யாருக்காக அழுதான் । ஜெயகாந்தன்


திருக்குறளின் நட்பு அதிகாரத்திலிருந்து ஒரு குறளை மேற்கோள் காட்டலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இதற்குச் சரியாக இருப்பது நம் பள்ளிகாலத்து நீதிக்கதை ஒன்று.

ஒரு நண்பர்கள் கானகத்தின் வழி சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒரு கரடி குறுக்கிடுகிறது. மரம் ஏறத்தெரிந்தவன் சற்றும் தாமதிக்காமல் மரத்தில் ஏறித்தப்பிவிடுகிறான். மரம் ஏறத்தெரியாதவன் சமயோஜிதமாக யோசித்து மூச்சு விடாமல் படுத்துக்கொள்கிறான். அவனை முகத்தை முகர்ந்து பார்த்த கரடி, செத்தபோனவன் என்று நினைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிடுகிறது. மரத்தின் மேலிருந்தவன் இறங்கி வந்து, கீழே இருந்த மற்ற நண்பனிடம் ‘கரடி உன் காதில் குசுகுசுத்ததென்ன?’ என்று வினவுகிறான். ‘ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை’ என்றது கரடி என்று அவன் சொல்வதாகக் கதை முடியும்.

நட்பில் நல்ல நட்பு, தீய நட்பு என இரண்டைப் பற்றிய இரண்டு நீள்கதைகள் இந்த நூலில் உண்டு.

  1. யாருக்காக அழுதான்
  2. எனக்காக அழு

யாருக்காக அழுதான்
ஆசிரியர் – ஜெயகாந்தன்
பிரிவு – புனைவு
பதிப்பு – மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – முதல்பதிப்பு பிப் 1962 மறுபதிப்பு அக் 2011
கன்னிமரா சென்னை
http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=367441
NLB சிங்கை
http://www.nlb.gov.sg/newarrivals/item_holding.aspx?bid=200155434

இந்த நூலில் வரும் முதல் கதை ‘யாருக்காக அழுதான்’ திரைப்படமாக வெளிவந்திருக்கிறது – பார்க்க: கருணை உள்ளம் http://ta.wikipedia.org/s/1e50

wpid-imag1034_1.jpg

யாருக்காக அழுதான்

முழுக்க முழுக்க ஒரு தங்கும் விடுதியில் நடக்கும் ஒரு கதை. அப்பாவியான, நேர்மையான மற்றும் எல்லோராலும் எள்ளி நகையாடப்படும் கிறித்தவ பணியாளன் சோசப்பு. அவனது ஃப்ளாஷ்பேக் கேட்டு அவனுக்காக மனம் இரங்கும் நாயுடு – விடுதியில் தங்கும் ஒருவர். குடிபோதையில் விடுதிக்குத் தங்க வரும் சென்னை சவுகார்பேட்டை சேட்டு, அவன் தவறவிட்ட பர்சை எழுத்து பண சபலத்தில் ஒளித்து வைக்கும் சோசப்பின் முதலாளி முதலியார். அந்தத் திருட்டுப் பழி எதேச்சையாக சோசப்பின் மீது விழுக, கதை வெகு உணர்ச்சிகரமாகப் போகிறது.

இந்தக் கதை திரைப்படமாக வந்திருக்கிறதென்று எனக்குத் தெரியாது. படித்துக்கொண்டிருக்கும்போதே சோசப்பாக நாகேஷும், நாயுடுவாக மேஜர் சுந்தர்ராஜனையும் மனதில் வைத்து எழுதிய கதை போலவே தெரிந்தது.

மனைவியின் கள்ளத்தொடர்பின் காரணமாகவும், தன் தாழ்வு மனப்பான்மையின் காரணமாகவும் மணவாழ்க்கை விட்டு சோசப்பு கதையைக் கேட்டு நாயுடு உருகும் இடம் நெகிழ்ச்சி!

“தீயாரைக் காண்பதுவும் தீது: திருவற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீது: தீயார் குணங்கள் உரைப்பது தீது: அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது!” என்று பாடிவிட்டு, “இங்கேதான் ரொம்ப விசயம் இருக்கு. ‘தீயார் குணங்கள் உரைப்பதுவும்ட தீது’ன்னான். அதைச் சொன்னா அதைக்கேட்ட சில பேரு கெட்டுப்போவாங்களாம். உலகத்திலே நல்லது கெட்டது எவ்வளவு வேகமா பரவுதுன்னு பார்த்தியா. ஆனால் அதெல்லாம் கொரங்கு மனம் படைச்சவங்களுக்குத்தான். நீ அப்பிடி இல்லே சோசப்பு. நீ கெட்டதில் நல்லதைப் பாக்கறவன். அது எல்லோருக்கும் வருமா என்ன மனசுடா உனக்கு, தங்கம்டா தங்கம்!….” – நாயுடு

இந்தக் கதையில் இரண்டே இரண்டு பெண் பாத்திரங்கள்தான். கவுரவ தோற்றத்தில் வந்த போகும் சோசப்பின் மனைவி பார்வதி. இன்னொருத்தி, லாட்ஜில் தங்கும் பெயரில்லா பாலியல் தொழிலாளி. நாயுடுவிற்கு அப்புறம் சோசப்புக்கு ஆதரவாகப் பேசுகிறவள் அவள்தான். தவறான திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்டு சோசப்பு அடிவாங்கும் போது அவனுக்காக இரங்குபவள் அவள் மட்டுமே.

“நீங்க எல்லாம் அண்ணன் தம்பியோட பொறக்கலியா? அவனைக் கொன்னுட்டா உனக்குப் பணம் வந்துடுமோ ஐயா? திருடினவன் யாருன்னு கண்டு பிடிக்காம அந்த அப்பாவியைப் போட்டு வதைக்கிறீங்களே.. நானும் காத்தாலே புடிச்சிப் பாக்கறேன். அன்னம் தண்ணி குடுக்காம ஒரு ஜீவனை அடிச்சே கொன்னுடுவீங்க போலிருக்கே.. நெசமாத் திருடினவனைப் புடிக்கப் பாரய்யா” என்று சேட்டைப் பார்த்துக் கூறியவாறு பற்களைக் கடித்தவாறு சூதாட்டக் காரனைப் பார்த்தாள் அவள். அவளுக்கு அந்த இரண்டு ஆட்கள் மீதுதான் சந்தேகம்.

“ஆஹாஹா-பத்தினித் தெய்வம் சொல்லிடுச்சு ஐயா. இவளையும் சேர்த்து இழுத்திட்டுப் போங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு. அப்ப விஷயம் வரும் வெளியே..” என்று ஆத்திரத்தோடு யோசனை கூறினான் சூதாட்டக்காரன்.

“அட கேப்மாறி, நான் பத்தினின்னு உன்கிட்ட வந்து சொல்லிக்கிட்டேனா…? நான் கெட்டுப்போனவதான். இல்லேங்கலே, ஆனா கேடித்தனம்ட பண்றவ இல்லே. எனக்கு என்னாய்யா பயம்? தாராளமா வர்ரேன் போலீஸ் ஸ்டேஷனுக்கு. யோக்கியன் மாதிரிப் பேசுறியே நீயும் வர்ரியா” என்றாள் அவள்.

உணர்வுப் பூர்வமான கதை. ஒருவேளை இதைப் படமாக எடுத்தால் எனது கதாபாத்திர தேர்வு என்னவாக இருக்கும்.

  • சோசப்பு – நாகேஷ்
  • நாயுடு – மேஜர் சுந்தர்ராஜன் (‘மாது விளைவு’ என்று இந்த ஜோடியை அழைக்கலாம்)
  • முதலியார் – ஸ்ரீகாந்த்

நூல் அரங்கம்

எனக்காக அழு

செட்டியாரிடம் ஏமாற்றிவிட்டு 4000 ரூபாயை எடுத்துக்கொண்டு ஊரை விட்டுப் ஓடப்பார்க்கிறான் நாணயஸ்தான் என்று பேர் எடுத்த கனகசபை. தனது தைரியத்திற்காகவோ, விஷயம் தெரிந்ததற்காகவும் அயோக்கியன் என்று பேர் எடுத்த தன் நண்பன் வைரவனையும் அழைத்துக்கொள்கிறான்.  பிறகு கதை முழுக்க பாண்டிச்சேரியில் ஒரு தங்கும் விடுதியில் நடக்கிறது. ஒவ்வொருவனுக்குள்ளும் ஆழ் மனதிற்குள் இன்னொருவன் இருக்கிறான். கனசபைக்குள் யார் இருக்கிறார், வைரவனுக்குள் யார் இருக்கிறார் என்பதுதான் ‘எனக்காக அழு’!

கதை துவங்குமிடத்தில் கனகசபை மிக நல்லவன் என்றும், அவன் திருடி வந்த பணத்தை அழிக்க ஒட்டுண்ணியாகத் தொடர்பவன் வைரவன் என்றும் நமக்குத் தோன்றுகிறது.

“பிரதர், இந்தக் காரியத்துக்கெல்லாம் உடம்பை விட மனசு உறுதியாயிருக்கனும்… அது இருக்கட்டும், நீ எதுக்கு என்னைப் பார்த்து பயப்படனும்… நான் என்ன ரொம்ப யோக்கியன்? நல்லவனைப் பார்த்து பயப்படு பிரதர், அப்பிடி யாராவது உலகத்தில் இருந்தா” – வைரவன்

கதையின் ஆரம்பித்தில் வைரவன் சொல்லும்  ‘அப்பிடி யாராவது உலகத்தில் இருந்தா!!’ என்பதுதான் இதன் முடிவு.

கேடி எனப்படுகிற வைரவன் பேசும் வார்த்தைகள் எல்லாமே புதிய பிளேடு வெண்ணையை அறுப்பது போல கூர்மையானது

“ஆனா ஒண்ணு, சில சந்தர்ப்பம் வரும்-எவ்வளவு நல்லவனையும் கெடுக்கறதுக்குன்னு, அதில தப்பிக்கணும்…”

“என்னை நம்பினவங்கள நான் மோசம் செய்யமாட்டேன். ஆனால் என்னை யாரும் நம்ப மாட்டேங்கறாங்க”

பாண்டிச்சேரி விடுதியில் வைரவனுக்கும், விடுதிப் பணியாளன் வீராச்சாமிக்கும் இடையே நடக்கும் சம்பாஷனையிலிருந்து வைரவனின் ஆளுமை கதையில் ஓங்க ஆரம்பிக்கிறது.

“இந்தா வீராசாமி-” என்று ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான். வீராசாமிக்கு ஒன்றும் புரியவில்லை.

“சில்லறை வாங்கிட்டு வரவா ஸார்?”

“இல்லேப்பா உனக்குத்தான் பக்ஷீல்-”

“வேணாம் ஸார்-பக்ஷீல் வாங்கிறதிலேயும் ஒரு தர்மம் இருக்கணும் பாருங்க..”

“நான் தர்றேன் நீ வாங்கிக்கியேன். எதையுமே தர்மத்தோட-உலகம் சொல்றபடி-தர்மத்தோட செஞ்சி எனக்கப் பழக்கமில்லே. சரி. இதை வாங்கிக்கிகிட்டுப் போ…”

“ஸார்,என் குடும்ப விஷயத்தையெல்லாம் சொன்னதில நான் ரொம்ப கஷ்டப் படுறேன்னு நீங்க நெனச்சிக்கிட்டீங்களா? என் தங்கச்சியும் இட்லி சுட்டு வித்து நெதம் அரை ரூபா முக்கால் ரூபா சம்பாதிக்குதுங்க-”

வீராசாமி முன்பு சொன்ன கஷ்டத்தைவிட, இப்பொழுது அவன் சொன்ன இந்தப் பரிகாரம்தான் ரொம்பவும் சங்கடமாக இருந்தது வைரவனுக்கு.

“உன் தங்கச்சி எட்டணா கொடுக்கிறதுனாலே நீ கஷ்டப்படாத குடும்பஸ்தன் ஆயிடறதா நெனப்பா?-” என்று நகைப்புடன் சிரித்தான் வைரவன்.

“உங்களைப் போலவங்களுக்கு எட்டணா அல்பமா இருக்குது. எங்களுக்கு அந்த எட்டணா இருந்தா பெரிய லாபம், இல்லேன்னா பெரிய நஷ்டம் ஸார்…”

வைரவன் இலேசாகச் சிரித்தான்.

‘மனிதன் பணத்திலனால் எவ்வளவு சீக்கிரம் ‘தன்நிலை மாறிவிட முடிகிறது. குடிக்கிறதனாலே மனுசனுக்குத் தன் நிலை’ மாறிடும்னு சொல்றாங்களே-இந்தப் பணம் மாத்தறதை விடவா அது மனுஷன் நிலைய மாத்திடுது’ என்று வியந்தான். (வீராச்சாமிக்கும் கனகசபைக்குமான குணநலத்தின் ஒரு வேறுபாடு)

“நீ என்னமோ என்னைப் பெரிய பிரபுன்னு நினைச்சுக்காதே. உன்னை விடவும் மோசம் என் நிலை, இன்னிக்கி என்னமோ இப்பிடி இருக்கணுமின்னு இருக்குது. இருக்கேன். இருக்கறத தரேன். நாளைக்கி இல்லேன்னா உன்கிட்டயே வந்து ஒரு சிங்கிள் டீ வாங்கிக்குடுன்னு கேட்பேன். கேட்டா, அப்ப வாங்கித் தருவியா?”

ரசித்த கதைகளில் ஒன்று. இதற்கான கதாபாத்திர தேர்வுகள் என்னவாக இருக்கும் என்று ஒரு கற்பனை.

கனகசபை – ஸ்ரீகாந்த்
வைரவன் – ரவிச்சந்திரன்
செட்டியார்- காகா ராதாகிருஷ்ணன்

யாருக்காக அழுதான்  - ஜெயகாந்தன்

இன்னொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

-ஜெய் ஹிந்த்

2 thoughts on “யாருக்காக அழுதான் । ஜெயகாந்தன்

Leave a comment