Launch Pad|Shelly Bryant


‘அதைப் பார்த்தாயா’ தந்தை கேட்டார்
‘எதை’ திரும்ப ரோபோ கேட்டது. அம்மா செய்தித்தாளை வாசித்தபடியே, இங்கு நடப்பதை உள்வாங்கிக் கொண்டிருந்தார்.
‘செய்தியில் காட்டிய வீடியோவை’ ரோபோவைப் பார்த்தபடியே சொன்னார் தந்தை.
‘இல்லை நான் பார்க்கவில்லை’
‘அவர்கள் தென்னிந்தியக் கடலில் மீண்டுமொரு தீவு அமைக்கப் போகிறார்களாம். 2042ல் முடித்துவிடுவார்களாம்.’
‘ஆம். நான் கேட்டேன்.’
தந்தை, ரோபோவை இன்னும் கூர்ந்து பார்த்தார். ‘நீ பார்க்கவில்லை என்று இப்பொழுதுதான் என்னிடம் சொன்னாய்.’ தாய் நடுக்கத்துடன் தன் புருவங்களின் கீழே தன் கணவரைப் பார்த்தாள்.

Launch Pad
Author: Shelly Bryant
Publisher: Epigram Books, Singapore.
இரவல் வாங்க: NLB | கன்னிமாரா

launchpad shelly bryant

ஷெல்லி ஒரு மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர். ஷாங்ஹாய் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். சிங்கையைப் பின்புலமாகக் கொண்டு அவர் எழுதிய 13 அறிவியல் புனைகதைகள் இதில் உள்ளன. 2017 எழுத்தாளர் திருவிழாவில் இவருடைய நூல் அறிமுகத்தில் இவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

shelly bryant.jpg

பல்லின கலாச்சாரம், அறிவியல், பணியாளர்கள் என்று எத்தனை முறை இதே சரக்கை வைத்து இங்கே ஓட்டுவது? படிக்கலாம். தவறில்லை.

இருதயம் என்பது எனக்கில்லை..
இருந்தும் லஞ்சம் வாங்கவில்லை
ஓ மனிதா.. மனிதா.. ஓ மனிதா
அந்த இருதயம் என்பது இருந்தும்
லஞ்சம் வாங்காமல் நீ தூங்கவில்லை
ஓ மனிதா.. மனிதா.. ஓ மனிதா
இருதயம் இன்பது இல்லாவிட்டால் இப்படி லஞ்சம் வருமா
இருதயம் இல்லா மனிதரை மட்டும் இனிமேல் படைத்திடு ப்ரம்மா

என்று 4 வரியில் வைரமுத்துவால் கீற முடிகிறது. அந்த எதிர்பார்ப்பில்தான் நாம் ஒவ்வொரு நூலின் உள்ளே போகிறோம். அதை பூர்த்தி செய்ய வேண்டியது புனைவாளர்களின் பொறுப்பு.

மீண்டும் ஒரு நூல் அறிமுகத்தில் சந்திப்போம் நண்பர்களே.

Advertisements

நீர்க்கோலம் | ஜெயமோகன்


“நான் இவர்களை அறிவேன். கீழ்மையில் மகிழ்ச்சியை கண்டடைபவர்கள். ஏனென்றால் மேன்மையில் ஏறி மகிழ்ச்சிகொள்வது கடினமானது. உளப்பயிற்சியும் ஒழுங்கும் தேவையாவது. கீழ்மையின் உவகை அதுவே தேடிவந்து பற்றிக்கொள்ளும். அலையென அடித்துச்செல்லும். ஆனால் அது அளிக்கும் இழிவுணர்வால் எப்போதேனும் மேன்மையை கொடியென தாங்கி கூச்சலிடுவார்கள் இவர்கள்”

நீர்க்கோலம் – ஜெயமோகன்
இணையத்தில் வாசிக்க

நீர்க்கோலம் – 97 அத்தியாயங்கள் என்று பார்த்த உடனேயே, இவரை எல்லாம் குண்டர் சட்டத்தில் தூக்கிப் போட ஆளில்லை என்கிற ஆயாசத்தோடுதான் உள்ளே நுழைந்தேன்.

12 வருட கானக வாழ்வை நிறைவேற்றிவிட்டு, 1 வருட கண்ணாமூச்சி வாழ்க்கையை இந்நாவலில் முடிக்கிறார்கள்.

கண்ணாமூச்சி வாழ்க்கையை கிரகணத்திற்கு ஓப்பீடு செய்து, நளசரித்திரம் ஊடுபாவாக இந்நாவல் முழுக்க வருகிறது. உண்மையில் 97 அத்தியாயங்கள் இதற்குக் குறைவு. குறைந்த பட்சம் இரு நாவலாவது தேவைப்படும். மகாபாரதம் இதற்காக விராடபர்வம் என தனியே ஒரு பர்வத்தை ஒதுக்கி உள்ளது. அத்தோடு சேர்த்து சுபாஷினி, கஜன், ஆபர், முக்தன், சம்பவன் என்று இந்நாவலின் ஊடு பாவுகளில் செரிந்திருக்கும் ஜெயமோகனின் புனைவுப் பாத்திரங்களுக்கு வேறு இடம் தரவேண்டும்.

நிற்க,
விராட பர்வத்தைச் சிறிதே மாற்றிக் கொள்கிறார். பாண்டவர்களின் பெயர்களை தமிழ் சூழலுக்கேற்ப மாறியிருக்கிறது. மாடு மேய்க்கும் சகதேவன் நீர்க்கோலத்தில் அருக கணிஞர் அரிஷ்நேமி என்று மாறியிருக்கிறான். சகதேவனைத் தவிர, பிறர் அனைவருக்கும் இந்நாவலில் இடம் இருக்கிறது.

குங்கனாக தர்மன். வளவனாக பீமன். பிருஹன்னளையாக அர்ஜுனன். கிரந்திகனாக நகுலன். அரிஷ்டநேமியாக சகதேவன். சைரேந்திரியாக திரௌபதி.
குங்கனாக தர்மன். வளவனாக பீமன். பிருஹன்னளையாக அர்ஜுனன். கிரந்திகனாக நகுலன். அரிஷ்டநேமியாக சகதேவன். சைரேந்திரியாக திரௌபதி.
பாண்டவர்களுக்கெதிரான போரில் இளவரசன் உத்தரனுக்கு தேரோட்டியாக பிருஹன்னளை.
பாண்டவர்களுக்கெதிரான போரில் இளவரசன் உத்தரனுக்கு தேரோட்டியாக பிருஹன்னளை.
அஞ்ஞாத வாசம் முடிந்ததும் விராடர், உத்தரன், தருமன்.

 

பீமன் – திரௌபதி உறவு

ஐவரிலும், பீமன் திரௌபதிக்கு உள்ளவனாக, உவப்பவனாக வருகிறான். தொடர்ச்சி முதலே ஜெயமோகனின் பீமன் அவளுக்கு களியாட்டுத் தோழனாகவும், அகம் பகிரத் தகுந்தவனாகவும் வருகிறான். அதுதான் பொருந்திப் போவதாகவும் எனக்குத் தோன்றுகிறது. அர்ஜுனன் மீது அதிக அன்பு வைத்ததால், திரௌபதி மலையேற்றித்தின் போது முதலில உயர் துறக்கிறாள் என்கிற புனைவை எண்ணிப் பார்த்தால் சற்றும் பொருந்தவில்லை. பாரதியில் எழுந்த பீமன்தான், துகிலுரிதலின் போதும் தருமன் கையை எரிக்கக் கொள்ளிக் கட்டை கேட்கிறான். அர்ஜுனன் அல்லன். வனவாசத்தில் திரௌபதியைச் சிறுமைப் படுத்தும் ஜெயத்ரதனை நையப் புடைப்பவனும் பீமனே.

விடிந்த பின்னரே அவளால் காட்டுக்குள் செல்ல முடிந்தது. சுனைக்குச் சென்று நீராடி மீள்கையில் தன்னுள் இருந்துகொண்டே இருந்த அச்சத்தையும் பதற்றத்தையும் உணர்ந்தபோது ஓர் எண்ணம் எழுந்தது. பீமன் இல்லாதபோது தான் அரசி அல்ல. இக்காடுகளை, விலங்குகளை, மானுடரை, விண்ணோரை, ஒருகணமும் அஞ்சியதில்லை. அடுத்த பொழுது உணவென்ன என்று எண்ணியதில்லை. விரும்பிய ஒன்று கைப்படாதிருக்கக்கூடுமென்று ஐயம் கொண்டதே இல்லை. அங்கு இந்திரப்பிரஸ்தம் என்றும் அஸ்தினபுரியென்றும் காம்பில்யமென்றும் எழுந்துள்ள பெருநகரங்களல்ல. அறமுணர்ந்தவனோ வில்லெடுத்தவனோ இணைத்தம்பியரோ அல்ல. தந்தையோ உடன் பிறந்தவனோ அல்ல. பீமன் ஒருவனால் மட்டுமே பேரரசியென்று இப்புவியில் நிலை நிறுத்தப்பட்டேன்.

நீர்க்கோலம் – 35

இந்நாவலில் கூட, பிற பாண்டவர்கள் அமர்ந்திருக்கையில், திரௌபதியை நீராட்ட அழைத்துச் செல்கிறான். அஞ்ஞாதவாசத்திற்கென அறுவரும் பிரிந்து செல்கையில் கூட, பீமன் அவளைத் தனித்து விட மறுக்கிறான்.

ஐவரும் திரௌபதியும் தனித்தனியாக கிளம்பி நிஷத நாட்டிற்குள் செல்வது நன்று என்று தருமன் சொன்னபோது பீமன் உரத்த குரலில் “நானும் தேவியும் இணைந்தே செல்கிறோம். அல்லது நம்மில் ஒருவர் தேவியுடன் இருக்கட்டும். இதுவரை நாம் அவளை தனியாக விட்டதில்லை” என்றான். தருமன் முகம் சுருங்க “நானும் அதை எண்ணினேன். அவள் இதுவரை மாற்றுரு கொண்டதே இல்லை. தன் புதிய உருவுடன் விழிகளுக்குமுன் அவள் இறங்கிச் செல்லட்டும். இங்கிருந்து நிஷத அரண்மனை வரை சென்று சேர்வது தன்னை உருமாற்றிக்கொள்வதற்கான பயிற்சியாக அமையும்” என்றார்.

பீமன் மீண்டும் சொல்லெடுப்பதற்குள் திரௌபதி “அரசர் கூறுவதே உகந்தது என்று நானும் எண்ணுகிறேன். என் புதிய முகத்தை நான் தனித்தே பயில விரும்புகிறேன்” என்றாள். பீமன் “ஆனால்…” என்று சொல்லத் தொடங்க “சைரந்திரி ஆணை அறியாத கன்னி. உங்களை கணவனென எண்ணமாட்டாள், இளையவரே” என்றாள் திரௌபதி.

நீர்க்கோலம் – 19

பீமனுக்கு முழுக்க விளங்கவில்லை. எனக்கு சுத்தமாகவே விளங்கவில்லை. (ஆணை என்பதை ஆண்+ஐ என்றுப் பிரித்துப் படிக்கச் சொல்கிறார் ஒரு நண்பர். விவகாரமாக வருகிறது.) இது பற்றி வேறெவரும் விரிவாகப் பேசியிருப்பதாகவும் தெரியவில்லை. கீசகன் திரௌபதியை அவமதிக்கும் செயலின் போதும் திரௌபதிக்காக பீமனே பழி தீர்க்கிறான்.

ஜீமுதனை மல்யுத்தம் செய்து கொல்லும்போது, அந்தப் போரில் முழுவதும் கரைந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள் திரௌபதி. இப்படிப் பல தருணங்களில் திரௌபதி-பீமன் உறவு மிளிர்கிறது.

கீசக வதம்

எப்பிழையையும் பொறுத்துக்கொள்ளும் பெண்களின் கனிவின் மேல்தான் ஆண்களின் ஆணவமும் அடங்காமையும் அறப்பிழையும் நின்று கொண்டிருக்கின்றன.”

DHANU_Bhima_kills_kichaka

கீசகனின் வதம் பற்றிப் பேசி நமக்கு ஆகவேண்டியதொன்றுமில்லை. ஆனால் அவன் பீம மல்லனிடம் சிக்கி உயிர் துறப்பதற்கு முன்னர் நிகழ்பவை ருசிகரமானவை. கீசகனால் அவமதிக்கப்பட்ட பிறகு (அவள் molest செய்யப்பட்டதாக வட இந்திய உரை சிலவற்றில் வருகிறது. ஆனால் ஜெயமோகனின் திரௌபதி அவனிடம் தனியாக சமரிடுகிறாள்), விராட அரசரிடம் நீதி கேட்டுப் புலம்புகிறாள் திரௌபதி.

Draupadi_humiliated_RRV
கீசகனின் அவமதிப்பை விராடரிடம் முறையிடும் திரௌபதி

தருமன் அதை எதிர்கொள்ளும் விதம் சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளதாக உணர்கிறேன்.

– அஞ்ஞாத வாசத்தின் விதிகளையும், ஒருவேளை அதை வழுவினால், திரும்ப 13 வருடங்கள் காட்டில் அலையவேண்டியதையும் நிறுத்தி, தருமன் செய்தது நியாயமே என்று தருமனின் பக்கமும்,

– அதே கூந்தலை துச்சாதனன் இழுத்தான், ஜெயத்ரதன் இழுத்தான். இப்பொழுது கீசகன் இழுக்கிறான், அறைகிறான், எட்டி உதைக்கிறான். உன்னைக் கட்டிய பாவத்திற்கு இன்னும் எத்தனை பேரிடம் நான் சீரழிய வேண்டுமோ என்று திரௌபதி பார்வையிலும் நாம் உணர முடிகிறது.

சைரேந்திரியை அவமதிக்கும் கீசகன்
சைரேந்திரியை அவமதிக்கும் கீசகன்

பன்னிரு படைக்களத்தில் தருமன் சொல்வதை நினைவிற்குக் கொண்டு வருகிறேன்.

“இளையவனே, நான் எவ்வாறு கருதப்படுகிறேன் என்பதல்ல எனது வழியை அமைப்பது. என்னை எங்கு நான் வைக்க வேண்டுமென்று முடிவு செய்வது நான் மட்டிலுமே. எந்நிலையிலும் நூற்றைவருக்கும் மூத்தவன் மட்டுமே. அதன் பிறகே நான் அரசன்”

பன்னிரு படைக்களம் – 77

நண்பர்களே, இரு அவைகளில் அவமதிக்கப்பட்டு நிற்கிறாள். தன் நிமிர்வின் பொருட்டு, தன் மணத் தளையின் பொருட்டு.

இரு நிகழ்விலும் அவளை மீட்பவர்கள் பெண்களாக, அதுவும் அடுத்த தலைமுறையினராக இருப்பதாக புனைகிறார் ஜெயமோகன்.

துரியோதனன் அரியணை விட்டெழுந்து ஓடிச்சென்று இரு கைகளையும் விரித்து தன் புதல்வியை மறித்து “கிருஷ்ணை, நில்! எங்கே செல்கிறாய்?” என்றான். அன்னைப்பன்றி என எரியும் விழிகளுடன் அவள் உறுமினாள் “விலகி நில்! மூடா. உன் நெஞ்சு பிளந்து குருதி உண்பேன்!” அவன் கால்தளர்ந்து நடுங்கும் கைகளுடன் விலக அவள் ஓடிச்சென்று திரௌபதியை தழுவிக்கொண்டாள்.

– திரௌபதி துகிலுரியப்படல் – பன்னிரு படைக்களம் – 87

துரியோதனனின் புதல்வி கிருஷ்ணை அஸ்தினபுரியிலும், விராடரின் புதல்வி உத்தரை விராட புரியிலும் திரௌபதியைக் காப்பதாக வெண்முரசு புனைகிறது. இரண்டிலும் கணவர்கள் கல்லென்று நிற்கின்றனர். ஒன்று சூதின் தர்மம். இன்னொன்று அச்சூதின் விளைவான தண்டனையின் தர்மம். மனோதர்மத்தை வெளிப்படுத்துபவர்கள் கிருஷ்ணையும், உத்தரையுமே.

ஏவலர் பின்னால் ஓடிவர உள்ளே வந்த உத்தரை “என்ன நடக்கிறது இங்கே? பெண்ணை அவையில் பற்றி இழுக்க இந்த கீழ்மகனுக்கு இடம்கொடுத்தவர் எவர்? தந்தையே, நீங்களா?” என்றாள். “எண்ணிப் பேசு சொற்களை” என்று கையோங்கியபடி கீசகன் அவளை அணுக அவள் தன் குறுவாளை எடுத்து தன் கழுத்தில் வைத்துக்கொண்டாள். “தந்தையே, நம் குடித்தெய்வம்மேல் ஆணை. இப்போதே இந்தச் சிறுமகன் அவை நீங்கவேண்டும். நாளை நம் குடியவையில் இவன் செய்தவற்றுக்கு ஈடு சொல்லவேண்டும். உங்கள் ஆணை இக்கணமே எழவேண்டும். இல்லையேல் இங்கேயே சங்கறுத்து விழுவேன்.”

– கீசகன் திரௌபதியை அவமதித்தல் – நீர்க்கோலம் – 71

உத்தரைக்கு நடன ஆசிரியராக பிருஹன்னளை
உத்தரைக்கு நடன ஆசிரியராக பிருஹன்னளை

வஞ்சிக்கப் பட்டவள். பெண் என்பதாலேயே முழுதும் இழந்தவள். மீண்டும் மீண்டும் வந்து அறையும் ஓயாத அலைகளைப் பிளந்து நிற்கும் குன்றானவள்.

மிருகியின் விழிகளில் ஐயம் எஞ்சியிருந்தது. ஆனால் “ஆம், உனது உடல் உனக்கு என்றும் பெரிய இடரே. எவ்விழியும் வந்து இறுதியாக நிலைக்கும் தோற்றம் உனக்கு அமைந்துள்ளது. அரசகுடியினர் உன்னை விரும்புவர். அவர்கள் விரும்புவதனாலேயே இடர்களுக்குள்ளாவாய். தோள்களை குறுக்கிக்கொள். குரலெழாது பேசு. ஒருபோதும் அரசகுலத்து ஆண்கள் சொல்லும் சொற்களை நம்பாதே” என்றாள். திரௌபதி “இனி நம்புவதில்லை” என்றாள்.

நீர்க்கோலம் – 35

மீண்டுமொரு சூது!

சூதில் அனைத்தையும் இழந்தபின்னரும், திரௌபதியின் சினத்திற்குப் பதில் சொல்ல இயலாத பின்னரும், குங்கன் (தருமன்) விராடருடன் நாளெல்லாம் சூதாடுகிறான். குங்கனை யாரென்று அறிந்த அமைச்சர் ஆபர் பொறுமை இழந்து சினத்துடன் குங்கனை ஏசுவற்காக, நளன் ஆடிய சூதின் விளைவைச் சொல்கிறார்.

தருமன் ஆடிய சூது. நளன் ஆடிய சூது. இரண்டுமே உடன்பிறந்தார்களுக்குள் நிகழ்ந்தவை. இரண்டுமே நிலத்தின் பொருட்டு நிகழ்ந்தவை. இரண்டிலுமே சூதுத் திறமை பற்றிப் தன்னம்பிக்கை கொண்டவர்கள் முற்றிலும் தோற்றார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் ஆடப்படுகிறது சூது, ஒரு பெரும் போரைத் தள்ளி வைப்பதற்காக.

“என்ன ஆகும்?” என்று சுநீதர் கேட்டார். “தயங்கப்பட்ட நன்மை செய்யப்படுவதில்லை. தயங்கப்பட்ட தீமை தவிர்க்கப்பட்டதே இல்லை” என்று நிமித்திகர் சொன்னார்.

நீர்க்கோலம் – 56

 

எந்தப் பூசலாவது சூதில் முழுமையாக தீர்வு காணப்பட்டுள்ளதா? இல்லை, அரசே. சூது எப்போதுமே பூசலை ஒத்திப்போடுகிறது. சூதில் நிகழ்ந்தவை அப்பூசலை பெருக்குகின்றன. சூது நிகழ்ந்த பூசல்கள் அனைத்துமே மேலும் பெரிய போரில்தான் முடிந்துள்ளன. ஒருமுறைகூட விலக்கில்லை. ஆகவே இது ஒரு மாறா நெறியென்றே தோன்றுகிறது.”

நீர்க்கோலம் – 59

kunkan viratar
சைரந்தரியின் முன்னிலையில் விராடரின் சினத்திற்கு ஆளாகும் குங்கன்.

நீர்க்கோலம் தரும் கனவுத் தருணங்கள்

மது, அகிபீனா, பூசனம் தரும் போதை வஸ்துக்கள் தரும் மயக்கில், மனமயக்கங்கள் தரும் கரவுக் கானகக் காட்சிகள், தமயந்தி நாக வடிவான கலியுடன் உரையாடும் காட்சிகள், வாசகனை போதையில் ஆழ்த்துபவை.

“இவ்வினாவுக்கு மட்டும் மறுமொழி சொல். ஏன் மானுடர் விடுதலையை கனவு கண்டபடி தளைகளை பூட்டிக்கொள்கிறார்கள்?” அவன் சொற்களை கேட்காதிருக்கும்பொருட்டு தலையை விசையுடன் ஆட்டியபடி “சென்றுவிடு! செல்! சென்றுவிடு!” என அவள் கூவியபடியே இருந்தாள்.

நீர்க்கோலம் – 69

 

“அவனிடம் எதை கண்டாய்?” என்று அவன் கேட்டான். “அறியேன். ஆனால் அவரில்லையென்றால் வாழ்வில்லை என உணர்கிறேன்.” அவன் நகைத்து “அத்தனை பத்தினியரும் சொல்வது. வெறும் பழக்கமா? முன்னோர் மரபா? சூழ்விழிகளின் அழுத்தமா?” என்றான்.

நீர்க்கோலம் – 92

நளன் தன் மைந்தருடன் சேருமிடத்தில் நம் உள்ளத்தின் உறுதியை ஆட்டிப் பார்க்கிறார் ஜெயமோகன். ஒரு நொடி கண் கலங்கிவிட்டது.

கானகவாசம் முடிந்துவிட்டது, இனி அரசியல் சூழ்கைகளும், பெருக்கெடு்க்கும் குருதியும் வர இருப்பதை நினைத்தாலே பதைக்கிறது. ஓங்கி ஒலிக்கட்டும் வெண்முரசொலி.

“வென்றெழுங்கள். உங்களுக்காக மட்டுமல்ல. நன்று எந்நிலையிலும் வெல்லும் என்று கூறும் நூல்களுக்கு மானுடர் கடன்பட்டிருக்கிறார்கள். குருதியாலும் கண்ணீராலும் அவர்கள் அதை நிறுவிக்கொண்டே இருக்க வேண்டும்.”

நன்றி நண்பர்களே, மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.

ஜே. ஜே: சில குறிப்புகள் | சுந்தர ராமசாமி


பிரெஞ்சு நாவலில் ஒரு விவஸ்தை கெட்ட முண்டை நாற்சந்தியில் விழித்துக் கொண்டு நின்றால், ஒற்றைப் பாலம் கருணாகரனுக்கு அதில் என்ன புளகாங்கிதம்? அவனுடைய புளகாங்கிதத்திற்குக் காரணம் அந்த நானூற்றி முப்பத்தி மூன்று பக்க நாவல் முடிகிற வரையிலும் அவள் அங்கே நின்று கொண்டேயிருப்பதுதானாம்.

ஜே.ஜே: சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
வெளியீடு – காலச்சுவடு. முதல்பதிப்பு டிசம்பர் 1999. பதினெட்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2016
கன்னிமாரா முன்பதிவு: கிடைக்கவில்லை
NLB முன்பதிவு: Jē. Jē. : cila kur̲ippukaḷ

அறிவு ஜீவிகள் பலரும் இந்நாவல் குறித்து எழுதாமல் இருப்பதில்லை. எழுத்தாளர்களும் இதைப் பற்றிக் குறிப்பிடாமல் இருப்பதில்லை. புதிதாக வாசிக்க ஆரம்பித்திருந்த ஒரு பொழுதில் செங்காங் நூலகத்தில் இதே நாவலின் ஒரு பக்கத்தை வாசித்தேன். அப்போது விஷ்ணுபுரத்தை வாசித்திருந்ததால் ஞான சூரியனின் வேட்கையில் வியர்வை சிந்தி முடித்திருந்தேன். என்னவோ அப்போது இது என்னை ஈர்க்கவில்லை. எனது ஞானமானியின் கிடைமட்டக் குறிமுள்ளின் இயலாமையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். சுந்தர ராமசாமியின் பிறந்தநாள் சிறப்புத் தள்ளுபடியுடன் காலச்சுவடிலிருந்து ஒரு புளிய மரத்தின் கதையும், ஜே ஜே சில குறிப்புகளையும் சலுகை விலையில் அனுப்பித் தந்தனர். அவர் தம் அறச் சிந்தனை வாழ்க.

JJ sila kurippukal 2

வாசிக்கவேண்டும் என்று முடிவு கட்டிவிட்டோமென்றால், யார் என்ன சொல்கின்றனர் என்றெல்லாம் பார்க்கக்கூடாது. அது கடைசி பெஞ்சே ஆனாலும் சரிதான். வாசித்த பின்னர் வேண்டுமானால் பிறரின் கருத்தைத் தெரிந்து கொள்ள முற்படலாம். என்னநாஞ்சொல்றது! அப்படி எந்த முன்னேற்பாடும் செய்யாமல்தான் இம்முறை இதை வாசிக்கத் தொடங்கினேன், நீயா நானா பார்க்கலாம் என்று! பக்கங்கள் கூட குறைவுதான்.

ஜே ஜேயைப் பற்றி இருவர் பேசுகின்றனர். வாசகனாக இருந்து எழுத்தாளராக இருக்கிற ஜேஜேயின் அபிமானியாக இருந்து தற்சமயம் தமிழ் எழுத்தாளராக இருப்பவரின் பார்வையில் இந்தக் கதை சொல்லப்படுகிறது. முக்கால் வாசி, ஜேஜேயின் பால் இவரது பார்வை. பின்பகுதி, ஜேஜேயே பேசுகிறார்.

மூன்று வேளை சாப்பிடுகிறவனைப் பற்றி இப்போது இலக்கியத்தில் நாம் ஒரு வார்த்தை பேசக் மூடாது. செம்மான், தோட்டி, வெட்டியான், நாவிதன், வேசி, பிச்சைக்காரன், கோடாலிக்காரன், கசாப்புக் கடைக்காரன், மீன்காரி, பூட்ஸ் துடைக்கும் சிறுவர்கள், கூட்டிக் கொடுக்கும் தரகர்கள் யார் வேண்டும் என்றாலும் வரலாம். இலை போட்டுச் சாப்பிடுறவன் வரக்கூடாது. என்னுடைய நாவல்களிலோ அடறி விழுந்தால் அரண்மனைகளும், அந்தப் புரங்களும், கோட்டை கொத்தளங்களும்தாம். சப்பரமஞ்சக் கட்டிலில் இளவரசிகள் படத்துறங்க சேடிகள் விலாமிச்சை விசிறிகளால் வீசுகிறார்கள். குதிரைகள் பறக்கின்றன. அரசவையில் ராஜரிஷி பேசுகிறார். எப்படிப் பொறுத்துக் கொள்வார்கள்? ஆனால் எனக்கு இவர்களைப் பற்றிக் கவலையில்லை. சமஸ்கிருதக் கல்லூரி முதல்வர் ஈசுவரன் நம்பூதிரியே என்னைப் பாராட்டி எழுதியிருக்கிறார். அவரை விடவும் படித்தவனோ இந்த ஜே.ஜே?

கதாபாத்திரங்கள் அறிமுகம், கதையின் ஓட்டம், எழுச்சி, முடிவு என்கிற கட்டத்திற்குள் வராத கட்டமைப்பைக் கொண்டுள்ளது. நாவலின் முதல் பாதியில், இந்த ஜேஜே ஏன் இப்படி இருக்கிறான், பாவம் இந்த தமிழ் எழுத்தாளனைத்தான் இந்த மலையாளத்தான் ஜேஜே கொஞ்சம் மதிச்சாதான் என்னவாம் என்று விசனப்பட்டுக்கிட வேண்டியிருக்கிறது. ஒரு ஆதர்சத்தின் மேலான புனிதத் தன்மை, அது உடைபடுகிற போதான ஒரு வருத்தம், அதன் மேலான கரிசனம், இலக்கியத்திற்கான அக்கரை என்று அனைத்தையும் காட்டுகிறதாக அமைகிறது நாவலின் முதல் பகுதி.

திடீரென்று சத்தம் போட்டுப் பரிகாசமாகச் சிரித்தபடியே, ‘சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?’ என்று கேட்டான். இந்தக் கேள்வியின் உட்பொருள் விளங்க எனக்குச் சற்று நேரம் பிடித்தது. தமிழின் கட்டற்ற கற்பனைப் பண்புகளையும் காதல் கதைகளையும் எண்ணியா சிரிக்கிறான் இப்படி?

நான் ஆண்மையற்ற மெல்லிய குரலில் ஜே.ஜேயைப் பார்த்துப் பேச ஆரம்பித்தேன்.
‘புதுமைப் பித்தன் என்றொருவர் எங்கள் பாஷையின் எழுதியிருக்கிறார். நீங்கள் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’

ஜே.ஜே. தலையைக் குனித்து கவனிக்க ஆரம்பித்தான். ஆனால் அதற்குள் அவனுடைய ஆராதகர்கள் அவன் கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டார்கள்.

முதல் பாதில் போடப்பட்ட முடிச்சுகள் அவிழ்கின்றன பிற்பாதியில், ஜேஜே பேசத் தொடங்கும்பொது.

sundara ramaswamy

ஜேஜே போன்றோருக்கு முதல் பிரச்சினை – வீடு.
சாராம்மா தன்னைப் பற்றி எழுதக்கூடாதென சொல்லிவிடுகிறாள் என்றாலும், எள்ளல் தொக்கி நிற்கும் அவளைப் பற்றிய அறிமுகம் நமக்கு நன்கு உணர்த்துகிறது. குறிப்பாக, காலம் தொடர்பாக – கொடுத்த நேரத்தில் சந்திக்க முடியாமல் இருக்கையில், வருத்தம் தெரிவிப்பதோடு, நீ என்ன காந்தியவாதியா. அவர்கள்தான் சொன்னால் சொன்ன நேரத்தில் முடியவேண்டும் என்று நினைப்பார்கள் என்கிறாள். தவிர, சாராம்மாவின் அரசியல் வெற்றிகள் குறித்து எழுதும்போது கடகடவென வாசித்துவிட்டு, இதென்ன ஏதோ குத்தல் இருக்கிறதே என்று திரும்ப ஒரு முறை வாசிக்கவேண்டி இருக்கிறது.

‘எனக்குத் தேதி குறித்துத் தந்திருக்கிறீர்களே’ என்று நான் கெட்டதற்கு, ‘நீங்கள் காந்தியவாதியா?’ என்று என்னிடம் கேட்டார். எனக்கு விளங்கவில்லை. ‘நீங்கள் குறித்த நேரத்தில் உங்களைப் பார்க்கலாம் என்று நான் வந்ததற்கும் காந்தியத்துக்கும் என்ன சம்பந்தம்’ என்று நான் கேட்டடேன். ‘இல்லை. அவர்கள்தான் குறித்த நேரத்தில் காரியங்களை ஆற்றுவதைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்வார்கள். எங்களுக்கு மக்களுடைய பிரச்சினைகள்தான் முக்கியம்’

இந்த கதைக் களத்திற்கு, சுவையான கீற்றுகள் போல இறங்கியிருக்கின்றன குத்தல்களும், எள்ளல்களும். சாராம்மாவின் அறிமுகத்தைச் சொல்லலாம், திரைப்பட அப்பா நடிகர் ஏஜி சோமன் நாயரின் அறிமுகத்தைச் சொல்லலாம். பிஷாரடி, முல்லைக்கல், சாராம்மா, ஒற்றைப் பாலம் கருணாகரன், எழுத்தாளினி சிட்டுக்குருவி என்று சகலருக்கும் ஆசிகள் கிடைக்கின்றன. உயிர் துடித்துக்கொண்டிருக்கும் வேளையில் நாசியில் நுழையும் நறுமணம் போன்றவை இந்த ஆசிகள்!!

‘இத்தனை சிறப்புகளைக் கொண்டவர், சிறிய வயதில் மனைவியையும் குழந்தைகளையும் கண்ணீரும் கம்பலையுமாய் நிறுத்திவிடடுப் போய்விட்டார்’ என்று சொன்ன போது சிட்டுக்குருவிக்குத் துக்கம் தாங்கவில்லை. கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுக் கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார். முகம் அழகாகக் கோணிவிட்டது. சபையில் பலர் உணர்ச்சி வசப்பட ஆரம்பித்து விட்டடார்கள். ‘அம்மா, கண்ட்ரோல் யுவர் செல்ஃப், கலெக்ட் யுவர் செல்ஃப், ப்ளீஸ் டோண்ட் பிரேக் டௌன்’ என்றெல்லாம் மேடையின் பின்பக்கம் நின்றவாறே தேனி கத்தினார். சிட்டுக் குருவிக்குத் தாளவில்லை. அவரால் பேச முடியவில்லை. கைக்குட்டையால் முகத்தை முழுமையாக மூடிக்கொண்டு விட்டார். மூதாட்டி படியேறிச் சென்று சிட்டுக் குருவியையைக் கைபிடித்து இறக்கிக் கொண்டு வந்து நாற்காலியில் உட்கார வைத்தார். இரண்டு மூன்று நிமிஷங்களுக்குப் பின் நான் சிட்டுக்குருவியைப் பார்த்தபோது அவர் தனது இடது உள்ளங்கைக் கண்ணாடியைப் பார்த்து வகிடை நேர் செய்து கொண்டிருந்தார்.

ஜேஜேக்கு அடுத்த பிரச்சினை – பணம்.
தன் தாயார் மீதான அளவில்லா குற்ற உணர்வு மேலோங்கிய கரிசனம் வைத்துள்ளான் ஜேஜே. வீட்டுக்கு பணம் ஈட்ட வழியில்லாததே ஒரு வலி. ஆனால், டீ பன்னுக்குக்கூட அவர்கள் கையை எதிர்பார்ப்பது என்பது உறுத்தலுடன் கூடிய வலி. ‘நான் உலகின் மகத்தான் கவிஞன். அரிசிக்கும் பருப்புக்கும் என்னை அலைய வைக்கிறாயே’ என்று தெய்வத்தை ஏசும் பாரதியை நினைவு படுத்துகிறான் ஜேஜே.

மாணவர்கள் சிலர் கூடி, எதிர்ப்படுபவர்கள் அனைவரையும் நிறுத்தி, வற்புறுத்தி, ‘பாரத மாதாவுக்கு ஜே’, ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்று குரல் எழுப்பச் செய்தார்கள். சிறு பையன்களின் தலையில் குட்டியும், செவியைத் திருகியும் இதைச் செய்யச் சொன்னார்கள். வற்புறுத்தல் இன்றியே பல சிறுவர்கள் ஆர்வமாக உணர்ச்சி வசப்படக் கத்தினார்கள்.

வயதான ஒரு கிழவி கத்த மறுத்துவிட்டாள். ‘கொன்றாலும் கத்தமாட்டேன்’ என்றாள். கொள்கை காரணம் என்று நான் நினைக்கவில்லை. வற்புறுத்தலுக்கு இணங்கக் கூடாது என்ற வீம்பு அவளுக்கு ஏற்பட்டுவிட்டது. இந்த மனோபாவம்தான் சுதந்திரத்தை எப்போதும் காப்பாற்றி வந்திருக்கிறது.

ஜேஜேயின் சமூகம் பன்மைத் தன்மை உடையது. வாழ்வை நிராயுதபாணியாக எதிர்கொள்ளும் சாமானியர், முகமூடிகளுடன் எதிர்கொள்ளும் கபடவேடதாரிகள், இலக்கியவாதிகளிடையே உள்ள பிணக்குகள் மற்றும் சல்லித்தனங்கள். சாமானியருக்காக கனியும் இவனை கபடவேடதாரிகள் எரிச்சலுக்குள்ளாக்குகிறார்கள். சமரசமில்லா உண்மையை விரும்பும் மாசற்ற நீதி என்கிற பிளேடு கொண்டுள்ள பதம் போல இருக்கிறான் ஜேஜே. அதற்கான இக்கட்டுகளைப் பற்றிய ஜேஜேயின் பார்வைகள் அவன் பேசும்போது நமக்குக் கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஜேஜே, வளைந்து கொடுத்து வெற்றிகளைப் பெறும் சாராம்மாவை அருகில் நிறுத்தியிருக்கிறது காலம்.

சந்திப்பவர்களிடம் எல்லாம் கடவுளைப் போட்டுப் பார்த்து என்ன விடை வருகிறது என்று கவனிக்கிறேன். நாலுவித மனோ பாவங்கள்: ஒன்று, கடவுள் இருக்கிறார். இரண்டு கடவுள் இருக்கக்கூடும். மூன்று, கடவுள் இல்லாமலும் இருக்கக்கூடும். நான்கு, கடவுள் இல்லை. உலக மக்கள் முதலாவதிலிருந்து நான்காவதைப் பார்க்கப் போய்க்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது…… இரண்டாவதும் மூன்றாவதுமே முக்கியமான நிலைகள். இந்நிலைகளில்தான் தேடல்கள் இருக்கின்றன. வெற்றிகளும் வீழ்ச்சிகளும் இருக்கின்றன. முதலாவதும் நான்காவதும் இனிச் செய்ய எதுவுமில்லை என்ற நிலை.

முழுவதும் புரிந்து கொள்ள இன்னொரு வாசிப்பு தேவைப்படும். பார்ப்போம்.

JJ sila kurippukal 1

Advertisements

யயாதியும் ஷாஜஹானும்


விளைவிற்கு நிர்வாகம் பொறுப்பாகாது
Jeyamohan’s Yayati and Fellow Indians’ Shah Jahan

Advertisements

மாமலர் | ஜெயமோகன்


இல்லை, இவ்வெறுப்பை ஒருபோதும் அணையவிடலாகாது. என் ஆணவம் எஞ்சவேண்டும். எனக்கிழைக்கப்பட்ட தீங்கிற்கு நிகர்செய்யும் வரையாயினும். மீண்டும் மீண்டும் ஆண்களால் தோற்கடிக்கப்படும் பெண் நான். அவர்களைவிட உயர்ந்தவள் என்பதனாலேயே அஞ்சப்படுகிறேன். நுகர்ந்து துறக்கப்படுகிறேன். நல்லுணர்வால் ஏமாற்றப்படுகிறேன். பெண்ணின் பெருஞ்சினமென்ன என்று இவர்கள் அறியவேண்டும். அது சூதர் சொல்லில் என்றும் வாழவேண்டும். நிகர்செய்யப்படா பழி பெருகும். எரியை எரியே அணைக்கமுடியும் என்பது நெறி.

-தேவயானி   (மாமலர் – 84)

மாமலர் – ஜெயமோகன்
இணையத்தில் வாசிக்க – மாமலர் – 1

வெண்முரசு நாவல் வரிசையின் 13வது நூல் மாமலர். பீமனைத் தலைவனாகக் கொண்டது. தருமன், அர்ஜுனனைத் தொடர்ந்து பீமன் செய்யும் பயணங்களும், அதனூடே பின் வரும் சந்திர வம்ச மூதாதைகளின் தருக்கல்கள், தடுமாற்றங்கள், வழுக்கல்கள், வெற்றிகள் என்கிற சிடுக்கல் நிறைந்த வாழ்க்கையைச் சொல்லிச் செல்கின்றன.

  • புரூரவஸ்-ஊர்வசி
  • நகுஷன்-அசோக சுந்தரி-ஹுண்டன்
  • தேவயானி – சர்மிஷ்டை – யயாதி – அஸ்ருபிந்துமதி
  • புரு
புருரவஸ் - ஊர்வசி - ராஜா ரவிவர்மா (விக்கி பீடியா)
புருரவஸ் – ஊர்வசி – ராஜா ரவிவர்மா (விக்கி பீடியா)

தொடக்கம்

இமயமலை அடிவார கோதவனத்தில் நாவல் தொடங்குகிறது.

கிராதம்  நாவலின் பயணத்தை முடித்துக் கொண்டு குடிலுக்குத் திரும்புகிறான். தோட்டம், குரங்குகள், ஓங்கிய சால மரங்கள் நிறைந்த அடர் வனம் என்கிற வர்ண மயமாக சூழலில் தொடங்குகிறது மாமலர். குரங்குப் பட்டாளங்கள், முண்டன் என்கிற குரங்குக் குள்ளன்கள் என்கிற கலகலக்கும் பாத்திரங்களுடனும், துள்ளல் நிறைந்த நடையில் சீண்டல்கள், சிரிப்புகள் என்று நம்மை உடனே உள்ளே இழுத்துக்கொள்கிறது இந்நாவல்.

முண்டன் அஞ்சிநடுங்கி நகுலனுக்குப் பின்னால் பாதிமறைந்து ஒரு கண் மட்டும் காட்டி “இனிமேல் இல்லை” என்றான். “என்ன இல்லை?” என்றார் தருமன். “இனிமேல் உண்மையை சொல்லமாட்டேன்” என்று முண்டன் சொன்னான். தருமன் சிரித்துவிட்டார். “இவனை என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றார். “உண்மைகளை நான் வேண்டுமென்றால் பொய்யாக்கிவிடுகிறேன்” என்றான் முண்டன். “அய்யோ” என தருமன் தலையில் அடித்துக்கொண்டார். “காவியமாக்குவதைவிட இது எளிது…” என்றான் முண்டன்.

அதிருப்தி, அயற்சி, ஆற்றாமை என்று தன்னுடைய இணைபிரியா தோழமைகளுடன் குடிலுக்குள் சுற்றி சுற்றி வருகிறார் தருமன்.

“நீங்கள் உணவருந்திவிட்டீர்களா, மூத்தவரே?” என்றான் அர்ஜுனன். “எழுந்ததுமே அடுமனைக்குத்தான் சென்றேன். எளிய உணவுதான். பல்தேய்த்து குளித்துவிட்டு மீண்டும் முறையாக உண்ணவேண்டும்” என்றபடி பீமன் அருகேவந்து குந்தி அமர்ந்தான். சகதேவனிடம் “அடேய், தள்ளிப்போ. நான் இளையோனிடம் சில அரசமந்தணங்கள் பேசவேண்டியிருக்கிறது” என்றான். “என்ன அப்படி?” என்று சகதேவன் கேட்க “செல்கிறாயா இல்லையா?” என்றான். சகதேவன் “அரசியலுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?” என முணுமுணுத்தபடி நகுலனின் அருகே சென்று நின்றான்.

அர்ஜுனன் “வேண்டாம் மூத்தவரே, நான் மதுவருந்தி நீணாள் ஆகிறது” என்றான். “நீ தவமுனிவர் போலிருக்கிறாய். உலகுக்குத் திரும்பு. எங்களைப் பார், நாங்கள் சொல்வளர்காடுகளினூடாக இங்கே வந்தோம். இது சொல்லில்லா காடு. இங்குதான் இனிதாக வாழ்கிறோம்.” அர்ஜுனன் “வேண்டாம்” என்றான். “ஏன்?” என்றான் பீமன். அர்ஜுனன் “மூத்தவர் இருக்கிறார்” என்றான். “அவருக்கும் கொடுப்போம்” என்றான் பீமன். “விளையாடாதீர்கள், மூத்தவரே” என்றான் அர்ஜுனன்.

மாமலர் 6

பீமனும் ஜெயத்ரதனும்

முதல் கனலாக திரௌபதியைக் கடத்திப் போகிறான் ஜெயத்ரதன். அவளை மீட்டு, அவனை நையப் புடைத்து எடுக்கிறார்கள் பீமார்ச்சுனர்கள்.

“என்ன ஆயிற்று?” என்றான் பீமன். “ஒரு புரவி சரிந்துவிட்டது” என்றான் அர்ஜுனன். மீண்டுமொரு அம்பு சென்றது. “இன்னொரு புரவி” என்றான். மூன்றாவது அம்பில் “அச்சு” என்றபின் கீழே இறங்கத்தொடங்கிய அவனிடம் “அவனை கொன்றிருக்கலாமே” என்றான் பீமன். “ஒளிந்திருந்து கொல்ல நான் ராகவராமன் அல்ல” என்றபடி மரத்திலிருந்தே புரவிமேல் பாய்ந்தான்.

மாமலர் – 7

ஆனால், செய்தி அதில் இல்லை. அப்பொழுது பீமன் ஆடும் வெறியாட்டம் உணர்த்தும் செய்தி பெரிது. மகிழ்ந்திருக்கிறார்கள், சீண்டிக் கொள்கிறார்கள், உணவு சமைக்கிறார்கள், மது அருந்துகிறாரகள் – எதுவும் உள்ளுரை வஞ்சத்தை அணைக்கவில்லை. மேலும் கணன்று புகைந்து கொண்டே இருக்கிறது அவர்கள் உள்ளத்தில். அது வெடித்துச் சிதறிய சமயம். கட்டுப்பாடில்லாத வஞ்சம் கொண்ட விலங்காக பீமன் இருக்கிறான்.  ஜெயத்ரதன் தோற்றதும் அர்ஜுனன் இளகுகிறான், தருமன் மன்னித்து விடுகிறான். இத்தனைக்கும் திரௌபதி கருணையால் விழிநீர் சிந்துகிறாள். ஆனால் பீமன் குமுறிக் கொண்டே இருக்கிறான். எல்லாவற்றையும் உள் வைத்து, புறமொன்று பேசும் நாடகமேடையாக கானக வாசம் நடந்து கொண்டுள்ளது.

“மூத்தவரே, மூத்தவரே” என அர்ஜுனன் கூச்சலிட்டு சென்று அவனைப் பிடித்தான். “விடுங்கள்… எளிய வீரர்கள் இவர்கள்…” பீமன் “என் குலமகள்… என் குலமகள். நம் கைப்பிடித்தமைக்காக இன்னும் எத்தனை சிறுமைகளை சந்திப்பாள்? ஒட்டுமொத்த ஷத்ரியர்களை அழிக்கிறேன். மூடா, ஒட்டுமொத்த ஆண்குலத்தை அழிக்கிறேன். அழிக பாரதவர்ஷம், அழிக இப்புவி!”

மாமலர் – 7

திரௌபதியின் மாற்றம்

கானேகிய பிறகும் கணன்று கொண்டுதான் இருந்தாள் திரௌபதி. தருமனை, பீமனை, கிருஷ்ணனை என்று அனைவரையும் ஏசுகிறாள். பீமனுடன் மட்டுமே உளம் கனிந்து பேசுகிறாள். காண விரும்பிய விதுரர் சொல்லைக்கூட எந்த ஒரு மறுமொழியும் இன்றி கேட்டு புறக்கணிக்கிறாள். மாமலரில் கனிவு கொள்கிறாள். அன்னையென கனிவு கொள்வதாக பீமனிடம் சொல்கிறாள். அவன் நம்புகிறான். வாசிக்கும் நம் மனதுதான் உடனே அவ்வளவையும் நம்ப மறுக்கிறது. இவ்வளவு கனிந்துள்ள அன்னைக்கு, பீமன் நினைவிற்கு வருகிறான். பாஞ்சாலத்து நிசாகந்தி நினைவிற்கு வருகிறது. தன் பிள்ளைகளைப் பற்றி ஓர் நினைவும் எழக் காணோம். இன்னமும் நாம் வாசிப்பதில் உயரவேண்டும் போல.

திரௌபதி எழுந்துகொள்ள அவனும் உடன் எழுந்தபடி “ஜயத்ரதனுக்காக விடுத்த விழிநீர் உலர்ந்துவிட்டதா?” என்றான். “இல்லை” என அவள் திரும்பி அவன் விழிகளை நோக்கி சொன்னாள். “இப்போதும் அவன் அன்னையாகவே என்னை உணர்கிறேன்.” அவன் உரக்க “பெண்கவர வந்த சிறுமகன்… அவன்…” என சொல்லெடுக்க அவள் கைகாட்டி “பலந்தரையை* சிறைகொள்வதற்கு முன் அவள் உள்ளத்தை நீங்கள் அறிந்தீர்களா?” என்றாள். அவன் சொல்சிக்கி தடுமாற “அவ்வாறுதான் கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள் ஷத்ரியர் அனைவரும். மண்ணையும் பொன்னையும் பெண்ணையும் வென்று பெருமைகொள்ளவே துடிக்கிறீர்கள். அதில் முட்டி மோதி வென்று தருக்குகிறீர்கள். வீழ்ந்து அழிகிறீர்கள்” என்றாள். உதடுகள் கோட “இரண்டுமே வீண்” என்றாள்.

மாமலர் – 9

 

* பலந்தரை பானுமதியின் தங்கை, துரியோதனனை மாலையிட வேண்டியவள். பீமனால் கடத்தி மணம் கொள்ளப் பட்டவள்.

சுகிக்கப் பட்டவளின் ஏமாற்றம்

புருரவஸ்- ஊர்வசி கதை வருகிறது.

நகுஷன் அசோக சுந்தரி கதை வருகிறது.

தேவருலகிலிருந்து தள்ளிவிடப்படும் நகுஷன்
தேவருலகிலிருந்து தள்ளிவிடப்படும் நகுஷன்

யயாதி தேவயானி-சர்மிஷ்டை கதை மாமலரின் உச்சம் என்றே சொல்வேன்.

முண்டன் பீமனுக்குக் கூறுவதாக வரும் இக்கதைகளில் சந்திர வம்சத்தின் அடாத விளைவுகளையும், விடாத துயரங்களையும் வரிசையாகக் காட்டி வருகிறது.

தேவயானி கசனால் சுகிக்கப்பட்டு கைவிடப்படுகிறாள். சர்மிஷ்டையால் ஏளனம். யயாதியால் ஏமாற்றம், சாயையால் துரோகம்.. எத்தனை சுழற்சிகள்.

கசன் - தேவயானி - சுக்கராச்சாரியார்
கசன் – தேவயானி – சுக்கராச்சாரியார்

தருக்கி தோற்கிறாள் தேவயானி. பின்தங்கி வெல்கிறாள் சர்மிஷ்டை. இந்த அத்தியாயங்களில் மாமலர் ஜெயமோகனின் சொற்களில் சுடுமலராகிறது.

“எதுவாக இருந்தாலும் அறியாத ஒன்றை இங்கு நின்று எண்ணி எண்ணி விரித்தெடுத்து அச்சத்தை பெருக்கிக்கொள்வதில் எந்தப் பொருளும் இல்லை. வருவது வரட்டும். உயிரைப் போக்கிக்கொள்ளும் உரிமை நம்மிடம் இருக்கும் வரை நாமே ஏற்றுக்கொள்ளாத எத்துன்பமும் நமக்கு வருவதில்லை”
– சர்மிஷ்டை
மாமலர் – 70

சர்மிஷ்யை வினவும் தேவயானி - விக்கிபீடியா

யயாதியின் வரம்பிற்குள் தானே வலிய நுழைந்து, பாரத பூமியைத் தன்னைச் சுற்றி சுழல வைக்கிறாள் தேவயானி. தனது நிழலாக கொடும் குணம் கொண்ட சாயையுடன் இணைந்து அளி, அழி என இரு வேடம் கட்டி தாண்டவமாடுகிறாள்.

“உங்கள் உளம்கொண்ட ஐயத்திற்கு கார்க்யாயனரின் ராஜ்யசூத்திரத்தில் விளக்கம் உள்ளது, அரசே. எக்குடியும் பிறகுடிக்கு கடன்பட்டதாக அமையலாகாது. அது அவர்களிடையே மேலும் பகையையே வளர்க்கும். பெறுவதும் கொடுப்பதும் அரசாகவே இருக்கவேண்டும். ஏனென்றால் அரசிடமே படைவல்லமை உள்ளது. எந்நெறியால் ஆணையிடப்பட்டாலும் படைக்கலம் உடன்செல்லாது எவரிடமிருந்தும் செல்வத்தை பெற முடியாது”

சுபகை, முண்டன், மாலினி வரிசையில் சாயை ஒரு குறிப்பிடத்தகுந்த ஜெயமோகனின் பாத்திரம். தேவயானியின் நிழலாக உலவுகிறாள். என்னவோ ஜெயலலிதா-சசிகலா கதையைப் படிப்பது போல இருந்தது. பேற்றரைக்குச் சென்ற யயாதியே, சாயையின் அனுமதி பெற்றுத்தான் செல்கிறான்.

உள்ளறைக்குச் சென்று பேரரசியை பார்த்தேன். அவளருகே சாயை நின்றிருந்தாள். என்னருகே வந்து ‘களைத்திருக்கிறார்கள். ஓரிரு சொற்களுடன் முடித்துக்கொள்ளுங்கள்’ என்றாள். நான் ‘ஆம், நான் உடனே சென்றுவிடுவேன்’ என்றபின் அவள் அருகே சென்று நின்றேன். விழிகளைத் திறந்து என்னை நோக்கினாள். நான் முற்றிலும் அறியாத பெண். நான் உள்ளூர அஞ்சும் அரசி. ‘என் குலம் வாழ மைந்தனை அளித்திருக்கிறாய்’ என்றேன். அவள் மறுமொழி சொல்வதற்குள் சாயை ‘பாரதவர்ஷம் ஆள வந்த சக்ரவர்த்தி. சுக்ரரின் கொடிவழியின் அருமணி’ என்றாள். நான் ‘ஆம்’ என்றேன்.

யயாதி
மாமலர் – 79

தேவயானி சாயையுடன் பிணக்கு கொள்ளும் இடம் இந்த நாவலின் உச்சங்களுள் ஒன்று. மனித மனத்தின் சிக்கல் நிறைந்த இருட் பகுதிகள் வெளி வரும் தருணங்கள் நம்மால் கடக்க இயலாதவை.

தேவயானி உரத்த குரலில் “நீ இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை? என் நலனுக்காக என்று பொய் சொல்லமாட்டாய் என்று எண்ணுகிறேன்” என்றாள்.

“சொல்ல வேண்டாம் என்று தோன்றியது. உங்கள் நலனுக்காக அல்ல” என்றாள் சாயை. “ஏன்?” என்றாள் தேவயானி. “என் வஞ்சத்துக்காக” என்று சாயை சொன்னாள். தேவயானி திகைத்து பின் மீண்டு உடைந்த குரலில் “நான் உன்னை நம்பினேன். உன்னை என் ஒரு பகுதியென எண்ணினேன்” என்றாள். “உங்கள் ஒரு பகுதியாக இருப்பதனால்தான் சொல்லவில்லை. ஏனென்றால் உங்கள்மேல் நச்சுமிழ விரும்பினேன்” என்றாள். “முற்றிலும் உங்களுக்கு படைக்கப்பட்ட உள்ளம் கொண்டவள் நான். ஆனால் என்னுள் இவ்வஞ்சத்தின் நச்சுப்பல் இருந்துகொண்டே இருந்தது.”

மாமலர் – 83

யயாதியை ஒரு பொருட்டெனவே மதிக்காதவள் தேவயானி. ஆனால் அவனால் ஏமாற்றப்பட்ட பொழுது, அவனைக் கசனாகவே பார்க்கிறாள். அவள் கனவில் கண்டதும் அதுவே. அவள் இந்த அளவிற்கு வெறுக்குமாறு அவன் என்ன தவறு செய்தான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இத்தனைக்கும், திரௌபதியுடனான முதலிரவுக்கு முன்னர் அர்ஜுனன் திரௌபதியின் அணுக்கத்தோழியுடன் மகிழ்ந்த நினைவு எனக்கு வந்தது. அதை ஒப்பிடுகையில் யயாதி பாவம். பாவப்பட்ட உணர்வுப் புழு மட்டுமே. அதற்கு தேவயானியே பதில் சொல்கிறாள்.

“இது உன் மீதான வஞ்சம் மட்டும் அல்ல” என்றாள். பற்களைக் கடித்தபடி “ஆணென்பதாலேயே நீ பழி சுமந்தாகவேண்டும்” என்றபின் எழுந்து திரும்பி நடந்தாள்.
மாமலர் – 85

சுக்ரரிடம் தீச்சொல் பெறும் யயாதி
சுக்ரரிடம் தீச்சொல் பெறும் யயாதி

புராணக் கதைகளில், யயாதி தேவயானியுடன் இறுதியில் சேர்ந்து வனவாசம் செல்வதாகப் படித்திருக்கிறேன். இதில் அனையா கோபமுடையவளாக, தனித்து வனத்தில் வாழ்ந்து மறைவதாக புனைந்திருக்கிறார் ஜெயமோகன். தீயாகவே இருக்கிறாள். இத்தணைக்கும் கவனிக்க வேண்டியது, இறுதியில் சர்மிஷ்டையை தன் உடன் சேர்த்துக் கொள்கிறாள். இரு கோடுகள்!

முண்டன்

வாசித்து மகிழக்கூடிய வெண்முரசு கதாபாத்திரங்களில் ஒன்று முண்டன். இவன் குள்ளன், குரங்கன். சேட்டைக் காரன். உண்மைகளை தன் நாவினால் நஞ்சு தடவிய பகடியென உதிர்ப்பதில் வல்லவன். சீண்டிக்கொண்டே இருக்கிறான் – தருமனை, பீமனை!

“அரசே, இந்தக் காய் அறம் எனும் சொல். இந்தக் காய் யுதிஷ்டிரன். ஆம், இது பீமன். இது ஆற்றல். இது கூர்மை என்றால் இதை அதனருகே வைத்து விஜயன் என்பேன். இது நிமித்தம். ஆகவே இது சகதேவன். இது விசை. அருகிருப்பது நகுலன். அப்பாலிருப்பது ஆணவம். அதன் இணையை துரியோதனன் என்பேன். அருகிருப்பது சகுனி. அதன் துணை விழைவு. அப்பாலிருப்பது அறியாமை. அதற்குரியவர் இந்தக் காயென அமைந்த திருதராஷ்டிரர். இது வஞ்சம். இது கர்ணன். இவை பெருமிதமும் பீஷ்மரும். இவை பற்றும் துரோணரும். இது சீற்றம். அதை குந்திதேவி என்பேன். அவையோரே, இதோ இது ஆக்கம். இதை நான் கிருஷ்ணன் என்பேன். இது அழிவு. அதை திரௌபதி என்றால் சினம்கொள்ளலாகாது. நாம் வேண்டுமென்றால் இவற்றையெல்லாம் மாற்றிக்கொள்ளலாம். யார் நம்மைக் கேட்பது?”

ஃ…

“கலந்துவிட்டது… பொறுத்தருளவேண்டும்… இதோ” என அவன் சீரமைக்க முயல்பவன்போல அவற்றை கலந்து கலந்து பிரித்தான். “விழைவு ஏன் யுதிஷ்டிரனாகிறது? பிழை… அது பிழை… இதோ!” என்றான். கனிவு சூடி திரௌபதி எழுந்தாள் வஞ்சம் கொண்டு குந்தி. துரியோதனன் பற்று கொண்டிருந்தான்.

மாமலர் -9

இறுதியில் எதிர் பாராத தோற்றமளிக்கிறான் முண்டன். அதை வாசிப்பவர் இன்பத்திற்கே விட்டுவிடுகிறேன்.

“செல்க, மைந்தா! ஆனால் அனைத்தையும் அறிந்துவிட்டுச் செல்க! வீடுபேறென்று யோகியர் அடைந்ததும் மெய்மையென்று ஞானியர் அறிந்ததும் உண்மை என்று நூலோர் சொல்வதும் உனக்கு ஒருபோதும் கைப்படப்போவதில்லை. உன்னிடம் இந்த மாமலர் மட்டும் எப்போதும் இருந்துகொண்டிருக்கும். நறுமணமும் கெடுமணமும் கொண்டிருக்கும். அனலென எரியும், நிலவெனக் குளிரும். பிறிதெவரும் எந்நிலையிலும் அறியாத ஒருவனாக உன் உடலுக்குள் ஒளிந்து அந்த மலரை நெஞ்சில் சூடியிருப்பாய்.”

மாமலர் – 10

பீமன் எதை இழந்தான், எதைப் பெற்றான் என்பதற்கு கோனார் நோட்ஸ் யாராவது போடுவார்கள். ஆனால், பெரு வஞ்சத்துடன் உரு மாறவே இம் மூன்று பாண்டவர்களும் பயனங்கள் செய்து வந்துள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. தயாராகிறார்கள்!

சற்று நீளமான கதை. முண்டன் தாங்கிச் செல்கிறான்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

இன்னுமொரு இனிய நூல் அனுபவத்தில் சந்திப்போம், நண்பர்களே. வணக்கம்.mamalar

Advertisements