அந்த ஓர் இரவில் என்னில் அவர் எதையோ தேடுகிறார் என்று நான் எண்ணியது பிழை. அன்றிரவு அவர் என்வழியாக எங்கும் கடந்து செல்லவில்லை. எதற்கும் என்னை நிகர் வைக்கவும் இல்லை. அன்று உடல் உள்ளம் ஆன்மா மூன்றையும் எனக்களித்திருந்தார். முற்றிலும் என்னுடனேயே இருந்தார். ஐயமேயிலை, அன்றொருநாள் அவர் உள்ளத்தில் அரசியாக இருந்தேன் என்று உறுதியாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகள் என்னை நிறைவுறச் செய்து, இன்றென இருக்கவைத்தது அந்நிறைவே.
காண்டீபம் – ஜெயமோகன்
இந்த நாவலை இன்றுதான் முடிக்க முடிந்தது. கிட்டத்தட்ட 3 மாதங்கள் பின் தங்கலில் இருக்கிறேன். வேறு வழியில்லை. நவம்பர் டிசம்பரில் தனிப்பட்ட பணிகளின் காரணமாக வெண்முரசை சற்று நிறுத்தி வைத்துவைக்க வேண்டியதாயிற்று.
நிற்க.
நாவல் அறிமுகம்
வெண்முரசு நாவல் வரிசையில் அர்ஜுனனுக்காக அமைந்துள்ள நாவல் இது. கனவு லோக கற்பனைகள் போன்ற வர்ணனைகளும் நிகழ்வுகளும் சேர்ந்து, அர்ஜுனனின் பயணங்களை அழகுற விவரிக்கிறது. அர்ஜுனனின் கதைகளை, அர்ஜுனனின் செவிலித் தாய் மாலினி, கௌரவர் சுபாகுவின் மகன் சுஜயனுக்குச் சொல்வதாக அமைந்துள்ளது.
சிலிர்த்துக்கொள்ள சில நிகழ்வுகள்
நண்பர்களே, இந்த நாவலில் பல்வேறு நிகழ்வுகள் வருகின்றன. நாகர் நில (நாகாலாந்து?) இளவரசி உலூபியின் அத்தியாயம் வார்த்தை ஜாலம். ஒவ்வொரு பாம்பு அடுக்குகளாக அர்ஜுனன் வென்று வரும் தருணம் நம் கற்பனைக்குள் பல திரிகோணமிதி வளையங்கள் சுற்றுவதாக உணரமுடியும். உலூபியுடனான அர்ஜுனின் சாந்தி முகூர்த்தம் காட்சிப் படுத்திக்கொள்வதில் சிறந்தவர்களுக்குச் சிறந்த தீனி.

மணிப்பூரின் ஃபால்குனை அத்தியாயத்தை வாசகர்கள் சிலிர்க்க சிலிர்க்க படிக்கலாம். ஃபால்குனையைக் காட்சிப் படுத்தும் வர்ணனைகளில் நான் பலமுறை சொக்கியிருந்தேன். பிறகு சித்ராங்கதையும் ஃபால்குனனும் இணையும் காட்சிகளில் உங்கள் மனம் உங்களிடம் இருக்காது.

அமராவதியின் தேவதைகளை வெல்லும் அத்தியாயத்தில் வர்ணபக்ஷன் என்னும் சிறு குருவியுடன் அர்ஜுனனின் உரையாடல்கள் அழகியவை.
அரிஷ்டநேமி காணும் கொலைக் களம் மனதைப் பதற வைக்கிறது.

யாதவர்கள் – கிருஷ்ணன் உரசல்
இதற்குள்ளே இறங்குவதற்கு முன்னால், ஒன்றைச்சுட்டிக்காட்ட விளைகிறேன். கிருஷ்ணன் – சத்ய பாமா திருமணத்தில் சியமந்தகம் ஆடிய ஆட்டத்தை முந்தைய வெண்முரசு அத்தியாயங்கள் விவரித்தன. சததன்வாவும் யாதவன்தான். ஒரு ஊருக்குத் தலைவன்தான். சத்ய பாமாவை தனக்கு மணமுடித்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கையுடன் காத்திருந்தான். அவன் நினைப்பில் துவாரகை மண்ணைப் போட்டுத்தான் கிருஷ்ணன் சத்ய பாமாவை மணக்கிறான்.
சியமந்தகத்தை திருடிய குற்றம் என்ற பார்த்தால் சததன்வாவும் அக்ரூரரும் குற்றவாளிகளே. சததன்வாவை ஓடும் குதிரையிலேயே சக்கராயுதத்தால் தலையை அறுத்த கிருஷ்ணன், அக்ரூரரை மன்னித்து, துவாரகை அரசின் அமைச்சராகத் தொடர அனுமதி அளிக்கிறான். அப்போது ஒரு குரல் எழுகிறது. ‘சததன்வாவுக்கு இந்த இரக்கம் காட்டப்பட்டதா?’
துவாரகை வளர வளர பங்காளி உரசல் போல, யாதவர்களுக்குள்ளேயே வீண் பொறாமைகள் எழுகிறது. கிருஷ்ணனை ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு யாதவ குழுக்களும் வெல்ல நினைக்கின்றன. யாதவ இளவரசி சுபத்திரை திருமணத்தில் அது வெளிப்படத் தெரிகிறது. கிட்டத்தட்ட பலராமரை எதிர்த்தே, கிருஷ்ணனும் சத்யபாமாவும் சுபத்திரையை அர்ஜுனனுக்குத் திருமணம் செய்கின்றனர். அந் நிகழ்வில் சுபத்திரையின் திருமணத்தை சத்ய பாமா தன் பொறுப்பேற்று நடத்தி வைக்கிறாள்.
இது ஜெயமோகனின் புனைவா, உண்மை நிகழ்வா என்று தெரியவில்லை. ஆனால் இதுவும், அதைத் தொடர்ந்து பலராமரின் யாதவர் படையை மீறி அர்ஜுனன்-சுபத்திரை துவாரகை நகர் நீங்கும் அத்தியாயமும் எந்த ஒரு சாகசக் கதைக்கும் குறைவில்லாதவை.
“ஆம், உள்ளம் கவர முயன்றேன்” என்றான் அர்ஜுனன். “கவர்ந்துளேனா என்று இளவரசி சொல்வார்கள்.” அவையில் வலப்பக்க கீழ்நிரையில் இளைய யாதவரின் எட்டு அரசியரும் அமர்ந்திருந்தனர். சத்யபாமை எழுந்து “இளவரசியை அவைக்கு கொண்டுவந்து உசாவும் மரபு யாதவருக்கில்லை. பெண்ணை வினவவோ தண்டிக்கவோ யாதவகுடியில் ஆண்களுக்கு உரிமையில்லை” என்றாள். பலராமர் தத்தளிப்புடன் “ஆம், ஆனால் நான்…” என்றார். “அவளுடைய பிழையோ நிறைவழிவோ கண்டறிய வேண்டியவர் அவள் அன்னை. இங்கு அவள் அன்னையின் இடத்திலிருக்கும் நான். எங்கள் முடிவு இங்கெழுந்தருளியுள்ள மூதன்னையர் சொல்” என்றாள்.

சுபகையின் காதல்
சுபகை நாவல் முழுக்க வருகிறாள். சிறுவன் சுஜயனின் செவிலித்தாயாக. மாலினி சொல்லும் அர்ஜுனனின் கதைகளை சுஜயனோடு அமர்ந்து அவளும் கேட்கிறாள். இளமைக் காலத்தில் ஓர் இரவு அர்ஜுனனுடன் தனித்திருந்தவள். பிறகு வேறொரு ஆணைத் தீண்டாது, கன்று உண்ணாது, கலத்தினும் படாது….
அந்த ஓர் இரவில் என்னில் அவர் எதையோ தேடுகிறார் என்று நான் எண்ணியது பிழை. அன்றிரவு அவர் என்வழியாக எங்கும் கடந்து செல்லவில்லை. எதற்கும் என்னை நிகர் வைக்கவும் இல்லை. அன்று உடல் உள்ளம் ஆன்மா மூன்றையும் எனக்களித்திருந்தார். முற்றிலும் என்னுடனேயே இருந்தார். ஐயமேயிலை, அன்றொருநாள் அவர் உள்ளத்தில் அரசியாக இருந்தேன் என்று உறுதியாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகள் என்னை நிறைவுறச் செய்து, இன்றென இருக்கவைத்தது அந்நிறைவே.
மாலினி அர்ஜுனனின் செவிலித்தாய். அர்ஜுனன் அஸ்தினபுரம் நீங்கிய பிறகு, அரண்மனை வாழ்க்கையிலிருந்து விடுவித்துக்கொண்டு துறவு வாழ்க்கை வாழ்பவள்.
இருவரும் சேர்ந்து உரையாடும் தருணங்கள், ஆழ்ந்த அன்பு கொண்டு திளைத்து, அதை நினைத்து மெலிதாக அசைபோடுவது போன்றவை. ‘குமரியாக இருந்த போது என்னைத் தீண்டினானே என் தலைவன்! உடல் பருத்து, அழகு இழந்து, வாழ்வில் அடுத்து இன்னதென ஏதுமில்லாத ஒரு பிறவியாகிவிட்ட தன்னை திரும்பியாவது பார்ப்பானோ’ என்கிற ஏக்கம் இருக்கிறது சுபகையிடம்.
‘இல்லை இல்லை. இனிமேல் வராமாட்டார். வேண்டுமென்றால் இன்னொரு பிறவி எடுத்து இன்னொரு பெண்ணாக வேண்டுமானால் சந்திக்க முடியம்’ என்று தன் ஆசையை மறைத்து, தனக்குத்தானே நிறைவு செய்து கொள்கிறாள். ஆனால் அவள் அகம் முழுக்க அர்ஜுனனுக்கான அன்பு நிறைந்து வழிந்துகொண்டிருக்கிறது நண்பர்களே. பாரபட்சம் இல்லாத அன்பு, எதையும் பதிலுக்க எதிர்நோக்காத அன்பு.
இதுவரை வெண்முரசில் அர்ஜுனன் எப்போதும் தவிப்பாகவே இருந்து வந்திருக்கிறான். எதையாவது நினைத்து தவிக்கிறான், புகைகிறான், தருக்கிக் கொள்கிறான், எரிச்சலடைகிறான், துன்புருத்துகிறான். ஆனால் மன மகிழ்வுடன் இருந்ததாக ஒரு அத்தியாயங்கள் கூட பார்த்ததில்லை. அரிஷ்டநேமி துறவு கொண்டு நகர் நீங்கும்போது அர்ஜுனனுக்கு வரும் தடுமாற்றம், அவனது மன அழுத்தத்தின் வெளிப்பாடாக அன்றி வேறு ஏதாக முடியும்.
திரும்பத் திரும்ப பெண்களில் எதையொ தேடி, ஏமாறுவதாக இருக்கிறான். வெறுப்படைந்து நீங்குகிறான். திரௌபதியின் காதல் அகங்காரமும் அரசியலும் திரையிட்டது. சுபத்திரையின் மனதில் சகோதரப் பிரியத்திற்குப் பிறகுதான் கணவர் மீதான காதல் நிறுத்தப்படுகிறது. தன் மேல் தனக்கு மட்டுமென காதல் நிரம்பிய பெண் இல்லையா என்கிற ஆதங்கத்தில்தான் உலூபியை அவன் மனதார விரும்புகிறான்.
வெண்முரசின் பின்வரும் அத்தியாயம் அர்ஜுனனின் அகம் படுகிற பாட்டை வெளிச்சம் போட்டக் காட்டிவிடும்.
மாலினி “அவன் சென்று கொண்டிருக்கிறான். பாதைகள் பின்னிட்டபடியே உள்ளன. அவனிடம் ஒரு முறை சொன்னேன் நெடுந்தொலைவு செல்கிறாய் மகனே, ஒன்று நினைவுறுக! சென்ற பாதை அனைத்தையும் திரும்பிக் கடக்காமல் எவரும் விண்ணகம் செல்வதில்லை. எனவே நெடுந்தூரம் செல்வது நல்லதல்ல என்று. நான் செல்லவில்லை அன்னையே, துரத்தப்படுகிறேன் என்றான். எதனால் என்று நான் கேட்டேன். நூறு அர்ஜுனர்களால் வில்லும் கதாயுதமும் வாளும் வேலும் ஏந்தி துரத்தப்படுகிறேன். ஒரு கணம் கூட நிற்க எனக்கு நேரமில்லை என்றான்” என்றாள்.
காண்டீபத்தில் இது எனக்கு மிகவும் பிடித்த, அனுபவித்த ஒரு பகுதி. ஒரு பருத்த சரீரத்தின் உள்ளே ஒளிந்துள்ள அந்த அர்ஜுனனினுக்கான பிரியம்தான் எத்தணை அழகாக உள்ளது நண்பர்களே.
திரும்பவும் அதிலிருந்தே மேற்கோள் காட்ட விளைகிறேன்.
“நீ இங்கிரு. அவன் மீண்டும் வருவான்’’ என்றாள் மாலினி. “இல்லை அன்னையே, இனி ஒரு போதும் அவர் முன் நான் சென்று நிற்க மாட்டேன்” என்று சுபகை சொன்னாள். “ஏன்?” என்றாள் மாலினி. “இவ்வுடலல்ல நான். அன்று அவருக்கு நான் அளித்த உடலும் அல்ல இது. இதை நோக்கி என்னை அறியாது அவர் உதறிச் சென்றால் பின்பு நான் வாழ்வதில் பொருளில்லை. அவர் இங்கு வந்தால் அவரை அஞ்சி இக்குடில்களில் எங்கோ ஒன்றில் ஒளிந்து கொள்வேன். அல்லது காட்டுக்குள் சென்றுவிடுவேன்.”
மாலினி நகைத்து “ஆனால் நான் அவன் உன்னை இவ்வுடலில் பார்க்கவேண்டுமென்று விழைகிறேன். அன்று அவன் கண்ட அந்த எயினியை இவ்வுடலில் மீண்டும் அவனால் காண முடிந்தால் மட்டுமே அன்று அவன் எதையாவது பெற்றிருக்கிறானென்று பொருள்” என்றாள். சுபகை “இல்லை. ஆண்கள் பெண்களின் ஆன்மாவைக்கூட உடல் வழியாகத்தான் அறிகிறார்கள் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன்” என்றாள். மாலினி “அது சூதர்களின் பொய். விராடபுராணம் உடல் அவர்கள் உள்ளே வருவதற்கான பாலம் என்கிறது. உடல் வழியாக வந்து உடலுக்கு அப்பாலுள்ளதை அறிபவனே உண்மையில் அறிபவன்” என்றாள்.
“இல்லை அன்னையே, ஆண்கள் எதையும் அறிய முடியாது” என்றாள் சுபகை. மாலினி “உன் கண்களில் வைரமுனை போல ஒளிவிடும் அச்சிரிப்பை நிகழ்த்தும் ஒன்று உன் ஆழத்தில் உள்ளது. அதை அவன் அறிகிறானா என்று பார்க்க விழைகிறேன்” என்றாள். சுபகை “என்னை வற்புறுத்தாதீர்கள் அன்னையே” என்று சொல்லி கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டாள். “இதோபார்…” என மாலினி ஏதோ சொல்லவர “வேண்டாம்” என சுபகை தன்னை குறுக்கிக்கொண்டாள்.
ஆனால் காண்டீபத்தின் கடைசி 2 அத்தியாங்களில் நகைக்கிறான், புன்னகை பூக்கிறான். கவசங்கள், பொறுப்புகளைத் துறந்து மனிதனாக அவன் மாலினியிடம் மட்டுத்தான் ஒரு மகனாய் இருக்கிறான். வயது மாறாக மகனாக. அவளை விடுத்து சுபகையிடம்.
இந்த முடிச்சுகள் எல்லாம் நாவலின் இறுதியில் அவிழ்க்கப்படுகின்றன. அதை மேற்கோள் காட்டினால் உங்கள் ரசனைக்குப் பாதகம் செய்தவனாவேன். எனவே இந்த கைக்கிளை அனுபவத்தை நீங்களே வாசித்து உணர்வது, நான் அடைந்த உணர்ச்சி மேலீட்டை நீங்களும் அடைய உதவும்.
- நாவலைத் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே செல்லலாம் – நூல் எட்டு – காண்டீபம் – 1
- தொடங்கும் முன் பத்ம வியூகம் என்கிற இந்தக் குறு நாவலைப் படிக்க ஆலோசிக்கிறேன்.
இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே,
வளர்க பாரதம்