சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்


‘மறைத்துக் கொண்டவர்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டவர்கள்; ஒப்புக்கொண்டவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட்டவர்கள்; என்பது எவ்வளது அநீதி? தர்ம சாஸ்திரம், நியாயம் என்பனவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். எவனோ வெள்ளைக்காரன் எழுதி வைத்த இந்தியன் பீனல் கோடு சட்டம் கூட அப்ரூவர் விஷயத்தில் சலுகை காட்டுமே!…’

சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

முதல் பதிப்பு – 1970. 31ஆம் பதிப்பு 2015
மீனாட்சி புத்தக நிலையம்

image

கல்லூரிப் பருவத்தில் ஒரு மழைக்கால மாலை வேளையில் யாரென்றே தெரியாத பிரபுவால் யாரென்றே தெரியாத கங்கா ‘கெட்டுப்போய்’ விடுகிறாள். அறுபதுகளில் பிராமண சமூகத்தில் நடக்கும் கதை. நடந்ததை அம்மாவிடமும் அண்ணன் கணேசனிடமும் சொல்ல, அண்ணன் அவளை அடித்து வீட்டை விட்டுத் துரத்திவிடுகிறான்.  வெங்கு மாமா உதவியால் படிதது அரசாங்க வேலையில் இருக்கும் ஒரு முதிர் கன்னியாக இந்த நாவல் தொடக்கத்திலிருந்து இறுதி வரை வருகிறாள் கங்கா. அவளுடைய பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. அறுபது எழுபதுகளில் இந்தக் கதை வெளி வந்திருக்கிறது என்று கூறப்படும்போது, இது பிராமண சமூகத்தில், பெண்ணிய வட்டாரத்தில் எந்த அளவு சலனத்தை உண்டாக்கியிருக்கும் என்பதை உணர முடிகிறது.

image

வாசித்த நாளில் இருந்தே ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களை இந்தப் பதிவின் வாயிலாகப் பதியலாம் என்று எண்ணுகிறேன். (வெகு சுருக்கமாக)

மேய்ப்பர் இல்லா ஆடு

வெளியே காணும் கங்கா அல்ல அவள். தினசரி உள்ளே ஏதாவது ஒரு போராட்டம் ஓடிக்கொண்டே உள்ளது. பேருந்தில் ஒருவன் இடிக்கிறான். கண்டக்டர் கையைத் தொட்டு டிக்கட் தருகிறான். வெங்கு மாமாவின் சில்மிஷங்கள். எதாவது ஒன்று வந்து கங்காவின் உள்ளத்தினுள் கங்கு அணையாமல் பார்த்துக்கொள்கிறது. ஆண்களைப் பார்த்தாலே எரிச்சல் படும் கங்கா, ஒரு ஆணுடன் கல்யாணம் என்பதையே கரப்பான்பூச்சியைப் போல அருவெறுக்கிறாள் கங்கா.

ஆனால் அவளுடைய பரிதாபமான மறுபக்கம்தான் வருத்தம் தருவது. தனக்கு ஒரு துணை வேண்டாம் என்ற நினைக்கவில்லை கங்கா. ‘தன்னைத் தலை முழுக வைத்து எவன் தலையிலாவது என்னைக் கட்டியிருக்கவேண்டாமோ இந்த அம்மா’ என்று கடுகடுக்கிறாள்.

‘நாணம்’னு நான் நினைச்சிக்கிறத அவன் ‘காதல்’னு நெனச்சுக்கிறான். நாணமே காதலுக்கு அடையாளமாகப் போயிடறது. இந்த நாணத்திலே மயங்கியே அவன் அட்வான்டேஜ் எடுத்துக்கறான். ‘ப்ரொஸீட்’ பண்றான். எல்லாம் எதனாலே? ஆம்பளைகளைத் தலைநிமிர்ந்து பார்க்கப் படாது, பேசப்படாது, பழகப்படாதுன்னு சொல்லிச் சொல்லி ‘இன்ஹிபிஷன்’ஸைச் சின்ன வயசிலிருந்தே ஏற்படுத்திட்டதனாலே, ஒரு ‘அடலஸண்ட்’ பீரியட்ல பொண்களுக்கு ‘மேன்’னு நினைச்சாலே அவனோட ‘அப்பியரன்ஸ்’லேயே ஒரு ‘திரில்’ – ஒரு மனச்சிலிர்ப்பு ஏற்பட்டுப் போறது. இப்படி ஏற்படறது ஒரு நல்லொழுக்கம்னு வேற நெனச்சிக்கறா. எல்லாக் கஷ்டமும் ஆரம்பமாறது.

இந்த மனச்சிலிர்ப்பு எல்லார்கிட்டேயும் – எவன் கிட்டே வேணும்னாலும் ஒரு பொண்ணுக்க ஏற்படறது ‘இம்மாரல்’ – ஒழுக்கக்கேடுன்னு எனக்குத் தோண்றது.

இந்த ஒழுக்கக்கேடு என்று அவள் நினைக்கிறதும், பிறர் போன்று தமக்கும் ஒரு நல்ல வாழ்வு அமைந்திருக்கக்கூடாதா என்பதும் தீர்க்க முடியாத உள்ளச் சிக்கலாகிறது.

ஒரு நிலையில் இருந்து ஆட்டம் காணும்போது, அந்த நிலைக்கு நேர் மாறான பிடிவாத நிலையை எடுத்துக்கொள்கிறாள் கங்கா. அதில் பிரச்சினை வரும்போது இன்னமும் தீவிரமாக அதற்கு எதிர் நிலை எடுத்துக்கொள்கிறாள். ஆனால் இவளது எல்லா முடிவுகளிலும் பொதுவாக உள்ள ஒரு பண்பு – சுயவதை. தன்னை வதைத்த சூழலுக்காக தன்னையே மீண்டும் மீண்டும் வதைத்துக்கொள்வது. அதற்காக வெளி சமூகத்திற்காக ஒரு முகமும், தனக்காக முகமும் வைத்துக்கொண்டுதான் இருக்கிறாள் என்றே நாம் நினைக்கவேண்டி இருக்கிறது.

தனிமை – அதைக் கடக்க எளிதான அவளுக்கு ஒரு உறவு இருந்தால் எவ்வளவு எளிதாக இருக்கும் நண்பர்களே.

ஆடு புலி ஆட்டம்

யாரென்றே தெரியாதவன் கெடுத்துவிட்டுப் போய்விட்டான். அண்ணன் கணேசன் அடித்து வீட்டை விட்டுத் துரத்திவிடுகிறான். பேருந்தில் பக்கத்தில் பக்கத்தில் நிக்கறவன் இடிக்கறான். கண்டக்டர் கையைத் தொட்டு சில்லரை கொடுக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலே, அழிவு காலத்தில் கை கொடுத்து, படிக்க வைத்து வாழ்க்கைக்கு வழி காட்டிய வெங்கு மாமா பசுத் தோல் போர்த்திய புலியாக வருகிறார். ஜெயமோகன் இந்த நாவலைப் பற்றிக் குறிப்பிடும்பொது வெங்கு மாமாவை தோலுரிக்கப்படும் கதாபாத்திரமாகக் குறிப்பிடுகிறார். ஆணாதிக்க சமூகத்தின் முகமாக வருகிறார் வக்கீல் வெங்கு மாமா.

பெண்கள் ஒருத்தனுக்கே உண்மையா இருக்கனும்னு சொல்றேளே? மகாபாரதத்திலே திரௌபதி அஞ்சு பேருக்கு மனைவியா இருந்தாளே? அதை எப்படி நம்ப சாஸ்திரம் ஒத்துண்டது?

நான் தயங்கித் தயங்கித்தான் கேட்டேன். மாமாவை வசமா மடக்கிட்டோம்னு நினைச்சுக் கேட்டேன்.

அவர் சொன்னார். “நம்ப சாஸ்திரம் அதை ஒத்துக்காததுனாலேதான் அது மாறிப் போயிடுத்து… இன்னொன்னு நீ கவனிச்சியோ? இந்த ‘கான்டக்ஸ்ட்லே’ குந்திதேவியைப் பத்திக் கேக்கணும்னு உன் மனசுலே தோன்றதோன்னோ? எனக்குப் புரியறது. புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் அப்படி புத்திரதானம் பெத்துக்கிறது உண்டுங்கிறதுதான் அதுக்கு அர்த்தமே தவிர அத்தனை பேருக்கும் குந்தி மனைவியா இருந்தாள்ங்கிறது இல்லே. அதுக்கு முன்னாலே பார்த்தா பாண்டுவும், திருதராஷ்டிரனும் வியாச பகவானால் தானம் அளிக்கப்பட்டவர்கள்தான். இதிகாசங்களிலிருந்து சாரங்களைத்தான் எடுத்துக்கிடனுமே தவிர, சம்பவங்களை எடுத்துக்கிடப் படாது!”

இதிகாச பூர்வமாக விளக்கறது மட்டுமில்லாமல் விஞ்ஞான பூர்வமாகவும் விளக்க ஆரம்பிச்சுடுவார் மாமா. மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் எல்லாம் அவர் வாதத்தை நிலை நாட்டறதுக்கு முட்டை கொடுத்துண்டு வந்து நிக்கும். பத்துப் பெட்டைக் கோழிகள் இருக்கிற இடத்துலே ஒரு சேவல் போறும்பார். இவரைப் பொறுத்தவரைக்கும் ஒளிவு மறைவில்லாமல் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதிங்கிறது ரொம்ப நியாயம்னு வாதம் பண்ணுவார்.

சமூகத்தின் டெலிகேட் ஆக இருக்கும் ஒருவர், மறுபுறத்தில் தனது தங்கை மகளான கங்காவைப் பாலியல் ரீதியா சுரண்டும் தருணத்தை ஏற்படுத்த முயல்வதும், அவள் எதிர்க்கும்போதும் அதை உணர முடியாதவராக இருப்பதும், வாசகர்களை ஒரு சமூகத்தைப் பார்த்து பதற வைக்கிறது.

“கங்கா! இங்க வந்துட்டுப் போ”

“என்னைக் கிழவன்னு நினைச்சுண்டுதானே நீ வெறுக்கறே?”ன்னு அவர்  கேட்கிறபோது எனக்குச் சிரிப்பு வரது. எவ்வளவு விஷயங்களிலே மகா மேதையாயிருக்கிற இவர், இந்த விஷயத்தில எவ்வளவு அசடா இருக்கார்னு நினைக்கிறப்போ பாவமா இருக்கு.

ஒரே வாழ்க்கை – இருவர் பார்வைகள்

வெங்கு மாமாவின் ‘நீ கான்குபைனாகத்தான் வாழ முடியும்’ ஏளனத்திற்குப் பதில் சொல்லும் வகையில் தன்னைக் கெடுத்தவனையே தேடிப்பிடிக்கிறாள் கங்கா. அதன் பிறகு ஏற்படும் சிறு சிறு நிகழ்வுகளும் பெரியதொரு தாக்கத்தை வாசகன் மனதில் ஏற்படுத்துகிறது. முதலில் சபல எண்ணத்துடன்தான் அணுகுகிறான்.  கங்காவின் தோளை பிரபு தொடும்போது ச்சீ என்று தன்னை அறியாமலே விலகுகிறாள். அந்த ஒரு கணம் கங்காவின் மீதான பிரபுவின் உறவை முடிவு செய்கிறது.

“என்னைப் பொறுத்த வரைக்கும் நான் செய்ற எந்தக் காரியத்துக்கும் நான் பொறுப்பு இல்லே. ஐ யாம் நாட் ஸோ ஸ்ட்ராங். இந்த என்னோட லிமிட்டேஷன்ஸ் எனக்குத் தெரியும். இந்த மடத்தனம்தான் – இல்லே. புத்திசாலித்தனம்தான் எனக்கு வசதி. என்னைப் பத்தி என்ன பேசலை? – இப்போ புதுசாப் பேசறதுக்கு? பட் – ஆனால் ஐயாம் வொர்ரீட் அபவ்ட் யூ- வீணா உன் பெயர் கெட்டுப்போகுதேன்னுதான் பாக்கறேன். பேர் கெட்டுப் போகலாம். ஆனா அது வீணாகக் கெட்டுப் போகக்கூடாது”

“நான் தொடறதுனாக் கூட பத்மாவுக்குப் புடிக்கலேன்னு தெரிஞ்சப்புறம், அவ எனக்கு யாரோ ஆய்ட்டா. அவ எனக்குப் பொண்டாட்டிதான். அதுக்காக நான் அவளைப் பலவந்தம் பண்ண முடியுமா? ஐ கென் – நாட் ரேப் எனி ஒன்! நோ, ஐ கேன் நாட்”

தினசரி உலக லாவன்யங்களிலிருந்து விடுபட்டுக்கொண்டதாக துறவு வேடம் பூண்டாலும் கங்கா உள்ளே தனக்கான ஒரு சரியான துணைக்காக ஏங்குகிறாள். நம்பிக்கையான ஒரு பற்றுக்கொடியாக பிரபு அமைகிறான்.

சமூகத்திற்கு நல்ல முகத்தைக் காட்டுகிறார் வெங்குமாமா. அவரது மறுபக்கம் பூசணிக்காயில் வரையப்பட்ட திருஷ்டி பொம்மை போல இருக்கிறது. சமூகத்திற்கு மட்டமல்ல, தன் குடும்பத்திற்கே கூட பிரபுவைப் பிடிக்காமல் போகிறது. கங்கா அவன் வாழ்வில் வந்த பிறகு அவனது நல்ல குணங்கள் ஒவ்வொன்றாய் தெரியவருகிறது.

புறப்படறதுக்கு முன்னாடி சொல்றார்: “இவ்வளவுதான் லைஃப்! இட் இஸ் ஆல்ரெடி டிஸைடட். நாமட் ஒண்ணும் இதில் செய்யறதுக்கில்லே. சாகலாம்னா தற்கொலை செய்துக்க முடியலே. எங்கேயாவது எல்லாத்தையும் உட்டுட்டு ஓடிடலாம்னா அதுவும் முடியாது போல இருக்குது. முடியாதுன்னு இல்லே. எல்லாமே முடியும். அதுல எல்லாம் ஒண்ணும் ‘மீனிங்’ இல்லே.. ஸோ! லெட் அஸ் லிவ் தி லைப் வித் டிட்டாச்மெண்ட்! (ஆக, வாழ்க்கையை வாழ்வோம்; பற்றில்லாமல் வாழ்வோம்)”.

ஒரு வகையில் கங்கா மற்றும் பிரபுவின் வாழ்க்கை முழுதும் அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக மனம் புழுங்குகிறார்கள். அந்த காரணத்துடன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில்தான் நாம் புரிந்து கொள்ளவேண்டிய செய்தி உள்ளது என்று எண்ணுகிறேன்.

வாழ்க்கை கொடுக்கும் அடிகளை வாங்கி நைந்து போன பிரபு, வாழ்க்கையை அதன் போக்குக்கு விட்டுவிட்டு, அதற்கேற்ப டர்புலன்சில் ஓடும் பிளைட்டு போல வாழக் கற்றுக்கொள்கிறான். தற்கொலை கூட செய்யலாம்கிற அளவிற்குக் கேவலப்படுகிறவன், கங்காவை ஒரு ஊன்று கோலாகப் பற்றி மேலே வருகிறான்.

கங்காவிற்கு என்னதான் பிரச்சினை? ஈகோ? காம்ப்ளக்ஸ்? என்றெல்லாம் இந்தக் கதை நம் மனதைப் போட்டு பிசைந்து கொள்கிறது. ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது. சுவற்றில் ஓங்கி ரப்பர் பந்தை அடிக்கிறோம். அடிக்கிற வேகத்தில் எதிர் திசையில் ஓடும் பந்துக்கு என்ன பிரச்சினை? ஏன் அவ்வளவு விரைவாக வேறு திசையில் எம்புகிறது. சமயத்தில் அதே வேகத்தில் என்னையே வந்து தாக்குகிறது?

—-

இப்படி எல்லாம் நடக்கிறதா என்கிறார்கள். ‘ஆம்’, ‘ஆம்’ என்கிறது வாழ்க்கை என்று முன்னுரையில் எழுதுகிறார் ஜெயகாந்தன். கதை என்பதை விடுத்து, அதன் வழியாக எத்தணை வாழ்க்கையைப் பார்க்க முடிகிறது என்பதுதான் இந்த நாவலைத் திரும்ப வாசிக்க வைக்கிறது. கங்காவின் உளச் சிக்கலுக்கோ, வெங்குமாமாவின் நடத்தைக்கோ ஜஸ்டிஸ் என்று இந்த அற்ப வாசகனால் எதையும் கொடுக்க இயலாது. நமது தினசரி வாழ்க்கையில் பார்ப்பவர்களில் கங்காவைப் பார்க்க இயலாது போகலாம். ஆனால் அப்படி ஒருவர் இருந்தால்? ஒரு வேளை கணேசன் அல்லது கனகத்தின் இடத்தில் நீங்களோ நானோ இருந்தால் என்ன முடிவு எடுத்திருப்போம்?

For Index: D.Jayakanthan, Renowned Tamil Writer.Photo: V_Ganesan. (Digital Image) 11.9.04.
For Index: D.Jayakanthan, Renowned Tamil Writer.Photo: V_Ganesan. (Digital Image) 11.9.04.

ஈவேரா போலவே ஜெயகாந்தனும் தமிழ் [இந்திய] சமூகத்தின் அறிவார்ந்த மையமாகப் பிராமணச் சமூகத்தையே கண்டார். அவர்களுக்குத்தான் சமூகத்தின் கலைகளையும் சிந்தனையையும் ஞானத்தையும் பாதுகாத்து முன்னெடுக்கும் பொறுப்பு இந்த மரபால் அளிக்கப்பட்டிருந்தது என்று நினைக்கிறார். பிராமணர்கள் அதைத் தங்கள் சுயநலனுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்டனர் என்று ஈவேரா சொன்னார். கிட்டத்தட்ட ஜெயகாந்தனும் அதைத்தான் சொல்கிறார். ஆனால் அவர்களில் உள்ள முற்போக்கான, படைப்புமனம் கொண்ட சிலரை நோக்கி அவர் பேசுகிறார். ஈவேரா போல அவர்களை ஒட்டுமொத்தமாக அழிவுசக்தியாக நினைக்கவில்லை. அவர்களை நம்பி ஒரு மாற்றத்துக்காக அறைகூவுகிறார், அவ்வளவுதான். பிராமணரல்லாத ஜெயகாந்தனின் அந்த விமர்சனங்களை அவர்கள் பெரும்பாலும் ஆக்கபூர்வமாகவே எடுத்துக்கொண்டார்கள்.

-ஜெயமோகன்

 

நாவல் பற்றி

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

வாழ்க பாரதம்.

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்


“ஏந்துரை? அவர் கிறிஸ்துவரா மாறிட்டாரா?” என்று கேட்டான் துரைக்கண்ணு,

“இல்லை மம்மாதான் கிறிஸ்டியன். அவர் எப்பவும் போல இருந்தார். பிள்ளையார் கோயிலுக்குப் போவார். ஹிந்து பிரேயர் ஸாங்…. எல்லாம் பாடுவார். என்னைக் கூடக் கிறிஸ்தவன் ஆக்கணும்னு மம்மா சொல்லிச்சுது. ‘அதெல்லாம் அவன் இஷ்டத்துக்கே விட்டுடணும்’னு பப்பா சொல்லிட்டார். ஸ்டில் ஐ ஹாவ் நோ எனி ரிலிஜன். எனக்கு மதம் இல்லே.”

“ஆனா சாமி கும்பிடுறியே..” என்று குறுக்கிட்டான் துரைக்கண்ணு.

“எஸ் அதுக்கென்னா? சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்”

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்

மீனாட்சி புத்தக நிலையம்
முதல்பதிப்பு ஏப் 1973, 16ஆம் பதிப்பு 2013
NLBயில் முன்பதிவு செய்ய – http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/FULL/EXPNOS/BIBENQ/5840851/3131072,1
கன்னிமாரா தளமும், தமிழக நூலக தளங்களும் வழக்கம்போல திறக்கவில்லை

image

சிங்கை தேசீய நாள் அன்று காலை சாப்பிட போனபோது பொட்டிக்கடையில் இருந்த இந்த நூல் என்னை அழைத்தது. ‘சரி வாங்கிப் பார்ப்போம்’ என்று வாங்கி, ‘சரி வாசித்துப் பார்ப்போம்’ என்று வாசித்தேன்.

ஹென்றி ஒரு கிராமத்துக்குள் நுழைகிறான். தினசரி பயணம், வேலை என்று இருப்பவர்கள் மத்தியில் ஹென்றி சுத்தபத்தமாக அந்நியனாக இருக்கிறான். ஆக இவன் ஒரு மனிதன்

அந்த ஊரில் ஒரு பாழடைந்த வீடு உள்ளது. ஒரு காலத்தில் பிள்ளைவாள் வாழ்ந்த இடம். பிள்ளைவாள் ஒருநாள் ஊரை விட்டு ஓடிவிடுகிறார். அதன் பின்னர் ஒரு நாவிதன் அந்த வீட்டு உத்தரத்தில் தூக்குப் போட்டுக்கொள்கிறான். ஆக.. இது ஒரு வீடு.

ஹென்றியின் கதை வாத்தியார் தேவராஜன், அவன் அக்கா அக்கம்மா, அக்கம்மா வீட்டு எடுபிடி மண்ணாங்கட்டி, லாரி டிரைவர் துரைக்கண்ணு, கிளீனர் பையன் பாண்டு, – இதெல்லாம் ஒரு உலகம்.

என்று நான் நினைத்தேன்.  ‘மடையா அப்படி இல்லை’ என்கிறார் ஜெயமோகன். கீழே அவரது குறிப்பைக் கொடுத்துள்ளேன். கதையை நான் சொல்வதற்கில்லை. நீங்களே படிச்சிக்கிடுங்க.

எனக்குப் பிடித்த பகுதிகளை மட்டும் ஆர்வம் உள்ளவர்களுக்காக சொல்லிக்கொண்டு வருகிறேன்.

ஹென்றி – சுத்தபத்தமாக அந்த கிராமத்துக்குள் அந்நியனாக இருக்கிறான். தோற்றத்தில். நடை உடை பாவனை மற்றும் பேச்சில்.

“கிளியாம்பா. கிளியாம்பா.. நீ பாக்கலியே அந்தச் சட்டைக்காரனை? இந்த அக்கம்மாளோட தம்பிகாரன் இட்டுக்கிட்டு வந்திருக்கான். அவுங்க வூட்டுக்கு விருந்தாடியாம்.. ஏண்டி பொண்ணே, சட்டைக்காரருன்னா பறையரு பள்ளரு போலத்தான்!.. வூட்டுக்குள்ளே வுடலாமா?”

“அது என்னாவோ போ. எனக்குத் தெரியாது”

“ஆமா.. இந்தக் காலத்திலே இதெல்லாம் யாரு பாக்கறாங்க?  படிச்சிப் பிடறானுவ…… நம்பூட்டுப் புள்ளைங்க போலவே சட்டை …. சராய் போட்டுக்கறானுவ….. அந்மாந் தொலைவு ஏன் போவனும்? இந்தப் பள்டத்திலே கூட ரெண்டு வாத்தியாருங்க கூடப் பறையருங்களாமே! அதில ஒரு வாத்திச்சி கூடவாம்..”

நெடுங்கதை தொடக்கத்தில் படிப்படியாக ஒரு சாகசச் கதையாக வேகம் பிடிக்கிறது.

“பரியாறி…. மீன்ஸ்…. பார்பர்… தானே? ” என்ற தனக்குத் தெரிந்ததையே தேவராஜனிடம் கேட்டுக்கொண்டான்.

“ஆமா, அவன் இந்த வீட்டுத் திண்ணையில்தான் எப்பவும் கெடப்பான்.. கொஞ்சம் பைத்தியம்.”

“ஹு இஸ் நாட் ‘கொஞ்சம் பைத்தியம்’ என்று லேசான சிரிப்புடன் அழுத்தம் தராமல் சொல்லிக்கொண்டான் ஹென்றி.

தொடர்ந்து ஹென்றியின் பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது. இவன் ஆத்திகனா நாத்திகனா? இந்துவா கிறித்தவனா? பிழைக்கத்தெரிந்தவனா பைத்தியக்காரனா? வாழ்வனுபவம் பெற்றவனா அரைகுறையா என்று நமக்குள் கேள்விகள் எழும்பிக்கொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

தேவராஜனின் நட்புக்காக குடிக்கிறான். அவன் வாழ்க்கைப் பிரச்சினை தெரிந்து நட்பு லட்சுமண ரேகை தாண்டாது  ஆலோசனை கூறுகிறான். சிறு பசங்களைக் கூட மதிக்கிறான். யார் வணககம் சொல்லும்போதும் கைகூப்பி வணக்கம் சொல்கிறான். சொத்து என்பது தேவையில்லை, என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறான். நிர்வாணமாக கிணற்றில் குளிக்கிறான். தானே முடி வெட்டிக்கொள்கிறான். ஒரு மகா உன்னத ஏகாந்தன்.

ஒன்றைக் கூறிக்கொள்ளவேண்டும். சென்னை சேரியோ, விளிம்பு நிலை மனிதர்களின் எதிர்மறை எண்ணங்களோ ஏதுமில்லை. எல்லாம் நேர்மறையாக நடக்கிறது இந்த கதையில்.

பளிச் என்று பிறரைப் பாராட்டுகிறான் ஹென்றி. ரொம்பவும் ஆங்கிலத்தனமாக நடந்து கொள்கிறான்.  எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கிறான். ஓடுகிற ஆடு, கஞ்சா குடிக்கும் குப்பி, வெற்றுடம்புடன் குளிக்கும் நங்கை, இருண்ட பின் அமைதியாக இருக்கும் கிராமம், லாரி முன் சீட்டிலிருந்து ஓடும் சாலை, கிராமத்துப் பஞ்சாயத்து, பம்பரம் குத்தும் பசங்கள். எல்லாவற்றிலும் வேடிக்கைபார்த்துக் கொண்டே இருக்கிறான். இந்த நாவலின் முடிவில் இவன் திரும்ப கிளம்பிடுவான் என்பதே என் எதிர்பார்ப்பாக இருந்தது.

பிளாஷ் பேக்குகளாக வந்து போகும் ஹென்றியின் கதை இந்த நாவலிலேயே ஜோரான பகுதி. அவ்வப்போது சிறு சிறு பகுதிகளாக வந்து போகும் இந்தப் பகுதிகளை நான் ரசித்து ரசித்து வாசித்தேன்.

“எல்லாரும் இந்தியாவுக்கு ஓடி வந்தோம். மைக்கேலுக்கு நல்ல காயம். இவரை நான் முதுகுலே தூக்கிக் கிட்டேன். மம்மாவும் தலையில ஒரு பெரிய மூட்டையைத் தூக்கிக்கிட்டாங்க. எங்களை மாதிரி எவ்வளவோ பேர்.. ரயில், குட்ஸ், வண்டி, நடை எப்படியெல்லாமோ.. உயிர் பொழைச்சால் போதும்னு மனுஷங்க ஓடறப்போ அவன் எவ்வளவு நல்லவனா, அடக்கமானவனா, நெறைஞ்ச அன்பு உள்ளவனா இருக்கான் தெரியுமா…!”

“…….. அப்பாடான்னு மூச்சு விட்டோம். அவ்வளவுதான்… மறுபடியும் குண்டு விழுந்தது.”

“… மைக்கேல் அந்த நிலையிலே கூட உன்னைக் கொஞ்சினாரு.. நாங்க இந்தியாவுக்கு வந்து நீ நான் மம்மா மைக்கேல் நாலு பேருமா ஒரு குடும்பமா வாழறதுன்னுதான் வந்தோம். ஆனால் மைக்கேல் வழியிலேயே செத்துப் போயிட்டார். நல்ல மழை. எந்த ஊர்னு கூட தெரியாத இடம். நம்ப மாதிரி ரொம்ப பேர் அங்கே ஒ பாழடைஞ்ச வீட்டில தங்கியிருந்தாங்க. நாங்களும் போயி அங்க ஒதுங்கினோம். பாஷை, ஜாதி, தேசம்கிறது எல்லாம் எவ்வளவு அற்பமானதுன்னு தெரிஞ்சுது. அன்புதான் மகனே முக்கியம். ”

எவ்வளவு இலக்கிய நயமான நிகழ்வுகள் இருக்கட்டும். சாமான்ய மனிதர்களின் நட்புணர்வு மிகுந்த சம்பாஷனைகளை விட பெரிய சுவாரசியம் வேறில்லை. அது போன்ற ஒன்றுதான் சர்க்கரை வள்ளிக்கிழங்கு விற்கும் பெண்ணும் ஹென்றியும் உரையாடும் இடமும். அது ஒரு ரெண்டு பக்கம் போகும். இல்லை என்றால் அதனை முழுவதும் தட்டச்சு செய்துவிடுவேன். 🙂

“ஏந்துரை? அவர் கிறிஸ்துவரா மாறிட்டாரா?” என்று கேட்டான் துரைக்கண்ணு.

“இல்லை மம்மாதான் கிறிஸ்டியன். அவர் எப்பவும் போல இருந்தார். பிள்ளையார் கோயிலுக்குப் போவார். ஹிந்து பிரேயர் ஸாங்…. எல்லாம் பாடுவார். என்னைக் கூடக் கிறிஸ்தவன் ஆக்கணும்னு மம்மா சொல்லிச்சுது. ‘அதெல்லாம் அவன் இஷ்டத்துக்கே விட்டுடணும்’னு பப்பா சொல்லிட்டார். ஸ்டில் ஐ ஹாவ் நோ எனி ரிலிஜன். எனக்கு மதம் இல்லே.”

“ஆனா சாமி கும்பிடுறியே..” என்று குறுக்கிட்டான் துரைக்கண்ணு.

“எஸ் அதுக்கென்னா? சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்”

இது மாதிரி பேசறப்பவெல்லாம் ஹென்றிக்குள்ள ஜெயகாந்தனின் ஆவி வந்து புகுந்து கொள்ளும்.

துரைக்கண்ணு மொரட்டு சுபாவமாக தெரிவது போல் இருக்கிறான். நல்லவனாக, நல்ல அப்பனாக, நல்ல கணவனாக, நல்ல சகோதரனாக வந்து போகிறான்.

ஹென்றிக்கு அடுத்தபடியாக கதை முழுக்க தேவராஜன் வருகிறான். அவன் அவன் மனைவி அவன் பிரச்சினை என்று ஒரு டிராக் ஓடுகிறது.

பேபி – எண்ணி நான்கு இடங்களில்தான் வருகிறாள். சித்தபிரம்மை பிடித்து, ஆடையின்றி யார் கண்ணிலாவது தென்படுவாள். சட்டை செய்யாது மறந்துவிடுவாள். அவளுக்காக இரக்கப்படுகிறான் துரைக் கண்ணு. ஆனால் அவனது உதவியைக் கொள்ளும் அளவிற்கு அவளுக்கு நினைவு தெளிவில்லை. ஆனால் ஹென்றி பேச்சை மட்டும் கேட்கிறாள். பேபியின் அத்தியாயம் என்பது வாசிப்பவனை கற்பனைக்குள் தள்ளிவிட்டு முடிந்துவிடுகிறது. ஏன் அவள் அப்படிச் செய்தாள். ஆம். ஹென்றி நினைப்பது மாதிரி. அப்படி செய்யாதிருந்தால்தான் ஆச்சரியம்.

இதை வாசித்து 3 வாரம் முடிந்துவிட்டது. ஆனால் இன்றுதான் எழுத முடிந்தது.  நாவல் என்றவுடன் நாம் பிரியப்படுவதன் காரணம் அது தரும் வாசிப்பு அனுபவம். கதை என்பது ஒரு புறம் இருப்பினும், கதை பின்புலங்கள் தருகிற விபரங்கள் ஒரு நாவலுக்கு மிக முக்கியம். அது தரும விவரணை அந்த வாழ்க்கைக்குள் நம்மைக் கொண்டு சொல்லும்.

ஆக கதை மட்டுமே இருந்தால் அதை நாவல் என சொல்ல முடியுமா என்ன? நெடுங்கதை என்று வேண்டுமானால் சொல்லிக்கலாம். அவ்வகையில் இது ஒரு நெடுங்கதை.

இப்படி எண்ணிக் கொண்டுதான் இந்தப் பதிவை எழுதி முடிக்கும் வரை எண்ணியிருந்தேன். ஆனால் பிரசுரிக்கும் முன் ஜெயமோகனின் பின்வரும் குறிப்பை வாசிக்க நேர்ந்தது. ‘எதுக்கு அந்த கதை அமைப்பிற்காக அலட்டிக்கொள்ளவேண்டும்? என்ன சொல்ல வருகிறார் என்று அல்லவா பார்க்கவேண்டும்’ என்று அவர் கேட்பது உரைக்கிறது.

ஒருமனிதன் ஒரு வீடு ஓர் உலகம் நாவலின் நடையை, சம்பிரதாயமான தொடர்கதை அமைப்பை ‘மன்னித்து விட்டு’ அதை வாசியுங்கள். அது ஒரு முக்கியமான கருத்துவிவாதத்தைத் தொடங்கிவைப்பதைக் காணலாம். பல்லாயிரமாண்டு பழைமையான இந்திய ஆன்மீகத்தின் முன் அது ஒரு புதிய ஆன்மீகத்தை முன்வைக்கிறது.

அந்நாவல் வெளிவந்த காலகட்டத்தை நீங்கள் பார்க்கவேண்டும். உலகமெங்கும் ஹிப்பி இயக்கம் வலுவாக உருவான காலம் அது. உலகப்போர்களின் சோர்வில் இருந்து அரசியலமைப்புகள், சமூகஅமைப்புகள் ,சிந்தனை அமைப்புகள் அனைத்திலும் நம்பிக்கை இழந்துபோன ஒரு தலைமுறை உருவாகியது. அவர்களுக்கான அராஜ இலக்கியமும், கட்டற்ற கலையும், பித்தெடுத்த இசையும் உருவாயின. அந்தத் தலைமுறையை நோக்கிப் பேசுகிறது அந்த நாவல்.

அதன் மகத்தான தலைப்பு அந்த தரிசனத்தைச் சொல்கிறது. ஒரு மனிதன் -> ஒரு வீடு – > ஓர் உலகம். ஆம் ஒரு மனிதனே ஓர் உலகமாக ஆகமுடியும். அவன் உலகை அவனே உருவாக்க முடியும். ஹென்றி ஒருவகை ஹிப்பி. ஆனால் கொஞ்சம்கூட எதிர்மறைப்பண்பு இல்லாத மனிதாபிமானியான ஹிப்பி. நம்பிக்கையும் பிரியமும் கொண்ட ஹிப்பி. அவனுக்குள் உள்ள ஒளியால் தன் உலகையே அவன் ஒளியாக்கிக் கொள்கிறான்

அன்றைய தலைமுறைக்கு ஜெயகாந்தனின் பதில் அது. காம்யூவின் அன்னியனுக்கும் காஃப்காவின் கரப்பாம்பூச்சிக்கும் ஜெயகாந்தன் வைக்கும் மாற்று ஹென்றி.

அந்த வாசிப்பு ஜெயகாந்தனை அப்படித் தவிர்த்துவிடமுடியாதென்பதைக் காட்டும். அப்படி மொழிநடையை, புனைவுமுறையைக் கற்பனையால் தாண்டிக் காலத்தால் அழியாமல் எஞ்சியிருக்கும் தரிசனத்தையும் கவித்துவத்தையும் கண்டுகொள்ளமுடிந்தால் மட்டுமே நீங்கள் உலகின் செவ்வியல் படைப்பாளிகளை வாசிக்கமுடியும்

ஜெயகாந்தன் பழையவராகிவிட்டாரா? –
ஜெயமோகன் – http://www.jeyamohan.in/35572#.VeHAvJekM-0

தொடர்புடைய பிற பதிவு –

சிலிகான் ஷெல்ஃப்

image

வாழ்க பாரதம்.

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

குருபீடம் – ஜெயகாந்தன்


மிகச் சிறந்த இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைப் பற்றி எழுத இருக்கிறேன். அதில் முதலாவதாக குருபீடம்.

உங்களைப் போன்ற வாசிப்பு ஆர்வம் மிகுந்த நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில் இந்த நூலைப் பரிந்துரைத்தார். அவர் சொல்லி சில நாட்கள் போகவில்லை. ஒரு வாசகர் வட்ட சந்திப்புக்காக நூலகம் சென்றபோது அதே நூல் கண்ணில் பட்டது – குருபீடம்.

இதில் சில கதைகள் மதுரை செயல்திட்டத்தில் படிக்கக் கிடைக்கிறது.
பார்க்க – http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0204.html

குருபீடம்
ஆசிரியர்: ஜெயகாந்தன்
பிரிவு: புனைவு (சிறுகதைத் தொகுப்பு)
பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – பதினைந்தாம் பதிப்பு மே 2012
கன்னிமாரா:
http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=341212
http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=341232
http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=341573
NLB:
http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/FULL/EXPNOS/BIBENQ/2443374/44291995,1

நூல் அரங்கம்

சிறு, குறு மற்றும் நெடுங்கதைகளாக 9 படைப்புகள் இந்த நூலில் உள்ளன.

1. குருபீடம் (1970)

ஒரு வீணன். வெட்டியாகப் பொழுதைக் கழிக்கிறான். டீ வாங்கக்கூட வக்கில்லாத அவனுக்கு மடைப்பள்ளி சமையல்காரன் ஒருத்தன் சீடனாவதாக சொல்லிக்கொள்கிறான். பின்னொரு நாளில்தான் தெரிய வருகிறது, குரு என்று இருக்கும் இவன் சீடனாகவும், சீடனாக இருந்து இவனுக்கு அவன் கற்றுத்தருவதையும். புன்னகைக்க வைத்த ஞானோபதேசக் கதை!

நம்ப ஹீரோவின் அழுக்குத்தோற்றத்தையும், சோம்பலையும் கண்முன்னே கொண்டு வரும் காட்சி அபாரம்.

விரைவாக ஏறி வந்த வெயில் அவன்மீது மெதுவாக ஊர்ந்தது. அவன் தெருவுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு சுவர் ஓரமாகப் படுத்திருந்தான். சத்திரத்துச் சுவரின் நிழல் கொஞ்சங் கொஞ்சமாகச் சுருங்க ஆரம்பித்தது. முதலில் வெயிலின் விளிம்பு அவனது விலாவுக்கும் தரைக்கும் இடையே மெள்ள மெள்ளப் புகுவதை அவனது மதர்த்த தேகம் ரொம்பத் தாமதமாக உணர்ந்தது. வெயிலின் உறைப்பை உணரக்கூடிய உணர்ச்சிக் குறுகுறுப்பு மழுங்கிப் போனதால் ஒரு மலைப்பாம்பு மாதிரி அவன் அசிங்கமாக நெளிந்தான். அந்த வெப்பத்திலிருந்து – அந்த வெயிலின் விளிம்பிலிருந்து ஒரு நூல் இழை விலகுவதற்கு எவ்வளவு குறைவான, மெதுவான முயற்சி எடுத்துக் கொள்ளலாமோ, அவ்வளவே அவன் நகர்ந்து படுத்தான். சற்று நேரத்தில் மறுபடியும் வெயில் அவனைக் கடித்தது. அவனது அசமந்தம் எரிச்சலாகி அவன் தூக்கம் கலைந்தான். ஆனாலும் அவன் எழுந்திருக்கவில்லை. இன்னும் கொஞ்சம் நகர்ந்து சுவரோடு ஒட்டிக் கொண்டான்.

எதிரே இருந்த டீக்கடையிலிருந்து டீ அடிக்கிற சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தில் அவன் டீ குடிப்பது மாதிரி கற்பனை செய்து கொண்டான்.

மறுபடியும் வெயில் அவனை விடாமல் போய்க் கடித்தது. அதற்குமேல் நகர முடியாமல் சுவர் தடுத்தது. ஒரு பக்கம் சுவரும் ஒரு பக்கம் வெயிலும் நெருக்க அவன் எரிச்சலோடு எழுந்து உட்கார்ந்தான். அவனுக்குக் கண்கள் கூசின. ஒரு கண்ணைத் திறக்கவே முடியவில்லை. பீளை காய்ந்து இமைகள் ஒட்டிக் கொண்டிருந்தன.

குருபீடம் - ஜெயகாந்தன்

2. டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும் (1969)

பட்டிணத்தில் நல்ல வேலையிலிருந்த வேதகிரி முதலியாருக்கு வேலை போகிறது. துக்கம் விசாரிக்க வரும் நண்பர்கள் தொல்லையிலிருந்து தப்பிக்க தன் கிராமத்திற்கு வந்து தாயுடன் தங்குகிறார். பட்டிக்காடா பட்டணமா என்று சீர்தூக்கி நல்ல முடிவு எடுக்கிறார்.

செருப்பைக் கழற்றினாலே கால் கூசும் முதல் பகட்டு பட்டிணப் பழக்கத்தையும், கிராமத்து மக்களுக்கு முன் தன் சிரம் தாழ்ந்துவிடக்கூடா என்கிற இரண்டாவது பட்டிணப் பழக்கத்தையும் புன்னகையுடன் இங்கே காண்பீர்.

எதிரே ஆள் வராவிட்டாலும் இந்த நிழலில் போட்டிக்கு ஒரு நாய் வருகிறது. சாதாரண கிராமத்து நாட்டு நாய்தான். ஊர் வழக்கப்படி அதைச் சொன்னால் இப்போதெல்லாம் சண்டைக்கு வந்துவிடுகிறார்கள். ‘பறை, பள்ளூ’ என்கிற வார்த்தைகள் மனசால் கூடத் தீண்டப்படாததாக மாறிவிட்ட பிறகு நாயைக்கூட அப்படிப் பட்டம் கட்டி அழைக்க முடிவதில்லை. ஆனால் இது சரியான ஹரிஜனப் பகுதி நாய்தான். நிழலை மறித்துக்கொண்டு அது நிற்கிறது. அது நிச்சயம் வழிவிட்டு விலகாது. விலகப் போவதில்லை என்கிற தீர்மானம் அதன் திடீரென உயர்ந்த காதுகளிலும் ‘உம்’மென்று வயிற்றுக்குள் அடங்கி ஒலிக்கும் பொருமலிலும் தெரிகிறது. காரணம், நடுவில் இலை கிடப்பதுதான்.

அப்போதுதான் நினைத்தார் வேதகிரி முதலியார்: பொறப்படும் போதே அந்தக் கெழம் – அம்மாதான் – சொல்லிச்சு, ‘குடையை எடுத்துக்கிட்டுப் போடா, வெயில் கொளுத்துது’ன்னு…

பட்டணத்திலிருந்து கிராமத்துக்கு வந்திருக்கும் இந்த மூன்று மாத காலமாக வேதகிரி முதலியார் வெளியே போவதற்குப் புறப்படுகிற போதெல்லாம் அவரது தாயார் செல்லத்தம்மாள் குடை எடுத்துச் செல்லுமாறும் வெயிலின் கொடுமை குறித்தும் ஒரு பாட்டுப் பாடாமலிருப்பதே இல்லை. சில சமயங்களில் அவளே கொண்டு வந்து அவரிடம் கொடுப்பாள். இருப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்பு திருக்கோவிலூருக்கு திருவிழாவுக்குப் போனபோது ஆறு ரூபாய்க்குத் தான் அந்தக் குடையை வாங்கினதையும், அதற்குப் பிறகு ஐந்து வருஷத்துக்கு முன்னால் ஒரு கம்பியும் புதிசாக மேலே வெள்ளைத் துணியும் போட்டுத் தைப்பதற்குத் தான் மூணு ரூபாய் செலவழித்ததையும் குறைந்தது ஒரு பத்துத் தடவையாவது இதுவரை சொல்லி இருப்பாள்.

சரி, நாய்க்குப் பயந்து எத்தனை நாழி இப்படியே நிற்பது? ஒன்று இவர் வெயிலைப் பொருட்படுத்தாமல் ஒதுங்கிப் போக வேண்டும், அல்லது அதை விரட்டி விட்டு இவர் தன் வழியே தொடர்ந்து நடக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் இவர் நின்றிருந்தால் அதுவும் நின்றிருக்குமா என்ன? அதுவோ நாய், அதுவும் காய்ந்து வரண்ட சேரி நாய். எதிரே இலை, இவர் விரட்டமாட்டார், தயங்குகிறார், பயப்படுகிறார் – என்று தெரிந்ததும் அது இவரை விரட்டுகிற தோரணையில் கொஞ்சம் குரலெடுத்து லேசாகப் பற்களை வெளிக்காட்டி ‘உர்’ரென்கிறது.

வேதகிரி முதலியாருக்கு நிஜமாகவே உதறல். மிகுந்த மரியாதையோடு பத்து அடி நிழலிருந்து விலகி வீதியின் நடுவே வெயிலில் வந்து அரைவட்டமாக ஒதுங்கி நாயைக் கடந்து மீண்டும் நிழலில் ஏறி நடந்தார். தான் நாய்க்குப் பயந்து இப்படி வந்ததை யாரும் பார்த்திருப்பார்களோ என்று திரும்பிப் பார்த்தார். ம்ஹீம் யாருமில்லை. அந்த நாய்கூடப் பார்க்கவில்லை. பார்த்தால் என்ன? ‘பட்டணத்துக்காரன் நாயைக் கண்டு பயப்படறான்’ என்று பரிகாசம் பண்ணுவார்களே என்கிற பயம் வேதகிரி முதலியாருக்கு.

அதிலும் அந்த சுப்பராம ஐயர் இருக்கிறாரே, சமயத்தில் அவர் பண்ணுகிற பரிகாசத்தில் முதலியாருக்குக் கோபம் கூட வந்துவிடுகிறது. கோபத்தைக் காட்டிக் கொண்டால் இன்னும் மானக்கேடாகப் போகும். அவரோடு சேர்ந்து கொண்டு முதலியாரின் தாயாரும் சிரிக்கிறாள்.

3. நிக்கி (1970)

சேரியில் நாய் குட்டி போடுகிறது (சேரி, சென்னை என்றால் இவரது விளையாட்டைக் காண கண் கோடி வேண்டும்). தாய் நாய் காணாமல் போய்விட அனைத்து குட்டிகளையும் அவரவர் எடுத்துச் சென்றுவிடுகின்றனர். எஞ்சிய ஒரு பெட்டை நாய்தான் நிக்கி. பல கை மாறி திரும்ப தன் தாய் நிலைக்கு வந்து ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா’ என்று சொல்கிறது.

அந்தக் குடிசைக்குச் சொந்தக்காரி இந்த நாயைக் கண்டு, அதன் மீது பூசிக் கிடக்கும் சேறும் சகதியும் அதற்கே சொந்தம் போன்றும், அது அந்தத் திண்ணையின் மூலையை அசுத்தப்படுத்துகிறது என்றும் கோபித்து, விளக்குமாற்றால் குப்பையைக் கூட்ட வந்தவள் நாயையும் சேர்த்துக் கூட்டித் திண்ணையிலிருந்து தெருவுக்குத் தள்ளினாள். அது கத்தி அலறியவாறு தலைகீழாகப் புரண்டு திண்ணையிலிருந்து தெருவில் வீசி விழுந்தது.

நான் மேலே சிகப்புக் கலரில் கொடுத்துள்ளதைப் படித்திட்டீர்களா. ரைட். அடுத்து….

 

4. ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது (1969)

எளிமையான கரு கொண்ட மனதைத் தொட்ட கதை. திருடிவிட்டு ஒரு காலணிக்குள் சுவர் ஏறிக் குதிக்கும்போது மாட்டிக்கொள்கிறான் திருடன். ஜெயிலுக்குப் போறான். திரும்ப அதே காலணியில் குடி வரான். அவ்ளோதான். ஆனால் அதை படு ஜோராக முடித்துள்ளவிதத்தில்தான் இந்தக் கதை சிறப்புப் பெறுகிறது. இந்த நூலில் எனக்குப் பிடித்த கதை. தொடை நடுங்கி குஞ்சுமணி அய்யர் படு ஜோர்!

“நீதான் இங்கே திருட வந்திருக்கிற புது மாமாவா?… உன்னைப் பார்க்கக் கூடாதுன்னு அம்மா அறையிலே போட்டு மூடி வச்சிருந்தா… அம்மா கூடத்துலே படுத்துத் தூங்கிண்டிருக்கறச்சே நான் மெதுவா வந்துட்டேன். எனக்கு மிட்டாய் வாங்கித் தரயா? திருடிண்டு வந்துடு… அந்தப் பொட்டிக் கடையிலே நெறைய இருக்கு…”

அவன் சிரித்தான். அந்தக் குழந்தையின் கன்னத்தைத் தொட்டபொழுது அவனுக்கு அழுகை வந்தது. அவசர அவசரமாக உடம்பைத் துடைத்துக் கொண்டு இடுப்பில் கட்டிய துண்டோ டு பெட்டிக் கடைக்குப் புறப்பட்டான்.

அவன் போகும்போது அவனது இடுப்புத் துண்டைப் பிடித்து இழுத்து ரகசியமாகச் சொல்லிற்று, குழந்தை: “அம்மா பாத்தா அடிப்பா… சுருக்கப் போய் அவனுக்குத் தெரியாம மிட்டாயை எடுத்துண்டு ஓடி வந்துடு! நான் உங்காத்திலே ஒளிஞ்சிண்டிருக்கேன்…”

அவனும் ஒரு குழந்தை மாதிரியே தலையை ஆட்டிவிட்டுக் கடைக்கு ஓடினான்.

ஒரு நொடியிலே ஓடிப் போய், கை கொள்ளாமல் சாக்லெட்டை மடியில் கட்டிக் கொண்டு அவன் வந்தான்.

திருடன் என்கிற ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு துணை கிடைத்து விட்ட சந்தோஷம் போலும் அவனுக்கு! ‘இது உன் வீடு’ என்ற உரிமையை இந்தச் சமூகமே அந்தக் குழந்தை உருவில் வந்து தந்துவிட்ட ஒரு குதூகலம் அவனுக்கு.

அந்த மகிழ்ச்சியில் ஓடி வந்த அவன், வீட்டுக்குள் குழந்தையைக் காணாமல் ஒரு நிமிஷம் திகைத்தான். ‘யாராவது வந்து அடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டார்களோ?’ என்ற நினைப்பில் அவன் நெஞ்சு துணுக்குற்றது.

“பாப்பா… பாப்பா” என்று ஏக்கத்தோடு இரண்டு முறை அழைத்தான்.

5. தவறுகள், குற்றங்கள் அல்ல (1969)

அந்தக் காலத்து தேஜ்பால் கதை!!

“டியர் மிஸ் தெரஸா” என்ற அவரது குரல் கேட்டு

“எஸ் ஸார்” என்று நிமிர்ந்தாள் தெரஸா.

“புட் டவுன்!  திஸ் இஸ் எ லெட்டர்”

6. அந்த உயிலின் மரணம் (1969)

மரணத் தருவாயில் இருக்கும் வேணுகோபாலன். தனது இறப்பின் துயரத்தைப் பகிர தனது இரண்டாவது மனைவிக்கு உரிமை பெற்றுத்தர துடிக்கும் கதை. எதிர்பாராத முடிவு கொண்டது.

அவரது மரணத்துக்காக அவள் வருந்துவதை விட, அந்த மரணத்துக்கான தன் துயரத்தைக் கூட அவள் பகிரங்கமாகக் காட்டிக்கொள்ள முடியாததற்கே வருந்துகிறாள் என்பதையும் அவர் உணர்ந்தார்.

7. விதியும் விபத்தும் (1969)

மாங்கொட்டை ஞானோபதேசக் கதை. எனக்குப் பிடித்திருந்தது.

பிரக்ஞையற்றுக் கிடப்பது சாவு என்று நினைப்பது பேதமை. பிரக்ஞையுமில்லாமல் வளர்ச்சியுமில்லாமல் கிடப்பதே மரணம். உயிரின் ரகசியமே பிரக்ஞையற்றுக் கிடக்கும் ஊமை நிலையில்தான் அடங்கிக் கிடக்கிறது. அந்த யோகத்தின் உள்ளே நிகழும் இயக்கம் நுட்பமானது, ஆரவாரமில்லாதது.

8. புதுச் செருப்புக் கடிக்கும் (1971)

புது மனைவியுடன் மனஸ்தாபம். நள்ளிரவில் கோபித்துக்கொண்டு பழைய சினேகிதியைச் சந்திக்கப் போகிறான் ஹீரோ. சமூகத்தில் ஒதுக்கப்பட்டவராக இருக்கும் அந்த சிநேகிதி இறுதியில் அப்படி ஒரு பிரமாண்டம் எடுக்கிறார். வ்வ்வாவ்! எனக்குப் பிடித்த கதை.

யாருங்கோ ‘வய்ஃபா’ இருக்கிறதுக்கு டிரென்ட் ஹாண்ட் கேக்கறாங்கோ? இப்ப சொல்றீங்களே – என்னையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்னு. அப்ப ஏங்கோ அது தோணலே? நான் ஏற்கனவே ‘ட்ரெய்ன்ட்’ங்கற ‘டிஸ்குவாலிஃபிகேஷன்’ தாங்கோ அதுக்குக் காரணம்!

இதை படித்தவுடன் யாருக்கு பிபி ஏறாது?

9. எங்கோ, யாரோ, யாருக்காகவோ.. (1970)

பாண்டிச்சேரிக்குச் செல்லும் இரு நண்பர்கள் ‘ஒரு வீட்டை விட்டு இன்னொருவனுடன் ஓடி வந்து, அவனிடமும் ஏமாந்த ஒரு பெண்ணிடம்’ (எவ்ளோ பெரிய மாத்ரே!) பழகுகிறார்கள். எனக்குப் பிடித்த கதை.

“டேய் கிளாஸை நல்லா கழுவிக் கொண்டா” என்று யாரிடமோ கூறினான் கள்ளுக்கடைக்காரன்.

“வேணாம் ஐயா. இதில வாங்கிக்கிட்டுப் போகத்தான் வந்திருக்கோம். இந்த ‘ஜக்’லே எவ்வளவு புடிக்குமோ அவ்வளவு ஊத்துங்க”

“இருக்கட்டும் ஸார். வாங்கிக்கினு போங்க. நான் வாணாம்னா சொல்றேன். நான் பிரியமா என் கையாலே ரெண்டு கிளாஸ் தரேன். எப்பிடி இருக்குதுனு சாப்பிட்டுப் பார்த்தீங்கன்னா எனக்கு அதில ஒரு சந்தோசம் – டேய்ங்கொக்காளா.. சீக்கிரம் கொண்டாடா” என்று அந்தப் பையனைச் செல்லமாகத் திட்டி அதட்டிக் கூவினான்.

….

இதுதான் வாழ்க்கை! இவர்கள்தான் மனிதர்கள்! நாம் நகரத்தில் பார்க்கிற வாழ்க்கை இந்த நாட்டின் வாழ்க்கை அல்ல. அந்த மனிதர்களும் இந்த நாட்டின் பிரதிநிதிகள் அல்ல. நான் எனது நாட்டின் வாழ்க்கையை இங்கேதான் சுவாசிக்கிறேன். ஸ்டேட்ஸில் நீக்ரோக்கள் மாதிரி இங்கே இவர்கள் இருக்கிறார்கள்! இவர்கள்தான் இந்த தேசத்தின் ஆத்மா!

இதில் வரும் கள்ளுக்கடைக் காட்சி வெகு அருமை. அதிலிருந்து ஒரு பகுதியைத்தான் மேலே கொடுத்துள்ளேன். தான் கொடுத்த கள்ளுக்குக் காசு வாங்க மறுக்கும் கள்ளுக்கடை முதலாளி, வெளியே சிகரட் விற்கும் இளம் விதவை, உள்ளே சாக்னாக்கடை வைத்திருக்கும் அலி, கள்ளுப் பிச்சை வாங்கும் வாலிபன், அட அவ்வளவு ஏன், வெளியே தென்னை மரத்தடியில் கள்ளைக் குடித்துக்கொண்டே சல்யூட் வைக்கும் குடிமகன் வரை, அந்த இடம் அவ்ளோ நேட்டிவ்!

இரண்டு சிறுகதைத் தொகுப்பு என்று சொன்னேனே. அடுத்த தொகுப்பை அடுத்த பதிவில் காண்போம். நண்பர்களே.

ஜெய் ஹிந்த்

யாருக்காக அழுதான் । ஜெயகாந்தன்


திருக்குறளின் நட்பு அதிகாரத்திலிருந்து ஒரு குறளை மேற்கோள் காட்டலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இதற்குச் சரியாக இருப்பது நம் பள்ளிகாலத்து நீதிக்கதை ஒன்று.

ஒரு நண்பர்கள் கானகத்தின் வழி சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒரு கரடி குறுக்கிடுகிறது. மரம் ஏறத்தெரிந்தவன் சற்றும் தாமதிக்காமல் மரத்தில் ஏறித்தப்பிவிடுகிறான். மரம் ஏறத்தெரியாதவன் சமயோஜிதமாக யோசித்து மூச்சு விடாமல் படுத்துக்கொள்கிறான். அவனை முகத்தை முகர்ந்து பார்த்த கரடி, செத்தபோனவன் என்று நினைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிடுகிறது. மரத்தின் மேலிருந்தவன் இறங்கி வந்து, கீழே இருந்த மற்ற நண்பனிடம் ‘கரடி உன் காதில் குசுகுசுத்ததென்ன?’ என்று வினவுகிறான். ‘ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை’ என்றது கரடி என்று அவன் சொல்வதாகக் கதை முடியும்.

நட்பில் நல்ல நட்பு, தீய நட்பு என இரண்டைப் பற்றிய இரண்டு நீள்கதைகள் இந்த நூலில் உண்டு.

  1. யாருக்காக அழுதான்
  2. எனக்காக அழு

யாருக்காக அழுதான்
ஆசிரியர் – ஜெயகாந்தன்
பிரிவு – புனைவு
பதிப்பு – மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – முதல்பதிப்பு பிப் 1962 மறுபதிப்பு அக் 2011
கன்னிமரா சென்னை
http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=367441
NLB சிங்கை
http://www.nlb.gov.sg/newarrivals/item_holding.aspx?bid=200155434

இந்த நூலில் வரும் முதல் கதை ‘யாருக்காக அழுதான்’ திரைப்படமாக வெளிவந்திருக்கிறது – பார்க்க: கருணை உள்ளம் http://ta.wikipedia.org/s/1e50

wpid-imag1034_1.jpg

யாருக்காக அழுதான்

முழுக்க முழுக்க ஒரு தங்கும் விடுதியில் நடக்கும் ஒரு கதை. அப்பாவியான, நேர்மையான மற்றும் எல்லோராலும் எள்ளி நகையாடப்படும் கிறித்தவ பணியாளன் சோசப்பு. அவனது ஃப்ளாஷ்பேக் கேட்டு அவனுக்காக மனம் இரங்கும் நாயுடு – விடுதியில் தங்கும் ஒருவர். குடிபோதையில் விடுதிக்குத் தங்க வரும் சென்னை சவுகார்பேட்டை சேட்டு, அவன் தவறவிட்ட பர்சை எழுத்து பண சபலத்தில் ஒளித்து வைக்கும் சோசப்பின் முதலாளி முதலியார். அந்தத் திருட்டுப் பழி எதேச்சையாக சோசப்பின் மீது விழுக, கதை வெகு உணர்ச்சிகரமாகப் போகிறது.

இந்தக் கதை திரைப்படமாக வந்திருக்கிறதென்று எனக்குத் தெரியாது. படித்துக்கொண்டிருக்கும்போதே சோசப்பாக நாகேஷும், நாயுடுவாக மேஜர் சுந்தர்ராஜனையும் மனதில் வைத்து எழுதிய கதை போலவே தெரிந்தது.

மனைவியின் கள்ளத்தொடர்பின் காரணமாகவும், தன் தாழ்வு மனப்பான்மையின் காரணமாகவும் மணவாழ்க்கை விட்டு சோசப்பு கதையைக் கேட்டு நாயுடு உருகும் இடம் நெகிழ்ச்சி!

“தீயாரைக் காண்பதுவும் தீது: திருவற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீது: தீயார் குணங்கள் உரைப்பது தீது: அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது!” என்று பாடிவிட்டு, “இங்கேதான் ரொம்ப விசயம் இருக்கு. ‘தீயார் குணங்கள் உரைப்பதுவும்ட தீது’ன்னான். அதைச் சொன்னா அதைக்கேட்ட சில பேரு கெட்டுப்போவாங்களாம். உலகத்திலே நல்லது கெட்டது எவ்வளவு வேகமா பரவுதுன்னு பார்த்தியா. ஆனால் அதெல்லாம் கொரங்கு மனம் படைச்சவங்களுக்குத்தான். நீ அப்பிடி இல்லே சோசப்பு. நீ கெட்டதில் நல்லதைப் பாக்கறவன். அது எல்லோருக்கும் வருமா என்ன மனசுடா உனக்கு, தங்கம்டா தங்கம்!….” – நாயுடு

இந்தக் கதையில் இரண்டே இரண்டு பெண் பாத்திரங்கள்தான். கவுரவ தோற்றத்தில் வந்த போகும் சோசப்பின் மனைவி பார்வதி. இன்னொருத்தி, லாட்ஜில் தங்கும் பெயரில்லா பாலியல் தொழிலாளி. நாயுடுவிற்கு அப்புறம் சோசப்புக்கு ஆதரவாகப் பேசுகிறவள் அவள்தான். தவறான திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்டு சோசப்பு அடிவாங்கும் போது அவனுக்காக இரங்குபவள் அவள் மட்டுமே.

“நீங்க எல்லாம் அண்ணன் தம்பியோட பொறக்கலியா? அவனைக் கொன்னுட்டா உனக்குப் பணம் வந்துடுமோ ஐயா? திருடினவன் யாருன்னு கண்டு பிடிக்காம அந்த அப்பாவியைப் போட்டு வதைக்கிறீங்களே.. நானும் காத்தாலே புடிச்சிப் பாக்கறேன். அன்னம் தண்ணி குடுக்காம ஒரு ஜீவனை அடிச்சே கொன்னுடுவீங்க போலிருக்கே.. நெசமாத் திருடினவனைப் புடிக்கப் பாரய்யா” என்று சேட்டைப் பார்த்துக் கூறியவாறு பற்களைக் கடித்தவாறு சூதாட்டக் காரனைப் பார்த்தாள் அவள். அவளுக்கு அந்த இரண்டு ஆட்கள் மீதுதான் சந்தேகம்.

“ஆஹாஹா-பத்தினித் தெய்வம் சொல்லிடுச்சு ஐயா. இவளையும் சேர்த்து இழுத்திட்டுப் போங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு. அப்ப விஷயம் வரும் வெளியே..” என்று ஆத்திரத்தோடு யோசனை கூறினான் சூதாட்டக்காரன்.

“அட கேப்மாறி, நான் பத்தினின்னு உன்கிட்ட வந்து சொல்லிக்கிட்டேனா…? நான் கெட்டுப்போனவதான். இல்லேங்கலே, ஆனா கேடித்தனம்ட பண்றவ இல்லே. எனக்கு என்னாய்யா பயம்? தாராளமா வர்ரேன் போலீஸ் ஸ்டேஷனுக்கு. யோக்கியன் மாதிரிப் பேசுறியே நீயும் வர்ரியா” என்றாள் அவள்.

உணர்வுப் பூர்வமான கதை. ஒருவேளை இதைப் படமாக எடுத்தால் எனது கதாபாத்திர தேர்வு என்னவாக இருக்கும்.

  • சோசப்பு – நாகேஷ்
  • நாயுடு – மேஜர் சுந்தர்ராஜன் (‘மாது விளைவு’ என்று இந்த ஜோடியை அழைக்கலாம்)
  • முதலியார் – ஸ்ரீகாந்த்

நூல் அரங்கம்

எனக்காக அழு

செட்டியாரிடம் ஏமாற்றிவிட்டு 4000 ரூபாயை எடுத்துக்கொண்டு ஊரை விட்டுப் ஓடப்பார்க்கிறான் நாணயஸ்தான் என்று பேர் எடுத்த கனகசபை. தனது தைரியத்திற்காகவோ, விஷயம் தெரிந்ததற்காகவும் அயோக்கியன் என்று பேர் எடுத்த தன் நண்பன் வைரவனையும் அழைத்துக்கொள்கிறான்.  பிறகு கதை முழுக்க பாண்டிச்சேரியில் ஒரு தங்கும் விடுதியில் நடக்கிறது. ஒவ்வொருவனுக்குள்ளும் ஆழ் மனதிற்குள் இன்னொருவன் இருக்கிறான். கனசபைக்குள் யார் இருக்கிறார், வைரவனுக்குள் யார் இருக்கிறார் என்பதுதான் ‘எனக்காக அழு’!

கதை துவங்குமிடத்தில் கனகசபை மிக நல்லவன் என்றும், அவன் திருடி வந்த பணத்தை அழிக்க ஒட்டுண்ணியாகத் தொடர்பவன் வைரவன் என்றும் நமக்குத் தோன்றுகிறது.

“பிரதர், இந்தக் காரியத்துக்கெல்லாம் உடம்பை விட மனசு உறுதியாயிருக்கனும்… அது இருக்கட்டும், நீ எதுக்கு என்னைப் பார்த்து பயப்படனும்… நான் என்ன ரொம்ப யோக்கியன்? நல்லவனைப் பார்த்து பயப்படு பிரதர், அப்பிடி யாராவது உலகத்தில் இருந்தா” – வைரவன்

கதையின் ஆரம்பித்தில் வைரவன் சொல்லும்  ‘அப்பிடி யாராவது உலகத்தில் இருந்தா!!’ என்பதுதான் இதன் முடிவு.

கேடி எனப்படுகிற வைரவன் பேசும் வார்த்தைகள் எல்லாமே புதிய பிளேடு வெண்ணையை அறுப்பது போல கூர்மையானது

“ஆனா ஒண்ணு, சில சந்தர்ப்பம் வரும்-எவ்வளவு நல்லவனையும் கெடுக்கறதுக்குன்னு, அதில தப்பிக்கணும்…”

“என்னை நம்பினவங்கள நான் மோசம் செய்யமாட்டேன். ஆனால் என்னை யாரும் நம்ப மாட்டேங்கறாங்க”

பாண்டிச்சேரி விடுதியில் வைரவனுக்கும், விடுதிப் பணியாளன் வீராச்சாமிக்கும் இடையே நடக்கும் சம்பாஷனையிலிருந்து வைரவனின் ஆளுமை கதையில் ஓங்க ஆரம்பிக்கிறது.

“இந்தா வீராசாமி-” என்று ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான். வீராசாமிக்கு ஒன்றும் புரியவில்லை.

“சில்லறை வாங்கிட்டு வரவா ஸார்?”

“இல்லேப்பா உனக்குத்தான் பக்ஷீல்-”

“வேணாம் ஸார்-பக்ஷீல் வாங்கிறதிலேயும் ஒரு தர்மம் இருக்கணும் பாருங்க..”

“நான் தர்றேன் நீ வாங்கிக்கியேன். எதையுமே தர்மத்தோட-உலகம் சொல்றபடி-தர்மத்தோட செஞ்சி எனக்கப் பழக்கமில்லே. சரி. இதை வாங்கிக்கிகிட்டுப் போ…”

“ஸார்,என் குடும்ப விஷயத்தையெல்லாம் சொன்னதில நான் ரொம்ப கஷ்டப் படுறேன்னு நீங்க நெனச்சிக்கிட்டீங்களா? என் தங்கச்சியும் இட்லி சுட்டு வித்து நெதம் அரை ரூபா முக்கால் ரூபா சம்பாதிக்குதுங்க-”

வீராசாமி முன்பு சொன்ன கஷ்டத்தைவிட, இப்பொழுது அவன் சொன்ன இந்தப் பரிகாரம்தான் ரொம்பவும் சங்கடமாக இருந்தது வைரவனுக்கு.

“உன் தங்கச்சி எட்டணா கொடுக்கிறதுனாலே நீ கஷ்டப்படாத குடும்பஸ்தன் ஆயிடறதா நெனப்பா?-” என்று நகைப்புடன் சிரித்தான் வைரவன்.

“உங்களைப் போலவங்களுக்கு எட்டணா அல்பமா இருக்குது. எங்களுக்கு அந்த எட்டணா இருந்தா பெரிய லாபம், இல்லேன்னா பெரிய நஷ்டம் ஸார்…”

வைரவன் இலேசாகச் சிரித்தான்.

‘மனிதன் பணத்திலனால் எவ்வளவு சீக்கிரம் ‘தன்நிலை மாறிவிட முடிகிறது. குடிக்கிறதனாலே மனுசனுக்குத் தன் நிலை’ மாறிடும்னு சொல்றாங்களே-இந்தப் பணம் மாத்தறதை விடவா அது மனுஷன் நிலைய மாத்திடுது’ என்று வியந்தான். (வீராச்சாமிக்கும் கனகசபைக்குமான குணநலத்தின் ஒரு வேறுபாடு)

“நீ என்னமோ என்னைப் பெரிய பிரபுன்னு நினைச்சுக்காதே. உன்னை விடவும் மோசம் என் நிலை, இன்னிக்கி என்னமோ இப்பிடி இருக்கணுமின்னு இருக்குது. இருக்கேன். இருக்கறத தரேன். நாளைக்கி இல்லேன்னா உன்கிட்டயே வந்து ஒரு சிங்கிள் டீ வாங்கிக்குடுன்னு கேட்பேன். கேட்டா, அப்ப வாங்கித் தருவியா?”

ரசித்த கதைகளில் ஒன்று. இதற்கான கதாபாத்திர தேர்வுகள் என்னவாக இருக்கும் என்று ஒரு கற்பனை.

கனகசபை – ஸ்ரீகாந்த்
வைரவன் – ரவிச்சந்திரன்
செட்டியார்- காகா ராதாகிருஷ்ணன்

யாருக்காக அழுதான்  - ஜெயகாந்தன்

இன்னொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

-ஜெய் ஹிந்த்

கருணையினால் அல்ல – ஜெயகாந்தன்


நாற்பதுகளில்…

…….
கவனம் இன்னொரு காதல் வரும்.
புன்னகை வரை போ,
புடவை வரை போகாதே.

-வைரமுத்து.

மேற்கண்ட கவிதை வரிகள் இந்த முழு குறு நாவலுக்கு ஏற்றதாய் இருக்காது.  ஆனால் கதையின் தொடக்கம் அப்படியாகத்தான் உள்ளது. 35 வயது மிகுந்த ஒரு முதிர் கன்னி கெளரி. அவளது இளமைக்கால காதலன் ராமநாதன். கௌரி அச்சகம் என்கிற பெயரில் பிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கிறார். அட அப்ப அதுதான் கதையா என்றால்.. அல்ல!

கருணையினால் அல்ல
ஆசிரியர்: ஜெயகாந்தன்
பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – முதல்பதிப்பு 1965. பத்தாம் பதிப்பு 2011
பிரிவு: புனைவு
கன்னிமரா: –
NLB: http://www.nlb.gov.sg/newarrivals/itemdetail.aspx?bid=200158040
இந்த குறுநாவல் திரைப்படமாக வெளிவந்துள்ளது. பார்க்க – கருணை உள்ளம்

கருணையினால் அல்ல

தனிமை வாழ்வை மேற்கொள்ளும் கௌரி, பெண்கள் விடுதியிலிருந்து சூசையப்பரின் வீட்டு மாடிக்குக் குடித்தனம் வருகிறாள். பழைய காதலன் ராமநாதன், அவளுடனான உறவைப் புதுப்பிக்கும் பொருட்டு அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். பழத்தை கத்தி வெட்டுவது போல ராமநாதனின் மனைவியிடம் ராமநாதனின் விருப்பத்திற்கு முடிவு கட்டிவிட்டு வருகிறாள். அந்த இடம் செம க்ளாஸ்!

சூசையப்பர் வீட்டு கீழ் வீட்டுப் போர்ஷனில் குடியிருக்கும் முதலியார் என்கிற காக்கா வலிப்பு வியாதிகாரரிடம் கருணை காட்டப்போக, கதை வெகு வேகமாகப் போகிறது.

முந்தைய ஜெயகாந்தன் பதிவுகளைப்போல புரட்சிகள் ஏதுமில்லாத, நூறு சத சாத்வீக காதல் கதை. வெளி வந்த ஆண்டு 65ஆம். ஆச்சரியம்!

பிரதான கதாபத்திரங்கள் இருக்க என்னைக் கவர்ந்த இன்னொரு கதாபாத்திரம் – சூசையப்பரின் மனைவி ஆரோக்கியத்தம்மாள். கடுகடுவென அறிமுகம் ஆனாலும், வாழ்க்கை தந்த அயற்சி இருந்தாலும், கல்லுக்குள் ஈரம் கசிவதைப்போல அப்பழுக்கற்ற தாய்மையை மற்றவர்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும் கதாபாத்திரம். எழுந்து சென்று பிள்ளைகளை அடிக்க இயலாதபோது கரிசனமாய் பேசி அருகே வரவைத்து அடித்து துவைப்பதில் ஒரு பத்திரகாளி! முதலியாரின் நிலை அறிந்து கருணை கொண்டு குறைந்த விலைக்கு கீழ்போர்ஷனை வாடகைக்கு விடும்போதும் – முதலியார் வலிப்பு வந்து துடிக்கையில் பரிதாபப்பட்டு கண்கலங்கும் போதும் ஒரு மூதன்னை! தவிர, இருக்கிற குழந்தைகள் போதாதென்று கடைசியாக கருவுறுகிற இடம் செம பட்டாசு.

ஆரோக்கியத்தம்மாள் பாத்ரூம் அருகே உட்கார்ந்துகொண்டு ஒரு மத்தகஜம் கர்ஜிப்பதுபோல் ஓங்கரித்து வாந்தி எடுத்தவாறு ஊரைக் கூட்டுவது போன்று ஓலமிட்டு அலறி “கர்த்தாவே.. சேசுவே” என்று பிரலாபிக்கும் களேபரத்தை அவளது ஏழு புத்திரச்செல்வங்களும் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன.

…. உடம்புக்கு என்னவோ பதைத்த கௌரி அவள் அருகே ஓடி ஆரோக்கியத்தம்மாளின் தலையைத் தாங்கிப் பிடித்தவாறு ஆதரவான குரலில் விசாரித்தாள்.

“ஏம்மா, என்ன பண்ணுது.. காலையில என்ன சாப்பிட்டீங்க?”

கௌரியின் பிடியிலிருந்து திமிறித் திமிறி ஓங்கரித்த ஆரோக்கியத்தம்மாள் அடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வடியக் கூறினாள்.

…. கர்த்தரே சேசுவே.. ஓவ்… என்று ஒரு பிளிறலோடு அவள் வாந்தி எடுப்பதைப் பார்த்த கௌரி அப்புறம்தான் விஷயம் புரிந்து சிரித்தாள்.

“சிரிக்கிறியா? என் ஒடம்பு இருக்கிற இருப்பில இந்தத் தடவை நான் செத்துப்போயிடுவேன்” என்று ஆரோக்கியத்தம்மாள் கூறியதைக் கேட்டவாறு வெளியிலிருந்து வந்த சூசையப்பர் ‘ம்.. ஏழு தடவை சாகாம இப்பத்தான் சாகப்போறா’ என்று வாய்க்குள் முனகிக்கொண்டே தன் அறைக்குள் சென்றார்.

நூல் அரங்கம்

தனக்கும் ராமநாதனுக்கும் திருமணம் செய்ய முயலும் ராமநாதனின் மனைவியிடம் கடிந்து கொள்ளும்போது கௌரியின் பேச்சில் இன்னொரு பாக்கியலெட்சுமி டீச்சர் தெரிகிறார் (பார்க்க – ஒவ்வொரு கூரைக்கும் கீழே).

“ஒழுக்கம் மட்டுமல்ல; உணர்ச்சிகளும்கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரிதான் இருக்க முடியும்.. இல்லேங்கிறது வேற விஷயம்! ஒரு ஆணுக்கே உரிய சுயநலத்தில அவர் மனசில இப்படி ஒரு சபலம் இருக்குன்னு எனக்குப் புரிஞ்சுது.

ஏதோ அவர் மேலேயும் என் மேலேயும் அனுதாபம் காட்றதாக உங்களுக்கு நெனப்பு.. அவர் மேல நீங்க அனுதாபம் காட்டறது உங்க சொந்த விஷயம். ஆனா என் வாழ்க்கைக்கு நானேதான் பொறுப்பு…

வாழ்க்கையில ஏற்படற பல சிக்கல்களுக்கெல்லாம் இந்த அர்த்தமில்லாத அனுதாபம்தான் காரணம்.”

ரொம்ப சூடான பக்கங்கள் அவை!

ஆனால் அந்தப் பக்கங்கள் தாண்டியதும் கௌரியின் காதல் மலரத்தொடங்குகிறது. திருவான்மியூர் பீச்சில் காற்றை வாங்கிக்கொண்டு பாதத்தில் படும் தண்ணீர் காலை நனைக்காமல் நடக்கும் ஒரு இனிமை!

“அடிக்கடி உங்களுக்கு இப்படி வருமா?” என்று விசாரித்தாள் (கௌரி)

“ம்..” என்று சூள் கொட்டியவாறு குனிந்திருந்த தலையை அசைத்து, “என்ன செய்யறது” என்று பரிதாபமாய் அவளை முகம் நிமிர்ந்து பார்த்து “இது படறவனைவிட பார்க்கிறவங்களைக் கஷ்டப் படுத்தற வியாதி. கஷ்டப்படறதுகூடச் சிரமமில்லே. ஆனா பலரும் பார்க்கும் படியா கஷ்டப் படறதெ நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு” என்று தனக்குத்தானே பேசிக்கொள்வதுபோல் முனகிக் கொண்டார் முதலியார்.

wpid-imag1032_1.jpg

கடுமையான தாழ்வு மனப்பான்மை இந்த முதலியாருக்கு. இருக்கும்தானே.

“நீங்க (கௌரி) சொன்னீங்களே ‘ஒருத்தருக்கொருத்தர் துணை’யான்னு – அதுதான் கல்யாணத்தின் அடிப்படை, நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒருத்தருக்குத்தான் துணையாயிருக்கும் அது.. அந்த அபாக்கியவதிக்கு நான் சுமையா இருப்பேன்”

“என்னை மாதிரியே ஒரு வலிப்புக்காரியை நான் கல்யாணம் செய்துக்கிட்டா ஒருத்தருக்கொருத்தர் துணையாயிருக்கும்.. ஆனா ரெண்டு பேருக்கும் ஒரே சமயத்தில வந்துட்டா?” என்ற அவரது வக்கிரமான ஹாஸ்யத்தை அவளால் ரசிக்க முடியவில்லை.

இன்னும் விடுபட்டிருக்கும் ஒருத்தர் சூசையப்பர். கருணை நிரம்பிய கிறித்தவர். கல்யாண விசியமாகக் குழம்பும் முதலியாரை ஊக்கப்படுத்தும் இடத்தில்தான் கொஞ்சம் பேசுகிறார்.

“இதிலென்ன யோசனையிருக்கு. அந்தப் பொண்ணு எங்க மதத்தைச் சேர்ந்தவளா இருந்தா இந்நேரம் ஒரு கன்னாகாஸ்திரீயா இருக்கும். ஒரு இந்துப் பெண்ணா இருந்தாலும் மனசாலே அது ஒரு கன்னிகாஸ்திரீன்னே நான் நினைச்சிருந்தேன். ஒரு நல்ல கன்னிகாஸ்திரீக்குள்ள மனசோட இருக்கிற ஒரு பொண்ணு எங்க மதத்தில சேர்ந்திருந்தா அதனாலே எங்க மதத்துக்கு லாபம்தான். அப்படியில்லாமல் அந்த மனசுடைய ஒரு பொண்ணு வேறு மதத்திலே இருந்து ஒரு மனுஷனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அதனாலே மனுஷ குலத்துக்கே லாபம்தான்.. ஏய் முதலியாரே,  உன் வாழ்க்கைக்குத் துணையா ஒரு தேவதை வந்திருக்காப்பா….”

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே!

ஜெய் ஹிந்த்.