விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம்


முந்தைய நூலனுபவத்திற்குப் பிறகு பனிமனிதன் நாவலை எடுக்கத்தான் விருப்பம். ஆனால் நூலகத்தில் விஷ்ணுபுரம் மிகச் சில புத்தகங்களே இருந்தன. அதில் ஒன்று வாசகர் எடுக்கத் தயாராய் இருந்ததை அறிந்ததும் மனம் பரபரப்படைந்தது. ஆனால் மனதில் ஓர் அச்சம். விஷ்ணுபுரத்திலிருந்து மீண்டு வர முடியுமா என்று. ஒரு நூலை வாங்கிப் படிக்காமல் விட்டால் கூட பரவாயில்லை, பாதியில் நிறுத்துவது என்பது வீடு கட்டுவதைப் பாதியில் நிறுத்துவது போன்றது. அது தரும் குற்ற உணர்வு அதிகம்.

விஷ்ணுபுரம்
ஆசிரியர்: ஜெயமோகன்
பதிப்பு: கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை ஐந்தாம் பதிப்பு, 2012
ISBN: 81-8345-037-7
விக்கி: விஷ்ணுபுரம் (புதினம்)

விஷ்ணுபுரம் டாட் காம் என்னும் இணையதளத்தில் விஷ்ணுபுரம் நாவலைப்பற்றிய கட்டுரைகள் விரிவாக உள்ளன. நாவலை அனைத்துக்கோணத்திலும் புரிந்துகொள்ள அவை உதவும் -ஜெயமோகன்

vishNupuaram.com

விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
விஷ்ணுபுரம் – ஜெயமோகன்

என்னைப் போன்ற எளிய வாசகனின் வாசிப்பிற்கானது அல்ல இந்த நூல். ஆனால், அத்தகைய வாசகனின் வாசிப்பை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் என்று உறுதியாகச் சொல்ல இயலும். “விஷ்ணுபுரம்” – நூலாசிரியரின் கற்பனை நகரம். அதற்குள் கிட்டத்தட்ட 10 நாட்கள் உலவி மீண்ட பிரம்மிப்பு நீங்கும் முன் இந்தப் பதிவையும் எழுதிவிட வேண்டும். கதையைப் பற்றி நான் சொல்லப்போவதில்லை. அதனை நீங்கள் விக்கியில் பார்த்துக்கொள்ளலாம்.

தென்னிந்தியத் தென்கோடியில் ஆசிரியரின் கற்பனைக் கர்ப்பத்தில் உருவான இந்த நகரத்தின் நிர்மாணம், நிகழ்வுகள், அழிவு, மறு பிறப்பு என்று ஓர் சுழற்சியைக் காட்டுவதுதான் இந்த நாவல். அந்தச் சுழற்சியை உணர்ந்து நான் மீள்வதற்குள், நாவல் முழுக்க அங்கங்கு அடிக்கடி எழும் மன எழுச்சியால் பீடிக்கப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும். என்னென்ன பீடிப்புகள் என்று நான் இங்கு சொல்வதற்கில்லை, சொல்லும்போது அதன் மதிப்பு குறைந்து விட வாய்ப்புண்டு.

விஷ்ணுபுரத்தின் விஸ்வரூப கோயிலில் நடக்கும் ஸ்ரீபாதத் திருவிழா முதல் பாகத்திலும், அது நடக்கும் காலத்திற்கு முந்திய ஞான தருக்க விவாதத்தை இரண்டாம் பாகத்திலும், பிரளயம் ஏற்பட்டு நகர் அழியும் காட்சியை மூன்றாம் பாகத்திலும் நாம் வாசித்து முடிக்கும் தருணம் பல மன எழுச்சிகள், மயிர் கூச்செரிதல்கள், ஏன், சாமி வந்து ஆடினால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை.

விஷ்ணுபுரம் அறிமுகம்
விஷ்ணுபுரம் அறிமுகம்

ஸ்ரீபாதம்: தொடக்கத்தில் சக்கரம் வரைந்து சிலையைத் தேடும் தருணம் யாரையும் கவராமல் போகாது. நாவல் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் பகுதி அது. ஸ்ரீபாதத்திருவிழா நிகழ்வுகள்தான் முழுக்க முழுக்க. முதல் பாகத்தில் சித்திரை என்னை மிகவும் கவர்ந்தாள். யானை மருத்துவம், குதிரை இலக்கணம், தாழை அப்பத்தை யானை வைத்து சமைக்கும் பிரம்மாண்டம் என்னை அப்படியே அள்ளிக்கொண்டன. வாசிப்பு வேகத்தையும் கூட்டின.

விஷ்ணுபுரம் - ஸ்ரீபாதம் - மனவரைபடம்
விஷ்ணுபுரம் – ஸ்ரீபாதம் – மனவரைபடம்

இரண்டாவது பாகம், வரிவரியாகப் புரிந்துகொள்ளமுடியவில்லை என்கிற ஏக்கம் பெரிதாக இருக்கிறது. அதனால் திரும்பவும் மறுவாசிப்பு செய்தே ஆகவேண்டிய புத்தகம் இது. இந்திய ஞான மார்க்கங்களை விளங்கிக்கொண்டு இப்படி ஒரு ஞான தருக்க ஜலதரங்கத்தை ஜெமோ செய்கிறார். பவதத்தர் இந்த பாகத்தில் என்னைக் கவர்ந்தார். அவருடைய தர்க்க ரகசியம் சுவாரசியமானது. அந்தோ பரிதாபம், அவரும் அரசியல் சூதில் வீழ்கிறார். ஊட்டுபுரைக் காட்சி வெகு சுவாரசியம்.

முதலிரண்டு பாகத்தை நாம் முடிக்கும்போது, விஷ்ணுபுரம் பற்றி நம் மனதில் ஒரு பிரம்மாண்டம் – சிற்ப சாஸ்திர பிரமாண்டம், அரசியல் பிரமாண்டம், அழகியல் பிரமாண்டம் – நிலை கொண்டிருக்கும். இறுதி பாகத்தில் ஆசிரியர் ஒரு மதம் பிடித்த யானையாய் மாறி, அத்தணையும் நசுக்கித் தள்ளுகிறார். மொழியில் தரித்திரம் தாண்டவமாடுகிறது. நகரின் வீழ்ச்சியை இவர் விரித்த விதம், ஒரு கணம், எனக்கு கொடும்பாளூர் நினைவு வந்தது. இறுதியில் நீலி நம்மை மலை உச்சிக்கே கொண்டு செல்வாள். மழையில் தொப்பலாக நனைந்து, குளிரை உணர்ந்து, ஊழிப்பிரளயத்தை அவள் காட்டும்போது நீர் பிரவாகம் உங்கள் கண் முன் விரிந்தால் நான் அடைந்த உணர்வை நீங்களும் அடைந்திருக்கிறீர்கள் என்று பொருள்.

விஷ்ணுபுரம் - கௌஸ்துபம், மணிமுடி - மன வரைபடம்
விஷ்ணுபுரம் – கௌஸ்துபம், மணிமுடி – மன வரைபடம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள மன வரைபடங்கள், சும்மா ஒரு குறிப்பிற்கு. விபரங்களைக் குறிப்பதில் தவறு நிகழ்ந்திருக்கலாம். நான் அதனை திரும்ப சரிபார்க்கவில்லை

நிற்க, சில சுவாரசியமான பகுதிகள்

விஷ்ணுபுரம்
விஷ்ணுபுரம்

ப156

நன்மை தீமை என்ற முழுமுற்றான இருபாற்பிரிவினை செய்து கொள்ள வேண்டாம் என்றேன். தீர்மானமான தவறோ, சரியோ ஏதும் இல்லை. நமது இருப்பும், நமது தேவையும்தான் நீதியையும் அநீதியையும் உருவாக்குகிறது. மாபெரும, நீதியொன்றுக்காக இழைக்கப்படும் சிறு அநீதி உண்மையில் நீதியின் ஓர் அம்சம்தான் என்றேன்.

-பிங்கலன்

ப198

‘பெண் வளரும் அழகைக் காண தேவர்களும் யட்சர்களும் வருகிறார்கள் அம்மா. நம் கண்ணுக்குத் தெரியாமல் பின்னால் வந்தபடி ரசித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய பார்வை படும் உணர்வு மட்டும் அவ்வப்போது ஏற்படும்.’

‘பொய் சொல்லாதே. தேவர்களுக்கென்ன வேறு வேலையா இல்லை’

லலிதாங்கி, மாணிக்கம்மாள்

ப242

‘அகங்காரம் இருந்தால் வாழ்க்கையின் அடிகள் ரொம்ப வலிக்கும்’

சங்கர்ஷணன் திடுக்கிட்டவன் போல அவளைப் பார்த்தான். முதன்முறையாக அவள் மீது அனுதாகம் ஏற்பட்டது. அவளுடைய வாழ்வை எண்ணிப்பார்க்க மனம் நடுங்கியது.

‘உண்மை’ என்றான்.

சங்கர்ஷணன், பத்மாட்சி

ப263

“மக்கள் எப்போதும் சாதாரணமானவர்களைத்தான் தலைவர்களாக ஏற்கிறார்கள். பிறகு அவர்களை அசாதாரணமானவர்களாக எண்ணி வணங்குவார்கள்.”

‘ஆம். நீயும் நானும் இலச்சினை இல்லாவிட்டால் விஷ்ணுபுரத்தில் மூட்டை தூக்கத்தான் தகுதி படைத்தவர்கள்’

வள்ளாலன், நரசிங்கர்

ப275

ஆனந்தம் என்பது துயரம் போலவே ஒரு சமன் குலைவு. அது அறிவிலிருந்து வரமுடியாது.

சாருகேசி

ப313

‘மனைவி என்பவள் எப்போதும் பாயசத்தில் கிடக்கும் சட்டுவம்தான்’

‘அவ்வப்போது கலக்கிவிடாவிட்டால் தீய்ந்து நாறிப் போவீர்கள்’

கோபிலப்பட்டர், கேசி

ப325

‘அதிகாரம் இருப்பதாகக் காட்டிக்கொள்ளுந்தோறும் மேலும் அதிகாரம் கையில் வருகிறது’

வல்லாளன், நரசிங்கர்

நூல் அரங்கம்ப358

‘நீங்கள் மகத்தான ஆட்சியாளர் என்பதில் ஐயமில்லை. அது வரலாற்றின் சாபம். கருணையள்ளவர்கள் மோசமான ஆட்சியாளர்கள். அவர்கள் தோற்கடிக்கப் படுவார்கள். அகங்காரிகளே மிகச் சிறந்த ஆட்சியாளர்கள். கருணையுள்ள அரசென்று ஒன்று இல்லை போலும்’

பவதத்தர், மகன்

ப555

எழுந்து சேற்றில் கால் புதைய நடந்தான். அவனுக்கு ஒன்று நியாபகம் வந்தது. காட்டை விலக்கி வனவிலங்கு போல வந்தபோது மனம் எண்ணங்களைத் தொகுத்து ஒருமையை அடைந்ததாக இருந்தது. அந்த ஒருமையை தியானத்தில் ஒருபோதும் அறிந்ததில்லை.

அஜிதன்

ப591

“அழிவற்ற ஒன்று எந்நிலையிலும் அதுவாகவே இருக்கும். இன்னொன்றாக மாறாது. பதி அழிவற்றது என்றால் அது எதையும் உருவாக்கவில்லை. அழிவுடையது என்றால் இப்போது அது இல்லை. இவ்விரு நிலைகளில் ஒன்றையே நீங்கள் தேர்வு செய்ய முடியும்”

“உலக ஆசையும் நான் என்ற அகங்காரமும் சேர்ந்து உருவாக்கிய மாயையே ஆத்மா என்பது. அந்த மாயையின் முதிர்ந்த நிலையே பிரம்மம்”

அஜிதன் (எதிர்) சாந்தலிங்கர்

ப595

“கொடிக்கிழங்குப் பிட்டை ஏனய்யா வாங்கினீர் கர்த்தபமே? உமக்குத்தான் வாயுபீடையாயிற்றே! நேற்று மந்திரநேரத்தில் நவதுவாரங்களாலும் ஓங்காரம் சொன்னீர் தெரியுமா?”

ஊட்டுபுரை

ஜெய் ஹிந்த்

2 thoughts on “விஷ்ணுபுரம்

  1. உங்க நிலைதான் எனக்கும் பாண்டியன். ஒன்றுமே புரியாத புத்தகங்களைப் படித்து மண்டையை குழப்பிக் கொள்வதை விட, பிடித்த பொன்னியின் செல்வனை படிக்கலாம் என்று தோன்றும்!

    இனிய ஜய வருட வாழ்த்துகள்!

    • புத்தாண்டில் முதல் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி அம்மா. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்களின் அடுத்த நூல் இந்த வருடம் வெளியாக வாழ்த்துக்கள்.

      நான் நினைத்த அளவு விஷ்ணுபுரம் சிக்கலாக இருக்கவில்லை. அதன் நுணுக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. இரண்டாம் பாகம் மட்டும் சற்று இடறியது. நண்பர் ஒருவரிடம் பேசியபோது தெளிவு கிடைத்தது. தொடர்ந்து செல்ல முடிந்தது.

      ஆம். பொன்னியின் செல்வன் காலத்தை வென்றது. அடுத்தடுத்து இன்னும் பல பொன்னியின் செல்வன் போன்ற படைப்புகள் வரவேண்டும். அதுதான் தமிழ் உயிர்த்திருக்கிறது என்பதற்குச் சான்று.

      மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Leave a comment