நான் நாகேஷ் – நூல் அறிமுகம்


தமிழ் திரைப்பட வரலாறை நாகேஷ் விடுத்து எழுத இயலாது. உடல் மொழி, வாய்மொழி, கண் மொழி அனைத்திலும் நாகேஷ் தன் தனி முத்திரையைப் பதித்தவர். இயக்குநர் ஜாம்பவான்கள் ஸ்ரீதர், கே பாலச்சந்தரை வசீகரித்த கதாநாயகர். எனவே நகைச்சுவை நடிகர் என்கிற குறுகிய வட்டத்திற்குள் அவரை அடக்குவது அவருடைய ஆளுமையின் மீது நாம் நடத்தும் தாக்குதல் போன்றது. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று திரைப்பட கம்பெனிகளின் படப்பிடிப்புகளில் பங்கெடுக்கும் அளவிற்கு தொழிலில் கொடி கட்டிப் பறந்தவர். அதே திரைப்படத்துறையால் இறுதி காலத்தில் சரியாகப் பயன்படுத்தக்கொள்ளப் படாது விடப்பட்டவர். இந்திய அரசின் விருதுகளால் புறக்கணிக்கவும் பட்டவர்.

கிழக்கில் இருந்து ‘நான் நாகேஷ்’ நூலைப் பற்றி செய்திமடல் வந்திருந்தது. Prime Reading இலும் இருந்தது. மிக எளிய நடையில் இருந்ததால் விரைவிலேயே வாசிக்க முடிந்தது.

நாகேஷ் இளமையில் தன் அழகின் மீது அகந்தை கொண்டிருந்ததாகவும், பிற்பாடு ஏற்பட்ட அம்மை நோயினால் முகம் பொலிவு இழந்ததை அதற்கான தண்டனை என்றும் பதிவு செய்திருக்கிறார். பின்னாளில் அதன் காரணமாக பல்வேறு இடங்களிலும் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளார்.

தொழிற்சாலை, சூப்பர் மார்க்கெட், நாடக நிறுவனம், ரயில்வே என்று பல்வேறு இடத்திலும் வேலை செய்திருக்கிறார். இருவகையினரால் ஒரே வேலையில் இருக்க இயலாது. ஒன்று – எந்த வேலையும் தெரியாதவர். இன்னொன்று – ஒரே மாதிரி வேலையை தொடர்ந்து செய்வதில் ஆர்வம் இல்லாதவர். இதில் நாகேஷ் இரண்டாவது வகை. அதிலும் நடிப்பின் மீதான ஆர்வம் அவரைத் திரைத்துறைக்குள் தள்ளியிருக்கிறது.

முகச்சாயம் சாராயத்தை விட அதிக போதை தரும் விஷயம்

– நாகேஷ்

அவர் பலவிதமான அவமானங்களைச் சந்தித்திருக்கிறார். அதனால் காயப்பட்ட மனதை முகமூடியிட்டு மறைத்து, தனி தனி பாணி நடிப்பினால் அவற்றை வென்றிருக்கிறார்.

டி.எம்.எஸ். எப்போதும் தான் பாடப்போகும் நடிகரை தெரிந்து கொண்டு அவருக்கு ஏற்றபடி தன் குரலில் மாறுதல் செய்து கொண்டு பாடுவது அவர் வழக்கம். அதன்படி, இந்தப்பாடலை தான் யாருக்காக பாடுகிறேன் என்று கேட்டார். எம்.எஸ்.வி. “நாகேஷ்” என்றார். அவர் பெயரை கேட்டதும், டி.எம்.எஸ். கேலியாக சிரித்து, அவருக்கு பாடலா? அதை நான் பாடவா, அதுக்கு இவ்வளவு பெரிய செட்டபா, என்னடா இது சோதனை, எனக்கு ஏற்பட்ட வேதனை, என்று திருவிளையாடல் டி.எஸ். பாலையா பாணியில் சலித்துக் கொண்டார். ….
ஒரு நாள் கடற்கரையில் நான் வாக்கிங் போய்க் கொண்டிருந்தேன். அப்போது டி.எம்.சவுந்திரராஜனை சந்தித்தேன் என்னை பார்த்ததும் சொன்னார். ‘ஜெய்ச்சிடீங்களே அய்யா!, சர்வர் சுந்தரத்துல நான் பாடிய பாடல் எடுபடாது, தியேட்டர்ல ஆள் இருக்காது என்றேன். ஆனா, அந்த பாட்ட பார்க்கவே ஜனங்க வர்றாங்கன்னு கேள்விப்பட்டேன். ரொம்ப மகிழ்ச்சி அய்யா’ என்று வாழ்த்திவிட்டு சென்றார்.

ஏ.வி.எம்.குமரன், தினத்தந்தியில்

கல்கியில் ‘சிரித்து வாழவேண்டும்’ என்கிற தலைப்பில் வெளியான கட்டுரைகள் தொகுக்கப்பெற்று இந்நூலக உருப்பெற்றுள்ளதாம்.

ஏன் இதை வாசிக்க வேண்டும்?

  1. நாகேஷ் அதிகம் பேசாதவர். அதிக மீடியா வெளிச்சம் படாதவர். அவரை ஆவணப்படுத்தும் 58 தன்வரலாற்றுக் கட்டுரைகள் கொண்ட நூல் இது.
  2. வெகு எளிதான எழுத்து நடை
  3. பிற நடிகர்களைப் பற்றிய நாகேஷ் அவர்களின் பதிவு (இயக்குநர் ஸ்ரீதர், நடிகர் பாலாஜி, எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், எம்ஆர்ராதா, மனோரமா, கவிஞர் வாலி)

இன்னும் செய்திருக்கலாம்

இந்த நூல் எளிய வாசகருக்கு எழுதப்படுகிற கட்டுப்பாடுகள் கொண்டு எழுதப்பட்டுள்ளது போலத் தெரிகிறது. இந்திய விருதுகள் தமிழக கலைஞர்களை வந்து அடையாதது குறித்து நாகேஷ் கவலை கொண்டவர். குறிப்பாக சிவாஜிக்கு நல்லதொரு அங்கீகாரம் டெல்லியால் தரப்படாதது குறித்து இந்துவில் பதிவு செய்திருக்கிறார்.

கல்கியில் எழுதும்போது சரி. நூலாக பதிவு செய்யும்போது அதன் வாசகர்களுக்கு ஏற்ற வகையில் இன்னும் அவரது ஆளுமையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்க வேண்டும்.

நாகேஷ் தற்சமயம் மண் நீங்கிவிட்டதால் இனியொரு முயற்சி நடக்கப்போவதில்லை. அந்த வகையில் ஒரு நல்ல முயற்சியைச் செய்துள்ள எஸ் சந்திரமௌலிக்கு நன்றிகளும் வணக்கங்களும்.

As far as I am concerned, actor Nagesh deserves any major award presented in Cinema. If he was born in France, America or Germany, I can guess the kind of recognition he would have received. Despite 12 years having passed since his death, the government continuing to ignore him is a disappointment

Kamal Hassan, The Hindu, September 28, 2021,

நான் நாகேஷ் (தன் வரலாறு)
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
எழுத்து : எஸ். சந்திர மவுலி
விலை: ரூ. 239 / Kindle Prime / Kindle Unlimited

Leave a comment