சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்


‘மறைத்துக் கொண்டவர்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டவர்கள்; ஒப்புக்கொண்டவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட்டவர்கள்; என்பது எவ்வளது அநீதி? தர்ம சாஸ்திரம், நியாயம் என்பனவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். எவனோ வெள்ளைக்காரன் எழுதி வைத்த இந்தியன் பீனல் கோடு சட்டம் கூட அப்ரூவர் விஷயத்தில் சலுகை காட்டுமே!…’

சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

முதல் பதிப்பு – 1970. 31ஆம் பதிப்பு 2015
மீனாட்சி புத்தக நிலையம்

image

கல்லூரிப் பருவத்தில் ஒரு மழைக்கால மாலை வேளையில் யாரென்றே தெரியாத பிரபுவால் யாரென்றே தெரியாத கங்கா ‘கெட்டுப்போய்’ விடுகிறாள். அறுபதுகளில் பிராமண சமூகத்தில் நடக்கும் கதை. நடந்ததை அம்மாவிடமும் அண்ணன் கணேசனிடமும் சொல்ல, அண்ணன் அவளை அடித்து வீட்டை விட்டுத் துரத்திவிடுகிறான்.  வெங்கு மாமா உதவியால் படிதது அரசாங்க வேலையில் இருக்கும் ஒரு முதிர் கன்னியாக இந்த நாவல் தொடக்கத்திலிருந்து இறுதி வரை வருகிறாள் கங்கா. அவளுடைய பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. அறுபது எழுபதுகளில் இந்தக் கதை வெளி வந்திருக்கிறது என்று கூறப்படும்போது, இது பிராமண சமூகத்தில், பெண்ணிய வட்டாரத்தில் எந்த அளவு சலனத்தை உண்டாக்கியிருக்கும் என்பதை உணர முடிகிறது.

image

வாசித்த நாளில் இருந்தே ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களை இந்தப் பதிவின் வாயிலாகப் பதியலாம் என்று எண்ணுகிறேன். (வெகு சுருக்கமாக)

மேய்ப்பர் இல்லா ஆடு

வெளியே காணும் கங்கா அல்ல அவள். தினசரி உள்ளே ஏதாவது ஒரு போராட்டம் ஓடிக்கொண்டே உள்ளது. பேருந்தில் ஒருவன் இடிக்கிறான். கண்டக்டர் கையைத் தொட்டு டிக்கட் தருகிறான். வெங்கு மாமாவின் சில்மிஷங்கள். எதாவது ஒன்று வந்து கங்காவின் உள்ளத்தினுள் கங்கு அணையாமல் பார்த்துக்கொள்கிறது. ஆண்களைப் பார்த்தாலே எரிச்சல் படும் கங்கா, ஒரு ஆணுடன் கல்யாணம் என்பதையே கரப்பான்பூச்சியைப் போல அருவெறுக்கிறாள் கங்கா.

ஆனால் அவளுடைய பரிதாபமான மறுபக்கம்தான் வருத்தம் தருவது. தனக்கு ஒரு துணை வேண்டாம் என்ற நினைக்கவில்லை கங்கா. ‘தன்னைத் தலை முழுக வைத்து எவன் தலையிலாவது என்னைக் கட்டியிருக்கவேண்டாமோ இந்த அம்மா’ என்று கடுகடுக்கிறாள்.

‘நாணம்’னு நான் நினைச்சிக்கிறத அவன் ‘காதல்’னு நெனச்சுக்கிறான். நாணமே காதலுக்கு அடையாளமாகப் போயிடறது. இந்த நாணத்திலே மயங்கியே அவன் அட்வான்டேஜ் எடுத்துக்கறான். ‘ப்ரொஸீட்’ பண்றான். எல்லாம் எதனாலே? ஆம்பளைகளைத் தலைநிமிர்ந்து பார்க்கப் படாது, பேசப்படாது, பழகப்படாதுன்னு சொல்லிச் சொல்லி ‘இன்ஹிபிஷன்’ஸைச் சின்ன வயசிலிருந்தே ஏற்படுத்திட்டதனாலே, ஒரு ‘அடலஸண்ட்’ பீரியட்ல பொண்களுக்கு ‘மேன்’னு நினைச்சாலே அவனோட ‘அப்பியரன்ஸ்’லேயே ஒரு ‘திரில்’ – ஒரு மனச்சிலிர்ப்பு ஏற்பட்டுப் போறது. இப்படி ஏற்படறது ஒரு நல்லொழுக்கம்னு வேற நெனச்சிக்கறா. எல்லாக் கஷ்டமும் ஆரம்பமாறது.

இந்த மனச்சிலிர்ப்பு எல்லார்கிட்டேயும் – எவன் கிட்டே வேணும்னாலும் ஒரு பொண்ணுக்க ஏற்படறது ‘இம்மாரல்’ – ஒழுக்கக்கேடுன்னு எனக்குத் தோண்றது.

இந்த ஒழுக்கக்கேடு என்று அவள் நினைக்கிறதும், பிறர் போன்று தமக்கும் ஒரு நல்ல வாழ்வு அமைந்திருக்கக்கூடாதா என்பதும் தீர்க்க முடியாத உள்ளச் சிக்கலாகிறது.

ஒரு நிலையில் இருந்து ஆட்டம் காணும்போது, அந்த நிலைக்கு நேர் மாறான பிடிவாத நிலையை எடுத்துக்கொள்கிறாள் கங்கா. அதில் பிரச்சினை வரும்போது இன்னமும் தீவிரமாக அதற்கு எதிர் நிலை எடுத்துக்கொள்கிறாள். ஆனால் இவளது எல்லா முடிவுகளிலும் பொதுவாக உள்ள ஒரு பண்பு – சுயவதை. தன்னை வதைத்த சூழலுக்காக தன்னையே மீண்டும் மீண்டும் வதைத்துக்கொள்வது. அதற்காக வெளி சமூகத்திற்காக ஒரு முகமும், தனக்காக முகமும் வைத்துக்கொண்டுதான் இருக்கிறாள் என்றே நாம் நினைக்கவேண்டி இருக்கிறது.

தனிமை – அதைக் கடக்க எளிதான அவளுக்கு ஒரு உறவு இருந்தால் எவ்வளவு எளிதாக இருக்கும் நண்பர்களே.

ஆடு புலி ஆட்டம்

யாரென்றே தெரியாதவன் கெடுத்துவிட்டுப் போய்விட்டான். அண்ணன் கணேசன் அடித்து வீட்டை விட்டுத் துரத்திவிடுகிறான். பேருந்தில் பக்கத்தில் பக்கத்தில் நிக்கறவன் இடிக்கறான். கண்டக்டர் கையைத் தொட்டு சில்லரை கொடுக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலே, அழிவு காலத்தில் கை கொடுத்து, படிக்க வைத்து வாழ்க்கைக்கு வழி காட்டிய வெங்கு மாமா பசுத் தோல் போர்த்திய புலியாக வருகிறார். ஜெயமோகன் இந்த நாவலைப் பற்றிக் குறிப்பிடும்பொது வெங்கு மாமாவை தோலுரிக்கப்படும் கதாபாத்திரமாகக் குறிப்பிடுகிறார். ஆணாதிக்க சமூகத்தின் முகமாக வருகிறார் வக்கீல் வெங்கு மாமா.

பெண்கள் ஒருத்தனுக்கே உண்மையா இருக்கனும்னு சொல்றேளே? மகாபாரதத்திலே திரௌபதி அஞ்சு பேருக்கு மனைவியா இருந்தாளே? அதை எப்படி நம்ப சாஸ்திரம் ஒத்துண்டது?

நான் தயங்கித் தயங்கித்தான் கேட்டேன். மாமாவை வசமா மடக்கிட்டோம்னு நினைச்சுக் கேட்டேன்.

அவர் சொன்னார். “நம்ப சாஸ்திரம் அதை ஒத்துக்காததுனாலேதான் அது மாறிப் போயிடுத்து… இன்னொன்னு நீ கவனிச்சியோ? இந்த ‘கான்டக்ஸ்ட்லே’ குந்திதேவியைப் பத்திக் கேக்கணும்னு உன் மனசுலே தோன்றதோன்னோ? எனக்குப் புரியறது. புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் அப்படி புத்திரதானம் பெத்துக்கிறது உண்டுங்கிறதுதான் அதுக்கு அர்த்தமே தவிர அத்தனை பேருக்கும் குந்தி மனைவியா இருந்தாள்ங்கிறது இல்லே. அதுக்கு முன்னாலே பார்த்தா பாண்டுவும், திருதராஷ்டிரனும் வியாச பகவானால் தானம் அளிக்கப்பட்டவர்கள்தான். இதிகாசங்களிலிருந்து சாரங்களைத்தான் எடுத்துக்கிடனுமே தவிர, சம்பவங்களை எடுத்துக்கிடப் படாது!”

இதிகாச பூர்வமாக விளக்கறது மட்டுமில்லாமல் விஞ்ஞான பூர்வமாகவும் விளக்க ஆரம்பிச்சுடுவார் மாமா. மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் எல்லாம் அவர் வாதத்தை நிலை நாட்டறதுக்கு முட்டை கொடுத்துண்டு வந்து நிக்கும். பத்துப் பெட்டைக் கோழிகள் இருக்கிற இடத்துலே ஒரு சேவல் போறும்பார். இவரைப் பொறுத்தவரைக்கும் ஒளிவு மறைவில்லாமல் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதிங்கிறது ரொம்ப நியாயம்னு வாதம் பண்ணுவார்.

சமூகத்தின் டெலிகேட் ஆக இருக்கும் ஒருவர், மறுபுறத்தில் தனது தங்கை மகளான கங்காவைப் பாலியல் ரீதியா சுரண்டும் தருணத்தை ஏற்படுத்த முயல்வதும், அவள் எதிர்க்கும்போதும் அதை உணர முடியாதவராக இருப்பதும், வாசகர்களை ஒரு சமூகத்தைப் பார்த்து பதற வைக்கிறது.

“கங்கா! இங்க வந்துட்டுப் போ”

“என்னைக் கிழவன்னு நினைச்சுண்டுதானே நீ வெறுக்கறே?”ன்னு அவர்  கேட்கிறபோது எனக்குச் சிரிப்பு வரது. எவ்வளவு விஷயங்களிலே மகா மேதையாயிருக்கிற இவர், இந்த விஷயத்தில எவ்வளவு அசடா இருக்கார்னு நினைக்கிறப்போ பாவமா இருக்கு.

ஒரே வாழ்க்கை – இருவர் பார்வைகள்

வெங்கு மாமாவின் ‘நீ கான்குபைனாகத்தான் வாழ முடியும்’ ஏளனத்திற்குப் பதில் சொல்லும் வகையில் தன்னைக் கெடுத்தவனையே தேடிப்பிடிக்கிறாள் கங்கா. அதன் பிறகு ஏற்படும் சிறு சிறு நிகழ்வுகளும் பெரியதொரு தாக்கத்தை வாசகன் மனதில் ஏற்படுத்துகிறது. முதலில் சபல எண்ணத்துடன்தான் அணுகுகிறான்.  கங்காவின் தோளை பிரபு தொடும்போது ச்சீ என்று தன்னை அறியாமலே விலகுகிறாள். அந்த ஒரு கணம் கங்காவின் மீதான பிரபுவின் உறவை முடிவு செய்கிறது.

“என்னைப் பொறுத்த வரைக்கும் நான் செய்ற எந்தக் காரியத்துக்கும் நான் பொறுப்பு இல்லே. ஐ யாம் நாட் ஸோ ஸ்ட்ராங். இந்த என்னோட லிமிட்டேஷன்ஸ் எனக்குத் தெரியும். இந்த மடத்தனம்தான் – இல்லே. புத்திசாலித்தனம்தான் எனக்கு வசதி. என்னைப் பத்தி என்ன பேசலை? – இப்போ புதுசாப் பேசறதுக்கு? பட் – ஆனால் ஐயாம் வொர்ரீட் அபவ்ட் யூ- வீணா உன் பெயர் கெட்டுப்போகுதேன்னுதான் பாக்கறேன். பேர் கெட்டுப் போகலாம். ஆனா அது வீணாகக் கெட்டுப் போகக்கூடாது”

“நான் தொடறதுனாக் கூட பத்மாவுக்குப் புடிக்கலேன்னு தெரிஞ்சப்புறம், அவ எனக்கு யாரோ ஆய்ட்டா. அவ எனக்குப் பொண்டாட்டிதான். அதுக்காக நான் அவளைப் பலவந்தம் பண்ண முடியுமா? ஐ கென் – நாட் ரேப் எனி ஒன்! நோ, ஐ கேன் நாட்”

தினசரி உலக லாவன்யங்களிலிருந்து விடுபட்டுக்கொண்டதாக துறவு வேடம் பூண்டாலும் கங்கா உள்ளே தனக்கான ஒரு சரியான துணைக்காக ஏங்குகிறாள். நம்பிக்கையான ஒரு பற்றுக்கொடியாக பிரபு அமைகிறான்.

சமூகத்திற்கு நல்ல முகத்தைக் காட்டுகிறார் வெங்குமாமா. அவரது மறுபக்கம் பூசணிக்காயில் வரையப்பட்ட திருஷ்டி பொம்மை போல இருக்கிறது. சமூகத்திற்கு மட்டமல்ல, தன் குடும்பத்திற்கே கூட பிரபுவைப் பிடிக்காமல் போகிறது. கங்கா அவன் வாழ்வில் வந்த பிறகு அவனது நல்ல குணங்கள் ஒவ்வொன்றாய் தெரியவருகிறது.

புறப்படறதுக்கு முன்னாடி சொல்றார்: “இவ்வளவுதான் லைஃப்! இட் இஸ் ஆல்ரெடி டிஸைடட். நாமட் ஒண்ணும் இதில் செய்யறதுக்கில்லே. சாகலாம்னா தற்கொலை செய்துக்க முடியலே. எங்கேயாவது எல்லாத்தையும் உட்டுட்டு ஓடிடலாம்னா அதுவும் முடியாது போல இருக்குது. முடியாதுன்னு இல்லே. எல்லாமே முடியும். அதுல எல்லாம் ஒண்ணும் ‘மீனிங்’ இல்லே.. ஸோ! லெட் அஸ் லிவ் தி லைப் வித் டிட்டாச்மெண்ட்! (ஆக, வாழ்க்கையை வாழ்வோம்; பற்றில்லாமல் வாழ்வோம்)”.

ஒரு வகையில் கங்கா மற்றும் பிரபுவின் வாழ்க்கை முழுதும் அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக மனம் புழுங்குகிறார்கள். அந்த காரணத்துடன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில்தான் நாம் புரிந்து கொள்ளவேண்டிய செய்தி உள்ளது என்று எண்ணுகிறேன்.

வாழ்க்கை கொடுக்கும் அடிகளை வாங்கி நைந்து போன பிரபு, வாழ்க்கையை அதன் போக்குக்கு விட்டுவிட்டு, அதற்கேற்ப டர்புலன்சில் ஓடும் பிளைட்டு போல வாழக் கற்றுக்கொள்கிறான். தற்கொலை கூட செய்யலாம்கிற அளவிற்குக் கேவலப்படுகிறவன், கங்காவை ஒரு ஊன்று கோலாகப் பற்றி மேலே வருகிறான்.

கங்காவிற்கு என்னதான் பிரச்சினை? ஈகோ? காம்ப்ளக்ஸ்? என்றெல்லாம் இந்தக் கதை நம் மனதைப் போட்டு பிசைந்து கொள்கிறது. ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது. சுவற்றில் ஓங்கி ரப்பர் பந்தை அடிக்கிறோம். அடிக்கிற வேகத்தில் எதிர் திசையில் ஓடும் பந்துக்கு என்ன பிரச்சினை? ஏன் அவ்வளவு விரைவாக வேறு திசையில் எம்புகிறது. சமயத்தில் அதே வேகத்தில் என்னையே வந்து தாக்குகிறது?

—-

இப்படி எல்லாம் நடக்கிறதா என்கிறார்கள். ‘ஆம்’, ‘ஆம்’ என்கிறது வாழ்க்கை என்று முன்னுரையில் எழுதுகிறார் ஜெயகாந்தன். கதை என்பதை விடுத்து, அதன் வழியாக எத்தணை வாழ்க்கையைப் பார்க்க முடிகிறது என்பதுதான் இந்த நாவலைத் திரும்ப வாசிக்க வைக்கிறது. கங்காவின் உளச் சிக்கலுக்கோ, வெங்குமாமாவின் நடத்தைக்கோ ஜஸ்டிஸ் என்று இந்த அற்ப வாசகனால் எதையும் கொடுக்க இயலாது. நமது தினசரி வாழ்க்கையில் பார்ப்பவர்களில் கங்காவைப் பார்க்க இயலாது போகலாம். ஆனால் அப்படி ஒருவர் இருந்தால்? ஒரு வேளை கணேசன் அல்லது கனகத்தின் இடத்தில் நீங்களோ நானோ இருந்தால் என்ன முடிவு எடுத்திருப்போம்?

For Index: D.Jayakanthan, Renowned Tamil Writer.Photo: V_Ganesan. (Digital Image) 11.9.04.
For Index: D.Jayakanthan, Renowned Tamil Writer.Photo: V_Ganesan. (Digital Image) 11.9.04.

ஈவேரா போலவே ஜெயகாந்தனும் தமிழ் [இந்திய] சமூகத்தின் அறிவார்ந்த மையமாகப் பிராமணச் சமூகத்தையே கண்டார். அவர்களுக்குத்தான் சமூகத்தின் கலைகளையும் சிந்தனையையும் ஞானத்தையும் பாதுகாத்து முன்னெடுக்கும் பொறுப்பு இந்த மரபால் அளிக்கப்பட்டிருந்தது என்று நினைக்கிறார். பிராமணர்கள் அதைத் தங்கள் சுயநலனுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்டனர் என்று ஈவேரா சொன்னார். கிட்டத்தட்ட ஜெயகாந்தனும் அதைத்தான் சொல்கிறார். ஆனால் அவர்களில் உள்ள முற்போக்கான, படைப்புமனம் கொண்ட சிலரை நோக்கி அவர் பேசுகிறார். ஈவேரா போல அவர்களை ஒட்டுமொத்தமாக அழிவுசக்தியாக நினைக்கவில்லை. அவர்களை நம்பி ஒரு மாற்றத்துக்காக அறைகூவுகிறார், அவ்வளவுதான். பிராமணரல்லாத ஜெயகாந்தனின் அந்த விமர்சனங்களை அவர்கள் பெரும்பாலும் ஆக்கபூர்வமாகவே எடுத்துக்கொண்டார்கள்.

-ஜெயமோகன்

 

நாவல் பற்றி

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

வாழ்க பாரதம்.

குருபீடம் – ஜெயகாந்தன்


மிகச் சிறந்த இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைப் பற்றி எழுத இருக்கிறேன். அதில் முதலாவதாக குருபீடம்.

உங்களைப் போன்ற வாசிப்பு ஆர்வம் மிகுந்த நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில் இந்த நூலைப் பரிந்துரைத்தார். அவர் சொல்லி சில நாட்கள் போகவில்லை. ஒரு வாசகர் வட்ட சந்திப்புக்காக நூலகம் சென்றபோது அதே நூல் கண்ணில் பட்டது – குருபீடம்.

இதில் சில கதைகள் மதுரை செயல்திட்டத்தில் படிக்கக் கிடைக்கிறது.
பார்க்க – http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0204.html

குருபீடம்
ஆசிரியர்: ஜெயகாந்தன்
பிரிவு: புனைவு (சிறுகதைத் தொகுப்பு)
பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – பதினைந்தாம் பதிப்பு மே 2012
கன்னிமாரா:
http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=341212
http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=341232
http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=341573
NLB:
http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/FULL/EXPNOS/BIBENQ/2443374/44291995,1

நூல் அரங்கம்

சிறு, குறு மற்றும் நெடுங்கதைகளாக 9 படைப்புகள் இந்த நூலில் உள்ளன.

1. குருபீடம் (1970)

ஒரு வீணன். வெட்டியாகப் பொழுதைக் கழிக்கிறான். டீ வாங்கக்கூட வக்கில்லாத அவனுக்கு மடைப்பள்ளி சமையல்காரன் ஒருத்தன் சீடனாவதாக சொல்லிக்கொள்கிறான். பின்னொரு நாளில்தான் தெரிய வருகிறது, குரு என்று இருக்கும் இவன் சீடனாகவும், சீடனாக இருந்து இவனுக்கு அவன் கற்றுத்தருவதையும். புன்னகைக்க வைத்த ஞானோபதேசக் கதை!

நம்ப ஹீரோவின் அழுக்குத்தோற்றத்தையும், சோம்பலையும் கண்முன்னே கொண்டு வரும் காட்சி அபாரம்.

விரைவாக ஏறி வந்த வெயில் அவன்மீது மெதுவாக ஊர்ந்தது. அவன் தெருவுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு சுவர் ஓரமாகப் படுத்திருந்தான். சத்திரத்துச் சுவரின் நிழல் கொஞ்சங் கொஞ்சமாகச் சுருங்க ஆரம்பித்தது. முதலில் வெயிலின் விளிம்பு அவனது விலாவுக்கும் தரைக்கும் இடையே மெள்ள மெள்ளப் புகுவதை அவனது மதர்த்த தேகம் ரொம்பத் தாமதமாக உணர்ந்தது. வெயிலின் உறைப்பை உணரக்கூடிய உணர்ச்சிக் குறுகுறுப்பு மழுங்கிப் போனதால் ஒரு மலைப்பாம்பு மாதிரி அவன் அசிங்கமாக நெளிந்தான். அந்த வெப்பத்திலிருந்து – அந்த வெயிலின் விளிம்பிலிருந்து ஒரு நூல் இழை விலகுவதற்கு எவ்வளவு குறைவான, மெதுவான முயற்சி எடுத்துக் கொள்ளலாமோ, அவ்வளவே அவன் நகர்ந்து படுத்தான். சற்று நேரத்தில் மறுபடியும் வெயில் அவனைக் கடித்தது. அவனது அசமந்தம் எரிச்சலாகி அவன் தூக்கம் கலைந்தான். ஆனாலும் அவன் எழுந்திருக்கவில்லை. இன்னும் கொஞ்சம் நகர்ந்து சுவரோடு ஒட்டிக் கொண்டான்.

எதிரே இருந்த டீக்கடையிலிருந்து டீ அடிக்கிற சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தில் அவன் டீ குடிப்பது மாதிரி கற்பனை செய்து கொண்டான்.

மறுபடியும் வெயில் அவனை விடாமல் போய்க் கடித்தது. அதற்குமேல் நகர முடியாமல் சுவர் தடுத்தது. ஒரு பக்கம் சுவரும் ஒரு பக்கம் வெயிலும் நெருக்க அவன் எரிச்சலோடு எழுந்து உட்கார்ந்தான். அவனுக்குக் கண்கள் கூசின. ஒரு கண்ணைத் திறக்கவே முடியவில்லை. பீளை காய்ந்து இமைகள் ஒட்டிக் கொண்டிருந்தன.

குருபீடம் - ஜெயகாந்தன்

2. டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும் (1969)

பட்டிணத்தில் நல்ல வேலையிலிருந்த வேதகிரி முதலியாருக்கு வேலை போகிறது. துக்கம் விசாரிக்க வரும் நண்பர்கள் தொல்லையிலிருந்து தப்பிக்க தன் கிராமத்திற்கு வந்து தாயுடன் தங்குகிறார். பட்டிக்காடா பட்டணமா என்று சீர்தூக்கி நல்ல முடிவு எடுக்கிறார்.

செருப்பைக் கழற்றினாலே கால் கூசும் முதல் பகட்டு பட்டிணப் பழக்கத்தையும், கிராமத்து மக்களுக்கு முன் தன் சிரம் தாழ்ந்துவிடக்கூடா என்கிற இரண்டாவது பட்டிணப் பழக்கத்தையும் புன்னகையுடன் இங்கே காண்பீர்.

எதிரே ஆள் வராவிட்டாலும் இந்த நிழலில் போட்டிக்கு ஒரு நாய் வருகிறது. சாதாரண கிராமத்து நாட்டு நாய்தான். ஊர் வழக்கப்படி அதைச் சொன்னால் இப்போதெல்லாம் சண்டைக்கு வந்துவிடுகிறார்கள். ‘பறை, பள்ளூ’ என்கிற வார்த்தைகள் மனசால் கூடத் தீண்டப்படாததாக மாறிவிட்ட பிறகு நாயைக்கூட அப்படிப் பட்டம் கட்டி அழைக்க முடிவதில்லை. ஆனால் இது சரியான ஹரிஜனப் பகுதி நாய்தான். நிழலை மறித்துக்கொண்டு அது நிற்கிறது. அது நிச்சயம் வழிவிட்டு விலகாது. விலகப் போவதில்லை என்கிற தீர்மானம் அதன் திடீரென உயர்ந்த காதுகளிலும் ‘உம்’மென்று வயிற்றுக்குள் அடங்கி ஒலிக்கும் பொருமலிலும் தெரிகிறது. காரணம், நடுவில் இலை கிடப்பதுதான்.

அப்போதுதான் நினைத்தார் வேதகிரி முதலியார்: பொறப்படும் போதே அந்தக் கெழம் – அம்மாதான் – சொல்லிச்சு, ‘குடையை எடுத்துக்கிட்டுப் போடா, வெயில் கொளுத்துது’ன்னு…

பட்டணத்திலிருந்து கிராமத்துக்கு வந்திருக்கும் இந்த மூன்று மாத காலமாக வேதகிரி முதலியார் வெளியே போவதற்குப் புறப்படுகிற போதெல்லாம் அவரது தாயார் செல்லத்தம்மாள் குடை எடுத்துச் செல்லுமாறும் வெயிலின் கொடுமை குறித்தும் ஒரு பாட்டுப் பாடாமலிருப்பதே இல்லை. சில சமயங்களில் அவளே கொண்டு வந்து அவரிடம் கொடுப்பாள். இருப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்பு திருக்கோவிலூருக்கு திருவிழாவுக்குப் போனபோது ஆறு ரூபாய்க்குத் தான் அந்தக் குடையை வாங்கினதையும், அதற்குப் பிறகு ஐந்து வருஷத்துக்கு முன்னால் ஒரு கம்பியும் புதிசாக மேலே வெள்ளைத் துணியும் போட்டுத் தைப்பதற்குத் தான் மூணு ரூபாய் செலவழித்ததையும் குறைந்தது ஒரு பத்துத் தடவையாவது இதுவரை சொல்லி இருப்பாள்.

சரி, நாய்க்குப் பயந்து எத்தனை நாழி இப்படியே நிற்பது? ஒன்று இவர் வெயிலைப் பொருட்படுத்தாமல் ஒதுங்கிப் போக வேண்டும், அல்லது அதை விரட்டி விட்டு இவர் தன் வழியே தொடர்ந்து நடக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் இவர் நின்றிருந்தால் அதுவும் நின்றிருக்குமா என்ன? அதுவோ நாய், அதுவும் காய்ந்து வரண்ட சேரி நாய். எதிரே இலை, இவர் விரட்டமாட்டார், தயங்குகிறார், பயப்படுகிறார் – என்று தெரிந்ததும் அது இவரை விரட்டுகிற தோரணையில் கொஞ்சம் குரலெடுத்து லேசாகப் பற்களை வெளிக்காட்டி ‘உர்’ரென்கிறது.

வேதகிரி முதலியாருக்கு நிஜமாகவே உதறல். மிகுந்த மரியாதையோடு பத்து அடி நிழலிருந்து விலகி வீதியின் நடுவே வெயிலில் வந்து அரைவட்டமாக ஒதுங்கி நாயைக் கடந்து மீண்டும் நிழலில் ஏறி நடந்தார். தான் நாய்க்குப் பயந்து இப்படி வந்ததை யாரும் பார்த்திருப்பார்களோ என்று திரும்பிப் பார்த்தார். ம்ஹீம் யாருமில்லை. அந்த நாய்கூடப் பார்க்கவில்லை. பார்த்தால் என்ன? ‘பட்டணத்துக்காரன் நாயைக் கண்டு பயப்படறான்’ என்று பரிகாசம் பண்ணுவார்களே என்கிற பயம் வேதகிரி முதலியாருக்கு.

அதிலும் அந்த சுப்பராம ஐயர் இருக்கிறாரே, சமயத்தில் அவர் பண்ணுகிற பரிகாசத்தில் முதலியாருக்குக் கோபம் கூட வந்துவிடுகிறது. கோபத்தைக் காட்டிக் கொண்டால் இன்னும் மானக்கேடாகப் போகும். அவரோடு சேர்ந்து கொண்டு முதலியாரின் தாயாரும் சிரிக்கிறாள்.

3. நிக்கி (1970)

சேரியில் நாய் குட்டி போடுகிறது (சேரி, சென்னை என்றால் இவரது விளையாட்டைக் காண கண் கோடி வேண்டும்). தாய் நாய் காணாமல் போய்விட அனைத்து குட்டிகளையும் அவரவர் எடுத்துச் சென்றுவிடுகின்றனர். எஞ்சிய ஒரு பெட்டை நாய்தான் நிக்கி. பல கை மாறி திரும்ப தன் தாய் நிலைக்கு வந்து ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா’ என்று சொல்கிறது.

அந்தக் குடிசைக்குச் சொந்தக்காரி இந்த நாயைக் கண்டு, அதன் மீது பூசிக் கிடக்கும் சேறும் சகதியும் அதற்கே சொந்தம் போன்றும், அது அந்தத் திண்ணையின் மூலையை அசுத்தப்படுத்துகிறது என்றும் கோபித்து, விளக்குமாற்றால் குப்பையைக் கூட்ட வந்தவள் நாயையும் சேர்த்துக் கூட்டித் திண்ணையிலிருந்து தெருவுக்குத் தள்ளினாள். அது கத்தி அலறியவாறு தலைகீழாகப் புரண்டு திண்ணையிலிருந்து தெருவில் வீசி விழுந்தது.

நான் மேலே சிகப்புக் கலரில் கொடுத்துள்ளதைப் படித்திட்டீர்களா. ரைட். அடுத்து….

 

4. ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது (1969)

எளிமையான கரு கொண்ட மனதைத் தொட்ட கதை. திருடிவிட்டு ஒரு காலணிக்குள் சுவர் ஏறிக் குதிக்கும்போது மாட்டிக்கொள்கிறான் திருடன். ஜெயிலுக்குப் போறான். திரும்ப அதே காலணியில் குடி வரான். அவ்ளோதான். ஆனால் அதை படு ஜோராக முடித்துள்ளவிதத்தில்தான் இந்தக் கதை சிறப்புப் பெறுகிறது. இந்த நூலில் எனக்குப் பிடித்த கதை. தொடை நடுங்கி குஞ்சுமணி அய்யர் படு ஜோர்!

“நீதான் இங்கே திருட வந்திருக்கிற புது மாமாவா?… உன்னைப் பார்க்கக் கூடாதுன்னு அம்மா அறையிலே போட்டு மூடி வச்சிருந்தா… அம்மா கூடத்துலே படுத்துத் தூங்கிண்டிருக்கறச்சே நான் மெதுவா வந்துட்டேன். எனக்கு மிட்டாய் வாங்கித் தரயா? திருடிண்டு வந்துடு… அந்தப் பொட்டிக் கடையிலே நெறைய இருக்கு…”

அவன் சிரித்தான். அந்தக் குழந்தையின் கன்னத்தைத் தொட்டபொழுது அவனுக்கு அழுகை வந்தது. அவசர அவசரமாக உடம்பைத் துடைத்துக் கொண்டு இடுப்பில் கட்டிய துண்டோ டு பெட்டிக் கடைக்குப் புறப்பட்டான்.

அவன் போகும்போது அவனது இடுப்புத் துண்டைப் பிடித்து இழுத்து ரகசியமாகச் சொல்லிற்று, குழந்தை: “அம்மா பாத்தா அடிப்பா… சுருக்கப் போய் அவனுக்குத் தெரியாம மிட்டாயை எடுத்துண்டு ஓடி வந்துடு! நான் உங்காத்திலே ஒளிஞ்சிண்டிருக்கேன்…”

அவனும் ஒரு குழந்தை மாதிரியே தலையை ஆட்டிவிட்டுக் கடைக்கு ஓடினான்.

ஒரு நொடியிலே ஓடிப் போய், கை கொள்ளாமல் சாக்லெட்டை மடியில் கட்டிக் கொண்டு அவன் வந்தான்.

திருடன் என்கிற ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு துணை கிடைத்து விட்ட சந்தோஷம் போலும் அவனுக்கு! ‘இது உன் வீடு’ என்ற உரிமையை இந்தச் சமூகமே அந்தக் குழந்தை உருவில் வந்து தந்துவிட்ட ஒரு குதூகலம் அவனுக்கு.

அந்த மகிழ்ச்சியில் ஓடி வந்த அவன், வீட்டுக்குள் குழந்தையைக் காணாமல் ஒரு நிமிஷம் திகைத்தான். ‘யாராவது வந்து அடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டார்களோ?’ என்ற நினைப்பில் அவன் நெஞ்சு துணுக்குற்றது.

“பாப்பா… பாப்பா” என்று ஏக்கத்தோடு இரண்டு முறை அழைத்தான்.

5. தவறுகள், குற்றங்கள் அல்ல (1969)

அந்தக் காலத்து தேஜ்பால் கதை!!

“டியர் மிஸ் தெரஸா” என்ற அவரது குரல் கேட்டு

“எஸ் ஸார்” என்று நிமிர்ந்தாள் தெரஸா.

“புட் டவுன்!  திஸ் இஸ் எ லெட்டர்”

6. அந்த உயிலின் மரணம் (1969)

மரணத் தருவாயில் இருக்கும் வேணுகோபாலன். தனது இறப்பின் துயரத்தைப் பகிர தனது இரண்டாவது மனைவிக்கு உரிமை பெற்றுத்தர துடிக்கும் கதை. எதிர்பாராத முடிவு கொண்டது.

அவரது மரணத்துக்காக அவள் வருந்துவதை விட, அந்த மரணத்துக்கான தன் துயரத்தைக் கூட அவள் பகிரங்கமாகக் காட்டிக்கொள்ள முடியாததற்கே வருந்துகிறாள் என்பதையும் அவர் உணர்ந்தார்.

7. விதியும் விபத்தும் (1969)

மாங்கொட்டை ஞானோபதேசக் கதை. எனக்குப் பிடித்திருந்தது.

பிரக்ஞையற்றுக் கிடப்பது சாவு என்று நினைப்பது பேதமை. பிரக்ஞையுமில்லாமல் வளர்ச்சியுமில்லாமல் கிடப்பதே மரணம். உயிரின் ரகசியமே பிரக்ஞையற்றுக் கிடக்கும் ஊமை நிலையில்தான் அடங்கிக் கிடக்கிறது. அந்த யோகத்தின் உள்ளே நிகழும் இயக்கம் நுட்பமானது, ஆரவாரமில்லாதது.

8. புதுச் செருப்புக் கடிக்கும் (1971)

புது மனைவியுடன் மனஸ்தாபம். நள்ளிரவில் கோபித்துக்கொண்டு பழைய சினேகிதியைச் சந்திக்கப் போகிறான் ஹீரோ. சமூகத்தில் ஒதுக்கப்பட்டவராக இருக்கும் அந்த சிநேகிதி இறுதியில் அப்படி ஒரு பிரமாண்டம் எடுக்கிறார். வ்வ்வாவ்! எனக்குப் பிடித்த கதை.

யாருங்கோ ‘வய்ஃபா’ இருக்கிறதுக்கு டிரென்ட் ஹாண்ட் கேக்கறாங்கோ? இப்ப சொல்றீங்களே – என்னையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்னு. அப்ப ஏங்கோ அது தோணலே? நான் ஏற்கனவே ‘ட்ரெய்ன்ட்’ங்கற ‘டிஸ்குவாலிஃபிகேஷன்’ தாங்கோ அதுக்குக் காரணம்!

இதை படித்தவுடன் யாருக்கு பிபி ஏறாது?

9. எங்கோ, யாரோ, யாருக்காகவோ.. (1970)

பாண்டிச்சேரிக்குச் செல்லும் இரு நண்பர்கள் ‘ஒரு வீட்டை விட்டு இன்னொருவனுடன் ஓடி வந்து, அவனிடமும் ஏமாந்த ஒரு பெண்ணிடம்’ (எவ்ளோ பெரிய மாத்ரே!) பழகுகிறார்கள். எனக்குப் பிடித்த கதை.

“டேய் கிளாஸை நல்லா கழுவிக் கொண்டா” என்று யாரிடமோ கூறினான் கள்ளுக்கடைக்காரன்.

“வேணாம் ஐயா. இதில வாங்கிக்கிட்டுப் போகத்தான் வந்திருக்கோம். இந்த ‘ஜக்’லே எவ்வளவு புடிக்குமோ அவ்வளவு ஊத்துங்க”

“இருக்கட்டும் ஸார். வாங்கிக்கினு போங்க. நான் வாணாம்னா சொல்றேன். நான் பிரியமா என் கையாலே ரெண்டு கிளாஸ் தரேன். எப்பிடி இருக்குதுனு சாப்பிட்டுப் பார்த்தீங்கன்னா எனக்கு அதில ஒரு சந்தோசம் – டேய்ங்கொக்காளா.. சீக்கிரம் கொண்டாடா” என்று அந்தப் பையனைச் செல்லமாகத் திட்டி அதட்டிக் கூவினான்.

….

இதுதான் வாழ்க்கை! இவர்கள்தான் மனிதர்கள்! நாம் நகரத்தில் பார்க்கிற வாழ்க்கை இந்த நாட்டின் வாழ்க்கை அல்ல. அந்த மனிதர்களும் இந்த நாட்டின் பிரதிநிதிகள் அல்ல. நான் எனது நாட்டின் வாழ்க்கையை இங்கேதான் சுவாசிக்கிறேன். ஸ்டேட்ஸில் நீக்ரோக்கள் மாதிரி இங்கே இவர்கள் இருக்கிறார்கள்! இவர்கள்தான் இந்த தேசத்தின் ஆத்மா!

இதில் வரும் கள்ளுக்கடைக் காட்சி வெகு அருமை. அதிலிருந்து ஒரு பகுதியைத்தான் மேலே கொடுத்துள்ளேன். தான் கொடுத்த கள்ளுக்குக் காசு வாங்க மறுக்கும் கள்ளுக்கடை முதலாளி, வெளியே சிகரட் விற்கும் இளம் விதவை, உள்ளே சாக்னாக்கடை வைத்திருக்கும் அலி, கள்ளுப் பிச்சை வாங்கும் வாலிபன், அட அவ்வளவு ஏன், வெளியே தென்னை மரத்தடியில் கள்ளைக் குடித்துக்கொண்டே சல்யூட் வைக்கும் குடிமகன் வரை, அந்த இடம் அவ்ளோ நேட்டிவ்!

இரண்டு சிறுகதைத் தொகுப்பு என்று சொன்னேனே. அடுத்த தொகுப்பை அடுத்த பதிவில் காண்போம். நண்பர்களே.

ஜெய் ஹிந்த்

ஒவ்வொரு கூரைக்கும் கீழே – ஜெயகாந்தன்


இதற்கு முன்னர் நான் பதிந்திருந்த ஜெயகாந்தனின் நீள் கதைகளான (சமயத்தில் எவற்றை நீள்கதைகளில் சேர்ப்பது, எவற்றைக் குறுநாவல்களில் சேர்ப்பது என்று குழப்பம் வந்துவிடுகிறது) சினிமாவுக்குப் போகும் சித்தாளு, இதயராணிக்களும் இஸ்பேடு ராஜாக்களும் போலவே ‘வழுக்கி விழுந்தவர்களுக்கான’ இன்னொரு நீள்கதை இது – ஒவ்வொரு கூரைக்கும் கீழே.

ஒவ்வொரு கூரைக்கும் கீழே
ஆசிரியர்: ஜெயகாந்தன்
பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – ஐந்தாம் பதிப்பு 2011
பிரிவு: புனைவு, நாடகம்
விக்கி: –
ISBN: –
கன்னிமாரா:
http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=329616
http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=329617
NLB:
http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/ENQ/EXPNOS/BIBENQ/17709673?QRY=CTIBIB%3C%20IRN%283942619%29&QRYTEXT=Ovvoru%20ku%CC%84raikkum%20ki%CC%84l%CC%B2e%CC%84

ஒவ்வொரு கூரைக்கும் கீழே

இதயராணியில் எனக்கு அவ்வளவு ஈடுபாடில்லை. அதனால் இந்தக் கதையை சித்தாளுவுடன் இணைத்துப் பார்க்கிறேன். சித்தாளு கம்சலை தன் சினிமா மோகத்தினால் கணவனுடன் ஏற்பட்ட மனத்தாங்களில் சிங்காரம் விசியத்தில் வழுக்கி விழுகிறாள். அவளை மீட்டுக்கொண்டு வருகிறான் கணவன் செல்லமுத்து – கேள்வி – கம்சலை தவறு செய்தவள்தானே என்று கேள்வி வைக்கப்படுகிறது. ஆம். ஆனால் அறியாமல் செய்த தவறுக்கு என்ன தண்டனை கொடுப்பது. அது நியாயமில்லை.

ஒவ்வொரு கூரைக்கும் கீழே என்கிற இந்த கதையும், சித்தாளுவுக்கு ஈடான கதையே. ஏனைய கதைகளைப்போலவே வெகுஜன சமூகத்தின் வாழ்வு முறையில் இன்னொரு கதை. சென்னைப் பட்டினத்து தொகுப்பு வீட்டு ஒண்டிக்குடித்தன வாழ்வு முறையில் ஒரு தாயில்லாத ஏழைப்பெண் மாலதி. தன் வயதின் காரணமாகவும், பேதைமையின் காரணமாகவும் மெக்கானிக் ராஜுவிடம் வழுக்கி விழுகிறாள், அவன் மனமானவன் என்று தெரிந்தும்! பிறகு சிவகுருநாதனுடன் திருமணம் நிச்சயமாகிறது. ராஜுவும் விலகிக்கொள்கிறான். இருந்தாலும் மாலதியும் அவளது மனப்புழுக்கமும்தான் இந்தக் கதை.

இந்தக் கதையின் முக்கியப் பாத்திரம் – மாலதியின் பள்ளி ஆசிரியை பாக்கியலட்சுமி. ஜெயகாந்தனின் ஆவி அவருக்குள் புகுந்துகொண்டு பெண்ணியம் பேசுகிறது. ஆனால் அந்தக் காலத்திற்குத் தேவையான பெண்ணியம்! கணவனை இழந்தவள் பாக்கியம். இழந்த ஒரு வருடத்தில் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறாள். பிறகு கணவனின் முற்போக்கு சிந்தனைகளின் படியும், தனது மீதிக்காலத்திதை ஓட்ட வேண்டியும் ஒரு குஜராத்தியை மறுமணம் செய்து கொள்கிறாள். அதற்காக அவளது மகளால் வெறுத்து ஒதுக்கப்படுகிறாள்.

இதில் ஜெயகாந்தன் வைக்கும் கேள்வி – பாக்கியம் சொற்களாகவே வருகிறது.

‘நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டதில என்னம்மா தப்பு? எனக்கு ஒரு மனுஷத்துணை வேணுமா வேண்டாமான்னு தீர்மானிக்கிற உரிமை என்னோடதா? பிறத்தியாரோடதா?’

‘எனக்குக் கற்பு உண்டா, இல்லையா சொல்லு’

தாய் பாக்கியம் மேல் மகள் கௌரிக்கு வருத்தம். ஒரு பெண்ணே பெண்ணைச் சரியாக புரிந்துகொள்வதில்லை என்று பொரிகிறாள்.

‘நவீனமா வாழத்தெரியலேன்னாலும் வாழறவங்களைப் புரிஞ்சுக்கவும் புத்தி இல்லாத இந்தக் காலத்தப் பி்ள்ளைங்களா இருக்கீங்களே’

‘ஒரு தாயாயிருந்தாலும் ஒரு மகளாக இருந்தாலும் ஒரு பெண்ணின் மனம் புரியாத ஜன்மங்களை, சுயநலப் பிண்டங்கள்தான்னு சொல்லனும்’

விதவை மறுமணம் என்பது இந்தக் கதை எழுதப்பட்ட காலத்தில் வலியுருத்தப்பட்டதே. ஆனால் இதில் மாலதி மாதிரி வழுக்கி விழுந்த விட்டில் பூச்சிகளுக்கான நியாயம் என்ன – திருமணத்திற்குமுன் நடந்தது இறந்த காலம் – திருமணத்திற்குப்பின் தொடங்கும் வாழ்க்கையில் அன்பும் பரிவும் சேர்ந்துதான் பெரிதாகின்றன.

‘கல்யாணத்துக்குப் பிறகுதான் உனக்கும் எனக்கும் பொதுவான வாழ்க்கை தொடங்குகிறது. நாம ரெண்டு பேரும் ஒரு கூரைக்குக் கீழே வாழ்கிற போது நமக்குள்ளே அன்பும், உண்மையும், நேர்மையும் நிலவும்…. ஒவ்வொரு கூரைக்குக் கீழேயும் நம்பிக்கையும் சத்தியமும் தான் விளக்காய் அடுப்பாய் எரிந்து வெளிச்சம் தந்து கொண்டு இருக்கிறது’ – சிவகுருநாதன்

இதுதான் நாட்டாமையின் (ஜெயகாந்தன்) தீர்ப்பு – பக்கா!

‘வருஷா வருஷம் வர்ர வசந்தம், மனுஷாளுக்கு வாழ்க்கையில ஒரு தபா தான் வரும்’

ஒவ்வொரு கூரைக்கும் கீழே

வெல்க பாரதம்!

இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் – ஜெயகாந்தன்


இது வரை எதிர்மறையாக எனது வாசிப்பனுபவங்களை நான் ஏதும் எழுதியதில்லை. எவ்வளவு முயன்றும் ஒரு நல்ல அனுபவத்தை இந்த நூலுக்கு என்னால் அளிக்க முடியாமல் போனதில் எனக்கு வருத்தமே.

இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும்
ஆசிரியர்: ஜெயகாந்தன்
பிரிவு: புனைவு
பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – ஐந்தாம் பதிப்பு 2012
கன்னிமாரா: http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=309797
NLB: http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/ENQ/EXPNOS/BIBENQ/17711118?QRY=CTIBIB%3C%20IRN%2845248152%29&QRYTEXT=Itaya%20ra%CC%84n%CC%A3ikal%CC%A3um%20ispe%CC%84t%CC%A3u%20ra%CC%84ja%CC%84kkal%CC%A3um

wpid-imag0993_1.jpg

நண்பர்களே,

இரண்டு கதைகள், குறுநாவல்கள் என்று வைத்துக்கொள்ளலாம், இந்த நூலில் உள்ளன. முதலில் இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும்.

இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும்

வழுக்கி விழுந்த பெண்கள் மறுவாழ்விற்கான விடுதிக்கு, முன்னால் பாலியல் தொழிலாளியைப் பேட்டிகாணச் செல்கிறார் ஒரு ரேடியோ நிரூபர். அவரையே திருமணம் செய்து கொள்கிறார். அவளது முந்தைய வாழ்க்கை வரலாற்றை கண்ணீர் சொட்டக்கேட்கிறார்.

குடும்பத்துப் பெண் ஒருவர் பாலியல் வியாபாரத்துக்குப் போவதற்கு இவர் சொல்லும் காரணம்..

அதில் அவர் விரும்பி தொடர்வதற்குரிய காரணம்..

ஒரு ஆல் இந்திய ரேடியோ நிரூபர் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்யப் பிடித்திருக்கக் கூடிய காரணம்…

எதுவுமே வலுவற்றவை. தவிற பாலியல் தொழிலாளியும், ஒரு சக மனிதனும் தூய தமிழில் (அதைத் தூய தமிழ் என்று சொல்லக்கூடாது. மொழி பெயர்ப்புத் தமிழ் என்று தான் சொல்லவேண்டும். பொதுவாக மொழிபெயர்ப்பு நூலில்தான் என் இதய ராணியே, என் ராஜாவே.. என்றெல்லாம் வரும்) உரையாடுவது செயற்கையோ செயற்கை. 100 சதம் ஒட்டவேயில்லை.

இந்த இடதுசாரிகள் (கதை எழுதிய நேரத்தில் ஆசிரியர் கம்யூனிச ஆதரவாளரா என்று தெரியாது) பொதுவாக பெண் சுதந்திரம் உள்ளிட்ட எந்த ஒரு புரட்சிக் கருத்துக்களையும் வண்டி வண்டியாகப் பேசக்கூடியவர்கள். ஆனால் mistresses town தனியே இவர்கள் நடத்துவர். இவர்கள் தலைவர்கள் என்று போற்றுவோர் சக பெண்ணை பாலியல் ரீதியாக சுரண்டுவர். கேட்டால் ‘உபதேசத்தை மட்டும் பார், தனி வாழ்க்கையை ஏன் பார்க்கிறாய்’ என்பார்கள். நமக்கெதுக்கு பொதுப்பிரச்சினை!

wpid-imag0994_1.jpg

ஒரு குடும்பத்தில் நடக்கிறது

இது ஒரு வகை என்றால், இரண்டாவதாக வரும் ‘ஒரு குடும்பத்தில் நடக்கிறது’ என்கிற அடுத்த குறுநாவலில் தியாகி அகிலாவைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். மோசடி செய்து திருமணம் செய்கிறான் ஒருவன். ‘தெரிந்தே’ செய்த தவறுக்கு வருந்துகிறான். முதலில் ‘சேர்த்துக்கொண்ட’ பெண் மற்றும் அவள் மூலம் வந்த 3 குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இரண்டாவதாக வந்த ‘தியாகி அகிலா’வின் சம்பளத்தைப் பயன்படுத்திக்கொள்கிறான். காதலில் அதையும் ஒப்புக்கொள்கிறாள் தியாகி அகிலா. பொதுவுடைமை!

இந்த நூலின் முதல்பதிப்பு 1983. பாரதிராஜா புதுமைப் பெண் படம் வெளியிட்டது 1984.

ஜெய் ஹிந்த்

சினிமாவுக்குப் போன சித்தாளு – ஜெயகாந்தன்


1972ல் முதல்பதிப்பு வந்துள்ளது. அதற்கு முன்னரே கண்ணதாசன் இதழில் தொடராக வந்துள்ளது இந்த ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’. அரசியல் ரீதியான ஒரு நூலாகவோ, சினிமா என்கிற மாயை வெள்ளந்தி உழைப்பாளிகளைச் சுரண்டும் நூலாகவோ பல விமர்சனங்கள் இந்த நூலுக்கு இருக்கிறது. ஆம் இது சினிமா நினைப்பால் வாழ்வை அழித்துக்கொள்ளக்கூடாது என்று எழுதப்பட்டிருக்கும் ஒரு curtain raiser ஆக இருந்திருக்கலாம். அல்லது அப்போதைய சினிமா சூழல் கருதி சக பெண்களையும் அவர்தம் குடும்பங்களையும் காக்கும் ஒரு நாவலாக எழுதியிருக்கலாம். ஆனால் அது எல்லாம் இந்த குறுநாவலின் ஒரு பகுதிதான். முதல் பக்கமும் முதல் கடைசிப் பக்கம் வரை இந்த நூலில் இருப்பது செல்லமுத்து என்கிற ரிக்ஷா காரன் தன் மனைவி மீது வைத்திருக்கும் அபரிமிதமான அன்பு மற்றும் காதல்.

சினிமாவுக்குப் போன சித்தாளு
ஆசிரியர்: ஜெயகாந்தன்
பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – ஒன்பதாம் பதிப்பு 2012
பிரிவு: புனைவு, நாடகம்
விக்கி: –
ISBN: –

அப்போதைக்கு எம்ஜிஆரைத் தாக்குவதாக சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது இந்த குறுநாவல். உண்மையைச் சொன்னால் சர்ச்சை எழுவது இயல்புதானே.

wpid-imag0989_1.jpg

வாத்தியாரை நினைத்துக்கொண்டு தன்னிடம் வாழும் மனைவியை நினைத்து மனம் வெதும்பும்போதும் சரி, மனைவியைக் காணோம் என்று பதறும் போதும் சரி, சேராத இடம் சேர்ந்து மனைவி சீரழியலாகாது என்று மீட்கத் துடிக்கும் இடத்திலும் சரி – செல்லமுத்து – வெல்லவே முடியாத முத்து!

கம்சலை – செல்லமுத்துவின் மனைவி. கிராமத்துக்காரி. சென்னைக்கு வந்து சினிமாப் பைத்தியம் பிடித்து சேராத இடம் சேர்ந்தவள்.

இவர்கள் இருவரையும் விடுத்து இன்னும் ஒருவர் குறுகிய நேரம் வந்து இந்நாவலில் குறிப்பிட்ட இடம் பிடிக்கிறார் – அவர் மனோமணி – ஏரியா விபச்சார விடுதி ஓனர்!!

கற்பு தொடர்பான வாசகர் கேள்விக்குப் பதில் கூறும் எழுத்தாளர் இந்த நாவலை மேற்கோள் காட்டுகிறார்

ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு கதையில் வரும் சித்தாள். கணவனுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தாலும், வேறொருவன் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பியும் அவள் படி தாண்டுகிறாள். கதையை முடிக்கும்போது ஜெயகாந்தன் நம்முன் வைக்கும் கேள்வி அவள் இன்னமும் கற்புள்ளவள்தானா என்பது. விவரம் தெரியாத வெகுளி ஒருத்தி ஆழம் தெரியாமல் காலை விட்டதற்குத் தண்டனை கொடுப்பது நியாயம் என்று எனக்குத் தோன்றவில்லை.
கற்பு என்பது – எழுத்தாளர் ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=35556

ஒரு ஆக்கத்தைப் படித்துவிட ஒரு சில மணிநேரங்களே ஆகின்றன. ஆனால் அதைப் பற்றி விவாதிக்கும்தோறும் வெவ்வேறு பார்வைகள் அப்படைப்பின் ஆழத்ததைத் தருகின்றன.

ஒரு சில பார்வைகள் –

சமூகத்தில் நல்ல நிலையிலிருக்கும் சிங்காரம், கம்சலையை விபச்சாரத்தில் தள்ளுகிறான். சமூகத்தில் கீழ்நிலை மக்களின் பிரதிநிதியாகத் தோன்றும் விபச்சார விடுதி ஓனரான மனோமணியோ கம்சலையை மீட்டுச்செல்ல வரும் செல்லமுத்துவைப் பார்த்து மனம் இரங்குகிறாள்.

தன்னைப் பழையசோறு என்று சொல்லிவிட்டாளே என்று மனம் மருகும் செல்லமுத்து, கம்சலை காணாமல் போய்விட்டாள் என்று தெரிந்தபோது, எதுவும் தேவையில்லை. அவள் உடன் இருந்தால் போதும் என்று ஏங்குகிறான்.

சில நேரங்களில் சில மனிதர்கள்!

சினிமாவிற்குப் போன சித்தாளு

பலவீனங்கள்

இது ஒரு ஓரங்க நாடகம். கலப்பு மனம் செய்து, பிறகு கணவன் இறந்ததால் காலத்தாலும், உறவினராலும் கைவிடப்படும் ஒருத்தி மதுவிற்கு அடிமையாகி பிறகு வாழ்வில் பிரள்வதையும் காட்டும் ஒரு நாடகம்.  பிம்ப் வேலை பார்ப்பவனிடம், “ஸ்டெல்லா ஒரு ஏஞ்சல் அவளை நன்றாகப் பார்த்துக்கோ” என்று பார்த்தசாரதி சொல்வதுதான் எனக்கு இன்னும் புரியலை. மானை சிறுத்தையிடம் விட்டு நல்லாப் பார்த்துக்கோ என்று சொல்வது மாதிரி.

ஜெய்ஹிந்த்