“கர்ணா, சிரசினை குறிவைத்து அந்த அஸ்திரம் நீ தொடுக்காதே. குறி தவறிவிடும்…” அதற்குக் கர்ணன் சொல்வான்: “மத்ரேசா உனது கூற்றின் பொருள் எனக்குப் புரிகிறது. ஆனால் லட்சியம் குறிவைத்து தொடுத்திட்ட சரம் தனை மாற்றி தொடுப்பது தர்ம நீதிக்கு உகந்ததல்ல. தொடுத்த அம்பினை கர்ணன் திருப்பி வைப்பதில்லை என்பதை நீ அறியவும்…”
“அர்ஜுனா செத்தாய் நீ…” என உரக்கக் கூவியவாறு கர்ணன் நாகாஸ்திரத்தை இழுத்து விடலானான்.
இனி நான் உறங்கட்டும்
ஆசிரியர் – பி. கெ. பாலகிருஷ்ணன்
மொழி பெயர்ப்பு – ஆ மாதவன்
(மலையாள மூலம் – ഇനി ഞാൻ ഉറങ്ങട്ടെ | Ini Njan Urangatte)
பதிப்பு – சாகித்திய அக்காதெமி, முதல் பதிப்பு 2001
NLBயில் இரவல் பெற – In̲i nān̲ ur̲aṅkaṭṭum
கன்னிமாராவில் இரவல் பெற –
ஜெயமோகன் இந்த நாவலைப் பற்றி அதிகம் பேசியிருக்கிறார், எழுதியிருக்கிறார். அங் மோ கியோ நூலகத்தில் நிகழ்ந்த வெண்முரசு விவாதத்தின்போது கூட இதைப் பற்றிக் குறிப்பிட்டதாக நியாபகம்.
என்னைக் கவர்ந்தவை என்று சொன்னால் பைரப்பாவின் பருவத்தையும், பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய ‘இனி நான் உறங்கட்டும்’-ம் சொல்லலாம். பருவம் நாவல் ஒரு வரலாற்றுத்தன்மையை உருவாக்கி மிகவும் யதார்த்தமாகக் கதையைச் சொல்லும் படைப்பு. இனி நான் உறங்கட்டும் ஒரு பெரிய ஓலம் அல்லது நினைவுக் கொந்தளிப்பைக் கொடுப்பதாக இருந்தது. வரலாற்றுத்தன்மை குறித்து அந்தப் படைப்பில் கவனமே இல்லை. இரண்டுமே என்னை பாதித்த படைப்புகள். 28 வயதிலேயே முழுமையாக மகாபாரதத்தை என்றாவது எழுதிப்பார்க்க என்னைத் தூண்டிய படைப்புகள் அவை.
நூலகத்தின் Reference பகுதியில் இருந்த இந்த நூல், சமீபத்தில் இரவலுக்காக மாற்றி இருக்கிறார்கள். தூக்கிக் கொண்டு வந்துவிட்டேன். ‘இரவு’ நாவலை திருப்பி அளித்த அடுத்த நாளே இந்த நாவலை எடுக்க நினைத்தேன். இரவின் தாக்கம் இதை எடுக்க இயலாது செய்துவிட்டது. அப்படியே வைத்துவிட்டு கடந்த வார இறுதியில்தான் எடுக்க முடிந்தது.
இந்த நாவலை ஒரு மிகப்பெரிய ஓலம் என்று சொல்கிறார் ஜெயமோகன். ஒரு சூன்யம். போர் முடிந்தபின் ஏற்படும் சூன்யம். சகோதரர்களுக்கிடையே மூண்ட போர், ஒட்டு மொத்தமாக அனைவரையும் அள்ளிக்கொண்டு போன பின், சூன்யம் கவிழ்ந்த அமைதியின் கொந்தளிக்கும் உணர்ச்சி வெளி. பதறுகிறார்கள் ஒவ்வொருவரும்.
இந்த மகாபாரத நாவல், கர்ணனை மையப்படுத்தி எழுதப்பெற்றது. கர்ண வதம் முடிந்த பிறகு நிகழ்பவை காட்சிப் படுத்தப்படுகின்றன. மகாபாரதத்தின் கர்ணன், அனைவரையும் வசீகரிக்கும் ஒரு பாக்கியவான். சக்தி இருந்தும், தோற்கிறான். உயர் குலத்தில் பிறந்திருந்தும், சூதனாய் வளர்கிறான். அதர்மம் என பிறகுக்குத் தோன்றினாலும், அதிலும் தர்மம் காண்கிறான். காக்கவேண்டிய அன்னை அவனைக் கைவிடுகிறாள். வெல்ல வேண்டியவன் சாகிறான். இப்படி எல்லாம் இருக்கும்போது, கர்ணன் இலக்கியவாதிகளை அதிகமாக வசீகரிக்கிறான்.
நாவலின் தொடக்கத்தில் துரியோதனனின் மரணம் காட்டப்படுகிறது. அந்தக் காட்சியின் வீரியமானது நம்மை நாவலுக்குள் தள்ளிவிடுகிறது. ஈர்த்துக்கொண்ட இந்த நாவல் கர்ணனின் இறப்புக்குப் பின்னால், உண்மைகள் தெரிந்த யுதிஷ்டிரனின் சகோதர தாபத்தைச் சொல்கிறது. தாங்க முடியாத குற்ற உணர்வால் வாடும் யுதிஷ்டிரனைப் பார்த்து சகோதரர்கள் கோபம் கொண்கிறார்கள். ‘அபிமன்யு சாகிறான். வித்தைகளைக் கற்றுக்கொடுத்த குருக்கள் மடிந்தார்கள். பீஷ்மர் அம்புப் படுக்கையில் வீழ்ந்தார். அப்போதெல்லாம் வருந்தாத நீ, எதிரியான கர்ணனுக்காக ஏன் வருந்துகிறாய்’ என்று கோபிக்கிறார்கள்.
- கர்ணன் களம் பட்ட கதையையும், அதன் பின் உள்ள நியாய அநியாய வாதங்களையும் நாரதர் யுதிஷ்டிரனுக்குக் கூறுவதாக, எழுத்தாளர் முன் வைக்கும் கூற்றுகள்
- கர்ணன் – குந்தி சந்திப்பு
- கர்ணன் – கிருஷ்ணன் சந்திப்பு
- துகிலுரிதல்
- துரியோதனனின் கையறு நிலை
- கர்ணவதம்
ஆகியன இந்த நாவலில் படிப்பவருக்கு மன எழுச்சியை ஏற்படுத்தும். போர் ஓய்ந்த கங்கைக் கரைக் காட்சிகள் கோரமானவை. கொந்தளிப்பானவை.
அழிவின் வேராக குந்தி, அழிவை அமலாக்கும் திரௌபதி

குந்தியின் அழுத்தமான முகம் நாவல் முழுவதும் வந்து போகிறது. கர்ணன் யுதிஷ்டிரனின் அண்ணன் என்பதால், நீத்தார் கடன் செய்யும்போது கர்ணனுக்குத்தான் முதலில் செய்யவேண்டும் என்று கர்ண பிறப்பின் ரகசியத்தை வெளிக் கொணர்கிறாள் குந்தி. வாசகனுக்கு வரும் பல கேள்விகள் திரௌபதிக்கு எழுகின்றன.
உண்மை, உலகை நோக்கி பிராண பயத்துடன் பாய்ந்து வருவது போல – திரௌபதி படபடப்போடு எழுந்து நின்றவள் குந்தியின் முழங்கால்களில் கைகளைச் சுற்றி, முகம் உயர்த்தி அழலானாள். தனக்க அதீதமாகிய ஒரு வித ஆற்றலின் உந்துதலினால் பரபரத்தவாறு அவள் சொல்வாள்…
“அவன், உன் மகன் என்பதை ஒரு தடவையேனும், ஏன் நீ சொல்லவில்லை தாயே… அவன் உன் மகன்தான் என்பதைக் கூறி இந்த மாபெறும் நாசகாரியத்தைத் தடுத்திருக்கலாமே?”
-திரௌபதி ப129
பாண்டவ-கௌரவர்களின் ஆயுதப் பயிற்சி அரங்கேற்றத்தின்போது, கர்ணனை குலப்பிறப்பை இழிந்து பேசும்போது மயக்கமுற்று விழும் குந்தி, அதையே அர்ஜுனனுக்குச் செய்வாளா என்று வினவுகிறாள் திரௌபதி.
சகோதர தாபத்தால் யுதிஷ்டிரன் நிம்மதி இழந்து காடு ஏகிறேன் என்கிறான். மகனை இறந்த சோகத்தில் தவிக்கிறாள் குந்தி. கர்ணன் கொடுத்த வாழ்வினால் பிற பாண்டவர்கள் மலைத்துப்போய் நிற்கிறார்கள். பாண்டவர்கள் அனைவரும் கர்ணனுக்காக வருந்தும் வேளையில், தீராத வஞ்சத்தை கர்ணன் மேல் வளர்த்து வந்த திரௌபதி தனிமையை உணர்கிறாள். தன் உடன் பிறந்தார்களும், தந்தையும் போரில் மாண்டார்கள். தனக்கென்று ஒரு மனிதரும் இப்போது இல்லை. துச்சாதனன் ஆடைகவர்ந்த போது, சிரித்து மகிழ்ந்த கர்ணனுக்காக இவர்கள் வருந்துகிறார்கள். நான் பட்ட வலிக்கும், வஞ்சத்திற்கும், தூக்கம் தொலைத்த தனது இரவுகளுக்கும் என்ன பொருள் என்று மனம் மயங்குகிறாள்.
“திரௌபதி! வீழ்ச்சியின் கெடுதி நிறைந்த முகூர்த்த வேளை ஒன்றில், ராஜசபையில் – கர்ணனின் முகத்தை நீ காணுகிறாய். நற்பண்புள்ள ஒரு ராஜமகள் சபை நடுவில் – துகில் உரியப்பட்டு அவமானம் கொள்ளும் நேரத்தில் நகைத்து கைதட்டும் நீசன் ஒருவனாக கர்ணனை நீ பார்க்கிறாய். அன்று நீ கண்ட காட்சி சத்தியமானது! ஆனால் அது, உண்மையின் ஒரு துளி மட்டுமே”
கிருஷ்ணன் – ப108
கிருஷ்ணனும், குந்தியும் கர்ணனின் பிறப்பு ரகசியத்தைக் கூறுகின்றனர். தவிப்பாலோ அன்பாலோ அல்ல. ஒரு விதத்தில் நடக்கப்போகும் அழிவுப் போரைத் தவிர்க்கவும், கர்ணனை கௌரவர் குழாமிலிருந்து, பாண்டவர் குழாமிற்கு மாற்றவுமே. விட்டு வந்தால், யுதிஷ்டிரனுக்கு அண்ணனாக, பாண்டவர் சாம்ராஜ்ஜியத்தை ஏற்கவேண்டும் என்று கர்ணனை மனம் மாற்ற முயலும் காட்சிகள் செரிவானவை.
யுதிஷ்டிரன் தூக்கிப் பிடித்திருக்கும் வெண்கொற்றக் குடையின் கீழே, அர்ஜுனன் சவுக்கேந்தி நடத்திடும் ரதத்தில், பீமசேவிதனாய் வீற்றிருக்கும் கர்ணனின் சித்திரம், அந்த முதன்மைப் பாண்டவனின் அருகில் இருக்கும் பாஞ்சால புத்திரியின் சித்திரம்! இதையெல்லாம் நினைவில் அணி சேர்த்திட பயந்த திரௌபதி தானாக தலையை உதறிக் கொண்டாள்.
ப237
(நான் ஒரு ஓவியனாக இல்லாது போய்விட்டேனே என்று வருந்துகிறேன், நண்பர்களே! எனக்கு பாண்டித்தியம் இருந்திருந்தால், அறு பாண்டவர்களுடன் பாஞ்சாலியின் சித்திரத்தை வரைந்திருப்பேன்.)
அதற்கு திரௌபதி விசனம் கொண்டு தனக்குள் கேள்வி கேட்டுக்கொள்கிறாள். பெண்ணாகிய தனக்கு தர்மநீதி தவறாத கணவர்கள் இழைத்த தவறுகள் குறித்து குமைகிறாள். அஸ்தினபுரி அரண்மனையில் பட்ட அவமானமாகட்டும், வனவாசத்திலாகட்டும், தான் கேவலப்படுத்தப்படும்போது ஒன்றுக்கு ஐந்து கணவர்கள் இருந்தும், அவர்கள் தன்னைப் பனையமாக்கி எந்த தர்மத்தைக் காக்கின்றனர் என்ற நொந்து கொள்கிறாள்.
எல்லாம் விதியென்று தான் சொல்லவேண்டும். எந்த ஒரு நேரத்திலும் தர்ம நீதிக்கு ஊறு ஏற்படும் வழிகளைப் பின்பற்றாத கணவர்கள் உண்மையில் லௌகீக நீதி பிறழாத உலகப் புகழ் ரத்தினமொத்தவர்களே! இருப்பினும், பெண் ஒருத்தி, வெட்கித் தலைகுனிந்திடும் நிலை வந்துவிட்டதல்லவா? ஆணிடமிருந்து பெண் எதிர்பார்க்கும் அன்பு – பெண்மைக்கே உரிய அனைத்து அபிமான உணர்விற்கும் அடிப்படையான அன்பு தனக்கு, தனது ஐந்து கணவர்களிடமிருந்து ஒருபோதும் கிட்டியதில்லை. பிரியங்கொண்டவளைப் பற்றியுள்ள ஆவல் காரணமாக- அன்பு காரணமாக – கணவர்கள் எதையும் ஒரு போதும் மறக்கவில்லை.
-திரௌபதி ப231

திரௌபதி குழம்பியபடி உதிர்க்கும் கேள்விகள் சாரமான பெண்ணீய பார்வை கொண்டவை.
துச்சானனது பிடியில் அகப்பட்டு, ‘சொல்லுங்கள் நீதிமான்களே – நான் தாஸியா?’ என்று அரண்டு அழுதிடும் திரௌபதியை நிமிர்ந்து பார்த்திடக்கூட சக்தியற்றவராகிய பீஷ்மர், “சுசரிதையாகிய பாஞ்சால புத்ரியே, மெத்த அறிவு கொண்ட யோக்யமானவர்கள் கடைபிடிக்கும் தர்மத்தின் போக்கை நீயே பார்க்கிறாய்… பலசாலியான ஆண்மகன், எதனை தர்மமென காண்கிறானோ, அதுவேதான் உண்மையான தர்மம்! பலவீனர்தர்மம் பற்றி சொன்னபல் அது அதர்மமாகவே பாவிக்கப்பெறும்! ஏனென்றால் இந்த வம்சத்தின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது!”
ப91
அவளுக்குப் பீஷ்மர் சொல்லும் பதில் சூடானது. ‘நீ கேட்பது நியாயம்தான். ஆனால் அதற்குப் பதில் சொல்லவேண்டியவன் யுதிஷ்டிரனே’ என்கிறார்.

பாண்டவர்களைக் கேள்வி கேட்கிறாள், கர்ண வதத்தை வஞ்சம் தீர்ப்பாக உணர்கிறாள். குந்தியின் அழுத்தமான முகத்தைக் கேட்கிறாள். கௌரவர்களைப் பார்த்துக் கேட்கிறாள். இறுதியில் போரில் வென்றாலும், யாருமே தனக்கு ஆதரவில்லை, இதையா நான் விரும்பினேன் என்று மனம் மயங்குகிறாள்.
ஒரு தாயாக, தன் குழந்தைகளிடம் ஆதரவாக நடந்து கொள்ளமுடியாமல் செய்துவிட்டது இந்த வஞ்சம் என்று வருந்துகிறாள் திரௌபதி. உணர்வுக் கொந்தளிப்பான பக்கங்கள் அவை. காந்தாரியை முன் வைத்து, ஒரு தாயாக, தன் தவறினை உணர்ந்து புலம்புகிறாள்.
கிருஷ்ண-கர்ண சந்திப்பு
பாண்டவர்களின் தூதனாக கிருஷ்ணன் அஸ்தினபுரி வருகிறான். போரைத் தவிர்க்க இயலாது வெறுங்கையுடன் திரும்புகிறான். திரும்புவதற்கு முன்னர் கர்ணனைச் சந்தித்து, அவனது பிறப்பின் ரகசியத்தை வெளிப்படுத்துகிறான். பாண்டவர்கள் பக்கம் சேர்ந்து, பாஞ்சாலி சமேதராக நாடாள அழைக்கிறான்.

உறுதியாக மறுக்கிறான் கர்ணன். மீண்டும் மீண்டும் அஸ்தினபுரியின் ஆயுதப் பயிற்சி அரங்கேற்றத்தில் தன் மானம் காத்த துரியோதனைத் திரும்பத் திரும்ப நினைவு கூர்கிறான் கர்ணன். தன், வளர்ப்புத் தாய் ராதையைப் பற்றி கர்ணன் நினைத்துப் பார்க்கும் இடங்கள் நெகிழ்வை ஏற்படுத்துபவை. தோல்வியுடனும் வருத்தத்துடனும் திரும்புகிறான் கிருஷ்ணன்.
“பூமிக்கு சர்வநாசம் நெருங்கிவிட்டதென்பது நிச்சயமாகிவிட்டது. நான் மனமுவந்து உனக்குத்தர எண்ணிய ராஜ்ஜியத்தை உன்னால் ஏற்க முடியாத காரணத்தால், சர்வசம்ஹாரமிக்க போர், பூஉலகை தழுவப்போகிறது. கர்ணா உனக்கு நன்மைகள் வருவதாக…!”
கர்ணன், கிருஷ்ணனருகில் வினயத்துடன் எழுந்து நின்று, விடைபெறும் முகத்தான் பேசலானான்:
“கிருஷ்ணா, க்ஷத்திரியகுலம் மடிந்து நாசம் கொள்ளம் இந்த மாபெரும் அவலம் நீங்கப்பெற்று – உன்னை உயிருடன் காணும் நிலை நேருமென்றே நினைக்கின்றேன். அவ்வாறு நேருமாயின் நட்பு கொண்ட நெஞ்சமுடன் மீண்டும் சந்திப்போம். அல்லது சொர்க்கத்தில் நாம் கண்டடைவோம்”
ப122
குந்தி – கர்ண சந்திப்பு
கர்ணன் மதியவேளையில் சூரிய வணக்கம் செய்து, தர்மம் வழங்கும் வேளையில் குந்தி கர்ணனைச் சந்திக்கிறாள். கிருஷ்ணன் கூறிய அதே செய்திகளைக் கூறுகிறாள். மூத்த பாண்டவனாக, பாண்டவர் பக்கம் வரும்படி அழைப்பு விடுக்கிறாள்.
“சந்தனக்கட்டைகள் அடுக்கிய சிதையைக் காட்டி பிணங்களை ஆசை காட்டிடும் வீண்வேலை… அர்த்தமற்றதும் கொடூரமானதுமான வீண் உடற்பயிற்சி! விரைவில் நாமிந்த காட்சியை முடித்துக் கொள்வோம்… எந்த லட்சியம் கருதி நீ இங்கு வந்தாய் – என்பதைச் சொல். இனி நான் மேற்கொள்ள வேண்டிய செயல் என்னவென்பதையும் கூறிவிடு. அச்செயல் என்ன ஆயினும் நானதற்குப் பணிவேன் என்பதை நிச்சயமாக நம்பிக்கொண்டு, சொல்லவேண்டியதை விரைவில் சொல்லி முடித்துவிடு”
-கர்ணன் ப136
கர்ணன் வருத்தத்துடன் கோபத்தை அடக்கிக்கொண்டு அவளுடன் உரையாடும் காட்சிகளைக் காட்டியிருக்கிறது இந்த நாவல். ‘உனக்கு அர்ஜுனனுடன் போரிடவேண்டும் என்பது சரி. ஆனால் பிற பாண்டவர்களுக்கு உயிர் பிச்சை கொடு’ என்று கேட்கும் தருணம், ஏற்கனவே கதைகள் மூலம் அறிந்திருந்தாலும், வியக்க வைக்கிறது.
கர்ண – பீஷ்மர் சந்திப்பு

தொடர்ந்து கர்ணனை தூற்றியும், பழித்தும் பேசி வருகிறார் பீஷ்மர். அரசவையின், பலபேர் முன்னிலையில் இத்தகு அவமானங்களையும் பொறுத்துக்கொண்டவன், பீஷ்மர் இருக்கும் வரை, நான் போரில் இறங்கமாட்டேன், படை நடத்தமாட்டேன் என்று விலகி நிற்கிறான். 10ஆம் நாள், சரப் படுக்கையில் வீழ்ந்து கிடக்கும் பீஷ்மரை சந்திக்கும் கர்ணன் காட்சிகள் அழுத்தமானவை.
“தேவவிரதரே, உமது தூற்றல் மொழி கேட்டிட வந்தவன் நான்… உமது சாப மொழிகளைக் வாழ்க்கைப் பேறாக ஏற்றுக்கொள்ள நான் உம் முன் வந்தேன். சகிக்கவொண்ணா நெருப்பு தந்த வெக்கைப் பிரவாகம் மட்டுந்தான் என் வாழ்க்கையாக இருந்தது. எனது பிறப்பின் ரகசியத்தை முன்னதாகவே தெரிவித்திடாதது மூலம், என்னிடம் தயையின்றி நடந்து கொண்டதாக- மகாத்மாவாகிய தாங்கள் – வீணாக கவலைப் படுகிறீர்கள்… எனது ஜனன ரகசியம் நான் அறிவேன்.”
ப185
இந்தப் பின்புலத்தில் ஜெயமோகன் எழுதிய நாடகம் இங்கே உள்ளது. வடக்குமுகம் [நாடகம்] – 5
துரியோதன கையறு நிலை, கர்ணவதம்
குருக்ஷேத்திரக் காட்சிகள் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. தர்ம நியாய விசாரங்கள் முடிந்து போர் தொடங்கும் பக்கங்கள் முழுவதும் ரத்த ஆறு ஓடுகிறது. அதற்குள் சகோதரர்கள் இறந்திருக்கிறார்கள்.
அபிமன்யுவை ஏத்தும் நமது எழுத்தாளர்கள் விருக்ஷசேனனை ஏனோ விட்டுவிடுகின்றனர்.
காண்டீபத்தின் நாணொலி முழக்கிய அர்ஜுனன் கர்ண புத்திரனிடம் சொல்வான். “விருக்ஷசேனா நன்றாக இருக்கிறது உனது அசுர வித்தைகள். ஆனால் சற்று வரம்புமீறிவிட்டது பாலகனே… சரி, அதையெல்லாம் என்னிடம் காட்டிடு. நானும் பார்க்கிறேன்?”
ப 256
கௌரவ நூற்றுவர்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். துச்சாதனனின் வயிற்றைக் கிழித்து, குடலை மாலையாகப் போட்டு, நர வேட்டை ஆடுகிறான் பீமன். இந்த துர்மரணம் கண்டு, மன உறுதி இழந்து போகிறான் துரியோதனன். தன் தவறையும், இனி எதையுமே மாற்ற முடியாது என்பதையும் உணர்ந்த துரியோதனனின் பின்வரும் கூற்றினை வாசிக்கையில் நாம் நெகிழ்ந்து போகிறோம்.
“பாண்டவருடன் இணைந்ததான ஒரு வாழ்க்கை, இனி சுயோதனனுக்கில்லை. துச்சாதனனின் ரத்தக் கொலையை, எவ்வாறு நான் மறப்பேன்? பீமன் கொன்றொடுக்கிய, எனது தம்பியரது நிணம் – எவ்வாறு என்னால் மறக்க முடியும்? உடன் பிறந்தாரையெல்லாம் சாவூர் அனுப்பிட்ட இந்த நான், பாண்டவரோடு ஒன்றுபட்டு எந்த நாட்டை ஆண்டிடவேண்டும்? அவர்களுக்கு நான் இழைத்த துரோகச் செயல்களை அவர்களும் மறந்திடார். எம்மவர் இருவர்க்கும் ஒன்றாக இனி இப்புவிமேல் இடமில்லை. குருபுத்திரனே, என் மனம் வேதனை கொள்கிறது. அன்பு நிமித்தம் இனியும் பலகூறி என்னை வேதனை கொள்ளச் செய்திடவேண்டாம்”
துக்கம் மிகக் கொண்ட அஸ்வத்தாமன், “எல்லாம் விதி” என்றவாறு தலைகுனிந்து பின் திரும்பினான்.
ப259
போரில் வெறிஆட்டம் போடுகிறான் கர்ணன். ஆனால் அர்ஜுனன் தவிர்த்த பாண்டவர்களைக் கொல்லும் தருணம் வந்தும், கொல்லாது விட்டு விடுகிறான், தாய் குந்தி கேட்ட வரத்தின் படி. பீமன் ஒளிந்து ஓடும் காட்சி அருமையாகப் புனையப்பட்டுள்ளது.

சல்யர் கர்ணனுக்குத் தேரோட்டுவதும், குழி பறிப்பதும் விவரிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், கர்ண வத நாளின் பிற்பகுதியின் கர்ணனுக்கு உரிய உபதேசங்களை அளிக்கிறார். பாவம், அந்த புதைந்த தேர் சக்கரத்தை சல்யர் எடுத்துவிட்டு இருக்கக் கூடாதோ?
“கர்ணா, சிரசினை குறிவைத்து அந்த அஸ்திரம் நீ தொடுக்காதே. குறி தவறிவிடும்…” அதற்குக் கர்ணன் சொல்வான்: “மத்ரேசா உனது கூற்றின் பொருள் எனக்குப் புரிகிறது. ஆனால் லட்சியம் குறிவைத்து தொடுத்திட்ட சரம் தனை மாற்றி தொடுப்பது தர்ம நீதிக்கு உகந்ததல்ல. தொடுத்த அம்பினை கர்ணன் திருப்பி வைப்பதில்லை என்பதை நீ அறியவும்…”
“அர்ஜுனா செத்தாய் நீ…” என உரக்கக் கூவியவாறு கர்ணன் நாகாஸ்திரத்தை இழுத்து விடலானான்.
ப264

தீ்ர்ந்த வஞ்சம்
தர்மவான் கர்ணன். மூத்த பாண்டவன் கர்ணன். நட்புக்கு இலக்கணம் கர்ணன். ஆனால், சில தவறுகள் செய்கிறான். செய்யப்பட்ட நிமித்தங்கள் காரணமாக, திரொளபதி அவன் மீது தீராத வஞ்சம் கொள்கிறாள். அவளும் அவனை ஓரிடத்தில் பிறப்பைக் காரணம் காட்டி, மணக்க மறுக்கிறாள். ஆக, இது இருபுறம் கொழுந்துவிட்டெரிந்த வஞ்சம். இரு தீயை மறு தீ எரித்து அழித்தது.
எல்லோரும் கர்ணனுக்காக வருந்தும் போது, பாண்டவர் அகம்படி செய்ய, கர்ணன் அரியணை அமர்ந்திருப்பதும், பக்கத்தில் தான் அமர்ந்திருப்பதையும் காட்சிப் படுத்திக்கொள்ளும் திரௌபதியின் மனநிலைக் கொந்தளிப்பு இன்னொன்றையும் நடிக்க முயல்கிறது. அவ்வளவு பேர் இறந்து பட்ட போர்வெளி, விதவைகளின் கூடாரமாகியிருக்கிறது. பல விதவைகள், தன் கணவர்களுக்காக சாந்திகள் செய்கிறார்கள். தானும் அந்த விதவைக் கூட்டத்தில் ஒருத்தியோ என்று ஓரிடத்தில் நினைக்கிறாள் அவள். ஒரு நிமிடம் நான் திடுக்கிட்டுவிட்டேன்.
தீர்ந்த வஞ்சத்துடன், தீராத உணர்வுகளுடனும் அவள் உறங்கப்போகட்டும். நாம் இன்னொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
Last but not least, ஆ மாதவனின் மொழிபெயர்ப்பு தரமானது. ஒரு இதிகாச சுவையைத் தருகிறது. Punctuations முதற்கொண்டு, எல்லாவற்றிலும் கவனம் எடுத்திருக்கிறார்.
வெல்க பாரதம்.
மற்றுமொரு அற்புதமான பதிவு. நாவல் வாசித்த நிறைவைத் தருகிறது. இதையெல்லாம் நான் எப்பொழுது வாசிக்கப் போகிறேன் என்ற மலைப்பை ஏற்படுத்தி விடுகிறீர்கள்.
பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல. என்னால் மறக்க இயலாத நாவல் இது.