நீர்க்கோலம் | ஜெயமோகன்


“நான் இவர்களை அறிவேன். கீழ்மையில் மகிழ்ச்சியை கண்டடைபவர்கள். ஏனென்றால் மேன்மையில் ஏறி மகிழ்ச்சிகொள்வது கடினமானது. உளப்பயிற்சியும் ஒழுங்கும் தேவையாவது. கீழ்மையின் உவகை அதுவே தேடிவந்து பற்றிக்கொள்ளும். அலையென அடித்துச்செல்லும். ஆனால் அது அளிக்கும் இழிவுணர்வால் எப்போதேனும் மேன்மையை கொடியென தாங்கி கூச்சலிடுவார்கள் இவர்கள்”

நீர்க்கோலம் – ஜெயமோகன்
இணையத்தில் வாசிக்க

நீர்க்கோலம் – 97 அத்தியாயங்கள் என்று பார்த்த உடனேயே, இவரை எல்லாம் குண்டர் சட்டத்தில் தூக்கிப் போட ஆளில்லை என்கிற ஆயாசத்தோடுதான் உள்ளே நுழைந்தேன்.

12 வருட கானக வாழ்வை நிறைவேற்றிவிட்டு, 1 வருட கண்ணாமூச்சி வாழ்க்கையை இந்நாவலில் முடிக்கிறார்கள்.

கண்ணாமூச்சி வாழ்க்கையை கிரகணத்திற்கு ஓப்பீடு செய்து, நளசரித்திரம் ஊடுபாவாக இந்நாவல் முழுக்க வருகிறது. உண்மையில் 97 அத்தியாயங்கள் இதற்குக் குறைவு. குறைந்த பட்சம் இரு நாவலாவது தேவைப்படும். மகாபாரதம் இதற்காக விராடபர்வம் என தனியே ஒரு பர்வத்தை ஒதுக்கி உள்ளது. அத்தோடு சேர்த்து சுபாஷினி, கஜன், ஆபர், முக்தன், சம்பவன் என்று இந்நாவலின் ஊடு பாவுகளில் செரிந்திருக்கும் ஜெயமோகனின் புனைவுப் பாத்திரங்களுக்கு வேறு இடம் தரவேண்டும்.

நிற்க,
விராட பர்வத்தைச் சிறிதே மாற்றிக் கொள்கிறார். பாண்டவர்களின் பெயர்களை தமிழ் சூழலுக்கேற்ப மாறியிருக்கிறது. மாடு மேய்க்கும் சகதேவன் நீர்க்கோலத்தில் அருக கணிஞர் அரிஷ்நேமி என்று மாறியிருக்கிறான். சகதேவனைத் தவிர, பிறர் அனைவருக்கும் இந்நாவலில் இடம் இருக்கிறது.

குங்கனாக தர்மன். வளவனாக பீமன். பிருஹன்னளையாக அர்ஜுனன். கிரந்திகனாக நகுலன். அரிஷ்டநேமியாக சகதேவன். சைரேந்திரியாக திரௌபதி.
குங்கனாக தர்மன். வளவனாக பீமன். பிருஹன்னளையாக அர்ஜுனன். கிரந்திகனாக நகுலன். அரிஷ்டநேமியாக சகதேவன். சைரேந்திரியாக திரௌபதி.
பாண்டவர்களுக்கெதிரான போரில் இளவரசன் உத்தரனுக்கு தேரோட்டியாக பிருஹன்னளை.
பாண்டவர்களுக்கெதிரான போரில் இளவரசன் உத்தரனுக்கு தேரோட்டியாக பிருஹன்னளை.
அஞ்ஞாத வாசம் முடிந்ததும் விராடர், உத்தரன், தருமன்.

 

பீமன் – திரௌபதி உறவு

ஐவரிலும், பீமன் திரௌபதிக்கு உள்ளவனாக, உவப்பவனாக வருகிறான். தொடர்ச்சி முதலே ஜெயமோகனின் பீமன் அவளுக்கு களியாட்டுத் தோழனாகவும், அகம் பகிரத் தகுந்தவனாகவும் வருகிறான். அதுதான் பொருந்திப் போவதாகவும் எனக்குத் தோன்றுகிறது. அர்ஜுனன் மீது அதிக அன்பு வைத்ததால், திரௌபதி மலையேற்றித்தின் போது முதலில உயர் துறக்கிறாள் என்கிற புனைவை எண்ணிப் பார்த்தால் சற்றும் பொருந்தவில்லை. பாரதியில் எழுந்த பீமன்தான், துகிலுரிதலின் போதும் தருமன் கையை எரிக்கக் கொள்ளிக் கட்டை கேட்கிறான். அர்ஜுனன் அல்லன். வனவாசத்தில் திரௌபதியைச் சிறுமைப் படுத்தும் ஜெயத்ரதனை நையப் புடைப்பவனும் பீமனே.

விடிந்த பின்னரே அவளால் காட்டுக்குள் செல்ல முடிந்தது. சுனைக்குச் சென்று நீராடி மீள்கையில் தன்னுள் இருந்துகொண்டே இருந்த அச்சத்தையும் பதற்றத்தையும் உணர்ந்தபோது ஓர் எண்ணம் எழுந்தது. பீமன் இல்லாதபோது தான் அரசி அல்ல. இக்காடுகளை, விலங்குகளை, மானுடரை, விண்ணோரை, ஒருகணமும் அஞ்சியதில்லை. அடுத்த பொழுது உணவென்ன என்று எண்ணியதில்லை. விரும்பிய ஒன்று கைப்படாதிருக்கக்கூடுமென்று ஐயம் கொண்டதே இல்லை. அங்கு இந்திரப்பிரஸ்தம் என்றும் அஸ்தினபுரியென்றும் காம்பில்யமென்றும் எழுந்துள்ள பெருநகரங்களல்ல. அறமுணர்ந்தவனோ வில்லெடுத்தவனோ இணைத்தம்பியரோ அல்ல. தந்தையோ உடன் பிறந்தவனோ அல்ல. பீமன் ஒருவனால் மட்டுமே பேரரசியென்று இப்புவியில் நிலை நிறுத்தப்பட்டேன்.

நீர்க்கோலம் – 35

இந்நாவலில் கூட, பிற பாண்டவர்கள் அமர்ந்திருக்கையில், திரௌபதியை நீராட்ட அழைத்துச் செல்கிறான். அஞ்ஞாதவாசத்திற்கென அறுவரும் பிரிந்து செல்கையில் கூட, பீமன் அவளைத் தனித்து விட மறுக்கிறான்.

ஐவரும் திரௌபதியும் தனித்தனியாக கிளம்பி நிஷத நாட்டிற்குள் செல்வது நன்று என்று தருமன் சொன்னபோது பீமன் உரத்த குரலில் “நானும் தேவியும் இணைந்தே செல்கிறோம். அல்லது நம்மில் ஒருவர் தேவியுடன் இருக்கட்டும். இதுவரை நாம் அவளை தனியாக விட்டதில்லை” என்றான். தருமன் முகம் சுருங்க “நானும் அதை எண்ணினேன். அவள் இதுவரை மாற்றுரு கொண்டதே இல்லை. தன் புதிய உருவுடன் விழிகளுக்குமுன் அவள் இறங்கிச் செல்லட்டும். இங்கிருந்து நிஷத அரண்மனை வரை சென்று சேர்வது தன்னை உருமாற்றிக்கொள்வதற்கான பயிற்சியாக அமையும்” என்றார்.

பீமன் மீண்டும் சொல்லெடுப்பதற்குள் திரௌபதி “அரசர் கூறுவதே உகந்தது என்று நானும் எண்ணுகிறேன். என் புதிய முகத்தை நான் தனித்தே பயில விரும்புகிறேன்” என்றாள். பீமன் “ஆனால்…” என்று சொல்லத் தொடங்க “சைரந்திரி ஆணை அறியாத கன்னி. உங்களை கணவனென எண்ணமாட்டாள், இளையவரே” என்றாள் திரௌபதி.

நீர்க்கோலம் – 19

பீமனுக்கு முழுக்க விளங்கவில்லை. எனக்கு சுத்தமாகவே விளங்கவில்லை. (ஆணை என்பதை ஆண்+ஐ என்றுப் பிரித்துப் படிக்கச் சொல்கிறார் ஒரு நண்பர். விவகாரமாக வருகிறது.) இது பற்றி வேறெவரும் விரிவாகப் பேசியிருப்பதாகவும் தெரியவில்லை. கீசகன் திரௌபதியை அவமதிக்கும் செயலின் போதும் திரௌபதிக்காக பீமனே பழி தீர்க்கிறான்.

ஜீமுதனை மல்யுத்தம் செய்து கொல்லும்போது, அந்தப் போரில் முழுவதும் கரைந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள் திரௌபதி. இப்படிப் பல தருணங்களில் திரௌபதி-பீமன் உறவு மிளிர்கிறது.

கீசக வதம்

எப்பிழையையும் பொறுத்துக்கொள்ளும் பெண்களின் கனிவின் மேல்தான் ஆண்களின் ஆணவமும் அடங்காமையும் அறப்பிழையும் நின்று கொண்டிருக்கின்றன.”

DHANU_Bhima_kills_kichaka

கீசகனின் வதம் பற்றிப் பேசி நமக்கு ஆகவேண்டியதொன்றுமில்லை. ஆனால் அவன் பீம மல்லனிடம் சிக்கி உயிர் துறப்பதற்கு முன்னர் நிகழ்பவை ருசிகரமானவை. கீசகனால் அவமதிக்கப்பட்ட பிறகு (அவள் molest செய்யப்பட்டதாக வட இந்திய உரை சிலவற்றில் வருகிறது. ஆனால் ஜெயமோகனின் திரௌபதி அவனிடம் தனியாக சமரிடுகிறாள்), விராட அரசரிடம் நீதி கேட்டுப் புலம்புகிறாள் திரௌபதி.

Draupadi_humiliated_RRV
கீசகனின் அவமதிப்பை விராடரிடம் முறையிடும் திரௌபதி

தருமன் அதை எதிர்கொள்ளும் விதம் சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளதாக உணர்கிறேன்.

– அஞ்ஞாத வாசத்தின் விதிகளையும், ஒருவேளை அதை வழுவினால், திரும்ப 13 வருடங்கள் காட்டில் அலையவேண்டியதையும் நிறுத்தி, தருமன் செய்தது நியாயமே என்று தருமனின் பக்கமும்,

– அதே கூந்தலை துச்சாதனன் இழுத்தான், ஜெயத்ரதன் இழுத்தான். இப்பொழுது கீசகன் இழுக்கிறான், அறைகிறான், எட்டி உதைக்கிறான். உன்னைக் கட்டிய பாவத்திற்கு இன்னும் எத்தனை பேரிடம் நான் சீரழிய வேண்டுமோ என்று திரௌபதி பார்வையிலும் நாம் உணர முடிகிறது.

சைரேந்திரியை அவமதிக்கும் கீசகன்
சைரேந்திரியை அவமதிக்கும் கீசகன்

பன்னிரு படைக்களத்தில் தருமன் சொல்வதை நினைவிற்குக் கொண்டு வருகிறேன்.

“இளையவனே, நான் எவ்வாறு கருதப்படுகிறேன் என்பதல்ல எனது வழியை அமைப்பது. என்னை எங்கு நான் வைக்க வேண்டுமென்று முடிவு செய்வது நான் மட்டிலுமே. எந்நிலையிலும் நூற்றைவருக்கும் மூத்தவன் மட்டுமே. அதன் பிறகே நான் அரசன்”

பன்னிரு படைக்களம் – 77

நண்பர்களே, இரு அவைகளில் அவமதிக்கப்பட்டு நிற்கிறாள். தன் நிமிர்வின் பொருட்டு, தன் மணத் தளையின் பொருட்டு.

இரு நிகழ்விலும் அவளை மீட்பவர்கள் பெண்களாக, அதுவும் அடுத்த தலைமுறையினராக இருப்பதாக புனைகிறார் ஜெயமோகன்.

துரியோதனன் அரியணை விட்டெழுந்து ஓடிச்சென்று இரு கைகளையும் விரித்து தன் புதல்வியை மறித்து “கிருஷ்ணை, நில்! எங்கே செல்கிறாய்?” என்றான். அன்னைப்பன்றி என எரியும் விழிகளுடன் அவள் உறுமினாள் “விலகி நில்! மூடா. உன் நெஞ்சு பிளந்து குருதி உண்பேன்!” அவன் கால்தளர்ந்து நடுங்கும் கைகளுடன் விலக அவள் ஓடிச்சென்று திரௌபதியை தழுவிக்கொண்டாள்.

– திரௌபதி துகிலுரியப்படல் – பன்னிரு படைக்களம் – 87

துரியோதனனின் புதல்வி கிருஷ்ணை அஸ்தினபுரியிலும், விராடரின் புதல்வி உத்தரை விராட புரியிலும் திரௌபதியைக் காப்பதாக வெண்முரசு புனைகிறது. இரண்டிலும் கணவர்கள் கல்லென்று நிற்கின்றனர். ஒன்று சூதின் தர்மம். இன்னொன்று அச்சூதின் விளைவான தண்டனையின் தர்மம். மனோதர்மத்தை வெளிப்படுத்துபவர்கள் கிருஷ்ணையும், உத்தரையுமே.

ஏவலர் பின்னால் ஓடிவர உள்ளே வந்த உத்தரை “என்ன நடக்கிறது இங்கே? பெண்ணை அவையில் பற்றி இழுக்க இந்த கீழ்மகனுக்கு இடம்கொடுத்தவர் எவர்? தந்தையே, நீங்களா?” என்றாள். “எண்ணிப் பேசு சொற்களை” என்று கையோங்கியபடி கீசகன் அவளை அணுக அவள் தன் குறுவாளை எடுத்து தன் கழுத்தில் வைத்துக்கொண்டாள். “தந்தையே, நம் குடித்தெய்வம்மேல் ஆணை. இப்போதே இந்தச் சிறுமகன் அவை நீங்கவேண்டும். நாளை நம் குடியவையில் இவன் செய்தவற்றுக்கு ஈடு சொல்லவேண்டும். உங்கள் ஆணை இக்கணமே எழவேண்டும். இல்லையேல் இங்கேயே சங்கறுத்து விழுவேன்.”

– கீசகன் திரௌபதியை அவமதித்தல் – நீர்க்கோலம் – 71

உத்தரைக்கு நடன ஆசிரியராக பிருஹன்னளை
உத்தரைக்கு நடன ஆசிரியராக பிருஹன்னளை

வஞ்சிக்கப் பட்டவள். பெண் என்பதாலேயே முழுதும் இழந்தவள். மீண்டும் மீண்டும் வந்து அறையும் ஓயாத அலைகளைப் பிளந்து நிற்கும் குன்றானவள்.

மிருகியின் விழிகளில் ஐயம் எஞ்சியிருந்தது. ஆனால் “ஆம், உனது உடல் உனக்கு என்றும் பெரிய இடரே. எவ்விழியும் வந்து இறுதியாக நிலைக்கும் தோற்றம் உனக்கு அமைந்துள்ளது. அரசகுடியினர் உன்னை விரும்புவர். அவர்கள் விரும்புவதனாலேயே இடர்களுக்குள்ளாவாய். தோள்களை குறுக்கிக்கொள். குரலெழாது பேசு. ஒருபோதும் அரசகுலத்து ஆண்கள் சொல்லும் சொற்களை நம்பாதே” என்றாள். திரௌபதி “இனி நம்புவதில்லை” என்றாள்.

நீர்க்கோலம் – 35

மீண்டுமொரு சூது!

சூதில் அனைத்தையும் இழந்தபின்னரும், திரௌபதியின் சினத்திற்குப் பதில் சொல்ல இயலாத பின்னரும், குங்கன் (தருமன்) விராடருடன் நாளெல்லாம் சூதாடுகிறான். குங்கனை யாரென்று அறிந்த அமைச்சர் ஆபர் பொறுமை இழந்து சினத்துடன் குங்கனை ஏசுவற்காக, நளன் ஆடிய சூதின் விளைவைச் சொல்கிறார்.

தருமன் ஆடிய சூது. நளன் ஆடிய சூது. இரண்டுமே உடன்பிறந்தார்களுக்குள் நிகழ்ந்தவை. இரண்டுமே நிலத்தின் பொருட்டு நிகழ்ந்தவை. இரண்டிலுமே சூதுத் திறமை பற்றிப் தன்னம்பிக்கை கொண்டவர்கள் முற்றிலும் தோற்றார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் ஆடப்படுகிறது சூது, ஒரு பெரும் போரைத் தள்ளி வைப்பதற்காக.

“என்ன ஆகும்?” என்று சுநீதர் கேட்டார். “தயங்கப்பட்ட நன்மை செய்யப்படுவதில்லை. தயங்கப்பட்ட தீமை தவிர்க்கப்பட்டதே இல்லை” என்று நிமித்திகர் சொன்னார்.

நீர்க்கோலம் – 56

 

எந்தப் பூசலாவது சூதில் முழுமையாக தீர்வு காணப்பட்டுள்ளதா? இல்லை, அரசே. சூது எப்போதுமே பூசலை ஒத்திப்போடுகிறது. சூதில் நிகழ்ந்தவை அப்பூசலை பெருக்குகின்றன. சூது நிகழ்ந்த பூசல்கள் அனைத்துமே மேலும் பெரிய போரில்தான் முடிந்துள்ளன. ஒருமுறைகூட விலக்கில்லை. ஆகவே இது ஒரு மாறா நெறியென்றே தோன்றுகிறது.”

நீர்க்கோலம் – 59

kunkan viratar
சைரந்தரியின் முன்னிலையில் விராடரின் சினத்திற்கு ஆளாகும் குங்கன்.

நீர்க்கோலம் தரும் கனவுத் தருணங்கள்

மது, அகிபீனா, பூசனம் தரும் போதை வஸ்துக்கள் தரும் மயக்கில், மனமயக்கங்கள் தரும் கரவுக் கானகக் காட்சிகள், தமயந்தி நாக வடிவான கலியுடன் உரையாடும் காட்சிகள், வாசகனை போதையில் ஆழ்த்துபவை.

“இவ்வினாவுக்கு மட்டும் மறுமொழி சொல். ஏன் மானுடர் விடுதலையை கனவு கண்டபடி தளைகளை பூட்டிக்கொள்கிறார்கள்?” அவன் சொற்களை கேட்காதிருக்கும்பொருட்டு தலையை விசையுடன் ஆட்டியபடி “சென்றுவிடு! செல்! சென்றுவிடு!” என அவள் கூவியபடியே இருந்தாள்.

நீர்க்கோலம் – 69

 

“அவனிடம் எதை கண்டாய்?” என்று அவன் கேட்டான். “அறியேன். ஆனால் அவரில்லையென்றால் வாழ்வில்லை என உணர்கிறேன்.” அவன் நகைத்து “அத்தனை பத்தினியரும் சொல்வது. வெறும் பழக்கமா? முன்னோர் மரபா? சூழ்விழிகளின் அழுத்தமா?” என்றான்.

நீர்க்கோலம் – 92

நளன் தன் மைந்தருடன் சேருமிடத்தில் நம் உள்ளத்தின் உறுதியை ஆட்டிப் பார்க்கிறார் ஜெயமோகன். ஒரு நொடி கண் கலங்கிவிட்டது.

கானகவாசம் முடிந்துவிட்டது, இனி அரசியல் சூழ்கைகளும், பெருக்கெடு்க்கும் குருதியும் வர இருப்பதை நினைத்தாலே பதைக்கிறது. ஓங்கி ஒலிக்கட்டும் வெண்முரசொலி.

“வென்றெழுங்கள். உங்களுக்காக மட்டுமல்ல. நன்று எந்நிலையிலும் வெல்லும் என்று கூறும் நூல்களுக்கு மானுடர் கடன்பட்டிருக்கிறார்கள். குருதியாலும் கண்ணீராலும் அவர்கள் அதை நிறுவிக்கொண்டே இருக்க வேண்டும்.”

நன்றி நண்பர்களே, மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.

Leave a comment