வர்ணமலைக்குடைவு – அஜந்தா – குகைகளைத்தேடி – சுபம்!


முழுக்க முழுக்க சிலைகள் மற்றும் அலங்காரங்கள் நிறைந்த குகைகளை இதற்கு முந்தைய பதிவுகள் காண்பித்தன.

பயண ஆயத்தம்

எலிஃபெண்டா

எல்லோரா

பயணத்திற்கு முத்தாய்ப்பாக இறுதி நாளில் அமைந்தது அஜந்தா பயணம். ஊருக்குள் போவதற்கு முன்னாடி ஒரு அறிமுகம் கொடுத்தாகவேண்டும். உங்களை மாதிரி ஒரு பெரியவர் சொல்லி நான் கேட்ட அறிமுகம் இது. பழங்கால இந்திய ஓவியங்கள் என்று பார்த்தோமானால் நமக்கு பெரிய சான்றுகள் கிடையாது. இலங்கையின் சிகிரியா ஓவியங்கள் 5 ஆம் நூற்றாண்டு, சித்தன்னவாசல் ஓவியம் 7ஆம் நூற்றாண்டு, காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலய ஓவியங்கள் 7ஆம் நூற்றாண்டு. எல்லாவற்றுக்கும் முன்னதாக – அதாவது – கிமு 2 ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி 6, 7 ஆம் நூற்றாண்டு வரையிலான ஓவியங்கள், இந்திய ஓவியக்கலைக்கு சான்றாக அஜந்தாவில் கிடைத்துள்ளன.

 

அஜந்தா நம் கண்களுக்குப் புலப்பட்ட விதம் விந்தையானது. காட்டுக்கு வேட்டையாடப்போன ஒரு வெள்ளைக்கார துரை ஜான் ஸ்மித் கண்களுக்கு புலி தெரியவில்லை, மாறாக ஒளி தெரிந்திருக்கிறது. அடர்ந்த காட்டுக்கு நடுவே, அரை வட்ட வடிவில் சலசலத்து ஓடும் நதியின் கரையில் துயில் கொள்ளும் புத்தரின் ஒளியாக இருந்திருக்கவேண்டும். பிறகு இந்தக் கலைப்பொக்கிஷம் நாட்டுடமையாக்கப்பட்டு, ஆய்வுக்கும் கண்களுக்கும் விருந்தாக அமைந்திருக்கிறது.

From Ajanta

சாதவாகனர்கள் காலத்திலும் (கிமு 2) வாகாடகர்கள் காலத்திலும் (கி பி 6, 7) இங்கு குகைகள் குடையப்பட்டுள்ளன. அனைத்தும் புத்த மடாலயங்கள். அவற்றின் பக்கவாட்டு சுவர்கள், விதானங்கள் தூண்கள் என்று எங்கு தொட்டாலும் வர்ணமயம். புத்த ஜாதகக் கதைகள் ஓவியங்களாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. ஜாதகக் கதைகளும் தெரிந்து, தொல்பொருள் ஆர்வமும் மிக்கவரா நீங்கள். சொல்றேன் கேட்டுக்கோங்க! அஜந்தாவை ஒரு நாளில் உங்களால் சுற்றிப்பார்க்க இயலாது.

அஜந்தா பயணம் தொடங்குகிறது, அவுரங்காபாத் ஜல்காவ் இந்தூர் நெடுஞ்சாலை. இங்கிருந்து தோராயமாக 100 கிமீ. From Ajanta
மலைகள் பள்ளத்தாக்குகள் அவற்றை கோந்து போட்டு ஒட்டுவது மாதிரி ஓடி வரும் சிற்றாறுகள் From Ajanta

ஜாதகக் கதைகள் என்றாலும், வரையப்பட்டுள்ள ஆடை அணிகலன்கள், இசைக் கருவிகள், பறவைகள் என்று பல சங்கதிகள் ஆய்வாளர்களுக்குத் தீனிபோட்டுக்கொண்டே இருக்கின்றன. அஜந்தா ஓவிய காலத்திற்கும் சம காலத்திற்கும் உள்ள தொடர்புகளை ஆய்வாளர்கள் வியப்புடன் சொல்கின்றனர்.

முதல் இரண்டு குகைகளிலேயே, உங்கள் எண்ணத்தை நிறைக்கும் ஓவியங்கள் அள்ள அள்ளக் குறையாமல் வந்து விடும். வந்து நிற்பது பிட்சுக்கள் பூமி. அவர்கள் அழிந்தாலும், அவர்களின் ஆன்மாக்கள் உறைந்துள்ள ஒரு அமானுட சாட்சியம் அந்த குகைகளும், சிற்பங்களும் ஓவியங்களும்.

முதல் தரிசனம், அதாங்க குகை 1 From Ajanta
பத்மபாணி (கருவரைக்கு இடப்பக்கம்) From Ajanta
பத்மபாணி, கருவரை, வஜ்ரபாணி From Ajanta
கண்களுக்கு விருந்தாக குகை 2 From Ajanta
Miracle of Sravasti கண்களுக்கு விருந்தாக குகை 2 From Ajanta
கண்களுக்கு விருந்தாக குகை 6 From Ajanta

ஓங்கி வளர்ந்த ஆலமரம் போல, பெரிய சைத்திய வடிவ குகைகளை இங்கு காணலாம். கிமு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவற்றில் ஒன்றான பத்தாம் எண் குகைதான் வெள்ளைக்காரர் கண்களுக்குத் தென்பட்டிருக்கிறது.

கண்களுக்கு விருந்தாக குகை 9. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சைத்திய வடிவ குகை From Ajanta
கண்களுக்கு விருந்தாக குகை 9. மனிதனின் தினசரி வாழ்க்கையை சித்திரிக்கும் சிற்பங்கள் இருக்கின்றன From Ajanta
அனேகமாக அஜந்தா குகைகளில் பழமையானது இந்த 10ஆம் எண் குகைதான்.
இதன் பெரிய வடிவம்தான் எட்டி நின்று பார்த்த ஆங்கிலேயருக்கு அஜந்தாவை
அடையாளம் காட்டியுள்ளது. இவ்வளவு சிறப்பு இருந்தாலும் இன்னொரு
முக்கிய விஷயம், இந்தியாவின் மிகப் பழமையான ஓவியம் (கிமு 2)
இங்கேதான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறது From Ajanta

அந்த கிமு காலத்திய குகைகளின் ஓவியங்களைப் பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படவே செய்யும். பிறகென்ன, அவ்வளவு தத்ரூபமாக, மிகச் சரியான அளவுகளில் முகம், பாவனை, நகை நட்டுகள்!! யாருப்பா நீங்க எல்லாம். அந்தக் காலத்திலேயே அவ்வளவு அறிவாளிகள் வாழ்ந்த மண்ணா இது!!

கிமு 2ஆம் நூற்றாண்டு ஓவியம். அதற்காக ஏனோதானோ
என்று இருக்கும் என்று நினைக்கவேண்டாம்.
நேர்த்தியாக உள்ளது. ஹீனயான காலத்தைச் சேர்ந்த
அந்த ஓவியங்களில் காணப்படும் ஆடை அணிகலன்கள்,
நம்மை ஆச்சிரியப்படுத்தும் வகையில் உள்ளன.
பெண்பிள்ளைகளுக்கு மிகவும் ஆர்வமான ஓவியங்களாக
இருக்கும்! பல ஓவியங்களில் உள்ள உருவங்களை
அவற்றின் ஆடை மற்றும் அணிகலன்களை வைத்தே
அடையாளம் காண முடிந்தது From Ajanta
கிமு 2ஆம் நூற்றாண்டு ஓவியம். அதற்காக ஏனோதானோ என்று
இருக்கும் என்று நினைக்கவேண்டாம். நேர்த்தியாக உள்ளது.
ஹீனயான காலத்தைச் சேர்ந்த அந்த ஓவியங்களில் காணப்படும்
ஆடை அணிகலன்கள், நம்மை ஆச்சிரியப்படுத்தும் வகையில்
உள்ளன. பெண்பிள்ளைகளுக்கு மிகவும் ஆர்வமான ஓவியங்களாக
இருக்கும்! பல ஓவியங்களில் உள்ள உருவங்களை
அவற்றின் ஆடை மற்றும் அணிகலன்களை வைத்தே
அடையாளம் காண முடிந்தது From Ajanta
குகை 10 From Ajanta
Dying princess, cave 16 From Ajanta
யானைக் கதை குகை 17 From Ajanta
மேகக்கூட்டத்தில் பறந்து வரும் இந்திரன், குகை 1 From Ajanta
பானம் அருந்தும் தம்பதியர், குகை 17 From Ajanta
கண்களுக்கு விருந்தாக, குகை 17, இப்ப சொல்லுங்க என்ன மாதிரியான இடம் இது.
பிரம்மாண்டமான உயரத்தில் ஓரிடம் பாக்கியிலல்லாமல் சுவர், விதானம் என்று
அனைத்து இடங்களிலும் ஓவியத்தால் நிரப்பிவைத்துள்ளது
மட்டுமின்றி, ஜாதகக்கதைகளையும் விளக்கியிருக்கிறார்கள் From Ajanta

ஓவியத்திறமையுடன் சிற்பத்திறமையையும் இங்கே காணமுடியும். அலங்கார வளைவுகள் என்ன, அதன் அலங்காரங்கள் என்ன, அதில் உள்ள சிற்பங்களின் நேர்த்தி என்ன…

குகை 19, பிற்கால மகாயான காலத்தைச் சேர்ந்த இந்த சைத்திய
குகை மிக அழகான நேர்த்தியான சிற்பங்களையும்,
கல் அலங்கார வேலைப்பாடுகளையும் உள்ளடக்கியது From Ajanta
கண்களுக்கு விருந்தாக குகை 19 From Ajanta
சரியா சொல்லுங்க. மேல உள்ள டிசைன் நல்லா இருக்கா, கீழ உள்ள டிசைன் நலலா இருக்கா. குகை 23 From Ajanta

மஹாபரிநிர்வாண்!

குகை 26, அஜந்தா பயணத்தின் கடைசி அத்தியாயம் இந்த சிறப்பான
குகையோடு முடிகிறது. வெளி அலங்காரம் மற்றுமின்றி,
உள்ளே உள்ள சிற்ப வேலைப்பாடுகளும் உங்கள் நேரத்தைத்
தின்பது நிச்சயம் From Ajanta

இந்த குகை உங்கள் தேடலின் முடிவு, உள்ளத்தின் எழுச்சி.

வலது ஓரத்தில் ஒரு மனிதர் நிற்கிறார், குகையின் உயரத்தை அனுமானித்துக்கொள்ள உதவும் From Ajanta
இந்த வடிவத்தை புத்தரின் மார்பு எலும்புகளுக்கு உருவகப்படுத்துகிறார்கள் From Ajanta

புத்தருக்கு இடையூறு செய்ய ஆளா இல்லை?! மாரா இருக்கிறான். முதல் குகையில் ஓவியமாக வந்து தொந்தரவு செய்தவன், இந்த குகையில் சிற்பமாக அதே வேலையைச் செய்கிறான்.

புத்தரும் மாராவும். முதல் குகையில் உள்ள ஓவியம் இங்கே சிற்பமாக உள்ளது From Ajanta
யானையில் ஏறி தன் தீய சக்திகளுடன் வந்து புத்தரைத் தாக்கவரம் மாரா From Ajanta
மாராவின் புதல்விகள் புத்தரின் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார்கள் From Ajanta
பெரிய சிற்பமாக இருந்தாலும் அதில் ஒள்ள ஒவ்வொரு சிறு சிறு சிற்பங்களும் மிக தத்ரூபமாக செதுக்கியிருக்கிறார்கள் From Ajanta

என்னால் ஏன் புத்தனாக முடியவில்லை என்பதற்ககான பதில் விளங்கியது. இந்த கல் வடிவிலான மாராவின் மகளே என் மனதைக் கவர்ந்துவிட்டாளே! பிறகெங்கே தவம் பயில்வது!

மாராவின் மகள். என்ன ஒரு அசைவு. Dynamism!
From Ajanta

என் தலைவன்… கூடவே இருந்தான்.. கூடவே நடந்தான்.. கூடவே உணவு உண்டான்.. கதைகச் சொன்னான். அற்புதங்கள் நிகழ்த்தினான். எதிர்த்த தீய சக்திகளை வென்றான். கடை சாரி மக்கள் துயர் தீர்த்தான். இதோ என்னை நீங்குகிறான். பிட்சுக்களின் வாழ்வில் நிறைந்தவன். தன் பணி துறந்து உறங்குகிறான்.

மகாபரிநிர்வானம் குகை 26 From Ajanta
மகாபரிநிர்வானம் குகை 26 From Ajanta

உலகம் உய்க்க வந்தாயே சித்தார்த்தனே, இவ்வுலகம் திருந்தும் முன்னர் நீ அவ்வுலகம் திரும்பியதேன்?

சிவன்மலைத்தீவு – எலிபெண்டா – குகைகளைத்தேடி 2


குகைகளைத்தேடி என்று தலைப்பு போட்டுவிட்டு குகையைப் பத்தியே பேசக்காணோமே என்று மனைவியார் குறைப்பட்டுக்கொண்டார். ஆனால் குகைகளுக்கான தேடல் உண்மையில் அடுத்த வாரத்தின் வார நாட்களில்தான் நடைபெற்றது. இருக்கும் நேரம், பயண தூரம் அடிப்படையில் சில நிகழ்தகவுகளின் அடிப்படையில் பின்வரும் இடங்களுக்கு எளிதாகப் போகலாம் என்று பட்டது

  1. இரண்டாம் சனி – எலிஃபெண்டா தீவு
  2. இரண்டாம் ஞாயிறு – ஜோகேஷ்வரி குகை (தங்குமிடத்திற்குப் பக்கத்தில் இருந்தது)
  3. மூன்றாம் சனி – எல்லோரா
  4. மூன்றாம் ஞாயிறு – அஜந்தா

பயண ஆயத்தம்

இவ்வாறு முடிவு செய்து கொண்டதும் முதலாக செய்ய வேண்டிய வேலை அஜந்தா எல்லோராவிற்கான பயணம் மற்றும் தங்குமிடம் அல்லவா. நிறைய பயணம் செய்யவேண்டும் என்று தோன்றியது. அஜந்தா எல்லோராவைப் பற்றி எனக்கு அறியத்தந்தது எனது முதல் பாஸ் திரு. சுவாமிநாதன். எனவே அவருக்கே போன் அடித்தேன். ஜல்கான் ரயில்நிலையம் அஜந்தாவிற்குப் பக்கம் என்று ஆலோசித்தார். அதிலும் எனக்குப் பிரச்சினை இருந்தது. ஜல்காவிலிருந்து அஜந்தா பக்கமாய் இருக்கலாம். எல்லோரா 200 கிலோமீட்டர்களுக்கும் மேல். பயணத்திலேயே அதிக நேரம் போய்விடும். ஜல்காவிலிருந்து அஜந்தா சென்றுவிட்டு அடுத்த நாள், ஓட்டலைக் காலி செய்துவிட்டு எல்லோரா போய், பின் அங்கிருந்து அவுரங்காபாத்… நினைக்கையிலேயே கண்ணைக்கட்டுதே.. இறுதியில் ஒரு திட்டம் உறுதியானது

மும்பை – அவுரங்காபாத் (1 இரவு பயணம்)

அவுரங்காபாத் – எல்லோரா – அவுரங்காபாத் (1 மணிநேர பயணம் – ஒரு வழி)

அவுரங்காபாத் – அஜந்தா – அவுரங்காபாத் (ஒன்னரை மணிநேர பயணம் – ஒருவழி)

இது உறுதி செய்ய காரணம்

1. பயணம் எளிது

2. Saibaba Travels, Aurangabad – விக்கி டிராவல் தளத்தில் இவரைப் பற்றிய நல்ல ரிவ்யூக்கள் கிடைத்தன. போன் அடித்தேன். பங்கஜ் என்பவர் போன் எடுத்தார். நான் சொன்னது ஒரு வார்த்தைதான்.

“இந்த வாரம் போய் அடுத்த வாரம் நான் அவுரங்காபாத் வாரேன். எனக்கு ஹிந்தியோ மராத்தியோ மருந்துக்கும் தெரியாது. அஜந்தா எல்லோரா பார்க்கனும். ரயில விட்டு இறங்கினதிலிருந்து, திரும்ப ஏறும் வரை நான் உன் பொறுப்பு”

“கிளம்பி வாங்க ஜமாய்சிடலாம்” என்றார்.

“எனக்கு ஓட்டல் அறை முன்பதிவு செய்யனுமே. அதையும் பாத்துக்கிறியா”

“நோ ப்ராப்ளம்!”

அடுத்த கட்ட நடவடிக்கையாக தேவகிரி எக்ஸ்பிரசில் போக வர முன்பதிவு கனிஜோராக நடந்தது, அத்தணையும் 15 நிமிடத்திற்குள்! பயணம் பிரச்சினை இல்லாது இருந்தால்தானே குகைகளின் தேடல் முழுமை பெறும்!

சரி பயண ஆயத்தம் முடிந்தது, இனி ‘சிவன்மலைத்தீவு’ க்குப் போகலாம்!

01 டிசம்பர் 2007 – சிவன் மலைத்தீவு யாத்திரை

இரண்டாவது வார சனிக்கிழமை வந்தது. 6 மணிக்கு எழுந்து, அவசரக்குளியல். அடிச்சிப் பிடிச்சு போரிவளி நிலையத்திற்கு ஓடி வரோம். காரணம் உண்டு. எலிபெண்டாவிற்கு இந்தியா கேட்டிலிருந்து 9 மணி முதல் போட்டுகள் கிளம்பும். முதல் வண்டியைப் பிடிப்பதென்று விரைகிறோம். சென்ற வாரம் மாதுங்கா போகும்போது ரயில் கூட்டம் சக்கை போடு போட்டது. இந்த முறை தப்பிக்க ஒரு வழி?? சரி, முதல் வகுப்பு டிக்கட் எடுத்தால் என்ன.. சர்ச்கேட் போக வர 100ரூபாய் சொச்சம். நடைமேடையில் வண்டிக்காகக் காத்திருந்தபோதுதான் கொடுத்த அம்புட்டு ரூபாயும் வீண் என்று. முதல் வகுப்பு என்பதால் மட்டும் கூட்டம் குறைந்துவிடாது.

 

From Elephanta

தலைவிதியே என்று என்னை திணித்துக்கொண்டேன். தடதடக்க ஓடிய ரயில், அப்பும் கூட்டம். மும்பையின் காலை வெகு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.

From Elephanta

சர்ச் கேட் நிலையத்திலிருந்து இந்தியா கேட் நடக்கும் தூரம்தான். இந்தியா கேட் போய் சேரும்போதுதான் தெரிந்தது. அடடா. சாப்பாட்டுக்கு என்ன வழி!?

கடல நக்கர போனோரே

இந்தியா கேட் சென்று அங்கிருந்து படகைப் பிடித்து எலிஃபெண்டா செல்லவேண்டும். இரண்டு வகை பயணச்சீட்டுகள் உண்டு நண்பர்களே. கீழ்தளத்துக்கு கம்மி ரேட். மேல் தளத்துக்கு தனி ரேட். தம்பதியாகப் போனால் கீழ் தளத்திலும், ஜோடியாகப் போனால் மேல் தளத்திலும் போகலாம். அட. யாருப்பா இங்க கல்ல விட்டு அடிக்கிறது?

From Elephanta

படகு ரிவர்சுல போய், திசைமாற்றிக்கொண்டு மேற்குப் பக்கமாக நகரத்தொடங்கியிருந்தது. சரித்திர முக்கியத்துவம் (என்னோட வாழ்க்கைச் சரித்திரத்தச் சொன்னேன்!) கொண்ட குகைகளின் தேடல் தற்போது அரபிக்கடலில் மையம் கொண்டுள்ளது. எண்ணெய் படலம் வானவில் வர்ணங்களை கடல் நீரில் வரைந்துள்ளது. காதைக் கிழிக்கும் ஒலியுடன் கப்பல் ஒன்று எதிரே வருகிறது.

பார்க் அணு நிலையம் தரிசனம் தருகிறது. இடிந்தகரை ஜிந்தாபாத்!

படகு பல்வேறு வகைகளில் இருந்தாலும், தற்காப்பு ஏற்பாடுகள் துளியும் இல்லை நண்பர்களே. போகும்போது கையில் பாதுகாப்பு மிதவை உடைகள் வைத்திருந்தால் நல்லது.

மெலிதாக கடல் நீருக்குள்ளிருந்து எழுகிறது ஒரு யானை. எலிபெண்டா.

From Elephanta

தீவைச் சுற்றியும் சதுப்பாக இருப்பதைக் காண்கிறோம். மூச்சு முட்டிய வேர்கள் மேலே வளர்ந்து சேருக்கு மேலே நீட்டிக்கொண்டு சுவாசிக்கின்றன.

From Elephanta

ஒரு சிறிய படகுத்துறையில் இறங்கிவிடுகின்றனர்.

From Elephanta

“திரும்பிப் போகும் எந்தப் படகில வேணாலும் போய்க்கலாம்தானே?”

“ஆம்” என்கிறார் படகோட்டி.

கொஞ்சம் காரமான வெயில், பசிக்கும் வயிறு, தலை மயிர் பறக்கும் காற்று.

படகுத்துறையிலிருந்து கால் நடையாகப் போய்விணலாம். ஒரு குட்டி ரயில் குட்டிப் பசங்களுக்கு உள்ளது.

From Elephanta

மலையில் ஏறும் வழியின் இருபுறமும் பெட்டிக்கடைகள்-பானங்கள், தின்பண்டங்கள், மேப்புகள், கைவினைப்பொருட்கள்.

From Elephanta

மேலே வந்து, எதேச்சையாக வலதுபுறம் திரும்புகையில் மலைக்க வைக்கும் குகையின் வாசல் தெரிகிறது. பார்த்த முதல் கணத்தில் தொல்லியல் இடங்கள் உங்கள் உள்ளத்தைக் கவர்ந்துவிடும். மீண்டும் அந்த இடங்களுக்கு எத்தணை தடவை வேண்டுமானாலும் போகலாம். ஆனால் அந்த முதல் தோற்றம் மனதில் ஆழப் பதிந்துவிடும். முதலில் சித்தன்னவாசல் போனபோது 13 வயதிருக்கலாம், இன்னமும் சமணர் படுகையின் அன்றைய தோற்றத்தை ஒரு கனவுபோல என் நினைவுகள் பத்திரப்படுத்தி இருக்கின்றன.

From Elephanta

சொன்னால் நம்பனும் நண்பர்களே, அது குகை அல்ல. மாளிகை. திறந்து போட்ட, வாசலற்ற மாளிகை. இரண்டாள் மட்டம் உயரம். 27 மீட்டர் சதுர அறை. பருத்த தூண்கள், சதுரமாய் கீழே தொடங்கி, அலங்கார வளையங்களுடன் மேல் பாறையைத் தாங்குபவை.
Massive!

From Elephanta

ஒன்றாம் குகையின் வலது புறத்தில் உள்ள நடராஜர். சிதைந்துள்ளது. பெரியது. கண்களை மூடி மோன நிலை, ஆடலின் அசைவுகளைக் கல்லில் வடித்து, சிலை உயிரோட்டம் கொடுத்திருக்கிறான் அந்த முகம் தெரியாத சிற்பி. செஞ்சு முடிச்சதும் விரலை வெட்டினான்களோ, கையையே வாங்கிட்டான்களோ.
Lively!

From Elephanta

ஒரு கருவறை. வெளியே காவலுக்கு ரெண்டு துவாரபாலகர்கள். வஞ்சகமில்லாமல் வளர்ந்திருக்கிறார்கள்.

From Elephanta
From Elephanta

“அண்ணே, உங்கள போட்டோ எடுத்துக்கட்டுமா”

“என்ன போட்டோ எடுக்கவா இம்புட்டு தூரம் வந்தே, மூடா” துவாரபாலகர் சீறினார்.

“சர்வம் சிவமயம்ணே.”

“சரி சரி. என் டைம வேஸ்ட் பண்ணாம, சீக்கிரம் நகரு.”

உள்ளே சிவனார் தரிசனம்.

வலது பக்கம் அடுத்த காட்சி. அந்தகாசுரவத மூர்த்தி. கைகளில் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, முகத்தில் போர் வீரனின் உக்கிரம்.

From Elephanta

குடைவறைகளில் பெரிய சிலைகள் நம்மூரிலும் இருக்கின்றன. யாரை உதாரணம் சொல்லலாம்னு யோசிச்சா இரண்டு பேர் உடனே மனதில் வந்து நிற்கின்றனர்.
1. சிவன் குடைவறையின் துவாரபாலகர்கள், திருமயம்.
2. பள்ளி கொண்ட பெருமாள், பெருமாள் குடைவறை, திருமயம்

சரி, அவற்றுக்கும் இவற்றுக்கும் அப்படி என்ன வித்தியாசம், எனக்குத் தோன்றியது, அலங்காரம். கல் அலங்காரம். சுழித்திருக்கும் கூந்தல், அலங்கார கிரீடம், உடை நளினம். இவற்றிலெல்லாம் அவர்கள் காட்டும் த்த்ரூபக் காட்சி details அபாரம். அதற்காக, நம்மூரைக் குறைத்து மதிப்பிடலாகுது நண்பர்களே. அந்த ஊரின் பாறை அப்படி. மென்மையானது. நம்மூர் பாறையில் எடுத்துத் தட்டினால்….? நங்ங்ங்ங்..

சிவனார் கல்யாணம்
மாப்பிள்ளை பெண்ணின் ஆளுயர சிற்பங்கள், அதில் உள்ள நளினம், வானில் மிதக்கும் தேவர்கள் அசத்தல் பேனல்!

From Elephanta

கங்காதர மூர்த்தி

From Elephanta

முன்னால் நிற்கும் ஆசாமியை வைத்து அவர் முன்னால் நிற்கும் சாமியின் உயரத்தை அளந்து கொள்ளவும். நண்பர்களே, நான் பிரமாண்டம், பிரமாண்டம் என பிதற்றியதை இப்போ உணந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

ஒன்றாம் குகையின் பின்புற கருவறையில் உள்ள மகேஷமூர்த்தி சிவன் இவர். திரிமூர்த்தி என்று இவரை அழைக்கின்றனர்.

From Elephanta

மூன்று முகம் ரஜினிகாந்த் கணக்கா இருக்காரில்லையா, இடதுபக்கம் மீசையும் கோபமுமாக இருப்பவர் ருத்ரன். இவர் கோபம் உலகத்தை அழிக்கும். எரித்து சாம்பலாக்கும். பூசுறதுக்கு திருநீறுதான் மிஞ்சும்.

நடுவில ஜெண்டில்மேன் கணக்கா, மோனத்தில் ஆழ்ந்திருப்பவர் தத்புருஷர். உலகின் நன்மை தீமைகளின் சமநிலை கெடாமல் பாத்துப்பார்

இந்தப்பக்கமா இருப்பவர் யோகேஷ்வரர். உலக நன்மைக்காக ஊழ்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்.
சத்யோஜதர், இஷானர் என இரு முகங்கள் பின்னாடி இருக்கும். பாக்கறவன் பாறையைப் பிளந்து பார்த்துக்கட்டும்னு சிற்பி நினைச்சிருக்காப்ள.
இவர்படம்தான் மகாராஷ்ட்ர சுற்றுலா கழகத்தின் இலச்சினையாக உள்ளது.

அர்த்தநாரீஸ்வரர்
திரிமூர்த்திக்கு கருறைக்குப் பக்கத்தில் உள்ள பேனல்

From Elephanta

மகாயோகி சிவன்
மலர் மேல் யோகநிலையில் அமர்ந்திருக்கும் யோகேஷ்வர சிவன்!

From Elephanta

சிவ பார்வதியின் தாயவிளையாட்டு!
மனைவியோடு விளையாடும்போது தோற்கனும். ஆனால் கல்லாட்டை ஆடி சிவன் ஜெயிப்பதால் கோபமுற்ற பார்வதி.

From Elephanta

கைலாசத்தைத் தூக்கும் ராவணன்
ஏம்பா. நான் எத்தணை நேரமா உன்ன கூப்டுட்டு இருக்கேன். இந்நேரம் என்னைக்கண்டுக்காம என்ன பன்ற. கயிலையையே தூக்கிய ராவணன்

From Elephanta

இந்த கருவறைக்கு துவாரபாலகர் இல்லீங்களா. அதனால இவரப் போட்ருக்கோம்

From Elephanta

கண் குளிர குகைக் காட்சிகள் சில

From Elephanta
From Elephanta
From Elephanta
From Elephanta
From Elephanta
From Elephanta
From Elephanta

அற்புதமான புடைப்புச் சிற்பங்கள் நண்பர்களே. வெகு நளினமான அலங்காரங்கள் கொண்டது. பார்வதி உட்கார்ந்திருக்கும் அழகாகட்டும், துவாரபாலகர்களின் சடைமுடி பாணியாகட்டும், திரிமூர்த்தி கொண்டிருக்கும் ஒரு ஓங்கார அமைதியாகட்டும், மலைக்கவைக்கும் பிரமாண்டம். மேற்கிந்திய கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் மிகச் சிறந்த உதாரணம் எலிஃபெண்டா.

ஆனால் மனம் வருந்தும் வகையில் சிற்பங்கள் அனைத்தும் அழிந்துள்ளது. மனித அழிவுகள், இயற்கை அழிவுகள். அது தவிற போர்த்துகீசியர்கள் துப்பாக்கி வைத்துச் சுட்டுப் பயிற்சி எடுத்துள்ளதாக சில செய்திகள் கிடைக்கின்றன. இப்படிப்பட்ட சிற்பங்கள் முழுமையாகக் கிடைத்திருந்தால், காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.

முடிவடையாத ஒரு குகை

From Elephanta

முடிவடையாத குகைகள் ஒரு வெறுமையான உணர்வைத் தோற்றுவிக்கின்றன. முடிவடையாத முயற்சி, யாரோ ஒரு சிற்பிக் கூட்டத்தின் முடிக்கப்படாத செயல்திட்டம், முழுமையாக வெளி வராத கனவு. யார் கண்டார்கள், இந்த இடத்தில் இவ்வளவு பெரிய சிற்ப சாம்ராஜ்ஜியத்தை அமைத்த கூட்டத்தின் வீழ்ச்சியின் சாட்சியாகவும் இருக்கலாம்.

முடிவடையாத குகைகளை நிறைய பேர் குறிப்பிடுவதில்லை. எலிபெண்டாவிலும் சரி, அஜந்தாவிலும் சரி, இந்த முடிவடையாத குகைகள் எனக்குத் தந்த உணர்ச்சிகள் உக்கிரமானவை, விளக்கிச் சொல்ல முடியாதவை. வெரிச்சோடிப்போன வீட்டை நினைவு படுத்துபவை, ஆண்டு முடித்த சொத்தை நினைவு படுத்துபவை. ஒரு இனத்தின் வீழ்ச்சியை நினைவு படுத்துபவை. இந்த இடத்தின் வரலாற்றில் முடிவாகக்கூட இருக்கலாம். ‘இத்தோட நான் முடிந்துவிட்டேன்’ என்று அந்த இடம் எனக்குக் கூறுவதாக உணர்கிறேன்.

பீரங்கி மலை

அடர்ந்த கானகத்தின் ஒற்றைப் பாதை வழியாக மலையேறுகிறோம் நண்பர்களே

From Elephanta

மேலே ஏதோ பீரங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். வந்தது வந்தோம் கழுதை அதையும் பார்த்திட்டுப்போவோமே.

ஆனால் போகும் வழியில் அங்கங்கு காடு விலகி கடல் தெரியும் காட்சி, சட்டென்று மனத் தெளிவையும் மகிழ்ச்சியையும் அளிக்கக்கூடியது.

From Elephanta
From Elephanta
From Elephanta

மழை பெய்தால் இந்த மாதிரி பாதையில போகாம கம்முன்னு திரும்பி வந்திடனும். இல்லைன்னா நீங்கள் வழுக்கி கீழே விழ வாழைப்பழத் தோல் தேவையில்லை!!

 

இதுதான் நாம் வந்து இறங்கின படகுத்துறை.

From Elephanta

கடைசியாக மலை உச்சியில் பிரிட்டிஷ் கால பீரங்கி. சொல்வதற்கு ஏதும் பெரிசா இல்லை. திரும்பலாம்!

From Elephanta

தொல்லியல் துறையினர் குகைகளைச் சுற்றிப்பார்க்க நல்ல பாதையை அமைத்திருக்கின்றனர். கடகடவென கீழே இறங்கி வருகையில தாகம் வாட்டுகிறது. நீங்களாவது போகும்போது நிறைய தண்ணீர், சிறிய உணவு வகைகளைக் கொண்டு சொல்லுங்கள்.

பாதி மலை இறங்குகையில் ஒரு மராட்டிய அண்ணன் எழுமிச்சை ஜுஸ் வித்துட்டு இருந்தாப்ள.

“கித்னா ஹுயா பையா”

“தஸ் ருபீயே.”

“தஸ் ருபீயே!!??”

பதிலுக்கு ஏதோ சொல்றார் நமக்கு விளங்கலை.

“salt.. salt.. no sugar. ”

போட்டுக் கலக்கிக் கொடுக்கிறார். உள்ளே சகல கலர்களுடனும் தூசு துகள்கள் மிதந்து கொண்டிருக்கின்றன.
நான் அதை மராட்டிய அண்ணனிடம் விசாரிக்கிறேன்.

“க்யா ஹுவா பையா?”

“மசாலா மசாலா!!”

பக்கத்தில் இன்னொரு கிளாஸ் எழுமிச்சை நீரை விழுங்கிக்கொண்டிருந்த பிரான்சுக்காரன் என்னைப் பார்த்து நகைத்தான்.

“என்னப் பாத்து எதுக்குவே சிரிக்கே? அங்க என்ன வாழுது? எப்டி இருக்கு உன் சூசூ?”

“Ha ha. too much sweeeeetttt!!” – அந்த ஸ்வீட் வார்த்தையைச் சொல்லும்போது அவன் குரல் கீச்சிடும் அளவிற்கு தொண்டையில் இனித்திருக்கிறது பாவம்!

அதுக்கு நம்ப பாடு எவ்வளவோ பரவாயில்ல என்று கிளாசைக் காலி செய்றோம்.நல்ல அண்ணன். ஒரே வாளியில் கிளாசைக் கழுவாமல், வெளியே கழுவி ஊத்தினார். இல்லைன்னா இதக்குடிக்கிற வெள்ளைக்காரன் அம்புட்டுப்பேருக்கும் வயிறு டரியல்தான்!!

From Elephanta

திரும்பிச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது நண்பர்களே. திரும்பி படகை நோக்கி நடக்கையில் முதல் குகையை கடக்கிறோம். ஏதோ கண்கள் நம் மீது பதிவதாக உணர்கிறோம். உள்ளே அதே துவாரபாலகர் அதே கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்தார்.

“எங்க அவரு?” – நான்.

வலதுகையை உயர்த்தி, ஒரு விரலால் உள்ளே சுட்டினார். முரட்டுத்தனமான அந்த முகத்தில் மந்தகாசம் ததும்பிக்கொண்டிருந்தது

ஜெய் ஹிந்த்!

குகைகளைத் தேடி


இந்தப் புத்தாண்டில் சூளுரைத்த அந்தப் பயணக்கட்டுரை இதுதான். வருசக்கணக்காக பெண்டிங்கில் உள்ளது. இது ஒரு சிறிய பயணம். இந்தியாவின் தவிர்க்க முடியாத மூன்று குகை குடைவறைகளைப் பற்றிப் பேசப்போகிறது இந்த சிறப்புத்தொடர். ‘அய்யோ, சிறப்புத் தொடராம்டா.. கொண்ருவாய்ங்கடா.. வாடா போயிரலாம்’னு பக்கத்தில இருக்கறவங்களையும் சேர்த்து இழுத்திட்டுப் போயிடக்கூடாது.

இந்தக் குகைக்கோயில்களைப் பற்றிய வரலாறு நாம் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை. எனவே இதில் கொஞ்சம் வரலாறு.. நிறைய கதை! ப்ரு காப்பியைப் போட்டுக்கிட்ட படிக்க உட்காரும் சகலகோடி வாசகர்களுக்கும் நன்றி. கீழ்கண்ட இடங்களுக்குப் போகனும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம். ஏனென்றால் நான் செய்த தவறுகளையும் சொல்லப்போகிறேன். திருத்திக்கொண்டு நீங்கள் செல்லலாம்.

  • எலிஃபெண்டா
  • எல்லோரா
  • அஜந்தா

குகைக்கோயில்னா.. பெரிய விசியமோ?

பின்னே..! பெரிய விசியம்தான். முக்கியமாகத் தமிழர்களுக்குப் பெரிய விசியம்தான். தமிழகத்தில் குகைக்கோயில்களுக்குப் பஞ்சமில்லை. எங்கூரிலயே திருமயம், சித்தன்னவாசல், நார்த்தாமலை, மலையடிப்பட்டி  உள்ளன. பின்ன ஏன் அவற்றைப் பெரிசு என்று சொல்லனும்? அளவுதான் காரணம். நம்மூர் பாறைகளில் செதுக்கப்பட்ட குகைக்கோயில்கள் அதிக பட்சம் 10க்குப் 10 பெட்ரூம் அளவில் இருக்கலாம். (ஒரு பேச்சுக்குத்தாம்பா. டேப் எடுத்துட்டு வந்து யாரும் தர்க்கம் பண்ணக் கூடாது. வரலாறு எழுதும்போதே கெண்டக்கால் ரோமம் எல்லாம் நட்டுக்கொள்கிறதே!) பெரிய குகைக்கோயில்கள், அதுவும் ஒன்றல்ல, ரெண்டல்ல.. வரிசையா….. குகை. பிரம்மாண்ட குகை. அரண்மனை போன்ற குகை. மாடி வெச்ச குகை, ஓவியம் வரைந்த குகை, ஒளி புகாத குகை, சிற்பங்கள் நிறைந்த குகை….. இத்தணையும் ஒரே இடத்தில் கிடைப்பதென்றால்?

ஒரே வரியில் சொல்லனும்னா, நம்ம ஊர்ல உள்ளவை குகைக்கோயில்கள். மேலே சொன்ன மூன்றும் குகை அரண்மனைகள்!

அவை தவிற அவை கலைப் பொக்கிஷங்கள். யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டவை. பார்ப்பதற்கு ஒரு நாள் போதாது. ஆனால் என் துரதிர்ஷ்டம். எனக்கு ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நாள்தான் ஒதுக்க முடிந்தது.

அதற்காக நான் நம்ப குகைக் கோயில்களையோ ஒரு கல் சிற்பங்களையோ குறைத்து மதிப்பிட்டால், “மகாபலி” என்னை நரபலி கொண்டு விடுவார்!

2007 நவம்பர்

மும்பைக்குச் செல்ல அவசரம் அவசரமாய் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிய செயல்திட்டம் கொண்டுவரும் வேலை. கொஞ்சம் கலக்கத்துடன் மாலை 5 மணிக்கு அலுவலகத்தில் கிளம்பி, வீடு வந்து உட்காரக்கூட நேரமின்றி சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்து மூச்சு வாங்கிக்கொண்டேன். முதல் விமானப் பயணம். பட்டிக்காட்டானுக்குப் பல்லக்காட்டக்கூட மூடு இல்ல. பதபதைப்பு அனைத்தையும் விழுங்கிவிட்டது.  எனக்கு முன் போனவர்கள் என்ன செய்தார்களோ அதையே செய்ததும், ஒரு வழியாக விமானத்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்ததும், பக்கத்தில் ஒரு மும்பை பெண் உட்கார்ந்ததும், மும்பை வரை கதையடித்ததும் இந்தக் கட்டுரைக்குச் சம்பந்தமில்லாத விசியங்கள்!

airsahara6ug

கதை தொடங்குவது, மும்பையிலிருந்து…

விமான நிலையத்தில் இறங்கி வெளியில் வரும்போது கொஞ்சம் பகீரென்ற உணர்வு வயிற்றைப் பிடிப்பது, நம் இந்திய விமான நிலையங்களுக்கே உண்டான ஒரு தனித்தன்மை. என்னவோ பாதுகாப்பு வளையத்திலிருந்து வலுக்கட்டாயமாக பிதுக்கித் தள்ளப்பட்டது போன்று. ஒரு பாதுகாப்பில்லாத உணர்வு வரும். இது மாதிரியான உணர்வு வரும் ஊர்களில் சுற்றுலா வளரும் என்று எனக்குத் தோன்றவில்லை. சரி, மும்பை – முதல் முறை, வெளியே கருப்பு மஞ்சள் டாக்சி. நான் வைத்திருந்த முகவரியைப் படித்துவிட்டு, ‘எனக்குத் தெரியும் போலாம்’ என்றார் ஓட்டுநர். என் நேரம். வெளியே விமான நிலையமே வெற்றுக்காடாய் இருந்தது. மணி இரவு 12க்கு மேல்! ஒழுங்காய் கொண்டு போவானா என்கிற பதைப்பு, நாளைய செயல்திட்ட சந்திப்பு எப்படி இருக்குமோ என்கிற உணர்வை விஞ்சியது.

மஞ்சக்காட்டு மைனா
மஞ்சக்காட்டு மைனா

‘என்னா இவன். இவ்ளோதூரம் கொண்டு போறான். மும்பைன்னு சொன்னானுக. இவன் அடுத்து குஜராத்ல கொண்டு போய் இறக்கிவிடுவான் போல. ஏம்பா இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?’ ஏதோ இந்தியில் பதில் சொன்னான். மருந்துக்கும் புரியலை. அப்போதிருந்த மனநிலையில் மும்பையின் கும்மிருட்டும், டாக்சி முகப்பு விளக்கில் ஒளிரும் நெடுஞ்சாலை பலகைகளும் ரசிக்கும்படியாக இல்லை. இரவு 1 மணிக்கு அலுவலக விருந்தினர் விடுதியில் கொண்டு போய் இறக்கினார். நன்றி மிகுந்தவனானேன். உண்மையில் சாந்தாகுருசிலிருந்து போரிவளி 16 கிலோமீட்டர்!

அடுத்த ஓரிரு நாட்கள் அலுவலகத்திற்கு ஆட்டோவில் போனாலும், பேருந்து பிடித்துச் செல்லத் தொடங்கிவிட்டது நமது திராவிட இயக்கத்தின் இந்தி எதிர்ப்புக் கொள்கைக்கு முரணானது. போ… ரி… வ… ளி… என்று எழுத்துக்கூட்டி வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அந்தோ பரிதாபம்! ஒரு முறை கிழக்கு போரிவளி பேருந்துக்குப் பதிலாக மேற்கு போரிவளி பேருந்தில் ஏறி பாதி வழியில் இறங்கி லொங்கு லொங்கினேன். இந்தி எதிர்ப்புக் கொள்கையுடன் திராவிட தலைவர் நகைத்திருப்பார்.

ஆனால் அங்கதான் திரைக்கதையில் ஒரு ‘டுஷ்டு’! லொங்கு லொங்குவின் நடுவில் ஒரு லோக்கல் டிராவல்ஸ் பார்க்க நேர்ந்தது. அதீத ஆவலுடன் மும்பை சவாரிக்கு முன்பதிவு செய்து கொண்டேன். வார இறுதிக்கான திட்டம் ரெடி!

முதல் சனிக்கிழமையில் மும்பை தரிசனம்.

இதைப் பற்றி விவரிப்பது தேவையில்லாதது. ‘இதா பாருப்பா. இதான் மெரீனா பீச்சு. கடல்லாம் இருக்கும்’ என்கிற ரகம்தான். ஆனால் ஊர் பழக வேறு வழியிருக்கவில்லை. போரிவளி கிழக்கில் துவங்கிய ஒரு டப்பா பேருந்து (இந்தியன் படத்தில FC போட வருமே அது மாதிரி பேருந்து), நேரே இந்தியா கேட்டில் இருந்து, சித்தி விநாயகர் கோயில், மகாலக்ஷ்மி மந்திர், மலபார் ஹில், வான்கடே ஸ்டேடியம், மரைன் டிரைவ், ஜுஹூ பீச்… இப்படி போனது. சக பயணிகளைப் பார்த்தபோது அன்பே சிவத்தில் கமலும் மாதவனும் ஒரிசா பார்டரைக் கடந்து வருவார்களே, அத்தகு மண் மணம்!

சுந்தரா டிராவல்ஸ்!
சுந்தரா டிராவல்ஸ்!

 

இந்தியா கேட்
“நீ ஒரு காதல் சங்கீதம்!”
அப்போதைக்கு கல்பனா சாவ்லா விபத்தில் இறந்ததில் உலகம் அதிர்ந்ததல்லவா. அனைவரும் அவரது panel இருக்கும் இடத்தில் நின்று செய்திகளைப் படித்தனர் (நேரு விக்ஞான் சென்டர் – அந்தூரு பிர்லா கோளரங்கு!)

பக்கத்தில் ஒரு குஜராத்தியன். சம வயதுடையவன். அறிமுகப்படுத்திக்கொண்டான். “தென்னிந்தியர்கள் ஆங்கிலத்தைப் பற்றிக்கொண்டு, தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னேறிவிட்டார்கள். இந்தி அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. வட இந்தியனைப் பார். இந்தியைக் கட்டி அழுதுகொண்டிருக்கிறான்” என்று அங்கலாய்த்தான்.

மகாலக்ஷ்மி மந்திரில் டீ குடிக்கையில், கோவை இளைஞர்கள் அறிமுகமானார்கள். ஹை.. பை!

ஜுஹுவில் மாலைச் சூரியன்
ஜுஹுவில் மாலைச் சூரியன்

இந்த சவாரியை முடித்துக்கொண்டு இரவில் படுக்கும்போது சிந்தையில் இருந்தது….. மாதுங்கா!

மாதுங்கா

இணையத்தில் உலாவி ஏற்கனவே மணி ஹோட்டலின் முகவரியைக் குறித்துக்கொண்டிருந்தேன். ஞாயிறு காலை குளித்து முடித்து சுத்தபத்தமாய் ரயிலேறிவிட்டேன். போரிவளியிலிருந்து நேரே சர்ச் கேட். அங்கிருந்து மத்திய ரயிலைப் பிடித்து மாதுங்கா வந்து இறங்கியிருந்தேன். இறங்கியதும் புரிந்தது…. ‘தத்தா நமர்‘. தமிழ் சினிமா பாடல்கள், சுவரொட்டிகள்.

“அண்ணே, மணி ஐயர் ஹோட்டல்.”

“ரைட்ல போய் முதல் லெப்ட்ல திரும்புங்க”

Mani's Lunch Home. Photo (c) http://www.manislunchhome.in/
Mani’s Lunch Home. Photo (c) http://www.manislunchhome.in/

மும்பை போய் அப்படி ஒன்னும் என் நாக்கு செத்துவிடவில்லை. அலுவலகத்தில்தான் வரட்டிக்கு வர்ணம் அடித்தது போல் சாப்பாடு இருந்தது. மற்றபடி விருந்தினர் இல்லத்தில் நல்ல சாப்பாடு என்பதை அறையில் எதிரொலித்த என் ஏப்பம் சொன்னது! இருந்தாலும், நம்மூர் சாப்பாடுன்னா சும்மாவா. ஒரு பிடி பிடித்துவிட்டு, திரும்ப அறைக்கு வந்தபின்…… வேறென்ன.. தூக்கம்தான். அன்று மாலை முழுக்க, மாதுங்காவில் இருந்த நம்மூர் பூக்கடைகளும், சரமாகத் தொங்கி்க்கொண்டிருந்த ரோஜா மாலைகளும், சரசரவென பூக்களைக் கட்டிக்கொண்டிருந்த தமிழர்களும் மனதை நிரப்பியிருந்தனர். “வேலு நாயக்கர்” மட்டும்தான் மிஸ்ஸிங்!

வருவது ஒரு முறை. திரும்ப வருவது சந்தேகமே என்று மனம் மிக வேகமாகக் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தது. அதனால் அடுத்த வாரம்…… திட்டம் வார நாட்களில் ரெடியாகியிருந்தது!

சந்திப்போம் நண்பர்களே!

தொடர்ச்சி –