திசைதேர் வெள்ளம் | ஜெயமோகன்


“இன்று இந்த அரியணையில் அமர்ந்து இவ்வுலகுக்கு நான் சொல்வதற்கு ஒரு சொல்லே உள்ளது, வஞ்சத்தால் எப்பயனும் இல்லை. எவ்வஞ்சமும் அது கொண்டவரைத்தான் முதலில் அழிக்கும். அது அனலின் இயல்பு. விரும்பி தன்னை ஏற்றுக்கொண்டவரை உண்டு நின்றெரித்து எச்சமிலாதாக்கி விண்மீள்வது அது” என்றான் (துரியோதனன்).

நீங்கள் உங்கள் உடன்பிறந்தாருடன் போர்புரிய வேண்டியிருக்கும். விதர்ப்பர்கள் ஒருவரோடொருவர் கொன்று குவிக்க வேண்டியிருக்கும்” என்று துரியோதனன் சொன்னான்.

ருக்மி ஏளனத்தால் வளைந்த இதழ்களுடன் “அதைத்தானே இங்கே நீங்கள் இன்று செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்றான். “ஆம், ஆகவேதான் அதன் பொருளின்மையை இவ்வுலகுக்குச் சொல்லும் தகுதியுடையவன் ஆகிறேன். இனி என் ஒப்புதலுடன் ஒருபோதும் குலம் குலத்தோடும் குருதி குருதியோடும் போரிடமாட்டார்கள்” என்று துரியோதனன்.

திசைதேர் வெள்ளம் – 48

திசைதேர் வெள்ளம் (நாவல்)
ஆசிரியர் – ஜெயமோகன்
இணையத்தில் வாசிக்க – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 1

நண்பர்களே, வெண்முரசு வரிசையின் 19ஆவது நாவல் திசைதேர் வெள்ளம். தலைப்பைப் பார்த்த உடன், போரின் போக்கினைச் சொல்கிறது, அல்லது கௌரவ/பாண்டவ சேனை தத்தம் விளைவின் மேலேறி செல்வதைக் குறிக்கிறது என்று நினைத்தேன். ஆனால் திசைசைத் தேரும் பெருவிசை வெள்ளம் பீஷ்மர் தன் முடிவினைச் தெரிவு செய்யும் கட்டம் இது.

இரண்டாம் நாள் போர் தொடங்கி பத்தாம் நாள் போர் வரை புனைவின் வழியாக இந்நாவல் காட்டிச் செல்கிறது. போர் நடப்பதை வாசிப்பது உள எழுச்சியை உருவாக்குகிறது என்றால், அந்தி முரசு ஒலித்தவுடன், ஒரு புகை மண்டலமான ஒரு உலகத்தை திசைதேர் வெள்ளம் காட்டுகிறது. அந்த இருளிலும், புகை மண்டலத்திலும், அதற்கே உரிதான வீச்சத்திலும் ஜெயமோகன் நமக்குத் காட்டித்தரும் காட்சிகள் வாசிப்பவரை ஒரு உளத் தளர்வுக்கு எடுத்துச் சென்றுவிடுகிறது. குறிப்பாக போருக்குப் பின்னர் இறந்தவர்களைச் சிதையேற்றும் காட்சி, மருத்துவ நிலைக் காட்சிகள், காளிகளும் கூளிகளும் அவ்விடத்தில் இருப்பவர்களின் மனதைப் பித்தாக்கும் காட்சிகள்…

“ஒரு குவளை நீர் மட்டுமே எஞ்சுகிறதென்றால் அதை பகிர்ந்துண்ணலாகாது. இருவரும் இறப்பதற்கே அது வழிகோலும். எனக்கே என எண்ணுபவனே இந்நிலத்தில் உயிர்விஞ்ச இயலும். அறிக, பாலை ஓநாய் தனித்தது! முழுத் தனிமையை அது தனக்கான காப்பாக கொண்டுள்ளது” என்றார் சுவாமர்.

திசைதேர் வெள்ளம் – 44

வெண்முரசு பெண்களின் பங்கு இந்த நாவலில் வெகுவாகக் குறைந்துள்ளது. அனைவரையும் இம்முடிவு நோக்கித் தள்ளிவிட்டு தொலைவிலிருந்து அதன் வரவு செலவுகளைக் கணக்கிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

போரின் நடுவே குறுக்கே ஓடும் ஒவ்வொருவரின் மனநிலையைக் காட்டிச் செல்கிறது வெண்முரசு. ருக்மியிடம் துரியோதனன் உரையாடும் இடத்தை மேலே மேற்கோள் காட்டி இருக்கிறேன். தன் சகோதரர்கள், மகன்கள் அனைவரும் வீழும் முன்னரே அவன் மனநிலையில் தெளிவு வந்துவிடுகிறது. ஆனாலும் போர் நடந்துதான் தீரவேண்டும். இருவரில் ஒருவர் வாழ்வதே இனி இயல்வது என்கிற முடிவில் போர் நடப்பதை துரியோதனன் உணர்ந்தே இருக்கிறான்.

பீமன் தன் சபதத்தை முடிப்பதற்கென, கொத்து கொத்தாய் உயிர் பறிக்கும் காட்சிகள், வாசிப்பவரின் மனதைப் பதைபதைக்க வைப்பவை. குண்டாசி இதைப் பற்றி என்ன நினைக்கிறான் என்று நான் அறிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன். கடமைக்கெனவே தற்கொடை அளித்தான் அரவான். அவனைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறான் கடோத்கஜன். பிற இளம் கௌரவர்கள் இளம் பாண்டவர்கள்! போர் தொடங்கும் முன்னர் தலைப் பாகையை கால்பந்தாக்கி விளையாண்டவர்கள்!

கடோத்கஜன் போரிடும் காட்சிகள் முரட்டுத்தனமானவை. துரியோதனன் அவ்வப்போது வந்து அவனை விரட்டிவிட்டுப் போகிறான்.

பெரியவர்கள் தோற்றாக வேண்டும். மிகப் பெரியவர்கள் முற்றாக தோற்கவேண்டும். அதுவே இவ்வுலகின் நெறி” என்றான் கடோத்கஜன். இளைய யாதவர் “ஆம், மெய்” என்று அவன் தோளில் தட்டியபின் வெளியே நடந்தார்.

டோத்கஜன், சிகண்டி, சாத்யகி, விந்தன்/அனுவிந்தன் உள்ளிட்ட சத்ரியர்கள், அனைவருக்கும் மேலாக பீஷ்மர் என்று என்று அனைவர் உள்ளத்திலும் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டுள்ளது. அதை மனதின் ஓர் பக்கத்தில் புதைத்துவிட்டுத்தான் போரிட வருகின்றனர்.

பிதாமகரை இயக்கும் முதல் விசை என்பது அவருடைய ஆணவமே. பெருநோன்புகளை தான் ஏற்றுக்கொள்வது, தன் குலத்திற்கே பொறுப்பேற்றுக்கொள்வது, களம்முன் நின்று போரிடுவது அனைத்தும் அவ்வாணவத்தாலேயே. ஆணவம் சிதறும் எதையும் அவர் செய்யப்போவதில்லை. தன் ஆணவத்தை அவர் முற்றழிக்காதவரை அவரை நம்மால் வெல்லவும் இயலாது” என்று சிகண்டி தொடர்ந்தார்
சிகண்டி “நான் சொல்வது பொய்யென்று இளைய யாதவர் சொல்லட்டும். ஏன் பொறுமையிழந்து அவர் படையாழி ஏந்தினார்? ஏன் அவர் பிதாமகருக்கு எதிராக சென்றார்?” என்றார். அனைவரும் இளைய யாதவரை நோக்க அவர் அதே புன்னகையுடன் அமர்ந்திருந்தார். “நான் சொல்கிறேன்” என்று சிகண்டி தொடர்ந்தார். “தன் முழுதுளத்தாலும் உந்தி இளைய பாண்டவரை எல்லை கடக்கச்செய்ய அவர் முயன்றார். அதில் மீண்டும் மீண்டும் தோற்று சினந்தார். இறுதியில் அது இயல்வதேயல்ல என்று உணர்ந்ததும் கரைகடந்தார்.”
“அவர் படைக்கலம் எடுத்ததைப்போல் நம்மை நாமே களத்தில் காட்டிக்கொடுக்கும் செயல் வேறெதுவுமில்லை” என்று சிகண்டி தொடர்ந்தார்.

திசைதேர் வெள்ளம் – 28

krishna with Bhishma at kurukshetra

பீஷ்மர் முரட்டுத்தனமான காட்டு வெள்ளம் போல் போரிகிறார். அவ்வப்போது அவரிலும் அறங்கள் எழும் வேளையில் படைக்கலம் தாழ்த்துகிறார். அதன் விளைவாக இந்நாவலின் தொடர்ந்து தன் உடன் வாழும் வசுக்களைப் பகைத்துக்கொள்கிறார். பத்தாம் நாள் போருக்கு வருவதற்கு முன்னர், அதற்குத் தயாராக்கிக் கொள்ளும் பீஷ்மரைக் காட்டும் தருணங்கள் பாரமானவை.

ஆயிரம் ஆண்டுகள் கெடுநரகில் விழுவேன். என் மைந்தர் அளிக்கும் ஒருதுளி நீரோ அன்னமோ வந்தடையா இருள்வெளியில் உழல்வேன். அதன் பின் கோடி யுகங்கள் பருவெளியில் வீணாக அலைவேன். என் அன்னையால் பழிக்கப்படுவேன். எனை ஆக்கிய பிரம்மத்தால் ஒதுக்கப்படுவேன். அது நிகழட்டும். இக்களவெற்றி ஒன்றை ஈட்டி உனக்களித்துவிட்டு செல்கிறேன். இது என் ஆணை!” துரியோதனன் கைகூப்பி சொல்லடங்கி இருந்தான். துர்மதன் “பிதாமகரே!” என்றான். பீஷ்மர் கைநீட்டி அவனைத் தடுத்து “இறுதித் தளையையும் இன்று அறுப்பேன். இனி தேவவிரதனாக அல்ல, கீழ்மை மட்டுமே கொண்ட கிராதனாக என்னை பாடுக சூதர்!” என்றபின் அவையிலிருந்து வெளியே சென்றார்.

திசைதேர் வெள்ளம் – 61

இத்தனை நாட்களாக வெண்முரசைத் தாங்கிச் சென்ற பெருமகனார் இன்று அம்புப் படுக்கையில் வீழ்ந்து கிடக்கிறார், தானே தன் முடிவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு.

அவரை முழுவதும் அம்பால் சிதைத்துவிட்டு, காண்டீபத்தைத் தன் தேரில் அர்ஜுனன் அரையும்போது வாசிப்பவர் மனம் நொந்து போகிறது. கௌரவன் சுபாகு அர்ஜுனனிடம், அவன் கொன்ற தன் மகனுக்காக இறுதிச் சடங்கு நடத்தச் சொல்ல வேண்டிக்கொள்ளும் கட்டத்தில் நான் கசிந்து விட்டேன். கனர்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரம் மனங்கள் நம்மை துயர் கொள்ள வைக்கின்றன. தொடரட்டும்.

பீஷ்மர் 2

இன்னொரு பதிவில் பார்ப்போம் நண்பர்களே.
வணக்கம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s