செந்நா வேங்கை | ஜெயமோகன்


இப்போர் என்னுடையதல்ல. என் பொருட்டென்று சொல்லி ஆண்களாகிய நீங்கள் போருக்கெழுகிறீர்கள். காலந்தோறும் இது இவ்வாறுதான் நிகழ்கிறது. மிதிலையின் அரசியின் பொருட்டு நிகழ்ந்தது இலங்கைப்போர் என்கிறார்கள் சூதர்கள். அது அரக்கர்கோனுக்கும் அயோத்தியின் அரசனுக்கும் நிகழ்ந்த பூசல். அதில் ஜனகர் மகள் ஆற்றுவதற்கென்ன இருந்தது?
-திரௌபதி
‘செந்நா வேங்கை’ – 3

வெண்முரசின் 18ஆவது நாவல் செந்நா வேங்கை. உபப்பிலாவ்யத்தில் பொர் ஏற்பாடுகள், வஞ்சம் துடைத்த திரௌபதி, அவளைப் போரை நோக்கிச் செலுத்த இளைய யாதவர் செய்யும் வழிகள், அஸ்தினபுரத்தில் விடைபெறல்கள், விதுரர் நகர் நீங்கல், படை நகர்வு, பின்னர் குருக்‌ஷேத்திர நிலத்தில் படைகளின் நிலைகோள், இடையில் குலாட இளவரசர்கள் மற்றும் அரவானின் வருகை, அரவான் போர்முகத் திருமணம் எல்லாம் முடிந்து, இறுதியாக முதல் நாள் போரைத் துவக்கி வைத்து இந்நாவல் முடிகிறது.

செந்நா வேங்கை

ஆசிரியர் – ஜெயமோகன்

இணையத்தில் வாசிக்க – செந்நா வேங்கை 1

மிக விரிவான கதைக்களம், ஆனால் மிக விரைவாக வாசிக்க முடிந்திருப்பதே இந்நாவலின் விருவிருப்பான கதையோட்டத்தைக் காட்டுகிறது. நேற்று இதை வாசித்து முடிக்கையில் காலை மணி 4!

சமூக மதிப்பு

பெண் பழி தீர்க்க, மண் விளைவிற்கென பல காரணங்களுடன் போர் எழுந்திருக்கிறது. அதில் பங்கேற்கும் வெவ்வெறு குடிகளின் எதிர்பார்ப்புகளையும் அவர்தம் மன ஓட்டத்தையும் பதிவு செய்கிறது செந்நா வேங்கை. இதனை சாத்யகி, அரவான் மற்றும் குலாட இளவல்கள் சங்கன், ஸ்வேதன் காண இயல்கிறது.

நம் மக்கள் இங்கு நலம்கொண்டு வாழவேண்டுமெனில் பிறிதொரு வழியில்லை. எவரும் எனக்காக படைக்கலம் எடுக்கவேண்டியதில்லை. இன்னமும் இங்கு பிறந்து வராத உங்கள் மைந்தர்களுக்காக, அவர்களின் நூறு தலைமுறையினருக்காக படைக்கலமெடுங்கள்.
-இளைய யாதவர்
செந்நா வேங்கை – 1

சாத்யகி தன்னை இளைய யாதவருக்கு முற்றளித்தவன், தொழும்பர் குறி பெற்றுக்கொண்டவன் என்று உணர்த்தும்போதெல்லாம், அதற்கு இணையான எதையோ ஆவர் ஆழ்மனம் பெற்றுக்கொள்ள விளைவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இதுவரை தோன்றிக் கொண்டும் இருந்தது.

சாத்யகி சினத்துடன் “அதாவது அங்கு சென்று அவர்கள் முறைமைகளை கடைபிடிக்கவில்லை. ஆகவே அரசியோ அல்லது பிறரோ எதையோ கூறினார்கள். ஆகவே உளம் சோர்ந்துவிட்டீர்கள், அவ்வளவுதானே?” என்றான். “சொல்க, கடிந்தார்களா? ஏளனம் சொன்னார்களா?” அசங்கன் இல்லை என்று தலையசைப்பதை விழிகொள்ளாமல் அவன் மேலும் கூவினான். “இவர்களிடம் நாம் இறங்கிநிற்க வேண்டியதில்லை. நாம் யாதவர்கள், புவியாளும் பேரரசர் கிருஷ்ணரின் குலத்தோர். நாளை இந்த மண்ணை ஆளப்போகிறவர்கள். அதனால்தான் நம்மிடம் குருதி உறவுகொள்ள பாஞ்சாலம் இறங்கிவருகிறது. நோக்குக, இன்னும் ஒரு தலைமுறைக்கு பின் நம்முடைய நெறிகளையும் முறைமைகளையும் அவர்கள் கடைபிடிக்கப்போகிறார்கள். வெற்றியே எது சரியென்பதை முடிவு செய்கிறது. அதன்பொருட்டு நீங்கள் வருந்தவேண்டியதில்லை. யாதவக்குடி ஒன்றும் நேற்று முளைத்ததல்ல, நமக்கும் யுகங்களின் நீள்வரலாறு உள்ளது. நம்மை எவரும் ஏளனம் செய்யவோ இறக்கி நிறுத்தவோ நாம் ஒப்பவேண்டியதில்லை.”

செந்நா வேங்கை – 9

அரவானை தந்தைக்குத் துணைக்கும்படி போர் களத்திற்கு அனுப்புகிறாள் உலூபி. அரவானைக் கண்டு மனம் வருந்தும் அர்ஜுனன், அவன் தற்பலி ஆக அவன் எடுத்துக்கொள்ளும் உறுதி, அதற்கு அவன் சொல்லும் காரணம் எல்லாம் தன் அன்னை சமூத்தின் எதிர்வரும் மதிப்பு இப்படி இருக்கவேண்டும் என்று உணர்த்துகிறது.

“என் விழைவுகள் இவை. எங்கள் குடிநெறியின்படி என் உடல் மட்டுமே எரியூட்டப்பட வேண்டும். நான் கொண்ட வஞ்சினம் முழுமைகொள்ளும் வரை என் தலை இந்தக் களத்தில் ஒரு களிமண் பீடத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். பின்னர் என் மண்டையோடு என் நிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே புதைக்கப்பட்டு நடுகல் எழுப்பப்பட வேண்டும்.” அவையில் பெருமூச்சுகள் எழுந்தன. அரவான் யுதிஷ்டிரரை பார்க்க அவர் ஆகுக என கையசைத்தார். “என் தந்தைகுலத்தில் நீத்தாருக்கு அளிக்கப்படும் அன்னமும் நீரும் பதினெட்டு தலைமுறைக்காலம் எனக்கும் அளிக்கப்படவேண்டும்” என்றான் அரவான். யுதிஷ்டிரர் தலையசைத்தார். “இறுதிக்கோரிக்கை எந்தையிடம். அவர் என் அன்னையை மீண்டும் சென்று சந்திக்கவேண்டும். அவர் அன்னையுடன் ஒருநாளேனும் மகிழ்ந்திருக்கவேண்டும்.” அர்ஜுனன் சொல்லின்றி அமர்ந்திருந்தான்.

செந்நா வேங்கை – 71

இப்படி ஓர் போர் நடக்கும்போது, வாளாவிருந்தால் அது தம்மை அடையாளம் காணாமல் ஆக்கிவிடும் என்கிற காரணத்தாலும், பீமன் மற்றம் அர்ஜுனன் மேல் கொண்ட பற்றுதலாலும் போரில் கலந்து கொள்கிறார்கள் ஸ்வேதனும் சங்கனும். முதல் நாள் போர்முகத்தில் கௌரவப் படைகளின் தாக்குதல் இவர்களைத் திக்குமுக்காடச் செய்யும்போதும், குடியின் அங்கீகாரத்திற்கென, தன் குடியின் அடுத்தடுத்த தலைமுறையின் நல்வாழ்வுக்கெனவும் அவர்கள் முன்னேறுவதைக் காணமுடிகிறது.

பாரதவர்ஷத்தின் மாபெரும் வில்லவன் ஒருவனை எதிர்கொண்டிருக்கிறேன். இத்தருணத்தில் அரைநாழிகைப் பொழுது இங்கு தலையறுந்து விழாது நின்றிருப்பேனெனில் என் குடி எனக்காக பெருமைகொள்ளும். “ஒருநாழிகைப்பொழுது! ஒரேநாழிகை!” சங்கன் உள்ளம் கூவியது.
செந்நா வேங்கை – 77

தந்தை மகன் உறவு

சந்தனு – தேவவிரதன் உறவென்பது பக்தித்தனமானது, திருதராஷ்டிரன் – துரியோதனன் உறவு ஒரு வகை proxy தனமானது. சாத்யகி – மகன்கள் உறவென்பது கிட்டத்தட்ட நம் காலத்திற்கு ஒத்து வருகிறது. ஒரு வேளை இவர்கள் க்‌ஷத்ரியர்கள் இல்லை என்பதனால் இருக்கலாம்!

அணுக்கத்தால் தன் மைந்தர்களை சரியாக புரிந்துகொள்ளவில்லையோ என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. வெறும் விளையாட்டுச் சிறுவர்களாகவும், பொறுப்பற்றவர்களாகவும், அரசமுறை அறியாதவர்களாகவும், முறையான போர்ப்பயிற்சி அற்றவர்களாகவுமே அவன் அவர்களை நடத்தினான். அவ்வாறு அவன் நடத்துகையில் அவர்கள் அதற்குரிய நடத்தையை தாங்களும் கொண்டார்கள். தந்தையருக்கும் மைந்தர்களுக்குமான உறவே அவ்வாறு இருவரும் சூடிக்கொள்ளும் உருவங்களும் நடிப்புகளும்தாம் போலும்.
‘செந்நா வேங்கை’ –10

யுதிஷ்டிரருக்குத்தான் எத்தனை வலிகள்

பெண் வஞ்சம் தீர்க்கத்தான் நாங்கள் வந்தோம். பங்காளிச் சண்டைக்கு எல்லாம் நாங்கள் வரலை என்று முறுக்கும் நிஷாதர்கள் அரக்கர்கள் ஒரு புறம்.

எனக்கு வஞ்சமே இல்லை. இதெல்லாம் ஆண்கள் உங்களின் விளைவாலும் ஆணவத்தாலும் நிகழ்கிறது என்று போர் வஞ்சினம் உறைக்க மறுக்கும் திரௌபதி மறு
புறம்.

துடிக்கிறார் பாவம்.

இளையவர்கள் களம் கண்டு உயிர் துறப்பதை எவ்வாறு ஒப்புவது? குடிமக்களை மரணத்திலிருந்து எப்படிக் காப்பது? ஆசிரியர் பிதாமகர் ஆசி பெறாது எப்படி போரில் இறங்குவது? இப்படி ஆயிரம் கவலைகள். அறத்தான் என்று நிற்க வேண்டுமே என்று அவர் முனையும்போதெல்லாம் நஞ்சுக்கொடுக்கென நீழும் பீமனின் நாக்கு.. எத்தனையை சமாளிப்பார் பாவம். வெகு ரணகளமாக போய்கொண்டிருக்கும் செந்நா வேங்கையின் கடைசி கட்ட அத்தியாயத்தைக் கூட பீமனின் எகத்தாளம் நம்மை சிரிக்க வைத்துவிடுகிறது. நாமே சிரித்தால் யுதிஷ்டிரர் பாவம் கோபப் படமாட்டாரா என்ன!

பீஷ்மர் இளையோரைக் கொல்ல மாட்டார் என்று திருஷ்டத்யும்னனின் படைச் சூழ்கையை யுதிஷ்டிரர் மாற்றுகிறார். அவரை முற்றிலும் மடையனாக்கி, இளவரசர்களைக் கொன்று குவிக்கிறார் பீஷ்மர்.

சல்யருடன் மோதுகிறார் தர்மர். அங்கிருந்தும் பின்வாங்க வேண்டியிருக்கிறது.

பீஷ்மர்

bishma.jpg

நமது மகாபாரத கதைகள் பீஷ்மர் இளைவருக்காக வருந்துவதாகச் சொல்லி, அவரைப் புனிதப்படுத்தியே வந்தன. வெண்முரசு மட்டுமே பீஷ்மருக்காக அவர் நினைவுகளில் இறங்கி அவரை வெளிப்படுத்தி உள்ளது. இதுவே சரியான புரிதலை உறுவாக்கித் தருகிறது. போரின் முதல் நாளில் இளையவர் சூழ நின்றிருக்கும் பீஷ்மர் புனித தேவன் அல்ல, அவர் ஒரு கொலை தெய்வம். பிம்பங்கள் உடைபடுவதே புரிந்து கொள்ள வழி அன்றோ.

அம்புகள் ஒன்றையொன்று விம்மிக்கடந்து செல்கையில் ஸ்வேதன் ஒன்று உணர்ந்தான். முதியவர் இளமைந்தரை கனிந்து எதிர்கொள்வார் என்று எண்ணியதைப்போல் பிழை பிறிதில்லை. தந்தையாயினும் மூதாதையாயினும் உடலால் உள்ளத்தால் அவர் முதியவர் என்பதே முதன்மையானது. மண்ணிலுள்ள அனைத்து இளையவரும் முதியவர்களுக்கு எதிரிகளே. அவர்கள் கொண்டுள்ள இளமையால், அவர்களுக்கு எஞ்சியிருக்கும் வாழ்க்கையால், எங்கும் முதுமை தளர்ந்து கைவிடும் இடங்களையெல்லாம் எடுத்துக்கொள்வது இளமை என்பதனால். வாழ்த்தும் கைகளுக்கும் நோக்கி மகிழும் கண்களுக்கும் அடியில் வஞ்சம் கொண்ட விலங்கொன்றிருக்கிறது. பீஷ்மர் அங்கு போரிட்டுக்கொண்டிருப்பது குருக்ஷேத்ரத்தில் அல்ல. அவருள் என்றுமிருந்த தொல்தெய்வம் ஒன்று எழுந்து ஆயிரம் கை கொண்டு நின்றது.
செந்நா வேங்கை – 79

18 நாவல்களை என்னைப் பொன்ற ஒருவரை வாசிக்க வைத்திருப்பதே வெண்முரசின், மகாபாரதத்தின் வீச்சு. இனி ஒரு முறை இளைய யாதவர் நகையாடப் போவதில்லை. இனித்திருக்கப்போவதில்லை. அனேகமாக சாத்யகி வாரிசுகளுடன் இணைந்திருந்த பொழுதே இனிதாக இருக்கலாம். ம்ம்.

இனிமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

Leave a comment