ஆரோக்கிய-நிகேதனம் – தாராசங்கர் பந்த்யோபாத்யாய


ஒரு நாள் இந்தப் பக்கம் வந்து பாருமே, என்ன புதுமுறைகள் எல்லாம் கையாள்கிறோம் என்பதையெல்லாம். உம் கண்ணாலேயே பார்க்கலாம். எத்தனை விந்தை விந்தையான கேஸ்கள் வருகின்றன சிகிச்சை பெற! அந்த ட்ரீட்மெண்ட்டின் ஹிஸ்டரியை மெடிகல் ஜர்னலில் படித்துப் பாருங்கள். உங்கள் அரை வேக்காட்டுச் சிகிச்சை முறையெல்லாம் இந்தக் காலத்துக்கு ஏற்றவை அல்ல. என்னவோ வைத்தியம் பண்ணுகிறீர்கள்! இப்போது விஞ்ஞான ரீதியில் சிகிச்சை நடக்கிறது. நோயாளிகள் லகுவில் குணமடைகின்றனர். நீங்கள் நடத்தும் மருத்துவமுறையே பயங்கரமானது. கண்டிக்கப்படவேண்டியது-வேறு நாடாக இருந்தால் இந்த நாட்டு மருத்துவத்திற்காக தண்டனையே விதிக்கப்படும்’ என்று ஒரு மூச்சு பேசினார்.

அப்போது அவ்விளம் டாக்டரின் முகபாவம் கடினம் பாய்ந்து விளங்கியது.
ஜீவன் மஷாய் ஸ்தம்பமாகி நின்றார். அவர் குற்றவாளி? வேறு நாடாக இருந்தால் தண்டித்து இருப்பார்கள்?

தற்கால மருத்துவ உலகின் பெரும்பகுதியான பணமும் முயற்சிகளும், மனிதனின் சாவைத் தள்ளிப்போடுவதிலேயே செலவழிகின்றன என்று ஒரு கட்டுரையில் படித்த நியாபகம் வருகிறது. அங்க மாற்று அறுவைசிகிச்சைகள் நடக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டு, அந்த நாவலைப் படித்தால் மிக அற்புதனமாக ஒரு வாசிப்பனுபவத்தை அடைவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை நாம் எழுதியுள்ள நாவல்கள் வரிசையின் தலைசிறந்தவற்றுள் ஒன்று இது.

ஆரோக்கிய நிகேதனம் – தாராசங்கர் பந்த்யோபாத்யாய
மொழி பெயர்ப்பு – த.நா. குமாரசாமி
பதிப்பு – சாகித்திய அகாடமி, முதல்பதிப்பு 1972, இரண்டாம் பதிப்பு 2015
NLBயில் முன்பதிவு செய்ய – Ārōkkiya – nikētan̲am
கன்னிமாராவில் முன்பதிவு செய்ய – காணோம்!
ஜெயமோகன் அறிமுகம் –  ஆரோக்கியநிகேதனம்

image

10 நாளைக்கு முந்தி அங் மோ கியோ நூலகம் சென்றபோது புதிய வரவு செல்ஃபில் இதைப் பார்த்து இரவல் வாங்கி வந்தேன்.

வங்க மாநிலத்தில் ஒரு கிராமம். அதில் ஒரு ஆயுர்வேத நிலையம். அதன் மருத்துவர் ஜீவன் தத்தர். அலோபதி படித்து பாதியில் நிறுத்தியவர். தந்தையிடம் இருந்து நாடி ஞானத்தைக் கற்றுக்கொண்டவர். பிறப்பு என்கிற போதே இறப்பும் தவிர்க்க முடியாது என்கிற நம்பிக்கையில் மருத்துவம் செய்பவர். இவரது மருத்துவம் நோய்க்குத்தானே ஒழிய, மரணத்திற்கு எதிரான போராட்டம் அல்ல.

அதே கிராமத்தில் அரசு மருத்துவமனை டாக்டராக வருகிறார் பிரத்யோத். இளைஞர். அலோபதியில் பாஸ் செய்தவர். நாடி பார்ப்பது மரணஓலை விடுவது என்பதெல்லாம் சுத்த பேத்தல் என்று ஜீவனுக்கு எதிராக முஷ்டியை உயர்த்துகிறார்.

இடையில் ஜீவன் கைவிட்ட கேசை பிரத்யோத் காப்பாற்றுகிறார். பிரத்யோத் தவறவிட்ட கேஸ்களை ஜீவனும் சரி செய்கிறார். ஆனால் பெரிசுக்கும் சிறிசுக்குமான உரசல்களையே கால மாற்றத்தின் அடையாளமாக வெகு இயல்பாகக் காட்டியுள்ளது இந்த நாவல்.

ஆண்டு முடிந்த சொத்து போன்று இருக்கும் ஆரோக்கிய நிகேதனக் கட்டிடத்தில் தொடங்குகிறது கதை. குளத்தடியில் விழுந்து அடிபட்டுக்கிடந்த மதியின் தாயார் எலும்பை முறித்துக்கொள்கிறாள். இந்த அடியே மரணத்தில் அடி. இதனாலேயே மரித்துப்போவாள் என்கிறார் ஜீவன் மஷாய்.

‘கிழவியை கங்கைக் கரைக்கு எடுத்துச் சொன்னீராமே’ என்று சீறுகிறார் பிரத்யோத். தவிர அவளுக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியும் விடுகிறார். அவளுக்கு திரும்பவும் வலி வர ஆரம்பிக்கிறது, ஜீவன் சொன்னபடியே.

இப்படித் தொடரும் இவர்களது உரசல் பலவேறு கேஸ்களாகவும், ஜீவனைத் தூற்றுவதும்,  பிறகு ஏற்றுவதுமான பல்வேறு கதாபாத்திரங்கள் வழியாக ஜீவனின் மருத்துவ முறையின் அனுபவமும், பிரத்யோதின் மருத்துவ முறையின் புதுமையும் நமக்குக் காணக் கிடைக்கிறது.

ஜீவன் மஷாய்

சத்தியமாகச் சொல்கிறேன நண்பர்களே. ஆழ்ந்து அனுபவிக்கவேண்டிய ஒரு பாத்திரப் படைப்பு. மேம்பட்ட ஒரு ஆத்மா. ஏதோ நம் வீட்டுப் பெரியவர் போன்று அனுபவித்து வாழவே ஆரம்பித்து விடுவோம். ‘ஏன்தான் இவரை மரண ஓலை வைப்பவர் என்று தூற்றுகிறார்களோ’ என்று அங்கலாய்கிறது மனது. பழுத்த பழம். இறுதிக் காட்சியின் தாக்கம் என் மனதை விட்டு விலக நிறைய நாட்களாகும் என்று தோன்றுகிறது.

மஷாய் இளமை காலத்தில் மஞ்சரி என்கிற பெண்ணின் பால் மதி மயங்கி அதில் வரும் பிரச்சினையால் அலோபதி படிப்பைத் தொடராமல் விட்டு விடுகிறார். மஞ்சரியை இழந்தது ஒரு குறை, படிப்பை விட்டது மற்றொரு குறை என்று அவர் வாழ்வில் தொடர்ந்து வருகிறது. ஆனால் கடைசி வரை அவருக்குள் இருக்கிற வைத்தியன் துடிப்போடு இருக்கிறான். மைக்ரோஸ்கோப் வைத்து கிருமிகளைக் காண வெகு ஆவலோடு இருக்கிறார். புதிய புதிய மருந்துகள் வருகிற போது அவற்றின் ஆற்றலைக் கண்டு வியக்கிறார். பலநாள் வியாதிகள் சிலநாட்களிலேயே குணப்படுத்த முடிகிறதே என்று வியக்கிறார்.  தன் மகனும் மரிப்பான் என்று சொன்ன அவரே தான் மறுக்கும் நேரத்தையும் கணக்கிடுகிறார். மரணம் எப்படி இருக்கும். உணர முடியுமா, கேட்க முடியுமா, சுவை உண்டா என்றெல்லாம் அவர் மருகும் இடங்கள் செரிவானவை.

சட்டென அவன் உடைந்த குரலில் ‘என்ன சொன்னீர்கள், மஷாய்! நான் பிழைக்கமாட்டேனா? செத்தா போய்விடுவேன்?’ என்றான்.

ஜீவன் எதிலும் பற்றற்றவராக, ‘இந்த நோய் உனக்கு குணமாகாது, கோஷால். இந்த ரோகத்திலேயே நீ சாக வேண்டியவன். இந்த வியாதி உனக்குத் தேறாது. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஆறு மாதம், இல்லை ஒரு வருஷம் என்று நான் சொல்லமாட்டேன். சீக்கிரத்திலேயேதான்’ என்றார்.

தாந்து உரக்கக்கூவினான்: ‘நீ ஒரு மாட்டு வைத்தியன்! அறைகுறை வைத்தியன், மனுஷ்யனா நீ!’ என்றான்.

இப்படி பலரும் ஏசுகின்றனர். ஜீவனும் மனம் வெறுத்து இனி யாருக்கு சிகிச்சை செய்யவேண்டும் என்று கடுப்பாகி ஒடுங்கிவிடுகிறார். இன்னொருவர் வந்து இறைஞ்சி நிற்க, மனம் கேட்காது திரும்ப மருத்துவம் செய்ய ஆரம்பித்துவிடுவார். அவர் ஒதுங்கிப் போவதும், பிறகு மருத்துவம் செய்வதும், பிறகு பிரிதொரு நாளில் பிரத்யோத் வசமே கேஸ்களை ஆற்றுப் படுத்துவதும் நம்மை அந்தக் கிராமத்து நினைவுகளிலேயே வாழவைத்துவிடுகிறது.

பிரத்யோத்

துடிப்பான இளைஞர். டாக்டருக்குப் படித்து பாஸ் செய்தவர். நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு 3 மாதம், அதிகப்படியா போனால் 6 மாதம். நீ போய் சேர்ந்துவிடுவாய் என்று ஓலை விடும் மஷாய் மீது கோபத்துடன் எரிந்து விழுவதுடன், அவர் கைவிட்ட கேஸ்களை தான் எடுத்துக் கொள்கிறார்.

பிரிதொரு காலத்தில் அவரவர் தரும் அனுபவங்களின் விளைவாக, பிரத்யோதும் மஷாயும் ஒன்றாக நிற்க வேண்டிய காலமும் வருகிறது. பிரத்யோதின் மனைவி உடல் நலமில்லாமல் போகும் தருணத்தில் அவரும் மஷாயும் உரையாடும் இடம் நாவலின் சுவையான பகுதி.

ஆத்தர்-பௌ

மஷாயின் மனைவி அழுத்தமாக வந்து போகிறாள். மஞ்சரியை கட்ட நினைக்கும் மஷாய் ஏமாற்றப்படுகிறார். குறிப்பிட்ட தேதியில் ஆத்தரை மணக்கிறார். அவளது அர்ச்சனையில் கடுப்பாகிப் போகிறார் பாவம். இத்தணைக்கும் ஆத்தர் கொடுமையானவராக இல்லை. இப்படி வீணாக ஊரார் பேச்சை வாங்கிக்கொள்கிறானே இந்தக் கிழவன், சொத்தை எல்லாம் வீணாக விற்றுவிட்டானே, வர வேண்டிய காசைக்கூட வசூலிக்காமல் இருக்கிறானே என்றெல்லாம் நொந்து கொள்கிறாள். நோகாமல் வேறு என்னதான் செய்வாள்? மகனுக்கு மரணம் என்று தெரிந்தும் இந்த ஆள் ஏன் இப்படி சும்மா கிடக்கிறான் என்று கோபம்.

மரணம் எப்படி இருக்கும்? உடல் கூட்டை விட்டு விடுதலையாவது எப்படி இருக்கும்? மரணத்திற்கொரு வடிவம் உண்டா, உண்டானால் அதைப் பார்க்க வேண்டும். சுவை உண்டானால் ருசிக்க வேண்டும், ஒலி உண்டானால் கேட்கவேண்டும் என்று ஆசைப் படுகிறார் மஷாய்.

வயதான காலத்திலும் அவருக்கு புதிதாக அறிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம்தான் என்னே! மைக்ரோஸ்கோப் வைத்து ரோகத்தின் காரணமான கிருமிகளைக் காண இயலுமா? பெனிஸிலின் என்ன அற்புதமாய் வேலை செய்கிறது! அவர் வியக்கும் இடங்களில் வயது வென்ற குழந்தைமை தெரிகிறது. ‘டாக்டராகத்தான் ஆவேன்’ என்கிற இளமைக்கால மஷாய் தெரிகிறார்.

எத்தனை விதமான மரணங்கள்? வயது வந்தாலும் மரணம் கொள்ள எல்லாருக்கும் விருப்பம் வருகிறதா என்ன? ஒருவன் மரணத்தைக் கொண்டாடி ஏற்றுக் கொள்கிறானே. அகால மரணங்கள் தரும் வேதனைதான் எத்தனை எத்தனை.

நண்பர்களே, அபயாவின் விருந்து எத்தனை ஆழமான உணர்வைத் தருகிறது பார்த்தீர்களா? எப்படியும் அவள் கணவன் இறந்து போவான் என்று உணர்ந்த மஷாய், அபயாவிற்குப் பிடித்தவற்றைச் சமைத்து விருந்து போடுகிறார். மருத்துவர் என்பதைத் தாண்டி, ஒரு சமூகப் பொறுப்பு மிக்கவராக, அபயாவை குழந்தை முதல் பார்த்த ஒரு தந்தை உணர்வோடு இதைச் செய்கிறார். அதே அபயா பிறிதொரு நாளில் சாவித்ரி விரத விருந்துக்கு அழைக்கிறாள். அதுவே மஷாய் கடைசியாக அருந்தும் விருந்து. முதலில் மறுக்கிற மஷாய்,  அதை உணர்ந்து விருந்துக்கு வர ஒப்புகிறார். ‘இன்னும் கொஞ்சம் போடட்டுமா’ என்கிறாள். ‘என்னென்ன செய்திருக்கிறாயோ அதையெல்லாம் போடம்மா’ என்கிறார். வாசிக்கிற நமக்குத்தான் மனம் கனத்துப் போகிறது.

யார்தான் ஏசவில்லை மஷாயை? தனக்கு மரணம் நிச்சயம என்று ஜீவன் கூறியவுடன், தாந்து தான் அவரிடம் பெற்ற இலவச வைத்தியத்தைக்கூட மறந்து அவரை ஏசுகிறான்.  ‘இப்படி ஊராருக்கெல்லாம் சாவு ஓலை விட்டு வசவை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமா’ என்கிறாள் ஆத்தர் பௌ. ‘உன் பிள்ளை சாகக்கடந்தால் உன் மருமகளுக்கு விருந்து போடுவீரா’ என வினவுகிறாள் அபயா. அவரைப் பார்த்தாலே பிரத்யோதிற்குப் பற்றிக் கொண்டு வருகிறது. அவ்வளவையும் வாங்கிக் கொள்ள மஷாய் என்ன கல்மனம் படைத்தவரா?

இல்லை. அவரும் கண்ணீர் விடுகிறார். தன் தந்தையின் மரண கிடைக்கையின் போது. ‘மரணம் என்பது நிச்சயம் என்று அறிந்த நீ இப்படி அழுது என்னைக் கஷ்டப் படுத்தலாமா?’ என்று கேட்கும் இடத்தில் நாமும் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கறோம் என்கிற பிரம்மை வருகிறது.

வசவுகளை வாங்கிக் கட்டிக்கொள்கிற அந்த வயதான கட்டை, ஒரு அங்கீகாரத்திற்கோ
அன்பிற்கோ ஏங்கித் தவிக்கறது. கிஷோர் வந்து தன் சகாக்களுக்கு மஷாயை அறிமுகப் படுத்துவதிலும், ஸீதா, அபயா அவர்களின் அன்பிற்காக ஆட்படுவதிலும் மஷாயின் உள்ளக்கிடைக்கையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஸேதாப், மஷாயின் நண்பன். நாவல் முழுக்க வருகிறார். அவ்வளவாக நிகழ்வுகளில் பங்குகொள்ளாவிட்டாலும் அவர் உடனே நிழல் போல இருக்கிறார். சதுரங்கத்தை ஆடிக்கொண்டே இருக்கறார். மஷாய்கு அவர் ஒரு ஊன்று கோல் போல.

ஜீவன் தன் நாடியையே பிடித்து தன் இறுதி நாளைத் தேடும் இடம் வார்த்தையில் வடிப்பது எவ்வளவு சிரமம்! அந்தச் சிரமத்தை எழுத்தாளர் வடிக்கும்போது படிக்கிறவன் உருகாமல் இருக்கமுடியாது. ‘கங்கைக் கரைக்குப் போயிடலாமா’ என்று நினைக்கிறார் மஷாய். ‘நாம அங்க போயிட்டா இந்த ஆத்தர் பௌ என்ன செய்வாள், பாவம். தனியாக அல்லவா இருந்து கஷ்டப் படுவாள்’ என்று அவர் முடிவெடுக்கும் இடமும், ஆத்தர் பௌ நாவல் இறுதியில் பேசும் இடத்திலும் கண்ணீர் துளிர்த்து விட்டது.

அந்தோ.. அந்தோ.. மனிதச் செருக்கே! விசித்திரமானது மானிட உள்ளம்! அதன் ரகசியத்தை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? மாரியும், திருவும், மகளிர் மனமும் தக்குழி நில்லாது பட்டுழிப்படுமென்னும் வழக்கு உண்டே.

(நல்ல தமிழில் மொழி பெயர்த்துள்ளார் திரு குமாரசாமி. ஆனால் அதற்கு திருஷ்டி வைப்பது போல நூல் முழுவதும் எழுத்துப் பிழைகள் மலிந்துள்ளன. இலக்கியத்திற்கு அவார்டு தரும் ஒரு நிலையம், நாங்கள்தான் இலக்கியவாதிகள் என்று டிவி நிலையம் ஒவ்வொன்றாக ஏறி இறங்கி தம்பட்டம் அடித்துக்கொள்ளும் செந்தொப்பி இனத்தவர்கள் இவ்வளவு பேர் இருந்தும் ப்ருஃப் ரீடிங் கூட செய்ய இவர்களுக்கு நேரமில்லை. எப்படி இருக்கும்? நேரம்தான் ஏதோ ஒரு வழியில் செலவாகிவிடுகிறதே!)

தவரவிடக்கூடாத நாவல் அன்பர்களே.
மீண்டும் வேறொரு நூல் அறிமுகத்தில் சந்திப்போம்

வாழ்க பாரதம்

image

3 thoughts on “ஆரோக்கிய-நிகேதனம் – தாராசங்கர் பந்த்யோபாத்யாய

Leave a comment