பன்னிரு படைக்களம் – ஜெயமோகன்


இந்த எளிய மானுடர்களை மட்டும் எண்ணுவேன் என்று கருதினீரா? இதோ நெளியும் புழுக்களிலிருந்து எவ்வகையில் மானுடர் மேம்பட்டவர்? இங்கு ஒரு காலடிபட்டு அழியும் பல்லாயிரம் புழுக்களைக் கண்டு ஒருகணமும் துயருறாத மூடர்களே போர்க்களத்தில் மாயும் வீரர்களுக்காக காவியம் எழுதுகிறார்கள். எனக்கு உயிர்கள் எல்லாம் நிகரே. எவர் மீதும் அன்பும் வெறுப்பும் இல்லை. கருணையும் காழ்ப்பும் இல்லை. எவர் வெல்லவும் நான் நின்றிருக்கவில்லை. பிறந்து இறந்து கொன்று நின்று ஆடிமறையும் உயிர்களென்பவை வெறும் ஒற்றைப்பெருக்கு. இப்பெரும்சுழியின் மையத்தில் விரலிட்டு படையாழி என ஏந்தி நின்றிருக்கிறேன்.

-இளைய யாதவர்

பன்னிரு படைக்களம் – ஜெயமோகன்

ஒரு நாவலுக்கு ஒரு கிளைமேக்ஸ்தான் இருக்கவேண்டும் என்று இபிகோவில் சட்டமா உள்ளது. வெண்முரசு நாவல் வரிசையில் இதுவரை வந்துள்ள நாவல்களில் சிறப்பான ஒரு இடம் பன்னிரு படைக்களத்திற்கு உண்டு. காரணமில்லாமல் இல்லை. பல்வேறு நதிகள் ஒன்றாக சேரும் இடம் இந்த நாவல். மிகப்பெரிய சரித்திரப் படுகுழியில் விழப்போகும் சமூகத்தின் வீழ்ச்சியின் தொடக்கத்தைத் தருகிறது இந்த நாவல்.

ஜராசந்த வதம்

உடல் பிணைக்கப்பட்ட இருவரின் உணர்வெழுச்சிமிக்க கதையை உவமையெனக் காட்டி தொடங்குகிறது ஜராசந்தனின் கதை. ஜரையால் வளர்க்கப்பட்டு, நகரம் வந்து, ராஜகிருகத்தைக் கைப்பற்றும் காட்டாளன் இவன். மக்களின் அரச குல எதிர்ப்பை தனக்காதரவாக வளைத்து, இளவரசர்களான தன் உடன் பிறந்தவர்களைக் கழுவிலேற்றி, அரசனாக முடிசூடக்கொள்ளவது விவரிக்கப்பட்டுள்ளது. இப்படி வந்த முரடன் துரியோதனனின் நட்பு வளையத்திற்குள் வருவதை ஏற்கனவெ வந்த நாவல்கள் விளக்கியிருக்கின்றன. ஆனால் அதே ஜராசந்தனை அஸ்தினபுரி சகுனியின் வஞ்சத்திற்காகக் கைவிடப்படும்தருணம் சுவையானது.

ஜராசந்தனின் வதம் குறித்த அத்தியாயங்களைப் படபடக்கும் இதயத்துடன் வாசிக்கவேண்டியிருக்கிறது. தருமனின் ராஜசூயம் என்பதன் உண்மையான பொருளையும், அதை இயக்குபவன் யார் என்றும் துரியோதனனை விட ஜராசந்தன் தெளிவாக அறிந்துள்ளான். தன்னைத் தாக்க வருவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறான்.

தாக்கவரும்போதும், தன் அரசினைத் தன் மகனிடம் அளித்து விடைபெறும் இடம்….

வதத்திற்கு முந்திய நாள் இளைய யாதவரிடம் விவாதிக்கும் கணம்தான் இந்த நாவலின் உச்சகட்ட தருணம் என சொல்வேன்.

பாஞ்சாலி சபதத்திற்கு ஈடான ஒரு மன எழுச்சியை ஜராசந்த வதமும் அளிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். அன்று மனதளவில் நான் ஒரு பெரும் வீழ்ச்சியையும், அதன் விளைவாக எழுந்த வருத்ததையும் அடைந்தேன்.

சிசுபாலன் வதம்

சிசுபாலன் வதத்தின் குறியீடு – இவ்வழி.. இவ்வழி.. குறித்து சுவையாக எழுதியிருக்கிறார் இந்த வாசகர். அவசியம் வாசிக்கவேண்டிய ஒன்று.

பாஞ்சாலி சபதம்

நாவல் தொடங்கியதிலிருந்து மாயாஜாலம், மந்திர மாங்காய் ஏதுமில்லாமல் கதை நகர்த்தி வருகிறார் ஜெயமோகன். பாஞ்சாலி துகிலிரிதல் கட்டத்திலும் இது தொடரும் என்றும் நம்பினேன். என்னுடைய எதிர்பார்ப்பின் படி, இளையயாதவரோ, அவரது ஓலையோ வந்து சூழல் மோசமாகாது தடுக்கும் என நம்பினேன்  🙂

மாமகிடன் துணையுடன் அவையில் இருந்த ஒவ்வொருவரின் பக்கத்தையும் காட்டும் இலாவகமும், இறுதி வரை தன் நிலை சிறிதும் இழக்காத திரௌபதியும் இந்நாவலின் இறுதிக் கட்டம் நமக்குக் காட்டித்தரும் சுவையான பகுதிகள். கௌரவர்களின் மனசாட்சியின் மிச்சமாக வரும் குண்டாசி நம் பிரியத்திற்குள்ளவனாகிறான்.

“நான இழுத்து வரப்படுவதைப் படுவது நியாயமென்றால் நாளை இதே போன்று உங்கள் மன்னரின் பெண்களும் இதே முறையில் இழுத்துவரப் படுவதும் நியாயம்தானா என்று கேள்” என்று பாஞ்சாலி கேட்கும் இடத்தில் ஒரு கணம் அதன் பின்புலம் குறித்து வாசகன் பயந்துவிடுகிறான்.

பன்னிரு படைக்களம் – செயல் அறிக்கை 🙂

ராஜசூய நிகழ்வு

ராஜசூய நிகழ்வுகளை விவரணை செய்யும் அத்தியாயங்கள் மிக அழகானவை. யாக சாலையாகட்டும், ஞானமார்க்க விவாதமாகட்டும், உணவுச் சாலையாகட்டும், க்ஷத்ரிய யாதவ வாக்குவாதமாகட்டும், ஜெயமோகன் புகுந்து விளையாடுகிறார். அரங்கு நிறைந்த கரகோஷங்களைப் பெறுகிறார்.

வர்ண மாற்றம்

இது வரைக்கும் எல்லோரையும் அவரவர் பார்வையிலிருந்து காட்ட முயன்ற ஜெயமோகன் வெற்றி பெற்றுள்ளார். துரியோதனனாகட்டும், தரும அர்ச்சுன பீமர்களாகட்டும், திரௌபதியாகட்டும், குந்தியாகட்டும் அவரவர் பக்க நியாயங்கள் நமக்கு இது வந்த நாவல்கள் வழி நமக்குத் தெரிந்துள்ளது.

அனைத்து பக்க நியாயங்களும் ஓரிடத்தில் சங்கமித்து, ஒன்றை ஒன்று நெட்டித்தள்ளி உயரத் துடிக்கும் துடிப்பைக் காட்டுகிறது பன்னிரு படைக்களம். அதன் அகமாறுதல்களை ஜெயமோகன் எழுதிவிட்டார் என்றாலும், இதுவரை வாசகனாக என்னால் மாற முடிந்திருக்கிறதா என்று நினைத்துப் பார்க்கிறேன்.

இந்திர பிரஸ்தத்தில் வழுக்கி விழுவதன் மூலமும், தொடர்ந்த ஒரு நோய் பரவல் மூலம், துரியோதனனும் கர்ணனும் தங்கள் இயல்பை மறந்து, ஆணவம் காட்டும் திசை வழி நடக்கத் தொடங்குகிறார்கள்.

நான் இன்னும் பழைய துரியோதனனையும் பழைய கர்ணனையுமே வைத்திருக்க முடிகிறது. புதியவர்கள் இன்னும் ஒட்டவில்லை. அனேகமாக அடுத்து வரும் தொடர் நாவல்களை இதை நம் மனதில் இன்னும் வலுவுடன் பதிக்கலாம்.

சிசுபாலன் அனைவராலும் கைவிடப்பட்டு, இளைய யாதவரால் கொல்லப்படுகிறான். அவனைச் செலுத்தியது எதுவோ, அதுதான் இப்போது சுயோதனனையும் செலுத்தத் தொடங்கியிருக்கிறது. சுடரை நோக்கிப் பறக்கும் பூச்சி போல அவனும், அவனைச் செலுத்தும் கர்ணனும் செயல்படத் தொடங்கியிருக்கின்றனர். அந்த வகையில் சிசுபாலனும் துரியோதனனும் இணை படகில் செல்கின்றனர்.

தருமனின் செயல்பாடு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அவரின் பார்வையின் படி, ‘ஒரு போரினால் குடிகள் அழிவதை விட பகடைக்களம் என்னும் நிகரிப்போரில் நான் அவற்றைக் காக்கலாம். அப்படியே தோற்றாலும் துரியோதனனிடம்  முடி தாழ்த்தவேண்டும். அவ்வளவுதானே’ என்று மன அமைதி அடைகிறான். ஆனால் தான் ஒரு அறவேந்தன் என்கிற தருக்கமும், பகடையின் சகுனியின் திறன் குறித்த ஒரு பயமும் மாறி மாறி அவனை தூக்கமிழக்க வைக்கின்றன.

பகடைக்கு பந்தயம் கட்டவேண்டும் என்பதை எனக்கு யாரும் சொல்லவில்லை என்கிறான் தருமன். ‘பயப்படுகிறாயா’ என்று தருமனின் ஆணவத்தைச் சுண்டிவிடுகிறார் சகுனி. சிலிர்த்துக்கொண்டு பகடை ஆடத் தொடங்குகிறான் தருமன். அதே சகுனியே, தருமனை ஒரு கட்டத்தில் நிறுத்துகிறார். சகோதரர்களை இழந்த பிறகு, நிப்பாட்டிக்கொள் என்கிறார். அதை வெற்று ஆணவச் சீண்டல் என்று நான் நினைக்கவில்லை. சகுனிக்கு அடுத்த என்ன நிகழும் என்று தெரியும். அதை மனிதாபிமானத்துடன் நிறுத்திக்கொள்ளலாம் என்கிற எண்ணமா? அதன் விளைவுகள் குறித்து பயமா? இதையெல்லாம் குறித்து எண்ணாமல் இவன் விளையாடுகிறான் என்கிற எண்ணமா என்று அவரவர் முடிவெடுத்துக் கொள்ளலாம். தருமனின் புதல்வன் பற்றிய ஒரு சுவையான குறிப்பு நினைவிற்கு வருகிறது.

பகடைக்களத்தில் சிற்பங்களில் குவிந்துள்ள தேவநாகர்களும், முனிவர்களும், யமதர்மனின் பதபதைப்பும் என புனைவின் சுவையை ரசிப்பவர்களுக்குச் சரியான தீனி இந்த பகடைக்களம்.

வயது மாற்றம்

பீஷ்மர், திருதராஷ்டிரர், விதுரர் என வயதான தலைமுறையை விலக்கிவிட்டு, அடுத்த தலைமுறை ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. வயதானவர்களின் செல்வாக்கு, புதிய தலைமுறை மீது எந்த அளவில் மோசமாக உள்ளது என்று காட்சிப் படுத்துவதைக் காணமுடிகிறது. சகுனியின் கீழ் உள்ள கணிகரின் பாதத்தைப் பிடித்து, பீஷ்மரின் சொற்கள் கண்ணீர் விடுகின்றன.

நேரடியாகவே விதுரர் பிறப்பைக் காட்டி உதாசீனப்படுத்தப் படுகிறார்.

சுருதையின் இறுதிக் கட்டம் மனதைக் கலக்குகிறது. விதுரரை ஒரு நிழலெனத் தொடர்ந்து வந்தவள் ஒரு கட்டத்தில் இல்லாதவளாகிறாள். அரசியல் நுணுக்கங்களில் விதுரரின் எல்லைகளை உணர்ந்தவளாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறாள். விதுரர் தளர்ந்து விழும் இடங்களில் கை கொடுத்துத் தூக்கி விடுகிறாள். சத்யவதி மறைவிற்குப் பிறகு, விதுரனை சுருதைதான் தன் சிறகுகளுக்குள் வைத்து காபந்து செய்கிறாள். இறக்கும் முன்னர் ‘எதுவும் நம்மிடமில்லை’ என்று அவள் சொல்லும் இடத்தில், அதன் உண்மையின் வலிமையை உணர்கிறோம். மனதை சோகம் கவ்வுகிறது. அம்பை, சுபகை, ஜராசந்தன் என்கிற அழகான கதாபாத்திர வரிசையில் சேர்கிறாள் சுருதை.

குந்தி – அழுத்தம்

குந்தியின் அமைதியான, அழுத்தமான ஆதிக்கம் இன்றளவும் தொடரவே செய்கிறது. தருமனனின் ராஜசூயத்திற்கு பீஷ்மரைத் தன் வலுவான இடத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து வரச் செய்து, அவரது அகங்காரத்தைத் தட்டி எழுப்பி, யாகத்திற்கு அனுமதி பெறும் இடத்தில்….

இன்னும் அஸ்தினபுரி எத்தணை பெண்களின் விருப்பத்திற்கு இரத்தம் சிந்தப்போகிறதோ என்று பதற வைக்கிறது.

மேலும், பாண்டவர்களின் பிறப்பு, கர்ணனின் பிறப்பு குறித்து வரும்போதும் தெள்ளத் தெளிவான நிலைப்பாட்டைக் காட்டுகிறாள்.

வெண்முரசு நாவல் வரிசையில் தவற விடக்கூடாத அடுத்த நாவல் இது.

மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.

Leave a comment