சொல்வளர்காடு|ஜெயமோகன்


தருமன் விழிகளில் சினத்துடன் “விளையாட்டு வேண்டாம்” என்றார். “இவன் ஏன் வெறுமனே பார்த்திருந்தான் என்று சொல்கிறேன். இவன் துணைவி உண்ட பழம் நஞ்சு. ஆனால் அதை அவள் அமுதென நினைத்தாள். அதை இவன் சொல்லப்போனால் இவனை தன் எதிரி என எண்ணுவாள். ஆகவே தாளாத்துயருடன் தனிமையில் அதை நோக்கியிருந்தான்.” தருமன் “வீண்சொல் தேவையில்லை” என்றபடி திரும்ப “கேளுங்கள், அரசே! அல்லது உண்மையிலேயே அது அமுதகனியாக இருக்குமோ? அழிவின்மையை தான் மட்டுமே அடையவேண்டுமென நினைத்து அவள் மட்டும் உண்டாளோ?” என்றான்.

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 55 ஒன்பதாம் காடு : யக்‌ஷவனம்

சொல்வளர்காடு – ஜெயமோகன்
இணையத்தில் வாசிக்க – நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 1

வெண்முரசு வரிசையில் முதற்கனல் அம்பைக்குப் போகிறது, நீலம், இந்திர நீலம் கிருஷ்ணனுக்கு. காண்டீபம் அர்ஜுனனுக்கு, வெய்யோன் கர்ணனுக்கு.

சொல்வளர்காடு நாவல் பாண்டவர்களின் வனவாசத்தைப் பற்றிச் சொன்னாலும், இதனை தருமனுக்கு அளிப்பதுதான் சரியாக இருக்கும்.

அதை விடுத்து இந்து ஞான மரபை வெவ்வேறு பரிமாணங்களில் காட்டுவதாகவும் அமைகிறது. விஷ்ணுபுரத்தின் ஞான சபைக்கு விவாதிக்க வந்தவர்கள் ஒவ்வொருவருடனும் போய் அவர்களுடைய ஆசிரமத்தில் தங்கி விட்டு வந்த அனுபவம், சொல்வளர்காட்டில் கிடைக்கும்!!

வெவ்வேறு குருநிலைகளையும், அதன் பின்புலத்தையும் முன் வைக்கிறது இந்த நாவல். தவிர, ஒன்றிலிருந்து இன்னொன்று மேலெழுந்து வந்து, எது தூயதோ அது நிலைக்கிறது, அதைவிட தூயது வரும்வரை.

இந்த 3 வரிக்கு மேல் நான் ஞானம் பேசி, எனது சூனியத்தைக் காட்டுவதாக இல்லை. இறைமறுப்பாளர்களின் அத்தியாயத்தை நான் ஆர்வத்துடன் வாசித்தேன். ஒரு தொகுப்புக்காக, குருநிலைகளையும் அவற்றின் பின்புலத்தையும் மனவரைபடமான கீழே தொகுத்திருக்கிறேன்.

சொல்வளர்காடு
Enter a caption

பகடைக் களத்தில் அடைந்த கேவலமும், அதன் மூலம் நிமிராத தலையுடனும், மன்னிக்கக்கூட மாட்டேங்கிறாளே என்கிற விசனமும், ஒரு வார்த்தையாவது சொல்லிவிடமாட்டாளா என்கிற ஏக்கமும் கிடந்து அலைக்கழிக்கிறது தருமனை. எரிமலைக் களத்தில் புத்துயிராகப் பிறந்து வந்திருக்கிறான். இனி வரும் காலத்தில் எப்படிப்பட்ட தருமனை நாம் காணப்போகிறோமோ.

யாதவர்களின் பூசல் இந்த நாவலில் விரிவாக அலசப்படுகிறது. விரிசல் விட்ட கத்தியாகிக் கிடக்கிறது துவாரகை. இளைய யாதவர் அதை விளக்குவதும், சால்வனின் படையெடுப்பை நொறுக்கும் போர் தந்திரங்களையும் படிக்கும்போது, ஜெயமோகனுக்கு ஒரு ஏசி மெசின் வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது. எத்தணை உக்கிரம்!

இளைய யாதவர் பல இடங்களில் இங்கே வாதிடுகிறார். தனிப்பட்ட காழ்ப்பிற்காக நாடுகளின் மக்களை எப்படி பலிகொடுக்கலாம் என்று பாஞ்சாலியிடம் வாதிடுகிறார். பிள்ளைப்பாசம், உனக்கென்றால் ஒன்று, எளிய யாதவ மக்கள் என்றால் ஒன்றா என்று சாந்தீபனி முனிவரிடம் வாதிட்டு அவரை குருநிலையை விட்டே துரத்துகிறார்.

ஒரு இனிய வாசிப்பனுபவம்.

அதன்பிறகு வெண்முரசு தொட்டே ஒரு மாதமாகிறது. அதை விடுங்க. மேலே உள்ள படத்தைப் போட்டு முடித்தே இரண்டு வாரமாகிறது. பிரசுரிக்க காலம் கூடி வரவில்லை. ஜெயமோகன் ஓடுகிறார். நமக்கு இளைக்கிறது. இந்த வாரமாவது கிராதம் தொடங்கவேண்டும்.

வளர்க பாரதம்!

5 thoughts on “சொல்வளர்காடு|ஜெயமோகன்

  1. மிகவும் நன்றாக இருக்கிறது, பல வாசகர்களுக்கு பயன்படும் முயற்சி, மிக்க நன்றி !

  2. அன்புள்ள திரு பாண்டியன் ராமையா

    ஒரு சிறு எதிர்கருத்து – இறுதியில் கந்தமாதனத்தில் தருமனின் மீட்சி என்று வரைந்துள்ளீர்கள். தருமரே சொல்வதுபோல கந்தமாதனத்தில் உலகின் (உலகியல் – அனல்வடிவன்) பெரும்பசியை பார்க்கிறார். பின்னர் சுப்ரகௌசிகரின் குருநிலைக்கு மீண்டபின் ஒருநாள் சூரிய உதயத்தில் நின்று அந்தப்பசிக்கு நிகராகும் அறத்தை காண்கிறார். அவரே சொல்வதுபோல அறம் என்பது அங்கேயே துலங்கிவருகிறது.

    சிறு விவரம்தான் – ஆனால் அந்த கிளைமேக்சின் கவித்துவம் சுப்ரரின் குருநிலையில் நிகழ்வதும் ஒரு காரணத்துக்காகத்தானே ?

    அன்புடன்
    மது

    • அன்பின் திரு மது. வெகு சிறப்பு. வெகு சிறப்பு. மீண்டு வந்தார் என்கிற black & white பொருளைத் தவிர வேறெதையும் குறிப்பிடவில்லை. அந்த அளவிற்கு உள்வாங்கும் திறமையும் எனக்கில்லை. தங்கள் வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி.

Leave a comment