இன்று நம் பயணத்திட்டத்தின் இறுதி நாள்.

காலியில் நாங்கள் தங்கிய விடுதி அவ்வளவு ஒன்றும் சிறப்பாக இல்லை. கடற்கரையைப் பார்க்க இயலவில்லை. வாகனம் நிறுத்த வசதி இல்லை. தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. குளிர் சாதனம் நேரக்கருவி (timer) வேலை செய்யவில்லை. உணவு மற்றும் பணியாளர்கள் விடுப்பில் சென்றுவிட்டிருந்தனர். நாங்கள் தங்கின அறை வசதியானது. மற்றும் சுத்தமானது. காலி சாலைக்கு அருகில் வசதியாக அமைந்துள்ளது. அந்தப் பகுதியைச் சுற்றி பயணம் செய்யும் போது நீங்கள் தூங்க ஒரு விடுதியைப் பார்த்தால், இந்த விடுதி சரியான விடுதி. எல்லா விடுதிகளிலும் எங்களை பழச்சாருடன் வர வரவேற்றார்கள். ஆனால் இந்த விடுதி தான் எங்களுக்கு ஒரு தண்ணீர் கூட தரவில்லை. இரவு சமைக்க யாருமில்லை. வெளியில் கடைகளும் இல்லை. நுவரெலியா போகும் வழியில் நாங்கள் வாங்கியிருந்த பழங்கள் கை கொடுத்தன. இலங்கை பயணத்தில் உணவு இல்லாத ஒரே இரவு காலி விடுதியில் தங்கிய இரவு.
இந்தத் தொடரின் முந்தைய பாகங்கள்
- கதிர்காமம் – காலி
- யால தேசிய வனம்
- சிறிய சிவனொலி பாதம், 9 கண் பாலம் – எல்ல
- எல்ல ரயில் பயணம்
- கண்டியிலிருந்து நுவரெலியா
- சென்னையிலிருந்து கண்டி
- இலங்கை பயணம்
காலை எழுந்ததும் நீண்ட நேரம் கடற்கரையில் கழித்தோம். நன்கு பசி வரும்வரை கடற்கரையில் இங்கும் அங்குமாய் நடந்து இந்துமாக்கடலின் அழகினை ரசித்தோம். எங்களைத் தேடி துஷார வந்ததும், விடுதிக்குத் திரும்பினோம்.

காலை உணவிற்காக பழங்களையும் ரொட்டிகளையும் பார்த்தபோது எங்களுக்குக் கண்கள் கலங்கிவிட்டன!
இன்று நாம் கொழும்பு திரும்பப் போகிறோம்.
நாங்கள் போகும் வழியில் காலிக் கோட்டையை (Galle Fort) பார்த்தோம்.

இது கடல் முன் உள்ள அழகான கோட்டை. கடைகள், உணவகங்கள், பார்கள் போன்ற சிறிய கடைகளை நீங்கள் காணலாம். சிறிய விருந்தினர் இல்லங்கள், ஹோட்டல்கள் உள்ளன. கலங்கரை விளக்கம் வரை நடந்து செல்லுங்கள், நீங்கள் கடலுக்கு நல்ல காட்சிகளைப் பெறுவீர்கள். இது 17 ஆம் நூற்றாண்டில் ஒரு உண்மையான நகரமாக இருந்தது, இன்னும் அந்த உணர்வைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

நாங்கள் தென்னிலங்கை அதிவேக நெடுஞ்சாலையைப் பிடித்து சல்லென்று இரண்டே மணிநேரத்தில் கொழும்புவை அடைந்தோம். இது காலியிருந்து கொழும்புவிற்குச் செல்வதற்கான மிக வேகமான வழியாகும். அம்பாந்தோட்டை, மத்தாரா, காலி நகரங்களை கொழும்புவுடன் இணைக்கிறது.

நெடுஞ்சாலையிலிருந்து கொழும்புவிற்கு வெளியில் உள்ள பத்திரமுல்லை நகருக்குச் சென்று சேர்ந்தோம். என் அம்மா அங்கு ஒரு பல்பொருள் அங்காடியில் நியாபகார்த்தமாக, சிரட்டை (கொட்டாச்சி)யில் செய்த கொள்கலன் ஒன்றை வாங்கினார்.

பிறகு மதிய உணவிற்காக கொழும்புவின் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே பகுதியில் உள்ள மில்லேனியம் உணவகத்திற்குச் சென்றோம். பின் மதிய வேளை ஆகி இருந்தது. உணவு சிறப்பாக இருந்தது. இலங்கைப் பயணத்தில் நாங்கள் எடுத்துக்கொண்ட சுவையான தென் இந்திய உணவு. நல்லா இருக்கிறதே. இன்னொரு தோசை கொடுங்கள் என்று நாங்கள் கேட்ட பொழுது சமைப்பவர் இல்லை. வேலை முடிந்துவிட்டது என்று வெளியே போய்விட்டார். காலியிலிருந்து சோதனை மேல் சோதனை.

உணவிற்குப் பிறகு கொழும்பு நகரைச் சுற்றி அலைந்தோம்.


அதற்கு பின் கங்காராமய புத்த விகாரைக்குச் சென்றோம். அது எனக்கு பிடித்த கோவில். அங்கு எல்லாம் சுத்தமாக இருந்தது. அங்கு இருக்கும் தலைமை பிக்குவிற்க்கு உடல் நலம் சரியாக இருந்த காரணத்தால் அவர் சிங்கப்பூர் வந்தார் என்று துஷாரா கூறினார்.

இந்த கோவிலில் தான் புத்தரின் தலை முடியை பாதுகாத்து வருகிறார்கள். இந்த கோவிலில் பழைய பொருட்களை போக்கிஷமாக பாதுகாத்து வருிறார்கள். இந்த கோவிலின் கீழே பழைய வண்டிகள் (Cars), குதிரை வண்டி மற்றும் பல பழங்கால ஊர்திகளைப் பாதுகாத்து வருகிறார்கள்.





இந்த கோவிலைப் பார்த்து விட்டோம். இப்பொழுது நாம் நம் விடுதிக்கு செல்லலாம். நாம் தங்கிருக்க விடுதியின் பெயர் ரமடா. இதற்க்குப் பக்கத்தில் தான் ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடந்தது. இந்த செய்தியை என் தந்தை கூறினார். இத்துடன் எங்கள் பயணத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
எனக்கு தூக்கம் தூக்கமாக வந்தது.
அடுத்த வாரம் சந்திப்போம்.
டாடா

-கண்ணன்.
திருவள்ளுவர் ஆண்டு 2051
சார்வரி வருடம், வைகாசி 10, சனிக்கிழமை.