9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி – பா. ராகவன்


9/11 விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். 1998ல் கோயமுத்தூர் குண்டு வெடிப்பு இதே நாளில்தான் நிகழ்ந்தது. அதே நாளில் இந்த நூலைப் பற்றி எழுதியிருப்பது தற்செயலாக அமைந்த ஒரு ஒற்றுமை.

ஆசிரியரின் சீனிவெடிப் பட்டாசான எழுத்து நடையிலிருந்து சற்றே மாறுபட்டு, கொஞ்சம் ஃபார்மலான எழுத்து நடையில் இருந்தாலும், பல உண்மைகளைத் தமிழில் தருவதால் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

9/11 சூழ்ச்சி-வீழ்ச்சி-மீட்சி
ஆசிரியர்- பா. ராகவன்
பதிப்பு – மதி நிலையம்
நூலக முன்பதிவு (கன்னிமாரா): http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=2087851
நூலக முன்பதிவு (NLB): http://www.nlb.gov.sg/newarrivals/item_holding.aspx?bid=200130712

9/11 Pa Ragavan

படிப்பு உத்தியோகம் என்று போக வழியில்லாத இளம் வயதினர். வசதி இருந்தும் படிப்பு ஏறாத மர மண்டையினர். அவர்களது மத நம்பிக்கை, அடிப்படைவாதமாக மாற்றப்படுவதைக் காண முடிகிறது.

இச்சம்பவத்தின் குற்றவாளிகளின் ஒருவனின் தந்தை கூறுவதாக ஒரு பகுதி வந்திருக்கிறது.

அவனிடம் இரண்டு கெட்ட பழக்கங்கள் உண்டு. ஒன்று குடிப்பான். இரண்டாவது சில்லறைத் திருட்டுக்களில் ஈடுபடுவான். ஆனால் திடீரென்று ஒரு நாள் குடிப்பதையும் திருட்டுத்தொழிலையும் நிறுத்திவிட்டு மசூதிக்குத் தொழுவதற்காகப் போனபோது என்னால் நம்பவே முடியவில்லை. மூன்று மாத காலம் தொடர்ந்து இப்படி குடிக்காமல் ஒழுங்காக மசூதிக்குப் போய்கொண்டிருந்தான். அதன்பின் ஒருநாள் காணாமல் போனான்

இப்படிப்பட்ட பின்புலத்தில் இருந்து வந்த 19 அல் குவைதா தீவிரவாதிகளால் விமானங்கள் கடத்தப்பட்டு, குறிப்பிட்ட இலக்குகளில் எந்தப் பிரச்சினையுமின்றி மோதமுடிந்துள்ளதை பின்புலத்துடன் இந்த நூல் காட்டுகிறது.

பலநாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் ஜிஹாத் கோஷத்தில் தன்னை இணைத்துக்கொள்ள அல் குவைதா இயக்கத்தில் இணைந்து கொண்டாலும், இந்திய இஸ்லாமியர்கள் அந்த வழிப்பக்கம் போனதில்லை என்று அவர் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும். (இது பழைய நூல். ISIS அப்போது தோன்றவில்லை)

சரி., அமெரிக்காவில் இருந்த ஓட்டைகள், அதிகார வர்க்க அரசியல், விமான நிலைய பாதுகாப்பு குளறுபடி, உளவுத்துறை குறைபாடுகளைப் படிக்கும்போது எனக்குத் தோன்றியது, அமெரிக்காவில் இதுபோன்ற காரியத்தைச் செய்ய முடியும் என்றால் சென்னையில்?

நமது எதிரி, வெறும் தீவிரவாதம் இல்லை. அதனை இஸ்லாமியத் தீவிரவாதம் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சகிப்புத்தன்மையற்ற, மதத்திலிருந்து அரசியலை வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாத, மிகப் பெரிய பாரம்பரியத்திலிருந்து வந்த பின்லேடனும், அவரையொத்த பலரும, நம்முன் இருக்கிறார்கள். எதிரி இஸ்லாம் அல்ல. அது ஒரு சிறந்த மதம்; நம்பிக்கை. நமது எதிரி, திரிக்கப்பட்ட இஸ்லாம். இஸ்லாத்தின் பெயரால் செய்யப்படும் தீவிரவாதம். இந்த எதிரி, அல் காயிதாவுக்கு அப்பாலும் போய் இன்னும் பல சித்தாந்த ரீதியில் இயங்கும் இயக்கங்களை ஒருங்கிணைக்க வல்லது. ஆக, நமது திட்டம் இரு விதங்களில் செயல்பட்டாக வேண்டும். அல் காயிதாவின் நெட் ஒர்க்கைக் குலைப்பது ஒரு பக்கம்; நீண்ட கால நோக்கில், இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்த்தெடுக்கும் பொதுவான சித்தாந்தத்தைக் குலைப்பது.

இது அறிக்கையில் உள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதம், என்கிற சொல் வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்டது என்கிறார் ஆசிரியர். தீவிரவாதியில் என்ன இஸ்லாமியன், கிறித்துவன், இந்து, கம்யூனிஸ்ட்? சுய இலாபத்திற்காக மத்திய கிழக்கில் தன் நாட்டாமையை நிலை நாட்ட, அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ளத்தான் இப்படியான ஒரு பெயர் சூட்டல் என்கிறார். அதற்கு ஈராக் போரை மேற்கோள் காட்டுகிறார். தவிர, 9/11 க்கு முன்னர், தீவிரவாத எதிர்ப்புக்கு அமெரிக்கா செய்ததென்ன? காஷ்மீர் மற்றும் பாலஸ்தீனப் பிரச்சினைகளை மேற்கோள் காட்டுகிறார்.

9/11 Pa Ragavan 2

9/11ஐ அல்குவைதா மட்டும்தான் இதைச் செய்ததா? கடைசி கட்டுரையில் வரும் ஆவணப்படம் பற்றிய செய்தி அடி வயிற்றில் அமிலம் சுறக்க வைக்கிறது.

நல்ல தகவல்களைத் தரும் நூல்.

வாழ்க பாரதம்

மிட்டாய் கதைகள்

மிட்டாய் கதைகள் – கலீல் கிப்ரான்


ஒரு மானிடன் இறந்து போனான். தர்ம தீர்ப்புக்காக எமலோகத்தில் எமதர்மராஜன் முன்பு நிற்கிறான். அவனுடைய நியாய தர்ம விவகாரங்கள் பேசிக்கொண்டிருந்த போது எமதர்ம அவையின் பக்கத்தில் நிறைய விளக்குகள் (கிரிக்கெட் கிரவுண்ட்ல நைட்டு போடுவாங்களே அது மாதிரி) இருப்பதைப் பார்க்கிறான் நம்ப மானிடன். ‘இந்த விளக்குகள் எதுக்காக இங்க வெச்சிருக்கீங்க’ அப்டின்னு எமனைப் பார்த்துக் கேட்கிறான். ‘பூலோகத்தில் யாராவது ஒருவன் பொய் சொன்னால், இதில் ஒரு விளக்கு எரியும்’ என்கிறான் எமன்.

திடீரென அனைத்து விளக்குகளும் ஒரே நேரத்தில் எரியத்தொடங்குகின்றன. ‘என்னாச்சு. ஏன் எல்லா விளக்குகளும் எரிகின்றன’ என்று மரிசலாகிறான் மானிடன். ‘பயப்படாதே. பூலோகத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி துவங்கிவிட்டது’ என்றான் எமன்.

அமரர் தென்கச்சி கோ சுவாமிநாதன் சொன்ன சிறுகதை இது.

சிறிய கதைக்குள் பெரிய கருத்துக்களை ஒளித்துவைத்திருக்கும் கதைத் தொகுப்புதான் இந்த மிட்டாய் கதைகள். ஒரு வார இறுதியில் நூலகத்தில் அலசியபோது எதேச்சையாக கையில் சிக்கியது.

மிட்டாய் கதைகள்
ஆசிரியர்: கலீல் கிப்ரான்
தமிழாக்கம்: என். சொக்கன்
பிரிவு: புனைவு
பதிப்பு: மதி நிலையம் – முதல்பதிப்பு டிசம்பர் 2012
ISBN: –

மிட்டாய் கதைகள்
மிட்டாய் கதைகள்

இவற்றைச் சிறுகதை என்று கூட சொல்ல இயலாது. ஒவ்வொன்றும் ஊசிப்பட்டாசு அளவில் இருக்கின்றன. ஊசிப்பட்டாசு போலவே வெடிக்கின்றன. சில கதைகள் புன்னகைக்க வைக்கின்றன. சில கதைகள் வெடித்துச் சிரிக்க வைக்கின்றன. 50 கதைகளில் ஒன்று கூட சோடை போகவில்லை.

பல கதைகளை வாசிக்கும்போது வெவ்வேறு அரசியல் சூழலிலோ, அல்லது சக மனிதர்களின் குணங்களைப் பார்த்தோ எழுதியிருப்பார் என்று எண்ணத்தோன்றுகிறது.

  • உதாரணமாக “போரும் சிறு நாடுகளும்” கதை அப்பட்டமான உலக அரசியல். உக்ரைன் அரசியல் நடந்து கொண்டிருக்கும் தற்பொழுது கூட இந்தக் கதை அற்புதமாக நவீன உலகிற்குப் பொருந்திப்போகிறது.
  • “நீதி” என்றொரு கதை வருகிறது. கட்டப்பஞ்சாயத்து போன்ற நீதிமான்களைப் பற்றிய “செம” கிண்டல்.
  • “பைத்தியங்கள்”, “ஒரு பைத்தியக்காரன்” போன்ற பைத்தியங்களைப் பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் சொல்லியிருக்காரு பாருங்க. ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்.
  • “மதுவிலக்கு” கதை நிஜமாகவே நம்ப ஊருக்குச் சொன்னது போல இருக்கிறது!
  • “கைதிகள்” என்று ஒரு கதை வாசித்தபோது கவிஞரின் “பரமசிவன் கழுத்திலிருந்து” பாடல் நினைவிற்கு வந்தது.
கலீல் கிப்ரான் - ஆசிரியர் அறிமுகம்
கலீல் கிப்ரான் – ஆசிரியர் அறிமுகம்

இந்த நூலை இலவச மின்னூலாகத் தருகிறார் என். சொக்கன் அவர்கள்.

மிட்டாய்க் கதைகள்

எனக்குப் பெரும்பாலும் அனைத்துக் கதைகளுமே பிடித்தது என்றாலும், ஓடும் நீரில் தக்கை மேல் பயணம் செய்யும் தவளைகளை வைத்துச் சொல்லப்படும் “ஞானம்” கதைதான் உடனே நினைவிற்கு வருகிறது.

உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கும் இந்த நூல் பிடிக்கும். இவ்வளவு நல்ல கதைகளை நல்ல தமிழில் தந்ததற்காக பாராட்டுக்களும் நன்றிகளும் திரு சொக்கன் அவர்களுக்கு!

இலவச மின்னூலுக்கான scribd தள சுட்டி கீழே இணைத்துள்ளேன்.

சந்திப்போம் நண்பர்களே!
ஜெய் ஹிந்த்