணை கொண்டு, அவனது மாப்பிள்ளையை உயிர்பித்தார். அதோடு, ஒரு சிவலிங்கம் மற்றும் ஒரு கிணற்றையும் சாட்சியாகக் கொண்டு அவர்கள் திருமணத்தை நடத்திச் சென்றார்.
அதன் பின்னால்தான் உண்மை தெரிய வந்தது; அவன் ஏற்கனவே மணம்முடித்தவன் என்பது. வெகு சீக்கிரமே இரு பெண்களுக்கெதிரில் பிரச்சிணை எழுந்தது. முதல் மனைவி, இரண்டாம் பெண்ணின் திருமணத்திற்கு சாட்சி கேட்க, சாட்சிக்கிணறும் லிங்கமும் அந்த இடத்திற்கு வந்து சாட்சி கூறியதாகவும், அதன் பின்னர் அந்த மூவரும் மீனாட்சியம்மன் கோயிலை நினைவில் கொண்டு வாழ்ந்ததாக அந்தக் கதை இயம்புகிறது.
வெள்ளியம்பலம்
உள்பிரகாரத்திலிருந்து கருவரைக்கு முன் உள்ள பாதையில் நுழைகிறோம். அதே வழியில் கடம்பத்தடி மண்டபமும், வெள்ளி அம்பலம் என்ற பெரிய மண்டபமும் இருக்கிறது. இங்கு நடராஜர் சிலை ஒன்று உள்ளது. அவர் சபாபதி என்று அழைக்கப்படுகிறார். அந்தச் சிலை வெள்ளியினால் செய்யப்பட்டது. எனவே வெள்ளியில் அம்பலத்தான் இருக்கும் இடம் வெள்ளியம்பலம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பிரபஞ்சத்தில் சிவபெருமான் நடனம் புரியும் இடங்களில் மதுரை ஐந்தில் ஒன்றாகும். சுவாமி சன்னதியில் உள்ள நடராஜர் கருவரை, வெள்ளி சபை என்று அழைக்கப்படுகிறது. இது தவிற, சிதம்பரத்தில் கனகசபை, திருவாலங்காட்டில் ரத்னசபை, திருநெல்வேலியில் தாமிரசபை, குற்றாலத்தில் சித்திரசபை ஆகிய இடங்கள் சிவனின் நடன சபைகளாகும்.
வெள்ளி சபை பற்றி ஒரு சுவையான புராணக் குறிப்பு உண்டு. பதாஞ்சலி மற்றும் வியாக்ரபதர் இருவரும் நடராஜரின் தீவிர அடியார்கள். அவர்கள் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் சிவனுடன் அமர்ந்து உணவருந்த கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அப்போது அவர்கள் சிவனைத் தங்களுடன் சிதம்பரத்திற்கு வரச்சொல்லி வற்புறுத்தினர். அப்போதுதான் அவர்கள் எப்போதும்போல சிவநடனத்தைக் கண்டு களிக்கலாம் என்று நினைத்தனர். அவர்களை ஏமாற்ற விரும்பாத சுந்தரேசுவரர் அவர்களை மதுரையில் தங்குமாறு வேண்டி, பிறகு, வெள்ளி சபையில் தன் நடனத்தை அரங்கேற்றினார்.
வெள்ளியம்பலம் சம்பந்தப்பட்ட மற்றொரு செய்தி; பாண்டிய மன்னன் ராஜசேகரன் (வரகுணபாண்டியன் என்றும் செய்திகள் உண்டு) சுந்தரேசுவரரின் தீவிர பக்தன். 63 கலைகளில் அவன் சிறந்திருந்தார். சோழநாட்டின் தூதுவர் ஒருவர் மதுரை கோயிலுக்கு விஜயம் செய்த போது, அவர் தந்த ஆலோசனையின் படி, மன்னரின் எதிரியான சோழமன்னர் நடனக்கலையில் சிறந்து விளங்கிய அவரிடம் பயிற்சி பெற்றால் 64 கலைகளிலும் தேர்ச்சி பெற்றான். நடனக் கலைப் பயிற்சிகளின் கடினத்தை உணர்ந்த அவன், இடது காலை மேல்தூக்கியபடி, வலது காலால் எவ்வளவுகாலம் தான் நிற்பது, நடன நாயகனுக்கு கால் வலியெடுக்காதோ என்று மனம் வருந்திய அவனது வேண்டுகோளை ஏற்று காலை மாற்றி ஆடியதாக நம்பிக்கை உண்டு.
அதனை நினைவு கூறும் வகையில் இந்தச் சிலை வடிக்கப்பட்டுள்ளது. அதற்கருகில் அந்த ரிஷிகள் பதாஞ்சலி, வியாக்ரபதர் ஆகியோரது சிற்பங்கள் உள்ளன. அவர்களுள் முன்னால் கூறப்பட்டவர் பாமினியின் சமஸ்கிருத இலக்கணத்திற்கு உரை எழுதியவர். அவரது யோகாசனம் பற்றிய செய்திகள் முன்னால் உள்ள விளக்கங்களை விட எளிமையானதாக உள்ளன. இந்த நடராஜர் சிலைக்கு முன் சிறிய சிற்பங்கள் இரண்டு உள்ளன. ஒன்று, 60 பிள்ளைகளை உடைய பெண்ணும், மற்றொன்று, மனிதர்களின் நல்லது தீயது போன்றவைகளுக்கு மதிப்பளிக்கும், சித்திரகுப்தர்.
நிலை 7
இந்த திருச்சுற்றின் இரண்டாம் நிலையில் நாம் ஒரே இடத்தைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம்.
சுந்தரேஸ்வரர் ஆலயம்
சுந்தரேஸ்வரர் ஆலயம்
முன்னரே சென்று புனித சுந்தரேசுவரர் ஆலயத்தை அடைகிறோம். அழகான சிறிய இந்தக் கோயில், எட்டு யானைகள் தாங்கும் தங்கத்தகடு பதிக்கப்ட்ட விமானத்தை உடையது. இந்தக் கோயிலின் மத்தியில் சிவன் லிங்க ரூபமாக இருக்கிறார். சுந்தரேசுவரர் என்ற பெயர் கொண்டு மக்களை இன்றும் காத்து வருகிறார். கட்டிடக்கலையைப் பொருத்தவரை மிகச்சிறந்ததாக இந்தக்கோயில் விளங்குகிறது. கைலாயத்து சிவனை தெற்கு நோக்கி இழுத்த கோயிலாற்றே!
மும்மூர்த்திகளில் சிவன் மூன்றாமவர். பிரம்மா படைக்க, விஷ்ணு காக்க, சிவன் அழிக்கும் தொழிலைச் செய்து வருகிறார். அதனால் அவருக்கு ருத்ரர் என்ற பெயர் உண்டு. அழித்தல் என்பது ஆக்கத்திற்கு வித்திடுவதாகும். எனவே சிவன் உருவாக்கத்திற்கு உதவுபவராக இருந்து வருகிறார். அவரது தோற்றம் பொதுவாக மற்றவருக்கு திகைப்பை ஏற்படுத்தும். பாம்புகளைத் தன் கழுத்திலும் உடலிலும் சுற்றிக்கொண்டு, சுடுகாட்டுச் சாம்பலை உடம்பில் பூசிக்கொண்டு, பூதங்கள் புடைசூழ, அரக்கர்கள் சுற்றிவர ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் சித்தரிக்கப்படுகிறார். நடனமக்கள் புடை சூழ தனது தேவி பார்வதியுடன் உக்கிரமாகத் தாண்டவமாடும் காட்சி பார்ப்போரை மெய் சிலிர்க்க வைக்கும். மூன்று கண்களை உடையவர் சிவன், நெற்றியில் உள்ள மூன்றாவது கண், அறிவையும், கீர்த்தியையும் குறிப்பது. உலகைக்காக்க ஆலகால விஷத்தை விழுங்கியதால் இவரது மேனி நீலமாகக் காட்சியளிக்கிறது. தலையில் பிறையை அணிந்த இவர், கர்வம் கொண்ட கங்கையைத் தன் சடாமுடியினுள் கட்டி அடக்கியவர். ஐந்து தலைகளும் நான்கு கைகளும் உடைய சிவன், தன் கையில் திரிசூலம் ஏந்தியிருக்கிறார், மேனியில் மான்தோலை உடுத்தியுள்ளார். அடிக்கடி புலித்தோலில் அமர்ந்து ஒரு மானைக் கையில் ஏந்தியிருப்பார். அவரது உதவியாளர் நந்தி, அம்பு அஜகவம், பறை டமரு. இவரது குழு கத்வாகம் என்று அழைக்கப்படுகிறது. கைலாயத்தில் வீற்றிருக்கும் இவர், கோயில்களில் பல்வாறாகச் சித்தரிக்கப்படுகிறார்.
சொக்கநாதரைப் பற்றி மேலும் சில செய்திகளைச் சேர்க்க உதவி செய்வீர்களா?
மதுரையை ஆண்ட அந்த மன்னவரிடம் விடைபெற்று நம் பயணத்தை இரண்டாம் சுற்றில் நிறுத்துகிறோம். அங்கு இருக்கும் பழநியின் நாயகர் தண்டாயுதபாணியைப் பார்க்கிறோம்-உலகம் துறந்த நிலையில். சற்று தூரத்தில் நவகிரகங்கள் உள்ளன. அவை யாவும் ஒன்றையொன்று நேரடி பார்த்துக்கொள்ளாது என்பது நமது சிற்ப சாஸ்திரம் சொல்லும் குறிப்பு.
நிலை 8
இந்த திருச்சுற்றின் இரண்டாம் நிலையில் நாம் இரண்டு இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம்.
கம்பத்தடி மண்டபம்
வீரவசந்தராயர் மண்டபம்
கம்பத்தடி மண்டபம்
நுழைவாசலுக்கு எதிரே நந்திதேவர் இருக்கிறார். அவருக்கு அருகிலேயே, கொடிமரம் (துவஜஸ்தம்பம்) உள்ளது. இநத மண்டபம் கம்பத்தடி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபத்தைத் தாங்கும் தூண்களின் சிற்ப வேலைப்பாடுகள் நம் மனதைக் கொள்ளையடிப்பதை உணரலாம். கலைஞனின் உருவான இந்த அமைதியான வெளிப்பாடுதான் அவனுக்கு கலைச் சிம்மாசனத்தை அளிக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், தென்மேற்கில் உள்ள, கைலாயத்தைத் தூக்கும் இராவணன் (இராவணன், பத்துத் தலை கொண்ட இலங்கை அரசன். இராமனுக்கு எதிரியான இவன் மிகச் சிறந்த சிவபக்தன். புராணங்களில் இராட்சசனாகச் சித்தரிக்கப் படுபவன்.)
கைலாயத்தை தன் நாட்டில் வைக்க விரும்பிய இராவணன் வடக்கே சென்று, எந்த வித கடினமும் இல்லாமல் இமயத்தைத் தூக்கி தன் நாடு நோக்கி நடந்தான். மலையில் திடீரென ஏற்பட்ட ஆட்டத்தை உணர்ந்த பார்வதி தேவி பாதுகாப்பு வேண்டி சிவனிடம் ஓட, நடந்ததை அறிந்த சிவன், இராவணனுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பி தன் இடது கட்டைவிரலால் மலையை சற்று அழுத்த, தப்பிக்க வழியின்றி கீழே மாட்டிக் கொண்டான் இராவணன். ஆனால் சிவபக்தர்களுக்குத் தெரியும் சிவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று. தன் தொடை நரம்பினால் வீணை போன்ற ஏற்பாடு செய்து, சாம வேதப் பாடல்களைப் பாட, மனம் இரங்கினார் சிவ பெருமான், இராவணனைச் செல்ல அனுமதித்தார். மற்ற தெய்வங்களுக்கு சொல்லப்படாத சிறப்பு இதுவே. சிவபெருமானுக்கும் அவர்தம் அடியார்களுக்கும் மிகச் சிறந்த உறவு உண்டு. ஒருத்தரை யொருத்தர் மதிக்கும் பண்பு வந்துவிட்டார் ஏது இங்கே பிரச்சினைகள்?
இந்த முழுச் செய்தியும் அந்த சிற்பம் குறையில்லாமல் வெளிப்படுத்துகிறது. அமைதியான சிவன், பயந்த பார்வதி, சிவகணங்கள் மேலிருக்க, பத்து கைகளால் மலையைத் தூக்கி, மீதி பத்து கைகளால் வீணை வாசிக்கும் இராவணன் என்று, நம் நினைவை அள்ளிக்கொண்டு போகிறது இந்த சிற்பம். இந்தச் சிற்பம் பிற்காலத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த மண்டபம் கி.பி. 1770ல் கட்டப்பட்டது.
உள்பிரகாரத்திலிருந்து வாசல் வழியாக கம்பத்தடி மண்டபத்தை விட்டு வெளியில் வருகிறோம். அந்த வாசல் நடைபாதையில் பைரவர், வீரபத்ரர், சபாபதி மற்றும் காளியின் நான்கு பெரிய சிலைகள் காணப்படுகின்றன. அந்தச் சிலைகள் ஒரே கல்லால் செதுக்கப்பட்டுளளன. ஒவ்வொன்றுக்கும் தனிதன்மை பிரதிபலிக்கிறது. முதல் சிற்பம் அளவீடுகளிலும், இரண்டாவது கலை நுணுக்கத்திலும், மூன்றாவது முக அமைதியை பிரதிபலிப்பதிலும், நான்காவது பயத்தை ஏற்படுத்துவதிலும் என்று கலை அந்தச் சிற்பங்களில் தாண்டவமாடியிருக்கிறது. இந்த சிற்பங்கள் இருட்டான ஒதுக்குப்புறத்தில் உள்ளதால் அதிகம் பார்வையாளர்கள் பார்க்க வாய்ப்பில்லை. ஆனால் காந்தாரம் மற்றும் கிரேக்கக் கலைகளுடன் ஒப்பீடு செய்யத்தக்க தென்னிந்திய சிற்ப வேலைப்பாடுகள் இந்த சிற்பத்தில் உள்ளன.
அங்குள்ள ஒரு வயதான பெண்ணின் சிலை காஞ்சனமாலா என்று நமக்கு சொல்லப்படுகிறது. இவர் மிகவும சோகமாக அமர்ந்துள்ளார். இந்த வயதான தாய், மீனாட்சியை வளர்த்தவராவார். தன் மகளை ஒரு ஆண்டிக்கு (சிவபெருமான்) மணமுடித்துவிட்டோ மே என்று அவர் கவலைப்படுவதாக அர்த்தப்படுத்தப்பட்டு உள்ளது.
வீரவசந்தராயர் மண்டபம்
நாம் இப்போது வாசல் வழியாக வெளியே வந்து வீரவசந்த மண்டபத்தை அடைகிறோம். இந்த மண்டபம் திருமலைநாயக்கருக்கு முன்னர் வாழ்ந்த முத்து வீரப்ப நாயக்கரால் (1609-1623) கட்டப்பட்டது. மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு முன் உள்ளது போல் இங்கும் விளக்குகள் நிறைந்த திருவாச்சி ஒன்று உள்ளது. அதற்குத் வடக்கில் முத்துராம ஐயர், கல்யாண சுந்தர முதலியார் மற்றும் சேர்வைக்காரர் மண்டபங்கள் இருக்கின்றன.
நிலை 9
இந்த திருச்சுற்றின் இரண்டாம் நிலையில் நாம் ஐந்து இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம்.
ஆயிரங்கால் மண்டபம்
இசைத்தூண்கள்
கல்யாண மண்டபம்
தட்டு சுட்டார் மண்டபம்
ஏழுகடல்
ஆயிரங்கால் மண்டபம்
வீரவசந்த மண்டபத்திற்கு இடதுபுறம் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. ஆயிரங்கால் மண்டபம் இந்தக் இடத்தின் சிறப்புகளுள் ஒன்று என்று சொல்லித்தான் ஆகவேண்டும். மற்ற மண்டபத்தில் இல்லாத சிறப்பான வேலைப்பாடுகள் ஆயிரங்கால் மண்டபத்தில் காணலாம். சுந்தரேசுவரர் சன்னதிக்குக் கிழக்கில் பெரிய இடப்பரப்பில் பல மண்டபங்கள் உள்ளன. வீர வசந்தராயர் மண்டபம் மற்றும் ஆயிரம்கால் மண்டபம் இரண்டும் இதில் பெரியவை.
ஆயிரம்கால் மண்டபத்தில் 985 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அழகாக செதுக்கப்பட்டு, 73×76மீட்டர் கூரையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மண்டபத்தின் அழகை நம் எண்ணங்களால் மட்டுமே விவரிக்க முடியும். சொற்களால் அல்ல. மக்கள் கூட்டம் ஒரே சமயத்தில் வழிபாடு செய்ய இத்தகைய மண்டபங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.
கற்தூணில் செதுக்கப்பட்ட ஆண் பெண் தெய்வ மற்றும் மனித உருவங்கள் திராவிடச் சிற்பக்கலையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இந்தச் சிலைகள் கருப்பு மார்பிளை ஒத்த கற்களில் செதுக்கப்பட்டு முடிந்தவரை மெருகேற்றப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் எங்கும் காணமுடியாத உணர்ச்சிகளை இந்த சிலைகளில் வடித்துள்ளனர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவற்றில் சில சிற்பங்கள் நம் மக்களின் கைவண்ணத்தால் கை, கால், மூக்கினை இழந்திருந்தாலும் அதன் சிறப்பு குறையாமல் உள்ளது.
16ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் இவ்வாறு பெரிய தூண்கள் கொண்ட மண்டபத்தைக் கட்டுவதில் ஆர்வமுற்றிருந்தனர். அதனால் கல் உடைக்கவும் பெரிய தூண்கள் தடையில்லாமல் செய்யவும் தனியாகக் கூடங்களே தொடங்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.
மண்டபத்தின் நுழைவாயிலில் புகழ் பெற்ற விசுவநாத நாயக்கரின் அமைச்சரான ஆரிய நாயக்கர் சிலை ஒன்று உள்ளது. அவரது பணிச்சிறப்புக்கு உதாரணமாக இந்த மண்டபம் உள்ளது. மீனாட்சியம்மன் கோயிலின் பழங்கால இடங்களுள் இதுவும் ஒன்று.
இந்நாளில் ஆயிரங்கால் மண்டபத்தில் கோவிலின் கலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அதில் 1200 கால தென்இந்திய கோயில் கட்டடக்கலையை விளக்கும் சிலைகள், புகைப்படங்கள், ஓவியங்களை வைத்துள்ளனர்.
இசைத்தூண்கள்
ஆயிரங்கால் மண்டபத்தில் ஆச்சரியமூட்டும் இசைத் தூண்களுக்கான இரண்டு மாதிரிகள் இருக்கின்றன. மேலும் ஐந்து தூண்கள் வடக்கு ஆடி வீதியில் மொட்டை கோபுரத்திற்கு அருகில் உள்ளது. அவ்வகைத் தூண்கள் ஒவ்வொன்றிலும் மைய நிரைகளும் அவற்றைச்சுற்றி சற்று சிறிய நிரைகளும் காணப்படுகின்றன. தட்டும்போது ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு வகையான ஒலியை எலுப்புவதை உணருங்கள்.
கல்யாண மண்டபம்
ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து மீனாட்சி நாயக்கர் மண்டபம் செல்லும் வழியில் உள்ளது கல்யாண மண்டபம். ஏப்ரல் மாதத்தில் இங்கு இறைவன் திருக்கல்யாணம் நடக்கும். இந்த மண்டபம் மிகச்சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் பெரியதாகவும், அடிக்கடி சமய/பொது நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடமாகவும் உள்ளது. இந்த அரங்கத்தின் ஒரு மூலையில், சிவனின் பானை வயிற்றினை உடைய பணியாள் குண்டோ தரன் உள்ளார்.
குண்டோதரன் மதுரையின் புராண வரலாற்றில் சுவையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்தவுடன், விருந்துக்குத் தயார் செய்த உணவில் பெரும்பாதி தங்கிவிட்டது. அதனை அறிந்த மீனாட்சி சற்று பெருமையுடன், சிவனின் குறைவான விருந்தாளிகளைப் பற்றி பேசினாள். அதனைக் கேட்ட சிவன், மற்றவர்களுக்கு இல்லாமல் உணவு தீர்ந்து விடுமோ என்று தன் பணியாளர்கள் யாரையும் சாப்பிட அனுப்பவில்லை என்றும், முடிந்தால் அவர்களுல் ஒருவருக்கேனும் அவர் திருப்திப்படும் வரையில் சாப்பிட வைக்க முடியுமா என்று கேட்டார். அப்போது வந்தவர்தான் குண்டோ தரன். குண்டோ தரனின் பசிக்கு சமைத்திருந்த உணவு நிமிடத்தில் காலியாகவே, களஞ்சியத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அனைத்து தானியங்களும் சமைத்து அவனுக்குத் தர, அதுவும் காலியானது. சாப்பாட்டிற்குப் பின், தாகமென்று கூறி ஊர் முழுதும் உள்ள குளம், குட்டை என்று ஒன்றையும் மீதி வைக்காமல் தண்ணீர் குடித்த குண்டோ தரன் தனக்கு இன்னும் தாகமெடுக்கிறது என்று கூறி மீனாட்சி முன்னிலையில் சிவனிடம் முறையிட, சிவன் தரையில் கைவைத்தபோது பீரிட்டு எழுந்த தண்ணீர் ஊற்றுதான் வைகை ஆறாக ஓடுகிறது என்று போகிறது கதை. இவ்வாறு பெரியஉருவத்தை உடைய குண்டோ தரன் மூலம் மதுரைக்கு ஒரு நண்மை கிடைத்திருக்கிறது.
தட்டு சுட்டார் மண்டபம்
16 தூண் மண்டபம் என்று கூட இதைச் சொல்வார்கள். இந்த மண்டபம் வடக்கு மற்றும் கிழக்கு ஆடி வீதிகளின் சந்திப்பில் உள்ளது. வெங்கடேச முதலியாரின் 18ஆம் நூற்றாண்டு கலைப்பாணி இது. பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்து பின்னர் ஆன்மீக வாதியாக மாறிய மாணிக்க வாசகரின் பாதங்கள் இங்கே வரையப்பட்டிருக்கின்றன.
ஏழுகடல்
தட்டுசுட்டார் மண்டபத்திலிருந்து ராஜகோபுரம் வழியாக கோயிலில் நம் பயணத்தை முடித்துக்கொண்டு, ஏழுகடல் நோக்கி விரைகிறோம். ராஜகோபுரத்திற்கு வெகு அருகிலேயே உள்ள தடாகத்திற்கு ஏழுகடல் என்று பெயரிடப்பட்டுள்ளது. மீனாட்சியின் தாயார் கடலில் குளித்து புண்ணியம் பெற விரும்பினார். அவரது அவல் சுந்தரேசுவரரிடம் வெளிப்படுத்தப்பட ஏழுகடல் நீரும் பொங்கிவந்து அங்கு விழும்படி செய்தார் இறைவன். மீனாட்சியின் தாயாரின் விதவை நிலை தன் ஏழுகடல் செயலுக்கு முழு வெற்றியளிக்காது என்பதை உணர்ந்த இறைவன், அவரது கணவருக்கு உயிரளித்து, அவர்கள் நீராடலை முடித்து வந்தபோது, வானிலிருந்து வந்த வாகனத்தில் அவர்கள் ஏறி அவர்கள் தேவலோக பதவி அடைந்ததாக கதை உண்டு.
ஆனால் தற்போது ஏழுகடலின் நிலை சற்று மகிழ்ச்சியளிக்காததாக உள்ளது. குப்பை கூளங்கள் நிறைந்த அந்தக் குளத்தை எவ்வளவு மாசுபடுத்த முடியுமோ அவ்வளவு மாசுபடுத்தியிருக்கின்றனர் மதுரை வியாபாரிகளும், மக்களும். என்ன செய்வது, வீட்டைச் சுத்தமாக வைத்திருந்து வீதியை அசுத்தப்படுத்தும் குணம் தானே நம்மில் பெரும்பாலோருக்கு உள்ளது.
மேற்கண்ட பக்கங்களின் மூலம் மதுரை கோயிலை ஒரு வலம் வந்திருப்பீர்கள். பெரும்பாலான பகுதிகளில் விளக்கங்கள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம்; பொருள் மயக்கங்கள் இருக்கலாம்; அவற்றைத் தாமதிக்காமல் பின்னூட்டத்தில் எழுதவும். தொடர்ந்து செல்லும் இத்தளம் திருவிழா பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.
நன்றி.
பகுதி 1. கோயில் வலம் முற்றிற்று
திருவிழாக்கள்
திருவிழாக்கள்
தினசரி பூஜைகள் காலை 5மணி, 8 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி, இரவு 12 (??) மணிக்கும் நடத்தப்படுகிறது. பக்தர்களின் வேண்டுகோளுக்கேற்ப பட்டர்கள் அவ்வப்போது பூஜைகள் நடத்துகின்றனர். இந்த வழக்கமான பூஜைகளைத் தவிர சித்திரை, ஆவணி, புரட்டாசி மற்றும் தை மாதங்களில் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
சித்திரைத் திருவிழா

கோடைகாலமான ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவிற்கு தென்னிந்தியாவின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பக்தர்களும், யாத்ரீகர்களும் வருவது வழக்கம். இந்த மாதத்தில்தான் மீனாட்சிக்கு சுந்தரேசுவரருடன் திருமணம் முடிக்கும் விழா நடைபெறுகிறது. மதுரையைச் சுற்றிப் பார்க்க இந்த சமயம் மிகவும் உகந்த காலமாகும். இந்த விழாவினை முன்னிட்டு நகரமே விழாக்கோலம் பூண்டு விளக்கு வெளிச்சத்தில் மிதக்கும். முன்னர் விவரிக்கப்பட்ட கல்யாண மண்டபத்தில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருக்கல்யாணம் முடிந்த அடுத்த நாள், மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மணமக்கள் நான்கு மாசி வீதிகளில் உலா வருவர். அந்த தெய்விக தம்பதிகளைச் சந்தித்து, ஆனந்தித்து, வழிபட்டு, ஆசிபெற மிக மக்கள் மிக அதிக அளவில் கூடுவதுண்டு.
அந்த நாளிற்குப் பிறகு, விழா வைகைக்கரைக்கு மாறுகிறது. அந்த நாளில் மீனாட்சி-சுந்தரேசுவரர் தம்பதிகளை இல்லறத்தில் விட்டுவிட்டு நாடு முழுவதும், அழகர் வருகைக்காக அதிகாலையில் வைகை ஆற்றோரம் காத்துக்கிடக்கிறது. அழகர், மதுரைக்கு வடகிழக்கில் 25 கிலோமீட்டரில் அமைந்திருக்கும் அழகர் கோயிலின் பெருமாள் ஆவார். அந்தத் தூரம் முழுவதும் நிரம்பியிருக்கும் கூட்டத்தை நாம் பார்க்கும்போது, நம்மை அறியாமல் பரவசம் நம்மை அள்ளிக் கொண்டு போகிறது. சொல்லப்போனால், நான் என் வீட்டுத் திருமணத்தில் இருப்பதைப் போல் உணர்கிறேன்.
இந்த அழகர் அழைப்பிற்குப் பின் ஒரு சுவையான கதை உண்டு. அழகர் மீனாட்சியின் சகோதரர் ஆவார். அவர் மீனாட்சியின் திருமணத்தை நடத்திவைக்க அழகர் கோயிலில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். ஆனால் தான் வருவதற்கு முன்பே திருமணம் முடிந்ததை கேள்விப்படுகிறார். ஆற்றில் கூட கால் படாமல் திரும்பி வருகிறார். தற்போதைக்குக் கூட அந்த சடங்குகள் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு நடக்கின்றன. அழகர் தற்போது ஆற்றில் தன் காலைப் பதித்துவிட்டுச் செல்லும் அந்தக் காட்சி தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த நாளில் நடைபெறும் காளைகள்/பசுக்கள் சந்தை மிகவும் புகழ்பெற்றது. அழகர் கோயிலுக்கு வருமானம் தரும் திருவிழாக்களுல் இது முதலாவதாகத் திகழ்கிறது. பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை உண்டியல் பணமாகவும், நகைகளாகவும் செலுத்திவிட்டுப் போகின்றனர். அன்றைய நாளின் அழகர் அலங்காரமும், அவர் வரும் ரதத்தின் அழகும் பார்ப்போர் மனதைக் கொள்ளைகொண்டுவிடுகிறது.
புட்டுத் திருவிழா
ஆவணி மாதத்தில் வைகை ஆற்றில் மற்றொரு திருவிழா நடைபெறுகிறது. தற்போது தெய்வங்கள் வைகைக்கரைக்கே வருகின்றன. அங்கு தங்கியருக்கின்றன. அன்றைய நாளில் மதுரையில் அந்த தெய்வங்கள் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இன்றும் நடித்துக்காட்டப்படுகின்றன. சைவ சமயக்குரவர்களுல் ஒரவரான மாணிக்க வாசகர் மதுரையில் அமைச்சராக இருந்தார். அவர் மிகச்சிறந்த சிவபக்தர் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியதில்லை. ஒரு முறை குதிரைகள் வாங்க வேண்டி மிகுந்த பணம் கொடுத்து மாணிக்க வாசகரை அனுப்புகிறான் பாண்டியன். ஆனால் சிவமயத்தில் மூழ்கிய மாணிக்கவாசகர், அந்தப் பணத்தை எல்லாம் ஒரு சிவன் கோயில் கட்டுவதில் செலவழித்துவிடுகிறார். அந்தக் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் இருக்கிறது. பணத்துடன் காணமல் போன மாணிக்கவாசகர்பால் கடுப்பாய் இருந்த மன்னவன், அவர் மதுரைக்கு வந்தவுடன், பொதுப்பணத்தை விரயம் செய்ததாக அவரைச் சிறையில் தள்ளுகிறான்.
ஆனால் மாணிக்கவாசகர் பால் பரிவு கொண்ட சிவபெருமான் நரிகளைக் குதிரைகளாக்கி அரண்மனைக்கு அனுப்புகிறார். மாயத்தோற்றத்தால் ஏமாற்றப்பட்ட மன்னவன், மாணிக்கவாசகரை விடுதலை செய்கிறான். அத்துடன் முடியவில்லை இந்தத் திருவிளையாடல். எவ்வளவுதான் நரிகள் புல்லைத் தின்னும்? அங்குள்ள உண்மையான குதிரைகளையும் கடித்துக் குதறிவிட்டு ஓடி விருகின்றன. ஏமாற்றத்தால் மிகுந்த சினம் மிகுந்த பாண்டியன் மாணிக்க வாசகரைச் சித்திரவதை செய்ய ஆரம்பித்து விடுகிறான்.
அந்தச் சித்திரவதையைக் கண்டு ஆத்திர மடைந்த சிவன், வைகையில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துகிறார். கரை கடந்த வைகை நீர் மதுரை முழுவதுமாக மூழ்கடிக்க முயற்சி செய்தது. உடைப்பைத் தடுத்து நிறுத்த வீட்டிற்கு ஒருவர் வரவேண்டும் என்று மன்னவன் ஆணையிட்டதன் பேரில் அனைவரும் உடைப்பைத் தடுத்து நிறுத்துவதில் மும்முரமாக இருந்தனர். அப்போது புட்டு சுட்டு விற்கும் கிழவி ஒருத்தி, தன் வீட்டில் ஆண்பிள்ளை இல்லாததால் தன் பங்கை மதுரைக்குச் செலுத்த முடியாதவளாய் வருந்திக் கொண்டிருந்தாள்.
அப்போது தினக்கூலி வடிவத்தில் வருகிறார் சிவன். அந்தக் கிழவியிடம், அவள் தனக்குப் புட்டு தருவதாய் இருந்தால் அவள் வீட்டுக்குரிய ஆண்மகனாகத் தான் வெள்ளப்பெருக்கை அடைப்பதாகக் கூறுகிறார். கிழவியும் மனமகிழ்ந்த கிழவி அவருக்குப் புட்டு கொடுக்கிறாள். ஆனால் நடந்ததோ வேறு. புட்டு முழுவதையும் தின்று விட்டு அந்த இளைஞன் ஒரு மரத்தடியில் படுத்து உறங்க ஆரம்பிக்கிறான். அந்த நேரத்தில் பணிகளை மேற்பார்வையிட வந்த மன்னவன், தூங்கிக் கொண்டிருக்கும் இளைஞனைப் பார்த்த மாத்திரத்தில் ஆத்திரம் கொண்டு, சாட்டையால் அவன் முதுகில் விளாசுகிறான். அந்த நேரம் அந்த இளைஞன் மறைந்து விட, அவன் எறிந்த மண்ணில் வைகையின் வெள்ளமும் கட்டுப்பட, அதற்கும் மேலாக, அந்த இளைஞனுக்குக் கொடுத்த அடி எல்லோர் முதுகிலும் படிந்தது.. மன்னவன் உட்பட. அப்போது வந்தவர் சொக்கநாதரே என்று அறிந்து கொண்டார்கள் அனைவரும். அந்த சமயத்தில் மாணிக்க வாசகரை மன்னித்து ஏற்றுக்கொள்ள பாண்டியனை வேண்டுகிறார் சிவபெருமான்.
இந்தத் திருவிளையாடலில், சிவன் நினைத்தால் மாணிக்க வாசகரை அவர் சக்தியால் விடுதலை பெற வைக்கலாம். ஆனால் அவர் பொதுப்பணத்தை சிவன் கோவில் கட்ட செலவழித்தது தவறு. அதற்கு தண்டனை கொடுத்துதானே ஆகவேண்டும். கடைசியில் கூட, மாணிக்க வாசகரை விடுதலை செய்ய பாண்டியனிடம் சிபாரிசு மட்டுமே செய்கிறார். ஏனென்றால் மதுரை என்றால் அரசியல் தலைவன் அரசன். அந்தப் போக்கில் சொக்கநாதப் பெருமான் தலையிட முடியாது. இவ்வாறாக கதை முடிகிறது. ஆனால் தன் கடைமையை ஒழுங்காகச் செய்த மன்னவனுக்கு ஏன் சாட்டையடி கொடுத்தார் சொக்கநாதர். கொஞ்சம் கேட்டுக் சொல்லுங்களேன் ! இவ்வாறு கொண்டாடப்படும் புட்டுத் திருவிழா முற்காலப் பாண்டியர் காலப் பழமை வாய்ந்தது.
நவராத்திரித் திருவிழா
அக்டோபர் மாதத்தில் தசரா விழாவின்போது மீனாட்சி சக்திவாய்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது. அந்தக் காலத்தில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்தக் காலத்தில் பல்வேறு மக்கள் குறிப்பாக பெண்கள், தாங்கள் குழந்தை பெறவும், ஓடிப்போன கணவன் திரும்பவரவும், தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டியும், வழிபாடுகள் செய்கின்றனர், பக்திப்பாக்களைப் பாடுகின்றனர்.
தெப்பத்திருவிழா
தெப்பக்குளத்திற்குக் கொண்டுவரப்படுகின்றனர். அங்கு அவர்களின் வருகைக்காகவே ஒரு மிதவை காத்திருக்கிறது. அந்த மிதவையில் ஏறி மீனாட்சியும் சுந்தரேசுவரரும் தெப்பக்குளத்தை மூன்றுமுறை வளம் வருகின்றனர். இரவு நேரமாதலால் மிதவை முழுதும் கண்சிமிட்டும் விளக்கு அலங்காரம் பளிச்சிடுகிறது. தங்கள் மண்ணில் பிறந்த அன்னை மீனாட்சியையும், தங்கள் மன்னவர் சொக்கநாதரையும் சிறப்பிக்கும் வண்ணம் வானவேடிக்கைகளும் அங்கே நிகழ்த்தப்படுகின்றன. இந்தத் தெப்பக்குளம் மீனாட்சி-சொக்கநாதர் தாசனாய் இருந்த திருமலை நாயக்கரால் கட்டப்பட்டதாகும். அவரது பிறந்த நாளில் தெப்பத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
ஆவணி மூல திருவிழா

திருமலை நாயக்கர் அரண்மனை
மன்னன் திருமலை

கிபி 1627லில் இருந்து 1659வரை மதுரையைத் தலைநகராகக் கொண்டு சீரும் சிறப்புமாக ஆண்ட திருமலை நாயக்கரால் இவ்வரண்மனை எடுக்கப்பட்டது. தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்தது இதுவே. இவ்வரண்மனையைத் திருமலை மன்னர் 1639ல் இந்தோ-சாரசீனிக் முறைப்படி கட்டி முடித்தார். இதில் தம்முடைய 75ம் வயது வரை மனைவியருடன் வசித்தார்.

திருமலை மன்னன் கட்டியபோது இப்போது எஞ்சியுள்ளதைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியதாக இவ்வரண்மனை திகழ்ந்தது. இவ்வரண்மனையில் பல பகுதிகளைப் பற்றிய பண்டைய குறிப்புகள் உள்ளன. இங்கு சொர்க்க விலாஸம், ரங்க விலாஸம், என்று இரண்டு முக்கிய பகுதிகள் இருந்தன. தவிர, பதினெட்டுவித இசைக் கருவிகள் இசைக்கும் இடம், படைக்கலன் வைக்கும் இடம், பூஜை செய்யும் இடம், அரியணை மண்டபம், தேவியரின் அந்தப்புரம், நாடகசாலை, உறவினர்களும் பணிசெய்வார்களும் வசிக்கும் இடங்கள், வசந்தவாவி, மலர்வனங்கள் சுற்று மதிள் முதலியன இருந்தன. திருமலை நாயக்கர் சொர்க்க விலாஸத்திலும் அவர் தம்பி முத்தியாலு நாயக்கர் ரங்கவிலாஸத்திலும் வசித்தனர்.

இந்த அரண்மனையையும் மீனாட்சி அம்மன் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது என்றும், பொதுவாக போர்காலங்களில் இளவரசரும், மற்ற குடும்பத்தினரும் தப்பிச்செல்ல இந்தப் பாதைப் பயன்படுத்துவர் என்றும், தற்போதுகூட மீனாட்சி அம்மன் கோயிலில், பைரவர் சுவாமி ஆலயத்தின் அருகே இந்தப் பாதையைப் பார்க்கலாம் என்றும் தகவல் எனக்குக் கிடைத்தது.

இப்பொழுது எஞ்சியுள்ள பகுதியே சொர்க்க விலாஸம் என்பது. இப்பொழுதுள்ள அரண்மனை நுழைவாயில் இக்கட்டத்தின் வடக்கில் இருந்தது. கட்டடத்தின் கிழக்கில் புறங்களில் பக்கத்துக்கு ஒரு சிகரமாக இரண்டு சிகரங்கள் இருக்கின்றன. இவற்றின் மேல் இருந்த ஸ்தூபிகள் தங்கத்தால் செய்யப்பட்டு இருந்தன. தற்பொழுது வடபுறச் சிகரத்தில் ஒரு கடியாரம் வைக்கப்பட்டுள்ளது.
முற்றம் உள்ளே நுழைந்தும் ஒரு பெரும் முற்றவெளியும் சுற்றிலும் உயரமான தூண்கள் தாங்கிய கட்டடமும் உள்ளன. மேற்கில் வேலைப்பாடுடைய ஒரு கட்டப் பகுதி உள்ளது.

முற்றத்தின் வடக்கிலும் தெற்கிலும் நடுவில் சாலை வடிவமான மிகவும் உயர்ந்த கட்டப் பகுதிகள் இருக்கின்றன. இவற்றின் ஸ்தூபிகளும் பொன்னால் செய்யப்பட்டிருந்தன. தாங்கும் சட்டங்கள் இல்லாத அந்த குவிந்த கூரை கட்டடக்கலையில் ஒரு மைல் கல் ஆகும்.
சொர்க்கவிலாஸம்

இரண்டு குதிரைச் சிற்பங்கள் அலங்கரிக்கும் படிகளின் வழியே, மேற்கில் எழில் வாய்ந்த பகுதியை அடையலாம். இதுவே சொர்க்க விலாஸம் என்பது. மிகவும் நெடிய தூண்களும், எழிலார்ந்த சுதை வேலைப்பாடுகளும் குவிந்து மேலே தோன்றும் விமானங்களும் கலைத் திறனின் எடுத்துக்காட்டுகள். பார்க்கப் பார்க்க பரவசம் ஊட்டுபவை.

இப்பகுதியின் நடுவில் மிகவும் விலாஸமான இடமும் அதன் மேல் கவிந்து உயர உயரச் செல்லும் விதானமும் நாம் சொர்க்கத்தில் நிற்கிறோமோ என்னும் வியப்பைத் தோற்றுவிக்கும். ஆதலின்தான் இதை சொர்க்க விலாஸம் என்று மன்னன் அழைத்து மகிழ்ந்திருந்தான் போலும். இதன் மேலிருந்த ஸ்தூபிகளும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன.

இவ்விடத்தில் கல்பீடத்தின் மேல் நடுவில் யானைத் தந்தத்திலான நுண்ணிய வேலைப்பாடு மிகுந்த ஒரு சாலை (மண்டபம்) வைக்கப்பட்டிருந்தது. அதன் நடுவில் இரத்தினங்களால் செய்யப்பட்ட அரியணை இருந்தது. அதன் மீதமர்ந்துதான் திருமலை மன்னன் செங்கோல் நடத்தினான்.
செங்கோல் விழா
ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் எட்டாம் நான் திருமலை மன்னன் அங்கயற்கண்ணி அம்மைக்கு கோயிலில் முடிசூட்டு விழா நடப்பித்து அங்கு அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்று வீதி உலாவாகக் கொணர்ந்து இவ்வரண்மனையில் இந்த சொர்க்க விலாஸத்தில் சிறப்பாக அலங்கரித்த அரியணையில் செங்கோலை அமர்த்தி தான் அருகில் கீழே அமர்வார். செங்கோலுக்குச் சிறப்பாக வழிபாடுகள் வழங்கப்படும். அன்று முழுவதும் செங்கோல் அரியணையில் இருக்கும். மறுநாள் திருமலை மன்னர் செங்கோலுக்கு மறுவழிபாடு செய்து, கோயிலுக்கு எடுத்துச் சென்று அன்னையின் அடியில் வைத்து வணங்குவது வழக்கம். அன்னையின் அடியானாக நாட்டை ஆள்வதை இது குறிக்கும்.
நவராத்திரி விழா
நவராத்திரி விழாவில் ஒன்பது நாட்களும் திருமலை மன்னர் சிறப்பாக தன்னை அலங்கரித்துக்கொண்டு இங்கு அரியணையில கொலு வீற்றிருப்பார். மாற்றரசர்கள் எல்லாம் இங்கு அவருக்குத் திறை செலுத்துவர்.
அந்தப்புரம்
சொர்க்க விலாஸத்தின் மேற்கில் அந்தப்புரம். தென் மேற்கில் கருங்கல் தூண்கள் கொண்ட ஒரு இடம் இருக்கிறது. இங்கு இரண்டு அறைகள் இருந்தன. இப்பொழுது உள்ளது ஒன்றின் பகுதியே. இங்கு அரச மாதேவியரும் பிற பெண்டிரும் இசையும் தென்மேற்கு மூலையில் அரண்மனையின் மேலே செல்ல படிகள் இருக்கின்றன. அங்கே பல பகுதிகளில் சுற்றி வர வசதி இருக்கிறது. திருமலை மன்னர் தன் மனைவியருடன் மேலே சென்று சுற்றிவரும்போது கீழிருந்து மக்கள் கண்டு வணங்குவர்.
நாடகசாலை

சொர்க்க விலாஸத்தின் வடமேற்கில் கிழக்கு மேற்காக நீண்ட, மிகவும் எழில் வாய்ந்த ஒரு பகுதி இருக்கிறது. இதன் நடுப்பகுதி தாழ்ந்தும் சுற்றிலும் திண்ணைபோல் உயர்ந்தும் உள்ளன. தூண்களையும் மேல் பகுதிகளையும் அழகிய சுதை உருவங்கள் அலங்கரிக்கின்றன. இதன் மேற்கில் இருபுறமும் மேலே செல்வதற்கு மாடிப்படிகள் உள்ளன. இதுவே நாடகசாலை என்று குறிக்கப்படுவது. மாலை நேரங்களில் திருமலை மன்னன் தன் பெண்டிருடனும் உற்றார் உறவினருடனும் இங்கு போந்து நாட்டிய மகளிர் ஆடும் பல கூத்துகளை தீவர்த்தி வெளிச்சத்தில் கண்டு களிப்பது வழக்கம்.
ஆயுதசாலை முதலியன
அந்தப்புரத்தின் மேற்கில் ஆயுதசாலை இருந்தது. நாடகசாலையின் மேற்கில் ‘வசந்தவாவி’ என்னும் நீர்த்தடம் இருந்தது. இதற்கும் வடக்கில் மல்யுத்தம் செய்யுமிடம் ஆட்டுக்கிடாய் சண்டை செய்யுமிடம் முதலியன இருந்தன. இவற்றிற்கும் மேற்கில் உற்றார் உறவினர் வசிக்கும் நீண்ட பல கட்டடங்கள் இருந்தன.
தேவி பூசைக்கோயில்
நாடகசாலையின் வடகிழக்கில், கிழக்கு நோக்கிய கோயில் ஒன்று இருந்தது. இதன் முகப்பிலும் உள்ளும் கருங்கல் பணிகள் நிறைந்திருந்தன. இங்கு இராஜராஜேஸ்வரியயும் மற்ற பிற தெய்வங்களையும் திருமலை நாயக்கர் நாள்தோறும் வணங்குவர். இக்கோயிலின் முன்னர் ஒரு நீராவியும் மலர்வனமும் இருந்தன.
ரங்கவிலாஸம்
இக்கோயிலின் வடக்கில் ஒரு சந்துத் தெருவில் நெடிய பத்துத் தூண்கள் இன்றும் நிற்கின்றன. இவை மறைந்த அரண்மனையின் பகுதியே. இவற்றின் மேற்கில்தான் ரங்கவிலாஸம் இருந்தது. சொர்க்க விலாஸம் போல இது அமைந்திருக்க வேண்டும். இதில் திருமலை நாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கர் வசித்தார். இதன் மேற்கில் சந்திரிகை மேடை என்னம் ஒரு கட்டடம் இருந்தது.இவற்றின் வடக்கில் தெற்கு மாசி வீதியை நோக்கி ஒரு நுழைவாயில் இருந்தது. இங்கு “காவல் ராஜாக்கள்” இருந்தனர். பல பரிச்சின்னங்களும் ஆயுதங்களும் இங்கு வைக்கப்பட்டிருந்தன. அரண்மனை வாயில் பத்து தூண்களின் கிழக்கில் அரண்மனையின் நுழைவாயில் இருந்தது. அதன் முகப்பு சிறந்த வேலைப்பாடுகளுடன் திகழ்ந்தது. அங்கு 18வித இசைக்கருவிகள் இசைக்கும் இடமிருந்தது. இப்பகுதியையே நவ்பத்கானா என்று கூறுவர். இது இருந்த இடமே நவ்பத்கானா தெரு என்று அழைக்கப்படுகிறது. ஒரு நூறு ஆண்டுகளுக்கும் முன்னர் கூட இக்கட்டடம் இருந்தது. ஆனால் பழுதடைந்திருந்தது. 1858ல் பழுது பார்க்கப்பட்ட போதிலும் இது அதிகநாள் நிற்கவில்லை. இதற்கம் கிழக்கில்தான் பல்லக்கு முதலிய பரிகலன்கள் வைக்கப்பட்டிருந்தன.
சுற்று மதிள்
இவை அனைத்தையும் சுற்றி ஒரு மதிள் இருந்தது. இதைப் பாரிமதிள் என்பர். சென்ற நூற்றாண்டில் கூட எஞ்சியிருந்த இம்மதிள் 900 அடி நீளமும் 660 அடி அகலமும் 40 அடி உயரமும் இருந்ததாம். மிகவும் அபாய நிலையிலிருந்ததால், 1837ல் இச்சுவர் இடித்துத் தள்ளப்பட்டதாம். இம்மதிளுக்கு வெளியில், மேற்கில் மலர் வனங்கள் இருந்தன. இவற்றின் நடுவில் ஒரு கட்டடம் இருந்தது. அதில் திருமலை மன்னன் மனைவியருடன் தங்குவது வழக்கமாம்.
அரண்மனைப் பகுதி மறைவு
இவ்வெழில் வாய்ந்த அரண்மனையின் பகுதியை திருமலை மன்னரின் பெயரன் சொக்கநாத நாயக்க மன்னனே இடித்தான். மதுரையிலிருந்து திருச்சிக்கு அதன் தலைநகரை மாற்றியபோது இங்கிருந்து இடித்த பொருள்களை திருச்சி எடுத்துச் சென்று அங்கு ஒரு அரண்மனை எடுக்க முயன்றான். அவன் முயற்சியில் கலை அதிக இடம் பெறவில்லை. சென்ற நூற்றாண்டில் கூட இடிந்த சில பகுதிகள் நின்று கொண்டிருந்தன. காலப்போக்கில் பல பகுதிகள் அழிந்துவிட்டன.
அரண்மனை பிழைத்தது
கிபி 1857லேயே இப்போது எஞ்சியுள்ள சொர்க்க விலாஸத்தின் பல பகுதிகள் விரிசல் கண்டிருந்தன. கிபி. 1858ல் பெய்த கடும் மழையில் மேற்குப் பகுதியில் ஒரு சுவர் வீழ்ந்தது. பல பகுதிகளுக்குச் சேதம் ஏற்பட்டது. 1868ல் சென்னை கவர்னராயிருந்த லார்டு நேபியர் இவ்வரண்மனையின் அழகைக் கண்டு இதில் மிகவும் ஏடுபாடு கொண்டு இதை உடனடியாகக் காக்க இதில் மிகவும் ஈடுபாடு கொண்டு இதை உடனடியாகக் காக்க வகை செய்தார். 1872க்குள்ளாக இரண்டு லட்சம் ரூபாய் செலவில் பழுதுபார்க்கப்பட்டது. இடிந்த சில பகுதிகள் கட்டப்பட்டன. மேலே விரிசல் கண்ட பகுதிகளில் இரும்புக்கம்பிகள் போட்டு முறுக்கப்பட்டன. சுதை வேலைகள் பழுதுபார்க்கப்பட்டன. வண்ணங்கள் ஓரளவிற்கு முன்போல் தீட்டப்பட்டன. 1970 வரை நீதிமன்றங்கள் இவ்வரண்மனையில் இயங்கிவந்தன. பிறகு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இவ்வரண்மனையைத் தன்வசம் தக்கவைத்துள்ளது.
ஒலி ஒளிக்காட்சி – Light Show
தினந்தோறும் 08-00 மணிமுதல் 17-00 வரை சுற்றுலாவினருக்காக திறந்திருக்கும் இம்மண்டபத்தில் ஒளி/ஒலிக்காட்சி தினந்தோறும் இருமுறை நடத்தப்பெறுகிறது. ஆங்கிலத்தில் மாலை 6-45க்கும் தமிழில் இரவு 8-15க்கும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இக்காட்சிகளை நடத்துகிறது. இக்காட்சிகளின் எழில்மிகு தோற்றம் அடுத்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. திருமலை மன்னரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளையும், அவரது ஆளுமைத்திறனையும், சிலப்பதிகார நினைவுகளையும் இக்காட்சிகள் நினைவுபடுத்துகின்றன. கைகேமராக்களைக் கொண்டு செல்வதில் தடை இல்லை. ஆனால் வீடியோ காமிராக்களுக்கு சிறப்பான அனுமதி மேலிடத்திலிருந்து பெறவேண்டும். அரண்மனைக்கு வெளியே மாநகராட்சியால் பராமரிக்கப்படும் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. ஒரு பாதிநாளை அமைதியுடனும் வியப்புடனும் கழிக்க இந்த பழைமையான சின்னம் சிறந்த இடமாகும்.
சில துணுக்குகள்
பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் என்ற காவியத்தை 16ஆம் நூற்றாண்டில் இயற்றினார். இக்காவியம் இக்கோயிலின் தலவரலாறைப் பிரதிபலிக்கிறது.
எந்தக் கோயிலிலும் இல்லாத வண்ணம், இங்கு அனைவரும் அன்னை மீனாட்சியை முதலில் வழிபடுகின்றனர். நான்கு நுழைவாயில்களும் அம்மன் சன்னிதி நோக்கியே பக்தர்களை அனுப்புகின்றன. நம் மண்ணில் பிறந்த பெண்ணிற்கு முதல் மரியாதை செலுத்துவதில் என்ன குறை இருக்கிறது?
1923ல் அஷ்ட சக்தி மண்டபத்தில் மீனாட்சி பட்டாபிஷேக ஓவியத்தை வரைந்த ஓவியர் மகாத்மா காந்தி படத்தையும் இணைத்துவிட்டார். ஆங்கிலேயர்களின் வருகைக்காக, காந்தியை, சீக்கிரம் அழியக்கூடிய எண்ணெய் வண்ணத்தினால் முடி வரைந்து ஒரு முனிவராக்கினார். அது அவர்கள் சென்ற பிறகு மிகவும் காந்தியாக மாறியது என்று கூறப்படுகிறது.
14ஆம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்பில் இக்கோயில் சேதப்படுத்தப்பட்டது. வயிற்றெரிச்சல் என்பதன் விளைவு. ஆனால் அதையும் மீறி நிமிர்ந்து நிற்பது மதுரையின் கோபுரங்கள்
அதே நூற்றாண்டில் முஸ்லீம் ஆதிக்கத்தின் கீழ் மதுரை வந்தது. அவர்கள் ஆண்ட அந்த 50 வருடத்தில் கோயிலின் கருவரையைப் பூட்டி வைத்தனர்.
சென்ற நூற்றாண்டில் கூட முஸ்லீம் தீவிரவாதிகள் முக்குருணி விநாயகர் இருக்கும் இடத்திற்கு அருகில் வெடிகுண்டு வைத்ததை மறக்க முடியாது. இந்தச் செயலுக்கு வயிற்றெரிச்சல் மட்டுமே காரணம் என்று கூற முடியாது. ஆதிக்க வெறி, மக்கள் மனதில் விதைக்கப்பட்ட பகை மற்றும் காரணமில்லாத பழிவாங்கும் உணர்ச்சி, அதனுடன் வாழ்ந்த நாட்டில் இருந்து கொண்டு, அதற்கே கேடு நினைக்கும் முஸ்லீம் தீவிரவாதிகளின் கொடூர செயல் என்று கூறலாம்.
அன்னை மீனாட்சியின் கோயில் மதுரை நகருக்கு நடுவனாக, அதனை அடிப்படையாகக் கொண்ட வீதிகள் சுற்றிலும் இருக்க மிக அழகாக நடுநாயகமாக அமைந்துள்ளது. அந்த வீதிகளின் வடிவமைப்பும் அதற்கேற்றார்போல் பெயரிட்டும் இருப்பது மிகவும் பொறுத்தமாகவும் இருக்கிறது. திட்டமிட்டவரின் எண்ணம் மிகச் சரியாக பூர்த்தியாகி இருக்கிறது என்றேதான் கூறவேண்டும். அவென்யூ, புலிவார்டு என்றெல்லாம் பெயரிடும் தற்காலத்து தமிழாங்கிலேயர்கள் இதனை சற்று யோசிக்கலாம். தன் ஊரின் பெயரை/செய்தியை ஒரு வீதியின் பெயராக வடிவமைப்பது எவ்வளவு பயன் தருகிறது, வெளிமொழிக்கு இருக்கை அளிப்பது எவ்வண்ணம் பயன் தருகிறது என்று பார்க்கலாம். தாங்கள் படித்தவர்கள் என்பதைக் காட்ட இவ்வாறா பெயரிடவேண்டும். எப்போதோ வரும் அந்நியரை விட அன்றாடம் சுற்றிவரும் நம் மக்களுக்கு நமது முகவரி தெரிந்தால் மட்டும் போதாது, புரியவும் வேண்டும்.
நன்றி
Sample Tamil Unicode Pages-1
http://www.angelfire.com/linux/minakshi/madurai/main.htm
This documents are permanent. All who work on long term Tamil documentation
should consider using Tamil Unicode.
This is an excellent example of the use of Unicode font encoding for Tamil
and multilingualism.
There are about 20 pages of information here. Congratulations to Pandian.
I hope all of you have a chance to read this pages in Tamil Alphabets of
the future (cheer seytha ezuththil).
Some of you (if you have XP.2000) may not be able to see this pages in
alphabets of the future, because MS may default to the conventional Tamil
Alphabets. If you want to override the restrictions and wish to interfere
with existing setups in XP or 2000, then you probably have to consider
removing those fonts that does not let you use a font that you prefer,
especially for research purposes.
Sinnathurai Srivas
http://tech.groups.yahoo.com/group/tamilinix/message/1316
http://tech.groups.yahoo.com/group/tscii/message/539
http://tech.groups.yahoo.com/group/e-Uthavi/message/337
—————-
Here are two web sites using Unicode. The Tamil site is new and
the Telugu site has been up for a while.
Tamil Unicode web site by Murugapandian Barathee:
http://www.angelfire.com/linux/minakshi/madurai/main.htm
Telugu Unicode web site by Tirumala Krishna Desikacharyulu:
http://www.kavya-nandanam.com/
Thank you, Murugapandian Barathee and Tirumala Krishna Desikacharyulu,
for your excellent pioneering work.
Best regards,
James Kass.
http://tech.groups.yahoo.com/group/tamilinix/message/1377
http://www.unicode.org/mail-arch/unicode-ml/y2002-m10/0294.html
http://osdir.com/ml/text.unicode.general/2002-10/msg00299.html
http://www.mail-archive.com/unicode@unicode.org/msg13709.html
————
அன்பின் பாண்டியன்,
வணக்கம்.
யூனிகோடு பக்கத்தில் useful resources என்ற தலைப்பில் தமிழைத்
தேடினேன். உங்கள் மதுரைத் திருக்கோவில் பற்றிய 20-பக்கக்
கட்டுரை உள்ளது. நல்ல நிழற்படங்களுடன் வெளியிட்டுள்ளீர்கள்
http://www.unicode.org/onlinedat/resources.html
பாண்டியன் கட்டுரை:
http://www.angelfire.com/linux/minakshi/madurai/main.htm
பாராட்டுகளும், நன்றியும் உரித்தாகுக,
நா. கணேசன்
http://groups.yahoo.com/group/tamil_ulagamgoogle/message/24674
—————-
Thanks to Pandian and Srivas.
Though I could not afford to see all the pages, it was enough to see
one or two. The pages looked very nice. Superb work Pandian. Really.
-Vishy
http://tech.groups.yahoo.com/group/tamilinix/message/1317
———-
Dear MurugaPandian,
Glad to meet you. Nice to know that you are from
Madurai.
Have you put up something on Madurai Temple?
What is the URL?
I have written considerable things on Madurai,
myself. Most of them in Tamil.
You can find them in the Agathiyar archives.
This is the home-page.
http://groups.yahoo.com/group/agathiyar/
The following are the latest articles on Madurai Temple.
http://groups.yahoo.com/group/agathiyar/message/20069
http://groups.yahoo.com/group/agathiyar/message/20070
http://groups.yahoo.com/group/agathiyar/message/20072
http://groups.yahoo.com/group/agathiyar/message/20086
http://groups.yahoo.com/group/agathiyar/message/20095
http://groups.yahoo.com/group/agathiyar/message/20103
http://groups.yahoo.com/group/agathiyar/message/20104
http://groups.yahoo.com/group/agathiyar/message/20392
Do you happen to know a place called
Piranmalai/Singampunari? I have also written on the
Pudukottai Thondaimans and Seshaiya SaastrigaL.
Hope to get a reply from you.
Regards
JayBee
————-
Sample Unicode pages: http://www.geocities.com/avarangal/learntamil.html
http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/605
விரிவான விளக்கமான பயனுள்ள பகிர்வுகளில் மதுரையை காணத்தந்து அசத்திவிட்டீர்கள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்…
நன்றிங்க. மதுரை கோவில் என்பது நமது கலைப் பொக்கிஷங்களில் ஒன்று. ஆனால் அதன் முழு வீச்சு தெரிந்தால் நமது மக்களால் வியப்படையாமல் இருக்க இயலாது. ஆர்வம் கொண்ட ஒருவர் மதுரை கோவிலைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்றால் ஒரு எளிதான கையேடும் கிடைக்காது. அப்படிப்பட்டவர்கள் தங்கள் கையில் எடுத்துச்செல்லக்கூடியதாக தயாரிக்கப்பட்டதுதான் இந்தக் கட்டுரை. விரைவில் மின்புததமாக இதை வெளியிடவேண்டும் என்ற ஆவல் உள்ளது. பார்க்கலாம்
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
மிகவும் அருமை. படித்தவுடன், மதுரை சென்று, 2/3 தினங்கள் தங்கி, ஆலயத்தை முழுமையாக வழிபட ஆவலாக உள்ளது. TNTDC (அ) அறநிலையத்துறை இப்பதிவை கையேடாக மாற்றி, குறைந்த விலையில் வழிகாட்டியாக கொடுக்கலாம். என்னைப் பொறுத்த வரை, இப்பதிவை Google Cloud ல் சேகரித்து, எனது பயணத்தின் போது பயனடைய உள்ளேன். நன்றிகள் பல.
👍 நன்றி. Disclaimer : 2003ல் தொகுத்தது. இன்றைய தேதிப்படி புத்தாக்கம் செய்யப்பட்டிருக்காது. மொட்டை கோபுரம் விடுபட்டிருக்கும்.