‘மறைத்துக் கொண்டவர்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டவர்கள்; ஒப்புக்கொண்டவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட்டவர்கள்; என்பது எவ்வளது அநீதி? தர்ம சாஸ்திரம், நியாயம் என்பனவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். எவனோ வெள்ளைக்காரன் எழுதி வைத்த இந்தியன் பீனல் கோடு சட்டம் கூட அப்ரூவர் விஷயத்தில் சலுகை காட்டுமே!…’
சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்
முதல் பதிப்பு – 1970. 31ஆம் பதிப்பு 2015
மீனாட்சி புத்தக நிலையம்
கல்லூரிப் பருவத்தில் ஒரு மழைக்கால மாலை வேளையில் யாரென்றே தெரியாத பிரபுவால் யாரென்றே தெரியாத கங்கா ‘கெட்டுப்போய்’ விடுகிறாள். அறுபதுகளில் பிராமண சமூகத்தில் நடக்கும் கதை. நடந்ததை அம்மாவிடமும் அண்ணன் கணேசனிடமும் சொல்ல, அண்ணன் அவளை அடித்து வீட்டை விட்டுத் துரத்திவிடுகிறான். வெங்கு மாமா உதவியால் படிதது அரசாங்க வேலையில் இருக்கும் ஒரு முதிர் கன்னியாக இந்த நாவல் தொடக்கத்திலிருந்து இறுதி வரை வருகிறாள் கங்கா. அவளுடைய பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. அறுபது எழுபதுகளில் இந்தக் கதை வெளி வந்திருக்கிறது என்று கூறப்படும்போது, இது பிராமண சமூகத்தில், பெண்ணிய வட்டாரத்தில் எந்த அளவு சலனத்தை உண்டாக்கியிருக்கும் என்பதை உணர முடிகிறது.
வாசித்த நாளில் இருந்தே ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களை இந்தப் பதிவின் வாயிலாகப் பதியலாம் என்று எண்ணுகிறேன். (வெகு சுருக்கமாக)
மேய்ப்பர் இல்லா ஆடு
வெளியே காணும் கங்கா அல்ல அவள். தினசரி உள்ளே ஏதாவது ஒரு போராட்டம் ஓடிக்கொண்டே உள்ளது. பேருந்தில் ஒருவன் இடிக்கிறான். கண்டக்டர் கையைத் தொட்டு டிக்கட் தருகிறான். வெங்கு மாமாவின் சில்மிஷங்கள். எதாவது ஒன்று வந்து கங்காவின் உள்ளத்தினுள் கங்கு அணையாமல் பார்த்துக்கொள்கிறது. ஆண்களைப் பார்த்தாலே எரிச்சல் படும் கங்கா, ஒரு ஆணுடன் கல்யாணம் என்பதையே கரப்பான்பூச்சியைப் போல அருவெறுக்கிறாள் கங்கா.
ஆனால் அவளுடைய பரிதாபமான மறுபக்கம்தான் வருத்தம் தருவது. தனக்கு ஒரு துணை வேண்டாம் என்ற நினைக்கவில்லை கங்கா. ‘தன்னைத் தலை முழுக வைத்து எவன் தலையிலாவது என்னைக் கட்டியிருக்கவேண்டாமோ இந்த அம்மா’ என்று கடுகடுக்கிறாள்.
‘நாணம்’னு நான் நினைச்சிக்கிறத அவன் ‘காதல்’னு நெனச்சுக்கிறான். நாணமே காதலுக்கு அடையாளமாகப் போயிடறது. இந்த நாணத்திலே மயங்கியே அவன் அட்வான்டேஜ் எடுத்துக்கறான். ‘ப்ரொஸீட்’ பண்றான். எல்லாம் எதனாலே? ஆம்பளைகளைத் தலைநிமிர்ந்து பார்க்கப் படாது, பேசப்படாது, பழகப்படாதுன்னு சொல்லிச் சொல்லி ‘இன்ஹிபிஷன்’ஸைச் சின்ன வயசிலிருந்தே ஏற்படுத்திட்டதனாலே, ஒரு ‘அடலஸண்ட்’ பீரியட்ல பொண்களுக்கு ‘மேன்’னு நினைச்சாலே அவனோட ‘அப்பியரன்ஸ்’லேயே ஒரு ‘திரில்’ – ஒரு மனச்சிலிர்ப்பு ஏற்பட்டுப் போறது. இப்படி ஏற்படறது ஒரு நல்லொழுக்கம்னு வேற நெனச்சிக்கறா. எல்லாக் கஷ்டமும் ஆரம்பமாறது.
இந்த மனச்சிலிர்ப்பு எல்லார்கிட்டேயும் – எவன் கிட்டே வேணும்னாலும் ஒரு பொண்ணுக்க ஏற்படறது ‘இம்மாரல்’ – ஒழுக்கக்கேடுன்னு எனக்குத் தோண்றது.
இந்த ஒழுக்கக்கேடு என்று அவள் நினைக்கிறதும், பிறர் போன்று தமக்கும் ஒரு நல்ல வாழ்வு அமைந்திருக்கக்கூடாதா என்பதும் தீர்க்க முடியாத உள்ளச் சிக்கலாகிறது.
ஒரு நிலையில் இருந்து ஆட்டம் காணும்போது, அந்த நிலைக்கு நேர் மாறான பிடிவாத நிலையை எடுத்துக்கொள்கிறாள் கங்கா. அதில் பிரச்சினை வரும்போது இன்னமும் தீவிரமாக அதற்கு எதிர் நிலை எடுத்துக்கொள்கிறாள். ஆனால் இவளது எல்லா முடிவுகளிலும் பொதுவாக உள்ள ஒரு பண்பு – சுயவதை. தன்னை வதைத்த சூழலுக்காக தன்னையே மீண்டும் மீண்டும் வதைத்துக்கொள்வது. அதற்காக வெளி சமூகத்திற்காக ஒரு முகமும், தனக்காக முகமும் வைத்துக்கொண்டுதான் இருக்கிறாள் என்றே நாம் நினைக்கவேண்டி இருக்கிறது.
தனிமை – அதைக் கடக்க எளிதான அவளுக்கு ஒரு உறவு இருந்தால் எவ்வளவு எளிதாக இருக்கும் நண்பர்களே.
ஆடு புலி ஆட்டம்
யாரென்றே தெரியாதவன் கெடுத்துவிட்டுப் போய்விட்டான். அண்ணன் கணேசன் அடித்து வீட்டை விட்டுத் துரத்திவிடுகிறான். பேருந்தில் பக்கத்தில் பக்கத்தில் நிக்கறவன் இடிக்கறான். கண்டக்டர் கையைத் தொட்டு சில்லரை கொடுக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலே, அழிவு காலத்தில் கை கொடுத்து, படிக்க வைத்து வாழ்க்கைக்கு வழி காட்டிய வெங்கு மாமா பசுத் தோல் போர்த்திய புலியாக வருகிறார். ஜெயமோகன் இந்த நாவலைப் பற்றிக் குறிப்பிடும்பொது வெங்கு மாமாவை தோலுரிக்கப்படும் கதாபாத்திரமாகக் குறிப்பிடுகிறார். ஆணாதிக்க சமூகத்தின் முகமாக வருகிறார் வக்கீல் வெங்கு மாமா.
பெண்கள் ஒருத்தனுக்கே உண்மையா இருக்கனும்னு சொல்றேளே? மகாபாரதத்திலே திரௌபதி அஞ்சு பேருக்கு மனைவியா இருந்தாளே? அதை எப்படி நம்ப சாஸ்திரம் ஒத்துண்டது?
நான் தயங்கித் தயங்கித்தான் கேட்டேன். மாமாவை வசமா மடக்கிட்டோம்னு நினைச்சுக் கேட்டேன்.
அவர் சொன்னார். “நம்ப சாஸ்திரம் அதை ஒத்துக்காததுனாலேதான் அது மாறிப் போயிடுத்து… இன்னொன்னு நீ கவனிச்சியோ? இந்த ‘கான்டக்ஸ்ட்லே’ குந்திதேவியைப் பத்திக் கேக்கணும்னு உன் மனசுலே தோன்றதோன்னோ? எனக்குப் புரியறது. புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் அப்படி புத்திரதானம் பெத்துக்கிறது உண்டுங்கிறதுதான் அதுக்கு அர்த்தமே தவிர அத்தனை பேருக்கும் குந்தி மனைவியா இருந்தாள்ங்கிறது இல்லே. அதுக்கு முன்னாலே பார்த்தா பாண்டுவும், திருதராஷ்டிரனும் வியாச பகவானால் தானம் அளிக்கப்பட்டவர்கள்தான். இதிகாசங்களிலிருந்து சாரங்களைத்தான் எடுத்துக்கிடனுமே தவிர, சம்பவங்களை எடுத்துக்கிடப் படாது!”
இதிகாச பூர்வமாக விளக்கறது மட்டுமில்லாமல் விஞ்ஞான பூர்வமாகவும் விளக்க ஆரம்பிச்சுடுவார் மாமா. மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் எல்லாம் அவர் வாதத்தை நிலை நாட்டறதுக்கு முட்டை கொடுத்துண்டு வந்து நிக்கும். பத்துப் பெட்டைக் கோழிகள் இருக்கிற இடத்துலே ஒரு சேவல் போறும்பார். இவரைப் பொறுத்தவரைக்கும் ஒளிவு மறைவில்லாமல் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதிங்கிறது ரொம்ப நியாயம்னு வாதம் பண்ணுவார்.
சமூகத்தின் டெலிகேட் ஆக இருக்கும் ஒருவர், மறுபுறத்தில் தனது தங்கை மகளான கங்காவைப் பாலியல் ரீதியா சுரண்டும் தருணத்தை ஏற்படுத்த முயல்வதும், அவள் எதிர்க்கும்போதும் அதை உணர முடியாதவராக இருப்பதும், வாசகர்களை ஒரு சமூகத்தைப் பார்த்து பதற வைக்கிறது.
“கங்கா! இங்க வந்துட்டுப் போ”
“என்னைக் கிழவன்னு நினைச்சுண்டுதானே நீ வெறுக்கறே?”ன்னு அவர் கேட்கிறபோது எனக்குச் சிரிப்பு வரது. எவ்வளவு விஷயங்களிலே மகா மேதையாயிருக்கிற இவர், இந்த விஷயத்தில எவ்வளவு அசடா இருக்கார்னு நினைக்கிறப்போ பாவமா இருக்கு.
ஒரே வாழ்க்கை – இருவர் பார்வைகள்
வெங்கு மாமாவின் ‘நீ கான்குபைனாகத்தான் வாழ முடியும்’ ஏளனத்திற்குப் பதில் சொல்லும் வகையில் தன்னைக் கெடுத்தவனையே தேடிப்பிடிக்கிறாள் கங்கா. அதன் பிறகு ஏற்படும் சிறு சிறு நிகழ்வுகளும் பெரியதொரு தாக்கத்தை வாசகன் மனதில் ஏற்படுத்துகிறது. முதலில் சபல எண்ணத்துடன்தான் அணுகுகிறான். கங்காவின் தோளை பிரபு தொடும்போது ச்சீ என்று தன்னை அறியாமலே விலகுகிறாள். அந்த ஒரு கணம் கங்காவின் மீதான பிரபுவின் உறவை முடிவு செய்கிறது.
“என்னைப் பொறுத்த வரைக்கும் நான் செய்ற எந்தக் காரியத்துக்கும் நான் பொறுப்பு இல்லே. ஐ யாம் நாட் ஸோ ஸ்ட்ராங். இந்த என்னோட லிமிட்டேஷன்ஸ் எனக்குத் தெரியும். இந்த மடத்தனம்தான் – இல்லே. புத்திசாலித்தனம்தான் எனக்கு வசதி. என்னைப் பத்தி என்ன பேசலை? – இப்போ புதுசாப் பேசறதுக்கு? பட் – ஆனால் ஐயாம் வொர்ரீட் அபவ்ட் யூ- வீணா உன் பெயர் கெட்டுப்போகுதேன்னுதான் பாக்கறேன். பேர் கெட்டுப் போகலாம். ஆனா அது வீணாகக் கெட்டுப் போகக்கூடாது”
“நான் தொடறதுனாக் கூட பத்மாவுக்குப் புடிக்கலேன்னு தெரிஞ்சப்புறம், அவ எனக்கு யாரோ ஆய்ட்டா. அவ எனக்குப் பொண்டாட்டிதான். அதுக்காக நான் அவளைப் பலவந்தம் பண்ண முடியுமா? ஐ கென் – நாட் ரேப் எனி ஒன்! நோ, ஐ கேன் நாட்”
தினசரி உலக லாவன்யங்களிலிருந்து விடுபட்டுக்கொண்டதாக துறவு வேடம் பூண்டாலும் கங்கா உள்ளே தனக்கான ஒரு சரியான துணைக்காக ஏங்குகிறாள். நம்பிக்கையான ஒரு பற்றுக்கொடியாக பிரபு அமைகிறான்.
சமூகத்திற்கு நல்ல முகத்தைக் காட்டுகிறார் வெங்குமாமா. அவரது மறுபக்கம் பூசணிக்காயில் வரையப்பட்ட திருஷ்டி பொம்மை போல இருக்கிறது. சமூகத்திற்கு மட்டமல்ல, தன் குடும்பத்திற்கே கூட பிரபுவைப் பிடிக்காமல் போகிறது. கங்கா அவன் வாழ்வில் வந்த பிறகு அவனது நல்ல குணங்கள் ஒவ்வொன்றாய் தெரியவருகிறது.
புறப்படறதுக்கு முன்னாடி சொல்றார்: “இவ்வளவுதான் லைஃப்! இட் இஸ் ஆல்ரெடி டிஸைடட். நாமட் ஒண்ணும் இதில் செய்யறதுக்கில்லே. சாகலாம்னா தற்கொலை செய்துக்க முடியலே. எங்கேயாவது எல்லாத்தையும் உட்டுட்டு ஓடிடலாம்னா அதுவும் முடியாது போல இருக்குது. முடியாதுன்னு இல்லே. எல்லாமே முடியும். அதுல எல்லாம் ஒண்ணும் ‘மீனிங்’ இல்லே.. ஸோ! லெட் அஸ் லிவ் தி லைப் வித் டிட்டாச்மெண்ட்! (ஆக, வாழ்க்கையை வாழ்வோம்; பற்றில்லாமல் வாழ்வோம்)”.
ஒரு வகையில் கங்கா மற்றும் பிரபுவின் வாழ்க்கை முழுதும் அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக மனம் புழுங்குகிறார்கள். அந்த காரணத்துடன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில்தான் நாம் புரிந்து கொள்ளவேண்டிய செய்தி உள்ளது என்று எண்ணுகிறேன்.
வாழ்க்கை கொடுக்கும் அடிகளை வாங்கி நைந்து போன பிரபு, வாழ்க்கையை அதன் போக்குக்கு விட்டுவிட்டு, அதற்கேற்ப டர்புலன்சில் ஓடும் பிளைட்டு போல வாழக் கற்றுக்கொள்கிறான். தற்கொலை கூட செய்யலாம்கிற அளவிற்குக் கேவலப்படுகிறவன், கங்காவை ஒரு ஊன்று கோலாகப் பற்றி மேலே வருகிறான்.
கங்காவிற்கு என்னதான் பிரச்சினை? ஈகோ? காம்ப்ளக்ஸ்? என்றெல்லாம் இந்தக் கதை நம் மனதைப் போட்டு பிசைந்து கொள்கிறது. ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது. சுவற்றில் ஓங்கி ரப்பர் பந்தை அடிக்கிறோம். அடிக்கிற வேகத்தில் எதிர் திசையில் ஓடும் பந்துக்கு என்ன பிரச்சினை? ஏன் அவ்வளவு விரைவாக வேறு திசையில் எம்புகிறது. சமயத்தில் அதே வேகத்தில் என்னையே வந்து தாக்குகிறது?
—-
இப்படி எல்லாம் நடக்கிறதா என்கிறார்கள். ‘ஆம்’, ‘ஆம்’ என்கிறது வாழ்க்கை என்று முன்னுரையில் எழுதுகிறார் ஜெயகாந்தன். கதை என்பதை விடுத்து, அதன் வழியாக எத்தணை வாழ்க்கையைப் பார்க்க முடிகிறது என்பதுதான் இந்த நாவலைத் திரும்ப வாசிக்க வைக்கிறது. கங்காவின் உளச் சிக்கலுக்கோ, வெங்குமாமாவின் நடத்தைக்கோ ஜஸ்டிஸ் என்று இந்த அற்ப வாசகனால் எதையும் கொடுக்க இயலாது. நமது தினசரி வாழ்க்கையில் பார்ப்பவர்களில் கங்காவைப் பார்க்க இயலாது போகலாம். ஆனால் அப்படி ஒருவர் இருந்தால்? ஒரு வேளை கணேசன் அல்லது கனகத்தின் இடத்தில் நீங்களோ நானோ இருந்தால் என்ன முடிவு எடுத்திருப்போம்?

ஈவேரா போலவே ஜெயகாந்தனும் தமிழ் [இந்திய] சமூகத்தின் அறிவார்ந்த மையமாகப் பிராமணச் சமூகத்தையே கண்டார். அவர்களுக்குத்தான் சமூகத்தின் கலைகளையும் சிந்தனையையும் ஞானத்தையும் பாதுகாத்து முன்னெடுக்கும் பொறுப்பு இந்த மரபால் அளிக்கப்பட்டிருந்தது என்று நினைக்கிறார். பிராமணர்கள் அதைத் தங்கள் சுயநலனுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்டனர் என்று ஈவேரா சொன்னார். கிட்டத்தட்ட ஜெயகாந்தனும் அதைத்தான் சொல்கிறார். ஆனால் அவர்களில் உள்ள முற்போக்கான, படைப்புமனம் கொண்ட சிலரை நோக்கி அவர் பேசுகிறார். ஈவேரா போல அவர்களை ஒட்டுமொத்தமாக அழிவுசக்தியாக நினைக்கவில்லை. அவர்களை நம்பி ஒரு மாற்றத்துக்காக அறைகூவுகிறார், அவ்வளவுதான். பிராமணரல்லாத ஜெயகாந்தனின் அந்த விமர்சனங்களை அவர்கள் பெரும்பாலும் ஆக்கபூர்வமாகவே எடுத்துக்கொண்டார்கள்.
-ஜெயமோகன்
நாவல் பற்றி
இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
வாழ்க பாரதம்.