எரிபொருள் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க வழி சொல்லுங்க


பெட்ரோல் விலை உயர்வு பயத்தில் புலம்பும் உங்களுடன் நானும் சேர இந்தப் பதிவு.

படுத்துவது யார்? பெட்ரோலா? அரசா?

(c) IndiaTimes
(c) IndiaTimes

பெட்ரோல்/டீசல் விலை ஏற்றம் என்பது பல கட்டங்களையும் பாதிப்பதால் வலுவாய்ந்த அரசியல் ஒன்று எப்போதுமே அதை மையம் கொண்டிருக்கிறது. எண்ணைய் நிறுவனங்களின் வருமானம் – மத்திய மாநில அரசுகளின் வரிவருமானம் – தனிநபர் மற்றும் சரக்கு போக்குவரத்து வருமானம் – என்று பாடாய் படுத்தும் இந்த அரக்கனுக்கு புதிதாக ஒரு கொம்பினை வளர்த்து விட்டிருக்கிறது தனக்கான குழியைதானே தேடிக்கொண்டிருக்கும் காங்கிரசு அரசாங்கம்.  அது எண்ணைய் நிறுவனங்கள் தானே விலையை உயர்த்துவது என்று சிறு குழந்தை கூட சொல்லிவிடும். ஏறிய விலை ஏறியதுதான். குறைய வாய்ப்பே இல்லை என்பது நாம் கண்கூடாக அறிந்தது.

பாதாளம் வரை பாயும் எண்ணைய் – அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் கொடுமை

முழுக்க இறக்குமதியையும் அதற்காக டாலரின் பிருஷ்டத்தையும் தொங்கிக் கொண்டிருக்கும் நம் எரிபொருள் தத்துவம் என்றைக்கு மாறும். தனியார் நிறுவனங்கள் இந்த துறைக்கு நுழைந்திருக்கும் நிலையில் இனி காங்கிரசு அரசோ பா.ஜனதா அரசோ யாரும் இதைக் குறைய விடப்போவதில்லை. அவர்களால் குறைக்கவும் முடியாது. இந்தப் புறாக்களை வளர்த்துவிட்டுவிட்டு நாம் படும் பாடு. அப்பப்பா… பெரிய அக்கப்போறாக அல்லவா இருக்கிறது மக்கள் அனைவரும் 23ம் புலிகேசி மகராஜா கணக்காக புலம்புகிறார்கள். 3 வயதில் பள்ளி செல்லும்போதே நம் பிள்ளைகளை எரிபொருளை கரியாக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் நமது அரசாங்கத்தின் நிலை தெளிவாகத் தெரிகிறது. தினசரி காலியாகும் பொருளில் முதலீடு போட்டால்தானே வருமானம் வரும். அதன் வாயிலாக சாக்கு சாக்காக வரியை வசூலித்துக்கொண்டிருக்கிறது. அங்கே டீசல் எண்ணையில் வரும் மாற்றம் கடலை எண்ணைய் விலையில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு மானியம் வழங்கத்தெரிந்த அரசிற்கு சமையலரை எரிவாயு மானியம் சுமையாக உள்ளது. ஆக எரிபொருள் விலை உயர்வு இந்தியாவின் ஒவ்வொரு வீட்டு சமையலரையிலும் பட்டாசு கொளுத்திப் போடுகிறது.

அரசு எவ்வழியோ மக்கள் அவ்வழி என்று அரசாங்கம் மக்களை தன் பாதையில் திருப்பி அவர்களை வழிப்பறி செய்து கொண்டு உள்ளது.  கால்கிலோ நாவாய் பழம் (நவ்வாப் பழம்) கால் கிலோ 50 ரூபாய். என் காதுகளை என்னாலே நம்ப முடியவில்லை. சரி சீசன் சரியில்லைன்னு விடலாம். ஒரு பொட்டலம் ஈச்சம்பழம் 10 ரூபாய்.  தனிநபர் வருமானம் 5 இலக்க எண்ணாக சமீபத்திய நாளேட்டுச் செய்தி காட்டுகிறது. யார் யாருக்கு என்றுதான் தெரியவில்லை.

உருப்பிடாத அரசின் இல்லாத சைக்கிள் பாலிசி

bikes (c) http://media.treehugger.com
Bikes (c) http://media.treehugger.com

அந்தந்த நாடுகளின் கரன்சியில் வியாபாரம் செய்தால் இதன் தாக்கம் கொஞ்சம் குறையலாம் என்கிறார்கள். அது எல்லாம் போகட்டும். ஒவ்வொரு பாக்கெட்டையும் குறி வைத்து அரசாங்கத்தாலும் அதன் பிண்ணனியில் தனியார்-பொதுத்துறை எண்ணைய் நிறுவனங்களால் ஏவப்பட்டுள்ள இந்த எரிகணையை கொஞ்சமாவது குறைக்க சைக்கிள் உதவுமா என்றால் கண்டிப்பாக உதவும். பழையபடி சைக்கிளை அழுத்தி வியர்க்க விருவிருக்க ஆபீசு போவதா என்று எனக்கும் கொஞ்சம் அயற்சியாகத்தான் உள்ளது என்றாலும் அரசாங்கத்தின் மரமண்டையில் பணம் வரி என்கிற சிந்தனையிலிருந்து சைக்கிளுக்காக ஒரு பாலிசி செய்து கொடுத்தால் கண்டிப்பாக ஒவ்வொருத்தருக்கும் சைக்கிள் என்பது மிக்க பயனுள்ளதாகவும் பணத்தை மிச்சப்படுத்துவதாகவும் அமையும். ஆனால் துரதிருஷ்ட வசமாக அதற்காக எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இத்தணைக்கும் இது ஒன்றும் புதிது இல்லை. கோடி கோடியாக செலவு செய்து வெளிநாடு சென்று நம் நாட்டை முன்னேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள
பிரதமர் மன்மோகன் –
சரித்தர தலைவி – வீட்டு நபர்கள் பால் கிரிமினல் வழக்குகள் இருந்த காலத்தில் இந்தியாவின் முதன்மைப் பெண்மணியாக இருக்க இவர்தான் தகுதியானவர் என்று சூத்திரதாரி சோனியாவால் முன்மொழியப்பட்ட ரிடையர் ஆகப்போகும் ஜனாதிபதி பிரதீபா பாடீல்
பிரச்சினை வரக்கூடிய இடத்தில் தன்னுடைய விசுவாசியான பெண்களை வைத்து தாயம் ஆடுவது காங்கிரசுக்கு வழக்கம்போல. அப்படி சபாநாயகர் ஆன மீராகுமார்
மற்றும் ஏனைய அமைச்சர் பெருமக்கள்…
இவர்கள் ஒருத்தருக்குக் கூடவா வெளிநாடுகளில் சைக்கிளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் தெரியவில்லை?

இளமை மாறா சைக்கிள் உலகம்
பிரயாணங்களில் சைக்கிளைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாதது ஏன் என்று புரியவில்லை. என்ன பெரிய அசவுகரியம் வந்துவிடப்போகிறது இவர்களுக்கு? ஒரு சில எடுத்துக்காட்டுகளை எடுத்துக் கொள்வோம்

1. திருச்சியிலிருந்து ரயில் அல்லது பேருந்து பிடித்து ஈரோடு செல்கிறார் ஒரு ஜவுளி வியாபாரி. இறங்கி நகரப்பேருந்து ஆட்டோ என்று அக்கப்போர்களுடன் துணி வாங்கி லாரியில் பார்சல் போடச்சொல்லி திரும்ப அக்கப்போர்களைப் பிடித்து வீடு வந்து சேர்கிறார்

2. புதுகைக்கு உரம் பூச்சி மருந்து வாங்க செல்கிறார் எங்க ஊர் விவசாயி. தினசரி இருவேளை மட்டுமே வரும் பேருந்தினை காலையில் பிடித்து புதுக்கோட்டை பேருந்து நிலையம் சென்று பொடி நடையாகச் சென்று வாங்க வேண்டியதை வாங்கி.. வந்தது வந்தோம் அதையும் வாங்கிவருவோம் என்று மளிகை ஜமான்களையும் வாங்கி கையில் ஒன்று தலையில் ஒன்று என்று என்று தூக்கி பேருந்து நிலையம் வந்து பக்கத்து ஊர் வண்டியைப் பிடித்து இறங்கி சொந்த ஊருக்கு திரும்ப போர்ட்டர் வேலையைத் தொடர்கிறார்

3. சென்னை தாம்பரத்தில் சைக்கிளைப் போட்டுவிட்டு அதற்கு காசு அழுது ரயில் பிடித்து கோடம்பாக்கம் இறங்கி நடைப்பயணமாக மீனாட்சி கல்லூரி செல்கிறார் ஒரு மாணவி.

4. நாள் முழுக்க காரில் பயணம் செய்துவிட்டு வீட்டில் சைக்கிளிங் எந்திரம் வாங்கிப் போடுகிறார் இன்னொருத்தர்

5. பல்லவனைப் பிடித்து சென்னை வந்து ஆட்டோ கால்டாக்சியில் வேலை முடித்து ராக்போர்ட்டில் திருச்சி திரும்பும் லோக்கல் தொபுலதிபர்!

இவர்களுக்கு நாளையிலிருந்து அரசாங்கம் செய்து தரும் வசதியால் இப்படிப் போனால்…?

Cycle Stand on a Railway platform
Cycle Stand on a Railway platform

1. வீட்டு வாசலில் சைக்கிளில் ஏறி திருச்சிப் பேருந்து நிலையம் சென்று திருச்சியிலிருந்து ரயில் அல்லது பேருந்து பிடித்து சைக்கிளுடன் ஈரோடு செல்கிறார் ஒரு ஜவுளி வியாபாரி. இறங்கி  சைக்கிளை எடுத்து துணி சந்தை சென்று துணி வாங்கி லாரியில் பார்சல் போடச்சொல்லி திரும்ப சைக்கிளுடன் வீடு வந்து சேர்கிறார்

2. புதுகைக்கு உரம் பூச்சி மருந்து வாங்க செல்கிறார் எங்க ஊர் விவசாயி. தினசரி இருவேளை மட்டுமே வரும் பேருந்தினை காலையில் பிடித்து சைக்கிளுடன் புதுக்கோட்டை பேருந்து நிலையம் சென்று இறங்கி சைக்கிளை மிதித்துச் சென்று வாங்க வேண்டியதை வாங்கி.. வந்தது வந்தோம் அதையும் வாங்கிவருவோம் என்று மளிகை ஜமான்களையும் வாங்கி கேரியரில் வைத்து பேருந்து நிலையம் வந்து பக்கத்து ஊர் வண்டியைப் பிடித்து இறங்கி சொந்த ஊருக்கு ஜமான்களை சைக்கிளில் வைத்து பயணத்தைத் தொடர்கிறார்

ரயில் பெட்டியில் நான்கு சைக்கிள்களை நிறுத்தலாம் என்கிற குறியீடு
ரயில் பெட்டியில் நான்கு சைக்கிள்களை நிறுத்தலாம் என்கிற குறியீடு

3. சென்னை தாம்பரத்தில் சைக்கிளை ரயிலில் வைத்து பூட்டிவிட்டு  கோடம்பாக்கம் இறங்கி சைக்கிளில் மீனாட்சி கல்லூரி செல்கிறார் ஒரு மாணவி.

4. சைக்கிளிங் செய்யும் நேரத்தில் சைக்கிளில் சென்று கீரை காய்கறி வாங்கி வருகிறார் 🙂

மடக்கி இருக்கைக்கு அருகையிலேயே வைக்கப்பட்டுள்ள சைக்கிள்
மடக்கி இருக்கைக்கு அருகையிலேயே வைக்கப்பட்டுள்ள சைக்கிள்

5. பல்லவனில் சைக்கிளுடன் ஜம்மென்று ஏறி அதன் வழி வேலைகளை முடித்து வீடு வந்து சேர்கிறார்.
ஆக.. இது எல்லாம் சாத்தியமா? நமது மன்னர்களுக்கு ஞானோதயம் வந்தால் சாத்தியமே. சைக்கிளில் கண்டுபிடிப்புகள் என்பது கியர் சைக்கிளுடன் நம்ப ஊரில் முடிந்துவிட்டது. அதையும் தாண்டி எளிதாக மிதிக்கும் வகையிலும் – மடக்கக்கூடிய வகையிலும் – தானே நகரக்கூடிய வகையிலும் பல நாடுகளில் ஓட்டிக்கொண்டுதானே உள்ளனர்?

மடக்கக்கி எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய சைக்கிள்
மடக்கக்கி எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய சைக்கிள்

வெள்ளையர்கள் நம்மை ஆண்டதால் அவர்களிடம் உள்ள இந்த நல்ல விதிகளைக் கூட காப்பியடிக்க நம் அரசர்கள் மறுக்கிறார்களோ?
பேருந்தில் சைக்கிள் – http://www.tfl.gov.uk/roadusers/cycling/11701.aspx#page-link-bus
ரயிலில் சைக்கிள் – http://www.nationalrail.co.uk/passenger_services/cyclists.html
ஐரோப்பிய நாடுகளைக் கிழித்துச் செல்லும் யூரோஸ்டார் ரயிலில் – http://www.eurostar.com/UK/uk/leisure/travel_information/at_the_station/bicycles.jsp
சூத்திரதாரி சோனியா காந்தியின் சொந்த நாடானா இத்தாலியில் – http://www.slowtrav.com/italy/bike/sw_trains.htm

தானே ஓடும் சைக்கிள் BSA வழங்குகிறதாம்! – http://www.bsahercules.com/Hercules-Hivolt.asp

ரேடியோவே அழிந்துவிடும் என்கிற நிலை இருந்த பொழுது அரசின் FM கொள்கை ரேடியோக்களை புதிய நிலைக்குக் கொண்டு சென்றது. அது மாதிரி ஒரு அதிசயம் சைக்கிளுக்கும் நடந்தால் நல்லது. ம்ம்.. கனவு காண்போம். பணத்தைப் பற்றியே சிந்திக்கும் வியாபாரிகளைத் தாண்டி சாலையில் நடந்து செல்லும் பாமரனுக்காகவும் மத்திய மாநில அரசுகள் இத்தகைய உதவிகளைச் செய்து தரும் என்று.

 

2 thoughts on “எரிபொருள் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க வழி சொல்லுங்க

  1. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
    நன்றி

    வலையகம்

Leave a comment