சப்தமாதரும் பாமாவும் – வெண்முரசு கன்னித் தெய்வங்கள் – 2


பாரத கதை பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம். ஆம். பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். என் நண்பரிடத்தில், என் மனைவியிடத்தில், என் மேலாளரிடத்தில். அவ்வளவு ஏன். உங்களிடத்தில் கூட. வெண்முரசு தரும் வீச்சு அத்தகையது. நீலம் நாவல் கிருஷ்ணனுக்கானது என்றார் ஜெயமோகன். எழுதியும் நீல தாகம் தீரவில்லை போலிருக்கிறது. இந்திர நீலமும் நீலனைப் பற்றியே பேசி கிறங்கடிக்கிறது. நீலனுக்காக உருகினாள் ராதா. இங்கே நீலனை இயக்குகிறாள் பாமா.

சரி தலைப்புக்கு வருவோம்.

வெண்முரசின் கன்னித் தெய்வங்கள் வரிசையின் இரண்டாவது பதிவு இது

 1. அம்பை – வெண்முரசு கன்னித் தெய்வங்கள் – 1
 2. பாமா – சப்தமாதரும் பாமாவும் – வெண்முரசு கன்னித் தெய்வங்கள் – 2
 3. சிசுபாலன் – சிசுபாலனை எதிர் கொண்ட சப்த கன்னிகைகள்

ஜாம்பவான்-கிருஷ்ணன்-சத்யபாமா

பதின்பருவம் தாண்டி வருகிறாள் பாமா. யாதவர்களை ஒன்றாக திரட்ட வருகிறான் கிருஷ்ணன். பஞ்சாயத்துகள் பேசி முடித்த பிறகு உணவு உண்ணும் வேளை வருகிறது. பாமாவின் தந்தை சத்ராஜித் உடன் இருக்கிறான் இளைய யாதவன் கிருஷ்ணன். பாமாவின் வளர்ப்புத் தாய் மஹதி பாமாவிடம் வருகிறாள். அங்கிருந்து கதையை ஆரம்பிப்போம்.

மஹதி மரத்தட்டில் இரண்டு அப்பங்களை எடுத்துவைத்து மஞ்சள்மூங்கில்குவளையில் ஆவியெழும் பாலமுதை ஊற்றி அவள் கையில் கொடுத்து “கொண்டு சென்று கொடு” என்றாள். “யாரிடம்?” என்றாள் பாமா. “அடி, அதற்குள் பெண்ணுக்குரிய மாயங்களை கற்றுக்கொண்டாயா? யாருக்கு என்று அறியமாட்டாயா நீ?” என்றாள் மஹதி. அவள் தலைகுனிந்தாள்.

இன்று தெரிந்ததடி, எதற்காக இத்தனை முழுமையுடன் நீ பூத்து மலர்ந்திருக்கிறாய் என்று. மூதன்னையர் அனைத்தும் அறிந்தவர்கள். விண்ணுலகில் அவர்கள் கூழாங்கற்களை நகர்த்திவைத்து விளையாடுவதன் விரிவே மண்ணில் அழுதும் சிரித்தும் நாம் ஆடும் வாழ்க்கை.” அவளைத் தழுவி “அங்கே தங்கள் பொக்கைவாய் திறந்து சுருங்கிய விழிகள் ஒளிவிட அவர்கள் உன்னைப்பார்த்து நகைத்துக்கொண்டிருக்கிறார்கள் இப்போது” என்றாள்.

வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 10

ஏழு காலடி தொலைவில் நிற்கிறான் கிருஷ்ணன். அவனை நோக்கி பாமா எடுத்து வைக்கும் ஒவ்வொருகாலடிக்கும் ஒரு சிறப்பு சேர்க்கிறார் ஜெயமோகன்.

நண்பர்களே பாரதம் சொல்லிய கதைதான். ஆனாலும் வெண்முரசின் சுவை என்பது ஜெயமோகன் தன் புனைவுத் திறனை அதில் ஏற்றியிருப்பதனால்தான். ஏன் என்று சொல்கிறேன் கேளுங்கள்.

ஒவ்வொரு காலடிக்கும் பாமா எதிரில் சப்தமாதரில் ஒவ்வொரு தேவதை வருகிறது. பாமா கிருஷ்ணனுக்கு தரப்போவது என்ன என்று வினவுகிறது. பிரசன்னமாயிருக்கும் தேவதையின் இயல்பையும் பாமா கிருஷ்ணனுக்குத் தருவதாய் சொல்வதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது புன்னகைத்திருந்தால் நான் அடைந்த இன்பத்தை நீங்களும் அடைந்திருக்கிறீர்கள் என்ற பொருள். ஒவ்வொரு அடிக்கும் தேவதைகள் வாழ்த்தி மறைகின்றன.

சப்த மாதர் வரிசை - மலையடிப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்
சப்த மாதர் வரிசை – மலையடிப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்

கருதுசொல்லெல்லாம் உதிர்ந்து எஞ்சிய ஒற்றைச்சொல் திறந்து எழுந்த பாதையில் முதல்காலடி எடுத்துவைத்தாள்.

அவள்முன் நாணம் நிறைந்த புன்னகையுடன் கன்னி ஒருத்தி தோன்றினாள். மணிமகுடத்திற்குக் கீழ் இமைசரிந்த நீள்விழிகள். அங்குசமும் வேலும் ஏந்திய மேலிரு கைகள். அளித்தல் காத்தல் என மலர்ந்த கீழிரு கைகள். செம்பட்டாடை அணிந்து தோகைமயில் மேல் அமர்ந்திருந்தாள். “இளையவளே, என்னை கௌமாரி என்கின்றனர் கவிஞர். உன் கன்னிமைக்கு இதுநாள்வரை காவலிருந்தேன்” என்றாள். ”தேவி., அருள்க!” என்றாள் பாமா. “அங்கிருப்பவனுக்கு நீ அளிப்பதென்ன என்று சொல்” என்றாள் தேவி. பாமா நாணி சிறு உதடுகளைக் கடித்து தலைகுனிந்தாள். “சொல் என் கண்ணல்லவா?” என்றாள் அன்னை.

என் இல்லத்தில் ஏழு சிறுமூலைகளை நீ அறிந்திருப்பாய்” என்றாள் பாமா. “ஒவ்வொன்றிலும் நான் சேர்த்துவைத்த சிறுபொருட்கள் உள்ளன. சிறுகூழாங்கற்கள், வளையல்துண்டுகள், வாடிய மலர்கள், ஆடைநூல்சுருள்கள், ஆடித்துண்டுகள், உடைந்த களிப்பாவைகள். இன்றுவரை எவரும் அவற்றை அறிந்ததில்லை. அன்னையும் செவியிலும் ஆய்ச்சியரும் அறியாது உருளும் விழிகளுடன் மெல்லடிவைத்துச் சென்று அங்கே என்னை ஒளித்துக்கொள்வேன். கரந்து வைத்தவற்றை ஒவ்வொன்றாக வெளியே எடுப்பேன். சிறுவிரல்களால் வருடியும் எண்ணியும் கூர்ந்தும் நெஞ்சோடணைத்தும் நோக்கி உள்ளே அடுக்கி வைப்பேன். ஒவ்வொன்றையும் நோக்கி எனக்கென மட்டுமே பேசிக்கொள்வேன். அவைகொண்ட பொருளென்ன என்று நானறியேன் தேவி, நீயே அறிவாய். அவனுக்கு நான் அளிக்கும் முதற் காணிக்கை அவையல்லவா?

புன்னகையுடன் அன்னை ”அவனை உன் மடியில் ஆடும் மைந்தனாக்கினாய் சிறியவளே. அவன் வாழ்க!” என்று சொல்லி காற்றிலாடும் வண்ணத்திரையென்றாகி மறைந்தாள்.

சப்த கன்னியர் - கொடும்பாளூர், புதுக்கோட்டை மாவட்டம்
சப்த கன்னியர் – கொடும்பாளூர், புதுக்கோட்டை மாவட்டம்

தான்தான் அவன் விளையாட்டுத் தோழி என்கிறாள் கௌமாரியிடம்.

தான் அவன் கைபிடித்து வழிகாட்டும் அன்னை என்கிறாள் வைஷ்ணவியிடம்

தன்னை வெல்லும் விழைவை. வென்றமையும் நிறைவை என்கிறாள் மகேஸ்வரியிடம். யார் என்று நீங்கயே யூகித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.

தன்னை அன்றி வேறெதையும் அவன் காண அனுமதிக்க மாட்டேன் என்கிறாள் வராகியிடம். தன்னுடைய பொறாமையினால் அவனை முழுக்க சூழ்ந்திருப்பேன் என்கிறாள்

சாமுண்டி வரும் தோரணையா, சாமுண்டியிடம் பாமா அளிக்கும் பதிலா எது சிறந்தது?

தீ பற்றி எழும் ஒலியுடன் அவள் முன் வந்தவள் சாமுண்டி. இருவிழிக் கரியில் எரியென எழுந்த நுதல்விழிகள். திசையெங்கும் கிளைவிட்டு எழுந்த காட்டுமரமென எட்டு பெருங்கரங்கள். சூலம், வாள், அம்பு, சக்கரம் ஏந்திய வலக்கைகள். வடச்சுருள், கேடயம், வில், சங்கு கொண்ட இடக்கரங்கள். செங்கனல் விழுதென சடைகள். மின்னல்கொடியென சுற்றித் துடிக்கும் செம்மணியாரங்கள். கொள்ளிமீன் நின்ற குண்டலங்கள். “உன் கொடையென்ன அவனுக்கு?” என்றது கீழ்வானில் எழுந்த இடியோசை.

என் பெருஞ்சினம்” என்றாள் பாமா. “சொல்பொறுக்க மாட்டேன். நிகர் வைக்க ஒப்பேன். முதல்சொல் சொல்லேன். மணியிடையும் தலைதாழ மாட்டேன்.” அன்னை புன்னகைசெய்தாள். “கொல்லும் படைக்கலங்கள் கொண்ட உடலுடன் அவன் முன் நிற்பேன். விழி எரிவேன். முகம் கனல்வேன். கை துவள தோள் நிமிர்வேன். சொல் பொங்குவேன். சுடுவேன். அணைந்து கரியாகி எஞ்சுவேன்… ஒருபோதும் குளிரமாட்டேன்.” அன்னை நகைத்து “வாழ்க அவன் குடி!” என்று அணைந்தாள்.

தான் அவனில் சரிபாதி என்கிறாள் இந்திராணியிடம். “அவன் இல்லமெங்கும் நிறைவேன். முற்றத்தில் கோலம். முகப்பறையில் மலர்ச்செண்டு. மஞ்சத்தில் மது. அடுமனையில் அனல். புறக்கடையில் பசு.

எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன்

இறுதியில் வருகிறாள் பிராமி

குழலில் எழுந்த விழியை அவள் கண்டாள். நோக்கா விழி. ஒரு சொல்லும் எஞ்சாதது. அழகொன்றே ஆகி அமைந்தது. காற்றில் மெல்ல நலுங்கியது. கருமுகில் மேல் எழுந்த இந்திரநீலம். அவள் அருகணைய இளந்தென்றல் என அவள் முன் தோன்றியவள் பிராமி. விழிமணி மாலையென ஒழுகிய ஓங்காரம். வான்கங்கை நிறைத்த பொற்கமண்டலம். குளிர்முகில் தேங்கிய விரிவிழிகள். வாழ்த்தும் வளமும் என ஆன செங்கைகள். அலைபிறந்த நுரையென தூவி கொண்ட அன்னம் மேல் மலரமர்வில் அமர்ந்து புன்னகைத்து அவள் வினவினாள் “அளிப்பதற்கு எஞ்சுவதென்ன மகளே?”

“அவன் மறைந்தபின் எஞ்சும் விழிநீர்” என்றாள் பாமா. “இறுகி ஒரு வைரமென்றாகி அது என்னில் நிறையும். அதை விண்ணுக்கு எடுத்துச்சென்று அவனுக்குப் படைப்பேன். ஏழ்பிறவியில் எவரும் தீண்டாத ஒன்று. அவன் சொல் நின்ற கலம். அவன் குடி எழுந்த நிலம். அவன் குலநினைவுகளில் அன்னையென்றாவேன். அவன் கொடிவழியினர் பாடும் பெருந்தெய்வம் நான்.” அன்னை விழிமலர்ந்து “அருள் பெறுக!” என வாழ்த்தி மறைந்தாள்.

இந்த வாரம் வந்த இந்தப் பதிவைப் படித்தபின் கனத்த இதயத்துடன் தான் கைபேசியை அணைக்கவேண்டியிருந்தது. ஆம். இல்வாழ்க்கையில் இதுவன்றி நாம் வேண்டுவதேது?

இன்னுமொரு இனிய பதிவில் சந்திப்போம் அன்பர்களே.

நாவலின் இந்தப் பகுதியை வாசிக்க – ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 11

வாழ்க பாரதம்

2 thoughts on “சப்தமாதரும் பாமாவும் – வெண்முரசு கன்னித் தெய்வங்கள் – 2

 1. மிகப்பெரிய நாவலிலிருந்து நீங்கள் இதைப் போல சின்னச்சின்ன பகுதிகளாகத் தருவது படிப்பதற்கு சுலபமாக இருக்கிறது. மொத்தமாகப் படித்துக் கொண்டு போகையில் சில இடங்களை நம்மால் அதிகம் ரசிக்க முடியாது. இதைப் போல படிக்கத் தருவதால் இந்த முழு கதையையும் படிக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்படுகிறது. எப்போது ஆரம்பிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. ஒரு kindle இருந்தால் நன்றாக இருக்கும், இல்லை? பிள்ளையிடம் அடி போடுகிறேன். 🙂 🙂

  அவரது நாவலிலிருந்தே எடுக்கிறீர்களா இந்த பாராக்களை? அல்லது படித்துவிட்டு உங்கள் சொந்த வார்த்தைகளில் எழுதுகிறீர்களா?
  எதுவாக இருந்தாலும் பாராட்டுக்கள்!

  1. வணக்கம் அம்மா. இந்தப் பதிவை எழுதும்போது உங்களுடைய பழைய பதில்தான் நினைவிற்கு வந்தது. ஒரு வகையில் இது உங்களுக்காக எழுதப்பட்ட பதிவு என்றே கொள்க. நிற்க,

   மேற்கோள்கள் அப்படியே அவர் எழுதியது. மேற்கோள் அல்லாமல் இருப்பதை விளம்பியவன் நான். 🙂

   ஃஃஃ
   மிகப்பெரிய நாவலிலிருந்து நீங்கள் இதைப் போல சின்னச்சின்ன பகுதிகளாகத் தருவது படிப்பதற்கு சுலபமாக இருக்கிறது. மொத்தமாகப் படித்துக் கொண்டு போகையில் சில இடங்களை நம்மால் அதிகம் ரசிக்க முடியாது. இதைப் போல படிக்கத் தருவதால் இந்த முழு கதையையும் படிக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்படுகிறது.
   ஃஃஃஃஃ
   ஆம் வெண்முரசு மட்டுமல்ல, பிற நூல்களிலிருந்தும் மேற்கோள்களைக் காட்டுவதன் நோக்கமே அதுதான். பழைய தூர்தர்ஷனில் மலரும் நினைவுகள் என்று வருமே. அது போல.

   தொடர்ந்த தங்களின் ஊக்குவிப்புக்கு நன்றி அம்மா. தமிழ் பதிவுலகம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உங்களைப் போன்றவர்கள் அவசியம். வணக்கம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s